-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.
எண்ம உலகில் வாழ்ந்துகொண்டிருக்கிற இன்றைய இளம் தலைமுறையினருக்குப் பொறுமை, சகிப்புத்தன்மை, அன்பை பரிமாறிக் கொள்ளும் தன்மை முதலானவை குன்றி வருகின்றன. குழந்தைகளை அன்போடு கவனித்துக் கொள்ளுதல், அவர்களோடு நேரம் செலவழித்தல், நீதிக் கதைகளைச் சொல்லுதல், ஒழுக்கங்களைப் போதித்தல் முதலியவற்றைச் செய்ய அவர்களுக்கு நேரமில்லை. துரித உலகில் துரித உணவைச் சாப்பிட்டுவிட்டு, மிகத் துரிதமாக அலுவலகம் சென்று, அங்கிருந்து வீட்டுக்குத் திரும்பியதும் மிகத் தாமதமாகச் சாப்பிட்டுவிட்டு, நடுநிசியில் தூங்கப்போகும் தலைமுறை இது.
கடந்த காலங்களில் நம் உறவினர்களுள் யாருக்கேனும் உடல்நிலை சரியில்லையென்றால், நோய்வாய்ப்பட்டால் மற்ற உறவினர்கள் அனைவரும் அவரை நலம் விசாரிக்க ஓடோடி வந்துவிடுவார்கள். அவர்களுள் சிலர் இரண்டு மூன்று நாள்கள் அங்குத் தங்கியிருந்து, வேண்டிய உதவிகளையெல்லாம் செய்துவிட்டுத் திரும்பிச் செல்வார்கள்; அவரை அக்கறையோடு கவனித்துக்கொள்வார்கள். ஆனால் தற்காலத்தில் அத்தகைய அனுசரணையான நிலையைப் பார்க்க முடியவில்லை. ஒவ்வொருவரும் தத்தம் வேலையைக் கவனிக்க வேண்டிய நிர்ப்பந்த நிலையில் சிக்குண்டு இருப்பதால் யாரும் யாரையும் கவனிக்க இயலவில்லை; அன்போடும் ஆதரவோடும் விசாரிக்க முடியவில்லை.
பெற்றெடுத்த பிள்ளையின் அழுகையை அமர்த்தத் தெரியவில்லை; அதற்கான பொறுமையும் அவர்களுக்கு இல்லை. எனவே செல்பேசியைக் குழந்தையின் கையில் கொடுத்துவிட்டு, அடுத்த வேலையைப் பார்க்கத் தொடங்கிவிடுகின்றார்கள் இன்றைய அம்மாக்கள். அப்படியிருக்கும்போது பிள்ளைகள் வளர்ந்து வரும்போது அவர்களின் அந்தப் பருவத்திற்கேற்பக் கதைகளைச் சொல்லி, நல்லொழுக்கத்தைப் போதிப்பதற்கு எங்கே நேரம் இருக்கிறது? தொடக்கத்திலிருந்தே செல்பேசியைக் கொடுத்துப் பழக்கிவிடுவதால், பெற்றோரின் பேச்சைப் பிள்ளைகள் கேட்பதில்லை.
புகுந்த வீட்டில் மாமனார், மாமியார் ஆகியோரைச் சமாளித்து, அவர்களுக்கேற்றார்போல் சமைத்துக் கொடுத்து, அவர்களுக்கு முழுமையாகப் பணிவிடைகள் செய்து, அவர்களின் அன்பைப் பெற்று, அதன்மூலம் கணவனின் அன்பைப் பெறப் போராடிய காலம் கடந்துசென்று விட்டது. திருமணப் பேச்சு நடைபெறுகிறபோதே, ‘மாப்பிள்ளை தனிக்குடித்தனம் வந்துவிட வேண்டும்’ என்ற நிபந்தனையை விதித்துத்தான் மாப்பிள்ளையையே முடிவுசெய்கின்றார்கள்; திருமணம் செய்கின்றார்கள். தப்பித் தவறி கணவன் வீட்டில் மாமியார்-மாமனார் இருந்தால் சில நாள்களிலேயே அவர்களை முதியோர் இல்லத்திற்கு அனுப்பிவிட்டுத்தான் மறுவேளை பார்க்கின்றார்கள்; அல்லது தனிக்குடித்தனம் சென்றுவிடுகின்றார்கள். அன்பு, கருணை, பாசம், பிணைப்பு முதலானவை முற்றிலும் தேய்ந்து மனிதாபிமானமும் மறைந்துபோய்விட்டது.
