சனி, 14 டிசம்பர், 2013

சுத்தம் (சிறுகதை)
சனி, 23 நவம்பர், 2013

இனிய திசைகள் நவம்பர் இதழ் 2013

இனிய திசைகள் நவம்பர் இதழ் 
படிக்க இங்கே சொடுக்குக

புதன், 20 நவம்பர், 2013

புதன், 30 அக்டோபர், 2013

ஃபார்சீ படிக்க ஆசையா?

கண்ணியத்திற்கும் பெருமதிப்பிற்குமுரிய மௌலானா மௌலவி பி.எஸ்.பி. ஸைனுல் ஆபிதீன் பாகவி ஹள்ரத் அவர்கள் மண்ணடி, சாலை விநாயகர் சாலையில் அமைந்துள்ள லஜ்னத்துல் முஹ்சினீன் ட்ரஸ்ட் பள்ளிவாசலில் நவம்பர்-2013 முதல், மரணத் தறுவாயில் உள்ள ஃபார்சி மொழிக்கு உயிரூட்டும் விதமாக சென்னையிலுள்ள ஆலிம்களுக்கு அம்மொழியைப் போதிக்க முன்வந்துள்ளார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். அத்துடன் ஆன்மிகத்தில் பின்தங்கியுள்ள ஆலிம்கள் தம் உள்ளத்தின் நோய்களைப் பற்றித் தெரிந்து கொண்டு அதற்கேற்பத் தம் உள்ளத்தைத் தூய்மைப்படுத்திக்கொள்வதற்காகவும் இஹ்யாவுல் உலூமித்தீன் எனும் நூலின் ஒரு பகுதியான அஜாயிபுல் கல்ப் (உள்ளத்தின் இரகசியங்கள்) எனும் பாடத்தையும் நடத்தவுள்ளார்கள்.

எனவே இப்பொன்னான வாய்ப்பைச் சென்னையிலுள்ள ஆலிம்கள் நேரடியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

கீழே உள்ள விண்ணப்பப் படிவத்தை நிரப்பி, லஜ்னத்துல் முஹ்சினீன் பள்ளிவாசலில் மௌலவி ஃபக்ருத்தீன் பாஸில் பாகவி (8189883733) அவர்களிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு
மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி


செவ்வாய், 29 அக்டோபர், 2013

ஞாயிறு, 13 அக்டோபர், 2013

சனி, 12 அக்டோபர், 2013

செவ்வாய், 8 அக்டோபர், 2013

இக்லாஸ் பைத்துல் மால் ட்ரஸ்ட்தலைப்பு: திருக்குர்ஆன் விளக்க உரை
 (உள்ளடக்கம்: கடன் பெறுதல், கடனைத் திருப்பி ஒப்படைத்தல், பைத்துல் மால் நிர்வாகிகளின் பொறுப்பு உள்ளிட்டவை)

இடம்: செரியன் நகர், சென்னை-81
நாள்: 06 10 2013சனி, 28 செப்டம்பர், 2013

சனி, 24 ஆகஸ்ட், 2013

93 wazzhuhaa

வியாழன், 22 ஆகஸ்ட், 2013

இறைவழி மருத்துவம்வழங்குபவர்

டாக்டர் ஆர். கனக சபாபதி

உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனுக்கும் ஏதாவது ஒரு நோய் ஏற்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது. இருப்பினும் அதைக் கொடுப்பதும் அதை எடுப்பதும் ஏக இறைவன் அல்லாஹ் ஒருவனே. அதை விட்டுவிட்டு, ஒரு நோய் வந்துவிட்டால் மனிதன் சூட்டியுள்ள பெயரைக் கேட்டே பயந்துபோய் அந்நோய் தீராது என்று தன் மனதில் ஆழமாகப் பதியவைத்துக்கொள்கிறான். அதனால்தான் அவனுடைய நோய் தீருவதே இல்லை. சர்க்கரை நோய், இரத்தக்கொதிப்பு, மாரடைப்பு, புற்றுநோய் உள்ளிட்ட எத்தனையோ நோய்கள் தீராத நோய்களாக இருக்கக் காரணம் மனிதனின் எண்ணமே. எனவே எந்நோய் வந்தாலும், இது குணமளிக்கப்படக்கூடியதுதான் என்றே எண்ண வேண்டும். மாறாக, இது தீராத நோய் என்று எண்ணினால் அவனுடைய எண்ணப்படியே அது நடைபெறும்.

எண்ணம்போல் வாழ்வு என்று தமிழ்மொழி கூறுகிறது. செயல்கள் யாவும் எண்ணங்களை அடிப்படையாகக் கொண்டவையே என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். எனவே நம் எண்ணத்தை உயர்ந்த எண்ணமாக ஆக்கிக்கொள்வோம்.  அல்லாஹ்வின் அருளால் ஆரோக்கியமாக வாழ்வோம்.

இறைவழி மருத்துவம்

திங்கள், 12 ஆகஸ்ட், 2013

இனிய திசைகள் மாத இதழ் ஆகஸ்ட் 2013

இனிய திசைகள் மாத இதழ் ஆகஸ்ட் 2013

என்னுடைய ஆதார் அட்டை


இறைவனின் படைப்புத் திட்டம்


உர்தூ: மௌலானா வஹீதுத்தீன் கான்
தமிழாக்கம்: மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி (பிஎச்.டி)

மேற்கத்தியத் தத்துவஞானி ஒருவர் இவ்வாறு எழுதுகிறார்: “இந்த விசாலமான படைப்பினத்தில் மனிதன் ஒரு தனிப்படைப்பு என்று தோன்றுகிறது. மனிதன் இந்த உலகத்திற்காகப் படைக்கப்படவில்லை. இந்த உலகமும் இந்த மனிதனுக்காகப் படைக்கப்படவில்லை என்று உணர முடிகிறது. மனிதனும் இவ்வுலகிலுள்ள படைப்பினங்களும் ஒன்றுக்கொன்று முரணாக உள்ளதாகவே தெரிகிறது. மனிதன் வரையறையற்ற திறமைகளோடு படைக்கப்பட்டுள்ளான். ஆனால் அவனோ இவ்வுலகில் தன்னுடைய குறிப்பிட்ட திறமைகளை மட்டுமே பயன்படுத்துகின்றான். மனிதன் தன் இயல்புக்கேற்ப நிரந்தரமாக இவ்வுலகில் வாழ நினைக்கிறான். ஆனால் மரணமோ அவனைக் கேட்காமலேயே மிகத் துரிதமாக வந்து, ஒருதலைப்பட்சமாகத் தீர்ப்புசெய்து அவனுக்கு முடிவுரை எழுதிவிடுகிறது. மனிதன் கடலளவு விருப்பங்களைத் தன் மனதினுள் சுமந்திருக்கின்றான். ஆனால் அவனுடைய இந்த விருப்பங்களெல்லாம் எப்போதும் நிறைவேறுவதே இல்லை. ஒவ்வொரு மனிதனின் மூளைக்குள்ளும் கனவுகளின் உலகம் படர்ந்திருக்கிறது. ஆனால் அந்தக் கனவுகளுக்கான விளக்கம் பெறப்படுவதே இல்லை. இதில் சிறியவர், பெரியவர் என்ற பாகுபாடு இல்லை. ”

மேற்கண்ட தத்துவஞானியின் கூற்றிலிருந்து, மனிதன் தனக்கெனப் படைக்கப்படாத உலகத்திற்கு வந்திருக்கிறான் என்பதை உணரமுடிகிறது. மனிதனுக்கும் இவ்வுலகத்திற்கும் இத்தகைய முரண்பாடு ஏன்? இதற்கான விடையைத் தேட, நாம் இறைவனின் படைப்புத் திட்டத்தைச் சற்று உற்றுநோக்க வேண்டும். இவ்வினா தோன்றியதற்கான அடிப்படையே இறைவனின் படைப்புத் திட்டத்தை அறியாமல் போனதால்தான். மேலும் இறைவனின் படைப்புத் திட்டத்தை நன்றாக விளங்கினால்தான் இதற்கான விடையை நாம் தெளிவாக விளங்கிக்கொள்ள முடியும்.

இறைவன் மனிதனை ஒரு முக்கிய நோக்கத்திற்காகவே படைத்துள்ளான். அந்த முக்கிய நோக்கத்தை அறிவது மனிதனுக்கு அவசியமாகும். அதாவது, ஓர் இயந்திரத்தின் முழுமையான இயக்கம் அதை உண்டாக்கிய பொறியாளரின் நோக்கத்தை முழுமையாக அறியும்போதுதான் தெரியவரும். அதை உருவாக்கிய அந்தப் பொறியாளரைத் தவிர வேறு எவரும் அந்த இயந்திரத்தின் செயல்பாடுகளை முழுமையாக விளக்கிக் கூறமுடியாது. அதைப்போலவே மனிதனைப் படைத்த இறைவனின் நோக்கத்தை முழுமையாக அறியாமல் மனிதன் தன்னைப் பற்றி முழுமையாக அறிந்துகொள்ள முடியாது. இதுதான் அடிப்படையாகும்.

மனிதனைப் படைத்த இறைவன் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காகவே அவனைப் படைத்துள்ளான். அந்த நோக்கம் இதுதான்: அதாவது தற்போது இருக்கின்ற நிலையற்ற உலகில்  மனிதன் ஒரு குறிப்பிட்ட காலஅளவுதான் வாழ்வான். அதற்குப்பிறகு அவன் தன்னுடைய செயல்பாடுகளுக்கேற்ப நிலையான உலகில் வாழ்வதற்கான வாய்ப்பைப் பெறுகிறான். அதற்குப் பெயர்தான் சொர்க்கம்.

தற்போது காணப்படுகின்ற உலகம் ஒரு சோதனைக்கூடம் ஆகும். இங்கு எந்தப் பெண்ணும் அல்லது எந்த ஆணும் சொர்க்கத்திற்குத் தகுதிபெற இரண்டு முக்கிய விசயங்கள் உள்ளன. அவை: 1. உண்மையை ஏற்றுக்கொள்ளுதல், 2. ஒழுக்கமாக வாழ்தல். எந்த ஆண் அல்லது பெண் இந்தச் சோதனையில் முழுமையாக இறங்கி வெற்றிபெற்றாரோ அவருக்கு நிலையான உலகிலுள்ள சொர்க்கத்தில் இடம் கிடைக்கும். எவர் இந்தச் சோதனையில் தோற்றுப்போகின்றாரோ அவர் என்றென்றும் நரகத்தில் கிடப்பார்.

