சனி, 19 டிசம்பர், 2015

எங்கள் பள்ளியில் மீலாது நிகழ்வு

எங்கள் பள்ளியில் மீலாது நிகழ்வு.

மழையும் மனிதனும்


           -மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி எம்.ஏ., எம்.ஃபில்.,

மனிதனின் அறிவுக்கும் ஆற்றலுக்கும் அப்பாற்பட்டவன்தான் இறைவன். அவனுடைய நுண்ணறிவுக்கும் ஆற்றலுக்கும் எதிரே மனிதன் என்னதான் போட்டிபோட்டாலும் இறுதியில் இறைவனின் ஆற்றல்தான் மிகைத்து நிற்கும். மனிதன் என்னதான் புதிய புதிய கண்டுபிடிப்புகளைக் கண்டறிந்தாலும் இறைவனின் நியதிக்கும் ஆற்றலுக்கும் எதிரே அவன் ஒன்றுமே இல்லை எனலாம்.

கடந்த காலங்களைவிட, அறிவியல் முன்னேற்றத்தின் உச்சாணியில் இருப்பதாகக் கூறிக்கொள்ளும் மனிதன், வருமுன் உரைக்கின்ற பல கருத்துகள் பொய்த்துப்போகின்றன என்பதை நாம்  இன்றும் கண்டுவருகிறோம். அவன் கூறுவது ஓரளவு ஒத்துவரும் என்பதுதான் உண்மை. மழை பொழியப்போகிறது என்று மனிதன் தன் விஞ்ஞான அறிவால் கூறுகின்றான். ஆனால் அதன் அளவு எவ்வளவு, எத்தனை பேர் அதன்மூலம் அழியப்போகின்றார்கள், எத்தனை பேர் அதன்மூலம் பயன்பெறப்போகின்றார்கள், எத்தனைபேரை அது அநாதையாக்கப்போகிறது, எத்தனைபேரை நாசமாக்கப்போகிறது-ஆகிய அனைத்தும் இறைவனின் அறிவுக்கும் ஆற்றலுக்கும் உரியது. இவையெல்லாம் மனித அறிவுக்கு அப்பாற்பட்டது. மனிதன் கணித்துக் கூறுவது ஓரளவு ஒத்துப் போகிறது என்று வேண்டுமானால் கூறலாம்.

இதைத்தான் பின்வரும் வசனத்தில் இறைவன் கூறுகின்றான்: நிச்சயமாக (உலக முடிவு) காலத்தைப் பற்றிய ஞானம் அல்லாஹ்விடத்தில் (மட்டும்)தான் இருக்கிறது. அவனே மழையை இறக்கி வைக்கிறான். அவனே கர்ப்பங்கüல் தரிப்பதையும் அறிவான். (அவனைத் தவிர) எவரும் நாளைக்கு அவர் என்ன செய்வார் என்பதை அறியமாட்டார். புவியின் எந்தப் பகுதியில் இறப்பார் என்பதையும் (அவனைத் தவிர) எவரும் அறியமாட்டார். நிச்சயமாக அல்லாஹ்தான் (இவற்றை) நன்கறிந்தவனாகவும் தெரிந்தவனாகவும் இருக்கிறான். (31: 34)


தண்ணீரால் அழிக்கப்பட்ட சமுதாய மக்களும் இப்புவியில் வாழ்ந்திருக்கின்றார்கள். தொள்ளாயிரத்து ஐம்பது ஆண்டுகள் ஏகத்துவப் பிரச்சாரம் செய்து நம்பிக்கை இழந்துபோன இறைத்தூதர் நூஹ் (அலை) அவர்கள் இறுதியில் இம்மக்களை அழித்துவிடு என்று அல்லாஹ்விடம் வேண்டியபோது, கடும் மழைப்பொழிவால் ஏற்பட்ட வெள்ளத்தால்தான் அவர்கள் அழிக்கப்பட்டனர். அது குறித்தும் திருக்குர்ஆன் பேசுகிறது.

இவ்வுலகில் உள்ள அனைத்தையுமே அல்லாஹ் தண்ணீரிலிருந்து படைத்ததாகக் கூறுகின்றான். ஊர்வன, பறப்பன, நடப்பன யாவும் தண்ணீரால்தான் படைக்கப்பட்டன. தண்ணீர்தான் படைப்புகள் அனைத்திற்கும் மூலப்பொருள் என்பதைப் பின்வரும் இறைவசனம் எடுத்தோதுகிறது:  "(மனிதர்களே!) ஊர்ந்து செல்லக்கூடிய (உயிர்ப் பிராணிகள்) அனைத்தையும் அல்லாஹ் ஒரேவித தண்ணீரைக் கொண்டு படைத்திருந்தபோதிலும் (அவை யாவும் ஒரே வகையாக இருக்கவில்லை.) அவற்றுள் சில தம் வயிற்றால் (



பாம்புகளைப் போல்) ஊர்ந்து செல்கின்றன. அவற்றுள் சில இரு கால்களால் நடக்கின்றன. அவற்றுள் சில நான்கு கால்களால் நடக்கின்றன. (இவ்வாறு) அல்லாஹ் தான் விரும்பியவற்றை (விரும்பியவாறு) படைப்பான். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தின்மீதும் மிக்க ஆற்றலுடையவன்.
'' (24: 45)

அந்தத் தண்ணீரையே மனிதர்கள் பருகுகின்றார்கள். அந்தத் தண்ணீரையே எல்லாவற்றிற்கும் பயன்படுத்துகின்றார்கள். அதை இறைவன் உப்புநீராக மாற்றிவிட்டால் பருக இயலுமா என்று அல்லாஹ் மனிதர்களைப் பார்த்து வினாத் தொடுக்கின்றான்: "நீங்கள் குடிக்கின்ற தண்ணீரைக் கவனித்தீர்களா? மேகத்திலிருந்து அதனை நீங்கள் பொழிய வைக்கின்றீர்களா? அல்லது நாம் பொழிய வைக்கின்றோமா? நாம் விரும்பினால் அதனை (நீங்கள் குடிக்க முடியாத) உப்புநீராக ஆக்கியிருப்போம். (இதற்கு) நீங்கள் நன்றி செலுத்த வேண்டாமா?''  (56: 68-70)


ஒரே பொருள், ஆக்கவும், அழிக்கவும் உயிர் வாழவும் பயன்படுவது விந்தையிலும் விந்தை. தண்ணீர் இறைவனின் மகத்தான அருட்கொடைகளுள் ஒன்று. அதை உரிய முறையில் பயன்படுத்துவதும் அதை வழங்கியமைக்காக அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துவதும் மனிதனின் கடமையாகும். அதைப் பாதுகாப்பதும் அதற்கான ஓடுபாதைகளைத் தடுக்காமல் இருப்பதும் அதற்கு நாம் கொடுக்கும் மரியாதையாகும். அதனுடைய ஓடுபாதையை நாம் தடுத்துக்கொண்டால், அது தேங்கிநிற்குமிடத்தை நாம் ஆக்கிரமித்துக்கொண்டால் அது நம் வாழ்க்கையையே கேள்விக்குறியாக்கிவிடும், ஏன், உயிரையே பறித்துக்கொள்ளும் என்பதை நாம் இந்த மழைக்காலத்தில் நேரடியாகப் பார்த்துப் புரிந்துகொண்டோம். அவரவர்க்குச் சேர வேண்டிய உரிமையை எவ்வாறு பறிக்கக்கூடாதோ அதேபோல் தண்ணீர் தேங்குமிடத்தை நாம் ஆக்கிரமித்துக்கொள்ளக்கூடாது. அல்லது ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட வீடுகளை நாம் வாங்கிக் குடியிருக்கக் கூடாது. அப்படி நாம் முறையாகச் செயல்பட்டால் ஆக்கிரமிப்பாளர்கள் அடங்குவார்கள். அவர்களின் பேராசையும் அடங்கும்.


இவை எல்லாவற்றையும் தாண்டி, மற்றொரு கோணத்தில் பார்க்கும்போது மனிதர்களிடம் பாவங்கள் ம-ந்துபோய்விட்டன. எங்கு நோக்கினும் பாவங்கள் மிகுந்து காணப்படுகின்றன. சில பாவங்களை அரசாங்கமே அனுமதிக்கிறது. இறைவன் தடுத்தவற்றை மீறி மனிதனும் அரசும் செயல்படுவதால் அந்த இறைவனின் கோபப் பார்வை மனிதர்கள்மீது அவ்வப்போது ஏற்படுகிறது. அதன் ஒரு பகுதிதான் கடுமையான இந்த அடைமழையும் அதனால் ஏற்பட்ட பெருவெள்ளமும் ஆகும். இதைப் பார்த்த பிறகாவது மனிதர்கள் பாவங்கள் செய்வதைவிட்டு விலகிக்கொள்ள முனைய வேண்டும். இல்லையேல் இதைவிடக் கடுமையான ஒரு பெருவெள்ளத்தை அனுப்புவது அல்லாஹ்வுக்கு அவ்வளவு சிரமமில்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

எங்கு நோக்கினும் மது குடித்தலும் மாதுவை அனுபவித்தலும் தங்கு தடையின்றி நடைபெறுகின்றது. இந்த இரட்டைப் பாவங்கள்தாம் மனித சமுதாயத்தையே சீரழிக்கக்கூடியவை. சமுதாயத்தைக் கட்டமைத்துள்ள ஒழுக்கத்தையும் பண்பாட்டையும் சிதைக்கக்கூடியவை. மது குடிப்பவனுக்கு எண்பது கசையடியும் விபச்சாரம் செய்பவனுக்கு நூறு கசையடியும் வழங்க வேண்டுமென்பது இறைவனின் ஆணை. விபச்சாரம் செய்வோர் மணமானவர்களாக இருந்தால் அவர்களைக் கல்லெறிந்து கொல்ல வேண்டும் என்பது இறைக்கட்டளை. இவ்வளவு கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தும் அப்பாவங்கள் அரசு அங்கீகாரத்துடன் நடப்பது எவ்வளவு வேதனையான விஷயம் என்பதை நாம் உள்ளூர உணர வேண்டும்.


ஏகத்துவக் கலிமாவை மொழியாதவர்கள் அப்பாவங்களைச் செய்தால், ஏகத்துவக் கலிமாவை  மொழிந்தவர்கள் தம் மனத்தால் அப்பாவங்களை வெறுக்க வேண்டும். ஏகத்துவக் கலிமாவை மொழிந்தவர்கள் யாரேனும் மது குடிப்பதையோ விபச்சாரம் செய்வதையோ கண்டால் நேரடியாகச் சென்று தடுக்க வேண்டும். அதற்கான சூழ்நிலை இல்லையென்றால், அது மிகப் பெரும் பாவம் என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். இன்றைய சூழ்நிலையில் மது இல்லாத இடமே இல்லை. இத்தகைய  சூழலில் வாழ்கின்ற முஸ்லிம்கள்கூட மதுவுக்கு அடிமையாகும் அபாயகரமான நிலை உள்ளது. 


எனவே நாம் நம்மைச் சார்ந்தவர்களைப் பாதுகாக்க மது, விபச்சாரம் ஆகியவற்றின் தீமையை அவ்வப்போது உணர்த்திக்கொண்டே இருக்க வேண்டும். மதுவைத் தொட்டவன் அந்நிய மாதுவைத் தொடுவான் அல்லது கொலை செய்யத் துணிவான். இது மதியை மயக்கும் மதுவின் தீய தூண்டலால் ஏற்படுவதாகும். எனவே நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.


இறைவனின் கோபப்பார்வையால் கொட்டித் தீர்த்த மழை இனி ஒருபோதும் நமக்கு வரக்கூடாது. இறைவனின் அருளாக மட்டுமே மழை வரவேண்டும். அதற்கு நாம் அனைவரும்  செய்த பாவங்களை எண்ணி வருந்தி, இறைவனிடம் பாவமீட்சி பெற இரு கைகளை அவனை நோக்கி உயர்த்த வேண்டும். நாம் செய்த குற்றங்களை நம் உள்ளங்கள் இசைவோடு ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை நம் அனைவருக்கும் நல்குவானாக!


==========================

என் செய்தியை வெளியிட்ட பத்திரிகைகளுக்கு நன்றி!

இனிய திசைகள், மரபு வழி, மணிச்சுடர் (நாளிதழ்), சமஉரிமை, மனாருல் ஹுதா ஆகிய பத்திரிகைகளுக்கு என் மனமார்ந்த நன்றி!







முகப்பு அட்டையில் என் செய்தியை வெளியிட்ட சமவுரிமை இதழுக்கு நன்றி.


என் செய்தியை வெளியிட்ட சமவுரிமை இதழுக்கு நன்றி.
வாழ்த்தியமைக்கு நன்றி

திங்கள், 23 நவம்பர், 2015

வாய்ப்புள்ளோர் அனைவரும் வருக!


“முஹம்மது பின் இஸ்ஹாக் பின் குஸைமா (ரஹ்) ஹதீஸ்கலையை விளங்கிய விதமும் விளக்கிய விதமும்”
எனும் தலைப்பில் நான் முனைவர் (Dr) பட்டத்திற்கான ஆய்வு மேற்கொண்டு சென்னைப் பல்கலைக் கழகத்தில் ஒப்படைத்திருந்தேன். அதற்கான நேர்முக வாய்மொழிப் பொதுத் தேர்வு (Viva Voce) 26. 11. 2015 அன்று இன்ஷா அல்லாஹ் நடைபெற உள்ளது. எனவே வாய்ப்புள்ளோர் அனைவரும் வந்து கலந்துகொள்ள வேண்டுமென அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
இடம்: சென்னைப் பல்கலைக் கழக மெரினா வளாகம்
(கண்ணகி சிலையை அடுத்துள்ள திருவள்ளுவர் சிலை எதிரில்)
கடற்கரைச் சாலை-காமராஜர் சாலை
சேப்பாக்கம், சென்னை-5
நேரம்: காலை 11 மணியளவில்
குறிப்பு: இமாம் முஹம்மது பின் இஸ்ஹாக் பின் குஸைமா (ரஹ்) அவர்கள் ஹிஜ்ரீ 223இல் பிறந்து 311இல் மறைந்த மாமேதை. இவர் ஈரானில் அமைந்துள்ள குராசான் மாகாணத்தில் உள்ள நைசாபூரில் பிறந்தவர். அம்மாகாணத்திலேயே தலைசிறந்த இமாமாகத் திகழ்ந்தார். இவர் புகாரீ, முஸ்லிம் ஆகிய இமாம்களின் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தொகுத்துள்ள ஸஹீஹ் இப்னு குஸைமா என்னும் நபிமொழித் தொகுப்பு நூல் மிகவும் புகழ்பெற்றது.


சனி, 21 நவம்பர், 2015

அல்ஹுதா அரபிக் கல்லூரியில் கருத்தரங்கு!


மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ், அல்ஹாஜ் சதீதுத்தீன் ஃபாஸில் பாகவி அவர்களின் தலைமையின்கீழ் இயங்கிவரும் அல்ஹுதா அரபிக் கல்லூரியில் 09 01 1437 (23.10.2015) ஆஷூரா நாளை முன்னிட்டு மன்பவுல்ஹுதா மாணவ மன்றத்தில் சமுதாய முன்னேற்றத்தில் பெரிதும் பங்கு வகிப்பது யார்? எனும் தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. அதில் அக்கல்லூரியின் மாணவர்கள் எஸ். சதாம் அன்வர் - உமராக்களின் களப்பணியே எனும் தலைப்பிலும்  ஐ. முஹம்மது ஷபீர் - பெண்களின் நல்லறமே எனும் தலைப்பிலும் எச். ரஹ்மத்துல்லாஹ் - செல்வந்தர்களின் கொடையே எனும் தலைப்பிலும் எம். முஹம்மது முஹ்யத்தீன் - இளைஞர்களின் எழுச்சியே எனும் தலைப்பிலும் எம். துஃபைல் அஹ்மது - உலமாக்களின் சேவையே எனும் தலைப்பிலும் பல்வேறு கருத்துகளை எடுத்துரைத்தனர். இனிய திசைகள் துணை ஆசிரியர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி இதில் நடுவராகப் பொறுப்பேற்று கருத்துரை வழங்கினார்.

மேலும் சமுதாய முன்னேற்றத்திற்குக் கல்வியின் அவசியம் என்ன, அதைப் பெற்றுக்கொண்டிருக்கின்ற மாணவர்களின் பொறுப்பு என்ன, அவர்கள் எப்படியெல்லாம் தம்மை முன்னேற்றப்படுத்திக்கொள்ள முனைய வேண்டும், எந்தெந்தத் துறைகளிலெல்லாம் முன்னேற வேண்டும், எதிலெல்லாம் மாணவர்களுக்கு வாய்ப்பிருக்கின்றது, மொழிபெயர்ப்புத் துறையின் பயன் என்ன, அதில் எவ்வாறு தம்மை ஈடுபடுத்திக்கொள்வது, பத்திரிகைத்துறையில் எவ்வாறு காலடி பதிப்பது உள்ளிட்ட பல்வேறு தகவல்களை மாணவர்களிடையே பரிமாறிக்கொண்டார். கருத்தரங்கில்  கலந்துகொண்டு தெளிவான கருத்துகளை எடுத்துரைத்த மாணவர்களுக்குக் கல்லூரி முதல்வர் சதீதுத்தீன் ஃபாஸில் பாகவி பரிசுகளை வழங்கிப் பாராட்டினார்.
                                                                                      -பாகவியார்

பிள்ளைகள்மீது அன்பு காட்டுவோம்!


மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி, எம்.ஏ., எம்.ஃபில்.,

ஒரு தாய் தன் பிள்ளையைப் பெற்றெடுத்து அதைக் கண்ணாரக் காண்கின்றபோது அடைகின்ற மகிழ்ச்சிக்கு அளவில்லை எனலாம். அந்த அளவிற்கு அளவிலா மகிழ்ச்சியடைகின்ற தாய் அப்பிள்ளைமீது அன்புகாட்டி, பாசத்தோடு வளர்க்கிறாள். அந்த அன்பிற்கும் பாசத்திற்கும் ஈடுசெய்ய முடியாது. அப்பிள்ளைக்கு ஒவ்வொரு வார்த்தையாகப் பேச்சைக் கற்றுக்கொடுப்பதையும் அப்பிள்ளை அதைத் தன் மழலைமொழியில் பேசுவதையும் கேட்டுக் கேட்டு இரசிப்பாள் தாய்.  குழலினிது யாழினிது என்ப தம் மக்கள் மழலைமொழி கேளா தவர்- என்று தமிழ்ப்புலவர் குறிப்பிடுகிறார். தேனினுமினிய இசை தரும் புல்லாங்குழல், யாழ் ஆகியவற்றைவிட ஒரு குழந்தை பேசும் மழலைமொழி அவ்வளவு இனிமையானது என்றுரைக்கிறார். இவ்வாறு ஒரு தாய் தன் பிள்ளையின் மழலைமொழி கேட்டு இரசித்து, சீராட்டிப் பாராட்டி, அன்போடும் பாசத்தோடும் வளர்த்த நிலை அன்று இருந்தது.இன்றைய அன்னையர்கள் தம் கூந்தலை அள்ளி முடியக்கூட நேரம் இல்லாமல் விரிந்த கூந்தலோடு அலுவலகத்திற்கு விரைந்தோடுவதைத்தான் காணமுடிகிறது. இப்படி இருக்கும்போது  தம் பிள்ளையின் மழலைமொழி கேட்டு இரசிக்க அவளுக்கேது நேரம்? இந்த அவசர உலகில் பிறக்கின்ற பிள்ளைகளுக்குத் தாயோடு ஒட்டி உறவாடக்கூடிய பாக்கியம் இல்லை.


தற்காலப் பெண்கள் அலுவலகப் பணிகளுக்குச் செல்வதால் அவர்கள் தாம் ஈன்றெடுத்த பிள்ளைகளோடு கழிக்கின்ற நேரம் குறைந்துவிட்டது. இரண்டு வயதிலேயே விளையாட்டுப் பள்ளி (பிளே ஸ்கூல்), மூன்று வயதிலேயே ப்ரீ கேஜி, எல்கேஜி, யூகேஜி-பாலர் வகுப்பு, அதன்பின் ஒன்று, இரண்டு, மூன்று எனப் படிப்பு தொடரும். இதனால் பிள்ளைகள் தம் குழந்தைப் பருவத்திலேயே தாயைவிட்டுப் பிரிந்துவிட நேரிடுகிறது. வீட்டிற்கு வந்தாலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் காண்பதிலேயே நேரம் கழிந்துவிடுகின்றது. பெண்களோ தம் அலுவலகப் பணி முடித்து வீட்டிற்கு வந்ததும் சமைத்தல், வீட்டைச் சுத்தம் செய்தல், உணவைப் பரிமாறுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதால் தம் பிள்ளைகளிடம் மனம் விட்டு உறவாட நேரமில்லை. தாயும் சேயும் மனம் விட்டுப் பேசி, சிரித்து மகிழவும் ஒருவருக்கொருவர் அன்பைப் பரிமாறிக்கொள்ளவும் போதிய நேரமில்லை என்பது நிதர்சன உண்மை.

இன்றைய பிள்ளைகள் தம் மீது அன்பு காட்ட ஆளின்றி, அன்பிற்காக ஏங்குகின்றனர். தம்மீது அன்புசெலுத்த ஆளில்லையே என்ற ஏக்கத்தில் வாடுகின்றனர். இதனால் அவர்களின் மனோநிலை முற்றிலும் மாறிவிடுகின்றது. மென்மையான போக்கு சிதைந்துபோய், வன்மமான மனோநிலைக்கு மாறிவிடுகின்றனர். இதனால்தான் இன்று கோபம் கொள்ளாத ஆளைக் காண்பதே அரிதாக உள்ளது.  காலையில்  சென்று மாலையில் இல்லம் திரும்பும் இல்லத்தரசிகளுக்குத் தம் பிள்ளைகளோடு அன்போடு உறவாட முடியுமா? அந்த மனோநிலை அவர்களுக்கு எப்படி ஏற்பட முடியும்? வீட்டிற்கு வந்ததும் வீட்டிலும் அவர்கள்தாமே பணிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது? அவர்களை எப்படிக் குறை சொல்ல முடியும்?

ஒரு பிள்ளைமீது அன்புகாட்ட தாய்க்குத்தான் அதிகமான பங்கு இருக்கிறதா? ஆம். தாய்தான்  தன் பிள்ளைமீது அதிகமாக அன்புகாட்ட முடியும். அதற்கான காரணம் அத்தகைய மென்மையான இயல்பில்தான் பெண் படைக்கப்பட்டிருக்கிறாள். எனவே அதற்கு ஏற்றவள் அவள்தான். இது குறித்து ஒரு நபிமொழியைக் காண்போம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கüடம் ஒரு மனிதர் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! நான் அழகிய முறையில் உறவாடுவதற்கு மிகவும் தகுதியானவர் யார்?'' என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், "உன் தாய்'' என்று கூறினார்கள். அவர், "பிறகு யார்?'' என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், "உன் தாய்'' என்று கூறினார்கள். அவர், "பிறகு யார்?'' என்று கேட்க, "உன் தாய்'' என்று கூறினார்கள். அவர், "பிறகு யார்?'' என்று கேட்க, அப்போது நபி (ஸல்) அவர்கள், "பிறகு, உன் தந்தை'' என்று கூறினார்கள். (நூல்: புகாரீ: 5971)
ஒரு பிள்ளை தன் தாயிடமே அதிகமாகக் கலந்துறவாடி, நட்பாக இருக்க வேண்டும் என்பதை நபி (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்கள். பின்னர் தந்தையிடம் நட்புகொண்டு அவர் சொல்லித் தருகின்ற போதனைகளைக் கேட்க வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டுகின்றார்கள். ஏனெனில் ஓர் ஆண் வெளியில் சென்று சம்பாதிக்கச் செல்பவன். ஆனால் ஒரு பெண்ணைப் பொறுத்தமட்டில் சம்பாதித்துக் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும் என்ற கடமையை இஸ்லாம் அவள்மீது விதிக்கவில்லை. எனவேதான் குழந்தையின்மீது அன்பு காட்டுவதும் அன்பு நெஞ்சத்தோடு உறவாடுவதும் தாயின் பொறுப்பாக ஆக்கப்பட்டுள்ளது என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும். அதனால்தான் தாயோடு உறவாடு என்று மும்முறை கூறினார்கள்.


நம் பிள்ளைகள் சிறுவர்களாக இருக்கின்றபோதே அவர்களுக்குத் தேவையான அறிவுரைகளையும் அறவுரைகளையும் போதனைகளையும் நற்குணங்களையும் பிஞ்சு நெஞ்சங்களில் விதைத்துவிட வேண்டும். அப்பருவத்தைக் கடந்துவிட்டால் பின்னர் அந்நெஞ்சங்களில் விதைப்பது கடினம். நாம் விதைப்பது முளைப்பது கடினம். முளைப்பது ஆழமாக வேரூன்றிப் பதிவது கடினம். ஆகவே அவர்களுடைய வளர்பருவத்திலேயே நல்லவற்றை ஊட்டி வளர்க்க வேண்டும். தீயவை என்னென்ன என்பதை எடுத்துக் கூறி அவற்றி-ருந்து விலகியிருக்க வேண்டும் என்பதையும் போதிக்க வேண்டும். இது ஒரு தந்தையின் கடமையாகும்.  


