சனி, 19 பிப்ரவரி, 2022

மறுமை வங்கியில் முதலீடு செய்வீர்!

 -முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

-------------------

ஓர் அறிவாளி தன் பொருளாதாரத்தை இலாபம் தரும் தொழிலில்தான் முதலீடு செய்வான். அந்த வகையில் இன்று நம்முள் பலர் பாடுபட்டுச் சேர்த்த பணத்தை இலாபம் தரும் தொழிலில் முதலீடு செய்து தம் பொருளாதாரத்தைப் பெருக்க நினைக்கின்றனர். சிலர் வங்கியில் தம் பணத்தை நிரந்தர வைப்புத் தொகையாகப் (ஃபிக்ஸ்டு டெபாசிட்) போட்டு வைத்து, அதிலிருந்து வருகின்ற முதிர்வுத் தொகையை எடுத்துப் பயன்படுத்தி வருகின்றனர். சிலர் அதிக வட்டி கிடைக்கும் என்ற பேராசையில் ‘சீட்டு’ கட்டுகின்றனர். அவன் மொத்தமாக அள்ளிக்கொண்டு ஓடியபின், தம் பொருளாதாரத்தை இழந்து நிற்கின்றனர். இப்படி ஒவ்வொரு செல்வரும் ஒவ்வொரு விதத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். 

ஆனால் உண்மையில் யார் அறிவாளி? யார் தம் பொருளாதாரத்தைப் பன்மடங்காகப் பெருக்கிக்கொள்பவர்? அல்லாஹ்வின் உவப்பைப் பெறும் நோக்கில் அவனுடைய பாதையில்  செலவு செய்பவரே அறிவாளி; அவரே தம் பொருளாதாரத்தைப் பன்மடங்காகப் பெருக்கிக்கொள்பவர். பள்ளிவாசல்கள், மத்ரஸாக்கள், கல்விக்கூடங்கள் உள்ளிட்ட இஸ்லாமிய நிறுவனங்களெல்லாம் பல்வேறு செல்வர்களின் தயாளத்திற்கான சாட்சிகளாகும். அவர்களின் பங்களிப்பின்றி அவை நிலைபெற்றுவிடவில்லை. 

அல்லாஹ்வின் அன்பையும் உவப்பையும் பெறும் உயர்நோக்கில் மார்க்கம் சார்ந்த சேவைகளுக்காகத் தம் பணத்தைச் செலவழிப்பவரே அறிவாளி; அவரே தம் பொருளாதாரத்தை வைத்துப் பயன்பெறுபவர்; அவரே தம்  பொருளாதாரத்தைப் பன்மடங்காகப் பெருக்கிக்கொள்பவர் ஆவார். அவர் இம்மைப் பயனைப் பெறுவதற்காக வங்கியில் முதலீடு செய்யவில்லை. மாறாக மறுமைப் பயனைப் பெறுவதற்காக அல்லாஹ்வின் வங்கியில் முதலீடு செய்கிறார். அது வளர்ந்து மிகப் பெரும் அளவில் நாளை மறுமையில் அவருக்கு நன்மைகளாக வந்துசேரும். அவையே அவர் சொர்க்கம் செல்லக் காரணமாக அமையும். 

இங்கு நபிமொழி ஒன்றை நாம் கூர்ந்து நோக்க வேண்டும். 

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்: ஒரு மனிதன் இறந்துவிட்டால் அவனுடைய மூன்று செயல்களைத் தவிர மற்ற அனைத்தும் நின்றுபோய்விடுகின்றன; 1. நிலையான அறக்கொடை 2. பயன்பெறப்படும் கல்வி. 3. அவனுக்காகப் பிரார்த்தனை செய்யும் (அவனுடைய) நல்ல குழந்தை. (நூல்: முஸ்லிம்: 3084)   

மேற்கண்ட மூன்று வழிகளில் ஒரு மனிதன் இறந்த பின்னும் அதற்கான நன்மை அவனுக்குத் தொடர்ந்து சென்றுகொண்டே இருக்கும். அவற்றுள் ஒன்று பயனுள்ள கல்வி என்பதை அறிகிறோம். பயனுள்ள கல்வியை இச்சமுதாயத்திற்கு வழங்க நீங்கள் ஓர் ஆசிரியராகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. மாறாக பயனுள்ள நூல்களை வாங்கி, மக்கள் படித்துப் பயன்பெறும் ஏற்பாட்டைச் செய்வதன்மூலமும் இச்சமுதாயத்திற்குக் கல்விச் சேவையாற்றலாம். சமுதாய மக்கள் சீர்பெற உதவலாம். 