நிகழ் உலகில் மனிதன் தனக்குத்தானே முழுமையான விடுதலையைப் பெற்று வாழ்கிறான். ஆனால் இது உண்மையான விடுதலை இல்லை. மாறாக, இது ஒவ்வொருவருக்கும் சோதனைக்கான ஒரு தேர்வுக்கூடம் ஆகும். அதில் அவன் எவ்விதத் தூண்டுதலும் இன்றி உண்மையை (உண்மையான இறைவனை) ஏற்றுக்கொள்ள வேண்டும். எந்த நிர்ப்பந்தமுமின்றி  உண்மைக்குமுன் அவன் தலைகுனிய வேண்டும். அவன் தன் விடுதலை மூலம் தன் சுய விருப்பத்தால் அந்த உண்மையைப் பின்பற்றச் செய்ய வேண்டும். உண்மைக்குமுன் தலைகுனிவது திண்ணமாக எந்த மனிதனுக்கும் மிகப்பெரும் தியாகம்தான். உண்மையை ஏற்றுக்கொள்வதன் இன்னொரு கோணம் என்னவெனில், அவன் தன்னை மற்றவருக்குமுன் சிறியவனாக ஆக்கிக்கொள்வதாகும். எனினும் அதுதான் அந்த மனிதனை மிகப்பெரும் உயர்வுக்கு இட்டுச் செல்லக்கூடியதாகும். அதுதான் அவனைச் சொர்க்கத்தின் வாசல்வரை அடையச் செய்யக்கூடியதாகும்.

இந்த அடிப்படையின் மற்றோர் அங்கம்தான் ஒழுக்கமான வாழ்க்கை ஆகும். மனிதனுடைய பண்பு இதன் அடிப்படையில்தான் உருவாகிறது. கோபம், பழிவாங்குதல், பொறாமை, வெறுப்பு, சுயநலம் ஆகியவை அவனுள் உள்ளவை. இவை அவனுடைய எதிர்மறையான பண்புகள் ஆகும். இவை ஒரு மனிதனுக்குள் இருந்துகொண்டு அவனுடைய தோற்றத்தை வெளிக்காட்டுகின்றன. எனினும்  மனிதன் இவற்றில் ஓர் ஒழுங்கைக் கடைப்பிடிக்க வேண்டும். அவன் தன்னுடைய வெளிப்படையான அசைவுகளின்மூலம் தன்னுடைய பண்பை உண்டாக்கிக்கொள்ளாமல், சுய ஒழுக்கத்தின் மூலம் தன் பண்புகளை நிர்ணயித்துக்கொள்ள வேண்டும். அவன் தனக்குத்தானே முடிவுசெய்து தன் தோற்றத்தை ஓர் உயர்ந்த ஒழுங்கமைப்பில் வடிவமைத்துக்கொள்ள வேண்டும். இதைத்தான் சொர்க்கத்திற்கான பண்பு என்று கூறப்படுகிறது.

படைப்பின் முக்கிய நோக்கம் எதற்காக மனிதன் படைக்கப்பட்டுள்ளான் என்பதில்தான் உள்ளது. மனிதன் இவ்வுலகிலுள்ள எல்லாப் படைப்பினங்களையும்விட மிக உயர்ந்த படைப்பு ஆவான். மனிதனுடைய தோற்றமே ஓர் அற்புதமான தோற்றமாகும். அவனுக்கு இணையான படைப்பு இப்பரந்த வையகத்தில் எங்கும் காணப்படாது. பொதுவாக மனிதனை மிக உயர்ந்த படைப்பு என்று கூறுவது வழக்கம். அதாவது அவன் உலகிலுள்ள எல்லாப் படைப்பிலும் மிகச் சிறந்த, ஓர் அர்த்தமுள்ள படைப்பினம் ஆவான்.

சொர்க்கம் என்பது மனிதன் எங்கு தனக்குரிய முழுமையான வாழ்விடத்தைப் பெறமுடியுமோ அத்தகைய இடமாகும். மனிதன் எவ்வாறு சிந்திக்க வேண்டும் என்று கருதினானோ அவ்வாறு சிந்திக்கின்ற இடமாகும். எந்தெந்தப் பொருள்களையெல்லாம் பார்க்க வேண்டும் என்று ஆசைகொண்டானோ அந்தப் பொருள்களையெல்லாம் காணுமிடமாகும். எந்தெந்த ஓசைகளெல்லாம் அவனுக்கு இனிமை தருமோ அத்தகைய ஓசைகளையெல்லாம் கேட்டு இன்புறும் இடமாகும். எதையெல்லாம் தொட்டு இன்புற நினைத்தானோ அவற்றையெல்லாம் தொட்டு இன்புறும் இடமாகும். எத்தகைய மனிதர்களோடு தோழமை கொண்டு வாழ்வின் எல்லைவரை அர்த்தமுள்ளதாக ஆக்க விரும்பினானோ அத்தகைய மனிதர்களின் தோழமையைப் பெறும் இடமாகும். எத்தகைய காற்று அவனைத் தாலாட்டி, இனிமையான தூக்கத்தைக் கொடுக்குமோ அத்தகைய தென்றல் காற்று வீசுகின்ற இடமாகும். எப்பொருள்களை அவன் சாப்பிட்டால் என்றென்றும் சாப்பிடத் தூண்டுமோ அத்தகைய சுவைமிகு உணவுகள் கிடைக்குமிடம். எத்தகைய பானங்களை அவன் அருந்த விரும்பி, தன் கற்பனையில் மட்டும் உருவகப்படுத்தி வைத்திருந்தானோ அத்தகைய அருஞ்சுவை மிக்க பானங்கள் கிடைக்குமிடம்.

இந்த நிலையான உலகத்திற்குப் பெயர்தான் சொர்க்கமாகும். எந்தச் சொர்க்கத்தை அடைய வேண்டுமென்ற ஆசை ஒவ்வோர் ஆண்- பெண் உள்ளத்திலும் பரவியிருக்கிறதோ அத்தகைய சொர்க்கம் இதுதான். எங்கு மனிதனின் ஆளுமை முழுமையான விதத்தில் நிறைவேற்றப்படுமோ அத்தகைய சொர்க்கம் இதுதான். மனிதன் தன்னுடைய முழுமையான உருவத்தோடும் வடிவத்தோடும் அந்தச் சொர்க்கத்தைத்தான் தேடிக்கொண்டிருக்கிறான். சொர்க்கமும் தன்னுடைய முழுமையான தோற்றத்தோடு இத்தகைய மனிதனைத்தான் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறது. மனிதனும் சொர்க்கமும் ஒருவரையொருவர் சந்திக்கக்கூடிய நாள் அதிவிரைவில் வரப்போகிறது. அப்போது மனிதனும் சொர்க்கமும் தமக்காவே படைக்கப்பட்ட உரிய இணையை-ஜோடியைப் பெற்றுக்கொண்டதை உணர்வர்.

Nandri: Iniya Thisaigal Monthly-August 2013
==================

சனி, 27 ஜூலை, 2013

நபிகளார் நவின்ற மூன்றுகள்... தொடர்-3


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்கள் மனங்களில் எளிதாகப் பதிகின்ற வகையில் மும்மூன்றாகக் கூறிய அறிவுரைகள் பல உள்ளன. அவற்றுள் ஒன்று: மூன்று மஸ்ஜிதுகளுக்குத் தவிர (நன்மையைக் கருதிப்) பயணம் மேற்கொள்ளப்படாது. 1. மஸ்ஜிதுல் ஹராம், 2. மஸ்ஜிதுல் அக்ஸா, 3. என்னுடைய இந்த மஸ்ஜித் (மஸ்ஜிதுந் நபவீ) என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரீ: 1122)

மக்கள் நன்மையைக் கருதி மஸ்ஜிதுகளுக்குச் செல்ல நாடினால் மேற்கண்ட இந்த மூன்று மஸ்ஜிதுகளுக்குச் செல்லலாம். இவை தவிர மற்ற மஸ்ஜிதுகளுக்கு நன்மையை நாடிச் செல்லக்கூடாது என்பதே நபிகளாரின் கூற்றிலிருந்து நாம் விளங்கிக்கொள்கிறோம். ஏனெனில் இந்த மஸ்ஜிதுகளுக்குத்தான் மற்ற மஸ்ஜிதுகளைவிட அதிகமான நன்மையைப் பெற்றுத்தருகின்ற சிறப்பு உள்ளது. நபிகள் நாயகம் (ஸல்)  அவர்கள் கூறியுள்ள மற்றொரு நபிமொழி அதற்கு ஆதாரமாக உள்ளது.

மஸ்ஜிதுல் ஹராமில் தொழுகின்ற ஒரு தொழுகை மற்ற மஸ்ஜிதுகளில் தொழுவதைவிட ஒரு இலட்சம் மடங்கு சிறப்புடையதாகும். மதீனாவிலுள்ள (என்னுடைய) மஸ்ஜிதில் தொழுகின்ற ஒரு தொழுகை மற்ற மஸ்ஜிதுகளில் தொழுவதைவிட ஆயிரம் மடங்கு சிறப்புடையதாகும். பைத்துல் முகத்தசில் தொழுகின்ற ஒரு தொழுகை மற்ற மஸ்ஜிதுகளில் தொழுவதைவிட ஐந்நூறு மடங்கு சிறப்புடையதாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (நூல்கள்: தப்ரானீ, இப்னு குஸைமா)

இந்த நபிமொழியின் அடிப்படையில்தான் மக்கள் பலர் உம்ராவுக்கும் ஹஜ்ஜுக்கும் நன்மையை நாடிச் செல்கின்றார்கள். அதன்பின் மஸ்ஜிதுன் நபவீக்குச் செல்கிறார்கள். அங்கு சில நாள்கள் தங்கித் தொழுதுவிட்டு வருகின்றார்கள். அதையும் தாண்டி, அல்லாஹ்வின் சான்றுகளைக் காணப்புறப்பட்டவர்கள் மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கும் சென்றுவருகின்றார்கள். ஆக, இன்றைக்கு இம்மூன்று பள்ளிகளுக்குச் செல்வது எளிதாகிவிட்டது. அத்தகையோர் நன்மையை நாடி இம்மூன்று பள்ளிவாசல்களுக்குச் செல்லலாம். இவை தவிர வேற்று ஊர்களுக்கோ மஸ்ஜிதுகளுக்கோ நன்மையை நாடிச் செல்ல வேண்டிய அவசியமோ கடமையோ இல்லை என்று விளங்க முடிகிறது.

மூன்று பேரைவிட்டு எழுதுகோல்  உயர்த்தப்பட்டுவிட்டது. 1. தூங்குபவன் விழித்தெழுகின்ற வரை, 2. சிறுவன் பெரியவனாகின்ற வரை, 3. பைத்தியக்காரன் சுயசிந்தனையுடையவனாக ஆகும் வரை- என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (நூல்: திர்மிதீ: 1343)

அதாவது தூங்குபவன், சிறுவன், சுயசிந்தனை இழந்தவன்-ஆகிய மூவரும் செய்கின்ற  செயல்பாடுகள் தம் சுயகட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டதாகும். தம் சுய சிந்தனையை இழந்து ஒருவன் செய்யும் செயல் சுயசிந்தனையோடு செய்பவனுடைய செயலோடு ஒப்பிடப்பட மாட்டாது. ஒரு சிறுவன், அவன்தன் பருவ வயதை அடைகின்ற வரை அவன் செய்கின்ற சின்னச் சின்னத் தவறுகளும் பிழைகளும் மன்னிக்கப்பட்டுவிடுகின்றன. தொழுகை அவன்மீது கடமையாவதில்லை. எனவே தொழுகையை விட்டதற்கான தண்டனைக்கு ஆளாக மாட்டான். இதுவெல்லாம் பருவ வயதை அடைகின்ற வரைதான். இமாம் அபூஹனீஃபா (ரஹ்) அவர்களைப் பொறுத்த வரை 14 வயது வரை. அவன் 15 வயதை அடைந்துவிட்டால் முற்றிலும் வளர்ச்சியடைந்த, சுயசிந்தனையோடு  செயல்படுகின்ற ஆற்றலைப் பெற்றுவிடுகின்றான். அதன்பின்னர் அவன் செய்கின்ற ஒவ்வொரு செயலுக்கும் அவனே  பொறுப்பாளியாவான். நன்மை செய்தால்  நன்மைக்கும் தீமை செய்தால் தீமைக்கும் அவனே பொறுப்பாளியாவான்.

