சனி, 18 டிசம்பர், 2010

வெள்ளி, 17 டிசம்பர், 2010

திங்கள், 13 டிசம்பர், 2010

இப்ராஹீம் நபியின் வரலாறு (தொடர் 15)

அறுக்கப்பட்டவர் இஸ்மாயீல் நபியே!

திண்ணமாக அந்த ஆட்டின் தலை, அது காய்ந்துபோகின்ற வரை கஅபாவின் முகப்பிலேயே மாட்டப்பட்டிருந்தது என்று இப்னு அப்பாஸ் (ரளி) அறிவித்துள்ளார்கள். அறுக்கப்பட்டவர் இஸ்மாயீல் நபிதான் என்பதற்கு மேற்கண்ட நபிமொழியே ஆதாரமாகும். ஏனென்றால், அவர்தாம் மக்காவில் தங்கியிருந்தார். ஆனால், இஸ்ஹாக் நபி தம் சிறுபிராயத்தில் மக்காவுக்கு வந்தாரா என்பதையே நாம் அறியவில்லை. அதற்கான எந்த ஆதாரமும் இல்லை. அல்லாஹ்வே நன்கறிபவன்.

இதுவே திருக்குர்ஆனின் வெளிப்படையான கருத்தாகும். இன்னும் சொல்லப்போனால், அறுக்கப்பட்டவர் இஸ்மாயீல் நபிதான் என்பதற்குத் திருக்குர்ஆனே மூல ஆதாரமாகும். ஏனென்றால், அல்லாஹ் இஸ்மாயீல் நபியின் வரலாற்றைக் கூறி முடித்த பின்னர்தான், நல்லோர்களிலுள்ள நபியாக இஸ்ஹாக்கை அவருக்கு (மகனாகத் தருவதாக) நாம் நற்செய்தி கூறினோம் (37: 112) என்ற வசனத்தைக் கூறியுள்ளான். யார் இவ்வசனத்தை ஒரே சமகாலத்தில் கூறப்பட்டது என்று சொல்லி, இதை ஆதாரமாக எடுக்க மறுக்கின்றாரோ அவர் மிகச் சிரமத்தை எடுத்துக்கொண்டார் என்றே பொருள்.
இஸ்ஹாக் நபிதான் அறுக்கப்பட்டவர் என்று கூறுவது கட்டுக்கதைகளுள் ஒன்றாகும். வேதக்காரர்களின் வேதங்களில் திரிபும் மாற்றமும் உள்ளன. குறிப்பாக, இவ்விசயத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் கூறுவது, நிச்சயமாக அல்லாஹ் இப்ராஹீமுக்குக் கட்டளையிட்டபோது, அவருடைய தனித்த மகனை அறுக்கக் கட்டளையிட்டான் என்பதாகும்.

 அரபிமொழியாக்கப்பட்ட மற்றொரு பிரதியில், அவருடைய இளைஞரான இஸ்ஹாக் என்ற வாக்கியம் உள்ளது. இவ்விடத்தில் `இஸ்ஹாக் எனும் வார்த்தை பொய்யாகவும் இட்டுக்கட்டியும் கூறப்பட்டுள்ளது. ஏனென்றால், இஸ்ஹாக் தனித்தவராகவோ இளைஞராகவோ இல்லை. அவ்வாறு இருந்த வர் இஸ்மாயீல் நபிதான்.

யூதர்களின் நம்பிக்கை என்ன?

யூதர்கள் நம்புவது, அறுக்கப்பட்டவர் இஸ்ஹாக் நபிதான் என்பதாகும். அவர்கள் இவ்வாறு சொல்வதற்குத் தூண்டிய காரணம், அவர்கள் அரபியர்கள்மீது கொண்டுள்ள பொறாமையே ஆகும். திண்ணமாக இஸ்மாயீல் நபிதான் அரபியர்களின் தந்தை ஆவார். அவர்கள் ஹிஜாஸில் வாழ்ந்து வந்தார்கள். அவர்களின் சந்ததிகளிலிருந்துதான் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வந்தார்கள். இஸ்ஹாக் என்பவர், யஅகூபின் தந்தை ஆவார். அவர் பக்கமே `இஸ்ரவேலர்கள் இணைக்கப்படுகிறார்கள். அறுக்கப்பட்ட சிறப்பை அவர்கள் தம் பக்கம் இணைத்துக்கொள்ள விரும்பினார்கள். எனவே, அவர்கள் அல்லாஹ்வுடைய செய்தியையே மாற்றிவிட்டு, அதில் சுயமாகவே சிலவற்றை இணைத்துக் கொண்டார்கள். அவர்கள் அநியாயக்கார சமுதாயத்தினர் ஆவர். நிச்சயமாக சிறப்பு என்பது அல்லாஹ்வின் கையில் உள்ளது. அதை அவன், தான் விரும்புபவருக்குக் கொடுக்கின்றான் என்பதை அவர்கள் உறுதிகொள்ளவில்லை.

அறுக்கப்பட்டவர் இஸ்ஹாக் நபிதான் என்று முந்தைய அறிஞர்களுள் ஒரு பெருங்குழுவினரும் மற்றவர்களும் கூறியுள்ளனர். அவர்கள் இதை கஅபுல் அஹ்பார் (ரளி) அவர்களிடமிருந்து அல்லது வேதக்காரர்களின் வேதங்களிலிருந்து எடுத்திருக்கலாம். திருக்குர்ஆனுடைய தெளிவான, நேரடியான கருத்தை நாம் விட்டுவிடுமளவுக்கு, இஸ்ஹாக் நபிதான் அறுக்கப்பட்டவர் என்று மிகச் சரியான நபிமொழி ஏதும் அறிவிக்கப்படவில்லை. அறுக்கப்பட்டவர் இஸ்ஹாக் நபிதான் என்று விளங்கும் அளவிற்குத் திருக்குர்ஆனில் இறைவசனம் ஏதும் இடம்பெற வில்லை. மாறாக, திருக்குர்ஆனிலிருந்து நாம் விளங்குவதும் அதில் கூறப்பட்டுள்ளதும், அறுக்கப்பட்டவர் இஸ்மாயீல் நபிதான் என்பதைச் சற்றுச் சிந்தித்தால் விளங்கிக்கொள்ளலாம்.

இப்னு கஅப் அல்குரழி என்பவர் பின்வரும் வசனத்தைக் கொண்டு என்னே அழகாக ஆதாரம் எடுத்துள்ளார்! அவர் இஸ்மாயீல் நபிதான் என்பதற்குப் பின்வருகின்ற வசனமே சான்றாகும்: நல்லோர்களிலுள்ள நபியாக இஸ்ஹாக்கை அவருக்கு (மகனாகத் தருவதாக) நாம் நற்செய்தி கூறினோம். (37: 112) இஸ்ஹாக் மூலம் நன்மாராயம் எப்படி உண்டாக முடியும்? இஸ்ஹாக்கும் அவருக்குப் பின் யஅகூபும் பிறப்பார்கள் என்று சொல்லியபின், எப்படி அவருக்குக் குழந்தை (யஅகூப்) பிறப்பதற்கு முன்னரே அவர் சிறுவராக இருந்தபோது அவரை அறுக்க அல்லாஹ் ஏவுவான்? இது நிச்சயம் ஆகமுடியாது. ஏனென்றால், இது முந்தைய நற்செய்திக்கு முரணாக உள்ளது. அல்லாஹ்வே நன்கறிபவன்.


அரபி:           அல்பிதாயா வந்நிஹாயா (இமாம் இப்னு கஸீர்- ரஹ்) 
தமிழாக்கம்: நூ. அப்துல் ஹாதி பாகவி M.A., M.Phil.