சனி, 25 ஏப்ரல், 2026

அன்பு அல்லாஹ்வின் அருட்கொடை!

 

-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

 

இவ்வுலகில் தோன்றிய ஒவ்வோர் உயிரினமும் தத்தம் இனத்தின்மீது அன்பு காட்டுகிறது. ஆனால் மனிதர்கள் ஒருவருக்கொருவர் காட்டுகிற அன்பு மகத்தானது. அன்பு எனும் ஒற்றை நூலில்தான் ஒவ்வோர் உள்ளமும் இணைக்கப்பட்டுள்ளது. அந்த அன்பெனும் நூல் வழியாகத்தான் நாம் பிறரின் உள்ளத்தில் இடம் பிடிக்க முடிகிறது. அன்பு மட்டும் இல்லையென்றால் இவ்வுலகில் எந்தவித ஈர்ப்பும் இல்லாமல் போயிருக்கும். இது அல்லாஹ்வின் மகத்தான அருட்கொடையாகும்.

 

 

அன்பு அல்லாஹ்வின் மகத்தான அருட்கொடையாக இருப்பதால் அதனை யாரும் பணம் கொடுத்துப் பெற முடியாது. அது அல்லாஹ்வே அவரவர் உள்ளத்தில் விதைப்பதாகும். அல்லாஹ் நாடியோருக்கே அத்தகைய அன்புள்ளம் வாய்க்கிறது. மற்றோர் அன்பற்றவர்களாகவும் கல்நெஞ்சினராகவும் வாழ்ந்து மடிகின்றனர். அன்புள்ளோர் மட்டுமே அல்லாஹ்வின் அருளால் மிக்க மகிழ்ச்சியோடு வாழ்கின்றார்கள். அன்பெனும் அருட்கொடையை அல்லாஹ்வே வழங்குவதாகப் பின்வரும் வசனத்தில் அல்லாஹ் கூறுகின்றான்:

புவியிலுள்ள அனைத்தையும் நீங்கள் செலவு செய்தபோதிலும் அவர்களுடைய உள்ளங்களில் அன்பையூட்ட உங்களால் முடியாது. எனினும், அல்லாஹ்தான் அவர்களை அன்பின் மூலம் ஒன்று சேர்த்தான். (8: 63)

 

 

ஆம்! எவ்வளவுதான் பணத்தைச் செலவு செய்தாலும் ஒருவரின் உண்மையான அன்பைப் பெற்றுவிட முடியாது. நாம் செலவழிக்கின்றபோது அன்பு கொண்டவனைப்போல் பாசாங்கு காட்டுவதும் செலவழித்து முடித்தபின் அன்பே இல்லாதவர்களைப்போல் அகன்றுவிடுவதும் நாளுக்கு நாள் நாம் காணும் காட்சிகளாகும்.

 

 

அன்புக்கு நிபந்தனை கிடையாது: உண்மையான அன்புக்கு எந்த நிபந்தனையும் கிடையாது. பெற்றோரின் அன்பு இதில் முதலிடம் வகிக்கிறது. பின்னர் கணவன்-மனைவியின் அன்பு. பிறகு அடுத்தடுத்த அன்பு இடம் வகிக்கிறது. பெற்றெடுத்த பிள்ளைமீது பெற்றோர் காட்டுகின்ற அன்பு நிபந்தனையற்றதாகும். எதிர்காலத்தில் பிள்ளைகள் ஏராளமான செல்வத்தைச் சம்பாதித்துத் தருவார்கள் என்ற அற்பமான எந்த எதிர்பார்ப்புமின்றி அவர்கள் தம் பிள்ளைகள்மீது அன்பு செலுத்துகின்றனர். பெற்றெடுத்த பிள்ளைகளைப் பராமரித்து வளர்ப்பதும், கல்வியறிவைப் புகட்டுவதும், ஒழுக்கமிக்கோராக உருவாக்குவதும் பெற்றோர் தம்முடைய பிள்ளைகள்மீது செலுத்தும் அன்பின் வெளிப்பாடுதான் என்றால் மிகையில்லை.

 

 

ஒருவர் பிறர்மீது செலுத்தும் அன்பானது அல்லாஹ் வழங்கிய அருட்கொடையாகும். அவனது அருட்கொடை மட்டும் இல்லையென்றால் யாரும் யார்மீதும் அன்பு செலுத்தியிருக்க மாட்டார்.  அதற்கான சான்றாக அல்லாஹ் கூறுகின்றான்: (நபியே!) அல்லாஹ்வுடைய அருளின் காரணமாகவே நீங்கள் அவர்களிடம் மென்மையானவராக நடந்து கொண்டீர்கள். (3: 159) ஆகவே ஒருவர் அதீத அன்பு கொண்டவராக நடந்துகொள்வதும் ஒருவர் கல்நெஞ்சம் கொண்டவராக நடந்துகொள்வதும் அல்லாஹ் அவரவர் இயல்பிலேயே படைத்த குணமாகும். அது அவனது அருளும் கருணையுமாகும். எனவே அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சமுதாய மக்கள்மீது மிகுந்த அன்புடையோராக நடந்துகொண்டார்களென்றால் அது அவர்களுக்கு அல்லாஹ் வழங்கிய அருட்கொடையாகும். அவர்கள்மீது அல்லாஹ் காட்டிய கருணையாகும். அதுபோன்றே இவ்வுலகில் ஒவ்வொருவரும் மற்றவர் மீது காட்டும் அன்புக்கும் கருணைக்கும் அல்லாஹ்வே காரணமாவான். அவனுடைய அருட்கொடையாலேயே நாம் அன்புடையோராக வாழ்ந்து வருகிறோம். நம்மிடம் அன்பு குறைந்து வருகிறபோதெல்லாம், அதை மிகுதியாக வழங்குமாறு அல்லாஹ்விடமே நாம் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

 

 

தம்பதியர் அன்பு: கணவன் தன் மனைவி மீதும் மனைவி தன் கணவன்மீதும் காட்டுகிற அன்பு காதல் எனப்படுகிறது. அந்த அன்பின் நூலில்தான் கணவன்-மனைவி இருவரின் அன்பு இணைக்கப்பட்டுள்ளது. அந்த அன்புதான் இரவு பகலாக உழைத்து, தன் மனைவியைக் காக்க வேண்டுமென்ற பொறுப்புணர்வைக் கணவருக்கு ஊட்டுகிறது; அந்த அன்புதான் மற்றவரைவிடத் தன் கணவனை மட்டுமே நேசிக்க வேண்டும் என்ற உள்ளுணர்வைத் தூண்டுகிறது; இல்வாழ்வில் நேரிடுகிற துன்பம், சிரமம், வறுமை அனைத்தையும் பொறுத்துக்கொண்டு வாழ வேண்டும் என்ற ஒழுக்க நெறியைப் போதிக்கிறது.

 

 

அன்புக்கு அன்பே பரிசு: நாம் பிறர்மீது காட்டுகிற நிபந்தனையற்ற அன்பானது நமக்கே திரும்பக் கிடைக்கிறது. வகுப்புத் தோழர்கள், நண்பர்கள், உறவினர்கள், உடன் பணியாற்றுவோர் என அனைவரிடமும் நாம் அன்பு காட்டும்போது அவர்களும் நம்மீது அன்பு காட்டத் தொடங்குவார்கள். யார் முதலில் தொடங்குவது என்பதிலேயே காலம் கடந்துவிடுகிறது. எனவே முதலில் நாம் அன்பாகப் பழகத் தொடங்கினால் அவர்கள் தாமாக நம்மீது அன்பு காட்டத் தொடங்கிவிடுவார்கள். ஒருவரைக் கடந்து செல்கிறபோது அவரைப் பார்த்து நாம் வெளிப்படுத்துகிற ஒரு புன்னகை நாளடைவில் அவரின் உள்ளத்தில் நாம் இடம்பெற்றுவிடக் காரணமாக அமைந்துவிடுகிறது.

