புதன், 21 பிப்ரவரி, 2018

அஹ்லுஸ் சுன்னா ஜனவரி 2018- வாசகர் கடிதம்


அஹ்லுஸ் சுன்னா  ஜனவரி 2018 ‘இணைய மாத இதழ்’ கண்டேன். கால மாற்றத்திற்கேற்பவும் வாசகர்களின் எண்ண ஓட்டத்திற்கேற்பவும் புதிய முயற்சியாக இந்த இதழைக் காண்கிறேன். இணைய இதழில் முஸ்லிம் சமுதாயத்திற்கான ஒரு முன்னோடியாக ஓர் ஆலிம் திகழ்வது சாலப் பொருத்தமாகும்.
 
இன்றைய இளைஞர்கள் நேரடியாக உள்ள மனிதர்களிடம் பேசுவதைவிட அலைபேசியில் அழைப்பவரின் பேச்சுக்கே முன்னுரிமை கொடுக்கின்றார்கள். அதுபோலவே காகித எழுத்துகளை வாசிப்பதைவிட கணினித் திரையில் காணப்படுகின்ற எழுத்துகளைத்தான் கண்கொட்டாமல் வாசிக்கின்றார்கள். அவர்களின் எண்ண ஓட்டத்திற்கேற்ப, கால மாற்றத்தை உணர்ந்து ‘இணைய இதழ்’ தொடங்கியுள்ள ஆசிரியரின் துணிவைப் பாராட்டுகிறேன்.

மேலும் ஆழமான கருத்துகளை உட்கொண்டுள்ள சிறந்த ஆக்கங்களைத் தேர்வுசெய்து வெளியிடுவது இதழுக்குப் பெருமை சேர்க்கிறது. வாசகர்களின் சிந்தனை ஓட்டத்தை மடைமாற்றிச் சீரிய கோணத்தில் சிந்திக்கத் தூண்டுகிற விதத்திலான ஆக்கங்களை வெளியிடுவதையே ஆசிரியர் தம் நோக்கமாகக் கொண்டு எழுத்துப் பணியைத் தொடர வேண்டுமாய் அன்புடன் விழைகிறேன். 

-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி, இமாம் மஸ்ஜித் ஜாமிஉல் அன்வார், மணலி,சென்னை-68  

==================================================




தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் தமிழகம் தழுவிய கண்டனப் பொதுக்கூட்டம்!



பெண்கள் பாதுகாப்பு மசோதா எனும் போலிப்பெயரில் மத்திய அரசு கொண்டுவர முனைந்துள்ள ஷரீஅத் சட்டத்திற்கெதிரான முத்தலாக் தடைச்சட்ட மசோதாவைக் கண்டித்து தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபை 2018 ஜனவரி 5ஆம் தேதி அன்று தமிழகம் தழுவிய கண்டனப் பொதுக்கூட்டத்தை நடத்தியது.
  
தமிழகத்தில் 24 இடங்களில் இந்தக் கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. முஸ்லிம்கள் மட்டுமின்றிப் பிற சமுதாயத்தைச் சேர்ந்த கட்சித்தலைவர்களும் பிரமுகர்களும் கலந்துகொண்டு மத்திய அரசுக்கெதிராகத் தம் எதிர்ப்பையும் கண்டனத்தையும் தெரிவித்தனர். சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற கண்டனக் கூட்டம் சென்னை மாவட்ட ஜமாஅத்துல் உலமா தலைவர் மௌலவி அபூதாஹிர் சிராஜி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மௌலவி அ. முஹம்மது கான் பாகவி, மௌலவி கே.எம்.இல்யாஸ் ரியாஜி, மௌலவி சதீதுத்தீன் பாகவி, மௌலவி அப்துல்லாஹ் பாகவி, மௌலவி முஜீபுர் ரஹ்மான் பாகவி, நாடாளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜா, மூத்த வழக்கறிஞர் முத்துக் கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் தம் கண்டன உரையைப் பதிவுசெய்தனர். இவர்களோடு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்திருமாவளவன் தம் கண்டனத்தை அழுத்தமாகப் பதிவுசெய்தார். திருவள்ளூரில் நடைபெற்ற கண்டனக் கூட்டத்தில் மௌலவிகள் பலரின் கண்டன உரையோடு, நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் தம் கண்டனத்தைப் பதிவுசெய்தார்.
திருவாரூரில் நடைபெற்ற கண்டனக் கூட்டத்தில் மௌலவி எஸ். ஃபக்ருத்தீன் ஃபாஸில் பாகவி உள்ளிட்ட மார்க்க அறிஞர்கள், தமிழகச் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் பழ. கருப்பையா ஆகியோரும், காஞ்சிபுரத்தில் நடைபெற்ற கண்டனக் கூட்டத்தில் மௌலவி தர்வேஷ் ரஷாதி, அல்பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் அரபுப் பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் மௌலவி அப்துல் ஹமீது பாகவி உள்ளிட்ட மார்க்க அறிஞர்களும்