‘அல்லாஹ்வின் பாதையில் செலவழித்தல்’ என்ற சொற்றொடருக்கு, பள்ளிவாசல் கட்டுதல், மத்ரஸா கட்டுதல் ஆகிய இரண்டைத்தான் பெரும்பாலான முஸ்லிம்கள் தெரிந்துவைத்துள்ளார்கள். அவற்றைத் தாண்டியும் சில  வழிகள் உள்ளன என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். பயனுள்ள நூல்கள் கொண்ட ஒரு நூலகத்தை அமைப்பதும் அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்வதுதான். முஸ்லிம் ஒருவர் ஒரு பொது நூலகத்தை அமைத்து எல்லோரும் படித்துப் பயன்பெறும் வகையில் பொது அனுமதி வழங்கியிருந்தால், அந்த நூலகத்திலிருந்து யாரெல்லாம் படித்துப் பயன்பெறுகிறார்களோ அந்த அத்தனை நன்மைகளும் அவருக்குக் கிடைக்கும். அவர் இறந்த பின்பும், அதிலிருந்து யாரெல்லாம் பயன்பெறுகின்றார்களோ அந்த நன்மைகள் யாவும் அவருக்குப் போய்ச் சேர்ந்துகொண்டே இருக்கும் என்பதில் ஐயமில்லை.

ஒரு நூலகத்தை அரசாங்கம்தான் நிறுவ வேண்டும் என்பதில்லை. ஆர்வமுள்ள பொதுமக்களும் நிறுவலாம். அந்த நூலகத்திற்காக நீங்கள் வாங்குகிற ஒவ்வொரு நூலுக்கும் நன்மை உண்டு. நூலைப் படிக்கின்ற, படித்துப் பயன்பெறுகின்ற ஒவ்வொருவரின் நன்மையிலும் உங்களுக்குப் பங்குண்டு என்பது உறுதி. இதற்குப் பின்வரும் நபிமொழி சான்றாகத் திகழ்கிறது:  

 “முஸ்லிம் ஒருவர் ஒரு மரத்தை நட்டுவைத்து, அதிலிருந்து ஒரு மனிதனோ, ஒரு கால்நடையோ, ஒரு பறவையோ உண்டால் மறுமைநாள்வரை அது அவருக்கு ஓர் அறமாகவே அமையும்'' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (முஸ்லிம்: 3162) 

ஒருவர் நட்டுவைத்த செடி, மரமாகி, காயும் கனியும் தரும்போது அதிலிருந்து உண்போர் பலர். யாரெல்லாம் அதிலிருந்து உண்கின்றார்களோ அதுவெல்லாம் அச்செடியை நட்டவருக்கு நன்மையாகக் கிடைக்கும். ஒருவர் தம்மாலான நன்மையை இச்சமுதாயத்திற்கு வழங்கும்போது அதற்குரிய பிரதிபலனை அல்லாஹ் இம்மையில் மட்டுமின்றி மறுமையிலும் அவருக்கு வழங்குகின்றான். ஆதலால் மரம் நடுதல் எவ்வாறு சமுதாயத் தொண்டோ அதுபோலவே நூலகம் அமைப்பதும் சமுதாயத் தொண்டுதான் என்பது தெளிவு. 

