வெள்ளி, 29 ஏப்ரல், 2011

இப்ராஹீம் நபியின் வரலாறு (தொடர் 20)


இப்ராஹீம் (அலை) அவர்களின் பிரார்த்தனை

மிகச் சிறந்த இடத்தில் சிறப்பான ஓர் இறையாலயத்தை இப்ராஹீம் (அலை) கட்டினார். அது வேளாண்மையோ பசுமையோ இல்லாத ஒரு பள்ளத்தாக்காக இருந்தது. எனவே, அங்குள்ளவர்களுக்கு அருள்புரியுமாறு அல்லாஹ்விடம் அவர் கோரினார். அங்கு  தண்ணீர் குறைவு; மரங்கள் இல்லை; பயிர்களும் பழங்களும் இல்லை. அவ்வாறு இருப்பதுடனே அங்குள்ளவர்களுக்கு அதிகமான பழங்கள் கிடைக்கச் செய்யும்படி அவர் அல்லாஹ்விடம் கோரினார். மேலும், அவ்வூரைக் கண்ணியமான இடமாகவும்  பாதுகாப்பளிக்கும் இடமாகவும் ஆக்கும்படி கோரினார்.
அல்லாஹ் அவருடைய பிரார்த்தனையை ஏற்றுக்கொண்டான்; அவருடைய பிரார்த்தனையைப் பூர்த்திசெய்தான்; அவருடைய வேண்டுதலை அவருக்கு வழங்கினான். அல்லாஹ் கூறுகின்றான்:  (மக்காவாசிகளாகிய) அவர்களைச் சுற்றியுள்ள மனிதர்கள், (பகைவர்களால்) சூறையாடப்படும் நிலையில், (இதை) நாம் அபயமளிக்கின்ற புனிதத்தலமாக ஆக்கியிருப்பதை அவர்கள் பார்க்கவில்லையா? (29: 67)  

அபயமளிக்கின்ற கண்ணியமான இடத்தில் அவர்களுக்கு நாம் இடமளிக்கவில்லையா? அ(வ்விடத்)தின் பக்கம் ஒவ்வொரு வகைக் கனிவர்க்கமும் நம்மிடமிருந்து உணவாகக் கொண்டுவரப்படுகிறது.  (28: 57)
இம்மை-மறுமை அருளால் மார்க்கம் மற்றும் உலகம் சார்ந்த அருட்கொடைகளையும் அம்மக்கள் நிறைவாகப் பெறும் பொருட்டு, அவர்களுக்கு அவர்கள் இனத்திலிருந்தே, அவர்களின் தாய்மொழியைச் சார்ந்த ஒரு தூதரை அனுப்பிவைக்குமாறு அவர் அல்லாஹ்விடம் கேட்டார்.

பிரார்த்தனையை ஏற்ற அல்லாஹ்

இப்ராஹீம் (அலை) அவர்களின் பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக்கொண்டு, அம்மக்களுக்கு ஒரு தூதரை அனுப்பிவைத்தான். அவர் என்னே தூதர்! அவன் அவர் மூலமே தன்னுடைய நபிமார்களுக்கும் இறைத்தூதர்களுக்கும் முத்திரையிட்டான்; அவருக்கு முன்பு யாருக்கும் கொடுக்காத மார்க்கத்தை அவர் மூலம் அவன் பூர்த்திசெய்தான்; புவிவாழ் மக்கள் தம் மொழியாலும் இனத்தாலும் பண்புகளாலும் வேறுபட்டிருந்தாலும், அவர்கள் பல்வேறு ஊர்களிலும் நகரங்களிலும் வாழ்ந்தாலும், மறுமைநாள் வரை வரவிருக்கின்ற மக்கள் அனைவருக்கும் அவருடைய அழைப்பைப் பொதுவாக்கினான்.

மற்ற இறைத்தூதர்களைவிட இவையே அவருடைய தனிப்பெரும் சிறப்புகள் ஆகும். இவை அனைத்தும் அவருடைய சிறந்த உள்ளத்தாலும் அவர் கொண்டுவந்த மார்க்கத்தின் நிறைவாலும், அவருடைய ஊரின் சிறப்பாலும், அவருடைய மொழியின் தெளிவாலும், அவர்தம் சமுதாயத்தின்மீது கொண்ட ஆழிய அன்பாலும் கருணையாலும், அவருடைய பிறப்பின் சிறப்பாலும், அவர் தோன்றி வந்துள்ள இடத்தின் தூய்மையாலும் கிடைத்தவை ஆகும்.

இதனால்தான், இப்ராஹீம் (அலை) அவர்கள் புவிவாழ் மக்களுக்கு கஅபா எனும் இறையாலயத்தைக் கட்டியதால், அவரின் இருப்பிடமும் அவரின் மதிப்பும் வானங்களில் உயர்ந்த மதிப்புப்பெற்ற பைத்துல் மஅமூருக்கு அருகில் இருக்கிறது. அந்த பைத்துல் மஅமூர்தான் ஏழாம் வானத்தில் உள்ளோருக்கு கஅபா ஆகும். அதில் ஒவ்வொரு நாளும் எழுபதாயிரம் வானவர்கள் வந்து அல்லாஹ்வை வணங்குகின்றார்கள். பின்னர், அவர்கள் மறுமைநாள் வரை ஒருபோதும் அங்கு மீண்டும் வரவே மாட்டார்கள். இமாம் இப்னு கஸீர் (ரஹ்) அவர்கள், அல்பகரா அத்தியாயத்தில் கஅபா கட்டப்பட்டுள்ள விதம் பற்றி  வந்துள்ள பல்வேறு நபிமொழிகளைத் தம்முடைய திருக்குர்ஆன் விரிவுரையில் எடுத்துக் கூறியுள்ளார்கள்.1


கஅபாவைக் கட்டுதல்

இது பற்றி சுத்தீ (ரஹ்) கூறியுள்ளார்: இறையாலயத்தைக் கட்ட இப்ராஹீம்- இஸ்மாயீல் (அலைஹிமஸ்ஸலாம்) இருவரையும் அல்லாஹ் ஏவியபோது, அவ்விருவரும் அதற்கான இடத்தை அறியவில்லை. இறுதியில்,  ஹஜூஜ் எனும் ஒரு வகைக் காற்றை அல்லாஹ் அனுப்பினான்.  அதற்கு இரண்டு இறக்கைகளும் பாம்பு வடிவத்தில் ஒரு தலையும் இருந்தன. கஅபாவின் சுற்றுச்சுவரை எந்த அடித்தளத்தில் வைக்கவேண்டும் என்று அது காட்டியது. அவ்விருவரும் மண்வெட்டிகளோடு அதனைப் பின்தொடர்ந்து சென்று அது காட்டிய இடத்தைத் தோண்ட ஆரம்பித்தனர். அதில் அடிக்கல்லை நட்டனர்.

அது பற்றி அல்லாஹ் கூறுகின்றான்: நாம் இப்ராஹீமுக்குப் புனித ஆலயத்தின் இடத்தை நிர்ணயித் ததை(நபியே!) எண்ணிப்பார்ப்பீராக!  (22: 26) அவ்விருவரும் அடித்தளங்களையும்   தூண்களையும் அமைத்துவிட்டபோது,   இப்ராஹீம் (அலை) அவர்கள் தம்முடைய மகனிடம், என்னருமை மகனே! எனக்கு ஓர் அழகான கல்லைத் தேடிக் கொண்டுவா! நான் அதை இவ்விடத்தில் வைக்க வேண்டும் என்று கூறினார். என் தந்தையே! நிச்சயமாக நான் சோர்வாகவும்  களைப்பாகவும் இருக்கிறேன் என்று இஸ்மாயீல் (அலை) பதிலளித்தார். அப்படியே  சென்றுவிடுவீர்! என்று இப்ராஹீம் (அலை) கூறினார்.

