வியாழன், 20 டிசம்பர், 2018

ஏகத்துவ நம்பிக்கை

ஞாயிறு, 16 டிசம்பர், 2018

வியாழன், 13 டிசம்பர், 2018

மரபணு மாற்றப்பட்ட உணவுப் பொருள்கள்!-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

மனித இனத்தைப் படைத்த இறைவன் மனிதன் உண்டு வாழத் தேவையான உணவுப் பொருள்களையும், அவனுக்கு நோய் ஏற்பட்டால் நிவாரணம் பெற்றுக்கொள்ளத் தேவையான மூலிகைகளையும் படைத்துள்ளான். ஒவ்வொரு கணப்பொழுதும் மனிதனுக்குத் தேவையான உணவுப் பொருள்களை உற்பத்தி செய்துகொண்டே இருக்கிறான். எல்லாமே அபரிமிதமாகக் கிடைத்துக்கொண்டிருக்கின்றன. இறைவனின் நிர்வாகத்தில் எந்தக் குறைபாடும் இல்லை.

இறைவனுக்குப் போட்டியாக மனிதன் மாறத் தொடங்கியபோதுதான் அவனுக்கான அழிவும் தொடங்கியது. இறைவனின் மூலப் படைப்பில் மாற்றம் செய்து, இயற்கையைவிட மேலாகத் தான் விரும்பும் விதத்தில் பயிர்களும் பழங்களும் அபரிமிதமாக உற்பத்தியாக வேண்டும் என்று எண்ணத் தொடங்கியதன் விளைவாக, விதைகளின் மரபணுவை மாற்றியமைக்கத் திட்டமிட்டான். அப்பயிர்கள் அவன் விரும்பியவாறு வளரத் தொடங்கின. ஆனால் அத்தோடு பல கேடுகளையும் அள்ளிக்கொண்டு வந்தன.

உண்மையில் மரபணு மாற்றம் என்பது என்ன? இறைவன் இயல்பாகப் படைத்திருக்கின்ற டிஎன்ஏ மூலக்கூறை மாற்றி அமைப்பதுதான். அதாவது ஒரு விதைக்குள் எவ்வளவு சத்து, எவ்வளவு நோய் எதிர்ப்பாற்றல் என இறைவன் நிர்ணயித்துள்ளானோ அதை மிகைப்படுத்துவதுதான் மரபணு மாற்றம்.  ஒன்றை மற்றொன்று உண்டு வாழ்வதுதான் இயல்பான உணவுச் சுழற்சி முறை. பயிரைத் தின்ன புழுக்களும் பூச்சிகளும் வயல்வெளிக்கு வரத்தான் செய்யும். அவற்றை வரவிடாமல் தடுப்பதற்காக அதனுள் நுண்ணுயிர்களைக் கொல்லும் நோய் எதிர்ப்பாற்றல் உட்செலுத்தப்படுவதால் அந்த விதையின் மூலம் விளைகின்ற பயிர் தன்னைத்தானே பூச்சிகளிலிருந்தும் புழுக்களிலிருந்தும் தற்காத்துக்கொள்கிறது. இதனால் விவசாயிக்கு இலாபம்தானே என்று கேட்கலாம். அப்படியல்ல. அந்த நோய் எதிர்ப்பாற்றலின் காரணமாகப் பல்வேறு பக்க விளைவுகளும் உண்டாகின்றன. அதாவது அந்த எதிர்ப்பாற்றல் காரணமாகப் பயிர்களுக்கு நன்மை பயக்கும் ஏனைய நுண்ணுயிர்களும் அழிந்து விடுகின்றன. அத்தோடு அடுத்தடுத்து பயிரிட இயலாதவாறு மண் தனது ஆற்றலை இழந்துவிடுகிறது.

கத்தரிக்காய், வாழைப்பழம், நெல், பயறுகள் தொடங்கி, பல்வேறு காய்கறிகள், பழங்கள், பயிர்கள் ஆகியவற்றிலும் மரபணுவை மாற்றியமைத்து விளைச்சலை அமோகமாகப் பெருக்கிக்கொண்டிருக்கின்றார்கள். இயற்கையான பழங்களும் காய்கறிகளும் குறிப்பிட்ட நாள்களுக்குப்பின் அழுகிவிடும். ஆனால் மரபணு மாற்றப்பட்ட பழங்களும் காய்கறிகளும் நீண்ட நாள்கள் வரை கெடாமல் இருக்கும். பெருமுதலாளிகள் தம் வியாபாரத்தின் இலாபத்தைப் பெருக்கிக்கொள்வதைத் தவிர மக்கள் நலன் அறவே இதில் கிடையாது.

மரபணு மாற்றப்பட்ட எத்தனையோ காய்கறிகளையும் பழங்களையும் நாம் அன்றாடம் உண்டுகொண்டிருக்கிறோம். அவையெல்லாம் நம் உடல் நலத்திற்குக் கேடானவை என்பதை விளங்காமல் வாங்கிக்கொண்டிருக்கிறோம். முடிவில் ஏதேனும் நோய் ஏற்பட்ட பிறகு இந்நோய் நமக்கு எப்படி ஏற்பட்டது எனத் தெரியாமல் கண்கலங்குகிறோம்.

நமது பாரம்பரியமான உணவு வகைகளைப் புறந்தள்ளிவிட்டு, நவீனக் கலாச்சாரத்தோடு ஒன்றிப்போன நம் மக்கள், தொலைக்காட்சி விளம்பரங்களால் ஈர்க்கப்பட்டதால் விளம்பரப்படுத்தப்படுகின்ற புதிய புதிய உணவுப் பொருள்களையும் சமையல் பொருள்களையும் வாங்கிப் பயன்படுத்துகின்றனர். அவற்றால் ஏற்படுகின்ற பின்விளைவுகளை உணர்வதில்லை.

மக்கள் சாப்பிடுகின்ற காய்கறிகள், பழங்களோடு விட்டுவிடாமல் கோழி, ஆடு, மாடு என உயிரினங்களிலும் மரபணு மாற்றத்தைக் கொண்டு வந்துவிட்டார்கள். பொதுவாக, பிராய்லர் கோழி என அறியப்படுகின்ற பண்ணை வளர்ப்புக் கோழிகள், இறைச்சிக்காகவே வளர்க்கப்படுகின்றன. அவை ஆணும் அல்லாத பெண்ணும் அல்லாத உயிரினமாகும்.

"நிச்சயமாக நான் அவர்களை வழிகெடுப்பேன். அவர்களுக்கு வீண் நம்பிக்கைகளை உண்டு பண்ணி (பிசாசுகளுக்காகப் பிரார்த்தனை செய்து விடப்பட்ட) ஆடு, மாடுகளின் காதுகளை அறுத்து விடும்படியும் அவர்களை ஏவுவேன். அல்லாஹ்வின் படைப்பினங்(களின் தோற்றங்)களை மாற்றும் படியாகவும் நிச்சயமாக நான் அவர்களை ஏவுவேன்'' (என்று கூறினான்.) ஆகவே, எவன் அல்லாஹ்வையன்றி (இத்தகைய) ஷைத்தானை (தனக்கு)ப் பாதுகாவலனாக எடுத்துக் கொள்கின்றானோ அவன் நிச்சயமாக பகிரங்கமான இழப்பையே அடைந்துவிடுவான். (4: 119)

இவ்வசனத்தில் கூறப்பட்டுள்ளபடி, மனிதன் தன் தேவைக்கேற்பவும் அவசரத்திற்கேற்பவும் இயற்கையான படைப்பைச் செயற்கையாக உண்டுபண்ண நினைத்து, உருவாக்கியதே பிராய்லர் கோழிகள். அவை ஆணும் அல்லாத பெண்ணும் அல்லாத உயிரினம் ஆகும். இது போன்ற பிராய்லர் கோழிகளை அதிகம் சாப்பிடும் ஆண்களும் பெண்களும் பாதிக்கப்படுகின்றார்கள். ஆண்களுக்கு விந்தணு பாதிப்பும் பெண்களுக்கு கருவில் உள்ள சினைமுட்டையில் பாதிப்பும் ஏற்படுகின்றது. இதனால்தான் இன்றைய இளம் தம்பதிகள் பலர், இயல்பாகக் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாமல்   "கரு உருவாக்க மையங்களை' (ஃபெர்டிலைஷன் சென்டர்) நாடுகின்றார்கள். 

மிக அழகிய படைப்பாளனாகிய அல்லாஹ் அருள்வளமிக்கவன் ஆவான். (23: 14) அல்லாஹ் ஓர் அழகிய படைப்பாளன். அவன் எதையெதை யார் யாருக்கு எவ்வளவு கொடுக்க வேண்டும் என்பதை அளந்தே படைத்து வைத்துள்ளான். அதை மனிதன் மாற்ற நினைத்தால் அதன்மூலம் நன்மைகள் பெருகுவதைப்போல் காணப்பட்டு, தீமைகள் பெருகி நிற்கும் என்பதே நிதர்சன உண்மையாகும்.

மரபணு மாற்றப்பட்ட விதையால் உருவான பழங்களாலும் காய்கறிகளாலும் மண்ணுக்கே கேடு எனும்போது மனித உடலுக்குக் கேடு ஏற்படாமலா இருக்கும். இன்றைய நவீன உலகில் பரவலாகக் காணப்படும் நோய்கள் பலவும் மரபணு மாற்றப்பட்ட உணவு வகைகளால் ஏற்படுபவையே என்றால் மிகையில்லை. எனவே அத்தகைய உணவுகளை நாம் முற்றிலும் தவிர்த்து வாழ்வதே நம் ஆரோக்கியத்தைப் பேண நாம் மேற்கொள்ளும் வழிமுறையாகும். 
================================================== 

ஒருங்கிணைந்த துஆ

ஞாயிறு, 9 டிசம்பர், 2018

ஏகத்துவ நம்பிக்கை!-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

ஒவ்வொரு மதத்தாருக்கும் ஒவ்வொரு நம்பிக்கை உள்ளதைப்போல் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு நம்பிக்கை இருக்கிறது. ஒவ்வொருவரும் தத்தமது நம்பிக்கையின் அடிப்படையில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்.  அவர் நம்பிய தெய்வத்தின்மீது கடவுள்மீதும் சிலைகள்மீதும் நம்பிக்கை வைத்துள்ளார். அவரின் நம்பிக்கைக்கேற்பவே அவரது கடவுள் அவருக்கு எல்லாவற்றையும் வழங்குவதாக நம்பிக்கொண்டிருக்கிறார். ஆனால் பிரபஞ்சங்களைப் படைத்த ஒரே இறைவன் அல்லாஹ்விடம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நம்பிக்கை ஒன்றே ஒன்றுதான். அதுதான் ஏகத்துவ நம்பிக்கை. அந்த ஒரே இறைவன்மீது நம்பிக்கை கொள்வதோடு வேறு யாரையும் அவனுக்கு நிகராகக் கருதாமல் இருக்க வேண்டும். அவர்தாம் ஏகத்துவவாதி ஆவார்.

நம்மைப் படைத்த இறைவன் ஒருவனே. அவனே நம்மைப் பாதுகாப்பவன். அவனே நம் தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றுகிறான். நோயைக் கொடுப்பதும் அதை நீக்குவதும், பசியைக் கொடுப்பதும் அதற்கான உணவைக் கொடுப்பதும், தாகத்தைக் கொடுப்பதும் அதற்கான நீரைக் கொடுப்பதும் எல்லாம் அவனே. அன்றாட வாழ்வில் நமக்கு ஏற்படும் எல்லாவித இன்ப-துன்பங்களுக்கும் அல்லாஹ்வே பொறுப்பாளன். அவனே நமக்கு  இன்பத்தைக் கொடுக்கிறான். அவன் நாடினால் சிலவேளை நமக்குத் துன்பத்தைக் கொடுக்கிறான். இரண்டு வேளைகளிலும் அவனிடமே நாம் கையேந்தவேண்டும். இன்ப வேளையில் நம் நன்றியை அவனுக்கு உரித்தாக்க வேண்டும். துன்பம் ஏற்படும்போது அத்துன்பத்தை நீக்க அவனிடமே கையேந்திக் கேட்க வேண்டும்.

மக்கள் சிலர் கற்சிலைகள்மீதும், வேறு சிலர் உருவப் படங்கள்மீதும், வேறு சிலர் யேசு எனும் ஈஸா நபிமீதும், வேறு சிலர் இறந்துவிட்ட இறைநேசர்கள்மீதும்-இப்படிப் பல்வேறு வகையான நம்பிக்கைகள் கொண்டுள்ளனர்.  வேறு சிலர் ஒரே இறைவன்மீது நம்பிக்கை கொண்டிருக்கும் அதேவேளையில், ஏதாவது துன்பம், துயரம் ஏற்பட்டால் அத்துன்பத்தை நீக்க எங்கேனும் ஒரு தர்ஹாவிற்குச் சென்று, அங்கு துஆ செய்கிறார்கள். அங்கு சென்று வந்த பின் அத்துன்பம் நீங்கிவிட்டால், அங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ள இறைநேசர்மீது நம்பிக்கை வந்துவிடுகிறது. அதன்பிறகு வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் அங்கு செல்லத் தொடங்கிவிடுகின்றார்கள். அங்குள்ள இறைநேசர் மீது அளவுகடந்த நம்பிக்கை மனத்தில் பதிவாகிவிடுகிறது. இதைத்தான் தவறான நம்பிக்கை என்கிறோம்.

சிலர் கேட்கலாம். அவர் அங்கு சென்றுவந்த பிறகுதானே அவருடைய துன்பம் நீங்கியது. அதனால் அந்த இறைநேசர் அல்லாஹ்விடம் துஆ செய்ததால்தான் அல்லாஹ் அவருடைய துஆவின் பொருட்டால் அவருக்கு அத்துன்பத்தை நீக்கினான். எனவே அவர் மீண்டும் மீண்டும் அங்கு செல்வதில் என்ன தவறு? இப்படித்தான் ஷைத்தான் மனிதர்களை வழிகெடுக்கிறான். இறைவன்மீது கொள்ள வேண்டிய நம்பிக்கையை பிறர்மீது வைக்குமாறு இப்படித்தான் மடை மாற்றுகிறான். அதற்கான விடை என்னவெனில், அவர் அங்கு செல்லாவிட்டாலும் குறிப்பிட்ட காலத்தில் அவருடைய துன்பம் நீங்குமாறு இறைவிதி இருந்தால், அவ்வாறே அது நீங்கிவிடும். ஆக, இறைவன்தான் நீக்குகிறானே தவிர, அந்த இறைநேசரின் துஆ அல்ல என்பதை எவ்வாறு புரிய வைக்க முடியும்?

ஒருவர் தமக்குக் குழந்தை இல்லை என்று நீண்ட காலமாக வருத்தப்பட்டுக்கொண்டிருந்தார். பிறகு யாரோ ஒருவர் சொல்ல, அவர் குறிப்பிட்ட தர்ஹாவிற்குச் சென்றார். அங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ளவரிடம் துஆ கேட்டார். பின்னர் குறிப்பிட்ட காலத்தில் அவருக்குக் குழந்தை பிறந்தது. இப்போது அவர் அந்த தர்ஹாவில் அடக்கம் செய்யப்பட்டுள்ள இறைநேசர்மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டுள்ளார். எதைக் கேட்டாலும் அவர் கொடுத்துவிடுவார் என்று நம்பத்  தொடங்கிவிட்டார். இதுதான் தவறான நம்பிக்கையாகும். இவ்வாறுதான் இன்றைய அறியாமக்கள் பலர் தம் ஈமானை இழந்துகொண்டிருக்கின்றார்கள்.
யார் அல்லாஹ்வைச் சார்ந்திருக்கிறாரோ அவருக்கு அவனே போதும்” (65: 3) என்று அல்லாஹ் கூறிவிட்ட பிறகு, பிறவற்றின்மீது நம்பிக்கை கொள்ளவேண்டிய அவசியம் என்ன? நன்மையும் தீமையும் இறைவனின் ஏற்பாட்டின்படியே நடைபெறுகிறது என்று நம்பியுள்ள ஓர் இறைநம்பிக்கையாளர் பிறர்மீது-உயிருள்ளவரோ, இறந்தவரோ-நம் துன்பத்தை நீக்குவார் என்றோ, குழந்தையைத் தருவார் என்றோ எவ்வாறு நம்பிக்கைகொள்ளலாம்?
ஸியாரத் செய்வதன் நோக்கம் என்ன? மரணத்தை நினைவுகூர்வதும், இவ்வுலக வாழ்வில் பற்றின்மை ஏற்படுவதும்தானே நோக்கம்? அதை விட்டுவிட்டு, “நான் அந்த தர்ஹாவிற்குச் சென்றேன்; என் தேவைகளைக் கூறி துஆச் செய்தேன்; அந்த வலியுல்லாஹ்வின் துஆவால் எனக்கு என் தேவை நிறைவேறிவிட்டது" என்று சொல்வது எப்படிச் சரியாகும்? இவ்வாறு சொல்வது அல்லாஹ்வுக்கு இணைவைக்கும் செயல் இல்லையா?
இப்படித்தான் தவறான நம்பிக்கையுடையோரை அவரவர் வழியிலேயே அல்லாஹ் விட்டுவிடுகின்றான்.  அவர் எதை நம்பிச் செயல்படுகின்றாரோ அந்த நம்பிக்கையிலேயே அவர் தொடர்கிறார். ஷைத்தான் அவனுடைய நம்பிக்கையை மேன்மேலும் வளர்க்கிறான். அவருடைய நாட்டமெல்லாம் நிறைவேறுவதைப்போல் காட்டுவான்.  இவ்விடத்தில் முஸ்லிம்கள் ஒரு கணம் நின்று நிதானமாகச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அதாவது, முஸ்லிம் அல்லாத மக்கள் தத்தம் கடவுளான கற்சிலைகளை வணங்குகின்றார்கள். நாங்கள் இந்தக் கடவுளை வணங்குவதால்தான் நிம்மதியாக வாழ்கிறோம்என்று அவர்களும் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள்.  அப்படியென்றால் அல்லாஹ்வை வணங்காத அவர்களுக்கு உணவளிப்பவன் யார்? ஆரோக்கியத்தைக் கொடுப்பவன் யார்? அந்தக் கற்சிலைகள்தாம் அவற்றையெல்லாம் செய்கின்றன என்று ஒரு முஸ்லிம் சொல்வானா? அல்லாஹ்தானே கொடுக்கின்றான்? ஏனென்றால் இவ்வுலகில் அவன் தன்னை வணங்குகின்ற, வணங்காத அனைவர்மீதும் அன்புடையவன்; கருணையாளன்.

அல்லாஹ் எங்களுக்கு விதித்ததைத் தவிர வேறொன்றும் நிச்சயமாக எங்களை அணுகாது. அவன்தான் எங்களுடைய இறைவன்என்று (நபியே) நீங்கள் கூறுங்கள்.

 இறைநம்பிக்கையாளர்கள் அனைவரும் அல்லாஹ்வையே சார்ந்திருக்கட்டும். (9: 51) இந்த இறைவசனத்தின் பொருளை முழுமையாக விளங்காததால்தான் இன்றைய முஸ்லிம்கள் பலர் தமக்குத் துன்பம் வரும்போது துவண்டுவிடுகின்றார்கள். அதை நீக்க எதையும் செய்யத் துணிந்துவிடுகின்றார்கள். அல்லாஹ் விதித்ததைத் தவிர வேறெதுவும் நம்மை அணுகாதுஎன்ற ஆழ்ந்த நம்பிக்கை உள்ளவர்கள் எதையும் அலட்டிக்கொள்ளாமல் அல்லாஹ்வின்மீது மட்டும் நம்பிக்கைகொண்டு, மிக இயல்பாக இருக்கின்றார்கள். அதனால் அவர்களுக்கு ஏற்பட்ட துன்பம் எவ்வழி வந்ததோ அவ்வழியே திரும்பிச் சென்றுவிடுகின்றது.  

இறைநம்பிக்கையாளர்களின் நம்பிக்கைகள் சிதறிப்போய்விட்டன. ஒரே இறைவன்மீது வைக்க வேண்டிய நம்பிக்கையை இங்கு கொஞ்சம், அங்கு கொஞ்சம், அதில் கொஞ்சம், இதில் கொஞ்சம் எனப் பிரித்துப் பிரித்து வைத்திருப்பதால்தான் ஏக இறைவனை வணங்கியும் ஏற்றம் பெறாமல் இருக்கிறார்கள் பலர். ஒரே இறைவன்மீது நம்பிக்கை வலுவாக இல்லை. பரவலாகக் காணப்படுகின்ற சூரிய வெப்பத்தைக் குவியாடி (லென்ஸ்) மூலம் ஒரே இடத்தில் குவித்தால் அதன் கீழுள்ள காகிதம் தீப்பற்றி எரிவதைக் காணலாம். அதுபோலவே நம் நம்பிக்கை முழுவதும் ஒரே இறைவன்மீது குவிந்திருந்தால் நினைத்ததைச் சாதிக்கும் ஆற்றலையும் மனவலிமையையும் அல்லாஹ் நமக்கு வழங்கிடுவான். அது மட்டுமின்றி, அப்போதுதான் ஈமானின் சுவையை நாம் உணர முடியும்.

நோய் ஏற்படும்போது அறியாமக்கள் தாயத்து, தகடு, முடிகயிறு எனப் பல்வேறு வடிவங்களில் அதற்கான தீர்வைத் தேடுகின்றார்கள். அல்லாஹ்வைத் தவிர யாரும் நமக்கு நன்மையையோ தீமையையோ செய்துவிட முடியாது என்ற நம்பிக்கை எங்கே போனது? இறைத்தூதர் இப்ராஹீம் (அலை) அவர்கள் தம் இறைவன் குறித்துத் தம் சமுதாய மக்களிடம் கூறியதைப் பாருங்கள்: அவன்தான் என்னைப் படைத்தான். அவனே என்னை நேரான வழியில் நடத்துகிறான்; அவனே எனக்கு உண்ண உணவளிக்கிறான்; குடிக்க நீர் தருகிறான்; நான் நோயுற்ற தருணத்தில் அவனே என்னைக் குணப்படுத்துகிறான்; அவனே என்னை மரணிக்கச் செய்வான்; பின்னர் அவனே என்னை (மறுமையில்) உயிர்ப்பிப்பான்; கூலி கொடுக்கும் (மறுமை) நாளில் என்னுடைய குற்றங்களை மன்னிக்க அவனையே நான் நம்பியிருக்கிறேன்.” (26: 78-82)

 செய்யும் தொழிலில், வியாபாரத்தில் அபிவிருத்தி (பரகத்) ஏற்பட வேண்டுமென்பதற்காகவும் கண்ணேறிலிருந்து பாதுகாப்புத் தேடவும், தர்ஹாவில் விற்பனை செய்யப்படுகின்ற, துணியில் சுருட்டப்பட்ட தேங்காயை வாங்கி வந்து, தம் கடைவாசலில் மாட்டிவிடுகின்றார்கள். அல்லாஹ்வின்மீது வைக்க வேண்டிய நம்பிக்கையை, மந்திரிக்கப்பட்டுத் துணியில் சுருட்டப்பட்ட தேங்காய்மீது வைக்கின்றார்கள். திருக்குர்ஆனிலுள்ள கடைசி இரண்டு அத்தியாயங்களை (அல்ஃபலக், அந்நாஸ்) ஓதிக்கொண்டால் கண்ணேறிலிருந்து பாதுகாப்புப் பெறலாம் என்ற ஆழ்ந்த நம்பிக்கை இல்லாமல் போனதேன்?

ஒவ்வொருவரும் ஒவ்வொன்றின்மீது நம்பிக்கை வைத்து, தமது தேவைகளை முன்வைக்கின்றார்கள். அவை நிறைவேறியபின், தாம் நம்பிக்கை வைத்துள்ள அந்த - கற்சிலை, கடவுள் உருவம், இறைநேசர், மகான்- தான் அதை நிறைவேற்றித் தந்ததாகக் கருதிக்கொள்கிறார்கள். இதைத்தான் அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான்:  “(நபியே) ஒவ்வொருவரும் தத்தமது எண்ணப்படியே செயல்படுகின்றார்கள். உங்கள் இறைவன்தான் (அவர்களுள்) யார் மிகவும் நல்வழி நடப்பவர் என்பதை நன்கறிவான்என்று கூறுவீராக. (17: 84) ஆக ஒவ்வொருவரும் தத்தம் எண்ணப்படியே செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுள் யாருடைய நம்பிக்கை உண்மையானது என்பதை அல்லாஹ்வே நன்கறிவான். அதற்கேற்ப நாளை மறுமையில் தீர்ப்பளிப்பான். 

அல்லாஹ் ஒருவன்மீதே அசைக்க முடியாத நம்பிக்கைகொண்டு அவனை மட்டுமே சார்ந்திருக்கக் கூடியவர்கள் குறித்து நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ள செய்தி மிக முக்கியமானது. அதுவே நம் அனைவருக்கும் போதுமானது.
என் சமுதாயத்தைச் சேர்ந்த எழுபதாயிரம் பேர் கேள்வி கணக்கின்றிச் சொர்க்கம் நுழைவார்கள்என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியபோது, “அவர்கள் யார்?” என்று கேட்கப்பட்டது. அவர்கள் ஓதிப்பார்க்க மாட்டார்கள்; சூடு வைத்துக்கொள்ள மாட்டார்கள்; குறி பார்க்க மாட்டார்கள்; தங்கள் இறைவனையே (முழுமையாகச்) சார்ந்திருப்பார்கள்என்று விடையளித்தார்கள். (நூல்: அஹ்மது: 19345)

ஆக அல்லாஹ் ஒருவனையே சார்ந்து வாழ்வோருக்குக் கேள்வி கணக்கே இல்லை எனும்போது நாம் ஏன் அவ்வாறு முயற்சி செய்யக்கூடாது? அவன்தானே நம்மைப் படைத்து, வளர்த்து, உணவளித்துப் பாதுகாப்பவன். பிறகென்ன கவலை? எனவே நாம் அனைவரும் நம்மைப் படைத்த ஒரே இறைவன்மீதே நம்பிக்கைகொள்வோம்; அவனையே சார்ந்திருப்போம்; ஈருலகிலும் வெற்றி பெறுவோம்!
===========================.