வியாழன், 17 மார்ச், 2016

வேலையை விட்டுவிட்டாள்...! (சிறுகதை)

-நூ. அப்துல் ஹாதி பாகவி

ஆயிஷா-அன்வர் தம்பதியருக்கு எழில் கொஞ்சும் சென்னை மாநகரில் உற்றாரும் உறவினரும் பெற்றோரும் மற்றோரும் கூடி நின்று முகமலர்ந்து அன்போடு வாழ்த்த, இனிதே திருமணம் நடைபெற்றது. நண்பர்களும் தோழிகளும் அன்பின் அடையாளமாய்ப் பரிசுப் பொருள்களை வழங்கி மனதார வாழ்த்துத் தெரிவித்துவிட்டுச் சென்றனர்.

புதுமணத் தம்பதிகள் ஆயிஷாவும் அன்வரும் பொருத்தமான ஜோடி என வாழ்த்தாத நெஞ்சமில்லை. வாழ்த்துச் சொல்லும் நண்பர்களுக்குப் பஞ்சமில்லை. ஒரு வார காலம் உருண்டோடியதே தெரியவில்லை. பேருவகையோடும் பெரு மகிழ்ச்சியோடும் பொழுது கழிந்தது.  விடுப்பு நாள்கள் விரைவில் கரைந்தன. அலுவலகத்தில் இதற்குமேல் விடுப்புக்கு அனுமதியில்லை. இரண்டு நாள்களுக்கு முன்பே மேலாளர், ஆயிஷாவுக்குச் செல்பேசியில் அழைப்பு விடுத்திருந்தார்.  அன்று திங்கள்கிழமை. வேக வேகமாகத் துயிலெழுந்து அதிகாலைத் தொழுகையை வழமைபோல் இருவரும் நிறைவேற்றினர். பின்னர், தன் அன்பான மனைவி ஆயிஷா சமைத்த சிற்றுண்டியை அன்வர் மனதார ருசித்துச் சாப்பிட்டான். இருவரும் ஒன்றாக அலுவலகம் செல்லத் தயாராயினர்.

திருமணத்திற்குப் பிறகும் அலுவலகப் பணியைத் தொடரப்போவதாகத் திருமணத்திற்கு முன்பே மாப்பிள்ளையிடம் பெண்வீட்டின் சார்பாக ஒப்பந்தம் போடப்பட்டுவிட்டது. அந்த நிபந்தனையை ஏற்றுக்கொண்டுதான் திருமணத்திற்கு ஒத்துக்கொண்டான் அன்வர். 

அன்வர் தன் அலுவலகத்திற்குச் செல்லும் வழியில்தான் ஆயிஷா செல்லும் அலுவலகம் இருந்தது. இது நாள் வரை தன்னுடைய பைக்கின் பின்னால் அமர யாருமின்றித் தனியாகச் சென்றான். தனியாகச் செல்லும்போது வழியில் யாருக்கேனும் லிஃப்ட் கொடுப்பது அவனது வழக்கம். இன்று முதல் அவனுடைய பைக்கின் பின் இருக்கையில் அமர அவனுடைய நெஞ்சில் நிறைந்த மனைவி ஆயிஷா வந்துவிட்டாள். மனைவியோடு பேசிக்கொண்டே சென்ற அன்வர், பிரதானச் சாலையில் மிகப் பிரம்மாண்டமாக வான்முட்டி நிற்கும் ஒரு கட்டடத்தின்முன் தன் வண்டியை நிறுத்த, ஆயிஷா இறங்கிக்கொண்டாள்.

தன் கண்ணில் நிறைந்த கணவர் அன்வருக்கு அன்போடு சலாம் உரைத்து, அவன் புறப்படும் வேளையில், ஃபீ அமானில்லாஹ் (அல்லாஹ்வின் பாதுகாப்பில் செல்வீர்) என்று கூறிப் புன்னகையோடு அனுப்பி வைத்தாள் ஆயிஷா. இருவரும் பிரிய மனமின்றிப் பிரிந்து சென்றனர்.