அயல்நாடுகளில் ‘மக்தபா’ எனும் பெயரில் இது செயல்பட்டு வருகிறது. மக்தபா எனும் அரபுச் சொல்லுக்கு நூலகம் என்று பொருள். அந்த மக்தபாவின் பணிகள் என்னென்ன என்று பார்த்தால், பொதுமக்கள் படிப்பதற்கான  நூல்களை வாங்கி வைத்தல், அரிய நூல்களை மீண்டும் வெளியிடுதல், புதிய நூல்களை வெளியிடுதல், மொழியாக்கம் செய்து நூல்களை வெளியிடுதல், அழைப்புப் பணி செய்தல், கொள்கை விளக்கக் கூட்டம் நடத்துதல் முதலானவை ஆகும். இவற்றை அப்படியே நம்முள் வாழும் செல்வர்கள் செயல்படுத்தலாம். குறிப்பாக எளிதில் கிடைக்கப்பெறாத அரிய நூல்களை மறுபதிப்பாக வெளியிடுதல், அரபுமொழி நூல்களைத் தமிழில் வெளியிடுதல் ஆகிய இரண்டும் மிக முக்கியமானவை. 

வெறுமனே நூல்களைப் படிக்க ஏற்பாடு செய்வதோடு நிறுத்திக்கொள்ளாமல், மொழிபெயர்ப்புக் குழுவை ஏற்படுத்தி, அவர்கள்மூலம் மார்க்கம் சார்ந்த பற்பல நூல்களை வெளியிட்டு மக்கள் பயனடையுமாறு செய்யலாம். இன்று பல்வேறு அரபுக் கல்லூரிகளிலிருந்து இரட்டைப் பட்டங்கள் பெற்று வெளிவருகின்ற இளம் ஆலிம்களுக்கு இது மிகவும் பயனுள்ள வாய்ப்பாக அமையும்.

 இந்த இருபத்தோராம் நூற்றாண்டில் அரபுக் கல்லூரிகளின் வளர்ச்சி மிகவும் மேலோங்கிக் காணப்படுகிறது எனலாம். ஏனெனில் தற்காலத்தில் அரபுக் கல்லூரிகளிலிருந்து வெளிவருகின்ற இளம் ஆலிம்கள் இருவகைக் கல்விகளையும் கற்றுள்ளனர். அவர்களுக்கு ஆங்கிலம், அரபு, தமிழ் மும்மொழிகளும் தெரியும். ஆகவே நம் சமுதாயத்தின் செல்வர்கள், இஸ்லாமிய மார்க்கத்திற்குப் பயனுள்ள சேவைகளை அந்த இளம் ஆலிம்கள் செய்ய அவர்களுக்கு வடிகால் அமைத்துக்கொடுப்பது இன்றியமையாததாகும்.

ரஹ்மத் பதிப்பகம், ஆயிஷா பதிப்பகம், ஆலிம் பப்ளிகேஷன் எனச் சில நிறுவனங்களே மொழிபெயர்ப்புத் துறைக்காகச் செயல்பட்டுவருகின்றன; அரபு நூல்களைத் தமிழாக்கம் செய்து வெளியிட்டு வருகின்றன. அவற்றுள் சில நிறுவனங்கள் தனிமனிதராலும் சில நிறுவனங்கள் புரவலர் குழுவாலும் இயங்கி வருகின்றன. விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிற்கு மிகக் குறைவாக உள்ள இவை போதா. இன்னும் பலர் முன்வர வேண்டும்.  நூலகச் சேவையைத் தொடங்குவதன்மூலம் நம்முள் பலர் தம் பொருளாதாரத்தை மறுமைக்கான வங்கியில் முதலீடு செய்ய ஆர்வத்துடன் முன்வர வேண்டும். 

உமர் பின் அப்தில் அஸீஸ் ரஹிமஹுல்லாஹ் அவர்களுடைய காலத்தில்தான் அவர்கள்தம் கட்டளைப்படி முதன்முதலாக ஹதீஸ்கள் தொகுக்கப்பெற்று நூல்களாக வெளிவந்தன. அன்று முதல் இன்று வரை ஏதாவது ஒரு வகையில் ஹதீஸ் நூல்கள் வெளிவந்துகொண்டுதான் இருக்கின்றன. அல்லாஹ் யாருக்கு வாய்ப்பளித்தானோ அவரெல்லாம் இத்துறையில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டுள்ளனர். அவர்கள் தம் பொருளாதாரத்தைச் செலவு செய்து மக்கள் பயன்பெறத்தக்கத் தொண்டுகளைச் செய்துவருகிறார்கள். 

ஒரு புறம் நூல்கள் படிக்கும் பழக்கம்  குறைந்து காணப்படுவதைப்போன்ற தோற்றம் ஏற்பட்டாலும், உண்மையில் படிப்போர் படித்துக்கொண்டுதான் இருக்கின்றார்கள்; நூல்கள் விற்பனை தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றது. ஒவ்வோர் ஆண்டும் சென்னை, நீலகிரி, கோவை உள்ளிட்ட இடங்களில் நடைபெறுகிற புத்தகக் காட்சியில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நூல்கள் விற்பனை செய்யப்படுவதே அதற்கான சான்றாகும்.  அதேநேரத்தில் நம் சமுதாய இளைஞர்கள் ஏதேதோ நூல்களைப் படிப்பதைத் தவிர்க்கும்பொருட்டு,  அவர்களை இஸ்லாமிய நூல்களையும் நபிமொழித் தொகுப்பு நூல்களையும் படிக்கத் தூண்டுவதும் அதற்கான வழிவகை செய்வதும் நம் சமுதாயச் செல்வர்கள்மீது தலையாய கடமையாகும். 

ஒரு முஸ்லிம் நடத்தக்கூடிய தனியார் நூலகம் மிக மிகக் குறைவு. விரல்விட்டு எண்ணும் அளவிற்கு அங்கொன்றும் இங்கொன்றுமாகக் காணப்படலாம். ஒவ்வோர் ஊரிலும் மஸ்ஜித்களிலும் பொது இடங்களிலும் நூலகம் அமைக்கப்பட வேண்டும். குறிப்பாகப் பெண்கள் படிப்பதற்கேற்ற நூல்களைத் தனிப் பிரிவாக வைத்து,  அவர்கள் மட்டும் வாசிக்கத் தனி நேரத்தை ஒதுக்க வேண்டும். அவர்கள் தலைகுனிந்து வாசிக்கத் தொடங்கிவிட்டால் இந்தச் சமுதாயம் தலை நிமிர்ந்து நிற்கத் தொடங்கிவிடும் என்பது முற்றிலும் உண்மை. 

எனவே முஸ்லிம் செல்வர்கள் தற்காலத்தில் முதலீடு  செய்ய வேண்டியது நூலகத் துறை, மொழிபெயர்ப்புத் துறை, பதிப்புத்துறை ஆகியவையாகும். செல்வர்களே, உங்கள்  செல்வம் உங்களுக்கு மட்டும் உரியதன்று. அதை எல்லோரும் பயன்பெறும் வகையில் செலவு செய்யுங்கள். அல்லாஹ்வின் திருப்தியைப் பெற அள்ளி வழங்குங்கள். நாளை மறுமையில் அவையெல்லாம் பெருமளவு முதிர்வுத்தொகையாக-நன்மைகளாகக் கிடைக்கும் என்பதை மறவாதீர். 

================








வியாழன், 17 பிப்ரவரி, 2022

நூல்களோடு நட்புகொள்ளச் செய்வோம்!


-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

----------------------------------------------

 

பெற்றோர் தம் பிள்ளைகளுக்கு அவர்களின் சிறுபிராயத்தில் எதைப் பழக்கப்படுத்துகிறார்களோ அதுவே அப்பிள்ளைகளின் பழக்கமாக, பின்னர் வழக்கமாக உருவாகும். பெற்றோர் தம் பிள்ளைகளை அமர வைத்து, பயனுள்ள நூல்களை எடுத்துப் படிக்கத் தொடங்கினால் காலப்போக்கில்  படிக்கிற பழக்கம் பிள்ளைகளுக்கு ஏற்பட்டுவிடும். அதுவே நாம் நம் பிள்ளைகளுக்குச் சேர்த்து வைக்கும் அழியாச் சொத்தாகும். பிற்காலத்தில் அவர்கள் சிறந்த சிந்தனைவாதிகளாக, பேச்சாளர்களாக, எழுத்தாளர்களாக உருவாக அப்பழக்கம் அடிப்படையாக அமையும்.

 

கடந்த மூன்றாண்டுகளாக (2019-2022) நம் பிள்ளைகளின் கல்வி மிகவும் நலிந்துபோய்விட்டது. கொரோனாவுக்கு முந்தைய ஆண்டில் ஒன்றாம் வகுப்பில் சேர்ந்த பிள்ளை தற்போது நான்காம் வகுப்பு படிக்கும். நான்காம் வகுப்பு படிக்கும் பிள்ளையிடம் எல்கேஜி பிள்ளையின் அறிவுகூடத் தற்போது இருக்காது. ஏனென்றால் அப்பிள்ளை அடிப்படைக் கல்வியையே முறையாகக் கற்றுக்கொள்ள இயலவில்லை. பிறகு எப்படி அப்பிள்ளையிடம் நான்காம் வகுப்பிற்கான அறிவு இருக்கும்?

 

"எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்'' எனும் முதுமொழி, எண் எனும் கணிதத்தையும் எழுத்துப் பயிற்சியையும் மேற்கொள்ள வலியுறுத்துகிறது. கணிதத்தின் அடிப்படையாக  வாய்பாடு அமைந்துள்ளது. அதனை மனப்பாடமாக ஒப்பிக்க வைக்கும் ஆசிரியர்கள் இருந்தார்கள். மாணவர்கள் கற்றுக்கொண்டார்கள். ஆனால் கடந்த மூன்றாண்டுகளாகப் பள்ளிக்கூடங்கள் மூடியே கிடப்பதால்  அந்த அடிப்படை அறிவு போதிக்கப்படுவது நின்றுபோய்விட்டது. கையெழுத்து அழகாக ஆவதற்காக எழுத்துப் பயிற்சி கொடுத்து வந்தார்கள். அதுவும் இன்று நின்றுபோய்விட்டது. காலப்போக்கில் எழுதுகிற பழக்கத்தையும் கணக்கையும் மறந்துபோய்விடுவார்களோ என்ற அச்சம் நிலவுகிறது. மாணவர்கள் சிலர் கரும்பலகையில் எழுதப்பட்டுள்ள எழுத்துகளைப் படம் வரைவதைப் போன்று பார்த்து எழுதிவிடுகின்றார்கள். ஆனால் அதனை வாசிக்கத் தெரியவில்லை. ஆக எண் கல்வியையும் எழுத்துக் கல்வியையும் இன்றைய இளஞ்சிறார்கள் இழந்துவருகிறார்கள் என்ற கசப்பான உண்மையைப் பெற்றோர்கள் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.

 

அறிதிறன்பேசியை வைத்துக்கொண்டு பிள்ளைகள் கேம்-விளையாட்டுகளை விளையாடி மகிழ்கின்றார்கள். அது அவர்களின் வாழ்க்கைப் பாதையை மாற்றுத் திசை நோக்கிச் செலுத்திக்கொண்டிருக்கிறது என்பதை இன்றைய பெற்றோர் உணரவே இல்லை.  தம் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும் என்ற அவசரத்தில் வேகமாக ஓடிக்கொண்டிருக்கின்றார்கள். சற்று நேரம் தம் பிள்ளைகள் எதை நோக்கிச்  சென்று கொண்டிருக்கிறார்கள் எனத் திரும்பிப் பார்க்க நேரமில்லை. யாருக்காக இவ்வளவு வேகமாக ஓடுகிறோம் என்று சிந்திக்கவும் நேரமில்லை.

 

செல்போன் விளையாட்டுக்குள் மூழ்கிக்கிடக்கும் பிள்ளைகளின் வாழ்க்கைப் பாதையை மாற்றியமைக்க, பெற்றோர் தம் பிள்ளைகளுக்கு நூல்களோடு ஒரு தொடர்பை ஏற்படுத்த வேண்டும்.  பாட நூல்களைத் தவிர, பயனுள்ள பிற நூல்களை வாசிக்கத் தூண்ட வேண்டும். பொதுவாக சிறுவர்-சிறுமியர் எல்லோருக்கும் பிடித்த கதைப் புத்தகங்கள், விளையாட்டுப் புத்தகங்கள், நகைச்சுவைப் புத்தகங்கள் முதலானவற்றைப் படிக்கத் தூண்ட வேண்டும். இவை போன்ற நல்ல நூல்களை நம் வீட்டில் வாங்கி வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் அவர்களுக்கு ஏற்படும். அல்லது படிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்படும்போது எடுத்துப் படிக்க ஏதுவாக அமையும்.