 

 

முகமன் அன்பை வளர்க்கிறது: மனிதர்கள் மத்தியில் அன்பு ஏற்படுவதற்கான ஓர் அழகிய வழிமுறையை அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நமக்குக் கற்றுத் தந்துள்ளார்கள். அதை நாம் நம்முடைய அன்றாட வாழ்வில் கடைப்பிடிக்கத் தொடங்கினால், அனைவரும் நம்மீது அன்பு செலுத்தத் தொடங்கிவிடுவார்கள். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்: நீங்கள் இறைநம்பிக்கை (ஈமான்) கொள்ளாத வரை சொர்க்கத்தில் நுழைய முடியாது. நீங்கள் ஒருவரை ஒருவர் நேசிக்காத வரை (முழுமையான) இறைநம்பிக்கையாளர்களாக ஆக முடியாது. ஒன்றை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? அதை நீங்கள் செயல்படுத்தினால் ஒருவரை ஒருவர் நேசம் கொள்ளலாம். உங்களிடையே ஸலாத்தைப் பரப்புங்கள். (முஸ்லிம்: 93)

 

 

ஒருவரைக் கடந்து செல்லும்போதெல்லாம் அவரைப் பார்த்து புன்முறுவலோடு ஸலாம் உரைத்தால், இயல்பாகவே நாம் அவருடைய மனத்தில் இடம்பிடித்துவிடுவோம். பின்னர் அவர் முந்திக்கொண்டு நமக்கு முகமன் கூறத் தொடங்கிவிடுவார். அதுவே காலப்போக்கில் நமக்கும் அவருக்குமிடையே அன்பு வளரக் காரணமாகிவிடும். இத்தகைய எளிய நடைமுறையை அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நமக்குக் கற்றுத் தந்திருக்க, நாம் அதைக் கைவிட்டுவிட்டு, ‘என்மீது அன்பு காட்ட யாருமில்லையே’ என ஏங்கிக்கொண்டிருக்கிறோம்.

 

 

அன்பு கோபம் கொள்ளும்: நம்மீது அன்புள்ளவருக்குத்தான் நம்மீது கோபம் வரும். நம்மீது ஒருவர் கோபம் கொள்கிறார் என்றால் அவர் நம்மீது அன்புகொண்டுள்ளார் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். சான்றாக, நம் பிள்ளைகள் தொடர்வண்டியிலோ பேருந்திலோ படிக்கட்டில் நின்றுகொண்டு பயணம் செய்தால், “உள்ளே வா, கீழே விழுந்துவிடுவாய்” என்று கோபத்தோடு சொல்வோம் அல்லவா? அது நாம் அவர்கள்மீது கொண்டுள்ள அன்பின் வெளிப்பாடுதானே? ஆக அன்பும் அக்கறையும் உள்ளவர்தாம் நம்மீது கோபம் கொள்வார் என்பதை நாம் உணர வேண்டும். நம்மீது அன்புள்ளவர், நாம் வெளியே செல்லும்போது, “பார்த்து, கவனமாகச் சென்றுவா” என்பார். நமக்காகப் பிரார்த்தனை செய்வார். “மழை வருவதுபோல் தெரிகிறது. குடை எடுத்துச் செல்; மழைக் கவசம் (ரெயின் கோட்) எடுத்துச் செல்; நிதானமாகச் செல்” என்றெல்லாம் கூறுவார். நம் வீட்டிலுள்ள முதியோர் அவ்வாறு கூறினால், அவர்கள்மீது நாம் எரிந்துவிழாமல், அவர்களின் வார்த்தைகளை அன்போடு ஆமோதிக்கப் பழகிக்கொள்ள வேண்டும்.

 

 

அன்பு எதையும் பிறருக்குக் கொடுக்கும்: அன்புள்ளம் கொண்டோர் நாம் நேசிக்கும் அன்பருக்காக எதையும் கொடுக்க முன்வருவர். தமக்கு இல்லையென்றாலும் தம் அன்பருக்குக் கொடுக்க நினைப்பர்.  சான்றாக, அன்னை கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள், தம் அன்புக்குரிய கணவரான அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்மீது கொண்டிருந்த அதீத அன்பின் காரணமாகத் தம்மிடமிருந்த செல்வத்தையெல்லாம் ஏழை எளியோருக்குச் செலவு செய்ய அவர்களுக்கு வழங்கினார்கள். புதிதாக இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டோர் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்ட நேரத்தில் தம் செல்வத்தை எந்தவித நிபந்தனையுமின்றி நபியவர்களுக்கு வழங்கினார்கள். இதுதான் அன்பின் வெளிப்பாடு; அன்பின் அடையாளம்.

 

 

ஆக அன்பு எனும் அருட்கொடை அல்லாஹ்வால் அருளப்பட்டதாகும். அதை அவன் யாருக்கு விரும்புகிறானோ அவருக்கே வழங்குகின்றான். எனவே நாம் அவனது அன்பு எனும் அருட்கொடையை  மிகுதியாக அவனிடமே கேட்டுப் பெற்று, நம்மைச் சுற்றியுள்ள அனைவரிடமும் அன்பு செலுத்தி வாழ்வோம். குறிப்பாகப் பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள், அண்டைவீட்டார் அனைவரிடமும் அன்பு செலுத்துவோம்.

=============================








திங்கள், 6 ஏப்ரல், 2026

புதிய வெளியீடு

 

---------------------------

 

நூலின் பெயர்: திருக்குர்ஆன் வார்த்தைகளின் தொகுப்பு

 

ஆசிரியர்: டாக்டர் அப்துல் அஜீஸ் அப்துர் ரஹீம்

 

தமிழ் மொழிபெயர்ப்பு: முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி Ph.D

 

ஆண்டு: 2025

 

பக்கங்கள்: 92

 

விலை: ₹130

 

வெளியீடு: நாணல் 82, மூர் தெரு, சென்னை – 600001

தொடர்புக்கு: 87546 24916

----------------------------------------------------------------------------------------------------------

 

தமிழாக்கம் தந்தோனுரை

 

-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி Ph.D.

 

 

அருங்கருத்துகளை ஆழமாகப் பொதிந்துள்ள அருள்மறையை அவனியோர்க்கு அருளிய அன்பாளன் அல்லாஹ் ஒருவனையே அனைத்துப் புகழும் அடையட்டும். வையத்தோர்க்கு வழிகாட்டியாய் வந்து சீரான வழிகாட்டிய அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்மீதும் அவர்கள்தம் குடும்பத்தார், உற்ற தோழர்கள்மீதும் அல்லாஹ்வின் அன்பும் கருணையும் நிறைவாகப் பொழியட்டும்.

 

 

“அல்லாஹ்வின் வேதத்தில் குர்ஆனில் ஓர் எழுத்தை ஓதியவருக்கு ஒரு நன்மை உண்டு. ஒரு நன்மைக்கு அதைப் போன்ற பத்து மடங்கு நன்மை என்ற அடிப்படையில் அவருக்கு உண்டு” (திர்மிதீ 2009) என்று கூறித் திருக்குர்ஆன் ஓதலை ஊக்கப்படுத்தினார்கள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள். அதனைச் சிரமேற்தாங்கி முஸ்லிம்கள் பலர் திருக்குர்ஆனைத் தொடர்படியாக ஓதிக்கொண்டிருக்கின்றார்கள்.

 

 

மனிதர்களின் அறிவுரைக்காகவே இந்தக் குர்ஆனை நிச்சயமாக நாம் மிக எளிமையாக்கி இருக்கின்றோம். எனவே, அறிவுரை பெறுவோர் எவரேனும் உண்டா (54:17) என்று உயர்ந்தோன் அல்லாஹ் வினாத் தொடுக்கின்றான். பொருள்புரியாமல் வெறுமனே ஓதினாலும் ஓரெழுத்துக்குப் பத்து நன்மை கிடைத்துவிடும் என்றாலும் அத்தோடு மட்டும் நாம் நிறுத்திக்கொள்ளக் கூடாது. மக்களைச் சிந்திக்கத் தூண்ட வேண்டும் என்ற அடிப்படையில் உருவானதுதான் இக்குறு நூல். இதனை டாக்டர் அப்துல் அஜீஸ் அப்துர் ரஹீம் ஆங்கிலத்தில் உருவாக்கியுள்ளார்.

 

 

இந்த நூலை முதன்முதலாகப் படித்த சகோதரர் துரை அப்பாஸ் என்பவர் இதனைத் தமிழ்கூறு நல்லுலகிற்குக் கொடையாகத் தர வேண்டும் என்று தீரா வேட்கை கொண்டார். அதற்காகத் தொடர்ந்து முயன்றார். அதனைக் குவைத்தில் இயங்கி வருகின்ற ஃபெடரேஷன் ஆஃப் இஸ்லாமிக் தாவா அஸோசியேஷன் எனும் தமிழர் அழைப்புப் பணிச் சங்கத்தில் கூறினார். அச்சங்கம் இதனை வெளியிட முன்வந்தது. இதை உரிய முறையில் தமிழாக்கம் செய்து வெளியிட வேண்டும் என்ற எண்ணத்தில் என்னை அணுகினார்கள்.

 

 

 

அப்போது நான் ஏற்கெனவே சில நூல்களைத் தமிழாக்கம் செய்வதில் ஈடுபட்டிருந்ததால், "என்னால் இப்போது இயலாது" என்று கூற “இது சின்னஞ்சிறு நூல்தான்; தாங்களே செய்து கொடுங்கள்" என்று கேட்டுக்கொண்டார்கள். சரி, திருக்குர்ஆனுக்குச் செய்யும் சேவையாக இருக்கட்டுமே என்றெண்ணி தமிழாக்கம் செய்ய இசைந்தேன். இதோ அல்லாஹ்வின் பெருங்கருணையால் தற்போது ஓர் அழகிய நூலாக உங்கள் கைகளில் தவழ்கிறது.

 

 

இந்நூலைப் படிக்கின்ற நீங்கள் திருக்குர்ஆனின் பெரும்பாலான பகுதியை எளிதில் விளங்கிக்கொள்ள முடியும். மூலமொழி அரபியில் இதன் பொருள் என்னவென்பதைப் படித்து அறிந்துகொள்ள முடியும். அந்த வகையில் இது ஒரு பயனுள்ள நூலாகும். தற்கால இளைஞர்களும் இளைஞிகளும் இந்நூலைப் படித்துப் பயன்பெற வேண்டும் என்பது எனது வேண்டுகோள்.

 

 

 

இச்சிறிய நூலை நீங்கள் படிப்பதோடு உங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள். உயர்ந்தோன் அல்லாஹ் நம் முயற்சிகளுக்குரிய நற்கூலியை இம்மையிலும் மறுமையிலும் நிறைவாக வழங்குவானாக. இந்நூலை எழுதிய மூலநூலாசிரியருக்கும் இதனை மனமுவந்து வெளியிட்டோருக்கும் அல்லாஹ் நன்மைகளை வழங்குவானாக. ஃபெடரேஷன் ஆஃப் இஸ்லாமிக் அஸோசியேஷன் இன்னும் பற்பல பயனுள்ள நூல்களை வெளியிட அல்லாஹ் அருள்புரிவானாக.

 

அன்புடன்

 

மௌலவி நூ.அப்துல் ஹாதி பாகவி

 

குறிப்பு: இந்நூல் மகளிர் அரபுக்கல்லூரி (முஅல்லிமா, முபல்லிஃகா, ஸாலிஹா) மாணவியர்க்குப் பாடத்திட்டத்தில் வைக்கத் தகுதியானது.