லுக்மான் (அலை) அவர்கள் ஒரு தந்தையாக இருந்து தம் மகனுக்குச் செய்த போதனைகளையும் அறிவுரைகளையும் திருக்குர்ஆனில் லுக்மான் எனும் 31ஆம் அத்தியாயத்தில் 13 முதல் 19 வரையிலான வசனங்களில் அல்லாஹ் கூறுவதைப் பாருங்கள்.

என் அருமை மைந்தனே! நீ அல்லாஹ்வுக்கு (ஒன்றையும்) இணையாக்காதே! ஏனென்றால், இணைவைப்பது நிச்சயமாக மிகப்பெரும் அநியாயமாகும். நீ அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்து; உன்னுடைய தாய் தந்தைக்கும் நன்றி செலுத்து. (நன்மையோ தீமையோ) அது ஒரு கடுகின் விதை அளவில் இருந்தாலும் சரி, அது (கரும்) பாறைகளுக்குள்ளோ அல்லது வானத்திலோ, பூமியின் ஆழத்திலோ (மறைந்து) இருந்தபோதிலும் (மறுமையில் கணக்குக் கேட்கும்போது) நிச்சயமாக அல்லாஹ் அதையும் கொண்டு வந்துவிடுவான்.


தொழுகையைக் கடைப்பிடி. நன்மையான செயல்களை ஏவு. தீமையான செயல்களிலிருந்து (மனிதர்களை) விலக்கு. அதில் உனக்கேற்படும் சிரமத்தைப் பொறுமையுடன் சகித்துக்கொள். நிச்சயமாக இது எல்லாவற்றிலும் வீரமிக்க செயலாகும். (பெருமை கொண்டு) உன் முகத்தை மனிதர்களைவிட்டுத் திருப்பிக் கொள்ளாதே! பூமியில் பெருமையடித்துக் கொண்டு நடக்காதே! நிச்சயமாக கர்வம் கொண்டு பெருமையடிக்கும் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை. உன் நடையில் (பெருமையும் கர்வமுமின்றி) நடுநிலையை விரும்பு.  உன் சப்தத்தைத் தாழ்த்திக்கொள். ஏனென்றால், சப்தங்களிலெல்லாம் மிக்க வெறுக்கத்தக்கது கழுதையின் (உரத்த) சப்தமே ஆகும்.


இந்த அறிவுரையை ஒவ்வொரு தந்தையும் தன் மகனுக்குப் போதிப்பது கட்டாயக் கடமையாகும். இதையெல்லாம் பிஞ்சு மனதில் பதிய வைத்துவிட்டால் உங்கள் பிள்ளை உங்களின் பேச்சைக் கேட்டு உங்கள் வார்த்தைகளை மதித்து நடப்பான். எனவே இதற்காக நீங்கள் நேரத்தை ஒதுக்கத்தான் வேண்டும். காட்டில் வளர்கின்ற எத்தனையோ நஞ்சு மரங்கள் தாமாக வளர்கின்றன. ஆனால் நாட்டில் வளர்கின்ற பயனுள்ள மரங்களுக்கு மனித உழைப்பு அவசியம். அதுபோலவே நம் பிள்ளைகள் கெட்டுப்போக நாம் எதுவும் செய்யத் தேவையில்லை. 

அதேநேரத்தில் அவர்கள் நல்ல பிள்ளைகளாகவும் சமுதாயத்திற்குப் பயனுள்ள பிள்ளைகளாகவும் உருவாக வேண்டுமென்றால் அதற்காக நாம் நேரம் ஒதுக்கத்தான் வேண்டும். அவர்களோடு அன்பாகப் பேசி அவர்களின் மனோநிலையைப் புரிந்துகொண்டு அதற்கேற்பக் கொஞ்சம் கொஞ்சமாகப் போதிக்க வேண்டும். இப்படிச் செய்தால் நம் பிள்ளைகள் எப்போதும் நம்மோடு இருப்பார்கள். நமக்கு நன்மையைப்  பெற்றுத் தரும் பிள்ளைகளாக உருவாகிவிடுவார்கள்.


ஓடி விளையாடு பாப்பா என்று பாரதி, ஒரு சின்னக் குழந்தையை அழைத்துப் பாடுவதேன்? பெரியோரின் நெஞ்சங்களில் எக்கருத்தையும் புதிதாகப் பதிய வைக்க முடியாது. பிஞ்சு உள்ளங்களில்தான் நல்ல நல்ல கருத்துகளைப் பதிய வைக்க முடியும். எனவேதான் அவர் சின்னப்பிள்ளையை அழைத்து, தம் கருத்துகளைப் பதிய வைக்க முற்படுகிறார். காலியாக உள்ள குறுவட்டில்தான் (சி.டி) எதையும் பதிய வைக்க முடியும். நிறைந்திருக்கின்ற குறுவட்டில் எதையும் பதிவு செய்ய முடியாது. அதுபோல் காலியாக உள்ள பிள்ளைகளின் இளநெஞ்சில் தேவையான நற்கருத்துகளைப் பதியவைத்துவிட்டால் அதன் பயனாக அவர்களின் வாயிலிருந்து வருகின்ற வார்த்தைகளும் நல்லனவாகவே இருக்கும். அவர்கள் நல்ல பிள்ளைகளாக உருவாகிவிடுவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. எனவே ஒரு பிள்ளை நல்ல பிள்ளையாக உருவாக தாயின் அன்பான வளர்ப்பும் தந்தையின் நல்லுரைகளும் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்பதை நாம் உணர வேண்டும். எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கயிலே, அது நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் அன்னை வளர்ப்பினிலே-எனும் கவிஞரின் கவிதை வரிகள், தாயின் அன்பான வளர்ப்பில்தான் ஒரு பிள்ளை நல்ல பிள்ளையாக உருவாக முடியும் என்பதைச் சுட்டிக்காட்டுகின்றன.  


நம் நாட்டின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளான நவம்பர் 14 ஆம் நாளைக் குழந்தைகள் நாளாகக் கொண்டாடி வருகிறோம். அவர் குழந்தைகள்மீது கொண்டிருந்த அன்பின் காரணமாகவே அதை நாம் குழந்தைகள் நாளாகப் பேணுகிறோம். ஆகவே நம் பிள்ளைகள்மீது நாம் காட்டுகின்ற அன்பு அவர்களை அன்புள்ளம் கொண்டோராகவும் மென்மையான உள்ளம் கொண்டோராகவும் ஏழைகள்மீது இரக்கம் கொள்வோராகவும் உருவாக்கும்.  இது ஒரு வகையில் நம் நாட்டில் பரவியுள்ள தீவிர உள்ளம் கொண்டோரைக் குறைக்கும் உத்தியாகும். எனவே நாம் ஈன்றெடுத்த பிள்ளைகள்மீது அன்புகாட்டுவோம். 






செவ்வாய், 10 நவம்பர், 2015

நபிகளார் நவின்ற மூன்றுகள் (தொடர் 25)


      (அனுமதி பெறவேண்டிய மூன்று தருணங்கள்)

மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி எம்.ஏ., எம்.ஃபில்.,

இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இராக்வாழ் மக்களுள் ஒரு குழுவினர், இப்னு அப்பாஸ் அவர்களே!
"இறைநம்பிக்கைகொண்டோரே! உங்களுடைய பணியாட்களும், உங்களுள் பருவமடையாத (சிறிய) பிள்ளைகளும் (நீங்கள் திரைக்குள் அந்தரங்கமாக இருக்கக்கூடிய) மூன்று தருணங்களில் உங்களிடம் அவர்கள் (வருவாராயின் உங்களுடைய) அனுமதியைக் கோரவேண்டும். (அந்தத் தருணங்களாவன: ஃபஜ்ர்) அதிகாலைத் தொழுகைக்கு முன்னரும் (சிறுஓய்விற்காக உங்கள் வழமையான) ஆடைகளைக் களைந்திருக்கக்கூடிய (ளுஹர்) பகல் வேளையிலும், "இஷா' நேரத்தில் (இரவுத்) தொழுகைக்குப் பின்னரும் ஆகிய (இம்)மூன்று தருணங்களும் நீங்கள் திரைக்குள் அந்தரங்கமாக இருக்கக்கூடிய நேரங்கள். (இவற்றைத் தவிர மற்ற நேரங்களில் அவர்கள் உங்கள் அனுமதியின்றியே உங்களிடம் வருவது) அவர்கள்மீது குற்றமில்லை. (ஏனென்றால்,) இவர்கள் அடிக்கடி உங்களிடம் வரக்கூடியவர்களாகவும், உங்களுள் ஒருவர் மற்றவரிடம் அடிக்கடி செல்ல வேண்டியவர்களாகவும் இருப்பதாலும் (அடிக்கடி அனுமதி கோரவேண்டிய அவசியமில்லை.) இவ்வாறு அல்லாஹ் தன்னுடைய வசனங்களை உங்களுக்கு விவரித்துக் கூறுகிறான். அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்தவனும் ஞானமுடையவனும் ஆவான்'' (24: 58) என்று இந்த இறைவசனத்தில் அல்லாஹ் கட்டளையிட்டுள்ளது குறித்துத் தாங்கள் என்ன கருதுகிறீர்கள்? அதை மக்களும் செயல்படுத்துவதில்லையே?” என்று கேட்டனர்.

அதற்கு இப்னு அப்பாஸ் (ரளி) அவர்கள் கூறியதாவது: திண்ணமாக அல்லாஹ் சகிப்புத்தன்மையுடையவனும் இறைநம்பிக்கையாளர்கள்மீது மிகுந்த அன்புடையோனும் ஆவான். அவன் மறைப்பை விரும்புகின்றான். மக்களின் வீடுகளில் திரைகளோ தடுப்புகளோ இருக்கவில்லை. எனவே சிலவேளை ஒருவர்தம் மனைவியோடு இருக்கும்போது அவருடைய பணியாள் அல்லது அவருடைய பிள்ளை அல்லது (வீட்டில் வளர்கின்ற) அவருடைய அநாதைப்பிள்ளை யாரேனும் ஒருவர் (திடீரென) நுழைந்துவிடலாம். எனவேதான் அம்மூன்று தருணங்களில் (வீட்டிற்குள் உள்ளோரும்) அனுமதி கேட்டுத்தான் (அடுத்தவர் அறையினுள்) நுழைய வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான். திரைகளையும் நன்மையையும் மக்களுக்குக் கொண்டுவந்தான். ஆனால் இதை யாரும் செயல்படுத்துவதாக நான் காணவில்லை. (நூல்: அபூதாவூது: 4518)
இன்றைய நவீன காலத்தில் பல்வேறு வீடுகளில் வீட்டின் ஒவ்வோர் உறுப்பினருக்கும் தனித்தனி அறை உண்டு.  அதனுள் அவர்கள் தம் விருப்பம்போல் இருக்க நாடுகின்றார்கள். அத்தகைய சூழ்நிலையில் ஒருவர் மற்றொருவரின் அறைக்குள் நுழைய வேண்டுமெனில் அவரின் அனுமதி பெற்றுத்தான் நுழைய வேண்டும் என்பதையே அல்லாஹ் திருக்குர்ஆனில் தெளிவுபடுத்துகிறான்.

குறிப்பாக மூன்று தருணங்களைக் குறிப்பிடுகின்றான். அவை: அதிகாலை நேரம், சிறுஓய்விற்கான பகல்நேரம், இரவு நேரம். இம்மூன்று தருணங்களில் அவரவர் அறையினுள் உள்ளவரிடம் அனுமதி பெற்றபின்னரே உள்நுழைய வேண்டும்.
பொதுவாக, காலை நேரம் என்பது இரவில் துயில் கொண்டு எழுகின்ற நேரம். இரவு அயர்ந்து தூங்கியதில் ஆடைகள் விலகியிருக்கலாம், அவிழ்ந்து இருக்கலாம். கட்டாயம் மறைக்க வேண்டிய பகுதிகள் வெளியே தெரியலாம். இத்தகைய தருணத்தில் அங்குள்ள எழுப்புவதற்காகத் திடீரென நுழைந்துவிடக் கூடாது. வெளியில் இருந்துகொண்டே கதவைத் தட்டி எழுப்ப வேண்டும். தன்னுடைய மகனின் அறைதானே? தந்தையின் அறைதானே? தாயின் அறைதானே? என்று மேம்போக்காக எண்ணக்கூடாது.

அதேபோல் தாய், தந்தையை எழுப்புவதற்குச் செல்கின்ற மகனோ மகளோ அவர்களின் அறைக்குள் திடீரென நுழைந்துவிடக் கூடாது. வெளியிலிருந்தவாறே அனுமதி கோர வேண்டும். அவர்கள் அனுமதியளித்த பின்னரே உள்ளே நுழைய வேண்டும். தன்னுடைய தாய், தந்தைதானே என்று எண்ணலாம். எனினும் அவர்களின் தனிமைச் சுதந்திரத்தைப் பறிக்கும் வகையில் நடந்துகொள்ளக் கூடாது.

நபித்தோழர் ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம், என் தாயாரின் அறைக்குள் செல்வதற்கும் நான் அனுமதி கோர வேண்டுமா? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “உன் தாயை அவலட்சணமான தோற்றத்தில் நீ காண விரும்புவாயா?” என்று எதிர்வினாத் தொடுத்தார்கள். இல்லை (மாட்டேன்)என்று கூறினார். அப்படியானால், அனுமதி பெற்றே செல்என்று கூறினார்கள்.

அதாவது தாயோ, தந்தையோ சற்று ஆசுவாசப்படுத்திக்கொள்வதற்காகத் தம் ஆடைகளை விலக்கிக்கொண்டு இருக்கலாம். அந்நேரத்தில் பிள்ளைகள் திடீரென அவர்களின் அறைக்குள் நுழைந்தால் காணக்கூடாத காட்சிகளைக் காண நேரிடும். அவர்கள் தர்ம சங்கடத்தில் நெளிவார்கள். அல்லது திட்டுவார்கள். இதையெல்லாம் தவிர்க்கவே அடுத்தவரின் அறைக்குள் நுழைந்தாலும் அல்லது வெளியிலிருந்து வருவோர் தம் வீட்டினுள் நுழைந்தாலும் அனுமதி பெற்றபின்னரே உள்ளே நுழைய வேண்டும் என்று இஸ்லாமிய மார்க்கம் நமக்குக் கற்பிக்கிறது.

பொதுவாக பகல் வேளைகளில் வீட்டு வேலைகளை முடித்துவிட்டுத் தம்மை ஆசுவாசப்படுத்திக்கொள்வதற்காக ஆடைகளை விலக்கி, காற்று வாங்குவதுண்டு. 

கோடைக்காலங்களில் இது நாள்தோறும் நடைபெறும் நிகழ்வு.  அந்நேரத்தில் ஏதோ ஒரு தேவைக்காக அவர்களின் அறைக்குள் செல்ல வேண்டியது ஏற்படலாம். அப்போது திடீரென அவர்களின் அறைக்குள் நுழைந்துவிடக்கூடாது. அவர்களின் அனுமதி பெற்றபின்னரே நுழைய வேண்டும்.  இது இரண்டாவது தருணம்.
மூன்றாவது தருணம், இரவு நேரங்களில் உறங்கச் செல்வதற்காகத் தம் ஆடைகளை மாற்றிக்கொண்டு, வேறு சாதாரண ஆடைகளை அல்லது அரைகுறை ஆடைகளை அணிந்திருக்கலாம். இது பொதுவாக எல்லோரும் செய்கின்ற வழமையான ஒன்றுதான். எனவே மகனோ, மகளோ, தாயோ, தந்தையோ யாராக இருந்தாலும் கதவைத் தட்டி அனுமதி கேட்டுவிட்டுத்தான் உள்ளே செல்ல வேண்டும் என்ற இங்கிதத்தைக் கற்றுத் தருகிறது இஸ்லாம்.  

ஆக இம்மூன்று தருணங்களில் அனுமதி பெற்றே செல்ல வேண்டும் என்று திருக்குர்ஆன் கட்டளையிடுகிறது. இம்மூன்று தருணங்களை முக்கியமாகக் குறிப்பிட்ட காரணம் என்னவெனில், இம்மூன்று தருணங்களே பொருவாக எல்லோரும் தம்மை ஆசுவாசப்படுத்திக்கொள்கின்ற நேரம். பிற நேரங்களில் ஒவ்வொருவரும் தத்தம் வேலைகளைச் செய்துகொண்டு இருப்பார்கள். வழமையான ஆடைகளையே அணிந்திருப்பார்கள். அதனால் அத்தகைய தருணங்களில் அவர்களும் எச்சரிக்கையாகவே இருப்பார்கள். வீட்டிற்குள் பணியாள்கள், பிள்ளைகள், பிறர் உள்ளிட்ட எத்தனையோ பேர் வருவார்கள் என்று தெரியும். எனவே கவனத்தோடும் எச்சரிக்கையோடும் இருப்பார்கள் என்பதை நாம் உணரலாம்.

அக்காலத்தில் வீட்டின் அறைகளுக்குத் திரை இருக்காது. எனவே இத்தகைய ஓர் அறிவுரை தேவைப்பட்டது.  இன்றைய காலத்தில் ஒவ்வோர் அறைக்கும் கதவுண்டு. தாழ்ப்பாள் உண்டு. எனவே இந்த அறிவுரை தேவையில்லை என்று கூற முற்படலாம். இருப்பினும் அவர்கள் ஒருவேளை கதவை மூடாமல் அல்லது தாழ்ப்பாள் போடாமல் இருந்து, அந்நேரத்தில் திடீரெனப் பிள்ளைகள் நுழைந்து, காணக்கூடாத காட்சிகளைக் கண்டுவிட்டால் இருவருக்குமே தர்மசங்கடம். எனவே இது விஷயத்தில் நாம் கவனமாக இருக்க வேண்டும். இது எப்போதும் தேவையான ஓர் அறிவுரையே. எல்லோரும் கடைப்பிடிக்க வேண்டிய அறிவுரையாகும். ஒவ்வொரு பெற்றோரும் தம் பிள்ளைகளுக்கு இந்த ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்குமாறு சொல்லிக்கொடுக்க வேண்டும்.


உயர்ந்தோன் அல்லாஹ் மூன்று தருணங்களைக் குறிப்பிடுவதால் அம்மூன்று தருணங்களைத் தவிர மற்ற நேரங்களில் அனுமதியின்றி உள்ளே நுழைந்துகொள்ளலாம் என்று அர்த்தமில்லை. அவ்வீட்டில் வேலை செய்கின்றவர்கள் அடிக்கடி வந்து செல்ல நேரிடும். அவர்கள் உள்ளே வருகின்ற ஒவ்வொரு தடவையும் அனுமதி பெற வேண்டுமென்றால் அதற்கே நேரம் போதாது. இருப்பினும் உள்ளே செல்லுமுன் ஏதோ ஒரு வகையில் தம் வருகையை உள்ளே இருப்போருக்கு உணர்த்திவிட்டுச் செல்வதுதான் நற்பண்புமிக்கோர்க்கு அழகாகும். அதுவே ஒழுக்கமும் பேணுதலும் ஆகும்.          
----------------------




ஞாயிறு, 1 நவம்பர், 2015

இன்றைய சிந்தனை


 -வழங்குபவர்
மௌலவி நூ அப்துல் ஹாதி பாகவி, இமாம் மஸ்ஜித் ஜாமிஉல் அன்வார், மணலி, சென்னை -68

அதிகாலை தொழுதுவிட்டு நடைப்பயிற்சி மேற்கொள்வோர் பெரும்பாலும் வீதிகளில் செல்வதில்லை. அதற்கென ஆங்காங்கே உள்ள திடலைச் சுற்றி வட்டம் வருகின்றார்கள். ஒவ்வொரு நாளும் பத்து முதல் பதினைந்து வட்டம் போடுகின்றார்கள். இவ்வளவு சிரமப்பட்டு நடைப்பயிற்சி மேற்கொள்வோர், நாள்தோறும் அதிகாலை எழுந்து  வீட்டில் உளூச் செய்துவிட்டு, வீட்டிலிருந்து பள்ளிவாசல் வரை நடந்து வந்து தொழுதுவிட்டு, பின்னர் மீண்டும் தத்தம் மஹல்லாவைச் சுற்றி ஒரு வட்டம் வந்தால் போதும் எத்தனையெத்தனை நன்மைகள்! ஒவ்வோர் எட்டுக்கும் நன்மையல்லவா?

ஆம்! அதிகாலை பாங்கு சொன்ன பின்னரும் நம் மஹல்லாவைச் சார்ந்த சகோதரர்கள் பலர் தொழுகாமல் தூங்கிக்கொண்டிருக்கின்றார்கள். நாம் தொழுதுவிட்டு ஒரு பொடி நடையாக நம் மஹல்லாவைச் சுற்றி வந்து யார் தொழுக மஸ்ஜிதை நோக்கி வரவில்லையோ அவர்களுள் ஒருவரை அல்லது இருவரை நாள்தோறும் சென்று சந்தித்து, அதிகாலைத் தொழுகைக்கு வாருங்கள் என்று கூறி அதிகாலைத் தொழுகையின் அவசியத்தையும் முக்கியத்துவத்தையும் எடுத்துக் கூறி, அதன்மூலம் அவர் தொழுக வந்துவிட்டால் அதற்கான நன்மைகள் நம் கணக்கில் எழுதப்படுமல்லவா?

அதிகாலைத் தொழுகையை முடித்துவிட்டு, நம் மஹல்லாவில் நோயாளிகள் யாரேனும் இருக்கின்றார்களா என்ற செய்தியை அறிந்துகொண்டு அவர் வீட்டிற்கு நேரடியாகச் சென்று அவரைச் சந்தித்து, அவருக்கு ஆறுதல் கூறிவிட்டு, அவருக்குத் தேவையான உதவியைச் செய்துவிட்டு, அவருக்காகப் பிரார்த்தனையும் செய்துவிட்டு வந்தால் எத்தனையெத்தனை நன்மை!

இனி அதிகாலைத் தொழுகைக்குப்பின் நன்மையைச் சம்பாதிக்கத் தொடங்குவோம். நடைப்பயிற்சி செல்லும் பாதையை மாற்றுவோம். எங்கோ திடலைத் தேடிச் செல்லாமல் நாம் நமது மஹல்லாவையே வலம் வருவோம். தொழாமல் தூங்குகின்ற நம் சகோதரர்களை நரகப் பாதையிலிருந்து திசைதிருப்பிச் சொர்க்கப் பாதையை நோக்கி அழைத்து வருவோம் வாருங்கள்!

இனி அதிகாலைத் தொழுகைக்குச் செல்ல வாகனம் வேண்டாம். நடைப்பயிற்சியை நம் வீட்டிலிருந்தே தொடங்குவோம். எங்கள் மஹல்லாவில் வாழும் அனைவரும் அதிகாலைத் தொழுகையைப் பேணுபவர்கள் என்ற நிலையை உருவாக்குவோம். ஆம் இது நம் அனைவராலும் முடியும்.

இது நம் காலில்தான் இருக்கிறது.

================

சனி, 31 அக்டோபர், 2015

சிந்தையை மாற்றிய கவிக்கோவின் சிந்தனை!

(கவிக்கோவின் கருவூலம் எனும் நூலில் இடம்பெற்றுள்ள எனது ஆக்கம்)

மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி எம்.ஏ., எம்.ஃபில்.,


நான் அல்பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் அரபிக் கல்லூரியில் ஓதிக்கொண்டிருந்த காலத்திலேயே கவிக்கோ அவர்களை அறிவேன். அவருடைய கவிதைகளையும் கட்டுரைகளையும் தொடர்ந்து படித்து வந்திருக்கிறேன். அவருடைய ஆழமான சிந்தனைகளையும் நுண்ணிய கற்பனைகளையும் இரசித்துச் சுவைத்திருக்கிறேன். அவருடைய கவிதைகளில் மிகுதியாக மறுமைச் சிந்தனையையும் இறைவனைப் பற்றிய சிந்தனைத் தூண்டலையும் காண்கிறேன்.


நான் ஒரு தடவை அவரை அவர்தம் இல்லத்தில் சந்தித்து உரையாடியபோது, திருக்குர்ஆன் வசனங்களுக்கும் பொய்யாநபியுரைத்த அறவுரைகளுக்கும் புதியதொரு கோணத்தில் விளக்கவுரை கூறி என்னை வியப்பிலாழ்த்தினார். இத்தகைய கோணத்தில் ஆலிம்கள் சிந்திக்கவில்லையே என நான் அவரிடம் கூறினேன். தங்களைப் போன்ற இளம் மௌலவிகள் புதிய கோணத்தில் திருக்குர்ஆனைச் சிந்தித்து அதன் ஆழிய கருத்துகளை மக்களுக்கு எடுத்தோத வேண்டும் என்று அறிவுரை நல்கினார்.




முஸ்லிம் சமுதாயத்தைப் பற்றிய அவருடைய கவிதையில், புதையலுக்குக்கீழ் இருந்துகொண்டு பிச்சையெடுக்கிறோம் என்று எழுதியிருந்தார். ஆம்.  திருக்குர்ஆன் ஒரு கருத்துப் பெட்டகம்; அது ஒரு கருத்துப் புதையல். மனிதன் எந்த அளவிற்கு ஆழமாகவும் நுட்பமாகவும் சிந்திக்கின்றானோ அதற்கேற்றவாறு  பொருள் விரிந்து கொடுக்கக்கூடியதாகும். இந்தச் சமுதாயம்  திருக்குர்ஆனையும்  ஆலிம்களையும் சரியாகப் பயன்படுத்திக் கொள்வதில்லை. இரண்டையுமே ஃபாத்திஹாவிற்காக மட்டுமே பயன்படுத்தி வருகிறது என்று நான் என் உரைகளில் சொல்வதுண்டு. திருக்குர்ஆனைச் செவ்வனே சிந்திக்காமல் அதன் கருத்துகளை ஆராயாமல் பிறரிடம் நாம் தீர்வுகளைக் கேட்டுக்கொண்டிருக்கிறோம் என்பதை இக்கவிதை மூலம் நமக்குச் சுட்டிக்காட்டுகிறார்.  


எனக்குக் கவித்திறன் கிடைக்கப்பெற்றபோது, திரைப்படப் பாடல் வரிகளை ஆங்காங்கே செவியுற்றுக் கூர்ந்து நோக்கத் தொடங்கினேன். அப்போது, இதைவிடச் சிறந்த பாடல்களை நாமே எழுதலாமே என்று நினைத்தேன். அத்தருணத்தில் ஒரு தடவை கவிக்கோ அவர்களின் கட்டுரையைப் படித்துக் கொண்டிருந்தேன். அதில், திரைப்படங்களுக்காகப் பாடல்கள் எழுதித் தருமாறு சிலர்  அவரிடம் கேட்டபோது, அம்மி கொத்த சிற்பி எதற்கு?  என்று அவர் விடையளித்ததைப் படிக்க நேரிட்டது. அவருடைய அந்தக் கவிதை வரி, என்னுடைய எண்ணத்தை மாற்றிவிட்டது.




அவருடைய கவிதை வரியை நான் மற்றொரு கோணத்தில் சிந்தித்தேன். மறுமை குறித்த சிந்தனைதான் அவரை இப்படிப் பேச வைத்துள்ளது. இறைவனால் வழங்கப்பட்ட திறமையை மக்களின் நன்மைக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டுமே தவிர, பணம், காசு கிடைக்கிறது என்பதற்காக எதையும்  செய்து தன் திறமையை விற்பனை செய்யக்கூடாது என்பதையும் புரிந்துகொண்டேன். ஓர் ஆலிம் அல்லாதவரின் உள்ளத்தில் இறையச்சமும் அவனைக் குறித்த சிந்தனையும் இந்த அளவிற்கு நிழலாடுகிறது என்றால் ஓர் ஆலிமாகிய என் உள்ளத்தில் எத்தகைய சிந்தனை ஏற்பட வேண்டும் என்று என் சிந்தனை விரிவடையத் தொடங்கியது; குறுகிய எண்ணம் சிதைந்துபோனது.


கவிஞன் என்பவன் தன் உயர்சிந்தனையால், அறவே சிந்திக்காமல் தூங்கிக்கொண்டிருக்கும் உள்ளங்களைத் தட்டி எழுப்ப வேண்டும்; மக்களின் கல்வி வளர்ச்சிக்காக, சமுதாய மேம்பாட்டிற்காக, முன்னேற்றத்திற்காகப் பாடுபட வேண்டும்; அவனுடைய சிந்தனை பிறரின் சிந்தையைத் தூண்ட வேண்டும். அத்தகைய சிந்தனையும் நுண்ணறிவும் கொண்ட மக்கள் கவிஞராகத்தான் அண்ணன் கவிக்கோ அவர்களைக் காண்கிறேன். அவருடைய எழுத்தும் பேச்சும் மக்களுக்குப் பயன்படும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. ஆனால் முஸ்லிம் சமுதாயம் அவருடைய தமிழையும் எழுத்தையும் பயன்படுத்திக்கொள்ள முன்வர வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்.



= என்னுடைய ஆக்கம் இடம்பெற வழிகாட்டி உதவி செய்த ஏம்பல் தஜம்முல் முஹம்மது அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

========================================

சனி, 24 அக்டோபர், 2015

தினமணி ஆசிரியருக்கு

தினமணி ஆசிரியருக்கு
தினமணி நாளிதழை இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர், ஜைனர் உள்ளிட்ட பல்வேறு கடவுள் நம்பிக்கையாளர்கள் படித்து வருகின்றார்கள். அப்படிப்பட்ட இதழில் இந்து மத நம்பிக்கையைத் திணிப்பது சரியில்லை. மழையைப் பொழியச் செய்வது அவரவர் நம்பிக்கையின்படி அவரவரின் இறைவன். அப்படியிருக்கும்போது வருணனின் கருணை கிடைக்குமா? என்று தலைப்பிடுவது பிறமத நம்பிக்கையாளர்களுக்கு எதிரானது. ஒரு பொதுவான செய்திக்குள் இந்து மத நம்பிக்கையைத் திணிக்க முயல்வது பிறமத நம்பிக்கைகொண்ட வாசகர்களுக்கு நெருடலாக உள்ளது. எனவே இதுபோன்ற இந்து மத நம்பிக்கைகளைப் பொதுவான செய்திக்குள் திணிக்க முயல்வதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன். 

சமுதாய முன்னேற்றத்திற்குப் பெரிதும் பங்கு வகிப்பது யார்?







மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ், அல்ஹாஜ் சதீதுத்தீன் ஃபாஸில் பாகவி அவர்களின் தலைமையின்கீழ் இயங்கிவரும் அல்ஹுதா அரபிக் கல்லூரியில் நேற்று 09 01 1437 (23.10.2015) எதிர்வரும் ஆஷூரா நாளை முன்னிட்டு மன்பவுல்ஹுதா மாணவ மன்றத்தில் சமுதாய முன்னேற்றத்திற்குப் பெரிதும் பங்கு வகிப்பது யார்? எனும் தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. அதில் பல்வேறு தலைப்புகளில் ஐவர் பேசினர். அதில் நடுவராகப் பொறுப்பேற்று கருத்துரை வழங்கினேன். 

அதில் சமுதாய முன்னேற்றத்திற்குக் கல்வியின் அவசியம் என்ன, அதைப் பெற்றுக்கொண்டிருக்கின்ற மாணவர்களின் பொறுப்பு என்ன, அவர்கள் எப்படியெல்லாம் தம்மை முன்னேற்றப்படுத்திக்கொள்ள முனைய வேண்டும், எந்தெந்தத் துறைகளிலெல்லாம் முன்னேற வேண்டும், எதிலெல்லாம் மாணவர்களுக்கு வாய்ப்பிருக்கின்றது, மொழிபெயர்ப்புத் துறையின் பயன் என்ன, அதில் எவ்வாறு தம்மை ஈடுபடுத்திக்கொள்வது, பத்திரிகைத்துறையில் எவ்வாறு காலடி பதிப்பது உள்ளிட்ட பல்வேறு தகவல்களை மாணவர்களிடையே பரிமாறிக்கொண்டேன். 

சனி, 17 அக்டோபர், 2015

பசித்தோருக்கு உணவு வழங்குவோம்!

   -மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி எம்.ஏ., எம்.ஃபில்.,

1979ஆம் ஆண்டு முதல் உலக உணவு நாள் (World Food Day) ஆண்டுதோறும் அக்டோபர் 16 ஆம் நாளன்று உலக நாடுகளில் கொண்டாடப்பட்டு வருகிறது. "உண்டி கொடுத்தோரே உயிர் கொடுத்தோரே'', "தானத்தில் சிறந்தது அன்னதானம்'' ஆகிய முதுமொழிகள் உணவு வழங்குவதன் சிறப்பையும் உயர்வையும் எடுத்துரைக்கின்றன.

"தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்'' என்ற பாரதியாரின் குரல்  உணவின் முக்கியத்துவத்தை உணர்த்துகின்ற அதேவேளையில், "அண்டைவீட்டார் பசித்திருக்க வயிறு நிறைய உண்பவன் இறைநம்பிக்கையாளன் இல்லை'' என்று முஹம்மது (ஸல்) அவர்கள் கூறிய முத்தான வார்த்தைகள் உணவைப் பகிர்ந்துண்ண வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. 

"ஒருவரின் உணவு இருவருக்குப் போதும்; இருவரின் உணவு நால்வருக்குப் போதும்; நால்வரின் உணவு எண்மருக்குப் போதும்'' என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (நூல்: திர்மிதீ: 1743) இதன்மூலம் ஒருவர் தம் உணவைப் பிறருக்குப் பகிர்ந்து கொடுத்து உண்ண வேண்டும் என்பதைத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்கள். அது மட்டுமல்ல, சிறிதளவு உணவே ஒருவருக்குப் போதும் என்பதையும் இதன்மூலம் நாம் அறிகிறோம்.

உணவு கிடைக்காமல் ஆண்டுதோறும் பட்டினியால் இறப்போர் 3 கோடிக்கும் மேல் என்று ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது. எத்தனையோ வசதி வாய்ப்புகள் இருந்தும், பசுமைப் புரட்சியெல்லாம் ஏற்பட்டும் என்ன பயன்? உணவு கிடைக்காமல் மக்கள் இறந்து கொண்டிருக்கின்றார்களே! சிலருக்கு  ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவுதான் கிடைக்கிறது. சிலருக்கு அரைவயிற்றுக் கஞ்சிதான் கிடைக்கிறது!

"சலாமைப் பரப்புங்கள்; (பசித்தோருக்கு) உணவு வழங்குங்கள்; மக்கள் உறங்கும் நடுநிசி வேளையில் (எழுந்து) தொழுகுங்கள்; அமைதியாகச் சொர்க்கத்தில் நுழைவீர்கள்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  பசித்தோருக்கு உணவு வழங்குவது சொர்க்கத்தில் நுழையக் காரணமாக அமைகிறது என்பதை அறிகிறோம்.

உணவு வழங்குவதன் முக்கியத்துவத்தை நபி (ஸல்) அவர்கள் மிகவும் வலியுறுத்திக் கூறியுள்ளதை உணர்ந்துள்ள முஸ்லிம்கள் பிறருக்கு உணவு வழங்குவதை அவர்களின் அடிப்படைப் பண்பாகக் காணமுடிகிறது. அதனால்தான் மக்காவில் ஹஜ்ஜின்போது அல்லாஹ்விற்காக அறுக்கப்படுகின்ற  ஆடு, ஒட்டகம் ஆகியவற்றின் இறைச்சிகள் ஏழை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு இலவசமாக விநியோகிக்கப்படுகின்றன. ஆனால் அதேநேரத்தில் சில பணக்கார நாடுகளில் தம் தேவைக்கு எஞ்சிய பொருள்களைக் கடலில் கொட்டுகின்றார்கள்.  சந்தையில் பொருள்களின் விலை குறைந்துவிடாமல் ஒரு கட்டுக்குள் இருப்பதற்காக இவ்வாறு செய்கின்றார்கள். தன் நாட்டு மக்களுக்கும் கொடுப்பதில்லை. பிற நாட்டு மக்களுக்கும் கொடுப்பதில்லை. இதனால் ஒரு பக்கம் அமோக விளைச்சல் இருந்தும் மறுபக்கம் பட்டினிச் சாவுகளும் வறுமையும் தாண்டவமாடுகின்றன.

படைத்தோன் அல்லாஹ் பாரிலோர் அனைவருக்கும் குறைவின்றி நிறைவாக உணவுப் பொருள்களை விளையச் செய்கின்றான். உணவுப் பொருள்களை அபரிமிதமாக வழங்குகின்றான். ஆனால் குறுமதி கொண்ட மனிதனோ அவ்வுணவுப் பொருள்களை வீணாக்குகின்றான். உரிய முறையில் சேமித்து வைக்காமலும் தேவையுடையோருக்குக் கொடுக்காமலும் விரயம் செய்கிறான். இதனால்தான் இவ்வளவு பட்டினிச் சாவுகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. உணவுப் பற்றாக்குறையும் வறுமையும் ஏற்படுகின்றன. 

இறைத்தூதர் இப்ராஹீம் (அலை) அவர்கள் உணவுண்ணும்போதெல்லாம் தம்மோடு ஒரு விருந்தினர் இல்லாமல் உண்ணமாட்டார்கள். அத்தகைய உயர்பண்பு அவர்களிடம் இருந்ததால்தான் அவர் இறைவனின் நேசத்திற்குரிய நண்பரானார். பசித்தோருக்கு உணவு வழங்குவதைக் கண்டு படைத்தோன் இறைவன் மட்டில்லா மகிழ்ச்சியடைகிறான் என்பதை நாம் உணர்ந்து செயல்பட வேண்டும்.

இறைவனின் உவப்பை நாடி உணவு வழங்குவதைத் திருக்குர்ஆனில் உயர்ந்தோன் அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான்: அல்லாஹ்வின் மீதுள்ள அன்பின் காரணமாக ஏழைகளுக்கும், அநாதைகளுக்கும், சிறைப்பட்டவர்களுக்கும் உணவளிக்கின்றனர். (தம்மிடம் பெறுபவர்களை நோக்கி) "நாம் உங்களுக்கு உணவளிப்பதெல்லாம் அல்லாஹ்வின் முகத்தை நாடியேயன்றி, உங்கüடம் நாம் யாதொரு கூலியையோ அல்லது (நீங்கள் நமக்கு) நன்றி செலுத்துவதையோ கருதவில்லை'' என்று கூறுகின்றார்கள். (76: 8-9)

மேலும் திருக்குர்ஆனைப் புரட்டி வாசிக்கின்றபோது சில குற்றங்களுக்கு உணவு வழங்குவதையே பரிகாரமாக ஆக்கியுள்ளான்.
எவரேனும் தங்கள் மனைவிகளைத் (தம்) தாய்க்கு ஒப்பிட்டுக் கூறிய பின்னர், அவர்களிடம் திரும்ப(ச் சேர்ந்துகொள்ள) விரும்பினால், அவ்விருவரும் ஒருவரை ஒருவர் தொடுவதற்கு முன்னதாகவே (இவ்வாறு ஒப்பிட்டுக் கூறிய குற்றத்திற்குப் பரிகாரமாக) ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும். இதனை (அல்லாஹ்) உங்களுக்கு உபதேசம் செய்கின்றான். அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிபவனாக இருக்கின்றான்.

(விடுதலை செய்யக்கூடிய அடிமையை) எவரேனும் பெற்றிருக்காவிடில், அவ்விருவரும் ஒருவரை ஒருவர் தொடுவதற்கு முன்னதாகவே, (அவன்) இரண்டு மாதங்கள் தொடர்ச்சியாக நோன்பு நோற்க வேண்டும். (இவ்வாறு நோன்பு நோற்கச்) சக்தி பெறாதவன் அறுபது ஏழைகளுக்கு (நடுநிலையான) உணவளிக்கட்டும். (58: 3-4)

"அபூதர்ரே! நீ குழம்பு சமைத்தால் அதில் தண்ணீரை அதிகப்படுத்திக்கொள்; உன் அண்டைவீட்டினரையும் கவனித்துக்கொள்'' என்று  அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்: 4758) நபிகள் நாயகத்தின் வாக்குப்படி, ஒவ்வொருவரும் தம் அண்டைவீட்டாரைக் கவனித்துக்கொண்டால், ஒவ்வோர் ஊராரும் தம் அண்டையிலுள்ள ஊர்களைக்  கவனித்துக்கொண்டால், ஒவ்வொரு மாவட்டத்தாரும் தம் அண்டை மாவட்டத்திலுள்ளோரைக் கவனித்துக்கொண்டால், ஒவ்வொரு மாநிலத்தாரும் தம் அண்டை மாநிலத்தாரைக் கவனித்துக்கொண்டால், ஒவ்வொரு நாட்டினரும் தம் அண்டை நாட்டினரைக் கவனித்துக்கொண்டால் இவ்வுலகில் பசி ஏது? பட்டினி ஏது?

==============================================