அன்வர்-ஆயிஷா இருவரும் நன்கு படித்தவர்கள்; இஸ்லாமிய நெறியையும் பண்பாட்டையும் அறிந்தவர்கள்; ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுப்பதும் பொறுத்துக்கொள்வதும் இருவரின் இயற்பண்பாகும். ஒருவர் மற்றவருக்குத் துணையாகவும் தூணாகவும் இருந்தனர். காண்போர் பார்த்து வியக்கும் அளவிற்கு அவர்களின் அன்னியோன்னியம் இருந்தது.

காலம் உருண்டோடியது. இரண்டு பிள்ளைகளுக்குத் தாயானாள் ஆயிஷா. அலுவலகத்தில் வழங்கப்பட்ட ஆறு மாத விடுப்புக் காலத்தில் தன் பிள்ளைகளுக்குத் தாய்ப்பாலூட்டிப் பேணி வளர்த்தாள். தான் விரும்பிய பள்ளிக்கூடத்தில் சேர்த்தாள். மாலையில் தன் அலுவலகத்திலிருந்து திரும்பி வந்ததும், பிள்ளைகளைக் கவனித்துக் கொள்வதும் அவர்களுடன் பொழுதைக் கழிப்பதும்  அவளின் இயல்பாக மாறிப்போனது.

திடீரென ஒரு நாள் அவர்களுடைய வாழ்க்கையில் ஒரு புயல் வந்தது. அது அவர்களின் வாழ்க்கையையே புரட்டிப்போட்டுவிட்டது. ஆம்! ஆயிஷாவுக்கு வேறோர் அலுவலகத்தில் பணி மாற்றம். அன்வர்-ஆயிஷா இருவரும் தம் அலுவலகம் செல்லும்போது ஒரே பைக்கில் ஒட்டி உறவாடிச் செல்வது வழக்கம். இனி அந்த இனிமையான பொழுது அவர்களுக்குக் கிட்டாது. அன்வரின் அலுவலகம் ஒரு திசையிலும் ஆயிஷாவின் அலுவலகம் எதிர்திசையிலும் இருந்தன.

அதிகாலையில் எழுந்து தொழுதுவிட்டு, வேகமாகச் சமைத்து, அதை உணவுப் பெட்டிக்குள் வைத்து, பிள்ளைகளுக்கும் கணவருக்கும் கொடுத்தனுப்பிவிட்டு, தனக்கும் உணவை எடுத்துக்கொண்டு அலுவலகப் பேருந்தில் ஏறி, அலுவலகம் செல்லத் தொடங்கினாள். அன்வர் தன் அலுவலகம் செல்லும்வேளையில் தன் பிள்ளைகளைப் பள்ளிக்கூடத்தில் விட்டுச் செல்வது வாடிக்கையானது.

அலுவலகப் பணி முடிந்து, அன்வர் வீட்டிற்கு வந்து, தன் பிள்ளைகளைக் கவனித்துக் கொள்ளலானான்.  வீட்டுப் பாடங்களை எழுத வைத்து, அவர்களுடைய பாடங்களைச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தான். இடையிடையே கடிகாரத்தை நோட்டமிட்டு, வாசலைப் பார்த்துக் கொண்டிருந்தான். இரவு மணி எட்டை எட்டியது. அப்போதுதான் ஆயிஷா வீடு வந்து சேர்ந்தாள்.  மிகவும் களைப்பாக இருந்தாள்.

ஆயிஷா! ஏன் இவ்வளவு நேரமாச்சு? என்னாச்சு? என்று அன்போடு கேட்டான் அன்வர்.

எல்லாம் போக்குவரத்து நெரிசல்தான் என்று ஒற்றை வரியில் வெற்று வார்த்தையாய் விடை பகன்றாள் ஆயிஷா.

காலம் வேகமாகச் சுழல, அன்வர்-ஆயிஷா தம்பதியருக்குத் திருமணமாகிப் பத்து வருடங்கள்  கரைந்துவிட்டன. இப்போதெல்லாம் ஆயிஷா வீட்டிற்குத் தாமதமாக வருவதால், வந்து சமைக்க இயலாது போய்விட்டது. எனவே அவள் வரும்போது இரவுணவை உணவகத்திலேயே வாங்கி வந்துவிடுகின்றாள். காலையில் மிகவும் துரிதமாக அலுவலகம் செல்ல வேண்டி இருப்பதால் காலையிலும் உணவு சமைக்க முடிவதில்லை. காலையில் ஒரு சிற்றுண்டிக் கடையில் உணவை வாங்கி, அன்வர் தன் பிள்ளைகளுக்குக் கொடுத்துவிடுகின்றான். ஆயிஷாவும் அன்வரும் தத்தம் அலுவலகத்தில் அமைந்துள்ள கேண்டீனில் பகலுணவை முடித்துக் கொள்கின்றார்கள். இரவில்  வீடு திரும்பும்வேளையில் ஏதாவது ஓர் உணவகத்தில் தன் வீட்டிற்குத் தேவையான உணவை ஆயிஷா வாங்கி வந்துவிடுகின்றாள்.

ஞாயிற்றுக்கிழமை மட்டும் ஆட்டிறைச்சி வாங்கி, தன் வீட்டிலேயே சமைக்கத் தொடங்கினாள் ஆயிஷா. அன்று ஒரு நாள் மட்டும்தான் அனைவருக்கும் வீட்டு உணவு. அன்வர் படித்தவன்; இஸ்லாமிய நெறிமுறைகளையும் அறிந்தவன். எல்லாவற்றையும் எளிதாக எடுத்துக்கொண்டான்.
 
அன்றொரு நாள் அன்வரின் சின்னம்மா சித்தீக்கா வந்திருந்தாள். இருவருக்கும் என்ன செய்வதென்றே தெரியவில்லை. நீ இன்றைக்கு லீவு போடு என்று ஆயிஷாவிடம் சொல்ல, இன்றைக்கு ஆஃபீசில் ஒரு முக்கியமான வேலை இருக்கு. நீங்களே லீவு போட்டு, உங்க சின்னம்மாவோட பேசிக்கொண்டிருங்கள் என்று கூறினாள். இருவருக்கும் விடுப்பு எடுக்க முடியாத நிலை. தேவையான பொருள்களை வாங்கிக் கொடுத்துவிட்டு, சமைத்துண்ணுமாறு சொல்லிவிட்டு இருவரும் தத்தம் அலுவலகம் சென்றுவிட்டனர். சித்தீக்கா வெறுமையாய் உணர்ந்தாள். இத்தனை ஆண்டுகள் கழித்து வந்துள்ள எனக்கு இதுதான் இவர்கள் கொடுக்கும் மரியாதையா என்று நினைத்தவளாய் மறுநாளே புறப்பட்டுவிட்டாள். நீண்ட காலத்திற்குப் பிறகு சின்னம்மா தன் வீட்டிற்கு வந்தும் அவரைச் சரியாகக் கவனித்துக்கொள்ள முடியவில்லையே என்ற ஆதங்கத்தில் அன்வர் தன் மனைவி ஆயிஷாவைச் சற்றுக் கடுமையாகப் பேசிவிட்டான். அதைப் பொறுத்துக்கொள்ள முடியாத ஆயிஷா சற்று நிதானம் தடுமாறி, தன் அன்பிற்குரிய கணவனை எதிர்த்துப் பேசி, அவனது சினத்தைத் தூண்டிவிட்டாள். ஆனாலும் அது அவளுடைய மனதை உறுத்திக்கொண்டே இருந்தது. என்ன இருந்தாலும், நான் அவரை அப்படிப் பேசியிருக்கக்கூடாது என்று கருதினாள். "சொர்க்கமும் நரகமும் கணவனின் காலடியில்'' என்று தன் தாய் சொல்லிக் கொடுத்த நபிமொழி நினைவுக்கு வந்து, அவளை மீண்டும் மீண்டும் வருத்தியது.  நீண்ட நேரமாகியும் கண்ணில் உறக்கமில்லை; மனதில் நிம்மதி இல்லை.

இதுபோன்ற சோகமான நேரங்களில் அவள் தன் உற்ற நண்பனாகக் கருதுவது, திருக்குர்ஆனைத்தான். அவளுடைய சோர்வுக்கும் சோகத்திற்கும் மருந்தூட்டும் விதமாக அமைவது அதுவே. எனவே பட்டென எழுந்து, அங்கத்தூய்மை செய்துகொண்டு திருக்குர்ஆனை எடுத்து ஓதத் தொடங்கினாள். அந்நிசா எனும் அத்தியாயத்தை ஓதிக்கொண்டே வந்தபோதுதான் அந்த  இறைவசனத்தைப் படித்தாள். அதுவே அவளின் வாழ்க்கையை மாற்றிப்போட்டது.

(ஆண், பெண் இருபாலாரில்) ஆண் பாலாரை(ப் பெண்பாலாரைவிட) அல்லாஹ் மேன்மையாக்கி வைத்திருப்பதுடன் (ஆண்பாலார்) தங்கள் பொருள்களை(ப் பெண் பாலாருக்கு)ச் செலவு செய்வதனாலும் ஆண்கள்தாம் பெண்களை நிர்வகிக்கக் கூடியவர்களாக இருக்கின்றனர். ஆகவே, நல்லொழுக்கம் உள்ள பெண்கள் (அல்லாஹ்வுக்கும் தங்கள் கணவனுக்கும்)  பணிந்தே நடப்பார்கள். (தங்கள் கணவன்) மறைவாக உள்ள சமயத்தில் அல்லாஹ்வின் பாதுகாப்பைக் கொண்டு (தங்களையும் கணவனின் மற்ற பொருள்களையும்) பேணிக்காத்துக் கொள்வார்கள். (4: 34)

இந்த இறைவசனம் அவளது சிந்தனையைத் தூண்டியது. மீண்டும் மீண்டும் அந்த வசனம் குறித்துச் சிந்தித்தாள். மீண்டும் அதைப் படித்தாள். தான் இவ்வளவு நாள் வாழ்க்கையை இழந்துவிட்டதாக உணர்ந்தாள். தன் பிள்ளைகள் தாய்ப்பாசத்திற்காக ஏங்குவதையும் தன் கணவன் மனைவியின் உபசரிப்பிற்காகவும் அன்பான வார்த்தைகளுக்காகவும் ஏங்குவதையும் உணர்ந்தாள். பணிக்குச் செல்வதால் நல்லதொரு தாயாக, நல்லதொரு மனைவியாக தன்னால் இருக்க முடியவில்லையே என எண்ணி எண்ணிக் குமைந்தாள். வாழ்க்கையை இழந்து எதையோ தேடிக்கொண்டிருப்பதை விளங்கினாள். தீர்க்கமாக முடிவு செய்துகொண்டு உறங்கினாள். நிம்மதியான உறக்கம் அவளின் கண்களைத் தழுவியது.

அதிகாலை எழுந்து தொழுதுவிட்டு, தன் பிள்ளைகளுக்கும் கணவருக்கும் சமைக்கத் தொடங்கினாள். அக்காட்சியைக் கண்ட அன்வருக்கு ஆச்சரியம்.

என்ன ஆயிஷா, சமைக்கத் தொடங்கிவிட்டாய். அலுவலகம் செல்லவில்லையா? என்று அக்கறையோடு கேட்டான்.

நான் வேலையை விட்டுவிடுவதாக முடிவு செய்துவிட்டேன். இனி நான் வீட்டில் இருந்துகொண்டு உங்களையும் பிள்ளைகளையும் கவனித்துக்கொள்ளப் போகிறேன் என்று தீர்மானமாகக் கூறினாள் ஆயிஷா.

ஆயிஷாவின் தீர்க்கமான முடிவைக் கேட்ட அன்வர் மகிழ்ச்சியில், அல்ஹம்து லில்லாஹ் அலா குல்லி ஹால் என்று கூறினான்.

அன்வர் தன் வீட்டிலேயே தன் மனைவி சமைத்த சிற்றுண்டியை வயிறார, மனதார உண்டுவிட்டு, தன் பிள்ளைகளை அழைத்துக்கொண்டு பள்ளிக்கூடத்தில் விட்டுவிட்டு தன் அலுவலகத்தை நோக்கிச் சென்றான்.
அதற்குள் ஆயிஷா வீட்டு வேலைகளையெல்லாம் முடித்துக்கொண்டு தன் பிள்ளைகளையும் கணவரையும் அன்போடு வரவேற்கத் தயாரானாள். அன்வர் தன் அலுவலகப் பணியை முடித்துக்கொண்டு பிள்ளைகளை அழைத்துக்கொண்டு, தன் வருகைக்காக ஆவலோடு காத்திருக்கும் மனைவியைக் காண மகிழ்ச்சியோடு தன் இல்லம் நோக்கி விரைந்தான். 

 ====================






கருத்துகள் இல்லை: