சனி, 24 நவம்பர், 2018

சனி, 17 நவம்பர், 2018

மீ-டூவிற்கான தீர்வு என்ன?



-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

இன்று சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பரவி வருகின்ற மீ-டூ (நானும் பாதிக்கப்பட்டேன்) எனும் முழக்கத்திற்கான தீர்வென்ன? அது எங்கே இருக்கிறது? அதை யார் சொல்லியிருக்கிறார்? இஸ்லாம் அதற்கான விடையை பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பே சொல்-விட்டது. அதைக் கடைப்பிடிப்போர் பாதுகாப்பாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அதைப் புறக்கணித்தோர், அன்றாடம் தாம் எதிர்கொள்கின்ற சமுதாயச் சிக்கல்களை வலைதளங்களில் புலம்பிக்கொண்டிருக்கிறார்கள்.
மதுக்கடைக்குள் சென்று, அங்கேயே நீண்ட நேரத்தைக் கழித்த ஒருவன், என்னையும் மது குடிக்க வைத்துவிட்டார்கள் என்று சொல்லலாமா? விபச்சார விடுதிக்குள் சென்று, நீண்ட நேரத்தைக் கழித்த ஒருவன், என்னை விபச்சார வழக்கில் அநியாயமாகக் கைது செய்துவிட்டார்கள் என்று கூறலாமா? திரைப்படத் துறையில் சென்று மனமுவந்து நடிக்கத் தொடங்கிவிட்ட ஒரு நடிகை, என்னைக் கண்ட கண்ட இடங்களில் தொடுகின்றார்கள் என்று சொல்ல முடியுமா? அவ்வாறு சொன்னால் சமூகம் ஏற்குமா?

ஒவ்வொருவரும் இருக்க வேண்டிய இடங்களில் ஒழுக்கமாக இருந்துகொண்டால், இருக்க வேண்டிய எல்லைக்குள் எல்லைமீறாமல் இருந்துகொண்டால் யாருக்கும் தொல்லை இல்லை. சந்தேகத்திற்குரிய இடங்களுக்குச் செல்லாமல் பாதுகாப்பாக இருந்துகொள்வது நம் கடமை. தெரிந்தே அசிங்கமான இடங்களுக்குச் சென்றுவிட்டு, பின்னர் அவன் என்னைச் சீண்டிவிட்டான் என்று சொல்வது ஏற்புடையதல்ல.

"பொம்பள சிரிச்சா போச்சு'' எனும் பழமொழி எதை உணர்த்துகிறது? ஒரு பெண்ணின் சிரிப்பும் குழைவான பேச்சும் எதிரே உள்ள எதிர்பாலினத்தின் மனத்தில் ஊடுருவி சில இரசாயன மாற்றங்களை உண்டுபண்ணும். பிறகு தொட்டுப் பார்க்கத் தூண்டும். பிறகுதான் மற்றவை அரங்கேறத் தொடங்கும். அதற்குள் நிதானத்திற்கு வந்துவிட்டால் கற்பைப் பாதுகாத்துக்கொள்ளலாம்.
பெண்சீண்டல், வன்புணர்வு உள்ளிட்ட அசிங்கங்களுக்குத் தாழ்போடும் விதமாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ள எச்சரிக்கை கவனிக்கத்தக்கது.

"தனிமையில் அந்நிய ஆடவர் ஒருவர் அந்நியப் பெண் ஒருத்தியுடன் இருக்கும்போது அங்கு மூன்றாம் ஆளாக ஷைத்தான் இருக்கவே  செய்வான்.'' (நூல்: திர்மிதீ: 1091)
சுதந்திரம், பெண்விடுதலை எனும் நாகரிகப் பெயர்களில், ஆணும் பெண்ணும் தனிமையில் சந்தித்துப் பேசுவது, ஒன்றாக ஒரே அறையில் தங்குவது, தன்னோடு பணிசெய்பவர்தாமே என்ற அசட்டு நம்பிக்கையில் இருப்பது முதலானவை பெண்களுக்கு ஆபத்து. இதை எத்தனை முறை எடுத்துச் சொன்னாலும் பெண்கள் உணர்வதே இல்லை. பட்டபின்னரே கதறி அழுகின்றார்கள்.
ஒன்றாகப் பணி செய்யும் ஆண்களோடு அசட்டு நம்பிக்கையில் ஒன்றாகத் தங்கும் பெண்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதில் ஐயமில்லை. ஒரு நிறுவனத்தில் பணியாற்றும் ஆண்களும் பெண்களும் வேறு மாநிலத்திற்கோ நாட்டிற்கோ பயணம் செய்ய வேண்டிய தேவை ஏற்படும். அதைத் தவிர்க்க முடியாது. அது போன்ற சமயங்களில் தவறு நடக்க நிறைய வாய்ப்புண்டு. ஒரு நடிகை, தன் இயக்குநர் எங்கெல்லாம் அழைக்கின்றாரோ அங்கெல்லாம் பயணம் செய்ய வேண்டிய தேவை ஏற்படும். நீண்ட தூரம் பயணம் மேற்கொள்ளும்போது தனிமையும் தொலைவும் தவறு செய்வதற்கு ஒருவிதத் துணிச்சலைக் கொடுத்துவிடும். அதனால்தான் பெண்கள் ஆண்களின் ஆசைக்கு இரையாகின்றார்கள்.

இத்தகைய சூழ்நிலையிலிருந்து ஒரு பெண் தன் கற்பைக் காத்துக்கொள்ள நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஓர் அறிவுரையை வழங்குகின்றார்கள். "ஒரு பெண் (மணமுடிக்கத்தகாத) நெருங்கிய ஆண் உறவினர் துணையில்லாமல் (தனியாக) ஒரு பகல் ஓர் இரவு தொலைவுக்குப் பயணம் மேற்கொள்ளக்கூடாது.''  (நூல்: திர்மிதீ: 1090)

கற்பு, உயிர், உடைமை ஆகியவற்றைக் காத்துக்கொள்ள ஒரு பெண்ணுக்கு ஓர் ஆண் துணை தேவை. அந்த ஆண் துணை, தன் கணவனாக இருக்க வேண்டும். அல்லது தன்னை மணமுடிக்க முடியாத தந்தை, சகோதரன், மாமன், சிற்றப்பா, பெரியப்பா முதலான உறவாக இருக்க வேண்டும்.  ஒரு பெண்ணுக்கு மயக்கம் ஏற்பட்டு, மயங்கிக் கீழே விழுந்தால், அவளை ஆதரவோடு அள்ளியெடுக்கின்ற கை ஓர் அந்நியக் கையாக இருக்கக்கூடாது என்பதில் இஸ்லாமிய மார்க்கம் தெளிவாக இருக்கிறது.
காலம் செல்லச் செல்ல மோசமான மனிதர்கள் அருகி, படுமோசமான மனிதர்கள் பெருகி வருகிறார்களே தவிர நல்லவர்கள் மிகுந்து வருகிறார்கள் என்று சொல்ல முடியுமா? அந்தக் காலத்தில்தான் அப்படியெல்லாம் நடந்தன. இப்போதெல்லாம் அப்படி நடக்க வாய்ப்பே இல்லை என்று உளமாரக் கூற முடியுமா? ஏனெனில் காணும் காட்சிகளெல்லாம் மோசமானவை. அவை மனித மனங்களில் பதிந்துபோய் கிடக்கின்றன. நேரம் பார்த்து அவை ஒவ்வொரு மனிதனுக்குள்ளிருந்தும் வெளிப்படுகின்றன.

அதுபோலவே பெண்கள் குறித்து, ஆண்களுக்கும் சில எச்சரிக்கைகள் உண்டு. ஓர் ஆண் தன் கற்பைக் காத்துக்கொள்ள, பெண்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பள்ளிக்கூடம், அலுவலகம், நிறுவனம், தொழிற்கூடம் முதலான இடங்களில் ஆண்களும் பெண்களும் இணைந்து பணியாற்றுகின்றார்கள். அங்குள்ள ஓர் அதிகாரி அல்லது மேலாளர் தனக்குப் பிடிக்கவில்லையென்றால் அவர்மீது வீண்பழி சுமத்தி, ஒரு பெண் அவதூறு கூறலாம். அசிங்கப்படுத்த முனையலாம். அழகான ஓர் ஆணைக் கண்டு, அவனால் ஈர்க்கப்பட்டுவிட்டால் அவனை அடைய எதையும் செய்வாள் பெண் என்பதையும் ஆண்கள் மறக்கக்கூடாது. குடும்ப ஆண்கள் பலர், தம் சபலப் புத்தியால் பெண்களிடம் மாட்டிக்கொண்டு, மத்தளத்திற்கு இருபுறமும் அடி என்பதைப்போல், கட்டிய மனைவியிடமும் தொட்டுவிட்ட பெண்ணிடமும் திண்டாடுகின்றார்கள். பெண் விரிக்கும் வலையில் சிக்கிக்கொண்டால் அதிலிருந்து மீளுவது கடினம். பொருளாதாரமும் கரைந்து நிம்மதியும் பறிபோய்விடும்.

இவ்விடத்தில், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ள அறிவுரையைத் தெரிந்துகொள்வது ஆண்களுக்கு ஓர் எச்சரிக்கையாக அமையும்: "திண்ணமாக இவ்வுலகம் பசுமையானது; இனிமையானது. அல்லாஹ் அதில் உங்களைப் பிரதிநிதிகளாக ஆக்கியுள்ளான். நீங்கள் எப்படிச் செயல்படுகின்றீர்கள் என்பதைக் கண்காணித்துக்கொண்டிருக்கிறான். அந்தோ! உலகத்தில் எச்சரிக்கையாக இருங்கள்; பெண்களிடம் எச்சரிக்கையாக இருங்கள்.''  (நூல்: இப்னுமாஜா: 3990)

பெண்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னெச்சரிக்கை செய்துள்ளார்கள்.  ஆண்களிடம் பெண்கள் எவ்வாறு எச்சரிக்கையாக இருக்க வேண்டுமோ அதேபோல், பெண்களிடம் ஆண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென்பதை மேற்கண்ட நபிமொழியிலிருந்து அறியலாம்.

ஓர் ஆண் ஒரு பெண்ணைத் தனிமையில் சந்திக்கக் கூடாது என்பதில் பல்வேறு நன்மைகள் உள்ளன. ஓர் ஆணால் ஒரு பெண்ணின் கற்புக்கும் மானத்திற்கும் களங்கம் ஏற்பட்டுவிடாமல் பாதுகாக்கும் முன்னேற்பாடே இது. மேலும் ஒரு பெண்ணால் ஓர் ஆணின் மானத்திற்கும் ஒழுக்கத்திற்கும் இழுக்கு ஏற்பட்டுவிடாமல் பாதுகாக்கும் முன்னேற்பாடும் இதில் உள்ளடங்கியுள்ளது. ஒரு பெண்ணால் ஓர் ஆணுக்கு அப்படி என்ன களங்கம் ஏற்பட்டுவிடப்போகிறது என்று கேட்கலாம். ஒரு பெண் நினைத்தால், ஓர் ஆண் ஒழுக்கமானவன் என்ற நற்சான்றிதழையும் பெற்றுத் தரலாம். ஒழுக்கங்கெட்டவன் என்ற அவப்பெயரையும் பெற்றுத்தரலாம். இரண்டும் அவளால் மட்டுமே முடியும். மேலும் ஒரு பெண்ணைக் கண்டதும் ஆணுக்கு ஏற்படும் இரசாயன மாற்றங்களைப் போலவே அவளுக்கும் ஏற்படும். அப்போது பெண்ணின் ஈர்ப்பாற்றல் மிகுதியாக இருந்தால் அவள் அந்த ஆணை இழுத்துவிடுவாள். ஏனென்றால் ஆண்-பெண் அனைவரின் நாடி நரம்பெல்லாம் ஷைத்தான் உட்புகுந்து ஓடிக்கொண்டிருக்கின்றான். அவனுடைய வேலையே மனித மனங்களைக் கெடுப்பதும் எண்ணங்களைச் சிதைப்பதும் தவறு செய்யத் தூண்டுவதுமே ஆகும்.

நபி (ஸல்) அவர்கள், "(கணவன் உடனில்லாமல்) தனியாக இருக்கும் பெண்களிடம் நீங்கள் செல்லாதீர்கள். ஏனென்றால் ஷைத்தான் உங்களின் ஒருவரது இரத்த நாளங்களில் எல்லாம் ஓடுகிறான்'' என்று கூறினார்கள். "தங்களி(ன் உடலி)லுமா?'' என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "என்னிலும்தான்; எனினும் அவனுக்கெதிராக அல்லாஹ் எனக்கு உதவி செய்துவிட்டான் (அவனிடமிருந்து நான் பாதுகாப்புப் பெற்றிருக்கிறேன்)'' என்று கூறினார்கள். (நூல்: திர்மிதீ: 1092)

ஷைத்தான் ஒருவரின் நாடி நரம்பெல்லாம் ஓடிக்கொண்டிருப்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் சமம்தானே? ஆண் மனத்தளவில் உறுதியாக இருந்தால், பெண்ணின் மனத்திற்குள் புகுந்து வழிகெடுத்துவிடுவான். முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்கள் மனத்தளவில் வலுவாக இருந்ததால்,  ஹவ்வா அம்மையாரிடம் சென்று, தடுக்கப்பட்ட மரத்திலிருந்து உண்ணுமாறு தூண்டினான். அதன்பின்னர் அவர் தம் கணவரிடம் சென்று வலியுறுத்தவே, பிறகுதான் ஆதம் (அலை) அவர்கள் அம்மரத்திலிருந்து புசித்தார்கள் என்பது வரலாறு. அதுபோலவே யூசுஃப் (அலை) அவர்களின் அழகிய தோற்றத்தில் மயங்கிய அமைச்சரின் மனைவி, சமயம் பார்த்து, அவரை அள்ளிப் பருகிட முனைந்து, ஆசைக்கிணங்க அழைத்தபோது, அவளுக்கிணங்காது மறுத்து, அவளிடமிருந்து வெருண்டோடுகிறார். அப்போது அவரது சட்டையைப் பின்புறமாகக் கிழித்துவிடுகிறாள். எதிர்பாராவிதமாக அவளின் கணவர் உள்ளே வருகிறார். அச்சமயத்தில் அப்பெண் தன் குற்றத்தை மறைப்பதற்காக இறைத்தூதர் யூசுஃப்மீது பழிபோடுகிறாள். இதுவே பெண்ணின் இயல்பு.

செய்த குற்றத்தை ஒப்புக்கொள்ளத் துணிவில்லாத பெண்கள் ஆண்கள்மீது பழிபோட்டுத் தப்பித்துக்கொள்வார்கள். எனவே ஆண்கள் பெண்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென்பது  நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முன்னெச்சரிக்கை.

அதன் கண்ணோட்டத்தில் பின்வரும் நபிமொழியைப் பாருங்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒவ்வொரு நாள் காலையும் இரண்டு வானவர்கள் (இவ்வாறு) அழைத்துக் கூறாமல் இருப்பதில்லை: "பெண்களால் ஆண்களுக்குக் கேடே. ஆண்களால் பெண்களுக்குக் கேடே.'' (நூல்: இப்னுமாஜா: 3989)

ஆகவே ஆணிடம் பெண் எச்சரிக்கையாக இருப்பதைப் போலவே, பெண்ணிடம் ஆண் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதுவே இருபாலரும் தத்தம் கற்பைப் பாதுகாத்துக்கொள்ளச் சிறந்த வழியாகும்.









பள்ளிவாசலின் கரும்பலகையில் எழுதியவை

பள்ளிவாசலின் கரும்பலகையில் எழுதியவை - ஒரு காணொலித் தொகுப்பாக...



திங்கள், 5 நவம்பர், 2018

முகநூல் பதிவு சமரசத்தில்...




முகநூலில் வந்த பதிவை சமரசம் இதழ் வெளியிட்டுள்ளது.

சமரசம் இதழுக்கு நன்றி.



பாலர் வகுப்பை நவீனப்படுத்துவோம்!


முனைவர், மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி., 
(இமாம் மஸ்ஜித் ஜாமிஉல் அன்வார், மணலி, சென்னை, 
துணை ஆசிரியர் இனிய திசைகள் மாத இதழ்)
====================================

தடம் புரண்டு செல்லப் பல்வேறு வழிகள் பரவலாக இருந்தும் நம் இஸ்லாமியச் சமுதாய இளைஞர்கள் தடம்புரண்டுவிடாமல் இறைநம்பிக்கையில் உறுதியோடு இருக்க மிக முக்கியக் காரணங்களுள் ஒன்று அவர்கள் தத்தம் பகுதியில் அமைந்துள்ள பள்ளிவாசல்களில் பயின்ற பாலர் (மக்தப்) வகுப்புப் பாடங்கள்தாம். பள்ளிவாசலில் பாலர் வகுப்பில் பயின்ற இஸ்லாமியக் கொள்கைகள், பண்பாடுகள், ஒழுக்கங்கள், இஸ்லாமியச் சட்டங்கள் முதலானவையே அவர்களை இஸ்லாமிய மார்க்கமான ஒரே மரத்தின்கீழ் ஒருங்கிணைத்து வைத்துள்ளன. நிம்மதியான இம்மர நிழலைவிட்டு அவர்கள் ஒருபோதும் வெளியேறிவிட மாட்டார்கள். பள்ளிவாசலில் பாலர் வகுப்பில் பாலபாடத்தைப் பயிலாத சிலரே தடுமாறுகின்றனர்; தடம் மாறுகின்றனர்.

இதனால்தான் இஸ்லாமிய மார்க்கத்தைச் சிதைக்க நினைக்கும் குயுக்தி உடையோரும் குறுமதியாளர்களும் பாலர் வகுப்பைப் பாழ்படுத்த முனைந்தார்கள். ஆகவே பள்ளிக்கூட நேரத்தை மாற்றியமைத்தார்கள். பெரும்பாலும் ஆங்கில வழிக் கல்வி பயிலும் பிள்ளைகள் காலையில் வந்து பாலர் வகுப்பில் குர்ஆனை ஓதிவிட்டுப் பள்ளிக்கூடம் செல்லத் தாமதமாகிவிடுவதால் அவர்கள் காலை வகுப்பில் கலந்துகொள்வதில்லை. சரி, மாலை வகுப்பில் கலந்துகொள்ளலாமே என நாம் கேட்டால், மாலை வேளையில் பள்ளிக்கூடப் பாடச் சிறப்பு வகுப்பில் (டியூஷன்) கலந்துகொள்ள வேண்டியிருப்பதால் அப்போதும் வருகைதர முடிவதில்லை. இதையெல்லாம் தாண்டித்தான் இன்றைய பிள்ளைகள் பாலர் வகுப்பில் பங்குகொண்டு திருக்குர்ஆனைக் கற்றுவருகின்றார்கள். எனவே நம் பிள்ளைகளுக்குப் பாலர் வகுப்புப் பாடங்களை எவ்வகையிலேனும் கற்பிக்க மறக்கக் கூடாது. அதுதான் இறுதிவரை  இறைநம்பிக்கையில் (ஈமான்) நீடித்து நிலைத்திருக்க நாம் அவர்களுக்கு அமைத்துக்கொடுக்கின்ற அடித்தளம் என்பதை ஒவ்வொரு பெற்றோரும் நினைவில் கொள்ள வேண்டும். 

பெற்றோரைப் பேணல், பெரியோரை மதித்தல், உறவினர்களை அரவணைத்து வாழ்தல், அண்டைவீட்டாரோடு இணங்கி வாழ்தல், பிறருக்கு உதவி செய்தல், பிறருக்குத் தொல்லை கொடுக்காதிருத்தல், எல்லோரிடமும் அன்பாக நடந்துகொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு அறநெறிகளும் நீதிபோதனைகளும் அங்கே கற்பிக்கப்படுகின்றன. அங்கே கற்றவர்கள்தாம் தம் பெற்றோருக்குக் கீழ்ப்படிந்து நடக்கின்றார்கள்; மூத்தோரை மதிக்கின்றார்கள்; உறவினர்களை அரவணைத்து வாழ்கின்றார்கள்; அண்டை வீட்டாரோடு இணங்கி வாழ்கின்றார்கள்; பிறருக்கு உதவி செய்கின்றார்கள்.

அங்கு மனனம் செய்த திருக்குர்ஆன் அத்தியாயங்களும் அன்றாட துஆக்களும்தாம் அவர்களை நாள்தோறும் வழிநடத்துகின்றன. அதனால்தான் அவர்கள் நாள்தோறும் ஐவேளை தொழுவதற்கும் ஒவ்வொரு நிகழ்வுக்கும் அதற்குரிய துஆவை ஓதுவதற்கும் இயலுகிறது. இதையெல்லாம் நாம் அடுத்த தலைமுறை வரை கொண்டு செல்ல வேண்டுமென்றால் இதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். தற்காலப் பிள்ளைகளின் அறிவு வளர்ச்சிக்கேற்பக் கற்பித்தல் முறையை மாற்றியமைக்க வேண்டும். அப்போதுதான் பிள்ளைகள் ஆர்வமாகக் கற்றுக்கொள்வார்கள். 

கணினித்திரை: இன்றைய அறிவியல் யுகத்தில் காட்சி ஊடகம் மிகப்பெரும் பங்கு வகிக்கிறது. செய்திகளைத் தெரிந்துகொள்ள, தகவல்களைப் பரிமாறிக்கொள்ள, கற்க, கற்பிக்க என அனைத்து வகைகளிலும் இந்தக் காட்சி ஊடகம் பயன்பட்டு வருகிறது. எனவே நாமும் அதைப் பயன்படுத்தி நம் சிறுவர், சிறுமியர்க்குக் கற்பித்தால் அவர்கள் எளிதில் கற்றுக்கொள்வார்கள் என்பது திண்ணம். காட்சி ஊடகத்தின் வழியாகத்தான் நம் பிள்ளைகள் பெரிதும் ஈர்க்கப்படுகின்றார்கள். ஒரு விஷயத்தைச் சொல்லி விளக்குவதைவிட, காட்சியாகக் காட்டி விளக்கிக் கூறினால் எளிதில் அது அவர்களின் மனதில் பதிந்துவிடும். இது எவரையும் கவரும் ஈர்ப்புத்தன்மை உடையது. சிறுவர் சிறுமியரைப் பொறுத்த வரை இது மிகுந்த ஈர்ப்புத்தன்மை உடையது. ஆகவே சொல்லித்தரும் பாடங்களைக் கணினியில் தயாரித்து, அதைத் திரையில் காட்டும்போது எழுத்து வடிவங்களை அவர்கள் எளிதில் புரிந்துகொள்ள ஏதுவாக இருக்கும். 

இத்தகைய அடுத்த கட்ட நகர்வை நோக்கி நாம் முன்னேறிச் செல்ல வேண்டியது காலத்தின் கட்டாயம். அப்போதுதான் நம் பிள்ளைகளைப் பாலர் வகுப்பிற்குப் பெருமளவில் ஈர்க்க முடியும். ஏனெனில் நம்முள் பெரும்பாலான பிள்ளைகள் பள்ளிக்கூடங்களில் ‘ஸ்மார்ட் கிளாஸ்’ எனும் பெயரில் கணினித் திரையில்தான் பயின்று வருகின்றார்கள் என்பது இவ்விடத்தில் நினைவுகூரத்தக்கது. 

மாலைநேரச் சிறப்பு வகுப்பு: நம் பிள்ளைகள் டியூஷன் எனும் பெயரில் மாலைநேரச் சிறப்பு வகுப்பிற்குச் சென்றுவிடுவதால் அவர்கள் பள்ளிவாசலில் நடைபெறும் பாலர் வகுப்பிற்கு வர இயலாமல் போய்விடுகிறது. எனவே இப்பிள்ளைகளும் திருக்குர்ஆனைக் கற்றுக்கொள்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்த வேண்டியது ஒவ்வொரு பள்ளிவாசல் நிர்வாகத்தினரின் பொறுப்பும் கடமையும் ஆகும். இதனை மனத்தில்கொண்டு, தமிழகத்தின் சில பள்ளிவாசல்களில் டியூஷனுக்கான ஏற்பாடும் உள்ளது. எனவே அவர்கள் அதற்காக வெளியே செல்ல வேண்டியதில்லை. இது பரவலாக்கப்பட்டால் எல்லாப் பிள்ளைகளும் திருக்குர்ஆனைக் கற்றுக்கொள்ள ஒரு நல்வாய்ப்பை ஏற்படுத்திய நன்மை அந்தந்த நிர்வாகத்தினரைச் சாரும். 

முதலில் அவர்கள் குர்ஆன் வகுப்பில் கலந்துகொண்டு, அதனைக் கற்றுக்கொண்டபின் அங்கேயே அவர்கள் தம் பள்ளிக்கூடப் பாடங்களைப் படிக்கலாம். அதற்கென அந்தந்தத் துறை ஆசிரியர்களை நியமனம் செய்யலாம். பள்ளி நிர்வாகத்தினர் முயற்சி செய்தால் இது ஒன்றும் இயலாத செயல்பாடு அல்ல. பள்ளிப் பாடங்களை நடத்த முஸ்லிம் ஆசிரியர்கள் கிடைக்காத பட்சத்தில் முஸ்லிமல்லாத ஆசிரியர்களையும் பயன்படுத்திக்கொள்ளலாம்.  அல்லது பத்து, பன்னிரண்டாம் வகுப்புப் படிக்கும் மாணவ, மாணவியரைப் பயன்படுத்தி ஐந்து முதல் ஒன்பதாம்  வகுப்பு வரையுள்ள மாணவ மாணவிகளுக்குக் கற்பிக்கச் செய்யலாம். ஆக இரண்டும் ஒரே இடத்தில் கிடைத்துவிடுவதால் பெற்றோரும் மிகுந்த ஆர்வத்துடன் தம் பிள்ளைகளைச் சேர்க்க முன்வருவார்கள். வெளியில் டியூஷன் படித்தால் எவ்வளவு கட்டணமோ அதையே பெற்றுக்கொண்டு நிர்வாகத்தினரால் நியமிக்கப்பெற்றுள்ள ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கலாம். மேலும் மாணவ, மாணவியர் மாலை முதல் இரவு எட்டு மணி வரை பள்ளிவாசலிலேயே இருக்க நேரிடுவதால் அஸ்ர், மஃக்ரிப், இஷா ஆகிய தொழுகைகளையும் அங்கேயே நிறைவேற்றிக்கொள்ள ஒரு வாய்ப்பு அமைகிறது. இதனால் பிள்ளைகள் இருவகைக் கல்விகளையும் பெற்றுக்கொள்வதோடு ஒழுக்கமானவர்களாக உருவாகவும் வழியமைத்துக் கொடுக்கப்படுகிறது. 

ஒன்றுக்கு மேற்பட்ட ஆசிரியர்களை நியமித்தல்: சில பகுதிகளில் (மஹல்லா) முஸ்லிம்கள் மிகுதியாக வாழ்ந்து வருகின்றார்கள். அதுபோன்ற பகுதிகளில் அமைந்துள்ள பள்ளிவாசல்களுக்குப் பிள்ளைகள் பெருமளவில் வருகை தருகின்றார்கள். அதைக் கவனத்தில் கொள்ளாத நிர்வாகம் அப்பள்ளியில் உள்ள இமாம் ஒருவரே அனைவருக்கும் கற்றுக்கொடுக்க வேண்டும் என்ற கட்டாயச் சூழ்நிலையை ஏற்படுத்திவிடுகிறது. இதனால் அவர் பிள்ளைகளுக்குக் கற்பிப்பதில் முழுமையான கவனம் செலுத்த முடியாமல் போய்விடுகிறது. எனவே இது போன்ற பகுதிகளில் இருபது பிள்ளைகளுக்கு ஓர் ஆசிரியர் எனும் விகிதத்தில் கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். அப்போதுதான் எல்லாப் பிள்ளைகளுக்கும் உரிய முறையில் கற்பிக்க முடியும் என்பதை நிர்வாகத்தினர் நினைவில் கொள்ள வேண்டும். 

சேர்க்கையை முறைப்படுத்துதல்: எப்போது வேண்டுமானாலும் சேரலாம்; எந்த வயதினரும் சேரலாம் என்ற வரைமுறையில்லாத நிலையே எங்கும் நீடித்து வருகிறது. ஒழுங்கற்ற இந்நடைமுறை தவிர்க்கப்பட வேண்டும். ஐந்து வயது பூர்த்தியான சிறுவர், சிறுமியராக இருக்க வேண்டும். குறிப்பிட்ட காலத்தில்தான் சேர்க்கை நடைபெறும் என்ற நிபந்தனைகள் விதிக்கப்பட வேண்டும்.  பிள்ளைகளை மூவகையினராகப் பிரித்துக்கொள்ள வேண்டும். 1. அடிப்படைப் பாடங்களைக் கற்போர். இதில் ‘யஸ்ஸர்னல் குர்ஆன்’ எனும் நூலில் அடங்கியுள்ள அடிப்படைப் பாடங்களைக் கற்கும் சிறுவர் சிறுமியர் இருப்பார்கள். 2. திருக்குர்ஆனின் 30ஆம் பகுதியான ‘அம்ம’ எனும் இறுதிப் பகுதியிலுள்ள சின்னச் சின்ன அத்தியாயங்களைக் கற்போர். 3. திருக்குர்ஆனைத் தொடக்கத்திலிருந்து ஓதத் தொடங்கியுள்ள மாணவ, மாணவிகள். 

கற்பிக்கும் முறை: அடிப்படைப் பாடங்களைக் கற்பிப்பதிலேயே ஓராண்டு அல்லது ஈராண்டுகள் ஓடிவிடுகின்றன.  இது கால விரயம் ஆகும். அடிப்படைப் பாடத்தைக் கற்றுக்கொள்ள பல பாடநூல்கள் வழக்கத்தில் உள்ளன.  ஒவ்வொரு பிள்ளையும் ஒவ்வொரு விதமான நூலைக் கொண்டுவருவது வழக்கம். இது முற்றிலும் மாற்றப்பட வேண்டும். அடிப்படைக் கல்வியைக் கற்கின்ற எல்லோருக்கும் ஒரேவிதமான நூலை வாங்கிக்கொடுக்க வேண்டும். சான்றாக, நீண்ட காலமாகப் பயன்பாட்டில் உள்ள ‘யஸ்ஸர்னல் குர்ஆன்’ எனும் அடிப்படை நூல். அல்லது இதைப்போன்ற எளிதான நூல். இதை ஒரு மாணவரோ மாணவியோ படித்து முடிக்க அதிகப்பட்சமாக ஆறு மாதங்கள் போதும். ஆனால் நடைமுறை என்னவென்றால், ஈராண்டுகள் வரை பிள்ளைகள் அதையே ஓதிக்கொண்டிருக்கின்றார்கள். என்னைப் பொறுத்த வரை அடிப்படைப் பாடங்களைப் படிக்க அதிகப்பட்சமாக மூன்று மாதங்களே போதும். அத்தகைய எளிய முறையிலான 15 பாடங்களை உருவாக்கியுள்ளேன். அரபியில் உள்ள அகரக்குறி, இகரக்குறி, உகரக்குறி அடிப்படையில் பதினைந்தே பாடங்களில் அரபு எழுத்துகளைச் சேர்த்து வாசிக்கப் பழக்கிவிடலாம். அதைத் திரும்பத் திரும்பப் படித்துக்கொடுப்பதோடு எழுத்துப் பயிற்சியும் கொடுத்தால் பிள்ளைகளின் மனதில் எழுத்துகளின் வடிவங்கள் எளிதாகப் பதிவாகிவிடும். அதன்பின் ‘அம்ம’ எனும் திருக்குர்ஆனின் இறுதிப் பகுதியை அவர்கள் ஓதத் தொடங்கிவிடுவார்கள். 

‘அம்ம’ எனும் திருக்குர்ஆனின் இறுதிப் பகுதியை ஓராண்டு வரை ஓதிக்கொண்டிருக்கின்றார்கள். இதுவும் கால விரயமே ஆகும். இதில் அல்ஃபாத்திஹா அத்தியாயமும் சிறிதும் பெரிதுமாக 37 அத்தியாயங்களும் உள்ளன. இதை அதிகப்பட்சமாக மூன்று முதல் நான்கு மாதங்களில் ஓதி முடித்து விடலாம். அத்தோடு மனனமும் செய்ய வைக்கலாம். ஏனென்றால் இதிலுள்ள அத்தியாயங்களைத்தான் தொழுகையில் நாம் மிகுதியாக ஓதி வருகிறோம். இதனை முடித்த பின், திருக்குர்ஆனைத் தொடக்கத்திலிருந்து ஓதத் தொடங்குவார்கள். இதனைக் கற்பிக்கும்போது  வகுப்பில் எத்தனை மாணவர்கள் உள்ளார்களோ அவர்கள் அனைவருக்கும் குறிப்பிட்ட ஒரு பக்கத்தை ஆசிரியர் ஓதிக் காட்ட, அதையே மாணவர்கள் சொல்ல வேண்டும். இவ்வாறு அவர் சொல்லிக்கொடுத்தபின் மாணவர்களுள் ஒருவர் ஓத மற்றவர்கள் கவனிக்க வேண்டும். அதன்பின் அடுத்த மாணவர் எனத் தொடர வேண்டும். இவ்வாறு செய்வதால் ஆசிரியரின் கற்பிக்கும் நேரம் குறையும். மேலும் ஒவ்வொரு மாணவரும் வேறு வேறு பாடத்தை ஓதும் தற்போதைய நடைமுறை களையப்பட வேண்டும்.  

மாணவர்களை வகைப்படுத்துதல்: மேற்கண்ட முறைப்படி மூன்று பிரிவினராக மாணவ, மாணவியரைப் பிரித்துக்கொண்டு பாடம் நடத்தலாம். ஒரே வகுப்பில் அதிகமான மாணவர்கள் இருந்தால் அவர்களை இரண்டு பிரிவாகப் பிரித்துக்கொள்ளலாம். ஒவ்வொரு மாணவரும் வேறு வேறு பக்கங்களை ஓதிக்கொண்டிருக்கும் பழைய நடைமுறையை மாற்றி, எல்லோரும் ஒரே பக்கத்தைப் படிக்குமாறு செய்யலாம். பத்தாம் பக்கம் என்றால் அவ்வகுப்பில் உள்ள எல்லோரும் பத்தாம் பக்கத்தைத்தான் அன்றைய நாள் படிக்க வேண்டும். இப்படிச் செய்வதால் ஆசிரியரின் சுமை குறைகிறது. அப்பக்கத்திலுள்ள எழுத்துகளை மூன்று தடவை உச்சரித்துக் காட்டி, அதேபோல் பிள்ளைகளைச் சொல்லச் செய்ய வேண்டும். பின்னர் ஒவ்வொருவரும் ஆசிரியரிடம் அதை ஓதிக் காட்ட வேண்டும்.  இந்த நடைமுறை மிகவும் எளிதானது. பாடம் ஓதி முடித்ததும் அன்றாடம் ஓத வேண்டிய துஆக்களைக் கற்பிக்கலாம். சின்னப் பிள்ளைகளுக்குச் சின்னச் சின்ன துஆக்களையும் பெரிய பிள்ளைகளுக்குச் சற்று பெரிய துஆக்களையும் கற்றுக்கொடுக்கலாம். வாரந்தோறும் புதிய புதிய துஆக்களை அறிமுகப்படுத்த வேண்டும். தொடர்ந்து இப்படிச் செய்வதால் மூன்றாண்டுகளில் நூறு துஆக்களை மனனம் செய்வதற்கான வாய்ப்பு உண்டு. அத்தோடு ‘அம்ம’ எனும் இறுதிப் பகுதியிலுள்ள 37 அத்தியாயங்களையும் மாணவ மாணவிகள் மனனம் செய்யுமாறு தூண்டலாம். வாரத்தில் ஆறு நாள்கள் வேலை நாள்கள். அவற்றுள் இரண்டு நாள்கள் அன்றாட துஆக்கள்; இரண்டு நாள்கள் மார்க்கச் சட்டங்கள்; இரண்டு நாள்கள் இஸ்லாமிய வரலாறு எனப் பிரித்துக்கொள்ளலாம்.

ஆண்டுவிழா: மாணவ, மாணவியரை ஊக்கப்படுத்துமுகமாக ஆண்டுதோறும் சிறுவர் சிறுமியர்க்கான விழா ஒன்றை ஏற்பாடு செய்து அவர்கள் கற்றுக்கொண்டவற்றை மேடையில் அரங்கேற்றம் செய்து, ஊக்கப் பரிசுகளை வழங்கலாம். இதைக் காணும் பெற்றோர் பெரிதும் மகிழ்ச்சியடைவார்கள். அத்தோடு அக்கம் பக்கத்துப் பள்ளிவாசல்களின் பிள்ளைகளையும் இணைத்து, பெருவிழாவாக ஏற்பாடு செய்து வெற்றிபெறும் குறிப்பிட்ட மஹல்லாப் பிள்ளைகளுக்கு முதல் பரிசு என அறிவித்து, நடைமுறைப்படுத்தலாம். இப்படி எத்தனையோ வழிகள் தற்காலத்தில் உள்ளன. எனவே நம் பிள்ளைகள் அனைவரும் பள்ளிவாசலில் நடைபெறும் பாலர் வகுப்பில் கலந்துகொண்டு இஸ்லாமிய அடிப்படைக் கல்வியைக் கற்றுக்கொள்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுப்பதுதான் எதிர்காலத் தலைமுறை இறைநம்பிக்கையில் நீடித்திருக்க நாம் செய்யும் மிகச் சிறந்த உதவியாகும். இது நமது பொறுப்பு என்பதை ஒவ்வொருவரும் உணர்வோம். 
======================================