இன்றைய இந்தியச் சட்டப்படி 17 வயது வரை பால்ய பருவமாகவும் 18 வயதை அடைந்தால்  வாலிபப் பருவமாகவும் கணிக்கப்படுகிறது. அதாவது, 18 வயதை அடைந்தால்தான் அவன் சட்ட வரம்புக்குள் வருவான். அது வரை அவன் சிறுவனாகவே கருதப்படுவான். ஆகவே 15 வயது முதல் 17 வயது வரை உள்ள மூன்றாண்டு காலங்களில் அவன் செய்கின்ற குற்றச் செயல்களுக்கு அவனைப் பொறுப்பாளியாக்குவதில்லை. ஆனால் அப்பருவத்தில் அவன் தன்னை அறிந்தேதான் பாலியல் குற்றங்களிலும் கொலைக் குற்றங்களிலும் ஈடுபடுகின்றான் என்பதை நாம் விளங்கிக்கொள்ளலாம். சட்டத்தில் உள்ள இந்த ஓட்டையைப் பயன்படுத்தி, குறுமதி கொண்ட சிலர் சிறுவர்களைப் பயன்படுத்திச் சில குற்றச் செயல்களைச் செய்யவைக்கின்றார்கள் என்பதும் உய்த்துணர வேண்டிய உண்மை. எனவே இஸ்லாமியச் சட்டப்படி 15 வயதை அடைந்துவிட்ட ஒருவன் பிற மனிதர்களைப்போல் சட்ட வரம்புக்குள் வந்துவிடுகின்றான் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

உறங்குபவன் இறந்தவனில் பாதி என்பார்கள். உறங்குபவன் தன் சுயகட்டுப்பாட்டை இழந்துவிடுகின்றான். எனவே அவன் தன் உறக்கத்தில் ஏதேனும் தவறுகள் நிகழ்வதற்குக் காரணமாகிவிட்டால், அவன் தவறாகச் செய்துவிட்ட சட்ட வரம்புக்குள் வருகின்றான். சான்றாக, ஒருவன் உறங்கிக்கொண்டிருக்கும் போது உருண்டு அல்லது மேலிருந்து கீழே படுத்திருப்பவன்மீது விழுந்ததால், அவன் இறந்துவிட்டான் என்றால், அவன் மற்றவர்களைப்போல் பழிக்குப் பழி வாங்கப்படமாட்டான். மாறாக, தவறுதலாகச் செய்துவிட்ட சட்டவரம்புக்குள் வருவான். அதன்படி அவன் இறந்தவனின் குடும்பத்தாருக்கு இழப்பீடு கொடுப்பான்.

இரண்டாம் கலீஃபா உமர் (ரளி) அவர்களின் ஆட்சிக் காலத்தில், சுயநினைவிழந்த பெண்ணொருத்தி விபச்சாரம் செய்துவிட்டதாகக் கூறி அவர்களின் முன்னிலையில் கொண்டுவரப்பட்டாள். அப்போது உமர் (ரளி) அவர்கள் (அங்கிருந்த) மக்களிடம் ஆலோசனை செய்துவிட்டு, அவளைக் கல்லால் அடித்துக்கொல்லுமாறு கட்டளையிட்டார்கள். எனவே அவர்கள் அவளைக் கல்லால் அடிப்பதற்காகக் கொண்டு சென்றார்கள். அப்போது அவர்கள் அலீ (ரளி) அவர்களைக் கடந்து       அப்பெண்ணைக் கொண்டுசென்றார்கள். அலீ (ரளி) அவர்கள், என்ன விஷயம்? என்று வினவினார்கள்.  இன்ன குலத்தைச் சார்ந்த இவள் பைத்தியக்காரி. இவள் விபச்சாரம் செய்துவிட்டாள். எனவே உமர் (ரளி) அவர்கள் இவளைக் கல்லால் அடித்துக்கொல்லுமாறு எங்களை ஏவியுள்ளார்கள் என்று கூறினார்கள். அப்போது அலீ (ரளி) அவர்கள், இவளைத் திரும்பக் கொண்டு செல்லுங்கள் என்று கூறி, அவர்களுடன் அலீ (ரளி) அவர்களும் சென்று, அமீருல் முஃமினீன் அவர்களே! உங்களுக்குத் தெரியாதா? மூன்று பேரைவிட்டு எழுதுகோல் உயர்த்தப்பட்டுவிட்டது. சுயநினைவிழந்தவன் தெளிவடைகின்ற வரை, தூங்குபவன் விழித்தெழுகின்ற வரை, சிறுவன் பருவ வயதை அடைகின்ற வரை. அதனைக் கேட்ட உமர் (ரளி) அவர்கள், ஆம் என்று கூறினார்கள்.  இவள் சுயநினைவற்றவளாக இருப்பதுடனே இவளுடைய நிலை என்ன? என்று அலீ (ரளி) அவர்கள் வினவ, உமர் (ரளி) அவர்கள், (அவளுக்கு) ஒன்றுமில்லை என்று கூறினார்கள். அப்படியானால் அவளை விட்டுவிடுங்கள் என்று கூறினார்கள். எனவே உமர் (ரளி) அவர்கள் அவளை விட்டுவிட்டார்கள். பின்னர் அல்லாஹு அக்பர் என்று கூறினார்கள்.  (அபூதாவூது: 3823)

ஆக, மூன்றுபேர் செய்யும் செயல்பாடுகள் பிறருக்கு வழங்கப்படுகின்ற சட்டவரம்புக்குள் வராது என்பதையே மேற்கண்ட ஹதீஸ் நமக்கு உணர்த்துகிறது.

மூன்று விசயங்களை வினையாகச் செய்தாலும் வினைதான். விளையாட்டாகச் செய்தாலும் வினைதான். 1. திருமணம், 2. தலாக்-மணவிலக்கு, 3. மனைவியைத் திரும்ப அழைத்துக்கொள்ளல்-என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  (நூல்: இப்னுமாஜா: 2029)

அதாவது, ஒருத்தி தன் உறவுக்காரனிடம் அன்பாகப் பேசிக்கொண்டிருக்கும்போது, நீ என்னைத் திருமணம் செய்துகொள்கின்றாயா மச்சான்? என்று வினவ, அவனும் நான் உன்னைத் திருமணம் செய்துகொள்கிறேன் என்று கூறிவிட்டால் அவ்விருவருக்கும் திருமணம் நடைபெற்றுவிடும். அதன்பின் நான் விளையாட்டுக்குத்தானே சொன்னேன் என்று சொல்ல முடியாது. எனவே இதுபோன்ற பேச்சுக்களைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

அதேபோல் ஒருவன் தன் மனைவியைப் பார்த்து, நீ தலாக் என்று கூறிவிட்டால் அவள் அப்போதே தலாக் ஆகிவிடுவாள். நான் விளையாட்டுக்குத்தான் சொன்னேன் என்று கூறினாலும் அவ்விருவருக்கிடையே தலாக் நிகழ்ந்துவிடும். இருப்பினும் மீண்டும் சேர்ந்துகொள்ளுதல் என்ற அடிப்படையில் இருவரும் சேர்ந்து வாழலாம். ஆனால் இவ்வாறு அவன் மூன்றாம் தடவை கூறிவிட்டால் அவ்விருவருக்கிடையே முற்றிலும் பிரிவு ஏற்பட்டுவிடும். பிறகு அவர்கள் இருவரும் சேர்ந்துவாழ இயலாது. அவளை மற்றொருவனுக்குத் திருமணம் செய்துகொடுத்து, அவன் சுயமாக அவளைத்  தலாக் விட்டால்தான் முதல் கணவன் அப்பெண்ணை மீண்டும் திருமணம் செய்துகொள்ள முடியும். எனவே இதுபோன்ற விபரீத விளையாட்டுகளைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

அதுபோலவே, ஏற்கெனவே தலாக் விட்டுவிட்ட தன் மனைவியை, நான் உன்னைத் திரும்ப அழைத்துக்கொண்டுவிட்டேன் என்று விளையாட்டாகக் கூறினாலும் அவர்கள் இருவரிடையே திருமணப் பந்தம் மீண்டும் ஏற்பட்டுவிடும். பின்னர் அவர்கள் இருவரும் சேர்ந்து வாழலாம். எனவே  நாம் பயன்படுத்துகின்ற வார்த்தைகளை நிதானத்தோடு பயன்படுத்த வேண்டும் என்பதை நினைவில் கொள்வோம்.========================


திங்கள், 22 ஜூலை, 2013

மறதி நல்லது (சிறுகதை)


அன்றொரு நாள் அன்வர் தன்னுடைய தம்பி ராஸிக்கிற்குப் பெண் பார்க்கச் சென்றிருந்தான். தம்பியும் கூடவே சென்றிருந்தான். பெண் நல்ல முறையில் படித்துப் பட்டம் பெற்றுள்ளதோடு, ஓர் இஸ்லாமியப் பள்ளிக்கூடத்தில் தலைமையாசிரியையாகவும் பணியாற்றி வருகிறாள். இஸ்லாமிய மார்க்கப் பற்று மிக்கவள். பணிவும்  அன்பும் நிறைந்தவள். இஸ்லாமிய முறைப்படி நடந்த பேச்சு வார்த்தையில் இருவீட்டாருக்கும் திருப்தி ஏற்படவே மகிழ்ச்சியாகப் பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது அங்கு வந்திருந்த கல்லூரிப் பேராசிரியரிடம் தன் படிப்பைப் பற்றியும் அதற்கு உதவி செய்தவர்கள் பற்றியும் பேசிக்கொண்டிருந்தான் ராஸிக்.

அவனுக்கு மூன்று அண்ணன்கள். அவர்களுள் கடைசி அண்ணன்தான் அன்வர். அவனுடைய படிப்புக்கும் அன்வருடைய படிப்புக்கும் மூத்த இரண்டு அண்ணன்கள்தாம் உதவிசெய்தனர். நாளடைவில் அன்வர் படித்து முடித்து ஒரு பணியில் சேர்ந்து சம்பாதிக்கத் தொடங்கிவிட்டான். அப்போது ராஸிக், “பி.எஸ்ஸி. வரைக்கும் ரெண்டு அண்ணன்களும் நெறைய உதவி செய்துட்டாங்க. இப்ப நீங்க எம்.எஸ்ஸிக்கு உதவி செய்யுங்க” என்று உதவி கேட்டான். அன்வர் சரியென ஒத்துக்கொண்டான்.

