சனி, 25 ஜூன், 2011

நூல்கள் வெளியீட்டு விழா 24 06 11உலகப் புகழ்பெற்ற வரலாற்றாசிரியர் இப்னு கஸீர்  அவர்கள் அரபியில் எழுதிய அல்பிதாயா வந்நிஹாயா எனும் பெருநூலின் ஒரு பகுதி `கஸஸுல் அன்பியா - மௌலவி நூ.அப்துல் ஹாதி பாகவி தமிழாக்கம் செய்த  நபிமார்கள் வரலாறு இரண்டாம் பாகமும், முந்நாள் டிஐஜி ஏ.பீ. முஹம்மது அலி  ஐபிஎஸ்  எழுதிய சமுதாயமே விழித்தெழு நூலும் தேவநேயப் பாவாணர் அரங்கில்ஜூன் 24ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை வெளியிடப்பட்டன. இந்நூல்களை சென்னை ஆயிஷா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. 

 புகாரி ஆலிம் அரபிக்கல்லூரியின் முதல்வர், டாக்டர் மௌலவி  பி.எஸ். செய்யது மஸ்வூத் ஜமாலி இந்நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார். பி.எஸ். முஹம்மது பாதுஷா, பி.ஜஃபருல்லாஹ் கான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  ஐ.ரீமா பல்கீஸ் திருமறை வசனங்களை ஓதி நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்தார். ஆயிஷா பதிப்பக நிறுவனர்களுள் ஒருவரான  எம். சாதிக் பாட்சா வரவேற்புரை நிகழ்த்தினார்.    இப்பதிப்பக மொழிபெயர்ப்பாளர் மௌலவி, நூ. அப்துல் ஹாதி பாகவி நூல்களை அறிமுகம் செய்து உரையாற்றினார்.

அதன்பின்னர், சமுதாயமே விழித்தெழு எனும் நூலை சென்னைப் பல்கலைக் கழக முந்நாள் துணைவேந்தர் டாக்டர் சே.சாதிக் வெளியிட, முதல்பிரதியை  முஹம்மது சதக் அறக்கட்டளையின் சேர்மேன் அல்ஹாஜ், டாக்டர், ஹமீது அப்துல் காதிர் அவர்களும்,   இரண்டாம் பிரதியை ஏ. அபூபக்கர் அவர்களும் பெற்றுக்கொண்டனர்.  அதன்பின்  நபிமார்கள் வரலாறு இரண்டாம் பாகத்தை மௌலவி, அ. முஹம்மது கான் ஃபாஸில் பாகவி வெளியிடமுதல் பிரதியை  புரொஃபஷனல் கூரியர் இயக்குநர் அஹ்மது மீரான் அவர்களும்இரண்டாம் பிரதியை பாத்திமா ஜுவல்லர்ஸ் நிர்வாக இயக்குநர் எச். ஜாஹிர் ஹுசைன் அவர்களும் பெற்றுக்கொண்டனர். அதைத் தொடர்ந்து நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.

அதன்பின்  டாக்டர் சே.சாதிக்  சமுதாயமே விழித்தெழு  நூலைப் பற்றிய ஆய்வுரை நிகழ்த்தினார்.  தொடர்ச்சியாக, மௌலவி, அ. முஹம்மது கான் ஃபாஸில் பாகவி  நபிமார்கள் வரலாறு நூலைப் பற்றிய ஆய்வுரை நிகழ்த்தினார். பின்னர், தமுமுகவின் தலைவரும் இராமநாதபுரம் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினருமான  டாக்டர்,எம். எச். ஜவாஹிருல்லாஹ் அவர்களும், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.  அப்துர் ரஹ்மான்  அவர்களும் வாழ்த்துரை வழங்கினர்.  டாக்டர் ஏ.பீ. முஹம்மது அலி  ஐபிஎஸ் ஏற்புரையாற்றினார். இறுதியில், இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய மௌலவி சா. யூசுஃப் சித்தீக் மிஸ்பாஹி  அவர்களின் நன்றியுரையுடன்  நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

முனைவர், மௌலவி பி.எஸ். சையத் மஸ்வூத் ஜமாலி தமது உரையில் கூறியதாவது: பேரறிஞர் இமாம் இப்னு கஸீர் (ரஹ்) ஒரு தலைசிறந்த வரலாற்று ஆசிரியராகத் திகழ்ந்தார்.  அவர்தாம் முதன்முதலாக வரலாற்று நூலை எழுதுவதற்காக கோட்பாட்டுமுறையை (Methodology) உருவாக்கினார்.  அதற்கேற்ப அவர் தம் நூலில், யூதர்கள், கிறித்தவர்கள் உள்ளிட்டவர்களின் அனைத்துக் கருத்துகளையும் எடுத்து வைத்துக்கொண்டு, குர்ஆன்-ஹதீஸ் ஒளியில் அவற்றை ஆய்வுசெய்து, எவை சரியானவை , எவை தவறானவை  எனப் பாகுபடுத்திக் கூறியுள்ளார். அந்த வகையில் இந்நூல் ஓர் ஆதாரப்பூர்வமான நூல் என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை. இந்த நூல் தமிழில் வந்திருப்பது தமிழ்பேசும் அனைவரின் தாகத்தையும் தீர்க்கவல்லது. 

பேராசிரியர் அ.முஹம்மது கான் ஃபாஸில் பாகவி தமது உரையில் குறிப்பிட்டதாவது: இறைத்தூதர்கள் என்பவர்கள் யார்? அவர்களது இலக்கணம் என்ன என்ற வினாக்களுக்கு விடையாக அல்லாஹ் திருக்குர்ஆனில் `அல்அன்பியா எனும் அத்தியாயத்தில் இறைத்தூதர்களைப் பற்றிக் குறிப்பிடுகின்றான்.

அதில் ஓரிடத்தில் இப்படிக் கூறுகின்றான்: உமக்கு முன்னரும் மானிடர்களையே தவிர (வேறெவரையும்) நம்முடைய தூதர்களாக அனுப்பவில்லை; அவர்களுக்கு நாம் வேத அறிவிப்புச் செய்கிறோம்... உணவைச் சாப்பிடாமல் இருக்கின்ற உடலமைப்பை அவர்களுக்கு நாம் ஆக்கவில்லை; மேலும் அவர்கள் நிரந்தரமாக இருக்கவில்லை.

அதாவது இறைத்தூதர்கள் தெய்வப்பிறவி இல்லை;அவர்கள் வணங்கப்பட வேண்டியவர்கள் அல்லர்; அவர்களுக்கும் மற்றவர்களைப் போன்று பசிக்கும்; மேலும் அவர்கள் இறந்துபோகாமல் நிரந்தரமாக இருப்பவர்களும் அல்லர். இறைத்தூதர்களைப் பற்றிய இந்தத் தெளிவுதான் முஸ்லிம்களை ஒரு நிலையான கொள்கையில் உறுதியாக வைத்துள்ளது. எனவே இவர்களை யாரும் அவர்கள் தம் கொள்கையிலிருந்து திசைதிருப்பவோ ஏமாற்றவோ முடியாது.

ஆக,இத்தகைய சிறப்பு வாய்ந்த இறைத்தூதர்களைப் பற்றிய வரலாற்றைக்கொண்ட இந்நூல் மிகவும் பயனுள்ளது. வாங்கிப் படியுங்கள். இதை நீங்கள் வாங்கிப் படிப்பதன் மூலம் ஆயிஷா பதிப்பகத்தாருக்கு உதவி செய்வதாக எண்ணிக்கொள்ளாதீர்கள். மாறாக, கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள தகவல்களை உங்களுக்குத் தமிழில் தந்து, அவர்கள்தாம் உங்களுக்கும் இந்தச் சமுதாயத்துக்கும் உதவிசெய்கின்றார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

சட்டமன்ற உறுப்பினர், முனைவர் எம்.எச். ஜவாஹிருல்லாஹ் தமது உரையில் வலியுறுத்தியதாவது: இஸ்லாம் கல்வியை இரண்டாகப் பிரிக்காமல் ஒன்றாகவே பாவித்து வந்தது. அதனால்தான் பேரறிஞர் இமாம் இப்னு கஸீர் (ரஹ்), ஒரு தலைசிறந்த திருக்குர்ஆன் விரிவுரையாளராகத் திகழ்கின்ற அதேநேரத்தில், தலைசிறந்த வரலாற்றாசிரியராகவும் திகழ்கின்றார்.  எனவே இன்றைக்கு ஆங்காங்கே காணப்படுகின்ற ஒருங்கிணைந்த கல்விமுறையை நாம் விரிவுபடுத்த முயலவேண்டும்.

வியாழன், 16 ஜூன், 2011

எண்பத்து மூன்று வயதிலும்...


இவர் பெயர் நூர் முஹம்மது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஆலங்குடியில் 1928ஆம் ஆண்டு பிறந்தார். இவருடன் பிறந்தவர்கள் 7 பேர் ஆவர். அவர்களுள் மூவர் பெண்கள்; நால்வர் ஆண்கள். அப்போது புதுக்கோட்டை சமஸ்தானத்தில் இராஜகோபாலத் தொண்டைமான் மன்னராக இருந்தார். சுதந்திரப் போராட்டக் காலத்தில் பிறந்த இவர் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்த பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை பயின்றார். பின்னர் ஒரு கடையில் விற்பனையாளராகப் பணியைத் தொடங்கிய இவர், ஓர் எண்ணெய் ஆலையில் கணக்காளராக நீண்ட காலம் பணிசெய்து ஓய்வுபெற்றார்.

1964ஆம் ஆண்டில், இவர் தம் 36 ஆம் அகவையில் ஃபாத்திமா பீவி என்பாருடன் திருமண வாழ்க்கையைத் தொடங்கினார். அவர் மூலம் இவருக்கு ஒரு பெண்குழந்தையும் ஆறு ஆண்குழந்தைகளும் பிறந்தனர். அவர்களுள் சித்தீக், அப்துல் லத்தீப், அப்துல் ஹாதி, அப்துல் ரஜாக், முபாரக் நிசா ஆகியோரே தற்போது உள்ளனர். இவர் தம் மனைவி ஏழு குழந்தைகளைப் பெற்றெடுத்த பின்னர், சில மாதங்களாக நோய்வாய்ப்பட்டு 1982ஆம் ஆண்டு தமது 37ஆம் வயதில் இறப்பெய்தினார். அவர் இறந்தபோது அவருடைய கடைசிக் குழந்தை கைக்குழந்தையாக இருந்தது.

இவர் தம் பிள்ளைகளை நன்றாக வளர்க்க வேண்டும் என்ற தன்னலமற்ற ஒரே காரணத்துக்காக மறுமணம் ஏதும் செய்துகொள்ளாமல் தம் பிள்ளைகளை வளர்த்துவந்தார். அவர்கள் அனைவரையும் ஓரளவு படிக்கவைத்தார். பின்னர் வறுமை காரணமாக, ஒவ்வொருவரும் மளிகைக் கடையில் பணிபுரியத் தொடங்கிவிட்டனர். மிகக் குறைந்த சம்பளத்தில் பணிபுரிந்தாலும், கிடைத்த வருவாய்க்குள் தம் பிள்ளைகள் அனைவரையும் வளர்த்து ஆளாக்கினார்; வறுமையிலும் இவர் ஒருபோதும் பிறரிடம் கடன் வாங்கியதில்லை. நேர்மையும் நாணயமும் இவரை மக்கள் மத்தியில் தலைநிமிர்ந்து நடக்கச்செய்தன. இவர் தம் கடைசி மகனைத் தவிர மற்ற அனைவருக்கும் திருமணம் செய்துவைத்துவிட்டார். இப்போது அவருக்கு 16 பேரக் குழந்தைகள் உள்ளனர்.

இவர் தற்போது தம் இரண்டாவது மகன் சித்தீக் உடன் கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலை எனும் ஊரில் வசித்துவருகிறார். சிறுவயது முதல் தொழுகை, நோன்பு ஆகிய இறைக்கடமைகளைக் கடைப்பிடித்துவருகிறார். இப்போது இவருக்கு 83 வயதாகியும் திருக்குர்ஆன் ஓதுவதையும், தொழுவதையும் கைவிடவில்லை. இப்போதும் இவர் பள்ளிக்கு நடந்தே சென்று ஐங்காலத் தொழுகையை ஜமாஅத்துடன் நிறைவேற்றி வருகிறார். இவரைக் காண்போர் இவரின் ஆரோக்கியத்தையும், இறைக்கடமையை நிறைவேற்றும் ஆர்வத்தையும் கண்டு வியப்படைகின்றனர். வல்ல அல்லாஹ் அவருக்கு நிறைந்த சுகத்துடன்கூடிய நீண்ட ஆயுளை வழங்க துஆ செய்வோம்.


சனி, 4 ஜூன், 2011

இப்ராஹீம் நபியின் வரலாறு (தொடர் 23)இப்ராஹீம் நபியின் சிறப்புகள்


இஸ்ஹாக் பின் யசார் (ரஹ்) கூறியுள்ளார்: இப்ராஹீம் (அலை) அவர்களை அல்லாஹ் தன் உற்ற நண்பராக ஆக்கியபோது, அவர்களின் உள்ளத்தில் அச்சத்தைப் போடப்பட்டது. அப்போது வானில் பறக்கின்ற பறவைகளின் இறக்கையின் சப்தத்தைப் போன்று அவர்களின் இதயத் துடிப்பின் சப்தத்தைக் கேட்க முடிந்தது. இதை இப்னு அபீஹாத்திம் (ரஹ்)அறிவித்துள்ளார். (நூல்: தஃப்சீர் இப்னு கஸீர்)

உபைத் பின் உமைர் (ரஹ்) கூறியுள்ளார்: இப்ராஹீம் நபி மக்களுக்கு விருந்து கொடுக்கின்ற பழக்கமுடையவராக இருந்து வந்தார். எனவே, ஒரு நாள் அவர் விருந்துகொடுப்பதற்காக யாரேனும் ஒருவர் கிடைப்பார் என்றெண்ணித் தேடிச் சென்றார். விருந்தாளியாக அவர் யாரையும் காணவில்லை. எனவே, அவர் தம் இல்லம் திரும்பினார். அங்கே ஒருவர் நின்றிருப்பதைக் கண்ட அவர், அல்லாஹ்வின் அடிமையே! என் அனுமதியின்றி நீர் எப்படி என் வீட்டுக்குள் நுழைந்தீர்? என்று வினவினார். நான் இறைவனின் அனுமதிபெற்று நுழைந்தேன் என்று அவர் பதிலளித்தார். நீர் யார்? என்று வினவினார். நான் மரணத்தின் வானவர். என்னை என் இறைவன் அவனுடைய அடியார்களுள் ஒருவரிடம் அனுப்பியுள்ளான். அல்லாஹ் அவரைத் தன் உற்ற நண்பராக ஆக்கிக்கொண்டுள்ள நற்செய்தியை அவருக்குத் தெரிவிக்கச் சொல்லியுள்ளான் என்று பதிலுரைத்தார்.

