வெள்ளி, 30 செப்டம்பர், 2022

அகிலம் முழுவதும் முஹம்மது நபியின் புகழ் (Mohammed's eulogy in all parts ...





அகிலம் முழுவதும் முஹம்மது நபியின் புகழ் (Mohammed's eulogy in all parts of the world) ஒரு குழுவினர் சபை ஒன்றில் அமர்ந்து இறைவனை நினைவு கூராமலும் தங்களின் தூதர் மீது ஸலவாத் கூறாமலும் இருப்பார்களானால் அவர்கள் மன இறுக்கத்திற்கும் நஷ்டத்திற்கும் உள்ளாவார்கள். இறைவன் நாடினால் (அம்மக்களின் முந்தைய பாவங்களின் காரணமாக ) அவர்களை வேதனைக்குள்ளாக்குவான். அவன் நாடினால் (அவனுடைய அருளாலும் தயாள குணத்தாலும்) அவர்களை மன்னிப்பான். (திர்மிதீ: 3292) -முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி. இமாம் மதீனா மஸ்ஜித் பட்டினப்பாக்கம் சென்னை-28 30/ 09 / 2022 03/ 03 / 1444

ஞாயிறு, 18 செப்டம்பர், 2022

அயல்நாட்டுப் பயணி

 
 
வெளிநாட்டு மாப்பிள்ளை
எனும்
வெளிப்புறப் பகட்டோடு
கோலாகலமாய்த் திருமணம் முடிந்தது.
 
மணமுடிந்து
இரண்டே மாதங்கள்
இல்லாளோடு
இனிய வாழ்க்கை.
இனிதே கழிந்தன நாள்கள்.
பகலவனைக்  கண்டதும்
பனித்துளிகள்
காய்ந்து விடுவதைப்போல
தேய்ந்து போயின நாள்கள்.
 
ஆசைப்பட்டுக் கேட்ட
ஆரஞ்சு மிட்டாயை
வாங்கிக் கொடுத்துவிட்டுத்
தட்டிப் பறித்துக்கொண்டதைப்போல்
உணர்ந்தேன்
விடுமுறை முடிந்ததை எண்ணி...
கட்டிய கன்னியைத் தனியே
விட்டுவிட்டுப்
புறப்பட்டேன் அயல்நாடு. 
 
 
ஈராண்டுகளுக்கு
ஒரு முறை எனத்
திரும்பினேன் தாயகம்.
விடுமுறை நாள்கள்
பனிக்கட்டியாய்க் கரைந்ததும்
மீண்டும் அயலகம்.
 
இதோ
நாற்பது ஆண்டுகள்
கடந்து முடிந்தன
வாழ்ந்த நாள்களோ
மிகக் குறைவு.
 
அன்றாட வாழ்க்கையில்
அன்பான மனைவியோடு
குழைந்து  உறவாடி
கூடிக் குலாவி தினம்
மெய்யோடு மெய்சேர்த்து
ஒன்றாகத் துயில்கொள்ளும்
தாம்பத்திய இன்பத்தை இழந்தேன்.
 
அவளுக்கு நானூட்ட
எனக்கு அவளூட்ட
அன்றாடம் அனுபவிக்கும்
பேரின்பம் இழந்தேன்.
 
தந்தை எனும் பொறுப்பில்
அரவணைப்பையும்
அறிவுசார் கருத்துகளையும்
என் பிள்ளைகளுக்கு
வழங்கும் வாய்ப்பினை இழந்தேன்.
 
உறவினர்கள் திருமணத்திற்கு
உயிருக்கு உயிரான – என்
உயிரோடு கலந்த  
இல்லாளை அழைத்துச்சென்று
இன்புற்று மகிழும்
நல் வாய்ப்பினை இழந்தேன்.
 
உறவினர்கள் யாரேனும்
உயிர்துறந்து விட்டாலும்
அருகில் இருந்து
ஆறுதல் கூறும்
நல் வாய்ப்பினை இழந்தேன்.
 
உறவினர் பலரின்
சுக-துக்க நிகழ்வுகளில்
கலந்துகொண்டு
 ஒருவருக்கொருவர்
பரிமாறிக்கொள்ளும்
அன்பையும் ஆறுதலையும்
பெற முடியா த
துர்பாக்கியசாலி ஆனேன்.
 
நோயுற்றபோது
அன்போடும் ஆதரவோடும்
ஆறுதல் வார்த்தைகள் பேசித்
தேற்றவும்  
ஆற்றுப்படுத்தவும்
அருகில் துணைவியின்றி
எல்லாச் சுகங்களையும் இழந்தேன்.
 
 
நாள்தோறும்
நாவிற்கினிய
சுவையான உணவின்றிக்
கிடைத்ததைத் தின்று
காலம் கழித்தேன்.
 
 
உள்நாட்டில்
நன்றாகப் படித்து,
அரசுப் பணியில் சேர்ந்து
காலம் முழுவதும்
சுகமாகவும் சுதந்திரமாகவும்
வாழும் வாழ்க்கையை இழந்தேன்.
 
வாழும் காலமெல்லாம்
ஓய்வின்றி உழைத்து
மிகைநேரப் பணி செய்து
மிகுதியாய் உழைத்து
மாதந்தோறும்
பணம் அனுப்பி வைக்கிற
ஏடிஎம்  எந்திரமாய் மாறிப்போனேன்.
 