ராஸிக் தன் கல்லூரியில் உள்ள விடுதியில் தங்கிப் படித்து வந்தான். மாதந்தோறும் அன்வர் முகவரிக்குத்தான் கல்லூரி பில் வரும். ஆயிரத்து ஐந்நூறு ரூபாய்க்கான வரைவோலை எடுத்து கல்லூரி முகவரிக்கு அனுப்பிவிடுவான். இவ்வாறு சில மாதங்கள் தொடர்ந்தது. பின்னர் அன்வர் தன் மூத்த அண்ணனுக்கே பணத்தை அனுப்பி, நீங்களே கல்லூரிக்குப் பணத்தைக் கட்டிவிடுங்கள் என்று கூறினான். அதன்படி அவரே கட்டிவந்தாலும் எம்எஸ்ஸி முடியும் வரை உதவி செய்தவன்  அன்வர்தான். ஆனால், அன்று ராஸிக் பேசிக்கொண்டிருந்தபோது, “என் இரண்டு அண்ணன்கள்தாம் என்னைப் படிக்க வைத்தனர்” என்று கூறினான்.

உண்மைதான். அவர்கள் இரண்டு பேரும் நிறைய செலவு செய்திருக்கிறார்கள். அவர்கள் அளவுக்கு  அன்வர் செய்யாவிட்டாலும், அவனால் முடிந்த அளவுக்கு அவன் கொடுத்துக்கொண்டுதான் இருந்தான். ஏன், இன்றைக்குத் திருமணம் வரைக்கும் முயற்சி செய்தது யார்? அன்வர்தானே? இதை அவன் மறுக்க முடியுமா?

அவன் எம்.எஸ்ஸி. முடித்துவிட்டுச் சென்னைக்கு வேலை தேடி வந்தபோது அவனுக்கு இருப்பிடம் கொடுத்து, செல்போனும் வாங்கிக் கொடுத்தவன் அன்வர்தான். தான் பணிசெய்த இடத்திலேயே தன் தம்பி ராஸிக்கைத் தங்க வைத்து, தன்னால் இயன்ற உதவிகளைச் செய்தான். சில ஆண்டுகளுக்குப் பிறகு அவன் மேற்படிப்பு படிக்க விரும்பினான். தன் மூத்த அண்ணனிடம்  பண உதவி பெற்று பி.எட் படித்தான். பிறகு எம்.எட். படித்தான். பிறகும் படிக்க வேண்டும் என்று  கூறி அன்வரிடம் பண உதவி கேட்டான். அவன் ஒருவரிடம் கடன் பெற்று எட்டாயிரம் ரூபாய் கொடுத்து, மேற்படிப்புக்கு ஆர்வமூட்டினான்.

இத்தனையும் செய்து, இன்றைக்கு ஒரு நல்ல இடத்தில் பெண்பார்த்துக் கொடுத்து, தன் தம்பி நல்லா வாழ வேண்டும் என்று நினைக்கின்ற தன்னை அவன் மறந்துவிட்டானே என்றெண்ணி  அவன் மனம் குமுறியது. இருப்பினும் அதையெல்லாம் காட்டிக்கொள்ளாமல் அன்வர் இயல்பாகப் பேசிவிட்டு, குறிப்பிட்ட நாளில் நிச்சயதார்த்தம் வைத்துக்கொள்ளலாம் என்று கூறிக்கொண்டே விடைபெற்றான்.

இந்தச் செய்தியைக் கேள்விப்பட்ட அன்வருடைய சின்னம்மா மகிழ்ச்சி கொள்ளவில்லை. ஏனென்றால் அவர் வேறொரு பக்கம்  பெண் பார்த்துக்கொண்டிருந்தார். இறுதியில் சென்னையில் பார்த்த பெண்ணையே முடிவுசெய்வதாகக் கூறி, நிச்சயதார்த்தம் செய்வதற்கான தேதி குறித்தாயிற்று. நிச்சயதார்த்தம் நடக்க இன்னும் இரண்டு நாள்களே உள்ள நிலையில் அன்வர் தன் சொந்த ஊருக்குப் புறப்பட்டுச் சென்றான். அங்குதான் அந்நிகழ்வு நடைபெறுவதாகத் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

ஊருக்குப் புறப்பட்டு, பேருந்தில் சென்றுகொண்டிருந்தபோது ராஸிக் போன் செய்தான். அண்ணே, நிச்சயதார்த்தத்தை கேன்சல் செஞ்சாச்சு. நீங்க நேரா வாங்க, முழுமையான விவரத்தை அங்கு சொல்றேன் என்று கூறி அழைப்பைத் துண்டித்தான்.

சரி, நேரடியாகச் சென்று விவரத்தைத் தெரிந்துகொள்ளலாம் என்று அன்வர் அமைதியாகப் பயணத்தைத் தொடர்ந்தான். மறுநாள் அவன் தன் அண்ணன்கள், தந்தை மற்றுமுள்ள உறவினர்கள் முன்னிலையில் பேசும்போதுதான் தெரிந்தது அவனுடைய மனமாற்றம்.

அதாவது, சென்னையில் பார்த்த பெண் வசதியான குடும்பத்தைச் சார்ந்தவளாக இல்லை என்பதால் அவனுடைய சின்னம்மா, தான் ஏற்கெனவே சொல்லிவைத்திருந்த வேறொரு பெண்வீட்டாரிடம், ராஸிக் உடைய செல்பேசி எண்ணைக் கொடுத்துப் பேசச் சொல்லியுள்ளார். அங்கிருந்து ஒருவர் அவனிடம் பேசி எல்லா விவரங்களையும் சொன்னதோடு மட்டுமில்லாமல் அவர்கள் காரில் வந்து அவனை அழைத்துச் சென்றுள்ளனர்.

இதற்குமுன் என்ன நடந்தது தெரியுமா? அவனுடைய சின்னம்மா ராஸிக்கிற்கு போன் செய்து, “இன்ன எடத்துல ஒரு  பொண்ணு இருக்கு. பிளஸ் டூ தான் படிச்சிருக்கு. அதப் பாக்காதே. நூறு பவுன் போடுவாங்க. செலவுக்கு 5 இலட்சம், கார் எல்லாம் தர்றாங்களாம். நீ என்ன சொல்றே?” என்றதும் அவன் சற்றுத் தடுமாறித்தான் போனான். அவனுடைய மனம் ஒரு குரங்கைப் போல கிளைவிட்டுக் கிளை தாவிக் கொண்டிருந்தது.  “பொண்ணு வீட்லயிருந்து போன் செய்வாங்க. நீ எதுவும் பேச வேண்டாம். ஓ.கே. மட்டும் சொல்லு” என்று சொல்லி போன் அழைப்பைத் துண்டித்தார்.

மறுநாளே, அவன் வேலை செய்யுற கல்லூரிக்கு மணப்பெண் வீட்டிலிருந்து காரில் இரண்டு பேர் வந்து அவனைப் பார்த்தாங்க. அது மட்டுமில்லாம அவனைக் காரிலேயே அழைத்துக்கொண்டு நேரடியாகப் பெண்ணிடம் பேசச் செஞ்சாங்க. அவனுக்குப் பிடித்துப்போய்விட்டது. படிப்பா, பணமா என்று மனம் தடுமாறிய வேளையில் பணத்தின் பக்கமே அவன் மனம் சாய்ந்தது.

இறுதியில் அந்தப் பணக்காரப் பெண்ணோடுதான் திருமண நிச்சயதார்த்தம் என்று அவனுடைய சின்னம்மா தலைமையில் அவனே முடிவுசெய்தான். இதனால் மனமுடைந்த அன்வர், முன்னர் நிச்சயதார்த்த தேதி குறித்த வீட்டாருக்கு என்ன பதில் சொல்வது என்று விழிபிதுங்கி நின்றான். அவனுடைய தம்பி ராஸிக் ஒரு வார்த்தையில் கேன்சல் என்று சொல்லி விட்டான். ஆனால் பெண்வீட்டில் சொல்லி, அதற்கான ஏற்பாடு செய்யச் சொன்னது அன்வர்தானே. ஆகவே அவன்தான் போன் செய்து  சொல்லியாகணும். அவர்கள் திட்டுவதையும் வாங்கிக்கொள்ளணும். திட்டினாலும் பரவாயில்லை என்று நினைத்துக்கொண்டு, அன்வர் போன் செய்து, தன் வருத்தத்தைத் தெரிவித்தான். பதிலுக்கு அவர்கள் அன்வரைக் கடிந்துகொண்டார்கள்.

நிச்சயதார்த்தம் முடிவுற்று, திருமணம் நெருங்கி வந்துகொண்டிருந்தது. அவன் அனுப்பிய திருமணப் பத்திரிகையும் வீடு வந்து சேர்ந்தது.

ராஸிக்கின் நன்றியறியாமையையும் அவசரப்போக்கையும் துடுக்கான பேச்சுகளையும் இன்னபிற செயல்பாடுகளையும் மறந்துவிட்டுத்தான், இதோ நாளை நடக்கவுள்ள அவனுடைய திருமணத்திற்குச் செல்ல இரயில் நிலையம் நோக்கி நடந்துகொண்டிருக்கிறான் அன்வர்.====================


சனி, 22 ஜூன், 2013

நபிகளார் நவின்ற மூன்றுகள்...

தொடர்-2

                நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மும்மூன்று விசயங்களாகக் கூறி, மக்கள் மனங்களைக் கவர்ந்து, அவ்விசயங்களைக் கேட்போர் தம் அன்றாட வாழ்வில் அவற்றைச்  செயல்படுத்த ஆவல்கொள்ளுமாறு செய்தவர். நபிகளாருடைய அறிவுரைகளைக் கேட்போர் உடனடியாக அவற்றைத் தம் வாழ்வில் செயல்படுத்த முனைந்தார்கள். அந்த வகையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ள மூன்றுகளைப் பார்ப்போம்!