திருச்சியில் மௌலவி ரூஹுல் ஹக் ரஷாதி தலைமையில் நடைபெற்ற கண்டனக் கூட்டத்தில் தமிழகச் சட்டமன்ற உறுப்பினர் தமீம் அன்சாரி, இனாம்குளத்தூர் மௌலவி ஷாஹுல் ஹமீது ஜமாலி, காங்கிரஸ் பிரமுகர் வேலுச்சாமி முதலானோரும், திண்டுக்கல் மாவட்டத்தில் மௌலவி ஹபீப் முஹம்மது நத்வி தலைமையில் நடைபெற்ற கண்டனக் கூட்டத்தில் மார்க்க அறிஞர்கள், திமுக பிரமுகர் பெரியசாமி, சட்டமன்ற உறுப்பினர் தமீம் அன்சாரி ஆகியோரும், கோவையில் இம்மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபைத் தலைவர் மௌலவி அப்துர் ரஹீம் பாகவி தலைமையில் நடைபெற்ற கண்டனக் கூட்டத்தில் திருப்பூர், பொள்ளாச்சி ஆகிய ஊர்களிலிருந்து பல்வேறு மார்க்க அறிஞர்கள், நாஞ்சில் சம்பத் ஆகியோரும் தம் கண்டனத்தைப் பதிவு செய்தனர்.

நெல்லை மாவட்டத்தில் தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் தலைவர் மௌலவி பி.ஏ. காஜா முஈனுத்தீன் பாகவி தலைமையில் நடைபெற்ற கண்டனக் கூட்டத்தில் பல்வேறு மூத்த மார்க்க அறிஞர்களும், இராமநாதபுரம் மாவட்டத்தில் ஆர்.எஸ். மங்களம் இப்ராஹீம் தேவ்பந்தி தலைமையில் பல்வேறு மார்க்க அறிஞர்கள், அரசியல் கட்சிப் பிரமுகர்கள் உள்ளிட்டோரும், மதுரையில் மௌலவி முஹம்மது காசிம் பாகவி தலைமையில் மௌலவி முஹம்மது ரிழா பாகவி உள்ளிட்ட மார்க்க அறிஞர்களும், சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்கள் இணைந்து நடத்திய கண்டனக் கூட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ், நூருல் இஸ்லாம் அரபுக் கல்லூரி முதல்வர் மௌலவி எம். அபுதாஹிர் பாகவி உள்ளிட்டோரும், மயிலாடுதுறையில் தமுமுக தலைவர் எம்.எஸ். ரிபாயி ரஷாதி, குணங்குடி அனீபா, நீடூர் அப்துர் ரஹ்மான் பாகவி, வடகரை ஷாஹுல் ஹமீது பாகவி முதலானோரும், புதுக்கோட்டையில் இந்திய ஜனநாயகக் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எம். ஷரீப்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில கொள்கைப் பரப்புச் செயலாளர் சகோ. சிபி சந்தர், பெங்களூரு ஸபீலுர் ரஷாத் அரபுக் கல்லூரிப் பேராசிரியர் மௌலவி ஸைபுத்தீன் ரஷாதி முதலானோரும், ஈரோட்டில் மௌலவி உமர் ஃபாரூக் தாவூதி தலைமையில் மௌலவி எஸ்.எஸ். ஹைதர் அலீ மிஸ்பாஹி உள்ளிட்ட மார்க்க அறிஞர்களும், கடலூரில் தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் முன்னாள் தலைவர் ஏ.இ.எம். அப்துர் ரஹ்மான் மிஸ்பாஹி உள்ளிட்ட மார்க்க அறிஞர்களும், தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் துணைப் பொதுச் செயலாளர் மௌலவி அ. அப்துல் அஸீஸ் பாகவி உள்ளிட்ட மார்க்க அறிஞர்களும், கன்னியாகுமரியில் மௌலவி அபூசாலிஹ்-மாவட்ட காஜி தலைமையில் நடைபெற்ற கண்டனக் கூட்டத்தில் மௌலவி அப்துர் ரஹ்மான் தங்ஙள் பாகவி உள்ளிட்ட மார்க்க அறிஞர்களும் புதுச்சேரி-காரைக்காலில் சிறப்புப் பேச்சாளராக வடகரை ஷாஹுல் ஹமீது பாகவி முதலானோரும் தத்தமது கண்டன உரையைப் பதிவு செய்தனர்.

நீங்கள் குனிந்தால் நாங்களும் குனிவோம்; நீங்கள் நிமிர்ந்தால் நாங்களும் நிமிர்வோம். இது தொழுகையில் மட்டுமல்ல. இதோ நீங்கள் அழைத்தால் உங்கள் பின்னே ஓடோடி வருவோம்... என உலமாக்கள் தலைமையின்மீது நம்பிக்கை கொண்டு தன்முனைப்போடு வந்த மக்கள் திரள் என்பதைக் கண்டு கூடியிருந்த காவலர்கள் உள்ளிட்ட அனைவரும் வியந்தனர்.


-தகவல்: நூ. அப்துல் ஹாதி பாகவி  



சனி, 17 பிப்ரவரி, 2018

பணிவு ஓர் உயர்வே!


-டாக்டர் அப்துர் ரஹ்மான் அரீஃபீ

சிறப்புவாய்ந்த மக்களோடு நான் ஒரு கூட்டத்தில் கலந்துகொண்டேன். அவர்களுள் ஒருவர் தம்மைத்தாமே தன்னிறைவாளராகக் கருதிக்கொண்டார். அவர் பேசத் தொடங்கியபோது தம் பேச்சில்நான் ஒரு பணியாளரைக் கடந்துசென்றேன். அவர் என் கையைக் குலுக்கத் தம் கையை நீட்டினார். நான் சற்றுநேரம் தயங்கினேன். ஆனால் பின்னர் நான் அவருடைய கையைக் குலுக்கினேன் என்று கூறினார். பின்னர் மிகவும் பெருமையோடு அவர், நான் யாரிடமும் கை குலுக்குவதில்லை என்று தெரிவித்தார். மாஷா அல்லாஹ்! நான் எல்லாரிடமும் கை குலுக்குவதில்லை என்று அவர் கூறியது கவனிக்கத்தக்கது.  

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், பலவீனமான ஓர் அடிமைப்பெண் தம்மை வழியில் சந்தித்து, தன் முதலாளியின் அநியாயத்தையும் தான் செய்ய வேண்டிய வேலைப்பளுவையும் பற்றி முறையிட்டபோது, அப்பெண்ணுடன் சென்று அவளுடைய முதலாளியைப் பார்த்து அவள் சார்பாகப் பேசினார்கள்.

யாரிடம் ஓர் அணுவளவு பெருமை இருக்கிறதோ அவர்  சொர்க்கத்தில் நுழையமாட்டார் என்று அவர்கள் அடிக்கடி சொல்வதுண்டு.

சகோதரரே, இன்னவர் மிகுந்த பெருமைக்காரர். அவர் தம்மைத்தாமே பெரியவராகக் கருதிக்கொள்பவர் என்று மக்கள் சொல்வதை நாம் எத்தனையோ தடவை கேள்விப்பட்டிருக்கிறோம். அம்மக்கள் அவரை வெறுக்கின்றார்கள். அவருடைய  செயல்பாட்டைக் கண்டிக்கின்றார்கள்.

நீங்கள் ஏன் உங்களுடைய அண்டைவீட்டாரின் உதவியை நாடுவதில்லை? என்று நீங்கள் யாரேனும் ஒருவரிடம் கேட்கலாம். அதற்கவர், அவர் மிகவும் பெருமைக்காரர். அவர் எங்களுடன் முகங்கொடுத்துப் பேசக்கூட விரும்புவதில்லை என்று பதிலளிப்பார்.

பெருமைக்காரர்களாக இருந்துகொண்டு, மற்றவர்களிடம் பேசும்போதும் முகத்தைத் தொங்கப்போட்டுக்கொள்பவர்கள் எவ்வளவு மோசமானவர்கள்! தன்னைத்தானே தன்னிறைவு பெற்றவனாகக் கருதிக்கொண்டு எல்லைமீறுபவன் நிராகரிக்கப்பட்டவன் இல்லையா?

பிறரை ஏளனமாகப் பார்ப்பவன் நிலத்தில் மகிழ்ச்சியாக நடக்கிறான். அவன் தொழிலாளர்களையும் பணியாள்களையும் ஏழைகளையும் கீழ்த்தரமாகப் பார்க்கிறான். அவன் அவர்களிடம் பேசவும் அவர்களிடம் கைகுலுக்கவும் அவர்களுடன் உட்காரவும் விரும்பாமல் பெருமைகொள்கிறான்.

நபி (ஸல்) அவர்கள் மக்காவை வெற்றிகொண்டு  வெற்றியாளராக நுழைந்தபோது-அங்குதான் அவர்கள் திட்டப்பட்டார்கள். ஏளனம் செய்யப்பட்டார்கள்-எல்லாப் பாதைகளிலும் அமைதியாக நுழையத் தொடங்கினார்கள். நபியவர்களைப் பைத்தியக்காரனே, மாயவித்தைக்காரனே, சூனியக்காரனே, பொய்யனே என்றெல்லாம் எத்தனை தடவை அந்தப் பள்ளத்தாக்குகளில் மக்காவாசிகள் கூறியிருப்பார்கள். மக்காவை வெற்றிகொண்ட நாளில், அதிகாரம்கொண்ட தலைவராக அவர்களைக் கடந்து சென்றார்கள். நபியவர்களை எம்மக்கள் ஏளனம் செய்தார்களோ அவர்களின் கண்முன்னே அல்லாஹ் அம்மக்களைத் தாழ்த்திவிட்டான்.

மக்காவை வெற்றிகொண்டு நபியவர்கள் அதனுள் நுழைந்தபோது அவர்கள் எப்படி நடந்துகொண்டார்கள்? அப்துல்லாஹ் பின் அபீபக்ர் (ரளி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்: சிவப்புத் தலைப்பாகை அணிந்துகொண்டு பயணம் செய்து தீதுவா எனும் இடத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அடைந்தபோது, அவர்களின் ஊர்தி ஒட்டகத்தில் இருந்தவாறே சற்று நேரம் நின்றார்கள். பின்னர் அவர்கள் பணிந்த நிலையில் தம் தலையைத் தாழ்த்தியவாறே, அல்லாஹ் தமக்குக் கொடுத்த வெற்றியைப் பார்த்துக்கொண்டு, தம் தாடி தம்முடைய குதிரையின் சேணத்தைத் தொடுமளவுக்கு இருந்த நிலையில் சென்றார்கள்.

அனஸ் (ரளி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்காவை வெற்றிகொண்ட நாளில் தம் பணிவை வெளிப்படுத்தும்வண்ணம் குனிந்ததால் அவர்கள்தம் தாடை வாகனத்தின் முதுகைத் தொட்டுக்கொண்டிருந்தது.

இப்னு மஸ்ஊத் (ரளி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்: ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து ஒரு விஷயம் குறித்துப் பேசினார். அவர் நபியவர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது அவரின் உடல் நடுங்கியது. அதைக் கண்ட நபியவர்கள், இயல்பாக இருங்கள். காய்ந்த இறைச்சித்துண்டைச் சாப்பிட்ட குறைஷிப் பெண்மணியின் மகன்தான் நான் என்று கூறினார்கள்.

ஓர் அடிமை அமர்வதைப்போல் நான் அமர்கிறேன். ஓர் அடிமை உண்பதைப்போல் நான் உண்கிறேன் என்று நபியவர்கள் சொல்வது வழக்கம். சுருக்கமாக, அல்லாஹ்விற்காக யார் பணிவாக இருக்கின்றாரோ அல்லாஹ் அவரை உயர்த்துகின்றான். யார் பணிவாக இருக்கின்றாரோ அவரின் கண்ணியத்தைத்தான் அல்லாஹ் அதிகரிக்கச் செய்கிறான். 
    
-தமிழில்: துணையாசிரியர், இனிய திசைகள்

==============================================================



வெள்ளி, 16 பிப்ரவரி, 2018

படித்ததும் பரப்பாதீர்!

ஆய்வுக் கட்டுரை
படித்ததும் பரப்பாதீர்!
-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பி.எச்டி.

அரபு மொழியில் இருந்த மிகுதியான மார்க்க நூல்கள் இன்று தமிழில் வெளிவந்துள்ளன. படிக்கத் தெரிந்தவர்கள், படிப்பில் ஆர்வமுள்ளவர்கள் அனைவரும் அவற்றைப் படித்துத் தமது மார்க்க அறிவை வளர்த்துக்கொள்ள முனைகின்றார்கள். இது முற்றிலும் வரவேற்கத்தக்கது. ஒவ்வொருவரும் தாம் அன்றாடம் செயலாற்றத் தேவையான அடிப்படை மார்க்க அறிவை அறிந்து வைத்துக்கொள்வது கடமையாகும். இதைத்தான், "கல்வியைத் தேடுவது ஒவ்வோர் ஆண், பெண்மீதும் கடமை'' என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அந்த அடிப்படையில் இன்றைய இளைஞர்கள் உள்படப் பலர் அரபியிலிருந்து தமிழுக்கு வந்துள்ள மார்க்க நூல்களான திருக்குர்ஆன் தமிழாக்கம், திருக்குர்ஆன் விரிவுரை, நபிமொழித் தொகுப்பு நூல்கள், மார்க்கச் சட்ட நூல்கள் உள்ளிட்டவற்றை ஆர்வத்தோடு படித்துவருகின்றார்கள்.  அதேநேரத்தில் பொதுமக்கள் அவற்றைப் படித்துத் தெரிந்துகொள்வதுதான் அவர்கள்மீது கடமையே தவிர அதைப் பரப்ப வேண்டிய பொறுப்போ கடமையோ அவர்களுக்கு இல்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அவற்றைப் பரப்ப வேண்டிய பொறுப்பும் கடமையும் மார்க்க அறிஞர்களைச் சார்ந்தது.

ஒரு நபிமொழியைப் படித்தவுடன், எந்தவித ஆய்வுமின்றிப் பரப்பும் போக்குதான் இன்றைக்குப் பெரும்பாலோரிடம் காணப்படுகிறது. இதுவே முஸ்லிம்கள் மத்தியில் காணப்படுகின்ற பல்வேறு பிரச்சனைகளுக்கும் சிக்கல்களுக்கும் முழுமுதற்காரணமாகும். பரப்புவோர், தாம் அறிந்த செய்தியைப் பிறரும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில்தான் செய்கின்றனர். ஆனால் அதனுள் அடங்கியுள்ள எதிர்வினை புரிவதில்லை. அதுவே சிக்கலுக்கான ஆணிவேர்.

நபிமொழிகளைப் பொறுத்த வரை முந்தைய செய்தியா, பிந்தைய செய்தியா, காலாவதியானதா இல்லையா என்ற ஆய்வுக்கு உட்படுத்திய பிறகுதான் முடிவு செய்ய வேண்டும். திருக்குர்ஆனின் சில வசனங்கள் இஸ்லாத்தின் தொடக்கக் காலத்தில் அருளப்பட்டவை. பிற்காலத்தில் அச்சட்டங்கள் மாற்றப்பட்டுவிட்டன. இருந்தும் அப்பழைய வசனங்களும் இன்றுவரை ஓதப்பட்டே வருகின்றன.  இதை மார்க்க அறிஞர்கள்தாம் அறிவார்கள். அதற்கான சான்றைப் பார்க்கலாம்.

ஒருவர் திருக்குர்ஆனின் மொழிபெயர்ப்பைப் படிக்கத் தொடங்குகின்றபோது, அதை முழுமையாகப் படிக்காமல் செய்தியைப் பரப்பினால் அது தவறாகவே முடியும் என்பதற்கான ஒற்றைச் சான்றைப் பாருங்கள். திருக்குர்ஆனின் இரண்டாம் அத்தியாயமான "அல்பகரா'விலுள்ள 219ஆம் வசனத்தைப் படிக்கின்றபோது, "(நபியே!) மதுவைப் பற்றியும் சூதாட்டத்தைப் பற்றியும் அவர்கள் உம்மிடம் கேட்கின்றார்கள். அவ்விரண்டிலும் பெரும் பாதிப்பும், மக்களுக்குச் சில பயன்களும் உள்ளன. ஆயினும் அவற்றிலுள்ள பயனைவிடப் பாதிப்பே மிகப் பெரிது என்று கூறுவீராக'' எனும் வசனத்தைக் காணலாம். நான்காம் அத்தியாயமான "அந்நிஸா'விலுள்ள 43ஆம் வசனத்தைப் படிக்கின்றபோது, "இறைநம்பிக்கைகொண்டோரே! நீங்கள் போதையர்களாக இருக்கின்றபோது தொழுகையை நெருங்காதீர்கள்'' எனும் இறைக்கட்டளையைக் காணலாம். இன்னும் கொஞ்சம் புரட்டி, ஐந்தாம் அத்தியாயமான "அல்மாயிதா'விலுள்ள 90ஆம் வசனத்தைப் படித்தால், "இறைநம்பிக்கை கொண்டோரே! மது, சூது, நட்டு வைக்கப்பட்ட (சிலை போன்ற)வை, (குறி பார்க்கும்) அம்பு ஆகியவை ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களாகும். எனவே அவற்றைக் கைவிடுங்கள்'' எனும் இறுதி இறைக்கட்டளை இடம்பெற்றிருப்பதைக் காணலாம்.

முதல் வசனத்திலுள்ள "மக்களுக்குச் சில பயன்களும் உள்ளன' எனும் வார்த்தைகளை வைத்துக்கொண்டு, மதுவில் சில பயன்களும் உள்ளன. எனவே அதைக் குடிக்கலாம் என்று முடிவெடுத்து அதைப் பரப்பினால், இறைவனின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் அல்லவா? எனவேதான் ஒரு செய்தியைப் படித்தவுடனேயே பரப்புவது முறையல்ல எனக் கூறுகிறோம்.
அதுபோலவே இஸ்லாத்தின் தொடக்கக் காலத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் கூறப்பட்ட சட்டங்கள் சில பிற்காலத்தில் மாற்றப்பட்டுவிட்டன. இருப்பினும் அவையும் நபிமொழித் தொகுப்பு நூல்களில் பதிவு செய்யப்பட்டே இருக்கின்றன. எனவே ஒரு நபிமொழியை மேலோட்டமாகப் படித்தவுடன் உடனடியாக எந்தச் சிந்தனையுமின்றி, ஆய்வுமின்றி, கட்செவி அஞ்சல் (வாட்ஸ்அப்), முகநூல் (ஃபேஸ்புக்), சிட்டுரை (ட்விட்டர்) உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரப்புவது மக்களைக் குழப்பும் செயலாகும். எனவே பரப்பும் பணியை ஒத்திப்போடுவதே சமூக நலப்பணியாகும் என்பதை  நன்மையை விரும்பும் இளைஞர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.

அடிக்குறிப்பு எழுதப்பட்டுள்ள நபிமொழித் தொகுப்பு நூல்கள் சில இருக்கின்றன. அதே நேரத்தில் நபிமொழித் தொகுப்பு நூல்கள் அடிக்குறிப்புகளின்றியும் வெளிவருகின்றன. அவற்றை மட்டும் படிக்க நேரிடுகின்ற இளைஞர்கள், தாம் படித்த செய்தியை உடனடியாகத் தம் நண்பர்களுக்குப் பரப்பிவிடுகின்றனர். இது முறையற்ற போக்காகும். ஏனென்றால் நபிமொழிகளில் காலாவதியான சட்டங்களும் உள்ளன என்பதை அவர்கள் அறிவதில்லை.

அவ்வாறான நபிமொழிகள் மூவகைகளாகக் காணப்படுகின்றன. 1. நபியவர்களே அது குறித்துத் தெளிவாகச் சொல்லியிருப்பார்கள். 2. நபித்தோழர்கள் தெளிவுபடுத்தியிருப்பார்கள். 3. வரலாற்று நிகழ்வுகள்மூலம் அறிந்துகொள்ளலாம். இம்மூன்றுக்கும் உரிய சான்றுகளைத் தெரிந்துகொண்டால் பிறவற்றை இவற்றோடு ஒப்பிட்டுப் புரிந்துகொள்ளலாம்.
1. "அடக்கத்தலங்களைச் சந்திக்க வேண்டாமென்று உங்களுக்கு நான் தடை விதித்திருந்தேன். இனி நீங்கள் அவற்றைச் சந்தியுங்கள்'' என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக புரைதா (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: முஸ்லிம்: 1778) ஆக, தொடக்கக் காலத்தில் பொது அடக்கத்தலத்தைச் சந்திக்கத் தடை இருந்தது. பின்னர் அந்தத் தடை நீக்கப்பட்டுவிட்டது என்பதை  நபி (ஸல்) அவர்களே நேரடியாகக் கூறுகின்றார்கள். இதனால் இதில் குழப்பம் ஏற்பட வாய்ப்பில்லை.

2. "(நாங்கள் "ஹுனைன்' அல்லது "அவ்தாஸ்' போரில் இருந்தபோது) எங்களிடம் அல்லாஹ்வின் தூதருடைய அறிவிப்பாளர் ஒருவர் வந்து, "முத்ஆ' (தவணை முறைத்) திருமணம் செய்து கொள்ள அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உங்களுக்கு (தற்காலிகமாக) அனுமதியளித்துள்ளார்கள் என்று அறிவிப்புச் செய்தார்'' என ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரளி), சலமா பின் அல்அக்வஉ (ரளி) ஆகியோர் அறிவிக்கின்றார்கள். (நூல்: முஸ்லிம்: 2722) ஒரு பெண்ணை மூன்று நாள்களுக்காகவோ ஒரு வாரத்திற்காகவோ மட்டும் திருமணம் செய்துகொண்டு பின்னர் தலாக் விட்டுவிடுதலே முத்ஆ (தவணை முறைத்) திருமணம் ஆகும். இது தொடக்கக் காலத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தது. பின்னர் அது தடைசெய்யப்பட்டுவிட்டது. 
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றி நாளில் "முத்ஆ' (தவணை முறைத்) திருமணம் செய்யலாகாதெனத் தடை விதித்தார்கள்'' என சப்ரா பின் மஅபத் அல்ஜுஹனீ (ரளி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.  (நூல்: முஸ்லிம்: 2734) ஆக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இத்திருமண முறையைத் தடைசெய்துவிட்டார்கள் என்ற தகவலை அவர்கள்தம் தோழர்களே தெரிவிக்கிறார்கள். அதன்மூலம் நாம் பிற்காலச் சட்டத்தை எளிதாக விளங்கிக்கொள்ளலாம். பிற்காலச் சட்டத்தை அறியாத ஷீஆ  பிரிவினர் தற்போதும் முத்ஆ திருமணம் செல்லும் என்று கூறிவருகின்றனர். இது அவர்களின் அறியாமையையே காட்டுகிறது. 

3. மூன்றாம் வகை படித்தவுடன் புரியாது. சொல்லப்பட்ட காலத்தை ஆய்வு செய்தோ, வேறு நபிமொழிகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தோதான் விளங்கிக்கொள்ள முடியும். எனவே அவைபோன்ற நபிமொழிகளை ஆய்வின்றியோ அறிஞர்களின் விளக்கத்தைப் பெறாமலோ பரப்புதல் கூடாது.

நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்திருந்தோம். அப்போது கிராமத்தைச் சார்ந்தவரைப் போன்ற ஒருவர் வந்து, "அல்லாஹ்வின் நபியே! ஒருவர் அங்கத்தூய்மை செய்த பிறகு தம்முடைய ஆண்குறியைத் தொடுவதால் (அவர் மீண்டும் அங்கத்தூய்மை செய்ய வேண்டுமா) என்ன?'' என்று வினவினார். அதற்கு நபியவர்கள், "அது அவருடைய ஒரு சதைத்துண்டுதான்'' என்று பதிலளித்தார்கள் எனும் செய்தியை தல்க் பின் அலீ (ரளி) அவர்கள் அறிவித்துள்ளார்கள். (நூல்: அபூதாவூத்: 182) ஒருவர் உளூ செய்துவிட்டுத் தம் ஆண்குறியைத் தொடுவதால் உளூ முறியாது என்பதை இதன்மூலம் அறிகிறோம். ஆனால் இச்சட்டம் பிற்காலத்தில் மாற்றப்பட்டுவிட்டது.

"உங்களுள் ஒருவர் தம் கையால் நேரடியாக - இடையில் துணியோ, தடையோ இன்றி- தம் ஆண்குறியைத் தொட்டால் அவர் அங்கத்தூய்மை செய்துகொள்ளட்டும்'' என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரளி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (நூல்: இப்னு ஹிப்பான்: 1118) இந்த நபிமொழியின் அடிப்படையில், ஒருவர் உளூசெய்தபின் நேரடியாகத் தம் ஆண்குறியைத் தொட்டால் அவர் மீண்டும் உளூ செய்ய வேண்டும் எனத் தெரிந்துகொள்கிறோம். ஆனால் இவ்விரண்டு நபிமொழிகளுள் எது முந்தைய சட்டம், எது பிந்தைய சட்டம் என்று எவ்வாறு  தெரிந்துகொள்ள முடியும்? அங்குதான் மார்க்க அறிஞர்கள் தேவைப்படுகிறார்கள். அவர்கள் இரண்டு நபிமொழிகளின் அறிவிப்பாளர்தொடரையும் ஆய்வு செய்து கண்டறிகின்றார்கள்.

அதன்படி தல்க் பின் அலீ (ரளி) அறிவித்துள்ள செய்தி பழையதாகும். ஏனெனில் அவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்தது இஸ்லாத்தின் தொடக்கக் காலமான ஹிஜ்ரீ 1ஆம் ஆண்டாகும். மஸ்ஜித் நபவீயை முஸ்லிம்கள் கட்டிக்கொண்டிருந்த நேரமது. அதேநேரத்தில் அபூஹுரைரா (ரளி) அவர்கள் அறிவித்துள்ள நபிமொழி பிந்தைய காலத்தைச் சார்ந்தது. ஏனெனில் அவர் ஹிஜ்ரீ 7ஆம் ஆண்டுதான் இஸ்லாத்தை ஏற்றார். எனவே தல்க் பின் அலீ (ரளி) அவர்களின் செய்தி அபூஹுரைரா (ரளி) அவர்களின் செய்தியைவிட ஏழாண்டுகள் பழையது என்பதை அறியமுடிகிறது. ஆகவே அபூஹுரைரா (ரளி) அவர்களின் செய்தியே புதிய சட்டமாக அங்கீகரிக்கப்படுகிறது.     

 ஆக, இதுபோன்று நூற்றுக்கணக்கான நபிமொழிகளின் சட்டங்கள் பிற்கால நபிமொழிகளால் மாற்றம் கண்டுள்ளன. எனவே நபிமொழித் தொகுப்பு நூல்களைப் படிப்போர் மிகுந்த கவனத்தோடு அணுக வேண்டும். மேலும் சில சான்றுகளைப் படித்தால் இன்னும் தெளிவாக விளங்கும்.

 1. குருதி உறிஞ்சி எடுத்துக்கொள்பவர், அதைச் செய்பவர் (ஆகிய இருவரும்) நோன்பை முறித்துவிட்டனர் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  (நூல்: இப்னுமாஜா: 1669) இதை அபூஹுரைரா (ரளி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.

2. இப்னு அப்பாஸ் (ரளி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் இஹ்ராம் கட்டிய நிலையில் குருதி உறிஞ்சி எடுத்துக்கொண்டுள்ளார்கள்; நோன்பு நோற்று இருக்கும்போதும் குருதிஉறிஞ்சி எடுத்துக்கொண்டுள்ளார்கள். (நூல்: புகாரீ: 1938)

மேற்கண்ட இரண்டு நபிமொழிகளையும் ஆய்வுக் கண்ணோட்டத்தோடு அணுகும்போது எது முந்தையது, எது பிந்தையது என்பது விளங்கும். முதல் நபிமொழி முந்தையது. இரண்டாவது நபிமொழி பிந்தையது. எனவே இரண்டாவது நபிமொழி முதலாவது நபிமொழியின் சட்டத்தைக் காலாவதியாக்கிவிட்டது என்று கூறலாம். அது எப்படி? நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டியது ஹிஜ்ரீ பத்தாம் ஆண்டாகும். எனவே இதுவே பிந்தைய சட்டம் என்பதை எளிதாக அறிய முடிகிறது. 

குருதி உறிஞ்சி எடுத்தல்: எனும் இந்தச் சிகிச்சை முறைக்கு "கப்பிங்' என்பது ஆங்கிலப் பெயர்.  முற்காலத்தில் குருதி உறிஞ்சி எடுப்பவர் கொம்பு போன்ற ஒரு பொருளை வைத்துத் தமது வாயால் குருதியை உறிஞ்சித் துப்புவார். ஆனால் தற்காலத்தில் குருதி உறிஞ்சி எடுப்பவர் தம் வாயால் அதை உறிஞ்சி எடுப்பதில்லை. உறிஞ்சு குடுவையைத்தான் மருத்துவர் பயன்படுத்துகின்றார். எனவே குருதி உறிஞ்சி எடுக்கும் செயலைச் செய்பவருக்கு நோன்பு முறியாது என்பது தெளிவாகிறது. குருதி உறிஞ்சி எடுத்துக்கொள்பவருக்கு அவரது பலவீனத்தைக் கருதித்தான் நோன்பு முறியும் என்று சொல்லப்பட்டதே தவிர, அச்செயலால் நோன்பு முறியாது என்பதை நபி (ஸல்) அவர்களின் செயல்பாட்டிலிருந்து விளங்கிக்கொள்ளலாம்.
மண்ணறை தரிசனம்: மண்ணறைகளைத் தரிசனம் செய்கின்ற பெண்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சபித்தார்கள் என இப்னு அப்பாஸ் (ரளி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (நூல்: திர்மிதீ: 294)

இந்த நபிமொழியை மட்டும் படித்துவிட்டு, பெண்கள் மண்ணறைகளைத் தரிசனம் (ஸியாரத்) செய்யச் செல்லக் கூடாது என்று சிலர் மேம்போக்காகக் கூறிவருகின்றார்கள். இது தொடக்கக் காலத்தில் இருந்த தடையாகும். பிற்காலத்தில் அத்தடை மாற்றப்பட்டுவிட்டது என்பதை, முஸ்லிம் நபிமொழித் தொகுப்பு நூலில் இடம்பெற்றுள்ள 1774ஆம் எண் நபிமொழியைப் படித்தால் தெளிவு கிடைக்கும். அதில், அன்னை ஆயிஷா (ரளி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், "நான் மண்ணறையை ஸியாரத் செய்யச் சென்றால், அங்கே என்ன ஓத வேண்டும்'' என்று கேட்டபோது, "அஸ்ஸலாமு அலைக்கும் யா அஹ்லத் தியார்...'' எனத் தொடங்கும் துஆவை ஓதுமாறு கற்றுக்கொடுத்துள்ளார்கள். இதிலிருந்து, பெண்கள் பொது அடக்கத்தலத்தை ஸியாரத் செய்யச் செல்வதற்கு எந்தத் தடையுமில்லை என்பதை விளங்கிக்கொள்ளலாம். இதுவே இன்றைய நடைமுறைச் சட்டமாகும்.  

இறந்தோருக்காக எழுந்து நிற்றல்: பிரேதத்தைக் கண்டால் அது "உங்களைக் கடந்து செல்லும்வரை' அல்லது "(கீழே) வைக்கப் படும்வரை' அதற்காக எழுந்து நில்லுங்கள் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  (நூல்: முஸ்லிம்: 1744) இது தொடக்கக் காலச் சட்டமாகும். இதுபோலவே தொடக்கக் காலத்தில் ஒரு யூதனின் பிரேதம் கொண்டு செல்லப்பட்டபோதும் நபியவர்கள் எழுந்து நின்றார்கள். அப்போது அது ஒரு யூதனின் சடலம் என்று அவர்களிடம் சொல்லப்பட்ட நேரத்தில், அதுவும் ஓர் உயிர்தானே? என்று மறுமொழி கூறினார்கள். இதுவெல்லாம் தொடக்கக் காலத்தில் இருந்த நடைமுறை.

அலீ பின் அபீதாலிப் (ரளி) அவர்கள் பிரேதங்களுக்காக எழுந்து நிற்பது தொடர்பாக "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஆரம்பக் காலத்தில்) எழுந்து நின்றார்கள்; பின்னர் உட்கார்ந்துவிட்டார்கள்'' என்று கூறிய செய்தி  முஸ்லிம் எனும் நபிமொழித் தொகுப்பு நூலில் 1754ஆம் நபிமொழியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பிற்காலத்தில், நபியவர்கள் பிறசமயப் பிரேதத்திற்காக எழுந்து நிற்கவில்லை என்பதை இது தெரிவிக்கிறது.  அதேநேரத்தில் ஒரு முஸ்லிம் ஜனாஸா சென்றால் அதற்காக எழுந்து நிற்பது மட்டுமல்ல, அந்த ஜனாஸாவின் தொழுகையில் பற்கேற்பதும் அந்த ஜனாஸாவை அடக்கம் செய்யும் இடம் வரை செல்வதும் கடமையாகும் என்பதை நாம் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். இதுவே ஒரு முஸ்லிம் பின்பற்ற வேண்டிய நபிவழியாகும்.    

யூதர்களுக்கு ஸலாம் கூறுதல்: உஸாமா பின் ஸைத் (ரளி) அவர்கள் கூறியதாவது:  நபி (ஸல்) அவர்கள் ஓர் அவையைக் கடந்து சென்றார்கள். அந்த அவையில் முஸ்லிம்களும் சிலை வணங்கிகளான இணைவைப்போரும் யூதர்களும் கலந்து இருந்தார்கள்...  நபி (ஸல்) அவர்கள் அந்த அவையோருக்கு ஸலாம் சொன்னார்கள். (நூல்கள்: புகாரீ: 6254, முஸ்லிம்: 3679) இந்த நபிமொழியைப் படித்துவிட்டுச் சிலர், சமய நல்லிணக்கத்தின் அடிப்படையில் மற்ற சமயத்தாருக்கும் ஸலாம் கூறலாம் என்று மேதாவித்தனமாகக் கூறிவருகின்றார்கள். இந்த நபிமொழியின் தொடக்கத்திலேயே இது பத்ருப் போருக்கு முன்னர் நடந்தது என்ற குறிப்பு உள்ளது. புகாரீ, முஸ்லிம் ஆகிய இரண்டு நூல்களிலும் இச்செய்தி தெளிவாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. மதீனா சென்ற தொடக்கக் காலத்தில் நபி (ஸல்) அவர்கள் யூதர்களின் மனங்களைக் கவரும்விதமாக நடந்துகொண்டார்கள். அந்த அடிப்படையில்தான் யூதர்கள் புனிதமாகக் கருதும் பைத்துல் முகத்தஸை நோக்கித் தொழுதுவந்தார்கள். பின்னர்தான் தொழும் திசை (கிப்லா) இறையில்லத்தை (கஅபத்துல்லாஹ்) நோக்கி மாற்றப்பட்டது.   

நபியவர்கள் தெளிவாகக் கூறியுள்ள செய்தியை புகாரீ நபிமொழித் தொகுப்பு நூலில் 6258ஆம் எண்ணில் காணலாம். வேதக்காரர்கள் உங்களுக்கு சலாம் சொன்னால் "வ அலைக்கும்' (அவ்வாறே உங்களுக்கு நேரட்டும்) என்று (பதில்) கூறுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மற்றொரு நபிமொழி: யூதர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் நீங்கள் (முந்திக்கொண்டு) முதலில் முகமன் கூறாதீர்கள் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: முஸ்லிம்: 4376)

ஆக இவ்வாறு நூற்றுக்கணக்கான நபிமொழிகள் ஆதாரப்பூர்வமானவையாகப் பதிவுசெய்யப்பட்டிருந்தாலும் அவை காலாவதியான நிலையில் உள்ளன. அவற்றுள் எது முற்காலத்தில் சொல்லப்பட்டது, எது பிற்காலத்தில் சொல்லப்பட்டது என ஆய்ந்தறிந்து அதன்படி செயல்படுவதே அறிவுடைமையாகும். இத்துறை குறித்த ஆழமான பார்வை பொது மக்களுக்கு இல்லாவிட்டால் மார்க்கச் சட்ட அறிஞர்களிடமும் நபிமொழியியல் துறையில் அனுபவம் உள்ளோரிடமும் கேட்டுத் தெரிந்துகொண்டு அதன்படி செயல்படுவதே அவர்களின் கடமையாகும். தெளிவாகவும் தீர்க்கமாகவும் தெரியாத ஒரு செய்தியைப் பிறருக்குப் பரப்புவது பொய்யைப் பரப்புவதற்குச் சமமாகும் என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

 =================================