திங்கள், 18 ஏப்ரல், 2016

சிறுகதை
தியாகம்
-நூ. அப்துல் ஹாதி பாகவி
அந்த ஊரின் பெரிய பள்ளிவாசலில் புதிதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பெண்களுக்கான தொழுகைக்கூடத்திற்கு வெள்ளிக்கிழமை பயான் கேட்பதற்காக புஷ்ரா புறப்பட்டுச் சென்றாள். வழியில், எதேச்சையாக ருஷ்தாவைச் சந்தித்தாள். புஷ்ரா வீட்டில்தான் ருஷ்தா நீண்டகாலமாகக் குடி இருந்தாள். பிறகு அங்கிருந்து மாறி, பக்கத்து ஊருக்குக் குடிபோய்விட்டாள். காலம் உருண்டோடி பத்து ஆண்டுகள் கழிந்துவிட்டன. நீண்ட காலத்திற்குப்பின் இப்போதுதான் இருவரும் சந்தித்துக்கொள்ளும் வாய்ப்புக் கிட்டியது. புஷ்ராவின் வீட்டில் ருஷ்தா குடியிருந்தபோது இருவரும் தோழிகளைப் போலப் பழகி வந்தனர். பல்வேறு விஷயங்களைப் பரிமாறிக் கொள்வார்கள்.  அந்தரங்க விஷயங்களைக்கூட அலசுவார்கள். ஆனால் வரம்பு மீறமாட்டார்கள். புஷ்ராவைவிட ருஷ்தா வயதில் மூத்தவள். எனவே அவள் ருஷ்தாவை "அக்கா' என்றுதான் அழைப்பாள்.
"என்னக்கா சுகமா? பார்த்து எவ்வளவு நாளாச்சு? எப்படிக்கா இருக்கீங்க?'' - விசாரித்தாள் புஷ்ரா.  "அல்ஹம்து லில்லாஹ். நல்லவிதமா இருக்கேன். ஒரு கவலையும் இல்லை'' - ருஷ்தா பதிலளித்தாள்.
"என்னக்கா இந்தப் பக்கம்? எங்கெ வந்திருக்கீங்க?''
"பக்கத்துத் தெருவுல உள்ள எங்க அக்கா வீட்டுக்கு வந்திருக்கேன். நீ எப்டி இருக்கே?''
"ம். நான் அல்லாஹ்வின் கிருபையாலே நல்லா இருக்கேன்.''
"புஷ்ரா உனக்கு எத்தனை பிள்ளைங்க?''
"ஒன்னே ஒன்னு, கண்ணே கண்ணுதான் ருஷ்தாக்கா''
"என்னம்மா சொல்றே. கல்யாணமாயி எத்தனையோ வருஷமாச்சு. ஒரே ஒரு குழந்தைதானா? அதுக்குப் பிறகு ஒன்னுமே இல்லையா?'' - ருஷ்தா ஆச்சரியமாகக் கேட்டாள்.
"அந்த ஒன்னுக்கே நான் என் கணவனோட படாதபாடு பட்டுட்டேன். அவருக்குக் கொடுக்க வேண்டிய மருந்தெல்லாம் கொடுத்து, பாதாம், பிஸ்தா, அக்ரோட் என வகை வகையாய்க் கொடுத்தேன்.  அதுக்குப் பிறகுதானே அல்லாஹ்வுடைய கிருபையாலெ ஒரு குழந்தை என்னோட வயித்துல உருவாச்சு.'' - புஷ்ரா கூறினாள்.
"ஏம்மா இப்டிச் சொல்றே? அவருக்கு என்ன கொற?'' - ஆர்வமாகக் கேட்டாள்.

"அவருக்கு ஆரம்பத்திலிருந்து உடலில் தெம்பு இல்லை, மனசுல தைரியம் இல்லை, மனைவியப் பார்த்தா காதல் இல்லை. மொத்தத்தில், "மனிதன் மண்ணால் படைக்கப்பட்டவன்' என்பது அவருக்குத்தான் சரியாப் பொருந்தும்'' என்று வருத்தத்தோடு சொல்லி முடித்தாள் புஷ்ரா.
"கேக்குறதுக்கே ரொம்ப வருத்தமாயிருக்கு புஷ்ரா. நீயாச்சும் ஏதாவது முயற்சி செய்யக்கூடாதா?'' என்று கரிசனத்தோடு கேட்டாள்.

"நானும் எத்தனை தடவைதான் முயற்சி செய்யிறது? ஊர் ஒலகத்துல சேவல்தான் கோழியைத் தொறத்திட்டு ஓடுறதப் பார்த்திருக்கோம். இங்க எல்லாம் தலைகீழாவுல இருக்கு? நானே எத்தனை தடவதான் சேவலா மாறுறது? இந்த நிலையில நான் எப்டி இன்னொரு குழந்தைக்கு முயற்சி செய்ய முடியும்? எனக்கு ஒரு குழந்தையாவது கொடுத்து "மலடி'ங்கிற பேரெ நீக்கி வச்சானே அந்த அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்'' - புஷ்ரா ஆதங்கத்தோடு சொல்லி முடித்தாள்.

உன் கணவனைப் பத்தி ஆரம்பத்துலயே இதுவெல்லாம் உனக்குத் தெரியாதா? இதையெல்லாம் உன் அப்பா, அம்மாவிடம் சொல்லி, ஒரு முடிவு செய்திருக்கலாமே? ஷரீஅத்படி மற்றொரு நிகாஹ் செய்திருக்கலாமே? - ருஷ்தா கேட்டாள்.
தெரியும்க்கா, அம்மாவிடம் சொன்னேன். "முதல் பந்தம்தான் இறுதி வரை தொடரணும். முறிச்சு முறிச்சு நிகாஹ் செய்யக்கூடாது. இத முறிச்சிட்டு இன்னொரு திருமணம் முடிச்சாலும், அவன் எப்டி இருப்பானோ யாருக்குத் தெரியும்? எல்லாம் சரியாயிடும். பொறுமையா இரு''ன்னு சொல்லிட்டாங்க. நானும் அவருக்கு எதையெதையோ கொடுத்துப் பாத்தேன். ஒன்னும் தேரல. அதனால அந்த முயற்சியெல்லாம் கைவிட்டுட்டேன். இதையெல்லாம் அம்மாவிடம் போய் அடிக்கடி சொல்லிட்டு இருக்க முடியுமா? - சோகத்துடன் சொன்னாள் புஷ்ரா.

உன்னோட உணர்வுகளை என்னால புரிஞ்சுக்க முடியுது புஷ்ரா. ஆனா, நான் புரிஞ்சுகிட்டு உனக்கென்ன இலாபம்? ஏன், உன்னோட அம்மாவுக்கு இதெல்லாம் புரியாதா? முதல் பந்தம் எப்டி இருந்தாலும் முறிக்கக் கூடாதா? நல்லா இருந்தா வேண்டுமென்றே முறிக்கக் கூடாதுதான். சரியா இல்லைன்னா முறிக்கலாம்தானே? பிறகு ஏன் உன்னோட உணர்வுகளை அவங்களாலெ புரிஞ்சுக்க முடியல? - ஆதங்கப்பட்டாள் ருஷ்தா.

விடுங்கக்கா. இதையெல்லாம் அம்மாவிடம் போய் அடிக்கடி சொல்ல முடியுமா? "பொறுமையா இரு'ன்னு சொல்லிட்டாங்க. நானும் பொறுமையாத்தான் இருக்கேன். அவ்வப்போது நோன்பு வைக்கிறேன். அப்படியே ஓடுது வாழ்க்கை! - மனதைத் தேற்றிக்கொண்டாள் புஷ்ரா.

ருஷ்தா ஆரம்பித்தாள்... இந்தக் காலத்துல யாரைப் பார்த்தாலும் இதே பிரச்சனைதான். என்னோட பக்கத்து வீட்ல ஷப்னம்ன்னு ஒரு பொண்ணு இருக்கா. அவ கணவருக்குச் சர்க்கரை நோய் இருக்காம். அதனால அவங்க ரெண்டு பேருக்கும் இப்படித்தான் உறவு சரியில்லையாம். இருந்தாலும் பரவாயில்லைன்னு பொறுமையா இருக்கா. என்ன செய்யிறது? அவளுக்கு விதிச்சது அவ்வளவுதான்.
நெறைய ஆம்பளைங்க தம்மோட உடல் நிலைய நல்லா வச்சுக்குறதே இல்லை. பான்பராக், குட்கா, ஹான்ஸ், பீடி, சிகரெட், போதைப் பொருள்கள்ன்னு ஏகப்பட்ட கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாயிடுறாங்க. அதனால ஏற்படுற விளைவுகளையெல்லாம் யோசிக்கிறதேயில்ல. அவங்க உடலுக்குக் கேடு ஒரு பக்கம். நம்பி வந்தவ வாழ்க்கையக் கெடுக்குறது மறு பக்கம். அதே நேரத்துல நாம பீடி, சிகரெட் பிடிக்க ஆரம்பிச்சா இந்த ஆம்பளைங்க சும்மா விட்டுடுவாங்களா? ஊரக் கூட்டிப் பஞ்சாயத்து வச்சு, உண்டு இல்லைன்னு செஞ்சுறமாட்டாங்க? - விரிவாகப் பேசினாள் ருஷ்தா.

அது மட்டும் இல்லக்கா. அளவுக்கு மீறிச் சாப்பிடுறதும் சர்க்கரை நோய்க்கு ஒரு காரணம்தான். வயிறு முட்டச் சாப்பிடுவது உடலுக்குப் பெருங்கேடு. மூச்சே விட முடியாம, ஒழுங்கா செரிக்காம படாதபாடு படுது வயிறு. "மூச்சு முட்டச் சாப்பிடாதே. பின்னெ, நோய்கள் வந்து அவஸ்தைப் படணும்''ன்னு என்னோட தம்பிக்கு நான் சொல்வதுண்டு. "அதெல்லாம் வந்தாப் பாத்துக்குவோம்''ன்னு ஏளனமாச் சொன்னான். இப்ப அவனுக்குச் சர்க்கரை நோய் வந்துடுச்சு. திருமணம் செய்து வச்சாங்க. நாலே மாசத்துல அவ அம்மா வீட்டுக்கு ஓடிப்போயிட்டா. என்ன செய்யிறது? எல்லாரும் என்னெ மாதிரி பொறுமையா இருப்பாங்களா? - அனுபவப்பூர்வமாகப் பேசினாள் புஷ்ரா.
புஷ்ரா தொடர்ந்தாள்... பாருங்க, நான் என்னெப் பத்தியே பேசிக்கிட்டு இருக்கேன். உங்களைப் பத்திச் சொல்லுங்கக்கா. உங்களுக்கு எத்தனை புள்ளைங்க? - சுயநினைவோடு விசாரித்தாள்.

எனக்கு நீண்ட காலத்துக்குப் பிறகுதான் குழந்தை பிறந்துச்சு. இப்போது எனக்கு ரெண்டு பிள்ளைங்க - சுருக்கமாகக் கூறினாள்.
ஏன் நீண்ட காலமாச்சு? - ஆர்வத்தோடு விசாரித்தாள் புஷ்ரா.

அவரு என்னோட இருந்தாத்தானே? திருமணமாகி ஒரு மாசத்துல மலேசியா போயிட்டாரு. அவரு ரெண்டு வருஷத்துக்கு ஒரு தடவ ஒரு மாத லீவுல வருவாரு. அக்கா வீடு, தங்கச்சி வீடு, நண்பர்கள் வீடுன்னு போயிப் போயி சுத்திட்டு, அப்டி இப்டி கொஞ்ச நாள் என்னோட தங்குவாரு. ஆக, இந்த இருபது வருஷத்துல அவரோட வாழ்ந்த காலம் ஏழெட்டு மாதம்தான் இருக்கும். என்ன செய்யிறது. இப்படித்தான் என்னோட வாழ்க்கை ஓடுது.

இங்கேயே வந்து, உள்ளூர்ல ஒரு தொழிலப் பாக்க வேண்டியதுதானே? - யோசனை கூறினாள்.
ம்... நானும் எத்தனையோ தடவ சொல்லிப்புட்டேன். அங்கேயே இருந்து பழகிப்போச்சாம். இங்கெ வந்து வேலை செய்ய முடியாதாம். இங்கெ எதுவுமே சரியில்லையாம். ரோடுகூடச் சரியில்லையாம்.  ஆனாலும் இந்தத் தடவ நான் அவரிடம் கறாராச் சொல்லிப்புட்டேன். "என்னங்க நம்ம ஊருக்கே திரும்பி வந்துடுங்க. நேரடியா உங்க முகத்தப் பாத்துக்கிட்டே நிம்மதியா கண்ண மூடிடுறேன். எத்தனை காலத்துக்குத்தான் வாட்ஸ் அப்லயும், ஸ்கைப்லயும் உங்க முகத்தப் பாக்குறது. நேரடியா எப்பத்தான் உங்களோட சேர்ந்து வாழுறது? இந்த ஒடம்பு உங்களுக்காகத்தானே இருக்கு. இதுக்கு நீங்க உரிமைகொண்டாடம வேறு யாரு உரிமை கொண்டாட முடியும்?''ன்னு கேட்டுப்புட்டேன். அதான், அவருக்கும் கொஞ்சம் இரக்கம் வந்து, "உள்ளூர்லயே ஏதாவது செய்யிறேன். நான் இந்தத் தடவை கண்டிப்பா முடிச்சுக்கிட்டு வந்துடுறேன்''னு சொல்லிட்டாரு - மகிழ்ச்சி பொங்கக் கூறினாள்.

சரி, இளமையெல்லாம் முடிஞ்சு போச்சு. ரெண்டு பேரும் சேர்ந்து இப்ப என்ன செய்யப் போறீங்க?- கிண்டலாகக் கேட்டாள்.
"நீ சொல்றது உண்மைதான். குளிருக்கும் மழைக்கும் ஒரு போர்வையா எடுத்துப் போர்த்திக்கொள்ளலாமே? அதுக்காகவாவது அவரு என் பக்கத்துல இருக்க வேண்டாமா? அவரு முகத்தப் பாத்துப் பாத்தாவது நான் தெம்பா இருப்பேன்ல'' - ருஷ்தா தீர்க்கமாகச் சொன்னாள்.

அக்கா, ரொம்ப நேரம் பேசியாச்சு. தொழுகைக்கு நேரமாச்சு. நான் வாரேன்க்கா என்று விடைபெற்றாள் புஷ்ரா. விடைபெற்றபோது, "இவங்க பெரிய தியாகிதான்''னு மனதில் நினைத்துக்கொண்டாள்.

"சேதாரமான கணவனை ஆதாரமா வச்சுக்கிட்டு, உணர்வுகள அடக்கிக்கொண்டு, மெல்லவும் முடியாம சொல்லவும் முடியாம, அல்லாஹ்வுக்காகப் பொறுமையா வாழுற இவதான் மிகப் பெரிய தியாகி''ன்னு நினைத்துக்கொண்டே சென்றாள் ருஷ்தா.
=========================================




புதன், 13 ஏப்ரல், 2016

அஹ்லுஸ் சுன்னா மாத இதழில்...

அஹ்லுஸ் சுன்னா மாத இதழில் வெளிவந்த நூல் விமர்சனம்: 



இந்நூல் கிடைக்கும் இடங்கள்:


சலாமத் புக் ஹவுஸ், மண்ணடி : 044 4216 7320


பஷாரத் பப்ளிகேஷன், மண்ணடி: 97899 99256


த்ரீஎம் பப்ளிஷர், அங்கப்பன் தெரு, மண்ணடி: 98842 83949/ 984000 4168/ 98403 61227


ரஹ்மத் ஆங்கில நூல் நிலையம், மயிலாப்பூர்,
சென்னை: 9940 059400



சாஜிதா புக் சென்டர், மண்ணடி, சென்னை: 984097 7758 

நபிகளார் நவின்ற நான்குகள் (தொடர்-5)


முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி எம்.ஏ., எம்.ஃபில்., பிஎச்.டி.

ஹஃப்ஸா பின்த் உமர் (ரளி) அவர்கள் அறிவிப்பதாவது: நபி (ஸல்) அவர்கள் நான்கு வியங்களைக் கைவிடாதவர்களாக இருந்தார்கள். அவை: 1. (முஹர்ரம் மாதம் 10ஆம் நாளான) ஆஷூரா நோன்பு. 2. (துல்ஹஜ் மாதத்தின்) பத்து நோன்பு. 3. மாதந்தோறும் மூன்று நாள் நோன்பு. 4. காலைத் தொழுகைக்கு முன்னர் (ஃபஜ்ர் முன்சுன்னத்) இரண்டு "ரக்அத்' ஆகியவை ஆகும்.  (நூல்: நசாயீ: 2373)

இதில் மூன்று தடவை நோன்பு இடம்பெற்றுள்ளது. இதிலிருந்து நபி (ஸல்) அவர்கள் நோன்பிற்கு எந்த அளவு முக்கியத்துவம் கொடுத்திருந்தார்கள் என்பதை நம்மால் அறிந்துகொள்ள முடிகிறது. பொதுவாக நோன்பு மனிதனின் ஆரோக்கியத்திற்கு ஓர் உந்துசக்தியாக உள்ளது. நாள்தோறும் தொடர்ந்து மூவேளை உணவு; இடையிடையே நொறுக்குத் தீனி. இது பலரின் இயல்பு நிலை. இதை மாதத்தின் சில நாள்களுக்கு நிறுத்தி வைப்பதால் குடல்கள் புத்தாக்கம் பெறுகின்றன; ஏற்கெனவே சேமிக்கப்பட்ட ஆற்றல்கள் உடலின் இயக்கத்திற்குப் பயன்படுத்தப்பட்டு எரிக்கப்படுவதால் தேவையற்ற கொழுப்பு உடலில் தங்குவது தடுக்கப்படுகிறது; இதனால் உடலின் இயக்க ஆற்றல் நன்கு தூண்டப்படுகிறது; உடல் பருமன் குறைக்கப்படுகிறது. இவ்வாறே பல்வேறு நன்மைகள் இருப்பதால்தான் நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்பதில் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளார்கள்.

ஆஷூரா நோன்பு தொடக்கக் காலத்தில் கடமையாகவே இருந்தது. பின்னர், ரமளான் நோன்பு கடமையாக்கப்பட்ட பின் ஆஷூரா நோன்பை நோற்க விரும்புவோர் நோற்கலாம். நோற்க விரும்பாதோர் நோன்பை விட்டுவிடலாம் என்று நபி (ஸல்) அவர்கள் மக்களுக்கு விருப்ப உரிமை கொடுத்தார்கள். (நூல்: புகாரீ: 1692) இருப்பினும் அந்த நோன்பை நோற்போருக்கு ஏற்கெனவே கூறப்பட்ட சிறப்புகளும் வெகுமதிகளும் அப்படியே உள்ளன என்பதில் சிறிதும் ஐயமில்லை. ஆஷூரா நோன்பு ஓராண்டின் பாவங்களுக்குப் பரிகாரமாகும்” (நூல்: திர்மிதீ: 683) என்பதும் அதன் சிறப்புகளுள் ஒன்றாகும்.

நோன்பு குறித்துப் பல்வேறு கட்டங்களில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இளைஞர்களைப் பார்த்து நபி (ஸல்) அவர்கள், "இளைஞர்களே! உங்களுள் தாம்பத்தியம் நடத்த இயன்றோர் மணமுடித்துக் கொள்ளட்டும்! இயலாதோர் நோன்பு நோற்றுக் கொள்ளட்டும். ஏனெனில், நோன்பு (ஆசையைக்) கட்டுப்படுத்தக்கூடியதாகும்'' என்று கூறினார்கள். (நூல்: புகாரீ: 5065) இதில் நோன்பு என்பது ஆசையுணர்வுத் தூண்டலைக் கட்டுப்படுத்துகிறது என்பதால் நோன்பு நோற்குமாறு கூறியுள்ளார்கள். வயிறு நிறைந்த பின் அதன்மூலம் இயக்க ஆற்றலைப் பெறுகின்ற மனிதன், அதன்பின் தன் பாலுணர்வைத் தீர்த்துக்கொள்ள வடிகால் தேடுகின்றான். அது திருமணத்தின் மூலம் நிவர்த்தி செய்யப்படுகின்றது. திருமணம் செய்வதற்குரிய மஹ்ர் தொகையை வழங்க இயலாதோர் அதற்கான வசதியைப் பெறுகின்ற வரை நோன்பு நோற்று, கற்பைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். இதுவே நபிகளாரின் போதனை.  ஆக நோன்பு பல்வேறு வகைகளில் பயனுள்ளதாகவும் நன்மைக்குரியதாகவும் உள்ளது. 

மக்களுள் சிலர் இன்னும் அதிக நோன்பு நோற்க விரும்புவார்கள். அத்தகையோர் இறைத்தூதர் தாவூத் (அலை) அவர்கள் நோற்றதைப் போல் நோற்றுக்கொள்ளலாம். அது மிகவும் சிறப்பான நோன்பு என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அது எப்படி? ஒரு நாள் விட்டு ஒரு நாள் நோன்பு நோற்பதே அவர்களின் வழக்கம். அதன்படி நோன்பு நோற்கலாம். (நூல்: புகாரீ: 3420) மிகவும் நடுநிலையான நோன்பு” (நூல்: புகாரீ: 3418)  என்று மற்றோர் அறிவிப்பாளர்தொடரில் காணப்படுகிறது.

தற்காலத்தில் அறிவியல் உலகம் மிகுந்த வளர்ச்சிப் பாதையை நோக்கி முன்னேறிச் செல்கிறது. மனிதர்களுக்குப் பதிலியாக வீடுகளிலும் தொழிற்சாலைகளிலும் ரோபோக்கள் பணியாற்றத் தொடங்கிவிட்டன. மனிதர்கள் செய்யும் வேலைத்திறனைவிட மிகுந்த பணிகளைக் குறிப்பிட்ட நேரத்தில் செய்யும் திறன்மிக்கவையாக அவை திகழ்கின்றன. அத்தகைய வளர்ச்சியடைந்த அறிவியல் காலத்தில் வாழ்ந்து வருகின்றோம் நாம், எதிர்காலத்தில் மனிதன் நாள்தோறும் மூன்றுவேளை உண்ணுகின்ற தேவை இல்லாமல்கூடப் போகலாம். ஏன் நாள்தோறும் உண்ண வேண்டிய அவசியம்கூட இல்லாமல் இரண்டு நாள்களுக்கு ஒரு முறை சாப்பிட்டால்கூடப் போதும் என்ற நிலை உண்டாகலாம். அப்போது மற்ற மனிதர்கள் என்ன செய்வதெனத் திண்டாடும் நிலையில், முஸ்லிம்களோ ஒரு நாள் உண்டுவிட்டு மறுநாள் நோன்பு வைத்து நன்மையைச் சேர்த்துக்கொள்ளலாம். அத்தகைய நல்வாய்ப்பு நமக்கு மட்டும்தான் உள்ளது. இத்தகைய ஒரு செய்தியை எப்படிச் சொல்கிறேன் என்றால், விண்கலத்தில் அமர்ந்து மற்ற கோள்களுக்குப் பயணிக்கின்ற விண்வெளி வீரர்கள் வழமையான உணவை எடுத்துச் செல்வதில்லை. உணவுக்குப் பதிலாகச் சத்து மாத்திரைகளைத்தான் உட்கொள்கின்றார்கள். அவற்றின்மூலம் உணவுண்ட ஊக்கத்தைப் பெறுகின்றார்கள். இப்பொழுது செவ்வாய்க் கிரகத்திற்கு மனிதனை வைத்து அனுப்பப்போவதாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. செவ்வாய்க் கிரகத்திற்குச் செல்லும் பயணக் கால அளவு பத்து மாதங்களாகும். திரும்பி வரப் பத்து மாதங்கள் ஆகும். அங்கு தங்குவது எவ்வளவு காலம் என்பது தெரியாது. ஆக குறைந்த பட்சம் ஈராண்டுகள் ஆகும். அவ்வளவு காலத்திற்கான உணவை மாத்திரைகளாகக் கொண்டுசென்றாலும் லக்கேஜ்அதிகமாகத்தான் இருக்கும். இதற்கெல்லாம் தீர்வாகத்தான் இப்படி ஒரு கண்டுபிடிப்பு வரலாம் என்று சொல்கிறேன். அந்தக் கண்டுபிடிப்பு விரிவுபடுத்தப்பட்டுச் சாதாரணமாக மக்களுக்கும் கிடைக்கத் தொடங்கிவிட்டால் அப்போதுதான் இந்நிலை ஏற்படும். இஸ்லாம் எவ்வளவு பெரிய இடர்ப்பாடுகளுக்கும் தீர்வாக இருப்பதைக் கண்டு வியக்காமல் இருக்க முடியவில்லை. 
     
இரண்டாவது துல்ஹஜ்ஜு மாதத்தின் பத்து நோன்பு. ஆண்டின் கடைசி மாதம் துல்ஹஜ்ஜு ஆகும். இம்மாதத்தின்  சிறப்பு என்னவெனில், இது ஹஜ்ஜுடைய மாதமாகும். பல்வேறு நாடுகளிலிருந்து பலர் ஓரிடத்தில் ஒன்றுகூடி வழிபடுகின்ற, ஹஜ் செய்கின்ற மாதமாகும். எனவே இம்மாதத்தின் தொடக்கத்திலுள்ள பத்து நாள்களுமே சிறப்பு வாய்ந்தவை ஆகும். அதன் முக்கியத்துவத்தை உணர்த்துமுகமாக, அல்லாஹ் திருக்குர்ஆனில், “அதிகாலைப் பொழுதின்மீது சத்தியமாக! பத்து இரவுகள்மீது சத்தியமாக!” (89: 1-2) என்று கூறியுள்ளான். பத்து இரவுகள்மீது சத்தியமாகஎன்று அல்லாஹ் தன் படைப்பின்மீது சத்தியமிட்டுக் கூறுகின்றானென்றால், அதன்மூலமே அதன் முக்கியத்துவத்தை உணரலாம். அந்தப் பத்து நாள்களில் இயன்ற வரை தொடர்ந்து வழிபடுவதும் நோன்பு நோற்பதும் வலியுறுத்தப்படுகிறது. அதை நபி (ஸல்) அவர்கள் தம் வாழ்நாளில் பேணி வந்துள்ளார்கள்.

இப்னு அப்பாஸ் (ரளி) அவர்கள் அறிவித்துள்ளதாவது: நற்செயல்கள் செய்கின்ற நாள்களில் (துல்ஹஜ்ஜு மாதத்தின்) இந்தப் பத்து நாள்களைவிட அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான நாள்கள் இல்லைஎன அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  (நூல்: திர்மிதீ: 688) இதன் மூலம் இந்தப் பத்து நாள்களின் உயர்சிறப்பை அறிய முடிகிறது.

மூன்றாவது, மாதந்தோறும் மூன்று நாள்கள் நோன்பு நோற்பது நபிகளாரின் பழக்கம். அது எந்த நாள்கள் என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது. இப்னு உமர் (ரளி) அவர்கள், அறிவித்துள்ள தகவலின்படி, மாதத்தின் முதல் திங்கள்கிழமையும் அதற்குப் பின்னுள்ள இரண்டு வியாழக்கிழமைகளும் நோற்றார்கள் என்று பதிவு செய்யப்பட்டுள்ளது.  உம்முசலமா (ரளி) அவர்களின் கூற்றுப்படி, மாதத்தின் முதல் வியாழக்கிழமையும்  அதற்கடுத்த இரண்டு திங்கள் கிழமைகள் நோற்றார்கள் எனப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மாதத்தின் முதல் நாள், பத்தாம் நாள், இருபதாம் நாள் ஆகியவை என்றும் கூறப்பட்டுள்ளது. ஆக, மாதத்தின் மூன்று கிழமைகள் நோற்க வேண்டும் என்பதை இதன்மூலம் அறிய முடிகிறது. இவையனைத்தையும் முஸ்லிம் நபிமொழித் தொகுப்பு நூலுக்கு விளக்கவுரை எழுதியுள்ள இமாம் நவவீ (ரஹ்) அவர்களின் நூலில் காணலாம்.

தாங்கள் ஏன் திங்கள்கிழமை நோன்பு நோற்கின்றீர்கள்?” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வினவப்பட்டபோது, “அன்றுதான் நான் பிறந்தேன். என் பிறந்த நாளில் நான் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தும் பொருட்டு நோன்பு நோற்கிறேன்என்று விடையளித்தார்கள்.

வியாழக்கிழமை ஏன் நோற்க வேண்டும்? “அடியார்களின் வினைகள் யாவும் திங்கள் கிழமையும் வியாழக்கிழமையும் (அல்லாஹ்விடம்) எடுத்துக் காட்டப்படுகின்றனஎன்று நபி (ஸல்) அவர்கள் கூறிய செய்தி அபூதாவூத் எனும் நபிமொழித் தொகுப்பு நூலில் (2080) பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி தம்முடைய நல்வினைகள் எடுத்துக் காட்டப்படுகின்ற நாளில் தாம் நோன்பாளி என்று வானவர்களால் கூறப்படுவதை விரும்பியுள்ளார்கள். ஆகவே அந்நாள்களில் நோன்பு நோற்றுள்ளார்கள்.

ஆக இவையெல்லாம் ஆன்மிகத்தில் மிகுதியாக ஈடுபட விரும்புவோருக்கான ஒரு வழிகாட்டலேயன்றி, எல்லோரின்மீதும் கடமையான வழிபாடு இல்லை என்பதைப் புரிந்துகொண்டு  செயலாற்ற வேண்டும். எல்லோராலும் உபரியான நோன்புகளை நோற்க இயலாது. மனிதர்கள் பல வகை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தொழிலும் பணியும் உள்ளன. சிலருக்குக் கடினமான வேலை; வேறு சிலருக்கு மிக இலகுவான வேலை. எனவே அவரவர் தத்தம் வசதிக்கேற்ப இவற்றைச் செயலாற்ற வேண்டும்.

அதிகாலைத் தொழுகைக்குமுன் இரண்டு ரக்அத்கள் தொழுவதை நபியவர்கள் தொடர்ந்து கடைப்பிடித்து வந்துள்ளார்கள். எவர் சுன்னத்தான பன்னிரண்டு ரக்அத்களைத் தொடர்படியாகக் கடைப்பிடித்து வருகின்றாரோ அல்லாஹ் அவருக்குச் சொர்க்கத்தில் ஒரு வீட்டைக் கட்டுகின்றான்என்று நபியவர்கள் கூறினார்கள். (திர்மிதீ: 379) அதில் அதிகாலைத் தொழுகைக்குமுன் உள்ள இரண்டு ரக்அத்களும் அடக்கமாகும்.


ஆகவே நபி (ஸல்) அவர்கள் காட்டிய வழிமுறையை நம்மால் இயன்ற வரை கடைப்பிடித்து நோன்புகள் நோற்று, உபரியான தொழுகைகளைப் பேணி ஈருலக வாழ்விலும் ஈடேற்றம் பெற ஏக இறைவன் அருள்புரிவானாக!   (()) 






வியாழன், 17 மார்ச், 2016

பூபாள இராகங்கள் (நூல் மதிப்புரை)



நூல் மதிப்புரைக்கு வந்திருந்த "பூபாள இராகங்கள்'' எனும் கவிதைத் தொகுப்பு நூலை எடுத்தபோது அதன் முகப்பு அட்டை கண்ணைக் கவர்ந்தது. அதைப் புரட்டியபோது ஒவ்வொரு கவிதையின் கருவிற்கும் ஏற்றாற்போல் அதனைப் பிரதிபலிக்கும் விதத்தில் ஒவ்வொரு படமும் இடம்பெற்றிருந்தது. கவிதையைப் படித்தவுடன் கவிதையின் கருவும் படமும் மனதில் அப்படியே ஒட்டிக்கொள்கின்றன. எளிய, இனிய நடையில் கவிதைகள் அமைந்துள்ளன. கவிதை என்றாலே கடினமாக இருக்கும்; படித்தோர்தாம் புரிந்துகொள்ள முடியும் என்ற நிலையிலிருந்து மாறி, பாமரர் படித்தாலும் புரிந்துகொள்ளும் வகையிலான எளிய நடை. தேவையான இடங்களில் ஆங்காங்கே உவமை. 15 ஆண்டுகளாக அவ்வப்போது எழுதிய கவிதைகளை ஒருங்கிணைத்திருப்பதாக இந்நூலின் முன்னுரை கூறுகிறது. கவிதை எழுதுவதையே தொழிலாகக் கொள்ளாமல் அவ்வப்போது மனதில் உதிப்பதைக் கவிதையாகத் தீட்டுவதில்தான் சமூக உணர்வு மேலிடும். அந்த உணர்வின் வெளிப்பாட்டை "பூபாள இராகங்கள்''  எனும் இந்நூலில் காணமுடிகிறது.

மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவியின் முதலாம் கவிதைத் தொகுப்பு இனிதே அமைந்துள்ளது. அவரின் கவிதைகளுக்கு, நடைவண்டியைப் பிடித்துக்கொண்டு நடக்கப் பழகும் ஒரு குழந்தையை அருகிலிருந்து ஆர்வமூட்டுவதைப்போல், தமிழறிஞர்கள் முனைவர் சேமுமு. முகமதலி, முனைவர் ஹ.மு. நத்தர்சா, முனைவர் ஜெ. ஹாஜாகனி ஆகியோர் வாழ்த்துரை வழங்கி ஊக்கப்படுத்தியிருப்பது இந்நூலுக்கு அணிசேர்க்கிறது. இந்நூலை அனைவரும் வாங்கிப் படித்து இரசிக்கும் வகையில் இதன் விலையை மிகவும் குறைவாக அமைத்துள்ளார். நூலை வாங்கிப் படித்து, கவிஞரை நீங்களும் ஊக்கப்படுத்தலாமே!

நூல்: பூபாள இராகங்கள் (கவிதை) 

ஆசிரியர்: மௌலவி முனைவர் நூ. அப்துல் ஹாதி பாகவி

பக்கங்கள்: 150

விலை: ரூ. 100/-

வெளியீடு:
ஆயிஷா இஸ்லாமியப் பதிப்பகம்
224/733 முதல் தளம், டி.எச். சாலை,
புதுவண்ணை, சென்னை-600081
தொடர்புக்கு: 94443 54429   

=========================================



வேலையை விட்டுவிட்டாள்...! (சிறுகதை)

-நூ. அப்துல் ஹாதி பாகவி

ஆயிஷா-அன்வர் தம்பதியருக்கு எழில் கொஞ்சும் சென்னை மாநகரில் உற்றாரும் உறவினரும் பெற்றோரும் மற்றோரும் கூடி நின்று முகமலர்ந்து அன்போடு வாழ்த்த, இனிதே திருமணம் நடைபெற்றது. நண்பர்களும் தோழிகளும் அன்பின் அடையாளமாய்ப் பரிசுப் பொருள்களை வழங்கி மனதார வாழ்த்துத் தெரிவித்துவிட்டுச் சென்றனர்.

புதுமணத் தம்பதிகள் ஆயிஷாவும் அன்வரும் பொருத்தமான ஜோடி என வாழ்த்தாத நெஞ்சமில்லை. வாழ்த்துச் சொல்லும் நண்பர்களுக்குப் பஞ்சமில்லை. ஒரு வார காலம் உருண்டோடியதே தெரியவில்லை. பேருவகையோடும் பெரு மகிழ்ச்சியோடும் பொழுது கழிந்தது.  விடுப்பு நாள்கள் விரைவில் கரைந்தன. அலுவலகத்தில் இதற்குமேல் விடுப்புக்கு அனுமதியில்லை. இரண்டு நாள்களுக்கு முன்பே மேலாளர், ஆயிஷாவுக்குச் செல்பேசியில் அழைப்பு விடுத்திருந்தார்.  அன்று திங்கள்கிழமை. வேக வேகமாகத் துயிலெழுந்து அதிகாலைத் தொழுகையை வழமைபோல் இருவரும் நிறைவேற்றினர். பின்னர், தன் அன்பான மனைவி ஆயிஷா சமைத்த சிற்றுண்டியை அன்வர் மனதார ருசித்துச் சாப்பிட்டான். இருவரும் ஒன்றாக அலுவலகம் செல்லத் தயாராயினர்.

திருமணத்திற்குப் பிறகும் அலுவலகப் பணியைத் தொடரப்போவதாகத் திருமணத்திற்கு முன்பே மாப்பிள்ளையிடம் பெண்வீட்டின் சார்பாக ஒப்பந்தம் போடப்பட்டுவிட்டது. அந்த நிபந்தனையை ஏற்றுக்கொண்டுதான் திருமணத்திற்கு ஒத்துக்கொண்டான் அன்வர். 

அன்வர் தன் அலுவலகத்திற்குச் செல்லும் வழியில்தான் ஆயிஷா செல்லும் அலுவலகம் இருந்தது. இது நாள் வரை தன்னுடைய பைக்கின் பின்னால் அமர யாருமின்றித் தனியாகச் சென்றான். தனியாகச் செல்லும்போது வழியில் யாருக்கேனும் லிஃப்ட் கொடுப்பது அவனது வழக்கம். இன்று முதல் அவனுடைய பைக்கின் பின் இருக்கையில் அமர அவனுடைய நெஞ்சில் நிறைந்த மனைவி ஆயிஷா வந்துவிட்டாள். மனைவியோடு பேசிக்கொண்டே சென்ற அன்வர், பிரதானச் சாலையில் மிகப் பிரம்மாண்டமாக வான்முட்டி நிற்கும் ஒரு கட்டடத்தின்முன் தன் வண்டியை நிறுத்த, ஆயிஷா இறங்கிக்கொண்டாள்.

தன் கண்ணில் நிறைந்த கணவர் அன்வருக்கு அன்போடு சலாம் உரைத்து, அவன் புறப்படும் வேளையில், ஃபீ அமானில்லாஹ் (அல்லாஹ்வின் பாதுகாப்பில் செல்வீர்) என்று கூறிப் புன்னகையோடு அனுப்பி வைத்தாள் ஆயிஷா. இருவரும் பிரிய மனமின்றிப் பிரிந்து சென்றனர்.

அன்வர்-ஆயிஷா இருவரும் நன்கு படித்தவர்கள்; இஸ்லாமிய நெறியையும் பண்பாட்டையும் அறிந்தவர்கள்; ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுப்பதும் பொறுத்துக்கொள்வதும் இருவரின் இயற்பண்பாகும். ஒருவர் மற்றவருக்குத் துணையாகவும் தூணாகவும் இருந்தனர். காண்போர் பார்த்து வியக்கும் அளவிற்கு அவர்களின் அன்னியோன்னியம் இருந்தது.

காலம் உருண்டோடியது. இரண்டு பிள்ளைகளுக்குத் தாயானாள் ஆயிஷா. அலுவலகத்தில் வழங்கப்பட்ட ஆறு மாத விடுப்புக் காலத்தில் தன் பிள்ளைகளுக்குத் தாய்ப்பாலூட்டிப் பேணி வளர்த்தாள். தான் விரும்பிய பள்ளிக்கூடத்தில் சேர்த்தாள். மாலையில் தன் அலுவலகத்திலிருந்து திரும்பி வந்ததும், பிள்ளைகளைக் கவனித்துக் கொள்வதும் அவர்களுடன் பொழுதைக் கழிப்பதும்  அவளின் இயல்பாக மாறிப்போனது.

திடீரென ஒரு நாள் அவர்களுடைய வாழ்க்கையில் ஒரு புயல் வந்தது. அது அவர்களின் வாழ்க்கையையே புரட்டிப்போட்டுவிட்டது. ஆம்! ஆயிஷாவுக்கு வேறோர் அலுவலகத்தில் பணி மாற்றம். அன்வர்-ஆயிஷா இருவரும் தம் அலுவலகம் செல்லும்போது ஒரே பைக்கில் ஒட்டி உறவாடிச் செல்வது வழக்கம். இனி அந்த இனிமையான பொழுது அவர்களுக்குக் கிட்டாது. அன்வரின் அலுவலகம் ஒரு திசையிலும் ஆயிஷாவின் அலுவலகம் எதிர்திசையிலும் இருந்தன.

அதிகாலையில் எழுந்து தொழுதுவிட்டு, வேகமாகச் சமைத்து, அதை உணவுப் பெட்டிக்குள் வைத்து, பிள்ளைகளுக்கும் கணவருக்கும் கொடுத்தனுப்பிவிட்டு, தனக்கும் உணவை எடுத்துக்கொண்டு அலுவலகப் பேருந்தில் ஏறி, அலுவலகம் செல்லத் தொடங்கினாள். அன்வர் தன் அலுவலகம் செல்லும்வேளையில் தன் பிள்ளைகளைப் பள்ளிக்கூடத்தில் விட்டுச் செல்வது வாடிக்கையானது.

அலுவலகப் பணி முடிந்து, அன்வர் வீட்டிற்கு வந்து, தன் பிள்ளைகளைக் கவனித்துக் கொள்ளலானான்.  வீட்டுப் பாடங்களை எழுத வைத்து, அவர்களுடைய பாடங்களைச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தான். இடையிடையே கடிகாரத்தை நோட்டமிட்டு, வாசலைப் பார்த்துக் கொண்டிருந்தான். இரவு மணி எட்டை எட்டியது. அப்போதுதான் ஆயிஷா வீடு வந்து சேர்ந்தாள்.  மிகவும் களைப்பாக இருந்தாள்.

ஆயிஷா! ஏன் இவ்வளவு நேரமாச்சு? என்னாச்சு? என்று அன்போடு கேட்டான் அன்வர்.

எல்லாம் போக்குவரத்து நெரிசல்தான் என்று ஒற்றை வரியில் வெற்று வார்த்தையாய் விடை பகன்றாள் ஆயிஷா.

காலம் வேகமாகச் சுழல, அன்வர்-ஆயிஷா தம்பதியருக்குத் திருமணமாகிப் பத்து வருடங்கள்  கரைந்துவிட்டன. இப்போதெல்லாம் ஆயிஷா வீட்டிற்குத் தாமதமாக வருவதால், வந்து சமைக்க இயலாது போய்விட்டது. எனவே அவள் வரும்போது இரவுணவை உணவகத்திலேயே வாங்கி வந்துவிடுகின்றாள். காலையில் மிகவும் துரிதமாக அலுவலகம் செல்ல வேண்டி இருப்பதால் காலையிலும் உணவு சமைக்க முடிவதில்லை. காலையில் ஒரு சிற்றுண்டிக் கடையில் உணவை வாங்கி, அன்வர் தன் பிள்ளைகளுக்குக் கொடுத்துவிடுகின்றான். ஆயிஷாவும் அன்வரும் தத்தம் அலுவலகத்தில் அமைந்துள்ள கேண்டீனில் பகலுணவை முடித்துக் கொள்கின்றார்கள். இரவில்  வீடு திரும்பும்வேளையில் ஏதாவது ஓர் உணவகத்தில் தன் வீட்டிற்குத் தேவையான உணவை ஆயிஷா வாங்கி வந்துவிடுகின்றாள்.

ஞாயிற்றுக்கிழமை மட்டும் ஆட்டிறைச்சி வாங்கி, தன் வீட்டிலேயே சமைக்கத் தொடங்கினாள் ஆயிஷா. அன்று ஒரு நாள் மட்டும்தான் அனைவருக்கும் வீட்டு உணவு. அன்வர் படித்தவன்; இஸ்லாமிய நெறிமுறைகளையும் அறிந்தவன். எல்லாவற்றையும் எளிதாக எடுத்துக்கொண்டான்.
 
அன்றொரு நாள் அன்வரின் சின்னம்மா சித்தீக்கா வந்திருந்தாள். இருவருக்கும் என்ன செய்வதென்றே தெரியவில்லை. நீ இன்றைக்கு லீவு போடு என்று ஆயிஷாவிடம் சொல்ல, இன்றைக்கு ஆஃபீசில் ஒரு முக்கியமான வேலை இருக்கு. நீங்களே லீவு போட்டு, உங்க சின்னம்மாவோட பேசிக்கொண்டிருங்கள் என்று கூறினாள். இருவருக்கும் விடுப்பு எடுக்க முடியாத நிலை. தேவையான பொருள்களை வாங்கிக் கொடுத்துவிட்டு, சமைத்துண்ணுமாறு சொல்லிவிட்டு இருவரும் தத்தம் அலுவலகம் சென்றுவிட்டனர். சித்தீக்கா வெறுமையாய் உணர்ந்தாள். இத்தனை ஆண்டுகள் கழித்து வந்துள்ள எனக்கு இதுதான் இவர்கள் கொடுக்கும் மரியாதையா என்று நினைத்தவளாய் மறுநாளே புறப்பட்டுவிட்டாள். நீண்ட காலத்திற்குப் பிறகு சின்னம்மா தன் வீட்டிற்கு வந்தும் அவரைச் சரியாகக் கவனித்துக்கொள்ள முடியவில்லையே என்ற ஆதங்கத்தில் அன்வர் தன் மனைவி ஆயிஷாவைச் சற்றுக் கடுமையாகப் பேசிவிட்டான். அதைப் பொறுத்துக்கொள்ள முடியாத ஆயிஷா சற்று நிதானம் தடுமாறி, தன் அன்பிற்குரிய கணவனை எதிர்த்துப் பேசி, அவனது சினத்தைத் தூண்டிவிட்டாள். ஆனாலும் அது அவளுடைய மனதை உறுத்திக்கொண்டே இருந்தது. என்ன இருந்தாலும், நான் அவரை அப்படிப் பேசியிருக்கக்கூடாது என்று கருதினாள். "சொர்க்கமும் நரகமும் கணவனின் காலடியில்'' என்று தன் தாய் சொல்லிக் கொடுத்த நபிமொழி நினைவுக்கு வந்து, அவளை மீண்டும் மீண்டும் வருத்தியது.  நீண்ட நேரமாகியும் கண்ணில் உறக்கமில்லை; மனதில் நிம்மதி இல்லை.

இதுபோன்ற சோகமான நேரங்களில் அவள் தன் உற்ற நண்பனாகக் கருதுவது, திருக்குர்ஆனைத்தான். அவளுடைய சோர்வுக்கும் சோகத்திற்கும் மருந்தூட்டும் விதமாக அமைவது அதுவே. எனவே பட்டென எழுந்து, அங்கத்தூய்மை செய்துகொண்டு திருக்குர்ஆனை எடுத்து ஓதத் தொடங்கினாள். அந்நிசா எனும் அத்தியாயத்தை ஓதிக்கொண்டே வந்தபோதுதான் அந்த  இறைவசனத்தைப் படித்தாள். அதுவே அவளின் வாழ்க்கையை மாற்றிப்போட்டது.