அவர் யார்? என்று (ஆர்வமுடன்) இப்ராஹீம் நபி வினவினார். மேலும் அவர், அல்லாஹ்வின் மீது ஆணையாக! நீர் அவரைப் பற்றி எனக்கு அறிவித்தால், அவர் ஊரின் எல்லையில் இருந்தாலும் நான் அவரிடம் செல்வேன்; எங்களிடையே மரணம் பிரிக்கின்ற வரை நான் அவருடைய அண்டைவீட்டுக்காரராக இருப்பேன் என்று கூறினார். அந்த அடியார் நீர்தாம் என்று அவ்வானவர் கூறினார். நானா? என்று (ஆச்சரியம் மேலிடக்) கேட்டார். அவர் ஆம்! என்று கூறியவுடன், எதனால் என் இறைவன் என்னை(த் தன்னுடைய) உற்ற நண்பராக ஆக்கிக்கொண்டான்? என்று வினவினார். ஏனென்றால், நிச்சயமாக நீர் மக்களுக்குக் கொடுக்கின்றீர்; (ஆனால்) நீர் அவர்களிடம் கேட்பதில்லை என்று பதிலுரைத்தார். இதனை இப்னு அபீ ஹாத்திம் (ரஹ்) அறிவித்துள்ளார். (நூல்: தஃப்சீர் இப்னு கஸீர்)
அல்லாஹ் திருக்குர்ஆனில் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் இப்ராஹீம் நபியைப் புகழ்ந்து கூறியுள்ளான். முப்பந்தைந்து இடங்களில் அல்லாஹ் அவரைப் புகழ்ந்து கூறியுள்ளான் என்று கூறப்பட்டுள்ளது. அவற்றுள் அல்பகரா அத்தியாயத்தில் மட்டும் பதினைந்து தடவை கூறியுள்ளான் என்று கூறப்பட்டுள்ளது.

இப்ராஹீம் (அலை) அவர்கள், `மனத்திடம் மிக்கவர் (உலுல் அஸ்ம்)கள் ஐவருள் ஒருவராவார். அவர்களின் பெயர்கள் திருக்குர்ஆனில் குறிப்பிட்டுக் கூறப்பட்டுள்ளன. அவர்கள் மற்ற நபிமார்களைவிடச் சிறப்பிற்குரியவர்கள். அவர்களைப் பற்றி அல்லாஹ் அல்அஹ்ஸாப் மற்றும் அஷ்ஷூரா ஆகிய அத்தியாயங்களில் கூறியுள்ளான்.

*அல்லாஹ் கூறுகின்றான்: (நபியே! நம் கட்டளைகளை எடுத்துக்கூறுமாறு அனைத்து) நபிமார்களிடமும், (குறிப்பாக) உம்மிடமும், நூஹ், இப்ராஹீம், மூசா, மர்யமுடைய மகன் ஈசா ஆகியோரிடமும் நாம் வாக்குறுதி வாங்கியபோது, மிக்க உறுதியான வாக்குறுதியையே அவர்களிடம் வாங்கினோம். (33: 7)

* நூஹுக்கு எதை அவன் உபதேசித்தானோ அதையே உங்களுக்கும் அவன் மார்க்கமாக்கியிருக்கின்றான். ஆகவே, (நபியே) நாம் உமக்கு தூதுச்செய்தி (வஹீ) மூலம் அறிவிப்பதும் இப்ராஹீமுக்கும், மூசாவுக்கும், ஈசாவுக்கும் நாம் உபதேசித்ததும் என்னவென்றால், நீங்கள் (அனைவரும்) மார்க்கத்தை நிலைநிறுத்துங்கள். நீங்கள் அதில் பிரிந்துவிடாதீர்கள் என்பதேயாகும். (42: 13) மனத்திடம் மிக்கவர்களுள் முஹம்மத் (ஸல்) அவர்களுக்குப்பின், இப்ராஹீம் நபிதான் மிகச் சிறப்புக்குரியவர் ஆவார்.

முஹம்மத் (ஸல்) அவர்கள் இப்ராஹீம் நபியை ஏழாம் வானத்தில் கண்டார்கள். அவர் அங்குள்ள `பைத்துல் மஅமூரில் தம் முதுகை வைத்துச் சாய்ந்தவராக இருந்தார். அந்த மஸ்ஜிதுக்கு நாள்தோறும் எழுபதாயிரம் வானவர்கள் வந்துசெல்கின்றார்கள். அவர்களுள் யாரும் மீண்டும் வருவதில்லை. அனஸ் (ரளி) அவர்களிடமிருந்து ஷரீக் பின் அபூநமிர் அறிவித்துள்ள மிஅராஜ் தொடர்பான ஹதீஸில் ஒரு தகவல் கூறப்பட்டுள்ளது. அதாவது நிச்சயமாக இப்ராஹீம் நபி ஆறாம் வானத்திலும் மூசா நபி ஏழாம் வானத்திலும் இருந்தார்கள். இந்நபிமொழியில் ஷரீக் எனும் அறிவிப்பாளர் பற்றிக் குறைகூறப்பட்டுள்ளது. ஆகவே, முதலாவது நபிமொழிதான் சரியானது.

அஹ்மத் (ரஹ்) கூறியுள்ளார்: நிச்சயமாக கண்ணியத்துக்குரியவரின் மகனான கண்ணியத்துக்குரியவரின் மகனான கண்ணியத்துக்குரியவரின் மகன்தான் கண்ணியத்துக்குரியவர். அவர் இறைவனின் உற்ற நண்பர் இப்ராஹீம் (அலை) அவர்களின் மகனான இஸ்ஹாக் (அலை) அவர்களின் மகனான யஅகூப் (அலை) அவர்களின் மகனான யூசுஃப் (அலை) அவரே ஆவார் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரளி) அறிவித்துள்ளார்கள். (நூல்: அஹ்மது)1

மூசா நபியைவிட இப்ராஹீம் நபி சிறப்புக்குரியவர் என்று பின்வருகின்ற நபிமொழி அறிவிக்கிறது. இப்ராஹீம் நபி உள்பட (மனிதப்) படைப்பினம் யாவும் என்னை விரும்புகின்ற நாளுக்காக நான் மூன்றாவதைப் பிற்படுத்திவைத்தேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக உபை பின் கஅப் (ரளி) அறிவித்துள்ளார்கள். (நூல்: முஸ்லிம்)2

இந்த இடம்தான், `மகாமே மஹ்மூத் ஆகும். அது பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்: நான் பெருமைக்காகச் சொல்லவில்லை. நான்தான் மறுமையில் ஆதமுடைய பிள்ளைகளின் தலைவர் ஆவேன். (நூல்: முஸ்லிம்) பின்னர், பரிந்துரையை நாடி மக்கள் ஒவ்வொரு நபியிடமும் வருவதைப் பற்றிக் கூறினார்கள். முதலில் ஆதி மனிதர் ஆதம் (அலை) அவர்களிடம் பரிந்துரையைத் தேடி மக்கள் வருவார்கள். பின்னர் நூஹ் (அலை); பின்னர் இப்ராஹீம் (அலை); பின்னர் மூசா (அலை); பின்னர் ஈசா (அலை); அனைவரும் (ஒரு காரணத்தைச் சொல்லி) அதிலிருந்து விலகிக்கொள்வார்கள். இறுதியில் அவர்கள் முஹம்மத் நபியவர்களிடம் வருவார்கள். அதற்கு (பரிந்துரைக்கு) நான்தான்; அதற்கு நான்தான் என்று அவர்கள் கூறுவார்கள்...

இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம், மனிதர்களுள் மிகவும் கண்ணியத்துக்குரியவர் யார்? என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், மனிதர்களுள் அல்லாஹ்வுக்கு அதிகமாக அஞ்சுபவர்தாம் என்று பதிலளித்தார்கள். மக்கள், இதைப் பற்றி உங்களிடம் நாங்கள் கேட்கவில்லை என்று கூறினர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அப்படியென்றால் மக்களிலேயே மிகவும் கண்ணியத்துக்குரியவர் அல்லாஹ்வின் உற்ற நண்பர் (இப்ராஹீம்) உடைய மகனான அல்லாஹ்வின் தூதர் (இஸ்ஹாக்) உடைய மகனான அல்லாஹ்வின் தூதர் யூசுஃப் அவர்கள்தாம் என்று கூறினார்கள்.

மக்கள், நாங்கள் இது பற்றியும் உங்களிடம் கேட்கவில்லை என்று கூறினார்கள். உடனே, நபி (ஸல்) அவர்கள், அப்படியென்றால், அரபியர்களின் (பரம்பரைகளான) சுரங்கங்களைப் பற்றி நீங்கள் என்னிடம் கேட்கிறீர்களா? என்று வினவினார்கள். அம்மக்கள், ஆம்! என்று கூறினார்கள். அறியாமைக் காலத்தில் அவர்களுள் சிறந்தவர்களாக இருந்தவர்கள் இஸ்லாத்தைத் தழுவிடும்போதும் சிறந்தவர்களாக இருப்பார்கள்; அவர்கள் மார்க்க ஞானத்தைப் பெற்றுக்கொண்டால் என்று பதிலளித்தார்கள் என அபூஹுரைரா (ரளி) அறிவித்துள்ளார்கள். (நூல்: புகாரீ)3

மேற்கண்ட இருவர் அறிவித்துள்ள ஹதீஸிலிருந்தும் அப்தஹ் பின் சுலைமான் அறிவித்துள்ள ஹதீஸிலிருந்தும் வேறோர் இடத்தில் புகாரீ இமாம் இந்த ஹதீஸை இணைத்துள்ளார். நசயீ இமாம், முஹம்மத் பின் பிஷ்ர் அறிவிக்கின்ற ஹதீஸ் மூலம் பதிவுசெய்துள்ளார். அவர்கள் நான்கு பேரும் உபைதுல்லாஹ் பின் உமர்-சயீத்-அபூஹுரைரா-நபி (ஸல்) அவர்கள்-என்ற வரிசையில் அறிவித்துள்ளார்கள் என்று இப்னு கஸீர் (ரஹ்) கூறியுள்ளார்.
அஹ்மத் (ரஹ்) கூறுகிறார்: நிச்சயமாக கண்ணியத்துக்குரியவரின் மகனான கண்ணியத்துக்குரியவரின் மகனான கண்ணியத்துக்குரியவரின் மகன்தான் கண்ணியத்துக்குரியவர். அவர் இறைவனின் உற்ற நண்பர் இப்ராஹீம் (அலை) அவர்களின் மகனான இஸ்ஹாக் (அலை) அவர்களின் மகனான யஅகூப் (அலை) அவர்களின் மகனான யூசுஃப் (அலை) அவரே ஆவார் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரளி) அறிவித்துள்ளார்கள். (நூல்: அஹ்மத்)4

நிச்சயமாக கண்ணியத்துக்குரியவரின் மகனான கண்ணியத்துக்குரியவரின் மகனான கண்ணியத்துக்குரியவரின் மகன்தான் கண்ணியத்துக்குரியவர். அவர் இப்ராஹீம் (அலை) அவர்களின் மகனான இஹாக் (அலை) அவர்களின் மகனான யஅகூப் (அலை) அவர்களின் மகனான யூசுஃப் (அலை) அவரே ஆவார் என இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு உமர் (ரளி) அறிவித்துள்ளார்கள். (நூல்: புகாரீ)

இமாம் அஹ்மத் (ரஹ்) அறிவிக்கின்ற நபிமொழி: (மறுமை நாளில்) மக்கள் செருப்பின்றி நிர்வாணிகளாக விருத்த சேதனம் செய்யப்படாதவர்களாக (எழுப்பப்பட்டு) ஒன்றுகூட்டப்படுவார்கள். (அவர்களுள்) முதன் முதலில் ஆடை அணிவிக்கப்படுபவர் இப்ராஹீம் நபி ஆவார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டுப் பின்வருகின்ற இறைவசனத்தை ஓதிக்காட்டினார்கள்: முதல் படைப்பை நாம் ஆரம்பித்தது போன்றே, (அந்நாளில்) அதனை மீட்டுவோம். (21: 104) இதனை இப்னு அப்பாஸ் (ரளி) அறிவித்துள்ளார்கள். (நூல்: முனத் அஹ்மத்)5

இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இச்சிறப்பு, நபி (ஸல்) அவர்களின் `மகாமே மஹ்மூத் உடைய சிறப்பை மேலோங்காது. அச்சிறப்பைக் கண்டு முந்தியவர்களும் பிந்தியவர்களும் பொறாமைகொள்வார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அஹ்மத் (ரஹ்) அறிவிக்கின்ற மற்றொரு நபிமொழி: ஒருவர் நபி (ஸல்) அவர்களை, மக்களுள் சிறந்தவரே! என்று அழைத்தார். (உடனே அதற்குப் பதிலளிக்கும்வண்ணம்) அவர் இப்ராஹீம் (அலை) ஆவார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அனஸ் பின் மாலிக் (ரளி) அறிவித்துள்ளார்கள்.6

நபி (ஸல்) அவர்கள் அவ்வாறு கூறியது, அவர்கள்தம் தந்தை மீது கொண்டிருந்த மதிப்பையும், அவர்களின் பணிவையும் காட்டுகிறது. மேலும் ஓரிடத்தில், நபி (ஸல்)அவர்கள் கூறியுள்ளார்கள்: (மற்ற) நபிமார்களைவிட என்னைச் சிறப்புப்படுத்தாதீர்கள்! மேலும் கூறினார்கள்: மூசா நபியைவிட என்னைச் சிறப்புப்படுத்தாதீர்கள்! ஏனென்றால் மக்கள் மறுமையில் (அந்நாளின் திடுக்கத்தால்) கீழே விழுந்துவிடுவார்கள். அவர்களுள் நான்தான் முதலில் தெளிவடைவேன். மூசா நபி அல்லாஹ்வின் சிம்மாசனத்தின் தூணை இறுக்கிப் பிடித்தவாறு நின்றுகொண்டிருப்பதைக் காண்பேன். அவர் எனக்குமுன் தெளிவடைந்தாரா அல்லது அவர் தூர்சினாய் மலையில் (இறைவனைச் சந்தித்த) நிகழ்ச்சியின்போது மூர்ச்சையாகி விழுந்ததற்குக் கிடைத்த கூலியா என்று எனக்குத் தெரியாது. (நூல்: புகாரீ)

மறுமை நாளில் நான்தான் ஆதமுடைய பிள்ளைகளின் தலைவர் ஆவேன் என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளதற்கு மேற்கூறப்பட்டவை முரணாக ஆகா. அதாவது, இப்ராஹீம் நபியின் சிறப்பு நபி (ஸல்) அவர்களின் சிறப்பை விஞ்சிவிடாது. அதேபோல் ஸஹீஹ் முஸ்லிம் நூலில் இடம்பெற்றுள்ள இந்த நபிமொழியும் முரணாக ஆகாது. இப்ராஹீம் நபி உள்பட (மனிதப்) படைப்பினம் யாவும் என்னை விரும்புகின்ற நாளுக்காக நான் மூன்றாவதைப் பிற்படுத்திவைத்தேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக உபை பின் கஅப் (ரளி) அவர்கள் அறிவித்துள்ளார்கள். (நூல்: முஸ்லிம்)

முஹம்மத் (ஸல்) அவர்களுக்குப்பின் இப்ராஹீம் நபியவர்கள் இறைத்தூதர்களுள் சிறப்பிற்குரியவராகவும் மனத்திடம் மிக்க ஐவருள் ஒருவராகவும் ஆகிவிட்டபோது, தொழுகின்ற ஒவ்வொருவரும் தம்முடைய இறுதி இருப்பில், `இந்தப் பிரார்த்தனையைச் செய்ய அல்லாஹ் ஏவியுள்ளான். இது புகாரீ, முஸ்லிம் இரண்டு நபிமொழித்தொகுப்புகளிலும் இடம்பெற் றுள்ளது.

கஅப் பின் உஜ்ரா (ரளி) கூறுகிறார்: இறைத்தூதரே! உங்கள் மீது சலாம் சொல்வதை நாங்கள் அறிந்துள்ளோம். (ஆனால்) நாங்கள் உம்மீது ஸலவாத்து சொல்வது எப்படி? என்று நாங்கள் கேட்டோம். அவர்கள் சொன்னார்கள்: அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லைத்த அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம். வபாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த்த அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம். இன்ன(க்)க ஹமீதும் மஜீத்- இறைவா! இப்ராஹீம் மீதும் இப்ராஹீமுடைய குடும்பத்தார் மீதும் நீ கருணைபுரிந்ததைப்போல் முஹம்மத்மீதும் முஹம்மதுடைய குடும்பத்தார்மீதும் நீ கருணைபுரிவாயாக! மேலும், இப்ராஹீம்மீதும் இப்ராஹீமுடைய குடும்பத்தார்மீதும் நீ அருள் வளம் பொழிந்ததைப்போல் முஹம்மத்மீதும் முஹம்மதுடைய குடும்பத்தார் மீதும் நீ அருள்வளம் பொழிவாயாக! நிச்சயமாக, நீயே புகழுக்குரியவனும் கண்ணியம் நிறைந்தவனும் ஆவாய் என்று சொல்லுங்கள் எனப் பதிலளித்தார்கள். (நூல்கள்: புகாரீ, முஸ்லிம்)

----------அடிக்குறிப்புகள்------------


1. இதை அஹ்மத் (ரஹ்) மட்டும் அறிவித்துள்ளார்.

2. ஒவ்வொரு நபிக்கும் மூன்று பிரார்த்தனைகளை உடனடியாக ஏற்றுக்கொள்வது அல்லாஹ்வின் வழக்கம். அந்த வழக்கப்படி முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு மூன்று பிரார்த்தனைகளை அங்கீகரித்துக்கொள்வதாக அல்லாஹ் வாக்களித்தான். அவற்றுள் இரண்டை அவர்கள் இந்தச் சமுதாயத் துக்காக இவ்வுலகிலேயே கேட்டுவிட்டார்கள். இன்னும் ஒன்றை, மறுமையில் தம் சமுதாயத்துக்குப் பரிந்துரை செய்வதற்காக விட்டுவைத்துள்ளார்கள்.

3. இவ்வாறே புகாரீ (ரஹ்) வேறு பல இடங்களில் அறிவித்துள்ளார். முஸ்லிம் (ரஹ்) அவர்களும் நசயீ (ரஹ்) அவர்களும் பல வழிகளில் இந்த நபிமொழியைப் பதிவு செய்துள்ளார்கள். பிறகு, புகாரீ (ரஹ்) கூறியுள்ளார்: அபூஉசாமா மற்றும் முஅதமிர் இருவரும் உபைதுல்லாஹ்-சயீத்-அபூஹுரைரா-நபி(ஸல்)அவர்கள்-என்ற வரிசையில் இந்த நபிமொழியை அறிவித்துள்ளனர்.

4. இதை அஹ்மத் (ரஹ்) மட்டும் அறிவித்துள்ளார்.

5. இதே ஹதீஸை புகாரீ (ரஹ்) மற்றும் முஸ்லிம் (ரஹ்) இருவரும் சுஃப்யான் அஸ்ஸவ்ரீ மற்றும் ஷுஅபா பின் அல்ஹஜ்ஜாஜ்- ஆகியோரிடமிருந்து பதிவுசெய்துள்ளார்கள். சுஃப்யான் அஸ்ஸவ்ரீ மற்றும் ஷுஅபா பின் அல்ஹஜ்ஜாஜ் இருவரும் முஃகைரா பின் அந்நுஅமான் அந்நஃகயீ அல்கூஃபி-சயீத் பின் ஜுபைர்-இப்னு அப்பாஸ் (ரளி)-என்ற வரிசையில் அறிவித்துள்ளார்கள்.

6. முஸ்லிம் (ரஹ்) இந்த நபிமொழியை அஸ்ஸவ்ரீ, அப்துல்லாஹ் பின் இத்ரீஸ், அலீ பின் முஸ்ஹிர், முஹம்மத் பின் ஃபுளைல் போன்றோரிடமிருந்து பதிவுசெய்துள்ளார்கள். இந்நால்வரும் அல்முக்த்தார் பின் ஃபுல்ஃபுல் என்பவரிடமிருந்து அறிவித்துள்ளனர்.

அரபி:           அல்பிதாயா வந்நிஹாயா (இமாம் இப்னு கஸீர்- ரஹ்) 
தமிழாக்கம்: நூ. அப்துல் ஹாதி பாகவி M.A., M.Phil.