 

நூல்களைப் படிப்பதற்கான வாய்ப்பை நாம் ஏற்படுத்திக்கொடுத்தால் போதுமானது. அதனை அவர்கள் நிச்சயம் பயன்படுத்துவார்கள். அதற்கான வாய்ப்பே இல்லாதபோதுதான் அவர்கள் செல்போனில் மூழ்கிப் போய்விடுகின்றார்கள். படிப்பதற்கான வாய்ப்பையே நாம் உருவாக்கிக்கொடுக்காமல், "பிள்ளைகள் கெட்டுப்போய்விட்டார்கள்' என்று கூறுவதில் எந்தப் பயனுமில்லை. அறிதிறன்பேசியில் திரைப்படக் காட்சிகளைப் பார்த்தல் அல்லது விளையாடுதல் அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதில் ஈடுபடுதல் இவற்றிலிருந்து அவர்களைத் திசை திருப்ப, "இது நூல் வாசிக்கும் நேரம்'' என்று ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒவ்வொரு நாளும் நிர்ணயம் செய்துகொண்டு, அந்நேரத்தில் மட்டும் தொலைக்காட்சிப் பெட்டிக்கு ஓய்வுகொடுத்துவிடலாம்; செல்போனை அவர்களிடமிருந்து வாங்கி ஓரமாக வைத்துவிடலாம். அப்போது அவர்கள் தம் பெற்றோருக்குக் கட்டுப்படவே செய்வார்கள்.

 

அவர்கள் தாமாக நூல்களை எடுத்து வாசிக்காவிட்டால், நாமே பயனுள்ள ஒரு நூலை எடுத்து வாசித்துக் காட்டலாம். வாசித்து முடித்தபின், இதுவரை நீ என்ன விளங்கினாய் என்று கேட்கலாம். இதிலிருந்து உனக்கு என்ன தோன்றுகிறது என்று வினவலாம். ஒரு வாரம் கடந்தபின், “கடந்த ஒரு வாரமாக நீ என்ன படித்தாய், எத்தனை பக்கங்கள் படித்தாய், என்ன விளங்கினாய்” என்று கேட்கலாம். இந்த வினாக்கள் அவனைப் படிக்கத் தூண்டும். அடுத்தடுத்த வாரங்களில் கூர்ந்து படிக்கத் தொடங்கிவிடுவான். வினாக்கள் கேட்டு, அவற்றிற்குச் சரியான விடைகளைச் சொன்னால் பரிசுகள் வழங்கிப் பாராட்டி ஊக்கப்படுத்தலாம்.

 

அண்டை வீட்டிலுள்ள பிள்ளைகளையும் அழைத்து, நம் வீட்டிலுள்ள நூல்களை நம் பிள்ளைகளோடு சேர்ந்து படிக்கச் சொல்லலாம். "ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால், தம் பிள்ளை தானே வளரும்'' என்பதற்கேற்ப, அண்டை வீட்டாரின் பிள்ளைகளைப் படிக்கத் தூண்டினால் நம் பிள்ளைகள் தாமாகவே படிக்கத் தொடங்கிவிடுவார்கள். மேலும் பிள்ளைகள் மத்தியில் படிப்பதில் போட்டிமனப்பான்மை ஏற்படும். அவனைவிட நான் மிகுதியாகப் படிக்கவேண்டும் என்ற உணர்வு அவர்களுள் ஒவ்வொருவருக்கும் ஏற்படும். இது ஓர் ஆரோக்கியமான போட்டியாகும்.

 

வாரத்தில் ஒரு நாள் வெளியில் செல்லும்போது நம் பிள்ளைகளைப் புத்தகக் கடைகளுக்கு அழைத்துச் செல்ல வேண்டும். மேலும் நாம் வாழும் நகரத்தில் எங்கேனும் புத்தகக் காட்சி நடைபெற்றால் அங்கு அவர்களை அழைத்துச் சென்று, உனக்குப் பிடித்த நூலைத் தேர்ந்தெடு என்று கூறி, நூலின் மீதான ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும். அங்கு அவர்கள் விரும்பி எடுக்கின்ற நூல்களை வாங்கிக் கொடுத்து, அவர்களுக்கெனச்  சிறுநூலகத்தை வீட்டில் அமைத்துக்கொடுக்கலாம். பின்னர் நீ வாங்கிய நூலில் இதுவரை எத்தனை பக்கங்கள் படித்துள்ளாய் என்று கேட்கலாம். அவர்கள் தாமாகவே நூல்களைப் படிப்பதற்கு இதுவும் ஒரு வகைத் தூண்டல் முறையாகும்.

 

நம் பிள்ளைகளுக்கு உயர்ந்த சிந்தனைகளையும் எண்ணங்களையும் ஊட்டக்கூடியவை நல்ல நூல்கள் என்றால் மிகையில்லை. உலகின் மிகப்பெரிய நூலகம் இலண்டனில் உள்ளது. அதில் அதிகமான நூல்களைப் படித்தவர் கார்ல் மார்க்ஸ் ஆவார். அவர் பிற்காலத்தில் மிகப்பெரும் பொருளாதார மேதையாகவும் சிந்தனைவாதியாகவும் உருவானார் என்பதை எல்லோரும் அறிவர். 

 

சென்னையிலுள்ள கன்னிமாரா நூலகமே தமிழ்நாட்டிலுள்ள மிகப்பெரிய நூலகம் ஆகும். நூலகம்  திறக்கப்பட்டதும் முதல் ஆளாக உள்ளே நுழைகிற எம்.ஆர்.எம். அப்துற் றஹீம் அவர்கள், அதன் காவலர் நூலகத்தைப் பூட்டப் போகிறோம், வெளியேறுங்கள் என்று கூறும் வரை அங்கேயே இருந்து பல்வேறு நூல்களைப் படித்து, குறிப்புகள் எடுத்துக்கொள்வார். இவர் தம் வாழ்நாளில் 125 நூல்களை எழுதியுள்ளார். ஒரு பல்கலைக் கழகக் குழுவினர் செய்ய வேண்டிய கலைக்களஞ்சியத்தை ஒற்றை மனிதராக இருந்து உருவாக்கி, இச்சமுதாயத்திற்கு வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இவ்வாறு பல்வேறு நூல்களைப் படிக்கப் படிக்க, நூல்களை உருவாக்கும் ஆற்றல் பிறக்கிறதுபுதிய சிந்தனை உருவாகிறது; புதிய புதிய திட்டங்களை மக்களுக்காகச் செய்ய வேண்டும் என்ற உத்வேகம் பிறக்கிறது; கடினமான தருணங்களில் நிதானமாக முடிவெடுக்கும் பக்குவத்தை வழங்குகிறது; நல்லதே செய்ய வேண்டும் என்ற உயர் எண்ணத்தை உண்டுபண்ணுகிறது. இத்தகைய நற்குணங்களை ஊட்டக்கூடிய வாசித்தல் பழக்கத்தை நம் பிள்ளைகளுக்கு ஏற்படுத்த வேண்டியது நம் தலையாய கடமையாகும்.

 

இந்தச் சமுதாயத்திற்கு அனுப்பப்பட்ட இறுதி நபிக்கு இறைவன் வழங்கிய தூதுச் செய்தியின் தொடக்கமே, ஓதுவீராக-படிப்பீராக என்பதுதான். படிக்கத் தெரியாதவரையும் படிக்கச் சொல்லி, அதன்மூலம் இச்சமுதாய மக்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என இறைவன் நாடினான். ஆனால் நம் சமுதாயம் படிக்கத் தெரியாத சமூகமாக, படிப்பில் ஆர்வம் காட்டாத சமூகமாகவே மாறி வருகிறது. இதனைப் போக்கும் விதத்தில் எதிர்கால இளைஞர்கள் படிப்பில் நூறு சதவிகிதம் கவனம் செலுத்த வேண்டும். அதற்காகப் பெற்றோர்கள் உள்ளிட்ட அனைவரும் பாடுபட வேண்டும்.  அதுவே நாம் நம் பிள்ளைகளுக்கு வழங்கும் மிகப்பெரும் வெகுமதியாகும்.

-----------------------------------