(ஆண், பெண் இருபாலாரில்) ஆண் பாலாரை(ப் பெண்பாலாரைவிட) அல்லாஹ் மேன்மையாக்கி வைத்திருப்பதுடன் (ஆண்பாலார்) தங்கள் பொருள்களை(ப் பெண் பாலாருக்கு)ச் செலவு செய்வதனாலும் ஆண்கள்தாம் பெண்களை நிர்வகிக்கக் கூடியவர்களாக இருக்கின்றனர். ஆகவே, நல்லொழுக்கம் உள்ள பெண்கள் (அல்லாஹ்வுக்கும் தங்கள் கணவனுக்கும்)  பணிந்தே நடப்பார்கள். (தங்கள் கணவன்) மறைவாக உள்ள சமயத்தில் அல்லாஹ்வின் பாதுகாப்பைக் கொண்டு (தங்களையும் கணவனின் மற்ற பொருள்களையும்) பேணிக்காத்துக் கொள்வார்கள். (4: 34)

இந்த இறைவசனம் அவளது சிந்தனையைத் தூண்டியது. மீண்டும் மீண்டும் அந்த வசனம் குறித்துச் சிந்தித்தாள். மீண்டும் அதைப் படித்தாள். தான் இவ்வளவு நாள் வாழ்க்கையை இழந்துவிட்டதாக உணர்ந்தாள். தன் பிள்ளைகள் தாய்ப்பாசத்திற்காக ஏங்குவதையும் தன் கணவன் மனைவியின் உபசரிப்பிற்காகவும் அன்பான வார்த்தைகளுக்காகவும் ஏங்குவதையும் உணர்ந்தாள். பணிக்குச் செல்வதால் நல்லதொரு தாயாக, நல்லதொரு மனைவியாக தன்னால் இருக்க முடியவில்லையே என எண்ணி எண்ணிக் குமைந்தாள். வாழ்க்கையை இழந்து எதையோ தேடிக்கொண்டிருப்பதை விளங்கினாள். தீர்க்கமாக முடிவு செய்துகொண்டு உறங்கினாள். நிம்மதியான உறக்கம் அவளின் கண்களைத் தழுவியது.

அதிகாலை எழுந்து தொழுதுவிட்டு, தன் பிள்ளைகளுக்கும் கணவருக்கும் சமைக்கத் தொடங்கினாள். அக்காட்சியைக் கண்ட அன்வருக்கு ஆச்சரியம்.

என்ன ஆயிஷா, சமைக்கத் தொடங்கிவிட்டாய். அலுவலகம் செல்லவில்லையா? என்று அக்கறையோடு கேட்டான்.

நான் வேலையை விட்டுவிடுவதாக முடிவு செய்துவிட்டேன். இனி நான் வீட்டில் இருந்துகொண்டு உங்களையும் பிள்ளைகளையும் கவனித்துக்கொள்ளப் போகிறேன் என்று தீர்மானமாகக் கூறினாள் ஆயிஷா.

ஆயிஷாவின் தீர்க்கமான முடிவைக் கேட்ட அன்வர் மகிழ்ச்சியில், அல்ஹம்து லில்லாஹ் அலா குல்லி ஹால் என்று கூறினான்.

அன்வர் தன் வீட்டிலேயே தன் மனைவி சமைத்த சிற்றுண்டியை வயிறார, மனதார உண்டுவிட்டு, தன் பிள்ளைகளை அழைத்துக்கொண்டு பள்ளிக்கூடத்தில் விட்டுவிட்டு தன் அலுவலகத்தை நோக்கிச் சென்றான்.
அதற்குள் ஆயிஷா வீட்டு வேலைகளையெல்லாம் முடித்துக்கொண்டு தன் பிள்ளைகளையும் கணவரையும் அன்போடு வரவேற்கத் தயாரானாள். அன்வர் தன் அலுவலகப் பணியை முடித்துக்கொண்டு பிள்ளைகளை அழைத்துக்கொண்டு, தன் வருகைக்காக ஆவலோடு காத்திருக்கும் மனைவியைக் காண மகிழ்ச்சியோடு தன் இல்லம் நோக்கி விரைந்தான். 

 ====================






ஞாயிறு, 13 மார்ச், 2016

"பூபாள இராகங்கள்" கவிதைத் தொகுப்பு நூல்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

என்னுடைய "பூபாள இராகங்கள்" கவிதைத் தொகுப்பு நூல் வெளிவந்துவிட்டது என்ற செய்தியைத் தங்களுக்குத் தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

சிறந்த கவிதைகளை மட்டும் பதிவுசெய்துள்ளேன். ஒவ்வொன்றும் ஒரு கருத்தை வலியுறுத்துவதாக அமைந்துள்ளமை கண்டு படைத்தோன் அல்லாஹ்வுக்கு நன்றிசெலுத்துகிறேன்.

இந்நூலைப் பார்வையிட்டு ஆங்காங்கே கண்ட பிழைகளைத் திருத்திக் கொடுத்ததோடு, இந்நூல் சிறக்கும் வகையில் நல்லதொரு நடுநிலையான மதிப்புரையை வழங்கிய முனைவர் சேமுமு.முகமதலி அவர்களுக்கும், இந்நூலுக்கு அணிந்துரை வழங்கி அணிசேர்த்த புதுக்கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர், முனைவர் ஹ.மு.நத்தர்சா அவர்களுக்கும், வாழ்த்துரை வழங்கிய  காயிதே மில்லத் கல்லூரி, தமிழ்த்துறைத் தலைவர், முனைவர் ஹாஜாகனி அவர்களுக்கும் என் இதயப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக்கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.

இக்கவி நூல் திக்கெங்கும் பரவி, தமிழ்த் தாகம் உள்ளோரின் தாகத்தைத் தீர்க்கும் வண்ணம் அமைய வேண்டுமென்ற தீராத ஆவலுடன் தூயோன் அல்லாஹ்விடம் இரு கைகளுயர்த்திப் பிரார்த்தனை செய்கிறேன்.

                     அன்புடன்
கவிஞர்
                     நூ.அப்துல் ஹாதி பாகவி

இந்நூல் கிடைக்கும் இடங்கள்:

சலாமத் புக் ஹவுஸ், மண்ணடி : 044 4216 7320

பஷாரத் பப்ளிகேஷன், மண்ணடி: 97899 99256

த்ரீஎம் பப்ளிஷர், அங்கப்பன் தெரு, மண்ணடி: 98842 83949/ 984000 4168/ 98403 61227

ரஹ்மத் ஆங்கில நூல் நிலையம், மயிலாப்பூர், சென்னை: 9940 059400 

==============
பக்கங்கள்: 152
விலை: 100/-
வெளியீடு: ஆயிஷா இஸ்லாமியப் பதிப்பகம்
224/ 733 முதல் தளம், டி எச் சாலை,
புதுவண்ணாரப்பேட்டை. சென்னை 81