விபத்தொன்றில் உறவினர் ஒருவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டுவிட்டதென்றால் அவர் குணமடைகின்ற வரை வீட்டில் வைத்து அவருக்கான பணிவிடைகளைச் செய்து, மருந்து மாத்திரைகளைக் கொடுத்து அவரை அன்போடு கவனித்து வருவார்கள். கடந்த காலங்களில் இவ்வாறு கோமா-தீரா மயக்கநிலைக்கு ஆட்பட்டு, பல்லாண்டுகள் கழித்து நினைவுதிரும்பியோர் இருக்கின்றனர். ஆனால் இன்றைய காலத்தில், ‘இவருக்குச் சுயநினைவு திரும்புவது சாத்தியமில்லை’ என்று மருத்துவர்கள் கூறிவிட்டால், அவருடைய உறவினர்கள் உடனடியாக அவரது உடலின் பாகங்களை மருத்துவமனையிலேயே விற்றுவிட்டு, உடலை வாங்கி வந்து, புதைத்துவிடுகின்றார்கள்.
ஆக இன்றைய அவசர யுகத்தில் யாரும் யாரையும் கவனிக்க நேரமில்லை. அதை இன்னொரு வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் யார்மீதும் யாருக்கும் அன்பு இல்லை; அக்கறை இல்லை. நாம் மட்டும் நல்லா இருந்தால் போதும்; பிறர் எப்படிப் போனால் எனக்கென்ன என்ற சுயநலச் சிந்தனைக்குள் சிக்குண்டு கிடக்கின்றார்கள்.
இதற்கான தீர்வு என்ன?: அன்பும் கருணையும் நம் உள்ளத்தில் பிறக்க வேண்டும்; யாரைக் கண்டாலும் அவர்கள் மீது நமக்கு அன்பு ஏற்பட வேண்டும்; பிற மனிதர்கள்மீது நமக்கு நேயம் ஏற்பட வேண்டும். எனவே அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கற்றுத்தந்த இந்தப் பிரார்த்தனையை நாம் அனைவரும் நாள்தோறும் வேண்டுவதுதான் அதற்கான தீர்வாகும். “அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக்க ஹுப்பக்க வஹுப்ப மய் யுஹிப்புக்க வல் அமலல்லதீ யுபல்லிஃகுனீ ஹுப்பக்க. அல்லாஹும்மஜ்அல் ஹுப்பக்க அஹப்ப இலய்ய மின் நஃப்ஸீ வஅஹ்லீ வமினல் மாயில் பாரித்” என்று கூறி தாவூத் அலைஹிஸ்ஸலாம் பிரார்த்தனை செய்து வந்தார்கள் என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.
பொருள்: அல்லாஹ்வே! உனது நேசத்தையும், உன்னை நேசிப்போரின் நேசத்தையும், உனது நேசத்தை எனக்குப் பெற்றுத் தரக்கூடிய (நற்) செயலையும் உன்னிடம் வேண்டுகின்றேன். என் உயிரையும், என் குடும்பத்தாரையும், குளிர்ந்த நீரையும்விட உன் நேசத்தையே எனக்கு மிகுந்த நேசம் நிறைந்ததாக ஆக்குவாயாக! (திர்மிதீ: 3490/ 3402)
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கற்றுத்தந்த இந்தப் பிரார்த்தனைக்குள் பற்பல பொருள்கள் உள்ளன. ‘அல்லாஹ்வின் அன்பை அடையச் செய்யும் செயல்கள்’ என்னென்ன என்று பார்த்து அவற்றைச் செய்துவந்தால் அல்லாஹ்வின் அன்பை நாம் பெறுவதோடு, நமக்குள்ளும் அன்பு வந்துவிடும். அந்த அன்புமிக்க மனத்தால்தான் நாமும் அன்போடு வாழ்ந்து பிறரையும் அன்போடு கவனித்துக்கொள்ள முடியும். ஆக நமக்குத் தேவை அன்பு நிறைந்த மனம்தான். அது இருந்தால் பிறர்மீது நாம் அன்பு செலுத்தத் தொடங்கிவிடுவோம்.
அல்லாஹ்வின் அன்பைப் பெற என்ன வழி?: உறவினர்களுக்கு, ஏழைகளுக்கு, அநாதைகளுக்கு உதவி செய்தல், பெற்றோரை மதித்தல், மாமியார்-மாமனார் ஆகியோருக்குப் பணிவிடை செய்தல், உறவினர்களோடு சேர்ந்து வாழ்தல், சகோதர-சகோதரிகளுக்கு இடையே இணக்கத்தைக் கடைப்பிடித்தல், தனக்கு விருப்பமானதையே தம் சகோதரருக்கும் விரும்புதல், பிரிந்து கிடக்கும் குடும்பங்களுக்கு இடையே சமாதானத்தை ஏற்படுத்துதல் முதலான நற்செயல்களையெல்லாம் அல்லாஹ் விரும்புகிறான். எனவே அத்தகைய நற்செயல்களை நாம் செய்வதன்மூலம் அல்லாஹ்வின் அன்பைப் பெறலாம். அதைத்தான் மேற்கண்ட பிரார்த்தனையில் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கற்றுத்தந்துள்ளார்கள்.
சகிப்புத்தன்மை என்றால் என்ன?: சகிப்புத்தன்மை என்பது தவறுகளை அங்கீகரிப்பது அன்று. மாறாக, பிறரின் குறைகளையும், கருத்து வேறுபாடுகளையும், அவர்களால் ஏற்படும் சிரமங்களையும் அறிவுடனும் பொறுமையுடனும் கையாளும் உயர்ந்த பண்பாகும். பிறர் நம்மீது கோபப்படுகின்றபோது நாமும் அவர்கள்மீது கோபப்படாமல் அதைத் துணிவோடு எதிர்கொண்டு, சகித்துக்கொள்ளும் தன்மையே ஆகும்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்: “பலசாலி என்பவர் பிறரை மல்யுத்தத்தில் வீழ்த்துபவர் அல்லர். கோபம் ஏற்படும் நேரத்தில் தம்மைக் கட்டுப்படுத்திக்கொள்பவரே உண்மையான பலசாலி.” (புகாரீ, முஸ்லிம்) அல்லாஹ் கூறுகின்றான்: “நன்மையும் தீமையும் சமமாகாது. தீமையை நன்மையால் தடுத்து விடுவீராக! அப்போது உமக்கும் அவருக்கும் இடையே பகையுணர்வு இருந்தவர்கூட நெருங்கிய நண்பரைப் போல் ஆகிவிடுவார்.” (அல்குர்ஆன் 41: 34) ஒரு தீமைக்கு மற்றொரு தீமையால் பதிலளிப்பது எளிது. ஆனால், தீமையை நன்மையால் வெல்வதே இறைநம்பிக்கையாளரின் உயர்ந்த பண்பாகும். மேலும் அல்லாஹ் கூறுகின்றான்: “கோபத்தை அடக்கிக் கொள்வோரும், மக்களை மன்னிப்போரும் (இறையச்சமுடையோர் ஆவர்). அல்லாஹ் நன்மை செய்வோரை நேசிக்கிறான்.” (அல்குர்ஆன் 3:134)
கூட்டுக் குடும்பத்தில் வாழும்போது அவ்வீட்டின் உறுப்பினர்கள் பலரோடு சேர்ந்து, இணங்கி வாழ வேண்டிய நிர்ப்பந்த நிலை உள்ளது. அப்போது ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகப் பேசுவார்கள்; ஒவ்வொரு விதமாக நடந்துகொள்வார்கள்; ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான ‘சுவை’ இருக்கும். அவர்கள் அனைவரையும் சமாளித்து, சகித்து வாழ்வதே மிகப்பெரிய போராட்டம்தான். ஆனால் தனிக்குடும்பமாக வாழ்வதைவிடக் கூட்டுக் குடும்பத்தில் பலரின் தொல்லைகளையும் சகித்துக்கொண்டு வாழும் மருமகள்தான் அல்லாஹ்விடம் அதிகமான நன்மையைப் பெறுபவர் என்று சொன்னால் நம்புவீர்களா? நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்: “மக்களோடு கலந்து வாழ்ந்து, அவர்கள் தரும் தொந்தரவுகளைப் பொறுத்துக் கொள்ளும் இறைநம்பிக்கையாளர், மக்களோடு கலந்து வாழாமல், அவர்களின் தொந்தரவுகளைப் பொறுத்துக்கொள்ளாத இறைநம்பிக்கையாளரைவிட அதிகமான நன்மையைப் பெறுபவராவார்.” (இப்னுமாஜா: 4032/ 4022)
ஆகவே ஒரு குடும்பம் என்றால் பலர் இருக்கத்தான் செய்வார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகத்தான் இருப்பார்கள். அவர்கள் அனைவரையும் எதிர்கொண்டு, அவரவர் இயல்புக்கேற்ப இணங்கி வாழ்வதே சகிப்புத்தன்மை கொண்ட வாழ்க்கை. குடும்ப உறுப்பினர்களோடு இணக்கமாகப் பழகத் தெரிந்துகொண்டால் சமுதாய மக்களிடமும் இணக்கமாக வாழப் பழகிக்கொண்டுவிடலாம். பிறர்மீது அன்புகாட்டி, இனிமையாகப் பழகும் இயல்பையும் சகிப்புத்தன்மைகொண்ட மனத்தையும் நம் அனைவருக்கும் அல்லாஹ் அருள்வானாக.
============



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக