புதன், 13 ஏப்ரல், 2016

நபிகளார் நவின்ற நான்குகள் (தொடர்-5)


முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி எம்.ஏ., எம்.ஃபில்., பிஎச்.டி.

ஹஃப்ஸா பின்த் உமர் (ரளி) அவர்கள் அறிவிப்பதாவது: நபி (ஸல்) அவர்கள் நான்கு வியங்களைக் கைவிடாதவர்களாக இருந்தார்கள். அவை: 1. (முஹர்ரம் மாதம் 10ஆம் நாளான) ஆஷூரா நோன்பு. 2. (துல்ஹஜ் மாதத்தின்) பத்து நோன்பு. 3. மாதந்தோறும் மூன்று நாள் நோன்பு. 4. காலைத் தொழுகைக்கு முன்னர் (ஃபஜ்ர் முன்சுன்னத்) இரண்டு "ரக்அத்' ஆகியவை ஆகும்.  (நூல்: நசாயீ: 2373)

இதில் மூன்று தடவை நோன்பு இடம்பெற்றுள்ளது. இதிலிருந்து நபி (ஸல்) அவர்கள் நோன்பிற்கு எந்த அளவு முக்கியத்துவம் கொடுத்திருந்தார்கள் என்பதை நம்மால் அறிந்துகொள்ள முடிகிறது. பொதுவாக நோன்பு மனிதனின் ஆரோக்கியத்திற்கு ஓர் உந்துசக்தியாக உள்ளது. நாள்தோறும் தொடர்ந்து மூவேளை உணவு; இடையிடையே நொறுக்குத் தீனி. இது பலரின் இயல்பு நிலை. இதை மாதத்தின் சில நாள்களுக்கு நிறுத்தி வைப்பதால் குடல்கள் புத்தாக்கம் பெறுகின்றன; ஏற்கெனவே சேமிக்கப்பட்ட ஆற்றல்கள் உடலின் இயக்கத்திற்குப் பயன்படுத்தப்பட்டு எரிக்கப்படுவதால் தேவையற்ற கொழுப்பு உடலில் தங்குவது தடுக்கப்படுகிறது; இதனால் உடலின் இயக்க ஆற்றல் நன்கு தூண்டப்படுகிறது; உடல் பருமன் குறைக்கப்படுகிறது. இவ்வாறே பல்வேறு நன்மைகள் இருப்பதால்தான் நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்பதில் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளார்கள்.

ஆஷூரா நோன்பு தொடக்கக் காலத்தில் கடமையாகவே இருந்தது. பின்னர், ரமளான் நோன்பு கடமையாக்கப்பட்ட பின் ஆஷூரா நோன்பை நோற்க விரும்புவோர் நோற்கலாம். நோற்க விரும்பாதோர் நோன்பை விட்டுவிடலாம் என்று நபி (ஸல்) அவர்கள் மக்களுக்கு விருப்ப உரிமை கொடுத்தார்கள். (நூல்: புகாரீ: 1692) இருப்பினும் அந்த நோன்பை நோற்போருக்கு ஏற்கெனவே கூறப்பட்ட சிறப்புகளும் வெகுமதிகளும் அப்படியே உள்ளன என்பதில் சிறிதும் ஐயமில்லை. ஆஷூரா நோன்பு ஓராண்டின் பாவங்களுக்குப் பரிகாரமாகும்” (நூல்: திர்மிதீ: 683) என்பதும் அதன் சிறப்புகளுள் ஒன்றாகும்.

நோன்பு குறித்துப் பல்வேறு கட்டங்களில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இளைஞர்களைப் பார்த்து நபி (ஸல்) அவர்கள், "இளைஞர்களே! உங்களுள் தாம்பத்தியம் நடத்த இயன்றோர் மணமுடித்துக் கொள்ளட்டும்! இயலாதோர் நோன்பு நோற்றுக் கொள்ளட்டும். ஏனெனில், நோன்பு (ஆசையைக்) கட்டுப்படுத்தக்கூடியதாகும்'' என்று கூறினார்கள். (நூல்: புகாரீ: 5065) இதில் நோன்பு என்பது ஆசையுணர்வுத் தூண்டலைக் கட்டுப்படுத்துகிறது என்பதால் நோன்பு நோற்குமாறு கூறியுள்ளார்கள். வயிறு நிறைந்த பின் அதன்மூலம் இயக்க ஆற்றலைப் பெறுகின்ற மனிதன், அதன்பின் தன் பாலுணர்வைத் தீர்த்துக்கொள்ள வடிகால் தேடுகின்றான். அது திருமணத்தின் மூலம் நிவர்த்தி செய்யப்படுகின்றது. திருமணம் செய்வதற்குரிய மஹ்ர் தொகையை வழங்க இயலாதோர் அதற்கான வசதியைப் பெறுகின்ற வரை நோன்பு நோற்று, கற்பைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். இதுவே நபிகளாரின் போதனை.  ஆக நோன்பு பல்வேறு வகைகளில் பயனுள்ளதாகவும் நன்மைக்குரியதாகவும் உள்ளது. 

மக்களுள் சிலர் இன்னும் அதிக நோன்பு நோற்க விரும்புவார்கள். அத்தகையோர் இறைத்தூதர் தாவூத் (அலை) அவர்கள் நோற்றதைப் போல் நோற்றுக்கொள்ளலாம். அது மிகவும் சிறப்பான நோன்பு என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அது எப்படி? ஒரு நாள் விட்டு ஒரு நாள் நோன்பு நோற்பதே அவர்களின் வழக்கம். அதன்படி நோன்பு நோற்கலாம். (நூல்: புகாரீ: 3420) மிகவும் நடுநிலையான நோன்பு” (நூல்: புகாரீ: 3418)  என்று மற்றோர் அறிவிப்பாளர்தொடரில் காணப்படுகிறது.

தற்காலத்தில் அறிவியல் உலகம் மிகுந்த வளர்ச்சிப் பாதையை நோக்கி முன்னேறிச் செல்கிறது. மனிதர்களுக்குப் பதிலியாக வீடுகளிலும் தொழிற்சாலைகளிலும் ரோபோக்கள் பணியாற்றத் தொடங்கிவிட்டன. மனிதர்கள் செய்யும் வேலைத்திறனைவிட மிகுந்த பணிகளைக் குறிப்பிட்ட நேரத்தில் செய்யும் திறன்மிக்கவையாக அவை திகழ்கின்றன. அத்தகைய வளர்ச்சியடைந்த அறிவியல் காலத்தில் வாழ்ந்து வருகின்றோம் நாம், எதிர்காலத்தில் மனிதன் நாள்தோறும் மூன்றுவேளை உண்ணுகின்ற தேவை இல்லாமல்கூடப் போகலாம். ஏன் நாள்தோறும் உண்ண வேண்டிய அவசியம்கூட இல்லாமல் இரண்டு நாள்களுக்கு ஒரு முறை சாப்பிட்டால்கூடப் போதும் என்ற நிலை உண்டாகலாம். அப்போது மற்ற மனிதர்கள் என்ன செய்வதெனத் திண்டாடும் நிலையில், முஸ்லிம்களோ ஒரு நாள் உண்டுவிட்டு மறுநாள் நோன்பு வைத்து நன்மையைச் சேர்த்துக்கொள்ளலாம். அத்தகைய நல்வாய்ப்பு நமக்கு மட்டும்தான் உள்ளது. இத்தகைய ஒரு செய்தியை எப்படிச் சொல்கிறேன் என்றால், விண்கலத்தில் அமர்ந்து மற்ற கோள்களுக்குப் பயணிக்கின்ற விண்வெளி வீரர்கள் வழமையான உணவை எடுத்துச் செல்வதில்லை. உணவுக்குப் பதிலாகச் சத்து மாத்திரைகளைத்தான் உட்கொள்கின்றார்கள். அவற்றின்மூலம் உணவுண்ட ஊக்கத்தைப் பெறுகின்றார்கள். இப்பொழுது செவ்வாய்க் கிரகத்திற்கு மனிதனை வைத்து அனுப்பப்போவதாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. செவ்வாய்க் கிரகத்திற்குச் செல்லும் பயணக் கால அளவு பத்து மாதங்களாகும். திரும்பி வரப் பத்து மாதங்கள் ஆகும். அங்கு தங்குவது எவ்வளவு காலம் என்பது தெரியாது. ஆக குறைந்த பட்சம் ஈராண்டுகள் ஆகும். அவ்வளவு காலத்திற்கான உணவை மாத்திரைகளாகக் கொண்டுசென்றாலும் லக்கேஜ்அதிகமாகத்தான் இருக்கும். இதற்கெல்லாம் தீர்வாகத்தான் இப்படி ஒரு கண்டுபிடிப்பு வரலாம் என்று சொல்கிறேன். அந்தக் கண்டுபிடிப்பு விரிவுபடுத்தப்பட்டுச் சாதாரணமாக மக்களுக்கும் கிடைக்கத் தொடங்கிவிட்டால் அப்போதுதான் இந்நிலை ஏற்படும். இஸ்லாம் எவ்வளவு பெரிய இடர்ப்பாடுகளுக்கும் தீர்வாக இருப்பதைக் கண்டு வியக்காமல் இருக்க முடியவில்லை. 
     
இரண்டாவது துல்ஹஜ்ஜு மாதத்தின் பத்து நோன்பு. ஆண்டின் கடைசி மாதம் துல்ஹஜ்ஜு ஆகும். இம்மாதத்தின்  சிறப்பு என்னவெனில், இது ஹஜ்ஜுடைய மாதமாகும். பல்வேறு நாடுகளிலிருந்து பலர் ஓரிடத்தில் ஒன்றுகூடி வழிபடுகின்ற, ஹஜ் செய்கின்ற மாதமாகும். எனவே இம்மாதத்தின் தொடக்கத்திலுள்ள பத்து நாள்களுமே சிறப்பு வாய்ந்தவை ஆகும். அதன் முக்கியத்துவத்தை உணர்த்துமுகமாக, அல்லாஹ் திருக்குர்ஆனில், “அதிகாலைப் பொழுதின்மீது சத்தியமாக! பத்து இரவுகள்மீது சத்தியமாக!” (89: 1-2) என்று கூறியுள்ளான். பத்து இரவுகள்மீது சத்தியமாகஎன்று அல்லாஹ் தன் படைப்பின்மீது சத்தியமிட்டுக் கூறுகின்றானென்றால், அதன்மூலமே அதன் முக்கியத்துவத்தை உணரலாம். அந்தப் பத்து நாள்களில் இயன்ற வரை தொடர்ந்து வழிபடுவதும் நோன்பு நோற்பதும் வலியுறுத்தப்படுகிறது. அதை நபி (ஸல்) அவர்கள் தம் வாழ்நாளில் பேணி வந்துள்ளார்கள்.

இப்னு அப்பாஸ் (ரளி) அவர்கள் அறிவித்துள்ளதாவது: நற்செயல்கள் செய்கின்ற நாள்களில் (துல்ஹஜ்ஜு மாதத்தின்) இந்தப் பத்து நாள்களைவிட அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான நாள்கள் இல்லைஎன அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  (நூல்: திர்மிதீ: 688) இதன் மூலம் இந்தப் பத்து நாள்களின் உயர்சிறப்பை அறிய முடிகிறது.

மூன்றாவது, மாதந்தோறும் மூன்று நாள்கள் நோன்பு நோற்பது நபிகளாரின் பழக்கம். அது எந்த நாள்கள் என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது. இப்னு உமர் (ரளி) அவர்கள், அறிவித்துள்ள தகவலின்படி, மாதத்தின் முதல் திங்கள்கிழமையும் அதற்குப் பின்னுள்ள இரண்டு வியாழக்கிழமைகளும் நோற்றார்கள் என்று பதிவு செய்யப்பட்டுள்ளது.  உம்முசலமா (ரளி) அவர்களின் கூற்றுப்படி, மாதத்தின் முதல் வியாழக்கிழமையும்  அதற்கடுத்த இரண்டு திங்கள் கிழமைகள் நோற்றார்கள் எனப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மாதத்தின் முதல் நாள், பத்தாம் நாள், இருபதாம் நாள் ஆகியவை என்றும் கூறப்பட்டுள்ளது. ஆக, மாதத்தின் மூன்று கிழமைகள் நோற்க வேண்டும் என்பதை இதன்மூலம் அறிய முடிகிறது. இவையனைத்தையும் முஸ்லிம் நபிமொழித் தொகுப்பு நூலுக்கு விளக்கவுரை எழுதியுள்ள இமாம் நவவீ (ரஹ்) அவர்களின் நூலில் காணலாம்.

தாங்கள் ஏன் திங்கள்கிழமை நோன்பு நோற்கின்றீர்கள்?” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வினவப்பட்டபோது, “அன்றுதான் நான் பிறந்தேன். என் பிறந்த நாளில் நான் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தும் பொருட்டு நோன்பு நோற்கிறேன்என்று விடையளித்தார்கள்.

வியாழக்கிழமை ஏன் நோற்க வேண்டும்? “அடியார்களின் வினைகள் யாவும் திங்கள் கிழமையும் வியாழக்கிழமையும் (அல்லாஹ்விடம்) எடுத்துக் காட்டப்படுகின்றனஎன்று நபி (ஸல்) அவர்கள் கூறிய செய்தி அபூதாவூத் எனும் நபிமொழித் தொகுப்பு நூலில் (2080) பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி தம்முடைய நல்வினைகள் எடுத்துக் காட்டப்படுகின்ற நாளில் தாம் நோன்பாளி என்று வானவர்களால் கூறப்படுவதை விரும்பியுள்ளார்கள். ஆகவே அந்நாள்களில் நோன்பு நோற்றுள்ளார்கள்.

ஆக இவையெல்லாம் ஆன்மிகத்தில் மிகுதியாக ஈடுபட விரும்புவோருக்கான ஒரு வழிகாட்டலேயன்றி, எல்லோரின்மீதும் கடமையான வழிபாடு இல்லை என்பதைப் புரிந்துகொண்டு  செயலாற்ற வேண்டும். எல்லோராலும் உபரியான நோன்புகளை நோற்க இயலாது. மனிதர்கள் பல வகை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தொழிலும் பணியும் உள்ளன. சிலருக்குக் கடினமான வேலை; வேறு சிலருக்கு மிக இலகுவான வேலை. எனவே அவரவர் தத்தம் வசதிக்கேற்ப இவற்றைச் செயலாற்ற வேண்டும்.

அதிகாலைத் தொழுகைக்குமுன் இரண்டு ரக்அத்கள் தொழுவதை நபியவர்கள் தொடர்ந்து கடைப்பிடித்து வந்துள்ளார்கள். எவர் சுன்னத்தான பன்னிரண்டு ரக்அத்களைத் தொடர்படியாகக் கடைப்பிடித்து வருகின்றாரோ அல்லாஹ் அவருக்குச் சொர்க்கத்தில் ஒரு வீட்டைக் கட்டுகின்றான்என்று நபியவர்கள் கூறினார்கள். (திர்மிதீ: 379) அதில் அதிகாலைத் தொழுகைக்குமுன் உள்ள இரண்டு ரக்அத்களும் அடக்கமாகும்.


ஆகவே நபி (ஸல்) அவர்கள் காட்டிய வழிமுறையை நம்மால் இயன்ற வரை கடைப்பிடித்து நோன்புகள் நோற்று, உபரியான தொழுகைகளைப் பேணி ஈருலக வாழ்விலும் ஈடேற்றம் பெற ஏக இறைவன் அருள்புரிவானாக!   (()) 






கருத்துகள் இல்லை: