சனி, 31 ஜனவரி, 2015

வட்டியில்லா இஸ்லாமிய வங்கி
அணிந்துரை
 
                -மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி, எம்.ஏ., எம்.ஃபில்., (பிஎச்.டி.)
(மொழிபெயர்ப்பாளர், பத்திரிகையாளர்)
-----------------------------------------------------------------------------------------
                ஹாஜி நூ. முஹம்மது கனி அவர்கள் வட்டியில்லா இஸ்லாமிய வங்கிஎனும் நூலை என்னிடம் கொடுத்து, இந்நூலைப் பிழைதிருத்தம் செய்து, தமிழ்நடையைச் செம்மைப்படுத்தித் தருமாறு கேட்டுக்கொண்டார். அதனை ஏற்று, நான் இந்நூலைப் புரட்டிய போது இந்நூலாசிரியரின் புலமை எனக்குப் புலப்பட்டது. இஸ்லாமிய வங்கியின் செயல்பாடுகளைப் பற்றித் தெளிவாகவும் அதே நேரத்தில் சுருக்கமாகவும் பல்வேறு நூல்களிலிருந்து தொகுத்துத் தந்திருக்கிறார். இந்நூல் இஸ்லாமிய வங்கியின் செயல்பாடுகள் குறித்துத் தெளிவாக விளக்குகிறது என்பதில் சிறிதும் ஐயமில்லை.
 
                ஹாஜி நூ. முஹம்மது கனி அவர்கள் எம். காம். பட்டதாரியாக இருப்பதால் பொருளாதாரப் பாடத்தில் நன்கு தேர்ச்சி பெற்றவராகத் திகழ்கிறார். இவர் ஏற்கெனவே பல ஆங்கில நூல்களையும்  டாக்டர் ஜாகிர் நாயக்கின் பேச்சுகள், விவாதங்கள் ஆகியவற்றையும் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். அவ்வப்போது வெள்ளிக்கிழமைகளில் உரையாற்றுவதும் சமுதாயப் பணிகளில் ஈடுபடுவதும் சமுதாய முன்னேற்றத்திற்காகப் பாடுபடுவதும் இவருக்குப் பிடித்தமானவை. காசு, பணம் என்ற எந்த எதிர்பார்ப்புமின்றி இவற்றை இவர் செய்துவருவதால் அல்லாஹ்வே இவருக்கு இம்மையிலும் மறுமையிலும் நற்கூலி கொடுக்கப் போதுமானவன். 
 
                இன்று வட்டியின் கோரப்பிடியில் சிக்குண்டு தவிப்போர் பலர். தம் அவசர உதவிக்காக என்று கூறி, அறவே சிந்திக்காமல் அவசரமாக வாங்கிய கடனை உரிய நேரத்தில் திருப்பிச் செலுத்த முடியாமல், வாங்கிய கடனுக்கு வட்டி கட்டி, வட்டிக்கு வட்டி கட்டி நொந்து போவோர் பலர் நமக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார்கள். தெரியாமல் வாங்கிவிட்டு, இப்போது வட்டி கட்ட முடியாமல் சிரமப்படுகிறேன். இதி-ருந்து சீக்கிரம் மீள வேண்டுமே என்று மனதுக்குள் சஞ்சலத்தோடு வாழ்பவர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள். அல்லாஹ் கூறியுள்ள அழகிய கடன் என்பதை அறவே மறந்துவிட்டார்கள் செல்வந்தர்கள். அதனால்தான் வட்டிக்குக் கடன் வாங்க வேண்டிய நிர்ப்பந்த நிலைக்கு முஸ்லிம்கள் ஆளாகின்றார்கள்.
 
                மற்றொரு புறத்தில், நாங்களெல்லாம் வட்டியிலிருந்து தப்பித்துக்கொண்டோம் என்று நிம்மதிப் பெருமூச்சு விடுபவர்கள் தங்களுக்குத் தெரியாமலேயே வட்டி எனும் தீமைக்குள் மூழ்கிக் கிடக்கின்றார்கள். உண்மையில், அதுவெல்லாம் வட்டிதான் என்று அவர்களுக்குத் தெரியாது. தம்மையும் அறியாமல் வட்டி எனும் தீமைக்குள் மூழ்கிக் கிடக்கின்றார்கள். இன்னும் சிலர், வட்டிக்கு வேறு பெயர்களை இட்டுக்கொண்டு அதை முழு மனதோடு அனுபவித்துக்கொண்டிருக்கின்றார்கள். இத்தகைய நிலைகளில் வாழ்வோர் மார்க்கச் சட்டப்படி எது வட்டி, எது வட்டியில்லை என்பதைத் தெளிவாகத் தெரிந்துகொள்வது அவசியமாகும்.
 
                முஸ்லிம்கள் அனைவரையும் வட்டி எனும் தீமைக்குள் கொண்டுவர யூதச் சமுதாயம் சூழ்ச்சி செய்தது; செய்துகொண்டிருக்கிறது. அதன் விளைவாக, நம்முள் பலர் தம்மை அறியாமலே அதனுள் நுழைந்துவிட்டார்கள். அது வட்டி என்று தெரியாமல் அதை வாங்கிக்கொண்டிருக்கின்றார்கள். அல்லது கொடுத்துக்கொண்டிருக்கின்றார்கள். வேறு சிலர் காலத்திற்கேற்ற மார்க்கத் தீர்ப்பு வழங்க வேண்டும் என்ற எண்ணத்தில்  வட்டி சார்ந்த சில நடைமுறைச் செயல்பாடுகளைச் செல்லத்தக்கனவாக அறிவித்துள்ளனர். அது சமுதாய மக்களுக்குச் சாதகமாகப் போய்விட்டதால் உறுத்தல்இல்லாமல் உளப்பூர்வமாக அது சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபடுகிறார்கள்.
 
 
                வங்கி என்பதே ஒரு வட்டி நிறுவனம்தான். அங்கு முதலீட்டாளர்களுக்கு வட்டி கொடுப்பதும் கடன் பெற்றோரிடமிருந்து வட்டி வாங்குவதும்தான் அதன் முக்கியத்தொழில். எனினும் காலத்தின் கட்டாயத்தையும் அரசாங்க நிர்ப்பந்தத்தையும் கருதியே வங்கிக் கணக்கைத் தொடங்குகிறோம். அதாவது ஒருவருக்கு வங்கிக்கணக்கு இருந்தால்தான் வரைவோலை, காசோலை உள்ளிட்டவற்றை மாற்றுவது எளிதாகும். அது மட்டுமின்றி ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் நாம் பிறருக்குக் கொடுத்தால், அதைப் பணமாகக் கொடுக்கக்கூடாது. காசோலையாகவோ, வரைவோலையாகவோதான் கொடுக்க வேண்டும் என்ற சட்டம் உள்ளது. இது போன்ற காரணங்களுக்காக வங்கியில் கணக்கு வைத்துக்கொள்வது கூடும். எனினும் அது இஸ்லாமிய வங்கியாக இருந்துவிட்டால் தடைசெய்யப்பட்ட வட்டி எனும் பாவத்திலிருந்து நாம் முற்றிலும் விலகிக்கொள்ள முடியும்.
 
                இஸ்லாமிய வங்கி முறை எப்படி இயங்குகிறது என்றால் பொதுமக்கள் முதலீடு செய்கின்ற பணம் அனைத்தும் கூட்டாண்மை வணிகம் என்ற அடிப்படையில் பெறப்பட்டு, வங்கி ஈடுபடுகின்ற வியாபாரத்தில் கிடைக்கின்ற இலாபத்தொகை பொதுமக்களுக்குப் பிரித்துக்கொடுக்கப்படுகிறது. எனவே இது வட்டியாகாமல் இலாபத்தில் கிடைக்கின்ற பங்காகக் கருதப்படுகிறது. இந்தப் பங்கின் அளவு குறிப்பிட்ட அளவாக இருக்காது. வங்கிக்கு இலாபம் எவ்வளவு கிடைக்கிறதோ அதைப் பொறுத்து முதலீட்டாளர்களுடைய பங்கின் அளவு கூடலாம், குறையலாம் என்ற நெகிழ்வுத்தன்மையைக் கொண்டிருப்பதால் யாருக்கும் எந்தச் சிரமமும் இல்லை. ஆக இஸ்லாமிய வங்கி முறை நம்மை வட்டியிலிருந்து காப்பதோடு பயனையும் நல்குகிறது. எனவே இஸ்லாமிய வங்கி முறையை நாம் ஊக்குவிக்கப் பாடுபடுவோம். இதை நாம் பிறருக்கு அறிமுகப்படுத்துவோம்.
 
                இந்நூலாசிரியருக்கும் இதைப் படிப்போருக்கும் இந்நூலைப் பிறருக்கு அறிமுகப்படுத்துவோருக்கும் ஏக இறைவன் அல்லாஹ் எல்லா நலன்களையும் இம்மையிலும் மறுமையிலும் குறைவின்றித் தருவானாக. ஆமீன்.
                                                                                                                அன்புடன்
                                                                                                                நூ. அப்துல் ஹாதி பாகவி (ஆலங்குடி)
                                                                                                                சென்னை 81
 
இந்நூலைப் பெறத் தொடர்புகொள்க: சாஜிதா புக் சென்டர் 248 தம்புச் செட்டித் தெரு, மண்ணடி, சென்னை-1 போன்: 044 2522 4821/ 98409 77758 விலை: ரூ. 40/-

திங்கள், 19 ஜனவரி, 2015

தாயும் சேயும்
மருமகனும் மருமகளும் பிள்ளைகளே!

-மௌலவி நூ.அப்துல் ஹாதி பாகவி, எம்.ஏ., எம்.ஃபில்., ஓர் ஆண் திருமணம் செய்துகொண்டால் அவனுடைய மனைவியின் பெற்றோருக்கு மற்றொரு மகனாக ஆகிவிடுகின்றான். அதனால்தான் அவனுக்கு அவனுடைய மனைவியின் தாய்-மாமியார் திரையிட வேண்டிய அவசியமில்லை. அதேபோல் திருமணத்திற்குப் பின் ஒரு பெண் தன் கணவரின் பெற்றோருக்கு மற்றொரு மகளாக ஆகிவிடுகின்றாள். அதனாலேயே அவள் தன் கணவனின் தந்தைக்குமுன் திரையிட வேண்டிய அவசியமில்லை என்று இஸ்லாம் கூறுகிறது. ஆக திருமணத்திற்குப்பின் பெண்வீட்டாருக்கு ஒரு மகனும் ஆண்வீட்டாருக்கு ஒரு மகளும் கிடைக்கின்றனர். இது இயல்பாக இறைவன் ஏற்படுத்திய உறவு. இந்த உறவை இருவீட்டாரின் பெற்றோரும் எந்த அளவுக்குப் பாதுகாக்கின்றனர். அல்லது எந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர் என்பதே இன்று நம்முன் நிற்கும் வினா. மருமகனைப் பொறுத்தமட்டில் சில ஊர்களில் தம் மகனாகக் கருதுவோர் உண்டு. சில ஊர்களில் திருமணத்திற்குப்பின் மணமகளுக்குப் பதிலாக மணமகனே மணப்பெண் வீட்டிற்குக் குடிபெயர்கின்றார். இப்படிப்பட்ட நிலையில் அங்கு மருமகள் கொடுமை என்ற பேச்சுக்கே இடமில்லை. ஏனெனில் அவள் தாய் வீட்டிலேயே இருந்துவிடுகிறாள். பொதுவாக நாம் நாளிதழ்களில், மாமியார் தம் மருமகளுக்கு இழைக்கின்ற கொடுமையைத்தான் படிக்க நேரிடுகிறது. மிக அரிதாகவே மருமகள் தன் மாமியாரைக் கொடுமைப்படுத்துவது நடக்கிறது. இது எதனால்? ஒரு மாமியார் தம் மருமகளைத் தம் மகளாகக் கருதாததால் ஏற்படுகின்ற வினையையே நாம் அன்றாடம் காண்கிறோம். ஒவ்வொரு மாமியாரும் தம் மருமகளைத் தாம் ஈன்றெடுத்த மகளாகக் கருதத் தொடங்கிவிட்டால் இதுபோன்ற பிரச்சனைகள் அருகிவிடும். மேலும், ஒவ்வொரு மாமியாரும் தம் மருமகனை மகனாகக் கருதி வாழத் தொடங்கிவிட்டால் வாழ்க்கைப்பட்ட வீட்டிலிருந்து பிரச்சனையோ சிக்கலோ தலைதூக்காமல் பார்த்துக்கொள்ளலாம். திருமணத்திற்குப்பின் ஒவ்வொரு தாயும் தன் மகளைப் பார்த்து, எப்படிமா இருக்குறே? மாப்ளே உன்னெ நல்லா கவனிச்சுக்குறாரா? என்று கேட்பது வழக்கம். இதே வினாவைச் சற்று மாற்றி, அத்தாய் தன் மருமகனிடம், என்னங்க மருமகனே, என் மகள் உங்களை நல்லா கவனிச்சுக்குறாளா? நீங்க சொன்னபடி கேட்டு நடக்குறாளா? என்று கேட்கத் தொடங்கினால் மருமகன் மனது குளிரும். பிரச்சனைகள் ஏற்பட்டால் உடனுக்குடன் களைய வசதியாக இருக்கும். மணவிலக்கு என்ற பேச்சுக்கே இடமிருக்காது. ஆனால் இப்படிக் கேட்கின்ற துணிவு எத்தனை அன்னையருக்கு இருக்கிறது? அது போலவே ஓர் ஆணைப் பெற்றெடுத்த ஒரு தாய் தன் மகனின் வாழ்வையே முக்கியமாகக் கருதுகிறாளே தவிர தன் மருமகளைத் தன் மகன் நன்றாகக் கவனித்துக்கொள்கின்றானா, தாம்பத்திய உறவில் மருமகளுக்குத் திருப்தியளிக்கும் விதத்தில் நடந்துகொள்கின்றானா என்பதைக் கவனிப்பதில்லை. தன் மருமகளிடம் இதுகுறித்தெல்லாம் சாடைமாடையாகக் கேட்டுத்தெரிந்து கொள்ளத் துணிவதில்லை. ஆனால் இது குறித்துக் கேட்பது அவளது கடமை. இதே வினாவைப் பெண்ணைப் பெற்ற தாயும் தன் மருமகனிடம் சாடைமாடையாகக் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். தாம்பத்திய வாழ்வில் பிணக்கு என்றால் அதை உடனடியாகத் தன் மகளிடம் பக்குவமாக எடுத்துக்கூறிச் சரிப்படுத்த முனைய வேண்டும். ஏனெனில் தம்பதியருக்கிடையே தாம்பத்திய உறவில் பிணக்கு ஏற்படாமல், இருவருக்கும் திருப்தி ஏற்படும் வகையில் ஏற்பாடு செய்துவிட்டால் மற்ற பிரச்சனைகள் நீர்த்துப் போய்விடும். இதை எத்தனை மாமியார்கள் செய்கின்றனர்? இது போன்ற பிரச்சனைகளை ஒவ்வொரு மாமியாரும் முன்னின்று கவனித்து தன் மருமகனை மகனாகக் கருதி, தன் மருமகளை மகளாகக் கருதி வாழத் தொடங்கிவிட்டால் தம்பதியருக்கிடையே மணவிலக்கு ஏற்படாது. மாமியார்-மருமகள் சண்டையும் ஏற்படாது. மாறாக, இவைபோன்ற விசயங்களில் அக்கறை காட்டாமல், முளையிலேயே கிள்ளி எறிய வேண்டிய பிரச்சனைகளையெல்லாம் பெரிதாக வளரவிட்டு, இறுதியில் வெட்ட முற்படுவதால் பல மனங்கள் உடையத் தொடங்குகின்றன. பின்னர் அவற்றை ஒட்டவே முடிவதில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வரலாற்றைப் புரட்டிப் பார்க்கின்றபோது தெளிவான படிப்பினைகளைப் பெற்றுக்கொள்ளலாம் ஒரு தடவை, அலீ-ஃபாத்திமா (ரளி-அன்ஹுமா) இருவருக்குமிடையே ஒரு சிறு பிணக்கு ஏற்பட்டுவிட்டது. அச்சமயத்தில் நபி (ஸல்) அவர்கள் நடந்துகொண்ட முறை ஒரு மாமனார் தம் மருமகனிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதைக் காட்டுகிறது. சஹ்ல் பின் சஅத் (ரளி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் புதல்வி) ஃபாத்திமா (ரளி) அவர்களின் இல்லத்திற்கு வந்தபோது (மருமகனான) அலீ (ரளி) அவர்கள் வீட்டில் காணவில்லை. ஆகவே, உன் பெரிய தந்தையின் புதல்வர் எங்கே?'' என்று கேட்க, அதற்கு ஃபாத்திமா (ரளி) அவர்கள், "எனக்கும் அவருக்கும் இடையே சிறிய பிணக்கு ஏற்பட்டது. ஆகவே அவர் என்னைக் கோபித்துக்கொண்டு என்னிடம் ஏதும் சொல்லாமல் (வீட்டி-ருந்து) சென்றுவிட்டார் (அவர் பள்ளிவாசலுக்குள் இருக்கலாம்)'' என்று கூறினார்கள். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு மனிதரிடம், "அவர் எங்கே என்று பாருங்கள்'' என்று சொன்னார்கள். உடனே அந்த மனிதர் (சென்றுவிட்டு) வந்து, "அவர் பள்ளிவாசலில் உறங்கிக்கொண்டிருக்கிறார், அல்லாஹ்வின் தூதரே!'' என்றுரைத்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பள்ளிக்குள்) வந்தபோது அவருடைய மேலங்கி அவரது முதுகிலிருந்து (தரையில்) விழுந்துவிட்டிருக்க அவரது மேனியில் மண் படிந்திருக்கும் நிலையில் அவர் ஒருக்களித்துப் படுத்திருக்கக் கண்டார்கள். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அலீ (ரளி) அவர்களின் மேனியிலிருந்த மண்ணைத் துடைத்தவாறே "எழுந்திருங்கள், மண்ணின் தந்தையே! எழுந்திருங்கள், மண்ணின் தந்தையே!!'' என்று கூறலானார்கள். (புகாரீ: 441) தம் மகளிடம் கோபித்துக்கொண்டு சென்று பள்ளிவாசலில் படுத்திருந்த அலீ (ரளி) அவர்களை மெதுவாகத் தட்டியெழுப்பி மீண்டும் தம் மகளோடு சேர்த்து வைக்கின்றார்கள். இது போன்ற மென்மையான நடைமுறையை இன்றைய மாமனார்கள் கடைப்பிடிக்க வேண்டும். மற்றொரு நிகழ்வைப் பாருங்கள்: அலீ பின் அபீதாலிப் (ரளி) அவர்கள் கூறியதாவது: (என் துணைவியார்) ஃபாத்திமா அவர்கள் (மாவு அரைக்கும்) திரிகை சுற்றியதால் தமது கையில் ஏற்பட்ட காய்ப்பு குறித்து (என்னிடம்) முறையிட்டார். (இது தொடர்பாக நபியவர்களிடம் தெரிவிக்கும்படி நான் கூறினேன்.) ஆகவே, ஒரு பணியாளரை (தமக்குத் தரும்படி) கேட்க நபி (ஸல்) அவர்களிடம் ஃபாத்திமா சென்றார்கள். ஆனால், நபி (ஸல்) அவர்கள் அப்போது (வீட்டில்) இல்லாததால் ஆயிஷா (ரளி) அவர்களிடம் அது பற்றிக் கூறி(விட்டுத் திரும்பலா)னார்கள். நபி (ஸல்) அவர்கள் வந்தவுடன் அவர்களிடம் ஆயிஷா (ரளி) அவர்கள் விஷயத்தைத் தெரிவித்தார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்தார்கள். அப்போது நாங்கள் படுக்கைக்குச் சென்றுவிட்டிருந்தோம். (அவர்களைக் கண்டவுடன்) நான் எழுந்திருக்க முற்பட்டேன். உடனே நபி (ஸல்) அவர்கள், "(எழுந்திருக்க வேண்டாம்) அந்த இடத்திலேயே இருங்கள்'' என்று கூறிவிட்டு எங்களுக்கு நடுவில் வந்து அமர்ந்துகொண்டார்கள். அப்போது (என்னைத் தொட்டுக்கொண்டிருந்த) அவர்களுடைய பாதங்களின் குளிர்ச்சியை எனது நெஞ்சின்மீது உணர்ந்தேன். (அந்த அளவுக்கு நெருக்கமாக அமர்ந்திருந்தார்கள்.) "பணியாளரைவிட உங்களிருவருக்கும் (பயனளிக்கும்) சிறந்த ஒன்றை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? நீங்கள் இருவரும் படுக்கைக்குச் சென்றதும் அல்லாஹு அக்பர் (அல்லாஹ் பெரியவன்) என்று முப்பத்து நான்கு முறையும், சுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூயவன்) என்று முப்பத்து மூன்று தடவையும், அல்ஹம்து லில்லாஹ் (புகழ் யாவும் அல்லாஹ்வுக்கே) என்று முப்பத்து மூன்று முறையும் சொல்லுங்கள். இது பணியாளைவிட உங்கள் இருவருக்கும் சிறந்ததாகும்'' என்று சொன்னார்கள். (நூல்: புகாரீ: 6318). நபி (ஸல்) அவர்கள் தம் ஈரக்குலையான மகளின் நலத்தைப் பெரிதெனக் கருதவில்லை. திரிகை சுற்றி மாவரைத்து, அதன்மூலம் தம் கணவருக்குச் செய்கின்ற பணிவிடை காரணமாக அவருடைய கையில் காய்ப்பு ஏற்பட்டுவிட்டது. அது குறித்து அலீ (ரளி) அவர்கள்மீது சினம் கொள்ளவில்லை. மாறாக, தம் மகளுக்கு இறைவனின் துதியைக் கற்றுக்கொடுக்கின்றார்கள். அப்துல்லாஹ் பின் உமர் (ரளி) அவர்கள் கூறியதாவது: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் என் மனைவியை மணவிலக்குச் செய்துவிட்டேன். அப்போது அவள் மாதவிடாய்ப் பருவத்தில் இருந்தாள். ஆகவே (என் தந்தை) உமர் பின் கத்தாப் (ரளி) அவர்கள் இதைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வினவியபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் தந்தையாரிடம், "உங்கள் புதல்வருக்குக் கட்டளையிடுங்கள்: அவர் தம் மனைவியைத் திரும்ப அழைத்துக்கொள்ளட்டும்! பிறகு, அவள் மாதவிடாயிலிருந்து தூய்மையடைந்து, அடுத்து மீண்டும் அவளுக்கு மாதவிடாய் ஏற்பட்டுப் பின்னர் அதிலிருந்து அவள் தூய்மையடையும் வரை அவளைத் தம்மிடமே வைத்திருக்கட்டும். பிறகு அவர் விரும்பினால், (இரண்டாம் மாதவிடாயிலிருந்து தூய்மையான) பின்னர் (தொடர்ந்து அவளைத்) தம்மிடமே (தம் மனைவியாக) வைத்திருக்கட்டும். அவர் (மணவிலக்குச் செய்ய) விரும்பினால் அவளுடன் உடலுறவு கொள்வதற்கு முன்பாக அவளை மணவிலக்குச் செய்யட்டும். (மாதவிடாயிலிருந்து தூய்மையான) இந்தக் காலக் கட்டமே மனைவியரை மணவிலக்குச் செய்ய அல்லாஹ் (2: 228ஆம் வசனத்தில்) அனுமதித்துள்ள காலக் கட்டமாகும்'' என்று சொன்னார்கள். (நூல்கள்: முஸ்லிம், நசாயீ) மணவிலக்குச் செய்யப்பட்டு நம்மை விட்டுப் போகப்போகின்றவள்தானே என்று விட்டுவிடாமல் தம் மகன் செய்த இச்செயல் ஷரீஅத் முறைப்படி சரியானதுதானா என்று தெரிந்துகொள்வதற்காகவே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் விளக்கம் கேட்கின்றார்கள். அது ஷரீஅத் முறைப்படி சரியில்லை என்று அவர்கள் விளக்கமளித்தபின் தெளிவுபெறுகின்றார்கள். எப்போது தலாக் விட்டாலும் அது செல்லுபடியாகிவிடும் என்பது வேறு விசயம். ஆனால் அதிலும் ஓர் ஒழுங்குமுறையை இஸ்லாம் போதிக்கிறது. அது பெண்களுக்குச் சாதகமானது. அது அவர்களின் அடுத்த திருமணத்திற்கான வழியை எளிதாக்குகிறது. ஆக உமர் (ரளி) அவர்கள் தம் மருமகள்மீது கொண்ட அக்கறையை, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் மருமகன்மீது காட்டிய அக்கறையை இன்றைய மாமனார்கள், மாமியார்கள் தம் மருமகன்கள்மீதும் மருமகள்கள்மீதும் காட்ட வேண்டும். மருமகள்களும் மருமகன்களும் உங்களின் பிள்ளைகளே என்பதை உணருங்கள்.

திங்கள், 12 ஜனவரி, 2015

நபிகளார் நவின்ற மூன்றுகள் (தொடர் 19) (மூன்றே மனிதனின் சொத்து) மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி எம்.ஏ., எம்.ஃபில்., “அடியான், ‘என் செல்வம்; என் செல்வம்’ என்று கூறுகின்றான். அவனுடைய செல்வங்களில் மூன்று மட்டுமே அவனுக்குரியவையாகும். அவன் உண்டு கழித்ததும், அல்லது உடுத்திக் கிழித்ததும், அல்லது கொடுத்துச் சேமித்துக்கொண்டதும்தான் அவனுக்கு உரியவை. மற்றவை அனைத்தும் கைவிட்டுப் போகக்கூடியவையும், மக்களுக்காக அவன் விட்டுச் செல்லக்கூடியவையும் ஆகும்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: முஸ்லிம்: 5666) நிலையில்லா இவ்வுலக வாழ்க்கையில் மனிதன் எல்லாமே என்னுடையது, எல்லாமே எனக்குரியது என்று அங்கலாய்த்துக் கொண்டிருக்கின்றான். அதனால்தான் தான் சம்பாதித்தவற்றிலிருந்து பிறருக்குக் கொடுத்துதவ மறுக்கின்றான். எல்லாவற்றையும் தானே அனுபவித்துவிட வேண்டுமென எண்ணுகிறான். ஆனால் அதற்குள் மரணம் அவனைக் கவ்விப் பிடித்துக்கொள்கிறது. சரி, இதைப் பார்க்கின்ற மற்றொரு மனிதனாவது திருந்துகின்றானா என்றால் இல்லை. அவனும் அப்படித்தான் செயல்படுகின்றான். ஆக மனித இனமே அத்தகைய நிலையில்தான் உள்ளது என்பதை நாம் அறிய முடிகிறது. ஒருவன் தான் வாழ்கின்றபோது சம்பாதித்துச் சேர்த்து வைத்தவையெல்லாம் அவனுக்குரியவை அல்ல என்றும் அவன் நல்லபடியாக உண்டு கழித்ததும், சிறந்த ஆடைகளை உடுத்திக் கிழித்ததும், இயன்ற வரை பிறருக்குக் கொடுத்துச் சேமித்துக்கொண்டதும்தான் அவனுக்கு உரியவை என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். எவ்வளவு உயரிய தூரப்பார்வை. இத்தகைய தூரப்பார்வை எல்லா மனிதருக்கும் இருந்துவிட்டால் இவ்வுலகில் பொருளாதாரத்தை ஈட்டுவதில் அவர்களுக்கு மத்தியில் போட்டி, பொறாமை, வஞ்சகம், சூது இவையெல்லாம் நொடிப்பொழுதில் அற்றுப் போய்விடும். எல்லோரும் நிம்மதியாக வாழ்வார்கள். தர்மம் செய்வதிலும் பிறருக்கு வாரி வழங்குவதிலும் மனிதன் போட்டிபோடத் தொடங்கிவிடுவான். உண்டு கழித்தது என்றால் ஒருவன் தனக்காக உண்பதையே குறிக்கும். அதேநேரத்தில் தன் பிள்ளைகள், மனைவியர் ஆகியோருக்கு வாங்கிக் கொடுப்பது தர்மம் ஆகும். ஆம். நீ உன் மனைவிக்கு ஊட்டும் ஒரு கவள உணவும் உனக்கு தர்மம் ஆகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஆகவே மனைவிக்கு வழங்கும் உணவிற்காக அல்லாஹ் நன்மையைத் தந்துவிடுகின்றான். மனிதர்களுள் சிலர் தமக்காகவே வாங்கி உண்பதில்லை. பின்னர் தம் மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் எப்படி வாங்கிக் கொடுப்பார்கள்? பிறகு சக மனிதர்களுக்கு எப்படிச் செலவு செய்வார்கள்? ஒவ்வொரு நாளும் இரண்டு வானவர்கள் இறங்குகின்றனர். அவ்விருவருள் ஒருவர், “அல்லாஹ்வே! தர்மம் செய்பவருக்குப் பிரதிபலனை அளித்திடுவாயாக!’’ என்று கூறுவார். மற்றொருவர் “அல்லாஹ்வே! (தர்மம் செய்யாமல் பொருளைத்) தடுத்து வைத்துக்கொள்பவர்களுக்கு அழிவை ஏற்படுத்துவாயாக!’’ என்று கூறுவார் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரீ: 1442) பொதுவாக, செலவு செய்தல் என்ற பழக்கம் எல்லாருக்கும் வாய்க்காது. ஏனெனில் பணத்தைச் செலவு செய்தால் தீர்ந்து போகும் என்ற எண்ணமே முதலில் மனதில் வந்து நிற்கும். அந்த எண்ணத்தை நீக்கிவிட்டுச் செலவு செய்தல் அவ்வளவு எளிதானதன்று. ஏனெனில் அது மனம் சார்ந்தது. ஆகவே இறையச்சமும் இறைநம்பிக்கையும் மிகுதியாக உள்ளோரே செலவு செய்ய முனைவர். ஏனையோர் செலவு செய்ய யோசிப்பார்கள். சேர்த்து வைக்கவே எண்ணுவார்கள். அவ்வளவு எளிதில் தம் பணத்தைப் பிறருக்குச் செலவு செய்ய முனைய மாட்டார்கள். உடுத்திக் கிழித்தல் என்பது, ஒருவன் தன் வாழ்நாளில் நல்ல ஆடைகளையும் புத்தாடைகளையும் வாங்கி உடுத்தி அதற்காகச் செலவு செய்தலைக் குறிக்கிறது. ஆடை என்பது ஒருவர் தம் மானத்தை மறைப்பதற்காக என்றாலும் ஆள் பாதி, ஆடை பாதி என்பதற்கேற்ப நல்ல ஆடைகளை அணிவது பிறரின் பார்வைக்கு அழகாகத் தெரிவதற்கும் சேர்த்துத்தான் என்பதை அனைவரும் அறிவோம். எனவே பிறரின் பார்வைக்கு அழகாகத் தெரிய வேண்டும் என்பதற்காக உடுத்துகின்ற ஆடை நல்ல ஆடையாகவும் சுத்தமானதாகவும் இருக்க வேண்டும். அப்படியெனில் அதற்காக நாம் செலவு செய்துதான் ஆக வேண்டும். ஆதமுடைய மக்களே! உங்களுடைய மானத்தை மறைக்கக்கூடியதும் (உங்களை) அலங்கரிக்கக்கூடியதுமான ஆடைகளை நிச்சயமாக நாம் உங்களுக்கு அருள் புரிந்திருக்கின்றோம். எனினும், (பாவங்களை மறைத்துவிடக்கூடிய) இறையச்சம் எனும் ஆடைதான் மிக்க மேலானது (7: 26) என்று அல்லாஹ் திருக்குர்ஆனில் குறிப்பிடுகின்றான். இருப்பினும் எல்லா ஆடைகளுக்கும் மேலாக ஒருவர் அணிந்துகொள்ளும் இறையச்சம் எனும் ஆடையே உயர்வானது, மேலானது என்று அல்லாஹ் கோடிட்டுக் காட்டாமல் விட்டுவிடவில்லை. ஆகவே நம்முடைய ஆடைக்காக நாம் செலவு செய்கிறோம். ஆனால் அது பிறரின் பார்வைக்கு அழகாகத் தென்பட வேண்டும் என்பதற்காக இருக்கலாமே தவிர பகட்டுக்காகவும் பெருமைக்காகவும் இருக்கக் கூடாது. இருப்பினும் சிலர் போதிய வசதியிருந்தும் தம் ஆடைக்காகச் செலவு செய்ய மாட்டார்கள். பழைய ஆடையையே உடுத்திக்கொண்டிருப்பார்கள். ஆடைக்காகச் செலவு செய்தால் பணம் தீர்ந்துபோகும் என்ற கவலை. அத்தகையோருக்காக நபி (ஸல்) அவர்கள் கூறிய வார்த்தைதான் இது: திண்ணமாக அல்லாஹ் தன்னுடைய அடியானிடம் தன் அருட்கொடையின் வெளிப்பாட்டைக் காண விரும்புகிறான். (நூல்: திர்மிதீ: 2744) தான் உண்பது, தான் உடுத்துவது-இவ்விரண்டும் போக ஒருவன் இவ்வுலகில் வாழும் காலத்தில் பிறருக்காக எவ்வளவு செலவு செய்கின்றானோ அதுவெல்லாம் அவன் தனக்காகச் சேர்ப்பதாகும். இவ்வுலகில் ஒருவன் வங்கியில் சேமித்து வைத்து, தனக்குத் தேவையானபோது அதை எடுத்துச் செலவுசெய்வதுபோல் ஒருவன் இவ்வுலகில் பிறருக்காகச் செலவழித்ததையெல்லாம் மறுமையில் அவன் நன்மையாகப் பெற்றுக்கொள்வான். ஆகவே இம்மூன்றும்தான் ஒரு மனிதன் அனுபவிக்கின்ற தன்னுடைய சொத்து. மற்றவையெல்லாம் தான் சார்ந்த வாரிசுகளுக்கும் அல்லது பிற மக்களுக்கும்தான். அதிலிருந்து அவனுக்கு நன்மை சேருமா, சேராதா என்பது அவனுடைய வாரிசுகளைப் பொறுத்தே அமையும். பிறருக்காகச் செலவு செய்ய மனம் வராத மக்களுக்காக அல்லாஹ் கீழ்க்கண்ட இரண்டு வசனங்களைக் கூறுகிறான்: உங்களில் ஒருவருக்கு மரணம் வருமுன்னரே, நாம் உங்களுக்கு அளித்த பொருளிலிருந்து, தான தர்மம் செய்துகொள்ளுங்கள்; (அவ்வாறு செய்யாது மரணிக்கும் சமயம்), “”என் இறைவனே! என் தவணையை எனக்குச் சிறிது பிற்படுத்தக் கூடாதா? அப்படியாயின் நானும் தான தர்மம் செய்து ஸாலிஹான (நல்ல)வர்களில் ஒருவனாக ஆகிவிடுவேனே’’ என்று கூறுவான். (63:10) இறைநம்பிக்கை கொண்டோரே! பேரங்களும் நட்புறவுகளும் பரிந்துரைகளும் இல்லாத அந்த (இறுதித் தீர்ப்பு) நாள் வருவதற்கு முன்னர், நாம் உங்களுக்கு அளித்தவற்றிலிருந்து (நல்வழிகளில்) செலவு செய்யுங்கள். (2: 254) ஆக மனிதன் எவ்வளவு உழைத்துச் சேர்த்தாலும் அவனுக்கு மிஞ்சுவது அவன் சேர்த்த நல்லறங்கள்தாம். எனவே நாம் வாழும் காலத்தில் நல்ல முறையில் உண்டு, உடுத்தி, பிறருக்கு வழங்கி வாழ்வோம். ஈருலகிலும் நன்மையை அடைவோம். -இன்ஷா அல்லாஹ் தொடரும் ===========