வெள்ளி, 16 ஏப்ரல், 2021

என்ஜாய் யுவர் லைஃப் - நூல் மதிப்புரை

நூல்சோலை

என்ஜாய் யுவர் லைஃப்-வாழ்க்கையை அனுபவி
 
அல்லல், அவதி, இன்னல், துன்பம், கஷ்டம், நஷ்டம், கோபம், கொந்தளிப்பு, சோகம், இறுக்கம், விரக்தி முதலியவற்றால் வேதனையுற்று வாடி நைந்துபோன உள்ளங்களுக்கு அவற்றை வெல்லும் வகையை அழகுற எடுத்துரைத்துப் பெரும் தன்னம்பிக்கையை டாக்டர் முஹம்மத் அப்துர் ரஹ்மான் அரீஃபீ வழங்கியுள்ளார்.

வீழ்ந்துபோன சந்தர்ப்பங்களில் எழுந்து நிற்பது எப்படி என்பதை-இறைமறையாம் திருக்குர்ஆனைக் கொண்டும் இறுதித் தூதராம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது வாழ்க்கை நெறிமுறையைக் கொண்டும் ஆசிரியர் எடுத்துரைத்திருக்கும் வகை மிகுந்த பாராட்டுக்குரியதாகும். 


"அவர்கள் பயன்பெறவில்லை' எனத் தொடங்கும் நூல் 91 கட்டுரைகளை உள்ளடக்கி "துணிச்சலோடு; இரு இன்றே தொடங்கு' என்ற கட்டுரையோடு முடிந்திருப்பது நூலின் கட்டுரைக் கட்டமைப்புத் திறனை வெளிப்படுத்துகிறது. மூலஆசிரியர் தமது வாழ்நாளில் கண்டு, கேட்டு அனுபவித்தவற்றை இந்நூலின்வழி எடுத்துக் காட்டி அவற்றுக்குத் திருக்குர்ஆன் மற்றும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மொழிவழி அணுகித் தீர்வு கண்டுரைப்பது இந்த நூல் வெறும் பிரச்சனைகளை மட்டுமே அலசி ஆராய்கிற நூலன்று, அவற்றுக்கான தீர்வுகளைத் திடமுடன் எடுத்துரைக்கிற நூல் என்பதைப் பறைசாற்றி வெற்றி கொள்கிறது.


டாக்டர் முஹம்மத் அப்துர் ரஹ்மான் அரீஃபீ இந்நூலில் பல்வேறு தலைப்புகளில் அன்றாட வாழ்க்கைச் சிக்கல்களையும் அவற்றைத் தீர்க்க மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகளையும் எடுத்துரைக்கும் திறத்தினை நுணுகிக் காணும்போது அவர் தமது வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது அமுத மொழிகளை அனுபவித்து வாழ்ந்திருக்க வேண்டும் என்பதனை உய்த்துணர வைக்கிறது. 


வாழ்க்கையை அனுபவிக்க வாசிக்கப்படும் இந்த நூல் ஒரு மொழிபெயர்ப்பு நூல்போல் இல்லாமல் ஒரு புதிய தமிழ் நூலை வாசிப்பதைப் போன்ற உணர்வை ஏற்படுத்துவதில் பெரிதும் வெற்றி பெற்றுள்ளதென்பதைப் பெருமிதத்தோடு குறிப்பிட்டே ஆக வேண்டும்.

இவ்வகையில் மௌலவி டாக்டர் நூ. அப்துல் ஹாதி பாகவி வாழ்த்துதலுக்கும் பாராட்டுதலுக்குமுரியவர் ஆவார். 

வல்ல அல்லாஹ் அவருக்கு நீண்ட ஆயுளும் நிறைந்த சுகமும் தழைத்த வளமும் அவர் மேற்கொண்டுள்ள பணிகளில் ஈருலகப் புகழும் நல்கியருள இறைஞ்சி வாழ்த்திப் பாராட்டிப் பேருவகை கொள்வோம். வாழ்க... வளர்க...
-சேமுமு 
------------------------

நூலின் பெயர்: என்ஜாய் யுவர் லைஃப்-வாழ்க்கையை அனுபவி 
நூலாசிரியர்: டாக்டர் முஹம்மத் அப்துர் ரஹ்மான் அரீஃபீ  
மொழிபெயர்ப்பாளர்: மௌலவி டாக்டர் நூ. அப்துல் ஹாதி பாகவி
பக்கங்கள்: 640
விலை: ரூ. 400
நூல் கிடைக்குமிடம்: சாஜிதா புக் சென்டர், தம்புச் செட்டித் தெரு, மண்ணடி, சென்னை.. 
தொடர்புக்கு: 98409 77758 
=======================

நன்றிக்குரியோருக்கு நன்றி செலுத்துவோம்

நன்றிக்குரியோருக்கு நன்றி செலுத்துவோம்!
 
-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.
----------------------

இவ்வுலகில் பிறந்து வாழ்கிற மனிதர் ஒவ்வொருவரும் முதன்முதலில் நன்றி செலுத்த வேண்டியது அல்லாஹ்வுக்குத்தான். அந்த நன்றியை எவ்வாறு வெளிப்படுத்துவது? அல்லாஹ்வுக்குச் சிரம் தாழ்த்தி,  பணிந்து வழிபடுவதன்மூலமே வெளிப்படுத்த வேண்டும். அதையே இறைவன் தன் அடியார்களிடம் எதிர்பார்க்கிறான். அதனால்தான் ஒவ்வொரு நாளும் ஐவேளைத் தொழுகையை நிறைவேற்ற வேண்டும் என்று கட்டளையிட்டுள்ளான்.

 
இரண்டாவது அவனது பெற்றோருக்கு நன்றி செலுத்த வேண்டும். ஆக இவ்விரண்டையும் அல்லாஹ்வே மனிதனுக்குக் கற்றுத்தருகிறான். முதலில் அல்லாஹ்வுக்கும் இரண்டாவது பெற்றோருக்கும் நன்றி செலுத்தவேண்டுமென அல்லாஹ் நிர்ணயித்துள்ளான். அல்லாஹ்தான் மனிதனைப் படைத்தான். எனவே அவனுக்கு முதல் நன்றி. பெற்றோர் அவனைப் பெற்றெடுத்தனர். எனவே அவர்களுக்கு இரண்டாவது நன்றி.

 
பின்வரும் வசனத்தைப் பாருங்கள்: "தனது தாய் தந்தைக்கு நன்மை செய்யுமாறு மனிதனுக்கு நாம் அறிவுறுத்தினோம். அவனுடைய தாய் துன்பத்தின் மேல் துன்பத்தை அனுபவித்து(க் கர்ப்பத்தில்) அவனைச் சுமந்தாள். (பிறந்த) பிறகும் அவன் பால்குடி மறக்க இரண்டு ஆண்டுகளாகின்றன. ஆகவே, நீ எனக்கும் நன்றி செலுத்து; உன்னுடைய தாய் தந்தைக்கும் நன்றி செலுத்து. (31: 14) 

       
பெற்றோர் எனும் ஒரே வார்த்தையில் தாய்-தந்தை இருவரையும் சேர்த்துக் கூறும் இறைவன், பிறகு தாயை மட்டும் பிரித்து, அவளது தியாகத்தையும் சேவையையும் தனியாகக் கூறுகின்றான்.  அதாவது அவனுடைய தாய் துன்பத்திற்கு மேல் துன்பத்தை அனுபவித்து அவனைக் கர்ப்பத்தில் சுமந்தாள் என்றும் பிறந்தபின் அவனுக்கு ஈராண்டுகள் பாலூட்டினாள் என்றும் அவளது தியாகத்தைத் தனியாகக் கூறுகின்றான். இதையெல்லாம் பாசத்தோடு செய்யவைத்த இறைவனாகிய எனக்கு நன்றி செலுத்து. அத்தோடு உன்னுடைய பெற்றோருக்கும் நன்றி செலுத்து என்று கூறுகின்றான். நன்றி செலுத்து என்று கூறும்போது தன்னை அல்லாஹ் முற்படுத்தியுள்ளான். பிறகு இரண்டாவதாகப் பெற்றோர் என்ற வார்த்தையில் தாயையும் தந்தையும் ஒன்றிணைத்துக் கூறுகின்றான்.

 
இவ்வசனத்தை நாம் ஆழ்ந்து நோக்கும்போது, நன்றிக்குரியவர்கள் யார் யார் என்பதை விளங்கிக்கொள்ள முடியும். அதாவது நேரடியாக உபகாரம் செய்வோர் மட்டுமின்றி, மறைமுகமாக, கண்ணுக்குத் தெரியாமலும் நமக்கு உபகாரம் செய்வோருக்கும் நன்றி செலுத்த வேண்டும் என்று இறைவன் கூறுவதை நாம் உணரலாம். அதாவது தாய்தான் சிசுவைப் பத்து மாதங்கள் சுமந்து பெற்றெடுக்கிறாள்; ஈராண்டுகள் பாலூட்டுகிறாள். எனவே தாய்க்கு மட்டும் நன்றி செலுத்தினால் போதுமா? அந்தத் தாய் சிசுவைச் சுமப்பதற்கும் பாலூட்டுவதற்கும் காரணமான தந்தைக்கும் நன்றி செலுத்த வேண்டும். ஏனெனில் அவர்தாம் தாயின் தேவைகளை நிறைவேற்றுகிறார்; குழந்தைக்குப் பாலூட்டுவதற்கான ஏற்பாடுகளைச் செய்து தருகிறார். எனவே அவருக்கும் சேர்த்தே நன்றி செலுத்துமாறு இறைவன் கட்டளையிடுகிறான். 

சரி, தாய்க்கும் தந்தைக்கும் மட்டும் நன்றி செலுத்தினால் போதுமா? அன்போடும் பாசத்தோடும் வளர்க்கின்ற இத்தகைய பெற்றோரைத் தனக்கு வழங்கியவன் யார் எனச் சிந்திக்க வேண்டாமா? கண்முன் தெரிகின்ற இந்தப் பெற்றோரை வழங்கிய ஒருவன் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்திருக்கின்றான். அவனே இறைவன். எனவே அவனுக்கு முதல் நன்றி. இரண்டாவது பெற்றோருக்கு நன்றி.

 
இறைவனுக்கான நன்றியை எவ்வாறு செலுத்த வேண்டும்? சிரம் பணிந்து வணங்குவதன்மூலம் அவனுக்கான நன்றியைச் செலுத்த வேண்டும். பெற்றோருக்கான நன்றியை அவர்களுக்குக் கட்டுப்பட்டு நடப்பதன்மூலம் நிறைவேற்ற வேண்டும். அதாவது அவர்களிடம் கனிவாகப் பேசுதல், கண்ணியமாக நடந்துகொள்ளல்,  அவர்களைக் கண்ணியப்படுத்துதல், அவர்களிடம் பணிவாக நடந்துகொள்ளல், அவர்களை அன்போடு பார்த்தல், அன்போடு உரையாடுதல், பணிவிடைகள் செய்தல், அவர்களுடைய கட்டளைக்கு மாறுசெய்யாதிருத்தல், எதிர்த்துப் பேசாதிருத்தல், அவர்களுக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்தல் உள்ளிட்டவை அடங்கும்.

 
முதலாவது நன்றியை எடுத்துக்கொண்டு ஆய்வு செய்தால் பெரும்பாலான மனிதர்கள் அல்லாஹ்வுக்கு உரிய முறையில் நன்றி செலுத்துவதில்லை. மனிதர்களை இப்புவியில் படைத்து, அன்பான பெற்றோரை அவர்களுக்கு வழங்கி, நல்லவிதமாக வாழ வைத்த இறைவனுக்கு உரிய முறையில் நன்றி செலுத்தாமல் நன்றி கொன்றோராக இருக்கிறார்கள். அதனால் அல்லாஹ் அவர்கள்மீது கோபமடைந்து சோதனைகளை ஏற்படுத்துகிறான். சிலர் மட்டும் நன்றி கொன்றவர்களாக இருந்தால் அவர்களை மட்டும் சோதிக்கலாம்; தண்டிக்கலாம். ஆனால் பெரும்பாலானோர் நன்றி கொன்றோராக இருப்பதால் சோதனைக்கு மேல் சோதனையை ஏற்படுத்துவதோடு கரடுமுரடான, இரக்கமற்ற ஆட்சியாளர்களை நியமித்து மேன்மேலும் அவர்களைத் துன்புறுத்துகிறான்.

அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்த வாய்ப்புக் கிடைத்தபோதெல்லாம் அந்த வாய்ப்புகளை அலட்சியம் செய்தவர்கள், தற்போதைய சூழ்நிலையில் கொரோனா எனும் நோய்த்தொற்றைக் காரணம் காட்டி, அரசால் இறைவனை வணங்குகிற வாய்ப்பும் முஸ்லிம்களுக்கு மறுக்கப்படுகிறது. தன் அடியார்கள் தனக்கு நன்றி செலுத்துவதன்மூலம் ஈருலகிலும் மகிழ்ச்சியாக வாழ அல்லாஹ் வாய்ப்பளிக்கிறான். ஆனால் அறிவிலியான அடியார்கள் அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளாமல் தம் வாழ்க்கையை அவர்களே சிரமத்திற்குள்ளாக்கிக்கொள்கிறார்கள். தன்னை வணங்கும் அந்த  வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளாவிட்டால் அல்லாஹ் அந்த வாய்ப்பைப் பறித்துக்கொள்வான். அதுதான் இப்போது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. எனவே வாய்ப்புக் கிடைக்கும்போதே அவனுக்கு நன்றி செலுத்த முந்திக்கொள்வோம்.  

அல்லாஹ்வுக்கு உரிய முறையில் நன்றி செலுத்தியோர் இறைத்தூதர்கள் ஆவர். அவர்கள் குறித்து அல்லாஹ்வே திருக்குர்ஆனில் கூறுகின்றான். இப்ராஹீம் நபியைப் பற்றி அல்லாஹ் கூறுவதைப் பாருங்கள்: "இறைவனின் அருட்கொடைகளுக்கு (எந்நேரமும்) நன்றி செலுத்துபவராக இருந்தார்.'' (16: 121) இறைவனின் அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துபவராக இருந்தார் என்று இறைவன் புகழ்ந்து கூறுகின்றான் என்றால் அவர் எந்த அளவிற்கு நன்றி செலுத்துபவராக இருந்திருப்பார் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். 

அதுபோலவே சுலைமான் அலைஹிஸ்ஸலாம் குறித்துப் பேசும்போது, அவருக்கு அல்லாஹ் வழங்கிய அருட்கொடைகளைக் குறிப்பிடுகின்றான். அந்நேரத்தில் அவர் சொன்ன வார்த்தையையும் பதிவு செய்துள்ளான். இதோ: "இது நான் அவனுக்கு நன்றி செலுத்துகின்றேனா இல்லையா என்று என்னைச் சோதிப்பதற்காக என் இறைவன் எனக்குப் புரிந்த பேரருளாகும். எவன் (இறைவனுக்கு) நன்றி செலுத்துகிறானோ அவன் தனக்கே நன்மை செய்து கொள்கிறான். எவன் நன்றியை நிராகரிக்கின்றானோ (அதனால் என் இறைவனுக்கு யாதொரு நட்டமுமில்லை.) நிச்சயமாக என் இறைவன் (யாருடைய) தேவையற்றவனும், மிக்க கண்ணியமானவனும் ஆவான்'' என்று கூறினார். (27: 40) 

இறைத்தூதர் சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தியவராகவே இருந்து வந்தார். எனவேதான் அவருக்கு அல்லாஹ் மேன்மேலும் அருட்கொடைகளை வழங்கிக்கொண்டே இருந்தான். ஒரு தடவை தொலைதூர நாட்டு அரசியின் சிம்மாசனம் அவர் கண்மூடித் திறப்பதற்குள் அவர்முன் கொண்டுவந்து வைக்கப்பட்டது. அதைக் கண்டு அவர் வியந்தார். அல்லாஹ் இத்தகைய பணியாளர்களையெல்லாம் எனக்கு வழங்கி, நான் அவனுக்கு நன்றி செலுத்துகிறேனா இல்லையா என்று சோதிக்கிறான் என்றார். அவர் மிகுதியாக நன்றி செலுத்தியதால்தான் அல்லாஹ் அவருக்கு ஏராளமான அருட்கொடைகளை வழங்கினான் என்பதை நாம் நினைவில்கொள்ள வேண்டும். 

ஆக இவ்வாறு ஒவ்வோர் இறைத்தூதரும் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தியோராகவே இருந்தனர்.  எல்லா இறைத்தூதர்களுக்கும் முன்மாதிரியாகத் திகழ்ந்த நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அல்லாஹ்வுக்கு மிகவும் நன்றிக்குரியவராக இருந்தார்கள் என்பதை அவர்களின் வரலாற்றில் காண்கிறோம். 

ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தொழும்போது தம் கால்களில் வெடிப்பு ஏற்படும் அளவுக்குத் தொழுவார்கள். நான், "அல்லாஹ்வின் தூதரே! இப்படிச் செய்கிறீர்களே! தங்களின் முந்தைய, பிந்தைய தவறுகள் மன்னிக்கப்பட்டு விட்டனவே?'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "ஆயிஷா! நான் நன்றியுள்ள அடியானாக இருக்க வேண்டாமா?'' என்று கேட்டார்கள். (நூல்: முஸ்லிம்: 5433) 

முந்தைய, பிந்தைய தவறுகள் மன்னிக்கப்பட்டபோதும் அல்லாஹ்வுக்கு நன்றியுள்ள அடியாராக இருக்க வேண்டும் என்பதற்காக, அவனுடைய அருட்கொடைகளுக்காக இரவு பகலாக நின்று வணங்கியுள்ளார்கள் என்பதை அறிந்து வியக்கிறோம். நம்மையும் அவர்களுடைய வணக்க வழிபாடுகளோடு ஒப்பிட்டுப் பார்க்கின்றபோது வெட்கித் தலைகுனியாமல் இருக்க முடியாது. 

அல்லாஹ்வுக்கு முதல் நன்றி. பெற்றோருக்கு இரண்டாவது நன்றி. மூன்றாவது நன்றி யாருக்கு? கல்வியைக் கற்பித்த ஆசிரியருக்கே மூன்றாவது நன்றி. "லுக்மானுக்கு நாம் ஞானத்தைக் கொடுத்து அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும்படி கூறினோம்'' (31: 12) என்று அல்லாஹ் கூறுகின்றான். அதாவது ஞானக் கல்வியை வழங்கிய அல்லாஹ் எனும் ஆசிரியனுக்கு நன்றி செலுத்துமாறு கட்டளையிடுகின்றான். எனவே நமக்குக் கற்பித்த ஆசிரியர்களுக்கு நாம் நன்றி செலுத்த வேண்டுமல்லவா?

  
இதைத் தாண்டி நம் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்காகவும் நம்முடைய நலனுக்காகவும் பாடுபடுகிற, உதவி செய்கிற, ஒத்துழைப்பு நல்குகிற ஒவ்வொருவருக்கும் நாம் நம் நன்றியைத் தெரிவித்துக்கொண்டே இருக்க வேண்டும். அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்வதும் அவர்களிடம் அன்பாக நடந்துகொள்வதும்தான் அவர்களுக்கு நாம் செலுத்துகிற நன்றியாகும். நம் முன்னேற்றத்திற்காகப் பாடுபட்டோர், நம் கல்விக்கு உதவியோர், நல்வழி காட்டியோர், நல்ல ஆலோசனை வழங்கியோர், நம்முடைய வாழ்வில் எப்போதும் நம்மைச் சார்ந்தே நிற்கக்கூடிய மனைவி, பிள்ளைகள், சகோதரர்கள், சகோதரிகள், மாமன்கள், மச்சான்கள், மச்சிகள், மாமிகள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி செலுத்த வேண்டும். மேற்கண்ட ஒவ்வொருவரும் நம் வாழ்வின் ஏதேனும் ஒரு தருணத்தில் நமக்கு உதவியவர்களாகவே இருப்பார்கள். நாம் உயர வேண்டும், நன்றாக வாழ வேண்டும் என்று எண்ணியவர்களாக, நமக்காகப் பிரார்த்தனை செய்தவர்களாகவே இருப்பார்கள். அவர்களுக்கு நாம் நன்றி செலுத்தினால் அதைக் கண்டு அல்லாஹ் மகிழ்வான். 

மனைவி வழியே உறவுகளாக ஒட்டிக்கொண்ட மாமனார், மாமியார், மனைவியின் உறவினர்கள் என ஒவ்வொருவருக்கும் நன்றி செலுத்துவோம். எனக்குக் கல்வி கற்பித்தவருக்கு நன்றி செலுத்துவதோடு என் பிள்ளைக்குக் கல்வி கற்பித்தவருக்கும் நான் நன்றி செலுத்த வேண்டும். அது என் கடமை என்பதை உணர வேண்டும். அந்த வகையில் என் மனைவிக்கு உதவியவர்கள், என் மனைவியின் இல்வாழ்க்கைக்குத் துணைநின்றவர்கள் என அனைவருக்கும் எனது நன்றி உரித்தாகட்டும் என்று  நினைத்தால் நாம் நன்றி செலுத்துவதில் விசாலமான மனதுக்காரர் ஆகிவிடுவோம்.

  
யாரும் நம்முடைய நன்றியை எதிர்பார்த்துக் காத்திருக்கவில்லை. அல்லாஹ்வும்  நம்முடைய நன்றியை எதிர்பார்த்து இல்லை. நம்முடைய நன்றி அவனுக்குத் தேவையே இல்லை. அப்படியானால் நாம் ஏன்  அவனுக்கு நன்றி செலுத்த வேண்டும்? நாம் நன்றாக வாழ்வதற்குத்தான். "(இதற்காக) நீங்கள் (எனக்கு) நன்றி செலுத்தினால் (நான் என்னுடைய அருளைப் பின்னும்) உங்களுக்கு அதிகப்படுத்துவேன்'' என்று இறைவன் (14: 7) கூறுகின்றான்.

மற்றொரு வசனத்தில், "எவர் நன்றி செலுத்துகிறாரோ அவர்  தம் நன்மைக்காகவே நன்றி செலுத்துகிறார். எவன் (அதனை) நிராகரிக்கிறானோ (அவன் தனக்குத் தீங்கைத் தேடிக்கொள்கிறான். அதனால் அல்லாஹ்வுக்கு ஒன்றும் நஷ்டமில்லை. ஏனென்றால்) நிச்சயமாக அல்லாஹ் தேவையற்றவனாகவும் புகழுடையவனாகவும் இருக்கிறான்'' என்று (27: 40) கூறுகின்றான். 

ஆகவே நன்றி செலுத்துவது நம்முடைய நல்வாழ்விற்காகத்தானே தவிர பிறருடைய நலனுக்காக அன்று என்பதை நாம் உணர்ந்து அல்லாஹ்வுக்கும் அடியார்களுக்கும் நன்றிசெலுத்துவோராகத் திகழ்வோம். 
====================

செவ்வாய், 13 ஏப்ரல், 2021

முடிவுறுமா? தொடருமா?


முடிவுறுமா? தொடருமா? 
-----------------

கொரோனா இரண்டாம் அலை மிக வேகமாகப் பரவி வருவதாகச் சொல்லப்படுகிறது. முதன் முதலில் கொரோனா விமானத்தில் வந்தது. அப்போது விமானப் பயணிகள் காரணமாகவே கொரோனா பரவியதாகச் செசால்லப்பட்டது. இப்போது அதன் இரண்டாம் அலை என்று பரவலாகச் சொல்லப்படுகிறது. 

சரி, இந்த இரண்டாம் அலையோடு முடிந்துவிடுமா என்றால், முடியாது என்பதுதான் பதில். 
அடுத்து மூன்றாம் அலை, நான்காம் அலை எனத் தொடரும் என்றுதான் தெரிகிறது. ஏனென்றால் மக்களைச் சுதந்திரமாக வாழவிடுவதைவிடப் பயத்தோடு வாழ வைப்பதுதான் ஆட்சியாளர்களுக்கு வசதியாக இருக்கிறது.  எப்படி வேண்டுமானாலும் ஆட்சி செய்யலாம். எதிர்த்துக் கேட்க ஆள் இருக்காது. போராட்டங்களே இல்லாமல் செய்துவிடலாம். பிடிக்காதவர்களை கொரோனா பெயரைச் சொல்லி சமாதி கட்டிவிடலாம். 


யூதர்களின் திட்டம் என்னவென்றால், தஜ்ஜாலை வரவேற்க இவ்வுலகைத் தயார் செய்வதே ஆகும். அதற்கு மக்கள் ஒருவருக்கொருவர் வெறுத்தொதுக்கும் நிலையை உருவாக்குதல், வாயையும் மூக்கையும் மறைக்கச் செய்தல், ஒருவருக்கொருவர் ஒட்டாதவாறு இடைவெளியை ஏற்படுத்துதல் ஆகியவற்றைச் செய்தல். இதையெல்லாம் எப்படிச் செய்வது? அதற்காக உருவாக்கப்பட்டதுதான் இந்த கொரோனா. அதாவது பயத்தை ஏற்படுத்திவிட்டால் மக்கள் ஒருவருக்கொருவர் வெறுக்கத் தொடங்கிவிடுவார்கள். அதனால்தான் இப்போது யாரும் யார் வீட்டிற்கும் செல்ல விரும்புவதில்லை. யாராவது வருவதாகச் சொன்னாலும் கொரோனாவைக் காரணம் காட்டி, வரவேண்டாம் என்று சொல்லிவிடுகிறார்கள். 


கூட்டமாக இருப்பதை ஷைத்தான் விரும்புவதில்லை. அதனால்தான் சமூக இடைவெளி அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்விடத்தில் நபிமொழி ஒன்றை நினைவூட்டுகிறேன். “நீங்கள் சமுதாயக் கூட்டமைப்புடன் சேர்ந்திருங்கள். பிரிந்துவிட வேண்டாம் என நான் உங்களை எச்சரிக்கிறேன். ஏனெனில் ஷைத்தான் (பிரிந்து வாழும்)  தனிமனிதனுடன்தான் இருக்கிறான். அவன் (இணைந்திருக்கும்) இருவரைவிட்டுத் தொலைவில் சென்றுவிடுவான்...” (திர்மிதீ: 2091) 


இப்போது புரிகிறதா? மனிதர்கள் கூட்டம் கூட்டமாக இருப்பதை ஷைத்தான் விரும்புவதில்லை. அவர்கள் தனித்தனியாக இருப்பதையே விரும்புகிறான். அதை செல்ஃபோன் மூலம் ஏற்கெனவே அவன் செய்துவிட்டான். இருப்பினும் பயத்தை அள்ளிப்போட்டால் இன்னும் கொஞ்சம் அதிகமாகப் பிரிந்துகிடப்பார்கள். அதுதான் அவனது எண்ணம்.
காலம் செல்லச் செல்ல அதைவிட மோசமான காலம்தான் வருமே தவிர வசந்த காலம் திரும்ப வராது. அதனால் இப்போது நாம் வாழும் காலமே நம்மைப் பொருத்த வரை பொற்காலம்.
இனி வரும் காலமெல்லாம் இதைவிட மோசமாகவே இருக்கும். அதுவெல்லாம் வறண்ட காலம். 


கொரோனா என்பது நோயல்ல. அது ஒரு பேரச்சம். அந்த அச்சம் யாருடைய மனதிற்குள் புகுந்துகொண்டதோ அவரெல்லாம் அதற்கு இரையாகிவிடுவார். யார் அல்லாஹ்வுக்கு மட்டும் அஞ்சி, மற்ற எதைக் கண்டும் அஞ்சாமல், எது வந்தபோதிலும் “அல்லாஹ் எங்களுக்கு விதித்ததைத் தவிர வேறொன்றும் எங்களைத் தீண்டாது” என்று உரக்கச் சொல்கிறாரோ அவரை எதுவும் தீண்டாது. அவர் நிம்மதியாக வாழ்வார்.

 
ஐவேளை  தொழுகையைக் கடைப்பிடிப்போம். 
அல்லாஹ்வையே அஞ்சுவோம். 
எல்லா நிலைகளிலும் நிம்மதியாக வாழ்வோம். 

அன்புடன் 
நூ. அப்துல் ஹாதி பாகவி
13 04 2021    30 08 1442 

சனி, 10 ஏப்ரல், 2021

பலதரப்பட்ட நோன்புகள்

பலதரப்பட்ட நோன்புகள் 
   
-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

------------

நம்மைப் படைத்த இறைவனுக்காக உண்ணாமல், பருகாமல், உடலுறவு கொள்ளாமல் இருப்பதே நோன்பாகும். அது வைகறையிலிருந்து தொடங்கி அந்தி மறையும் வரை நீடிக்கிறது. நோன்பு என்பது இஸ்லாமிய மார்க்கத்தின் ஐந்து தூண்களுள் ஒன்றாகும். இது ஹிஜ்ரீ 2ஆம் ஆண்டு கடமையாக்கப்பட்டது. இருப்பினும் அதற்குமுன்னரே நோன்பு இருந்து வருகிறது.


நோன்பு குறித்து அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறியுள்ளான்: உங்களுள் யார் அம்மாதத்தை (ரமளான்) அடைகிறாரோ அவர் அதில் நோன்பு நோற்கட்டும். (2: 185) 


இந்த நோன்பு இந்தச் சமுதாயத்திற்கு மட்டுமின்றி முந்தைய சமுதாயத்திற்கும் கடமையாக்கப்பட்டிருந்தது என்பதைத் திருக்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது: இறைநம்பிக்கை கொண்டோரே! உங்களுக்கு முன்னுள்ளவர்கள் மீது கடமையாக்கப்பட்டிருந்தது போல் உங்கள்மீதும் நோன்பு நோற்பது கடமையாக்கப்பட்டுள்ளது. (அதனால்) நீங்கள் இறை அச்சமுடையவர்களாக ஆகலாம். (2: 183)


பருவமடைந்த ஒவ்வோர் ஆணும் பெண்ணும் ரமளான் மாதம் முழுவதும் நோன்பு நோற்பது கடமையாகும்.  சிலருக்கு இதில் விதிவிலக்கு உண்டு. ரமளான் மாதத்தில் மாதவிடாய் ஏற்பட்ட பெண்கள், பிரசவ உதிரப்போக்கு ஏற்பட்ட பெண்கள், பாலூட்டும் அன்னையர்கள், பயணிகள், நோய்வாய்ப்பட்டிருந்தோர் முதலியோர் நோன்பு நோற்காமல் இருக்கச் சலுகை வழங்கப்படுகிறது. அத்தகையோர் ரமளான் மாதம் கழிந்துபின் பிற மாதங்களில் தமக்குத் தோதுவான நாள்களில், விடுபட்டுப்போன நோன்புகளை களா-நிறைவேற்ற வேண்டும். இதற்கு ‘களா நோன்பு’ என்று கூறப்படுகிறது.  


விடுபட்டுப்போன நோன்பைப் பிற நாள்களில் களா-நிறைவேற்ற வேண்டும் என்று அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகின்றான்: (உங்களுள்) யாராவது நோயாளியாகவோ பயணத்திலோ இருந்தால் (ரமளான் அல்லாத) மற்ற நாள்களில் (விட்டுப்போன நாள்களின் நோன்பைக்) கணக்கிட்டு (நோற்று) விடட்டும். (2: 185)


ஆறு நோன்பு: ரமளான் மாத நோன்பு நோற்று முடிந்து ஷவ்வால் பிறை 1 அன்று ஈத் பெருநாள் கொண்டாடிய கையோடு அன்று இரவே ஸஹர் சாப்பிட்டு, மறுநாள் முதல் 6 நாள்கள் வரை நோற்கப்படுகிற நோன்பே ‘ஆறு நோன்பு’ என்று சொல்லப்படுகிறது. இந்த ஆறு நோன்பைத் தொடர்படியாக ஆறு நாள்கள் நோற்க வேண்டும்.  அதேநேரத்தில் அதற்கான வாய்ப்பைப் பெறாதவர்கள் அந்த மாதத்திற்குள் ஏதேனும் ஆறு நாள்கள் நோற்றுக்கொள்ளலாம் என்று மார்க்க அறிஞர்கள் கூறியுள்ளார்கள்.


இதனுடைய சிறப்பென்ன என்பதைப் பார்ப்போம். “ரமளான் மாதம் நோன்பு நோற்று அதைத் தொடர்ந்து ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்பு நோற்றவர், காலமெல்லாம் நோன்பு நோற்றவரைப் போன்றவராவார்” என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (நூல்: முஸ்லிம்: 2159)


அதாவது ஒரு நற்செயலுக்கு, அதைப் போன்ற பத்து மடங்கு நன்மை உண்டு. அதன்படி, ரமளான் ஒரு மாதம் நோன்பு நோற்பதற்கு வருடத்தில் 10 மாதம் நோன்பு நோற்ற நன்மையும், ஷவ்வால் மாதத்தில் நோற்கும் ஆறு நோன்பிற்கு 60 நாட்கள் (2 மாதம்) நோன்பு நோற்ற நன்மையும், ஆக மொத்தம் 12 மாதங்கள் (ஒரு வருடம்) நோன்பு நோற்ற நன்மையும் கிடைக்கும் என்ற விளக்கவுரை அல்மின்ஹாஜ் எனும் நூலில் காணப்படுகிறது.

 
சுன்னத்தான நோன்புகள்: முஹர்ரம் பத்து-ஆஷூரா நாளில் நோற்கின்ற நோன்பு சுன்னத் ஆகும். இந்த ஆஷூரா நோன்பு ரமளான் நோன்பு கடமையாக்கப்படுவதற்குமுன் மிக முக்கியமான இடத்தைப் பெற்றிருந்தது.  அதன்பின் ரமளான் நோன்பு கடமையாக்கப்பட்டபின் அதன் முக்கியத்துவம் குறையத் தொடங்கியது. இருப்பினும் அதற்கான நன்மையும் சிறப்பும் குறையவில்லை.


ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா கூறியதாவது: குறைஷி குலத்தினர் அறியாமைக் காலத்தில் ஆஷூரா நாளில் நோன்பு நோற்றுவந்தனர். ரமளான் நோன்பு கடமையாக்கப்படும் வரை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் ஆஷூரா நோன்பு நோற்குமாறு கட்டளையிட்டார்கள். (ரமளான் நோன்பு கடமையாக்கப்பட்ட) பின்னர் "(ஆஷூரா நாளின் நோன்பை) நோற்க விரும்புபவர் அதை நோற்கட்டும்! விட்டுவிட விரும்புபவர் அதை விட்டுவிடட்டும்!'' எனக் கூறினார்கள். (நூல்: புகாரீ: 1893) 


ஆக சுன்னத்தான நோன்புகளுள் ஒன்றாகக் கருதப்படுகிற ஆஷூரா நாள் நோன்பை விரும்பியோர் நன்மையைக் கருதி நோற்கலாம். நோற்க வாய்ப்பில்லாதோர் அதை விட்டுவிடலாம். நோன்பு நோற்காதவரை நாம் குறை சொல்லக்கூடாது. ஆஷூரா நோன்பு மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் காலத்திலிருந்தே நோற்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 


அரஃபா நோன்பு: துல்ஹஜ் மாதம் 9ஆம் நாள் அரஃபா நாளன்று ஹாஜிகள் அல்லாதோர் நோற்கும் நோன்பே அரஃபா நோன்பாகும்.  


“...துல்ஹஜ் ஒன்பதாவது நாள் (அரஃபா) அன்று நோன்பு நோற்பதை, அதற்கு முந்தைய ஓராண்டிற்கும் அதற்குப் பிந்தைய ஓராண்டிற்கும் பாவப் பரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான் என்று நான் எதிர்பார்க்கிறேன்...” என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (நூல்: முஸ்லிம்: 2151)


பராஅத் நோன்பு: ஷஅபான் 15ஆம் நாள் நோற்கப்படுவது பராஅத் நோன்பு ஆகும். இதை நோற்கலாமா கூடாதா என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது. இருசாராரும் தமக்குரிய ஆதாரத்தை முன்வைக்கின்றனர். இருப்பினும் நன்மையைக் கருதி நஃபில் என்ற அடிப்படையில் நோற்பதில் தவறில்லை. ஆனால் அதை பித்அத் என்று சொல்வதைத் தவிர்த்துக்கொள்ளலாம். 
நோற்கக் கூடாது என்று கூறுவோர் முன்வைக்கும் ஆதாரம்: “ஷஅபான் அரைத் திங்கள் கழிந்துவிட்டால் நீங்கள் நோன்பு நோற்காதீர்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (நூல்: ஷரஹுஸ்ஸுன்னா லில்பஃகவீ: 1721) 


நோற்கலாம் என்று கூறுவோர் முன்வைக்கும் ஆதாரமும் மேற்கண்ட நபிமொழிதான். அவர்கள் அதற்கு இவ்வாறு விளக்கம் சொல்கிறார்கள். அதாவது அரைத்திங்கள் என்பது 15 ஆம் நாளையும் உட்கொண்டதுதான்.  எனவே 15ஆம் நாளில் நோற்கலாம். 16ஆம் நாளில்தான் நோற்கக்கூடாது. ஆக ஷஅபான் 15ஆம் நாள் நோற்பதை பித்அத் என்று சொல்வதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும். அவரவர் எண்ணப்படி நோன்பு நோற்றவருக்கு நன்மை கிடைத்துவிடும். 


மிஅராஜ் நோன்பு: ரஜப் 27ஆம் நாள் அன்று நோற்கப்படுகிற நோன்பு மிஅராஜ் நோன்பு எனப்படுகிறது. இந்த நோன்பு ஹதீஸ் நூல்களில் பதிவு செய்யப்படவில்லை. எனினும் மக்கள் சிலர் இந்நாளில் நோன்பு நோற்று வருகின்றனர். எனவே அதை பித்அத் என்று சொல்லாமல் நஃபிலான நோன்பை நோற்கிறார்கள் என்று நாம் எடுத்துக்கொள்ளலாம். ஏனென்றால் நஃபிலான நோன்பு எப்போது வேண்டுமானாலும் நோற்கலாம் அல்லவா? 


அய்யாமுல் பீள் நோன்பு: ஒவ்வொரு மாதமும் பிறை 13, 14, 15 ஆகிய (பௌர்ணமி) வெளிச்ச நாள்களில் (அய்யாமுல் பீள்) நோற்கப்படுகிற  நோன்புக்கு அய்யாமுல் பீள் நோன்பு என்று பெயர்.  சிலர் 12, 13, 14 ஆகிய மூன்று நாள்கள் என்கிறார்கள். வேறு சிலர் பிறை 1, 11, 21 ஆகிய மூன்று நாள்கள் என்று கூறியுள்ளார்கள். இருப்பினும் முதற்கருத்தே சரியானது எனப் பெரும்பாலான அறிஞர்கள் கூறுகின்றார்கள்.


அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது: ஒவ்வொரு மாதமும் மூன்று நாள்கள் நோன்பு நோற்குமாறும், "ளுஹா' நேரத்தில் இரண்டு ரக்அத்கள் தொழுமாறும், உறங்குவதற்கு முன் வித்ர் தொழுகையைத் தொழுதுவிடுமாறும் இந்த மூன்று விஷயங்களை என் உற்ற தோழர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  எனக்கு அறிவுறுத்தினார்கள். (நூல்: புகாரீ: 1981) 

‘அய்யாமுல் பீள் நோன்பு’ என்ற தலைப்பின்கீழ் இந்த ஹதீஸை இமாம் புகாரீ ரஹிமஹுல்லாஹ் பதிவு செய்துள்ளார். அதிலிருந்தே இதன் சிறப்பு அறியப்படுகிறது. 
வாரந்தோறும் நோன்பு: வாரந்தோறும் திங்கள்கிழமை மட்டும் அல்லது திங்கள்கிழமையும் வியாழக்கிழமையும் நோன்பு நோற்பது நஃபிலான-உபரியான நோன்பாகும். நபியவர்களே வாரந்தோறும் திங்கள்கிழமை நோன்பு நோற்றுள்ளதாக நபிமொழித் தொகுப்பு நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 


அபூகத்தாதா அல்அன்ஸாரீ ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம், திங்கட்கிழமை நோன்பு நோற்பது குறித்துக் கேட்கப்பட்டது. அதற்கு "அன்றுதான் நான் பிறந்தேன்; அதில்தான் எனக்குக் குர்ஆன் (முதன்முதலில்) அருளப்பெற்றது'' என்று கூறினார்கள். (நூல்: முஸ்லிம்: 2153) 


 மாதந்தோறும் நோற்கின்ற நோன்பைத்தான் நபியவர்கள் திங்கள்கிழமையும் வியாழக்கிழமையும் நோற்றுள்ளார்கள். வாரந்தோறும் தனியாகவும் மாதந்தோறும் தனியாகவும் நோற்கவில்லை என்பதை வேறு சில நபிமொழிகள்மூலம் அறிய முடிகிறது.

 அதாவது அய்யாமுல் பீள் எனும் 13, 14, 15 ஆகிய மூன்று நாள்களைத் தொடர்படியாக நோற்காமல் முதல் வாரத்தில் திங்கள், வியாழனும் அடுத்த வாரத்தில் திங்கள் அல்லது வியாழனும் நோற்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தார்கள். நபியவர்கள் இவ்வாறு தொடர்ந்து செய்வதைக் கண்ட உஸாமா பின் ஸைத் ரளியல்லாஹு அன்ஹு அல்லாஹ்வின் தூதர்  ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் அந்த இரண்டு நாள்கள் மட்டும் தவறாமல் நோன்பு நோற்கின்றீர்களே?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “எந்த இரு நாட்கள்?'' என்று கேட்டார்கள். “திங்கள், வியாழன் ஆகிய கிழமைகள்தாம்” என்றார். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "அந்த இரு நாட்களில்தான் அகிலங்களின் அதிபதியிடம் நல்லறங்கள் எடுத்துக் காட்டப்படுகின்றன. ஆகவே நான், நோன்பு நோற்ற நிலையில் என் நல்லறம் எடுத்துக் காட்டப்படுவதையே விரும்புகிறேன்'' என்று கூறினார்கள். (நூல்: நஸாயீ: 2318) ஆக நபியவர்கள் திங்கள்கிழமை நோற்ற காரணம் அது அவர்களின் பிறந்த நாள் என்பதற்காகவாகும். வியாழக்கிழமை நோன்பு நோற்ற காரணம்  அன்றுதான் நம்முடைய நல்லறங்கள் அல்லாஹ்வின் சந்நிதானத்தில் எடுத்துக் காட்டப்படுகின்றன என்பதற்காகவாகும்.

 
ஒரு நாள் விட்டு: வாரந்தோறும் நோன்பு, மாதந்தோறும் நோன்பு என்று பார்த்தோம். ஆனால் ஒருவர் இன்னும் அதிகமாக நோன்பு நோற்க விரும்புகிறார் என்றால் அவர் என்ன செய்யலாம். அவர் ஒரு நாள் விட்டு ஒரு நாள் நோன்பு நோற்கலாம். இஸ்லாமிய ஷரீஅத்தில் அதற்கான அனுமதி அவருக்குண்டு. 

அதற்கான சான்றைக் காண்போம். 
அப்துல்லாஹ் பின் அம்ர் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது: “அல்லாஹ்வின் மீதாணையாக! நான் உயிருடனிருக்கும்வரை பகலெல்லாம் நோன்பு நோற்று இரவெல்லாம் நின்று வணங்குவேன்” என்று நான் கூறிய செய்தி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு எட்டியது. (இது பற்றி அவர்கள் என்னிடம் கேட்டபோது) “என் தந்தையும் தாயும்  தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! நான் அவ்வாறு கூறியது உண்மையே!'' என்றேன். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், “இது உம்மால் முடியாது! (சில நாள்கள்) நோன்பு நோற்றுக்கொள்; (சில நாள்கள்) நோன்பை விட்டுவிடு! (சிறிது நேரம்) தொழு; (சிறிது நேரம்) உறங்கு! ஒவ்வொரு மாதமும் மூன்று நாள்கள் நோன்பு நோற்றுக்கொள்! ஏனெனில், ஒரு நற்செயலுக்கு அது போன்று பத்து மடங்கு நற்பலன் அளிக்கப்படும்! எனவே, இது காலமெல்லாம் நோன்பு நோற்றதற்குச் சமமாகும்!'' என்றார்கள். 


நான், “என்னால் இதைவிடச் சிறப்பாகச் செய்ய முடியும்'' என்று கூறினேன். “அப்படியானால் ஒரு நாள் நோன்பு நோற்று, இரண்டு நாள்கள் விட்டுவிடு!'' என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். அப்போது “என்னால் இதைவிடச் சிறப்பாகச் செய்ய முடியும்?'' என்று நான் கூறினேன். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், “அப்படியானால் ஒரு நாள் நோன்பு நோற்று ஒரு நாள் விட்டுவிடு!, இதுதான் தாவூத் நபியின் நோன்பாகும்! நோன்புகளில் இதுவே சிறந்ததாகும்!'' என்றார்கள். நான் “என்னால் இதைவிடச் சிறப்பாகச் செய்ய முடியும்” என்று கூறினேன். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் “இதைவிடச் சிறந்தது எதுவும் இல்லை!'' என்றார்கள். (நூல்: புகாரீ: 1976)


ஆகவே ஒருவர் நிறைய நோன்புகள் நோற்க வேண்டும் என்று ஆசைப்பட்டால் அவர் அதிகப்பட்சமாக ஒரு நாள் விட்டு ஒரு நாள் நோன்பு நோற்க அனுமதியுண்டு. அதேநேரத்தில் ஒருவர் தொடர்படியாக நோன்பு நோற்க அனுமதியில்லை. ஏனென்றால் ஒருவர் இல்லற வாழ்வில் ஈடுபடுவதும் அவர்களுக்காகச் சம்பாதித்துக்கொடுப்பதும்  ஒரு வகை இபாதத்-வழிபாடுதான். ஆதலால் நோன்பு, தொழுகை ஆகியவற்றைப்போல் ஒரு முஸ்லிமுடைய தூக்கமும் உழைப்பும் இபாதத்-வழிபாடுதான் என்பதை உணர்ந்து நம் வாழ்க்கையின் ஒவ்வொரு கணப்பொழுதையும் இறைவனுக்காக அமைத்துக்கொள்வோம்.   
====================