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் மறுமைநாளில் மூன்று பேரிடம் பேசமாட்டான். அவர்களைப் பார்க்கவுமாட்டான். அவர்களைத் தூய்மைப்படுத்தவுமாட்டான். அவர்களுக்கு நோவினை தரக்கூடிய வேதனை உண்டு. அல்லாஹ்வின் தூதரே! -அவர்கள் நட்டமடைந்துவிட்டார்கள்-அவர்கள் யாவர்? என்று நான் வினவினேன். அதற்கவர்கள், 1. தன் கீழாடையைத் (தரையில்) தொங்கவிடுபவன். 2. தான் வழங்கிய(தர்மத்)தைச் சொல்லிக்காட்டுபவன். 3. பொய்யான சத்தியம் செய்து தன் வியாபாரப்பொருளை விற்பவன் என்று கூறினார்கள். (நூல்: இப்னுமாஜா: 2199)

ஒருவன் தன் அந்தரங்க உறுப்பை மறைக்கவும் தன்னை அழகுபடுத்திக்கொள்ளவுமே ஆடை அணிகின்றான். அந்த ஆடை சிறந்ததாகவும் அழகாகவும் இருக்கலாம். பிறருக்குப் பிடித்தவாறு இருக்கலாம். விலையுயர்ந்ததாகவும் இருக்கலாம். ஆனால் அதன் மூலம் பிறரை இழிவாகக் கருதிச்  செருக்காக நடைபோடுவதும், நடக்கும்போது அந்த ஆடை தரையில் இழுபடுமாறு  செல்வதும் ஏக இறைவனுக்குப் பிடிக்காத செயலாகும். ஏனெனில் எல்லாப் பெருமைக்கும் சொந்தக்காரன் அல்லாஹ்தான். அதில் மனிதன் போட்டிக்கு நிற்கக் கூடாது. ஆகவே ஒருவன் தன் ஆடையைத் தரையில் படுமாறு இழுத்துச் செல்வது மிகப்பெரிய குற்றமாகும் என்பதையும் அத்தகைய மனிதனுக்கு  கடுமையான தண்டனை உண்டு என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

ஒருவனுக்கு உதவி செய்வதையோ தானமாக வழங்குவதையோ பிறரிடம் சொல்லிக்காட்டித் திரியக்கூடாது. இது ஒருவனின் சுயமரியாதையைக் குலைக்கிறது. சமூகத்தில் அவனுடைய மதிப்புக் குறையக் காரணமாக அமைகிறது. ஒரு முஸ்லிமுடைய மரியாதைக்குப் பங்கம் ஏற்படும் வகையில்  நடந்துகொள்வது மிகப்பெரும் குற்றமாகும். இஸ்லாமிய மார்க்கத்தில் இது வன்மையாகக் கண்டிக்கப்பட்டுள்ளது. ஒருவன் தான் வழங்கிய தானத்தைச் சொல்லிக்காட்டுவதை அல்லாஹ் திருக்குர்ஆனில் கண்டித்துக் கூறுகின்றான்:  இறை நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பாமல் மக்கள் காண்பதற்காகத் தன் பொருளை செலவு செய்(து வீணாக்கு)பவனைப் போல (நீங்கள் மனமுவந்து வழங்கும்) உங்கள் தர்மங்களை(ப் பெற்றவனுக்கு முன்னும் பின்னும்) சொல்லிக் காண்பிப்பதாலும் துன்புறுத்துவதாலும் (அதன் பலனைப்) பாழாக்கிவிடாதீர்கள். (2: 264) ஆகவே, ஒருவனுக்குச் செய்த உதவியையோ தர்மத்தையோ ஒருக்காலும் பிறரிடம் சொல்லித்திரியக்கூடாது; அதை விளம்பரப்படுத்தக் கூடாது.

மனிதன் நாளுக்கு நாள் பொய் சொல்வதில் வளர்ச்சியடைந்து வருகின்றான். அவனுடைய வாயிலிருந்து வருபவையெல்லாம் பொய்களாகவே இருக்கின்றன. பேசினால், வாக்குறுதி  கொடுத்தால், ஒப்பந்தம் செய்தால்-இப்படி எந்தச் செயலானாலும் பொய் பேசுவதை  ஒரு தொழிலாகவே கொண்டுள்ளான். அந்த வகையில், வியாபாரம் செய்பவன் எப்படியேனும் இந்தப் பொருளை விற்றுவிட வேண்டும் எனும் ஒரே நோக்கத்தில் இருப்பதால் ஏதேனும் பொய்யைச் சொல்லியாவது விற்றுவிட முனைகின்றான். வாங்குபவனின் நிலையைப் பற்றியோ அவன் பாதிக்கப்படுவதைப் பற்றியோ அவன் கவலைப்படுவதில்லை. இத்தகைய வியாபாரி பொய் சொல்வதோடு, அல்லாஹ்வின்மீது பொய்ச்சத்தியம் வேறு செய்கிறான். எனவே இது போன்ற வியாபாரியை அல்லாஹ் திருப்திகொள்வதில்லை. மாறாக, மறுமையில் அவனுக்குச் சரியான தண்டனையை வழங்கத் தயாராக இருக்கின்றான்.


ஆக, இத்தகைய மூவரை உயர்ந்தோன் அல்லாஹ் மறுமை நாளில் பார்க்கப் போவதில்லை. அத்தோடு  மறுமை நாளில்  அவர்களுக்கு நோவினை தரும் வேதனையும் உண்டு என்பதை கவனத்தில் கொண்டால் நாம் இத்தகைய தீமைகளிலிருந்து நம்மைத் தவிர்த்துக்கொள்ள வழிவகுக்கும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மறுமை நாளில் மூவருக்கெதிராக நான் வழக்குரைப்பேன் என்று அல்லாஹ் கூறுகின்றான். 1. ஒருவன் என் பெயரால் சத்தியம் செய்துவிட்டு, மோசடி செய்தவன். 2. இன்னொருவன், சுதந்திரமான ஒருவனை விற்று அந்தப் பணத்தை உண்டவன். 3. மூன்றாமவன், ஒரு கூலியாளிடம் நன்றாக வேலை வாங்கிக் கொண்டு அவனது கூலியைக் கொடுக்காமல் இருந்தவன்.   (நூல்: புகாரீ-2227)

இன்றைக்குச் சத்தியம் செய்வது மிகச் சாதாரண நடைமுறையாகிவிட்டது. அல்லாஹ்வின்மீது சத்தியம் செய்து, இன்னதைச் செய்வேன் என்று கூறுகின்ற பலர் அதைச் சரியாக நிறைவேற்றுவதில்லை. சத்தியத்தைச் சாதாரணமாகக் கருதுவோர் நபிகளார் கூறியுள்ள அல்லாஹ்வின் கூற்றைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். மறுமையில் அல்லாஹ்வே அவனுக்கு எதிராக வழக்குரைப்பான் என்றால் அதிலிருந்து அவன் எங்ஙனம் தப்பிக்க முடியும்?

சுதந்திரமான ஒருவனை விற்று, அந்தப் பணத்தைச் சாப்பிடுதல் இன்றைக்கும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. இதைப் பரவலாகப் பொதுமக்கள் செய்வதில்லை என்றாலும் சமூக விரோதிகள் இதைச் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். சிறுவர்கள், சிறுமிகள், இளம்பெண்கள் ஆகியோரைக் கடத்திச் சென்று விற்றுவிடுவது நடக்கத்தான் செய்கிறது. சிறுவர்களைப் பிச்சையெடுப்பதற்காகவும் இளம்பெண்கள், சிறுமிகள் ஆகியோரை விபச்சாரத்திற்காகவும் விற்றுவிடுகின்றனர். இது இன்றைய காலத்தில் நடைபெறுகின்ற சமூக விரோதச் செயலாகும். குழந்தைகளைக் கடத்தி, பிள்ளைப் பேறற்ற அயல்நாட்டுப் பெற்றோருக்கு விற்றுவிடுகின்றனர். இதற்காக ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் கடத்தப்படுகின்றனர் என்று ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது.

ஒருவனைப் பணிக்கு நியமித்து, அவனிடமிருந்து பெறவேண்டிய பணிகளையெல்லாம் பெற்றுக்கொண்டு அவனுக்குத் தான் விரும்பிய குறைந்தளவுத் தொகையைக் கொடுத்து அனுப்பிவிடுவதும், பேசிய தொகையை முழுமையாகக் கொடுக்காமல் வாக்குவாதம் செய்துவிட்டு இறுதியில், அவன் மனம் நோகும்படி ஏதாவது கூலியைக் கொடுத்தனுப்புவதும், சிலர் பணியைப் பெற்றுக்கொண்டு கூலியை அறவே கொடுக்காமல் ஏமாற்றுவதும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.  எனவே பணிக்கு நியமிக்கும்போதே அவனுடைய கூலியைத் தெளிவாகப் பேசிக்கொண்டு, பணி முடிந்ததும் பேசிய தொகையை முறைப்படி ஒப்படைப்பதுதான் ஓர் இறைநம்பிக்கையாளரின் நல்ல பண்பாகும்.

ஆக, மேற்கண்ட மூன்று விசயங்களில் நாம் கண்ணும் கருத்துமாகச் செயல்பட்டு, அல்லாஹ் நமக்கெதிராக வழக்குரைக்கும் வகையில் சிக்கிவிடாமல் தப்பித்துக்கொள்ள ஒவ்வொருவரும் முயல வேண்டும். 

அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரளி) அவர்கள் அறிவித்துள்ளதாவது: மூன்று பொருள்கள் முஸ்லிம்கள் அனைவருக்கும் பொதுவானவை. அவை: தண்ணீர், புல் (மேய்ச்சல் நிலம்), நெருப்பு ஆகியவையாகும். இவற்றை விற்பது விலக்கப்பட்டதாகும் என்று  அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  (நூல்: இப்னுமாஜா: 2463)

அதாவது, தண்ணீர், மேய்ச்சல் நிலம், நெருப்பு ஆகிய மூன்றும் முஸ்லிம்கள் அனைவருக்கும் சொந்தமாகும். இவற்றை முஸ்லிம்களுள் யாரும் பயன்படுத்தலாம். எவரும் தமக்கு மட்டுந்தான் சொந்தம் என உரிமை கொண்டாட முடியாது. தண்ணீர் என்பது ஒருவருடைய கிணற்று நீரைக் குறிக்காது. ஒருவருடைய வீட்டிலுள்ள கிணற்று நீர், ஆழ்துளைக் கிணற்று நீர் ஆகியவை அவருக்கே சொந்தமாகும். ஆனால் நபிமொழியில் குறிப்பிடப்பட்டுள்ள தண்ணீர் என்பது ஆறு, ஏரி, குளம், கடல் ஆகியவற்றில் உள்ள தண்ணீரையே குறிக்கிறது. அவற்றிலுள்ள தண்ணீர் சமுதாய மக்கள் அனைவருக்கும் பொதுவானதாகும். தனிநபர் அவை தமக்கு மட்டுமே சொந்தம் எனக் கூறி உரிமை கொண்டாட முடியாது. அதேநேரத்தில் ஒருவன் ஊருக்கு வெளியே உள்ள ஆற்றிலிருந்து ஒரு லாரி நிறையத் தண்ணீரை எடுத்து வந்து ஊருக்குள் விற்பது-தண்ணீரை விற்பதாக ஆகாது. மாறாக, அவன் அங்கிருந்து எடுத்து வந்து தருவதற்கான போக்குவரத்துச் செலவாகவே கருதப்படும். இன்றைக்குத் தண்ணீரைச் சுத்தப்படுத்தி விற்பனை செய்யும் நிறுவனங்களும்  அதே வகையின்கீழ்தான் அடங்கும். அவை விற்பனை செய்யும் தண்ணீர் பாக்கெட்டை வாங்கும்போது நாம் பணம் கொடுப்பது தண்ணீருக்காக அன்று. மாறாக, அத்தண்ணீரைத் தூய்மைப்படுத்தும் செலவுக்காகத்தான். ஆக, தண்ணீர் என்பது பொதுவானது. அது இறைவனின் அருட்கொடை. அது அனைவருக்கும் சொந்தமாகும். மக்களின் அவசியத் தேவையைப் புரிந்துகொண்டு அதை விற்பனை செய்யக்கூடாது. இதைப் புரிந்துகொண்டால் இன்று நாட்டிலுள்ள பல்வேறு பிரச்சனைகள் முடிவுக்கு வந்துவிடும்.

ஊருக்கு வெளியே உள்ள மேய்ச்சல் நிலம் பொதுவானது. அதில் யார் வேண்டுமானாலும் தம்முடைய ஆடு, மாடுகள் போன்ற கால்நடைகளை மேய்க்கலாம். அதில் தனிநபர் யாரும், தமக்கு மட்டுமே இது சொந்தம் என்று உரிமை கொண்டாட முடியாது.

நெருப்பு என்பது பொதுவானது. இது கற்காலத்தைப் பொறுத்த வரை கிடைத்தற்கரிய பொருளாக இருந்தது. தீ மூட்டுவதற்கு மக்கள் மிகவும் சிரமப்பட்டனர். கற்களை ஒன்றோடு ஒன்று உராய்ந்து, அதன்மூலம் தீயை மூட்டினார்கள். தற்காலத்தில் ஒரு தீக்குச்சியால் மிக எளிதாக அடுப்பைப் பற்ற வைத்துக்கொள்ளலாம். எந்தச் சிரமமும் இல்லை. ஆனால் இதன் தேவையை நாம் பயண நேரத்தில் உணரலாம். தீப்பெட்டி கிடைக்காத நேரத்தில் ஒருவர் ஒரு தீக்குச்சியும் அதனை உராய்வதற்கான பெட்டியையும் கொடுத்தால் அது பேருதவியாக இருக்கும்.  நெருப்பு என்பது தீக்குச்சியை மட்டுமின்றி, தீயைப் பற்ற வைக்க எதுவெல்லாம் உதவியாக இருக்குமோ அவற்றையெல்லாம் குறிக்கும். மண்ணெண்ணெய், விறகு, எரிவாயு உருளை (சிலிண்டர்) போன்றவற்றையும் குறிக்கும். அது பற்றிய ஒரு நபிமொழியைப் பாருங்கள்!

ஆயிஷா (ரளி) அவர்கள் அறிவித்துள்ளதாவது: அல்லாஹ்வின் தூதரே! தடுத்து வைத்துக்கொள்ளக்கூடாத பொருட்கள் எவை? என்று வினவினேன். தண்ணீர், உப்பு, நெருப்பு என்று விடையளித்தார்கள். இந்தத் தண்ணீரோ நாங்கள் அது பற்றி அறிவோம். உப்பு, நெருப்பு ஆகியவை (முக்கியமானவை) ஏன்? என்று வினவினேன். அதற்கவர்கள், ஹுமைரா! யார் நெருப்பைக் கொடுத்தாரோ, அவர் அந்நெருப்பின் மூலம் சமைத்த யாவையும் தர்மமாகக் கொடுத்தவரைப் போன்றவராவார். யார் உப்பைக் கொடுத்தாரோ, அவர் அவ்வுப்பு சுவையாக்கிய யாவையும் தர்மமாகக் கொடுத்தவரைப் போன்றவராவார். தண்ணீர் கிடைக்கின்றபோது, எவர் ஒரு முஸ்லிமுக்கு ஒரு மிடர் தண்ணீர் கொடுத்தாரோ, அவர் ஓர் அடிமையை விடுதலை செய்தவரைப் போன்றவராவார். தண்ணீர் கிடைக்காதபோது, எவர் ஒரு முஸ்லிமுக்கு ஒரு மிடர் தண்ணீர் கொடுத்தாரோ அவர் அவரை உயிர்ப்பித்தவரைப் போன்றவராவார் என்று கூறினார்கள். (நூல்: இப்னுமாஜா: 2465)
ஆக, இந்நபிமொழிப்படி உப்பும், நெருப்பும் மனிதனுக்கு இன்றியமையாத் தேவையாகும். அவற்றை நாம் பிறருக்குக் கொடுத்துதவுதல் பெரும் நன்மையாகும் என்பதை அறிந்துகொள்கிறோம். எனவே நாம் தண்ணீர், உப்பு, நெருப்பு ஆகிய பொருள்களை ஒருவருக்கொருவர் கொடுத்து உதவிக்கொள்வோம். அதன்மூலம் இறைவன் புறத்திலிருந்து அளவிலா நன்மையைப் பெறுவோம்!

================
செவ்வாய், 21 மே, 2013

தந்தையின் சிறப்புதாயும் தந்தையும் ஒருவனுக்குத் தன் இரண்டு கண்களைப் போல் மதிப்புமிக்கோர் ஆவர். இவ்வுலகில் ஒருவன் பிறப்பதற்காக அவ்விருவரும் படும் சிரமங்களும் துன்பங்களும் வார்த்தைகளுக்குள் அடங்குவன இல்லை. பெற்றெடுத்த பிள்ளையைச் சீராட்டி வளர்த்து நல்லொழுக்கம் கற்பித்துக் கல்வியைப் போதித்து தன்னைவிடச் சிறந்தவனாய் உயர வேண்டுமென நினைப்பவர் தந்தை.

தாயின் சிறப்பைப் பற்றிப் பல்வேறு நூல்களிலும் கட்டுரைகளிலும் படித்திருக்கலாம். ஆனால் ஒரு தந்தையின் சிறப்பையும் உயர்வையும் நீங்கள் அரிதாகவே படித்திருப்பீர்கள். அல்லது படிக்காமல்கூட இருக்கலாம். காரணம், தந்தையின் உயர்வு சொல்-த் தெரிய வேண்டியதில்லை. வேர்களுக்கு எதற்கு விளம்பரம்? என்று கூறுவார்கள். ஓங்கி வளர்ந்து, தழைத்து, காயோடும் கனியோடும் காட்சிதரும் ஒரு விருட்சத்தைத் தாங்கி நிற்பது அதன் ஆணிவேர்தான். அதுபோல் ஒரு குடும்பத்தின் தலைவனாக இருந்து, அக்குடும்பத்தைச் சீரான முறையில் நடத்தி வருபவன் தந்தை எனும் பொறுப்பில் உள்ளவன்தான் என்பது அனைவருக்கும் தெரியும். அதனால்தான் தந்தையின் சிறப்பை யாரும் பேசுவதில்லை.

தந்தையின் சிறப்பையும் உயர்வையும் குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறாமல் விட்டுவிடவில்லை. அவருடைய சிறப்பையும் உயர்வையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தனியே குறிப்பிட்டுக் கூறியுள்ளார்கள். அத்தோடு திருக்குர்ஆனும் தெளிவாகக் கூறியுள்ளது.

ஒரு தந்தை சொர்க்கத்தின் வாசல்களுள் மையவாசல். எனவே நீ உன் பெற்றோரைப் பேணிக்கொள் அல்லது (பேணாமல்) விட்டுவிடுஎன அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: இப்னுமாஜா 2080) மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு தந்தை சொர்க்கத்தின் வாசல்களுள் மையவாசல். எனவே நீ அக்கதவை வீணாக்கிவிடு. அல்லது அதைப் பேணிக்கொள்.  (நூல்: இப்னுமாஜா 3653)

ஆக, மேற்கண்ட ஹதீஸ்கள் மூலம், ஒரு தந்தையின் சிறப்பையும் உயர்வையும் நாம் தெளிவாக அறிந்துகொள்ளலாம். ஒரு தந்தைக்கு உயர்வும் சிறப்பும் ஏன்? அவன் தன் பிள்ளைகளுக்காகவும் குடும்பத்திற்காகவும் அல்லும் பகலும் அயராது உழைக்கின்றான். எவ்வளவு பெரிய துன்பத்தையும் சிரமத்தையும் தாங்கிக்கொண்டு அவர்களுக்காக உழைத்துப் பொருளீட்டுகின்றான். அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதோடு அவர்களின் நல்வாழ்விற்காகவே வாழ்கிறான். எனவேதான் அவருக்குச் சிறப்பும் உயர்வும் உள்ளன. ஆகவே ஒரு குடும்பம் சிறந்து விளங்கவும் மேம்படவும் பொருளாதாரம் இன்றியமையாதது. அதை ஈட்டித் தருபவர் தந்தையே ஆவார்.

அதனால்தான் அல்லாஹ் திருக்குர்ஆனில் இவ்வாறு கூறுகின்றான்: ஆண்கள், பெண்களை நிர்வகிக்கக்கூடியவர்கள். ஏனெனில் அவர்களுள் சிலரைவிட (வேறு) சிலரை அல்லாஹ் மேன்மையாக்கி வைத்திருப்பதாலும் (ஆண்களாகிய) அவர்கள், தங்கள் பொருளாதாரத்திலிருந்து (பெண்களுக்காக)ச் செலவு செய்வதாலும் ஆகும். (04: 34)

ஆகவே, ஒரு தந்தை தன் கும்பத்தாருக்குப் பொருளாதார ரீதியில் உதவிசெய்வதாலும் பெண்களைவிட ஒரு படி உயர்வு அவருக்கு இருப்பதாலுமே அவர் மேன்மையடைகிறார். ஒரு தந்தையின் உயர்வையும் சிறப்பையும் பின்வரும் நபிமொழி மூலம் அறியலாம். மூன்று பேரின் பிரார்த்தனை (துஆ) எவ்விதச் சந்தேகமுமின்றி ஏற்றுக்கொள்ளப்படும். 1. அநியாயம் செய்யப்பட்டவனின்  பிரார்த்தனை, 2. ஒரு பயணியின் பிரார்த்தனை, 3. ஒரு தந்தை தன் பிள்ளைக்காகச் செய்யும் பிரார்த்தனை என்று நபி  (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

ஒரு தந்தை தம் பிள்ளைக்காகச் செய்யும் பிரார்த்தனை எவ்விதத் தடையுமின்றி ஏற்றுக்கொள்ளப்படுகிறது. ஒரு தந்தை தம்மைவிடத் தம் பிள்ளை உயர்வையும் சிறப்பையும் பெற வேண்டும் என்று நினைப்பவர். உளத்தூய்மையோடும் உயர் எண்ணத்தோடும் அவர் செய்யும் பிரார்த்தனையை உயர்ந்தோன் அல்லாஹ் உடனடியாக ஏற்றுக்கொள்கிறான். இத்தகைய உயர்வைப் பெற்றுள்ள தந்தைக்கு இக்காலப் பிள்ளைகள் கொடுக்கும் மரியாதை என்ன? அவரின் பிரார்த்தனையைப் பெறுவதற்காகப் பிள்ளைகள் செய்யும் முயற்சிதான் என்ன? மனத்தளவில் அவர்களை மகிழ்ச்சிப்படுத்துகின்றார்களா?

அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறியுள்ளதாவது: (நபியே!) உங்களது இறைவன் தன்னைத்தவிர (மற்றெவரையும்) வணங்கக் கூடாதென்று (கட்டளையிட்டிருப்பதுடன்) தாய் தந்தைக்கு நன்றி செலுத்தும்படியும் கட்டளையிட்டிருக்கிறான். உங்களிடம் இருக்கும் அவர்களுள் ஒருவரோ அல்லது இருவருமோ முதுமையை அடைந்துவிட்டபோதிலும் அவர்களை வெருட்டவும் வேண்டாம்; அவர்களை (நிந்தனையாகச்) "சீ' என்று சொல்லவும் வேண்டாம். அவர்கüடம் (எதைக் கூறியபோதிலும்) மிக்க மரியாதையாக(வும் அன்பாகவுமே) பேசுங்கள்.  (17: 23)

இவ்வசனத்தில் ஒருவரோ இருவருமோ என்று பொதுவாகத்தான் கூறியுள்ளான். தம் இளமை முழுவதையும் தம் குடும்பத்திற்காகவும் தம் பிள்ளைகளின் மேம்பாட்டிற்காகவும் செலவழித்த ஒரு தந்தையை அவர்தம் பிள்ளைகள் மிக்க அன்பாகவும் கண்ணியமாகவும் நடத்தினால், அவர்கள் தம் தந்தையின் அன்பைப் பெற்றுவிடலாம். ஒருவன் தன் தந்தையின் அன்புக்குரியவனாக ஆகிவிட்டால், அவர்தம் பிள்ளைக்காகச் செய்கின்ற பிரார்த்தனையை உயர்ந்தோன் அல்லாஹ் எவ்விதத்தடையுமின்றி உடனடியாக ஏற்றுக்கொள்கிறான். அது அவனை நினைத்துப் பார்க்க முடியாத உயர்வுக்கும் சிறப்புக்கும் இட்டுச் சென்றுவிடும். அவ்வளவு வலிமையானது ஒரு தந்தையின் துஆ. இதை எத்தனை பேர் விளங்கியிருக்கின்றார்கள். எத்தனை பேர் தம் அன்றாட வாழ்க்கையில் செயல்படுத்துகின்றார்கள். அல்லாஹ்வின் அன்பையும் தந்தையின் அன்பையும் பெற்றுவிட்டால், அவனுக்குச் சொர்க்கம் கிடைப்பது உறுதி என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

முதுமைப் பருவத்தை அடைந்துவிட்ட தந்தையின் அநாதையாக்கப்படுகிறார். அவருடைய தேவைகளை அவர் ஈன்றெடுத்த பிள்ளைகள் நிறைவேற்றுவதில்லை. அவருடைய தனிப்பட்ட செலவுகளுக்காகப் பிள்ளைகள்  பொருளாதார உதவி செய்வதில்லை. ஒருவருக்கு இரண்டு மூன்று ஆண்பிள்ளைகள்  இருந்தால், நீ கவனித்துக்கொள், நான் கவனித்துக் கொள்ள மாட்டேன் என்று அண்ணன் தம்பிக்குள் சண்டை வருவதும் அல்லது இவர் மட்டுந்தான் மகனா? உங்களுக்கு இன்னும் இரண்டு மகன்கள் இருக்கின்றார்களே. அவர்களுடைய வீட்டுக்குச் சென்று மூன்று மாதங்கள் தங்கிக் கொள்ளுங்கள் என்று அண்ணன் தம்பிகள் கூறுவதும், அல்லது மருமகள் கூறுவதும், குடும்பத்தில் மூத்தவர் கவனித்துக்கொண்டால் மற்றவர்கள் அவரை அறவே கவனித்துக்கொள்ளாமல் தமக்கும் அவருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்ற கோணத்தில் முற்றிலும் புறக்கணித்துவிடுவதும் இன்றைய அன்றாட நிதர்சன உண்மைகள். தன் மனைவியின் தொடர்தொல்லைகளைச் சமாளிக்கமுடியாத ஆளுமைத்திறனற்ற ஆண்கள் அவரைப் புறக்கணிப்பதும், ஒதுக்குவதும், அவரிடம் கடுகடுவெனப் பேசுவதும், இறுதியில் அநாதை இல்லங்களில் சேர்த்துவிடுவதும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.

அல்லாஹ்வின் தூதரே! எனக்குச் செல்வமும் குழந்தைகளும் உள்ளனர். என்னுடைய தந்தை என் பொருளை(ப் பணத்தை எனக்குத் தெரியாமல்) எடுத்துக்கொள்கிறார் என்று (தம் தந்தையைப் பற்றி) முறையீடு செய்தார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நீயும் உன் செல்வமும் உன்னுடைய தந்தைக்கே சொந்தம் என்று விடையளித்தார்கள். (நூல்: இப்னுமாஜா-2282)

ஒரு பிள்ளை உழைத்துச் சம்பாதிக்கின்ற பணமும் பொருளும் அவனுடைய தந்தைக்கே  சொந்தம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளதிலிருந்து, தந்தையின் உயர்வையும் உரிமையையும் அறியலாம். ஆகவே அவர் தம் பிள்ளையின் பணத்தை, அவனைக் கேட்டுத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற அவசியமில்லை.

உங்களுடைய பிள்ளைகள் (உடைய செல்வம்) உங்களுடைய உழைப்பில் மிகத் தூய்மையானது. எனவே அவர்களுடைய  பொருட்களிலிருந்து நீங்கள் உண்ணுங்கள் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.  (நூல்: இப்னுமாஜா 2283)

முதுமையின் காரணமாகப் பிள்ளையின் உழைப்பில் உண்டுகொண்டிருக்கிறோமே. இது சரியா? முறையா? என்ற உள்ளுணர்வோடும் சஞ்சலத்தோடும் கையறு நிலையில் வாழ்பவர்கள் இனி அவ்வாறு நினைக்கவே தேவையில்லை. உங்களுடைய பிள்ளையின் உழைப்பும் வருமானமும் உங்களுடையதுதான். அதில் உங்களுக்கு முழு உரிமை இருக்கிறது. இதை ஒவ்வொரு மகனும் ஒவ்வொரு மருமகளும் உணர்ந்துகொள்ள வேண்டும்.

ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே! ஒரு மகன் தன் பெற்றோருக்குச் செய்ய வேண்டிய கடமை என்ன? என்று வினவினார். அதற்கவர்கள், அவ்விருவரும் உன்னுடைய சொர்க்கமும், உன்னுடைய நரகமும் ஆவர் என்றுரைத்தார்கள். (நூல்: 3652)

ஒரு பிள்ளைக்கு அவனுடைய பெற்றோரே சொர்க்கமும் நரகமும் ஆவர் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளதிலிருந்து பெற்றோரின் உயர்வும் மதிப்பும் ஒவ்வொருவருக்கும் எளிதாகப் புரியும். ஒருவன்  சொர்க்க செல்ல வேண்டுமாயின், அவன் தன் பெற்றோரை மதித்து, அவர்களுக்கு நல்ல முறையில் பணிவிடை செய்ய வேண்டும். அவர்களின் கட்டளைகளுக்குப் பணிந்து நடக்க வேண்டும். அவர்களிடம் கனிவாகப் பேச வேண்டும். அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும். அவர்களின் செலவுக்குப் பணம் கொடுக்க வேண்டும். இவ்வளவையும் செய்வதன் மூலம் அவர்கள் மகிழ்வுற்று, தம் பிள்ளைக்காகப் பிரார்த்தனை செய்வார்கள். அதுவே அவனைச் சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லக் காரணமாக அமையும்.

ஒருவரின் தந்தை இறந்துவிட்டாலும் அவன் தன் தந்தைக்குச் செய்யும் கடமை முடிவதில்லை. அது அவரின் மரணத்திற்குப்பின்னும் தொடர்கிறது. அதாவது ஒருவன் தன் தந்தையின் நண்பர்களைச் சந்திக்கின்றபோது அவர்களிடம் இணக்கமாகவும் நட்பாகவும் நடந்துகொள்ள வேண்டும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நன்மைகளுள் மிகவும் அதிகமான நன்மை செய்பவன், தன் தந்தை யார்மீது அன்புகொண்டிருந்தாரோ அவர்களிடம் உறவு வைத்துக்கொள்பவர் ஆவார். (நூல்: முஸ்லிம் 4629)

ஒருவன் தன் தந்தையின் நண்பர்களை மதிப்பது தன் தந்தையை மதிப்பதைப் போன்றாகும். இவருடைய தந்தை என்னுடைய நண்பராக இருந்தார். இவரும் தம் தந்தையைப்போல் மரியாதை தெரிந்த பிள்ளைஎன்று போற்றும்போது அது தந்தையின் கண்ணியத்தையும் மதிப்பையும் உயர்த்தும். ஆக, ஒருவர் தம் தந்தையின் மதிப்பையும் கண்ணியத்தையும் உயர்த்த, தம் தந்தையின் நண்பர்களோடு நல்ல முறையில் பழக வேண்டும். இது, தந்தையை மதிக்கும் ஒவ்வொரு தனயனின் கடமையாகும்.  

மூன்றைத் தவிர, ஒரு மனிதன் இறந்தபின் அவனுடைய எல்லாச் செயல்பாடுகளும் (உலகத் தொடர்பைவிட்டு) நீங்கிவிடுகின்றன. 1. தொடர்படியான தர்மம், 2. பயனுள்ள வகையில் கற்பிற்கப்பட்ட கல்வி, 3. அவனுக்காகப் பிரார்த்தனை செய்யும் நல்ல பிள்ளை-என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

ஒரு தந்தை தம்முடைய பிள்ளையை நல்ல பிள்ளையாக வளர்க்க தம் வாழ்நாளில் எவ்வளவு பாடுபட்டிருப்பார். அவர் எவ்வளவு சிரமங்களைச் சகித்திருப்பார். அவர் செய்த அத்தனை முயற்சிகளின் பயனாக வளர்ந்த பிள்ளை, தன் தந்தையின் பாவமன்னிப்பிற்காகப் பிரார்த்தனை செய்தால் அதை அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான். ஆக, அதுவும் ஒரு தந்தையின் முயற்சிதான். அவர் செய்த முயற்சியின்  பயனைத்தான் அவர் மறுமையில் அடைகிறார்.

ஒரு பிள்ளையைப் பெற்றெடுப்பதும் அதை வளர்க்கச் சிரமப்பட்டு உழைப்பதும் அப்பிள்ளைக்குச் சிறந்த கல்வியைக் கொடுக்கப் பாடுபடுவதும் ஒரு தந்தையின் கடமையாகின்றது. அக்கடமையை அவர் செவ்வனே செய்ததால், அவர் இறந்த பின்னரும் நன்மையைப் பெறுகிறார். அல்லாஹ்வின் மன்னிப்பைப் பெற்றுச் சொர்க்க வாழ்க்கையை அடைகிறார்.

ஆக, அன்பிற்குரியோரே! ஒவ்வொரு தனயனும் தம் தந்தையின் கடின உழைப்பையும் அவர் தன்னை வளர்க்க எடுத்துக்கொண்ட சிரமங்களையும் அதற்காக அவர் அனுபவித்த இன்னல்களையும் நினைவுகூர்ந்து, அவரைக் கண்ணியமாகவும் கனிவாகவும் நடத்துவது கடமையாகும். அத்தோடு தாய்-தந்தை இருவருக்கும் சேர்த்து ஒரு தனயன் எவ்வாறு தன்னிடம் பிரார்த்தனை செய்யவேண்டும் என்று அல்லாஹ் கூறியுள்ளானோ அதேபோன்று நாம் பிரார்த்தனை செய்வோமாக!

"என் இறைவா! நான் குழந்தையாக இருந்தபொழுது (மிக்க அன்பாக) என்னை அவர்கள் வளர்த்துப் பாதுகாத்தவாறே நீயும் அவ்விருவர்மீது அன்பும் அருளும் புரிவாயாக!'' என்று நீங்கள் பிரார்த்தனை செய்யுங்கள்! (17: 24)

இனிய திசைகள் மே 2013 இதழ்

சனி, 11 மே, 2013

நபிகளார் நவின்ற மூன்றுகள்...


மூன்றுக்கும் இஸ்லாமியச் செயல்பாடுகளுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. உளூச் செய்யும்போது நாம் ஒவ்வோர் உறுப்பையும் மூன்று மூன்று தடவை கழுவுகிறோம். கட்டாயக் குளிப்பின் கடமைகள் மூன்று (வாய் கொப்பளித்தல், மூக்கில் தண்ணீர் இட்டுச் சுத்தம் செய்தல், உடல் முழுவதும் தண்ணீரால் நனைத்தல்). தொழுகையில், ருகூஉவில் குறைந்தபட்சம் மூன்று தடவை சுப்ஹான ரப்பியல் அழீம் என்றும், சஜ்தாவில் குறைந்தபட்சம் மூன்று தடவை சுப்ஹான ரப்பியல் அஃலா என்றும் கூறுகிறோம். வித்ரு மூன்று ரக்அத் தொழுகின்றோம். மணவிலக்குச் செய்யப்பட்ட பெண்ணின் காத்திருப்புக் காலம் (இத்தா) மூன்று (மாதங்கள்)  மாதவிடாய்க் காலம். ஏன், இஸ்லாத்தின் கடமைகள்கூட மூன்றுதான். ஆம், ஏழைகளுக்கு (ஈமான், தொழுகை, நோன்பு ஆகிய) மூன்றுதான். செல்வர்களுக்குத்தான் ஸகாத், ஹஜ் உள்பட ஐந்தாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்கள் மனங்களைப் புரிந்தவர்கள். அவர்களின் சூழ்நிலையைக் கருதி அறிவுரை வழங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். அறிவுரை என்ற பெயரில் வார்த்தைகளை சரமாறியாக அள்ளிக்கொட்டிக் கேட்போரைச் சலிப்படையச் செய்யாத நற்பண்பாளர். ஆகவே மக்கள் மனங்களில் நீங்கா இடம்பெறும் வகையிலும், அவற்றை அவர்கள் தம் அன்றாட வாழ்க்கையில் செயல்படுத்தும் வகையிலும் பொருட்செறிவும் ஆழமான அர்த்தங்களும் கொண்ட மூன்று மூன்று விசயங்களை அவ்வப்போது தம் தோழர்களுக்குக் கூறிவந்தார்கள். அவற்றை நாம் தெரிந்துகொண்டு, நம்முடைய அன்றாட வாழ்வில் நம்மால் இயன்ற அளவுக்கு அவற்றைச் செயல்படுத்தும் உயர்ந்த எண்ணத்தோடு தொடர்ந்து படிப்போம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மூன்று பிரார்த்தனைகளுக்கு எவ்விதச் சந்தேகமுமின்றி பதிலளிக்கப்படும். 1. அநியாயம் செய்யப்பட்டவரின் பிரார்த்தனை, 2. பயணியின் பிரார்த்தனை, 3. ஒரு தந்தை தன் மகனுக்காகச் செய்யும் பிரார்த்தனை. (நூல்: இப்னுமாஜா-3852)  

பலம் வாய்ந்தவர் பலவீனமானவரை அடக்குவதும் ஒடுக்குவதும் அநியாயம் செய்வதும் உலக நியதியாக உள்ளது. அந்த வகையில் ஒருவனால் அநியாயம் செய்யப்பட்டவன் தன் சோகத்தையும் துன்பத்தையும் யாரிடம் சொல்லி அழுவான்? யார்தாம் அவனுக்கு ஆறுதல் கூற முடியும்? யார் அவனுக்கு உதவி செய்வார்? வறியவனை வாட்டினால் வழக்குத் தொடுப்பவர் யார்? என்ற துணிவுதானே ஒருவனை அநியாயம் செய்யத் தூண்டுகிறது. எனவேதான் அதற்கு விடையாகப் படைத்த இறைவனே அநியாயம் செய்யப்பட்டோர் பக்கம் இருக்கும்போது அநியாயம் செய்ய யாருக்குத் துணிவு வரும்? அதையும் மீறி ஒருவன் அநியாயம் செய்யத் துணிகின்றான் என்றால், அவன் அல்லாஹ்வை அஞ்சாதவனாகத்தான் இருக்க முடியும்.

ஒரு பயணி தன் ஊரைவிட்டு வேறோர் ஊருக்கு, தன் நாட்டைவிட்டு மற்றொரு நாட்டுக்கு, வியாபாரத்திற்காகவோ சம்பாதிப்பதற்காகவோ வேறு தேவைகளுக்காகவோ பயணம் மேற்கொள்கிறான். அவனுக்கு அப்பயணத்தில் உதவி செய்ய யாருமில்லை. எனவே அவன் நிர்க்கதியாக நிற்கிறான். அந்தத் தனிமையில் அவனுக்குத் துணைவனாக தனித்தோன் அல்லாஹ் இருக்கின்றான். அவனுடைய பிரார்த்தனையை உடனடியாக ஏற்றுக்கொண்டு அவனுக்குத் தேவையான உதவிகளைச் செய்கிறான்.

ஒரு தந்தை தன் மகனுக்குத் தன்னால் இயன்றதைச் செய்ய முனைகிறான்; அவனுக்காக உழைக்கிறான்; கல்வியையும் நல்லொழுக்கத்தையும் புகட்டுகின்றான்; இறுதியில் தனக்கு மேலாக அவன் உயர்வடைய வேண்டும் என்று விரும்புகின்றான். அத்தகைய தருணத்தில் தன்னால், ஓர் எல்லைக்கு மேல் முடியாது என்கிறபோது, அவன் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்து தனக்கு வழங்காததையும் தன் மகனுக்கு வழங்கு என்று பிரார்த்தனை செய்கிறான். அந்த நேரத்தில் அல்லாஹ், தன் அடியான் தன் பிள்ளைக்காகச் செய்கின்ற பிரார்த்தனையை ஏற்று அவனுக்கு ஆதரவளிக்கின்றான்.

ஆக, மேற்கண்ட மூன்று பேருடைய பிரார்த்தனையை அல்லாஹ் உடனடியாக அங்கீகரிப்பதற்குத் தக்க காரணம்  தெளிவாகவே தெரிகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மூன்று பேருடைய தொழுகை அவர்களுடைய தலைக்கு மேலாக ஒரு சாண் (அளவு)கூட உயராது. 1. ஒருவர்-அவரை மக்கள் வெறுக்கின்ற நிலையில் அவர்களுக்கு (இமாமாக)த் தொழுகை நடத்துபவர், 2. தன் கணவன் தன்மீது கோபமாக உள்ள நிலையில் இரவைக் கழித்த பெண், 3. வாள்களை உருவியபடி சண்டையிட்ட இரண்டு சகோதரர்கள். (நூல்: இப்னுமாஜா-961)

மக்கள் தம்மை வெறுப்பதை உணர்ந்த ஒருவர் அவர்களுக்கு இமாமாக நின்று தொழ வைக்கலாகாது. தொழுகை அல்லாஹ்வுக்குச் செய்கின்ற வழிபாடு. மக்கள் அதை அதிருப்தியோடும் மனச் சங்கடத்தோடும் செய்யாமல் அல்லாஹ்வை மனதில் ஏற்று, நிம்மதியாகத் தொழ வேண்டும். அதற்கு அவர்கள் விரும்பும் தலைமை இருக்க வேண்டும். மாறாக, அவர்கள் வெறுக்கும் ஒருவர் அவர்களுக்குத் தலைமையேற்றுத் தொழுகை நடத்தினால் அதில் அவர்களுக்கு ஈடுபாடோ மனஓர்மையோ ஏற்படாது.  எனவே மக்கள் விரும்பும் வகையில் ஓர் இமாம் நடந்துகொள்வது  மிக முக்கியமாகும். அவர்கள் விரும்பும் வகையில், அதேநேரத்தில் மிகவும் சுருக்கிவிடாமலும், மிகவும் நீட்டிவிடாமலும் நடுநிலையோடு தொழுகை நடத்த வேண்டும். மக்கள் வெறுக்கும் வகையில் ஓர் இமாம் நடந்துகொண்டு, தொழுகை நடத்தினால் அதனால் அவருக்கு எந்தப் பயனும் இல்லை என்பதை எச்சரிக்கும் வகையில்தான் நபிகளார் கூற்று அமைந்துள்ளது. அதேவேளையில், ஓர் இமாம் ஷரீஅத்தில் உள்ளதை உள்ளபடி கூறியமைக்காக அவர்மீது மக்கள் வெறுப்படைந்துள்ளார்கள் என்றால் அது நபிகளார் விடுத்த எச்சரிக்கைக்குள் அடங்காது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

ஓர் ஆடவன் பகல் முழுக்க உழைத்துக் களைத்துப்போய் இரவில் அமைதியாக ஒதுங்கலாம் என்ற எண்ணத்தில் இல்லத்தையும் இல்லாளையும் நோக்கி வருகின்றான். அவனை அன்புடன் வரவேற்று, புன்னகை புரிந்து, உபசரித்து, அவனுக்குப் பணிவிடைகள் செய்து மனங்குளிரச் செய்வது ஒரு மனைவியின் கடமை. அத்துடன் அவனோடு மகிழ்ச்சியுடன் உரையாடுவதும், குடும்ப விசயங்களைப் பகிர்ந்து கொள்வதும், அவனது உடற்தேவைகளை நிறைவேற்றுவதும் மனைவியின் கடமை. அவற்றை விடுத்து, தனக்காகவும் தன் பிள்ளைகளுக்காகவும் உழைக்கின்றவனை உதாசீனப்படுத்துவதோ, சினத்துடன் நடந்துகொள்வதோ, கடுகடுவெனப் பேசுவதோ, சண்டைபோட்டுக் கொண்டு தள்ளிப் படுத்துக்கொள்வதோ ஒரு மனைவிக்கு அழகில்லை. அத்தகைய பெண்ணை அல்லாஹ் விரும்புவதில்லை. அவள் தன்னைத் தொழுதாலும் அவன் அதை ஏற்றுக்கொள்வதில்லை.

இறைநம்பிக்கையாளர்கள் அனைவரும் சகோதரர்கள் என்று கூறி முஸ்லிம்கள் அனைவரையும் ஒரு குடும்பத்தைப் போன்று ஒழுங்கமைத்து வைத்துள்ளான் இறைவன். அப்படியிருக்கும்போது அதைச் சிதைக்கும் வண்ணம் ஒருவன் மற்றொருவனைக் கொல்லும் வகையில் வாளெடுத்துச் சண்டையிடுவதும் உயிரை மாய்க்க நினைப்பதும் பெருங்குற்றமாகும். அத்தகையோர் தொழுதாலும் அல்லாஹ் ஏற்றுக்கொள்வதில்லை.

ஆக, மும்மூன்று விசயங்களானாலும் அவற்றுள் ஆழமான பொருட்செறிவும், கருத்துகளும், அர்த்தங்களும் உள்ளன என்பதை நாம் உணர்ந்து நம்முடைய அன்றாட வாழ்க்கையில் ஏற்று-விலகி நடப்பதற்குத் தூயோன் அல்லாஹ் அருள்புரிவானாக!
                                                                                                                                                                                (தொடரும்)