பல்லாண்டு காலம்
பாலைவன நாட்டில்
தனிமையில் வாழ்ந்து
என் இளமை முழுவதையும்
அயல்நாட்டுப் பணத்திற்கு
விற்றுவிட்டு,
முதுமையின் இறுதியில்
உள்ளூரில் அமைந்துள்ள
மஸ்ஜிதின் திண்ணையில்
ஓர் ஒதுங்குமிடம் தேடி
ஓய்வெடுக்கிறேன்.
 
அன்புடன்
கவிஞர்    
நூ. அப்துல் ஹாதி பாகவி
18 09 2022
20 02 1444
------------------------


சனி, 17 செப்டம்பர், 2022

உள்நாட்டில் கால் பதிப்போம்!

 -முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

அண்மையில் வாட்ஸ்அப்பில், தமிழகத்தைச் சார்ந்த அயல்நாட்டுப் பயணி ஒருவரின் குரல்வழிச் செய்தியைக் கேட்க நேர்ந்தது. அதில் அவர் தம் நாற்பதாண்டு கால அயல்நாட்டு வாழ்க்கையால் இல்வாழ்வை இழந்ததையும், பணத்திற்காக வாழ்க்கையைத் தொலைத்துவிட்டோமே என்றும் புலம்புகிறார். நாம் ஏன் உள்நாட்டிலேயே சம்பாதித்திருக்கக்கூடாது? நாம் ஏன் சொகுசு வாழ்க்கை வாழ ஆசைப்பட வேண்டும்? இல்வாழ்க்கையை இழந்தாலும் பணத்தோடும் பகட்டோடும் வாழ வேண்டுமென எண்ணுகிற நம் குடும்பப் பெண்களின் மனப்போக்கை எவ்வாறு மாற்றப்போகிறோம் என்றெல்லாம் தம் வருத்தங்களை அதில் பதிவு செய்துள்ளார்.

மூன்று, நான்கு தலைமுறைகளாக நம் சகோதரர்கள் அயல்நாடு சென்று சம்பாதிப்பதில் ஆர்வம் காட்டி வருவதை நாம் கண்டுவருகிறோம். ஆண்பிள்ளை வளர்ந்து வருகின்றபோதே அவர்கள்தம்  அன்னையர் அயல்நாட்டுச் சம்பாத்தியத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறி அவர்களைத் தயார்படுத்தும் நிலை, கடற்கரை ஓரங்களில் வாழ்கின்ற பெரும்பாலான முஸ்லிம் ஊர்களில் காணப்படுகிறது. அயல் நாட்டில் சம்பாதித்தால்தான் கைநிறையச் சம்பாதிக்கலாம் என்ற எண்ணம் ஊட்டப்படுகிறது. அன்னையரின் அறிவுரை ஆண்களின் மூளையில் அப்படியே இறங்கி அழுத்தமாக அமர்ந்துகொள்கிறது. இது  தலைமுறை தலைமுறையாகப் பின்பற்றப்பட்டு வருகிறது.

முற்காலங்களில் வாழ்ந்த நம் முன்னோர்களும் கடல் தாண்டி அயல்நாடுகளுக்குச் சென்று சம்பாதித்து வந்துள்ளனர் என்பது வரலாறு. ஆனால் அவர்கள் சம்பாதித்ததற்கும் தற்போதைய இளைஞர்கள் சென்று சம்பாதிப்பதற்கும் மிகப்பெரிய வித்தியாசம் உண்டு. அன்றைய முஸ்லிம்கள் வியாபார நோக்கில் அயல்நாடுகளுக்குச் சென்றார்கள். இங்குள்ள தரமான பொருள்களை அயல்நாடுகளுக்குக் கொண்டு சென்று வியாபாரம் செய்து சம்பாதித்து, சம்பாதித்த பணத்தில் அங்குள்ள பொருள்களை வாங்கிக் கொண்டு ஓரிரு மாதங்களில் தாயகம் திரும்புவார்கள்.  பிறகு சில காலம் கழித்து மீண்டும் செல்வார்கள். இது அவர்களின் வழக்கமாக இருந்தது. இதனால் அவர்களின் இல்வாழ்வு பாதிக்கப்படவில்லை.

ஆனால் தற்கால இளைஞர்கள் திருமணத்திற்குப்பின் அயல்நாடு சென்றால் பதினோரு மாதங்கள் கழித்துத்தான் தாயகம் திரும்ப முடியும். சிலர் ஈராண்டுகள் ஒப்பந்தத்தில் செல்கிறார்கள். அவர்கள் ஈராண்டுகள் கழித்துத்தான் தாயகம் திரும்ப முடியும். அது வரை தம்பதியர் ஒருவரையொருவர் பிரிந்துதான் இருக்க வேண்டும். இது இருவருக்கும் எவ்வளவு  மன அழுத்தத்தையும் ஏக்கத்தையும் உருவாக்குகிறது என்பதைப் பெற்றோர் புரிந்துகொள்ள வேண்டும்.

நம் சகோதரர்கள் பொருளீட்ட அயல்நாடுகளுக்குச் சென்றுவிடுவதால் நம்மவர்கள் இழந்தவை ஏராளம். ஒரு பெண் தன் கணவனுடன் தாம்பத்திய வாழ்க்கையை இழந்துவிடுகிறாள்; ஓர் ஆண் தன் மனைவியோடு கூடிக் குலாவி மெய்யோடு மெய் சேர்ந்து துயில்கொள்ளும் இன்பத்தை இழந்து விடுகின்றான்; பிள்ளைகள் தம் தந்தையின் அரவணைப்பையும் அறிவுசார் கருத்துகளையும் இழந்துவிடுகின்றனர்; உறவினர்கள் உறவை இழந்துவிடுகின்றார்கள்; சுக-துக்க நிகழ்வுகளில் கலந்துகொண்டு, ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்ளும் அன்பையும் ஆறுதல் வார்த்தைகளையும் பெற முடியாமல் இழந்துவிடுகின்றான்; நோயுற்றபோது அன்போடும் ஆதரவோடும் ஆறுதல் வார்த்தைகள் பேசித் தேற்றுவதற்கும் பணிவிடைகள் செய்வதற்கும் துணைவியின்றி எல்லாச் சுகங்களையும் இழந்துவிடுகின்றான்; ஒவ்வொரு நாளும் சுவையான உணவின்றிக் கிடைத்ததைத் தின்று காலம் கழிப்பதால் பலவற்றை இழந்துவிடுகின்றான்.

உள்நாட்டில் நன்றாகப் படித்து, ஓர் அரசுப் பணியில் சேர்ந்து காலம் முழுவதும் சுகமாகவும் சுதந்திரமாகவும் வாழும் வாழ்க்கையை இழந்தான்; தேர்தல் வருகின்றபோதெல்லாம் நல்ல ஆட்சியாளரைத் தேர்ந்தெடுக்க வாய்ப்பின்றி வாக்குரிமையை இழந்தான்; வாழும் காலமெல்லாம் ஓய்வின்றி உழைத்து மிகைநேரப் பணி (ஓவர்டைம் ஒர்க்) செய்து பணம் அனுப்பி வைக்கிற ஏடிஎம்  எந்திரமாக மாறிப்போனதால் தன் வாழ்வில் நிம்மதி இழந்தான்; பல்லாண்டு காலம் பாலைவன நாட்டில் தனிமையில் வாழ்ந்தவன், தன் இளமை முழுவதையும் அயல்நாட்டுப் பணத்திற்கு விற்றுவிட்டு, முதுமையின் கடைநிலையில் உள்ளூரில் அமைந்துள்ள மஸ்ஜிதின் திண்ணையில் ஓர் ஒதுங்குமிடம் தேடி ஓய்வெடுக்கிறான்.

நன்றாகப் படித்து, பட்டங்கள் பெற்று ஓர் உயரிய பதவியில் அயல்நாட்டில் பணி கிடைத்து, தன் துணைவியோடு அங்கு உழைத்து வாழ்கிறான் என்றால் அதை நாம் வரவேற்போம். அதற்கு எந்தத் தடையுமில்லை. மாறாக அரைகுறைப் படிப்போடு அயல்நாட்டு மோகத்தில் கடவுச் சீட்டுக்கு விண்ணப்பிக்கும் இளைஞர்கள்மீதே நான் சினம் கொள்கிறேன். ஓர் இளங்கலைப் பட்டமோ முதுகலைப் பட்டமோ இன்றி அயல்நாடு சென்று நீ உன் இளமையை இழக்க வேண்டுமா? நீ நன்றாகப் படித்துப் பட்டம்பெற்று, டிஎன்பிஎஸ்சி, யுபிஎஸ்சி உள்ளிட்ட ஏதேனும் அரசுத் தேர்வெழுதி உயர் பதவியில் அமர்ந்து காலம் முழுவதும் இல்வாழ்வு எனும் அறம் பேணி வாழ்வதை நீ ஏன் இழக்க வேண்டும்? இன்றைய இளைஞர்கள் பலர் அயல்நாடு சென்றுவிடுவதால் நமக்காக ஒதுக்கப்பட்டுள்ள 3.5 சதவிகிதத்திற்கும் உரிய ஆளின்றி வேறு யார் யாரோ அதையெல்லாம் அடைந்துகொள்கிறார்கள்.

அயல்நாட்டில் அயராது உழைக்கும் நீ உள்நாட்டில் உழைத்திருந்தால் இப்போது நீ ஒரு கடைக்கோ, ஒரு நிறுவனத்திற்கோ முதலாளி ஆகியிருப்பாய்; உனக்குக் கீழ் சிலர் வேலை செய்துகொண்டிருந்திருப்பார்கள். உன் இல்வாழ்வும் தொலைந்துபோயிருக்காது; உன் இளமையும் வீணாகியிருக்காது. இப்போது நீ உன் முதுமையில் புலம்புவதைப்போல் புலம்பிடத் தேவையிருந்திருக்காது. உன் மனைவி சிக்கன வாழ்வைக் கற்றுக்கொண்டிருந்திருப்பாள். உள்நாட்டில் உன் இருப்பு நிலைத்திருக்கும். அந்தோ! யாவும் தொலைந்தனவே!

இளைஞர்களே! அயல்நாட்டுக் கனவை ஓர் ஓரமாக ஒதுக்கிவையுங்கள். "திரை கடலோடியும் திரவியம் தேடு'' எனும் முதுமொழி இருந்தாலும், "உள்நாட்டில் உழை; அதுவே உயர்நிலை'' எனும் புதுமொழியை மனதில் கொண்டு உள்நாட்டில் உழைத்து முன்னேறப் பாடுபடு; சுயதொழில் தொடங்கு அல்லது அரசு வேலையைப் போராடிப் பெறு. உள்நாட்டில் பணியாற்றுவதால் எத்தனையெத்தனை நன்மைகள்! உன் பெற்றோருடனும் பிள்ளைகளுடனும் உறவினர்களோடும்  உவகை பொங்க வாழலாம். அன்பான மனைவியைவிட்டுப் பிரிந்து சென்று, வாட்ஸ்அப்பில் குடும்பம் நடத்த வேண்டிய அவசியமில்லை. உறவுகளோடு சின்னச் சின்னச் சண்டைகள் போட்டு பிணங்கிக் கொண்டாலும் காலப் போக்கில் ஒருவருக்கொருவர் இணங்கிக்கொள்ளலாம்.

நன்றாகப் படித்து, உயர் பதவியொன்று அயல்நாட்டில் அமைந்து, துணைவியோடு சேர்ந்து செல்லும் வாய்ப்புக் கிடைக்கப்பெற்றால் அப்போது அயல்நாட்டில் பணியாற்றுவதில் குற்றமில்லை.  அதுவன்றித் தனியாகச் சென்று அடிமட்டப் பணிசெய்து பொருளீட்ட எண்ணாதே! அதனால் உன் இல்வாழ்வையும் இழந்து, உன்னை நம்பி வந்தவளின் தாம்பத்திய வாழ்வையும் பறித்துக்கொண்டு எதைச் சாதிக்கப்போகிறாய்? ஒரு வாழ்க்கையைத் தொலைத்தபின் உனக்கு மட்டும் இன்னொரு வாழ்க்கையா கிடைக்கப்போகிறது?

ஒருக்கால் உள்நாட்டில் உன்னுடைய சம்பாத்தியம் மட்டும் போதவில்லை என்று எண்ணினால் உன் மனைவியையும் நல்லதொரு பணிக்கு அனுப்பலாம். அவளும் சம்பாதிக்கலாம். இருவரும் சம்பாதித்து இனிமையாகக் குடும்ப வாழ்க்கையை நடத்தலாமே? நம் சமுதாயப் பெண்கள் பலர் இளநிலையோ முதுகலையோ படித்துவிட்டுச் சும்மாதானே இருக்கிறார்கள்? அவர்களுடைய பெற்றோர் திருமணப் பத்திரிகையில் போடுவதற்காக மட்டுமா அவர்களைப் படிக்க வைத்தார்கள்? பெண்களுக்கான எத்தனையோ பணி வாய்ப்புகள் இருக்கின்றன. பெண்கள் மட்டுமே பணியாற்ற வேண்டிய எத்தனையோ துறைகள் இருக்கின்றன. அது மட்டுமின்றிப் பெண்களுக்கான அரசு ஒதுக்கீடு (கோட்டா) வேறு உண்டு. பெண்களுக்குத் தோதுவான ஆசிரியப் பணி, மருத்துவப் பணி, மருந்தாளர் பணி, செவிலியர் பணி உள்ளிட்டவை உள்ளன. இத்தகைய ஏதாவது பணியை மேற்கொண்டு உள்நாட்டிலேயே சம்பாதிப்பதற்கான வழிகள் ஏராளம் இருக்கும்போது ஏன் அயல்நாடு சென்று, இரண்டும் கெட்டான் வாழ்க்கை வாழ வேண்டும்?

அயல்நாட்டில் பல்லாண்டுகள் பணி செய்த நண்பர் ஒருவர், இனியாவது நாம் உள்நாட்டிலேயே ஏதாவது பணி செய்துகொண்டு, தம் குடும்பத்தாரோடு சேர்ந்து வாழலாம் என்று முடிவெடுத்து, அயல்நாட்டுப் பணியை முடித்துக்கொள்ளப்போவதாகத் தம் மனைவியிடம் கூறியிருக்கிறார். ஆனால் அவர்தம் மனைவி அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. மிக நீண்ட போராட்டத்திற்குப் பின்னரே அவர் உறுதியாக முடிவெடுத்து, அயல்நாட்டுப் பணியை முடித்துக்கொண்டு தற்போது உள்நாட்டில் பணியாற்றிவருகிறார். மாதந்தோறும் கைநிறையப் பணத்தைப் பார்த்த நம் பெண்கள் அப்பணத்திற்கே அடிமையாகிவிட்டதையே இந்நிகழ்வு காட்டுகிறது. தன் கணவனோடு ஒன்றாக வாழ்வதைவிடப் பணத்தோடு வாழ்வதே சிலருக்கு இனிக்கிறது. 

இளைஞர்களே, சிந்தனை செய்யுங்கள். உங்கள் வாழ்க்கை உங்கள் கையில் உள்ளது. எதிர்கால வாழ்க்கையைத் திட்டமிட்டு அமைத்துக்கொள்வது உங்கள் பொறுப்பு. இனியாவது மாற்றி யோசியுங்கள். உள்நாட்டில் கால்பதிக்க முயலுங்கள்.

=====================






வெள்ளி, 16 செப்டம்பர், 2022

விலைவாசி உயர்வுக்கு யார் காரணம் (Who is the root cause to rise in price?)


விலைவாசி உயர்வுக்கு யார் காரணம்
(Who is the root cause to rise in price?) அனஸ் (ரளி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் (ஒருமுறை) விலைவாசி உயர்ந்தது. அப்போது மக்கள், அல்லாஹ்வின் தூதரே! எங்களுக்கு விலை நிர்ணயம் செய்யுங்கள்!" என்று கூறினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அல்லாஹ்தான் விலை நிர்ணயம் செய்பவன்: வாழ்வாதாரத்தைக் குறைப்பவன், தாராளமாக வழங்குபவன் ஆவான். உயிரிலோ பொருளிலோ (நான்) அநீதியிழைத்ததாக உங்களில் யாரும் என்னிடம் முறையிடாத நிலையில் என் இறைவனைச் சந்திக்கவே நான் விரும்புகிறேன்" என்றார்கள். -முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி இமாம் மதீனா மஸ்ஜித் பட்டினப்பாக்கம் சென்னை-28 16/ 09 / 2022 18/ 02 / 1444

செவ்வாய், 13 செப்டம்பர், 2022

பஸ்மாந்தா முஸ்லிம்களை அடையத் துடிக்கிறது பாஜக

 

-ஜியாஉஸ் சலாம்

சமீபத்தில் ஹைதராபாதில் நடந்த பாரதீய ஜனதா கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில், சிறுபான்மையினரின் விளிம்பு நிலை மற்றும் நலிந்த பிரிவினரை அணுகுமாறு கட்சித் தொண்டர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தினார். பஸ்மாந்தா முஸ்லிம் சமூகத்தை வென்றெடுப்பதற்கான கட்சியின் முதல் உத்தியோகப்பூர்வ முயற்சி இதுவாகும். இது உத்தரப்பிரதேசம் மற்றும் பீகாரில் உள்ள பஸ்மாந்தா முஸ்லிம் தலைவர்களால் முன்கூட்டியே வரவேற்கப்பட்டதுதான், ஆனால் இது முஸ்லிம் சமூகம் முழுவதும் அலைகளையும் அதிர்வுகளையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் மிகப்பெரும் சிறுபான்மையினரான முஸ்லிம்களின் ஒற்றுமையை உடைக்கும் அரசின் முயற்சியாகவே பலரும் இதைக் கருதுகின்றனர். சிறுபான்மைச் சமூகத்தில் மிகப்பெரும் சமூகமாகிய இஸ்லாத்தில் சாதி அமைப்பு இல்லை என்று கூறிக்கொண்டே சாதி அடிப்படையிலான பிளவுகள் இருப்பதைச் சுட்டிக்காட்டி அவர்களுள் சிலர் கேலி செய்தார்கள், இவ்வாறு கூறித் தாழ்த்தப்பட்டோர் பலரைத் தம்மோடு சேர்த்துக்கொள்ள முயல்வது, கட்சியின் வாக்கு வங்கியைப் பெருக்கிக்கொள்வதற்கான தந்திரங்களே என்றும் சுட்டிக்காட்டினர். 

வேதங்கள் என்ன சொல்கின்றன? : அவர்களின் கூற்றுக்கள் இஸ்லாத்தின் கொள்கைகளால் தாங்கப்படுகின்றன. இஸ்லாம் வழங்கிய சாதியற்ற, வர்க்கமற்ற சமூக அமைப்புதான் தாழ்த்தப்பட்ட இந்துக்கள் பலரை இஸ்லாத்திற்கு ஈர்த்தது. உண்மையில், இஸ்லாம் பிறப்பு, சாதி அல்லது வர்க்கத்தின் அடிப்படையில் எந்த வேறுபாட்டையும் அங்கீகரிக்கவில்லை; அதன் முழக்கம் முழுவதும் உலகளாவிய சமத்துவம் பற்றியதுதான். இறுதி இறைத்தூதர் முஹம்மத் நபி தமது கடைசிச் சொற்பொழிவில், “அரபியருக்கு அரபியல்லாதவர்களைவிட அல்லது வெள்ளையர்களுக்குக் கறுப்பினத்தைவிட எந்த மேன்மையும் இல்லை, இறையச்சத்தின் ஏற்றத்தாழ்வுகளைத் தவிரஎன்று கூறினார்கள்.

இன்றுவரை, முஸ்லிம்கள் உலகெங்கிலும் உள்ள மசூதிகளில் தோளோடு தோள் சேர்ந்து தொழுகையில் ஒன்றாக நிற்கிறார்கள். ஒருவரின் இடது அல்லது வலது அல்லது முன்னால் யார் நிற்கிறார் என்பது கவனிக்கப்படாது. தொழுகையை நடத்துகிற இமாமும் சமூகத்தின் எந்தப் பிரிவைச் சார்ந்தவராகவும் இருக்கலாம். இனம் அல்லது மத வேறுபாடுகள் ஒருபோதும் ஒற்றுமையைக் குலைக்கவில்லை. சாரே ஜஹான் சே அச்சா எனும் தேசியப் பாடலை எழுதிய பிரபல கவிஞர் முஹம்மத் இக்பால், "ஏக் ஹீ சஃப் மேன் கடே ஹோ கயே மஹ்மூதோ அயாஸ்/ ந கோயி பந்தா ரஹா, ந கோயி பந்தனவாஸ் (சுல்தான் மற்றும் அடிமை அருகருகே நின்றனர்/ அப்போது வேலைக்காரனோ எஜமானனோ எந்த வேறுபாடும் இல்லை; எதுவும் அவர்களைப் பிரித்துவிடவில்லை).” “எல்லா முஸ்லிம்களும் ஒரே உடலைப் போன்றவர்கள்: உடலின் ஏதாவது உறுப்புக்கு வலி ஏற்பட்டாலும் முழு உடலும் அந்த வலியை உணர வேண்டும்என்று ஒரு நபிமொழி கூறுகிறது. திருக்குர்ஆனில் அல்ஹுஜுராத் எனும் அத்தியாயத்தின் 10ஆம் வசனம், “முஸ்லிம்கள் அனைவரும் சகோதரர்கள்என அழைக்கிறது. அவர்களுள் இருவர் சண்டையிட்டுக்கொண்டால் அவர்களுக்கிடையே சமாதானம் செய்துவைக்குமாறு கட்டளையிடுகிறது.


ஒரு தனித்துவமான வகை: அழகாகவும், உத்வேகம் தருவதாகவும் இருந்தாலும், இது பெரும்பாலும் வேதவசனங்களுக்குள் மட்டுமே இருக்கிறது. தற்கால இந்திய முஸ்லிம் சமுதாயம் நபியவர்களால் எதிர்பார்க்கப்பட்ட ஒரு பிரதி அல்ல. தொழுகை-நோன்பு-ஹஜ் போன்ற விஷயங்களில் மதநம்பிக்கையின் அனைத்துக் கோட்பாடுகளையும் அது நிலைநிறுத்த முற்படும் அதே வேளையில், சமூக-வரலாற்றுக் காரணிகள் இந்திய இஸ்லாத்தை ஒரு தனித்துவமான வகையாக ஆக்குகின்றன, அங்கு அறியாமலேயே இந்துப் பாரம்பரியமும்  இஸ்லாமிய மதிப்பும் இணக்கமாக உள்ளன. நிச்சயமாக, பெரும்பான்மைச் சமூகத்தின் அதீத மேன்மை இதில் ஒரு முக்கியப் பங்கைக் கொண்டுள்ளது. இந்திய முஸ்லிம்களில் மில்லியன் கணக்கானவர்கள் தங்கள் மதத்தை மாற்றிக்கொண்டனர், ஆனால் அவர்கள் தங்கள் சமூக-கலாச்சார நடைமுறைகளைத் தம்மோடு அப்புதிய நம்பிக்கைக்குக் கொண்டுவந்தனர்.


உண்மையில், இந்துக்களிடையே உள்ள தெஹ்ர்வீ' (13வது நாள்) சடங்கைப் போலவே, இந்திய முஸ்லிம்களும் தீஸ்ராமற்றும் 'சாலீஸ்வா' (இறந்தவர்களுக்குத் துக்கம் அனுசரிக்கும் மூன்றாவது மற்றும் 40ஆம் நாள்) போன்ற சடங்குகளைக் கொண்டுள்ளனர். இந்துப் பெண்கள் பெரும்பாலும் திருமணத்திற்கு முன்பு தங்கள் பெயருடன் 'குமாரி' என்ற பின்னொட்டையும், பின்னர் 'தேவி' என்ற பின்னொட்டையும் சேர்த்துக்கொண்டால், (வட இந்திய) முஸ்லிம் பெண்கள் 'ஜஹான்' அல்லது பர்வீன்' போன்ற பின்னொட்டுகளைக் கொண்டுள்ளனர், ஆனால் அவர்கள் தம் தந்தையின் பெயர் அல்லது குடும்பப்பெயரை அரிதாகவே பயன்படுத்துகிறார்கள்.


முஸ்லிம்கள் ஷீஆ, சன்னி என இருபெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளனர். ஹனஃபி, (இந்திய முஸ்லிம்களில் பெரும்பான்மையானவர்கள் இந்தப் பிரிவுச் சட்டத்தைப் பின்பற்றுவோர்), ஹன்பலி, மாலிகி, ஷாஃபிஈ போன்ற மேலும் துணைப் பிரிவுகளைக் கொண்டுள்ளனர்.

பெரும்பாலான கருத்து வேறுபாடுகள் ஷரீஆ பற்றிய அவர்களின் விளக்கத்துடன் தொடர்புடையவை.


அவர்களுக்கிடையேயான அனைத்து வேறுபாடுகளும் கருத்தியல் ரீதியாகவும், சில வழிகளில், உலகளாவியவையாகவும் இருந்தாலும், இந்திய முஸ்லிம்கள் மத்தியில் சாதி இருப்பதுதான் அவர்கள் தனித்த இந்தியர்கள்என்று காட்டுகிறது. அவர்கள் சொல்வதுபோல், இந்தியாவில் நீங்கள் உங்கள் மதத்தை மாற்றிக்கொள்ளலாம். ஆனால் உங்கள் சாதியை மாற்ற முடியாது. தலித் சீக்கியர்கள், தலித் கிறிஸ்தவர்கள் போன்ற சொற்களின் முரண்பாட்டை நாம் கொண்டுள்ளோம், இருப்பினும் இரு மதங்களும் சாதி அமைப்பை ஏற்படுத்தவில்லை.