வியாழன், 2 ஜூன், 2011

உழைப்பே உயர்வு


தர்மம் செய்தல் ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகிறது என்று நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டபோது, இறைத்தூதர்  அவர்களே! ஒருவர் (தர்மம் செய்வதற்கு எப்பொருளையும்) காணவில்லையாயின் (அவர் என்ன செய்வார்?) என வினவியதற்கு, அவர் தம் கைகளால் உழைத்து, தாமும் அதில் பலன் அடைந்து, தர்மமும் செய்யட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நபித் தோழர்கள், அவரால் அதுவும் இயலவில்லை என்றால்? என வினவியதும், அவர் நன்மையை (பிறருக்கு) ஏவட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது, அம்மனிதரால் அதுவும் இயலவில்லை என்றால்? என நபித்தோழர்கள் வினவவே, அவர் தீமை செய்வதை விட்டுத் தவிர்ந்து  கொள்ளட்டும். அதுவே தர்மமாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ மூசா அல்அஷ்அரீ (ரளி) அறிவிக்கிறார்கள்.- நூல்கள்:புகாரீ, முஸ்லிம்

இந்த நபிமொழியில் `தர்மம் செய்தல் ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும் என்பதும் `அது இயலாவிட்டால் தம் கைகளால் உழைத்துப் பொருளீட்டித் தாமும் உண்டு, பிறருக்கும் தர்மம் வழங்க வேண்டும் என்பதும் உழைப்பின் அவசியத்தையும் அதன் உயர்வையுமே குறிக்கின்றன. உழைப்புதான் ஒருவரின் வாழ்க்கைக்கான முன்னேற்றத்தின் அடிப்படை. 

உழைப்பு இல்லையேல் எவ்வளவு பெரிய செல்வந்தனும் வறுமையையே சந்திப்பான். இன்றைக்கு வெளிப்படையாகப் பார்த்தால் அனைவரும் உழைப்பதைப்போன்றே தெரியும். ஆனால் சிலரைத் தவிர பலரும் உழைக்கவில்லை என்பதே உண்மை. உழைப்பு என்றால் அதில் நேர்மையும் நாணயமும் இருக்க வேண்டும். தான் உழைத்துப் பிறருக்குக் கொடுக்க வேண்டும் என்ற உயர்ந்த எண்ணமும் இருக்க வேண்டும். மாறாக, இன்றைக்கு உழைப்பவர்கள் குறுக்கு வழியில் எவ்வாறு பொருளீட்டலாம் என்றே யோசித்துக்கொண்டிருக்கின்றனர். இவர்களால் தம் உழைப்பின் மூலம் ஒருபோதும் மனநிறைவு அடைய முடியாது. நம்முள் சிலர் உழைக்காம லேயே உண்ணலாம் என்று நினைத்துக்கொண்டிருக்கின்றனர். ஆம், பார்க்கும் இடமெல்லாம் பிச்சைக்காரர்கள். இவர்கள் உழைக்காமல் உடல் வளர்ப்பவர்கள். அன்று பசிக்காகப் பிச்சையெடுத்தவர்கள் இன்று அதையே ஒரு தொழிலாக ஆக்கிக்கொண்டுவிட்டார்கள். இப்படிப்பட்டவர்களும் மனநிறைவடைய முடியாது.

வேறு சிலர் நம்முள் இருக்கின்றார்கள். பிறரின் உழைப்பைச் சுரண்டி உண்பவர்கள். ஏழைகளிடம் பகல் முழுக்க வேலை வாங்கிக்கொண்டு அவர்களுக்குரிய ஊதியத்தை முழுமையாகக் கொடுக்காமல் இழுத்தடிப்பார்கள்; அல்லது அறவே கொடுக்காமல் அடிமைப்படுத்துவார்கள். இப்படிப்பட்டவர்கள் இறைவனின் கோபப்பார்வைக்குரியவர்கள் ஆவர். இதற்காகவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், உழைப்பாளியின் வியர்வை உலருமுன்னரே அவருடைய கூலியைக் கொடுத்துவிடுங்கள் என்று கூறிச்சென்றார்கள். 

உழைப்பாளியின் சிறப்பைப் பற்றிக் கூறும்போது, ஓர் உண்மையான, நம்பிக்கையான வியாபாரி நபிமார்களுடனும், வாய்மை யாளர்களுடனும், இறைப்பாதையில் உயிர்த்தியாகம் செய்தவர்களுடனும் இருப்பார் என்று கூறினார்கள். (நூல்: திர்மிதீ-1209)

இந்த அளவுக்கு ஒரு வியாபாரிக்குச் சிறப்பளிக்கப்படுவதன் காரணம் என்ன? ஒருவர் வியாபாரம் செய்கின்றபோது அவர் கொடுக்கவும் வாங்கவும் செய்கிறார். அதில் அவர் உண்மையாளராக இருக்க வேண்டும்; பொய் சொல்லக்கூடாது; நியாயமான முறையில் வியாபாரம் செய்ய வேண்டும். அளக்கின்றபோதும் நிறுக்கின்றபோதும் நேர்மையாகச் செயல்பட வேண்டும். இத்தனை சோதனைகளையும் மீறித்தான் அவர் வியாபாரம் செய்ய வேண்டும். எனவேதான் வியாபாரிகளுக்கு அந்தச் சிறப்பு.

ஆக, உழைப்புதான் ஒரு மனிதனை சுயமரியாதையோடும், கண்ணியத்தோடும் வாழ வைக்கிறது. அதுவே அவனை வாழ்வில் உயர்த்துகிறது. ஆனால் அது அல்லாஹ்வுக்குப் பிடித்தமான முறையிலும், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் காட்டிய வழிமுறைப்படியும் இருக்க வேண்டும். நாம் நன்றாக உழைத்து, நாமும் உண்டு, பிறருக்கும் கொடுத்து வாழப் பழகுவோம்! உழைப்பே உயர்வென முழங்குவோம்!