முஸ்லிம்களில், ‘இஸ்லாமியப் பிராமணர்கள்என்று அழைக்கப்படும் பத்து சையதுகள் எங்களிடம் உள்ளனர். அவர்கள் தங்கள் வம்சாவளியை நபிகள் நாயகத்தின் குடும்பத்தில் வைத்துள்ளனர். ஷேகுகள், முகலாயர்கள், பதான்கள் மற்றும் பிறருடன் சேர்ந்து, அவர்கள் அரபுத் தீபகற்பம் அல்லது மத்திய ஆசியாவில் இருந்து வந்ததாகக் கூறப்படும் சிறப்புவாய்ந்த முஸ்லிம்கள் அஷ்ரஃப் பிரிவினரை வளர்க்கிறார்கள். எங்களிடம் அஜ்லாஃப்கள் அல்லது பொது மக்கள், பொதுவாக மதம் மாறுபவர்கள் உள்ளனர்.

இறுதியாக, சில சமூகவியலாளர்கள் தலித்துகளுடன் ஒப்பிடும் அர்ஸல்கள் எங்களிடம் உள்ளனர் என்றும் கூறுகின்றனர்.


சமூக அடுக்குமுறை: இந்து சாதி அமைப்பை ஆதார மாதிரியாக வைத்து ஒப்பிடும்போது, முஸ்லிம்கள் மத்தியில்  உள்ள சாதிய அமைப்பு முறைகேடுகளைவிட்டு வெகு தொலைவில் உள்ளது. நாங்கள் தூயோர்; நீங்கள் மாசுபடிந்தோர்என்று சொல்கிற மாதிரி பெரும்பாலும் இல்லை. உதாரணமாக, ஒருவர் விரும்பிய கல்வி நிறுவனத்தில் கல்வியைத் தொடர்வதற்கோ குறிப்பிட்ட இடத்தில் வீடு வாங்குவதற்கோ எந்தத் தடையும் இல்லை. சைஃபி (தச்சர்) அல்லது அன்சாரி (நெசவாளர்) அல்லது சல்மானி (ஹஜ்ஜாம் - முடிதிருத்துபவர்) - ஒரு பஸ்மாந்தா முஸ்லிம் அல்லது ஒரு முஸ்லிம் ஓபிசி, ஒரு சையத் அல்லது ஷேக் மற்றும் கான் என அனைவரும் ஒரே பள்ளிவாசலில் தொழுகையில் கலந்துகொள்ள முடியும். இந்தப் பிரிவுகளைச் சேர்ந்த ஆண்கள் சையது அல்லது ஷேக் பிரிவைச் சேர்ந்த பெண்களைத் திருமணம் செய்துகொள்ள வேண்டுமானால் போராட வேண்டியது ஏற்படலாம். அதேபோல் சையத் அல்லது ஷேக் ஆண் பஸ்மாந்தா பெண்ணை மணந்தால் விதிகள் வேறு. ஆண் மேலாதிக்கத்தின் அதே நெறிமுறைகள் இந்து மதத்தைப் போலவே பொருந்தும், அங்கும் ஒரு தலித் ஆணுக்கு ஒரு பிராமணப் பெண்ணைத் திருமணம் செய்வதைவிட உயர் சாதி ஆணுக்குத் தாழ்ந்த சாதிப் பெண்ணைத் திருமணம் செய்வது எளிது.


உண்மையில், இந்திய முஸ்லிம்கள் மத்தியில் இந்து மதத்தின் கலாச்சாரச் செல்வாக்கிற்கான ஒரு தெளிவான உதாரணத்தைச் செய்தித்தாள்களில் வருகிற திருமண விளம்பரங்களில் காணலாம், அங்கு ஒரு சையது குடும்பம் தன்னுடைய ஆண்பிள்ளைக்குத் தோதுவான வரன் தேடுகிறதுஅல்லது ஒரு ஷேக் குடும்பம் தன்னுடைய பெண்ணுக்குப் பொருத்தமான ஒரு வரன் தேடுகிறதுஎன்பதுபோன்ற விளம்பரங்களைச் சுருக்கமான வார்த்தைகளில் கொடுத்துவிடுவதைப் பார்த்திருக்கலாம். அவர்கள் விரும்பும் தனித்தன்மைகள் அதில் விவரிக்கப்படுவதில்லை. அதாவது அதே செல்வாக்கு உடையவராகவும் அதே குடும்பத்தில் பிறந்தவராகவும் இருக்க வேண்டும்.  பிற சமூக அடுக்குகளில் இருந்து வருபவர்கள் தொடர்புகொள்ள வேண்டாம் என்பதெல்லாம் உள்ளே மறைந்திருக்கின்றன. இதுதான் இஸ்லாமிய அடையாளமும் இந்துச் சமூக நடைமுறையும் ஒன்றாகக் கலந்த கலவையாகும்.


நிச்சயமாக, இந்தச் சமூக அடுக்கு பரவலாக ஆங்காங்கே காணப்பட்டாலும் மேற்கு பெங்கால்-பீகார்-ஜார்கண்ட்-கிழக்கு உத்தரப்பிரதேசப் பகுதிகளில் மிகவும் பரவலாகக் காணப்படுகிறது. இங்கே, ஒருவர் மற்றொருவரை முதன்முதலில் சந்திக்கும்போது தமது ஆரம்பப் பெயரைச் சொன்னால், 'இஸ் கே ஆஹே க்யா லஹாத்தே ஹைன் (உங்கள் பெயருக்குப் பின்னால் நீங்கள் என்ன பயன்படுத்துகிறீர்கள்)' என்று கேட்பது வழக்கம். இது ஒருவனின் சாதி, தோற்றம் பற்றித் தெரிந்துகொள்ளத் தொடுக்கப்படுகின்ற நுட்பமான கேள்வி. பீகாரில், சாதி சார்ந்த கல்லறைகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. டெல்லி போன்ற மலைப்பகுதிகளிலும், உத்தரப் பிரதேச நகரங்களிலும் கல்லறை 'இட ஒதுக்கீடு' நுட்பமானது. நாட்டின் சில பகுதிகளைச் சேர்ந்த மக்கள் அல்லது சில தொழில்கள் செய்வோர் மட்டுமே இவ்விடங்களில் அடக்கம் செய்யப்படுகின்றனர். மற்றவர்கள் அவ்விடங்களில் அடக்கம் செய்யப்பட மறுக்கப்படுகிறது. 


பல்வேறு சூழ்நிலைகளின்கீழ், கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு முன்பே பஸ்மாந்தா முஸ்லிம்கள் அகில இந்திய பஸ்மாந்தா முஸ்லிம் மஹஸ், ‘அகில இந்திய முஸ்லிம் ஓபிசி அமைப்பு, ‘அகில இந்திய பின்தங்கிய முஸ்லிம் மோர்ச்சாபோன்ற பதாகைகளின்கீழ் ஒன்றிணையத் தொடங்கிவிட்டனர்.

 

அகில இந்திய பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் மோர்ச்சா, 32 பிற்படுத்தப்பட்ட இனங்களுக்கான ஒரே குடை அமைப்பாகக் கூறப்படுகிறது. சச்சார் கமிட்டி அறிக்கையின்படி, 40% இந்திய முஸ்லிம்கள் 'பஸ்மாந்தா' ஆவர். அதே நேரத்தில், 'தலித் பிச்டா ஏக் சமன், ஹிந்து ஹோ யா முசல்மான் (அனைத்து தலித்துகளும் இந்துவாக இருந்தாலும் சரி, முஸ்லிமாக இருந்தாலும் சரி)' என்ற முழக்கத்தைத் தொடங்கிவிட்டனர்.


இந்தப் பிளவைத்தான் பாஜக ஊக்குவிக்கவும் சுரண்டவும் முயல்கிறது. அதேநேரத்தில் 2014ஆம் ஆண்டு முதல் அரசின் சில கொள்கைகளும் வலதுசாரிக் கட்சியின் அடிவருடிகளும் இந்திய முஸ்லிம்களை முன்பு எப்போதோ ஒருங்கிணைத்துவிட்டனர். ஒருபுறம், முஸ்லிம் பெண்கள் குடியுரிமை எதிர்ப்பு (திருத்தம்) சட்டப் போராட்டங்களுக்கு எப்படித் தலைமை தாங்கினார்கள் என்பதை நாம் பார்த்தோம். நாடு முழுவதும் அவர்களின் சாதி, பூர்வீகம் குறித்து எந்தக் கேள்வியும் கேட்கப்படவில்லை.


மற்றொருபுறம் முஸ்லிம் பால் பண்ணையாளர்கள் மற்றும் கால்நடைகளை ஏற்றிச் செல்வோர் மீது மீண்டும் மீண்டும் தாக்குதல்கள் நடத்தப்பட்டதைக் கண்டோம், சையதுகள், சைஃபிகள் மட்டும் அல்லாமல், ஷீஆக்களும் சன்னிகளும்கூட ஒருவரையொருவர் அவர்களுள் இறந்தோரை புதைத்துக்கொண்டும், ஒருவரோடொருவர் பேசிக்கொண்டும் இருந்ததைக் கண்டோம். எதிரிக்கும்பல் உங்கள் பிரிவையோ, சாதியையோ கேட்பதில்லை. தாக்கப்படுபவர் ஒரு முஸ்லிமாக இருந்தால் போதும்.


நமக்கான இன்றைய பெரிய கேள்வி என்னவென்றால், “நாம் அனைவரும் முஸ்லிமாக இருந்தால் போதுமா? அல்லது, பிஜேபி வலியுறுத்துவதுபோல், இன்றைய பஸ்மாந்தா முஸ்லிம்களாகவே இருக்கப்போகிறோமா?” எதிரிக்கும்பல் நம்மைத் தாக்கும்போது நம் பிரிவையோ, சாதியையோ கேட்கப்போவதில்லை. முஸ்லிமா என்று பார்த்துத்தான் தாக்குகின்றார்கள். எனவே நாம் அனைவரும் முஸ்லிம்களாக இருந்தால்போதும் என்று ஒருவருக்கொருவர் சொல்லிக் கொள்வோம்.


தமிழாக்கம்: டாக்டர் நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி

தி இந்து ஆங்கில நாளிதழ் (07 08 2022)

===========================