அச்சமயத்தில், ஜிப்ரீல் (அலை) அவர்கள், இந்தியாவிலிருந்து கருப்புக் கல்லை (ஹஜ்ருல் அவதை)க் கொண்டுவந்தார். அது ஸஹாமா 2 மரத்தைப் போன்றும் வெண்மையான மரகதத்தைப்போன்றும் வெள்ளையாக இருந்தது. ஆதம் (அலை) அதைச் சொர்க்கத்திலிருந்து கொண்டுவந்தார். மக்களின் பாவங்களால் அது கருமையாகிவிட்டது. பின்னர், ஸ்மாயீல் (அலை) ஒரு கல்லைக் கொண்டுவந்தார். அப்போது அங்கு ஏற்கெனவே ஒரு கல் இருந்ததைக் கண்ட அவர், என் தந்தையே! இதை யார் கொண்டுவந்தார்? என்று கேட்டார்.  உம்மைவிடச் சுறுசுறுப்பானவர் இதைக் கொண்டுவந்தார் என்று பதிலளித்தார். அவ்விருவரும் அக்கட்டடத்தைக் கட்டி, இருவரும் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தார்கள். எங்கள் இறைவா! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்பாயாக! நீயே நன்கு செவியுறுவோனும் நன்கறிந்தோனும் ஆவாய் (என்று பிரார்த்தனை செய்தனர்).  (2: 127)


திண்ணமாக இப்ராஹீம் (அலை) அவர்கள் அவ்வீட்டை ஐந்து மலைகளால் கட்டினார். அதாவது ஐந்து மலைகளிலிருந்து கற்களை எடுத்துக் கட்டினார். நிச்சயமாக துல்கர்னைன்- அவர்தாம் அச்சமயத்தில் அரசராக இருந்தார்- அவ்விருவரும் அவ்வீட்டைக் கட்டிக்கொண்டிருந்தபோது அவர்களைக் கடந்து சென்றார். அப்போது அவர், யார் இதைக் கட்ட உம்மை ஏவினார்? என்று வினவினார். எங்களை அல்லாஹ்தான் ஏவினான் என்று இப்ராஹீம் (அலை) பதிலளித்தார். நீர் சொல்வது எனக்குப் புரியவில்லை என்று கூறினார். நிச்சயமாக அல்லாஹ்தான் இதைக் கட்ட அவரை ஏவினான் என்று ஐந்து ஆடுகள் சாட்சி கூறின. எனவே, அவர் இறைநம்பிக்கைகொண்டார்; அவரை மெய்ப்படுத்தினார். இதனை இப்னு அபீஹாத்திம் (ரஹ்) கூறியுள்ளார்.

நிச்சயமாக துல்கர்னைன், இப்ராஹீம் (அலை) அவர்களுடன் இறையாலயத்தைச் சுற்றிவந்தார் என்று அஸ்ரக்கீ (ரஹ்) கூறியுள்ளார்.

கஅபாவுக்கு மக்களின் முக்கியத்துவம்

இறைத்தூதர் இப்ராஹீம் (அலை) கட்டிய கஅபா நீண்ட காலம் இருந்தது. அதன் பின்னர், குரைஷி குலத்தினர் அதைக் கட்டினர். இன்றுள்ளபடி, இப்ராஹீம் (அலை) கட்டிய அடித்தளத்தில் சிரியாவை நோக்கிய திசையின் வடக்குப் புறத்தில் கொஞ்சம் குறைவு ஏற்பட்டுவிட்டது.

நபி (ஸல்) அவர்கள் (என்னிடம்,) உன்னுடைய சமுதாயத்தார் (குறைஷியர்) கஅபாவை(ப் புதுப்பித்து)க் கட்டி இப்ராஹீம் (அலை) அவர்கள் அமைத்த அடித்தளங்களைவிடச் சுருக்கி(சற்று உள்ளடக்கி)விட்டதை  நீ காணவில்லையா? என வினவினார்கள். அதற்கு நான், அல்லாஹ்வின் தூதரே! இப்ராஹீம் (அலை) அவர்கள் அமைத்த அடித்தளங்களின்மீது அதைத் தாங்கள் மீண்டும் கட்டக்கூடாதா? என்று கேட்டேன். உன் சமுதாயத்தார் புதிதாக இஸ்லாமை ஏற்றவர்களாக இல்லாவிட்டால் (அவ்வாறே) நான் செய்திருப்பேன் என்று பதிலளித்தார்கள்  என ஆயிஷா (ரளி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.

மற்றோர் அறிவிப்பில், உன்னுடைய சமுதாயத்தார் புதிதாக இஸ்லாமை ஏற்றவர்களாக இருப்பதால் என்று உள்ளது. மேலும் மற்றோர் அறிவிப்பில், கஅபாவின் கருவூலங்களை அல்லாஹ்வின் பாதையில் செலவிட்டிருப்பேன்; `ஹிஜ்ர் எனும் அரைவட்டப் பகுதியை கஅபாவுடன் இணைத்து, கஅபாவின் தலைவாயிலை (கீழிறக்கித் தரையோடு சேர்ந்தாற்போல் ஆக்கியிருப்பேன் என்று வந்துள்ளது. (நூல்கள்: புகாரீ, முஸ்லிம்)

அப்துர் ரஹ்மான் பின் அஸ்ஸுபைர் (ரளி) தம் ஆட்சிக் காலத்தில், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்தில், அந்த கஅபா எப்படி இருக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டினார்களோ அதைத் தம் சிற்றன்னை ஆயிஷா கூற, அதற்கேற்ப அவர் அதைக் கட்டினார். பின்னர், ஹஜ்ஜாஜ் பின் யூசுஃப், அப்துர் ரஹ்மான் பின் அஸ்ஸுபைர் (ரளி) அவர்களை ஹிஜ்ரீ  73ஆம் ஆண்டு கொன்றுவிட்டபோது, அவர் அப்துல் மலிக் பின் மர்வான் என்பாருக்கு ஒரு கடிதம் எழுதினார். அவர் அந்நேரத்தில் அங்கு கலீஃபாவாக இருந்தார்.

நிச்சயமாக இப்னு அஸ்ஸுபைர்  அதைத் தம் விருப்பப்படியே மாற்றி அமைத்துள்ளார் என்று அவர்கள் கருதினார்கள். எனவே, அது ஏற்கெனவே எவ்வாறு இருந்ததோ அதேபோன்று மீண்டும் கட்ட ஏவினார். ஆகவே, அவர்கள் சிரியா நாட்டை நோக்கி இருந்த சுவரை இடித்து, அதிலிருந்து (கருப்புக்) கல்லை வெளியேற்றினார்கள். பின்னர், அந்தச் சுவரை அடைத்துவிட்டார்கள். கஅபாவின் நடுவே கற்களைப் பதித்தார்கள். ஆகவே, அதன் கிழக்கு வாசல் உயர்ந்துவிட்டது.  இன்று காணப்படுவதைப் போன்று, மேற்கு வாசலை முழுமையாக அடைத்துவிட்டார்கள். இப்னு அஸ்ஸுபைர் (ரளி), அவருடைய சிற்றன்னை இறைநம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா (ரளி) அவர்கள் அறிவித்த காரணத்தால்தான் கஅபாவை மாற்றியமைத்தார் என்பதை அவர்கள் அறிந்தபோது,  தாம் செய்ததை எண்ணி அவர்கள் வருந்தினார்கள். அதையும் அதனை அடுத்துள்ள பகுதியையும் அப்படியே நாம் விட்டிருக்கலாமே என்று நினைத்துக் கவலைப்பட்டார்கள்.

அல்மஹ்தீ பின் அல்மன்ஸூர் (ரஹ்) அவர்கள் தம் ஆட்சிக் காலத்தில், இமாம் மாலிக் பின் அனஸ் (ரஹ்) அவர்களிடம், இப்னு அஸ்ஸுபைர் (ரளி) அவர்கள் கட்டியதைப் போல் மீண்டும் நாம் கட்டலாமா என்று ஆலோசனை செய்தார். அதற்கு அவர், அரசர்கள் அதனை விளையாட்டுப் பொருளாக ஆக்கிக்கொள்வதை நான் அஞ்சுகிறேன் என்று பதிலளித்தார்கள்.
அதாவது, புதிதாக ஒவ்வோர் அரசரும் வருகின்றபோது, அவர் தம் விருப்பப்படி அதை மாற்றியமைத்துக் கட்டத் தொடங்குகிறார். எனவே, அவர்களுடைய ஆலோசனைப்படி அம்முடிவை அவர் கைவிட்டதால் இன்று நாம் காணும் தோற்றத்திலேயே அது நீடிக்கின்றது.

----------------அடிக்குறிப்பு------------------------


1. எனவேஅது பற்றித் தெரிந்துகொள்ள விருப்பமுள்ளோர்  `தஃப்சீர் இப்னு கஸீர்-தமிழாக்கத்தைக் காண்க.
2. அது ஒரு மரம். அதன் பழங்களும் பூக்களும் வெண்மையாக இருக்கும். அம்மரம் காய்ந்துவிட்டால் அதன் வெண்மை அதிகரிக்கும்.

அரபி:           அல்பிதாயா வந்நிஹாயா (இமாம் இப்னு கஸீர்- ரஹ்) 
தமிழாக்கம்: நூ. அப்துல் ஹாதி பாகவி M.A., M.Phil.

வியாழன், 28 ஏப்ரல், 2011

மகத்தான மார்க்கக் கல்விபள்ளிகளில் தேர்வுகள் முடிந்து கோடைவிடுமுறை விட்டாயிற்று. தமிழக அரசியல்வாதிகள் தேர்தல் முடிவை எதிர்பார்த்துக் காத்திருப்பதைப்போல் பள்ளி மாணவர்கள் அனைவரும் தம்முடைய தேர்வு முடிவுகளை எதிர்பார்த்திருக்கின்றனர். பன்னிரண்டாம் வகுப்பை முடித்தவர்கள் கல்லூரிக் கனவோடு இருக்கின்றார்கள்; பத்தாம் வகுப்பை முடித்தவர்கள் மேனிலைப் பள்ளியை நோக்கிச் செல்ல இருக்கின்றார்கள்; நடுநிலைப் பள்ளிப் படிப்பை முடித்தவர்கள் உயர்நிலைப் பள்ளியில் சேர இருக்கின்றார்கள். ஆக மாணவர்கள் யாவரும், மேற்படிப்பு என்ன படிக்கலாம்; எங்கு படிக்கலாம் என்ற முனைப்பில் உள்ளார்கள். பொதுவாக, பெற்றோர்கள் யாவரும் தம் பிள்ளைகள் தலைசிறந்த கல்லூரிகளில் படித்துப் பட்டம்  பெற்று, கைநிறையச் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ண ஓட்டத்திலே படிப்பை அணுகுகின்றார்கள். எதைப் படித்தால் எளிதில் பணி வாய்ப்புக் கிட்டும்; நிறைய சம்பாதிக்கலாம் என்ற கோணத்தில்தான் பலர் சிந்திக்கின்றார்கள். படிப்பு என்பதே பணம் சம்பாதிப்பதற்கான ஒரு துணைக்கோல் என்று எண்ணிக்கொண்டுள்ளார்கள். ஆனால் படிப்பு என்பது ஒரு மனிதனின் அறிவு வளர்ச்சிக்குத்தான் என்பதை பலர் அறிவதில்லை. ஒருவன் தன் கல்வியால் அறிவை வளர்த்துக்கொண்டான்; பண்பாட்டைக் கற்றுக்கொண்டான்; சமூகச் சிந்தனையை வளர்த்துக்கொண்டான்  என்றால் அதுதான் கல்வியின் மிகப்பெரும் பயன். அதுவன்றி, ஒருவன் ஏதோ படித்தான்; பட்டத்தைப் பெற்றான் என்றால், அந்தக் கல்வியால் எந்தப் பயனும் இல்லை.

என் மகன் ஒரு பொறியாளர்; என் மகன் ஒரு கணினிப் பொறியாளர்; என் மகன் ஒரு கணக்காளர்; என் மகன் ஒரு மருத்துவர்; என் மகன் ஒரு வழக்கறிஞர் என்று சொல்லிக்கொள்வதில்தான் ஒவ்வொருவரும் பெருமைகொள்கின்றனரே தவிர என் மகன் ஒரு ஹாஃபிழ் (திருக்குர்ஆனை மனனம் செய்தவர்); என் மகன் ஓர் ஆலிம் (இஸ்லாமிய மார்க்க அறிஞர்) என்று சொல்லிக்கொள்வதை யாரும் பெருமையாகக் கருதுவதில்லை. இன்று, அனைவரும் தத்தம் மகன்களை எந்தக் கல்லூரியில் சேர்க்கலாம் என்று ஒவ்வொரு கல்லூரியாகத் தேடி அலைகின்றார்கள்; எந்தக் கல்லூரி சிறந்த கல்லூரி என்று பிறரிடம் கேட்டுத் தெரிந்துகொள்கிறார்கள்; அறிந்தவர்களிடம் விசாரிக்கின்றார்கள். ஆனால் எந்த இஸ்லாமியக் கல்லூரியில் சேர்க்கலாம்; எங்குள்ள அரபிக் கல்லூரியில் சேர்க்கலாம் என்று யாரும் யாரிடமும் விசாரிப்பதில்லை. ஒருவர் தம் பிள்ளையை ஆலிமாகவோ, ஹாஃபிழாகவோ உருவாக்குவதால் அவருக்கு என்ன நட்டம் வந்துவிட்டது? அவர் தம் மகனுக்குத் துரோகம் இழைத்துவிட்டாரா? அல்லது அவனைப் பாதாளத்தில் தள்ளிவிட்டுவிட்டாரா? இல்லவே இல்லை. மாறாக, அவர் தம் மகனுக்குச் சீரான கல்வியையே கொடுத்துள்ளார். ஈருலகிலும் வெற்றிபெறத்தக்க கல்வியை வழங்கியுள்ளார். அப்படிப்பட்ட மார்க்கக் கல்வியைத் தம் பிள்ளைகளுக்கு வழங்குவதில் உங்களுக்கு என்ன தயக்கம்? மார்க்கக் கல்வியைக் கற்பதற்காக உங்கள் பிள்ளைகளை ஏன் அரபிக்கல்லூரியில் சேர்க்க முன்வருவதில்லை?

அவர்களெல்லாம் சமுதாயத்தில் தாழ்ந்த நிலையில் இருக்கின்றார்களா? சமுதாயத்தில் மதிப்பு மரியாதை இல்லாமல் இருக்கின்றார்களா? பணி இல்லாமல் இருக்கின்றார்களா? திறமையற்றவர்களாக இருக்கின்றார்களா? ஏன்? கைநிறையக் காசு சம்பாதிப்பதில்லை. ஆம். உண்மைதான். ஆனால் அவர்கள் மனநிறைவோடு வாழ்கிறார்களே அதைப் பார்க்கமாட்டீர்களா?

கடந்த காலங்களில் நீங்கள் பார்த்த ஆலிம்கள் வேறு; இன்றைய கணினி யுகத்தில் நீங்கள் காணுகின்ற ஆலிம்கள் வேறு என்பதை நீங்கள் புரிந்துகொள்ளுங்கள். இன்றைய கணினி யுக ஆலிம்கள் அனைத்துத் துறைகளிலும் முன்னேற்றம் கண்டுவருகின்றார்கள். அன்று ஆங்கிலமே என்னவென்று தெரியாதவர்கள் இன்று ஆங்கிலத்தில் உரையாற்றுகின்றார்கள்; கணிப்பொறி இயக்குகிறார்கள்; வலைப்பூக்கள் உருவாக்கித் தம் கருத்துகளைப் பதிந்து உலகின் எண்திசையிலும் உள்ள மக்களைப் படிக்கத் தூண்டுகின்றார்கள். அது மட்டுமின்றி, கைநிறையச் சம்பாதிக்கவும் தொடங்கிவிட்டார்கள். ஆம். இன்றைய அரபிக் கல்லூரிகள் மார்க்கக் கல்வியை மட்டும் போதிப்பதோடு நிறுத்திக்கொள்ளாமல், ஓர் ஆலிம் தன்னை நிலைப்படுத்திக்கொள்வதற்கான கல்விகளையும் சேர்த்தே போதிக்கத் தொடங்கிவிட்டன. அங்கு அரபி இலக்கணமும், திருக்குர்ஆன் விளக்கவுரையும், நபிமொழிகளின் விளக்கவுரையும் போதிக்கப்படுவதோடு கணினிக் கல்வி, தட்டச்சு, ஆங்கிலம் போன்ற கல்விகளும் போதிக்கப்படுகின்றன. அத்துடன் உலகியல் கல்லூரியின் சார்பாக வழங்கப்படுகின்ற பட்டங்களைப் பெறுவதற்கான ஏற்பாடும் செய்யப்படுகிறது. உங்கள் பிள்ளை எட்டாம் வகுப்பு முடித்திருந்து, குர்ஆனைப் பார்த்து வாசிக்கத் தெரிந்திருந்தால் போதும். ஐந்தாண்டுகளில் அவனுடைய வாழ்க்கையே முற்றிலும் மாறிவிடும். ஒரு கையில் அரபிக் கல்லூரியின் பட்டம்; மற்றொரு கையில் உலகியல் கல்விக்கான பட்டம்; அத்தோடு பல்வேறு திறமைகளோடும், ஆற்றல்களோடும் வெளிவருகின்ற உங்கள் பிள்ளை ஈருலகிலும் உங்களுக்கும் இஸ்லாமியச் சமுதாயத்துக்கும் உதவுகின்ற பிள்ளையாக உருவாகும் என்பதை நினைவில் நிறுத்துங்கள். அதை நினைத்துப் பெருமைப்படுங்கள்.

பெற்றோரை மதிக்கின்ற பிள்ளையாக, உங்களின் முதுமையில் உங்களைக் கைவிட்டுவிடாத பிள்ளையாக, அனைவராலும் மதிக்கப்படுகின்ற பிள்ளையாக, அல்லாஹ்வின் அன்பைப் பெற்ற பிள்ளையாக உங்கள் பிள்ளை உருவாகும். பெற்ற உங்களுக்கு இதைவிட வேறு பெருமை என்ன வேண்டும்? யோசியுங்கள். பலமுறை யோசியுங்கள். மார்க்கக் கல்வியை உங்கள் பிள்ளைக்குக் கொடுப்பதால் தீமை ஏதும் உண்டா? இனியும் ஏன் தாமதம்? உங்கள் பிள்ளைகளை அரபிக் கல்லூரிகளில் சேர்த்து ஈருலகிலும் பயன்மிக்க பிள்ளைகளாக உருவாக்குங்கள்!


செவ்வாய், 26 ஏப்ரல், 2011

முஸ்லிம் ஆட்சியாளர்கள் சகிப்புத்தன்மையற்றவர்களா?-நீதிபதி மார்க்கண்டேய கட்சு

முஸ்லிம் ஆட்சியாளர்கள் சகிப்புத்தன்மையற்றவர்கள், வைராக்கியமுடையவர்கள் என்று வேண்டுமென்றே வரலாற்று நூல்களை மாற்றி எழுதி, இந்து-முஸ்லிம் இடையே பகைமையை வளர்த்துக்கொண்டே வந்துள்ளனர்; ஆனால், அது பொய் என்பதற்கான பெரும் ஆதாரங்கள் வரலாற்றில் உள்ளன என்று உச்சநீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்சு ஞாயிற்றுக்கிழமை (18-04-11) தெரிவித்துள்ளார்.

சமஸ்கிருத-உர்தூ கலாச்சாரத்தால் இந்தியர்கள் ஒன்றாக இருந்துவந்தனர்; இந்தியா எப்போதும் ஜனநாயக நாடாகவே இருக்கும் என்பதற்கு அதுவே உத்திரவாதம் தந்தது என்றும் குறிப்பிட்டார்.

1857ஆம் ஆண்டுக்கு முன்பே, முஸ்லிம் ஆட்சியாளர்களுக்கு எதிரான கட்டுக்கதைகளைப் பரப்புவது பிரிட்டிஷ்காரர்களின் திட்டமாக இருந்தது. அதுவே இந்தியாவில் பற்பல ஆண்டுகளாகத் தொடர்ந்துவந்துள்ளது. இந்த அடிப்படையில்தான், மஹ்மூத் கஜினி சோம்நாத் கோயிலை அழித்த செய்தி மக்கள் மத்தியில் பரவலாக அறியப்படுகிறது. ஆனால், அதே நேரத்தில், திப்பு சுல்தான் 156 கோவில்களுக்கு ஒவ்வோர் ஆண்டும் நன்கொடை கொடுத்துவந்தார் என்ற உண்மை யாருக்கும் தெரியாது.


திறன்சார் படிப்புகளை வழங்குகின்ற பயிலகம் ஒன்றில் நடைபெற்ற வெள்ளிவிழா மாநாட்டில் நீதிபதி மார்க்கண்டேய கட்சு ஆற்றிய இறுதியுரையில், வரலாற்றாசிரியர் டி.என். பாண்டே எழுதிய `ஹிஸ்டரி இன் த சர்விஸ் ஆஃப் இம்பீரியலிசம்’ எனும் நூலில் மேற்கோள் காட்டப்பட்டுள்ள சான்றுகளை எடுத்துரைத்து, தம் வாதங் களை உறுதிப்படுத்தினார்.

1977ஆம் ஆண்டு இராஜ்ய சபா உறுப்பினர்களுக்கு ஆற்றிய உரையில் டாக்டர் பாண்டே சுருக்கமாகக் கூறியுள்ளதாவது: திட்டக் கொள்கையின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ள இந்திய வரலாற்றுப் பாடப்புத்தகங்கள் பொய்யாகவும் திரித்தும் கூறப்பட்டுள்ளன. அதாவது, இந்திய வரலாற்றின் மத்திய கால வரலாற்றில் ஓர் ஈர்ப்பை ஏற்படுத்த வேண்டுமென்பதற்காக, முஸ்லிம் ஆட்சியாளர்களால் இந்துக்கள் மிகுந்த கொடுமைகளுக்கும் துன்பங்களுக்கும் ஆளாக்கப்பட்டார்கள் என்றும், இஸ்லாமிய ஆட்சியின் கீழ் வாழ்ந்த இந்துக்கள் பல்வேறு தொல்லைகளை அனுபவித்தார்கள் என்றும் திரித்துக் கூறப்பட்டுள்ளன.

1928ஆம் ஆண்டில் திப்புசுல்தான் ஆட்சியில் நடைபெற்றதாகக் கூறப்படும் ஒரு வாதத்தை உறுதிப்படுத்துவதற்காக மேற்கொண்ட ஆய்வில்தான் டாக்டர் பாண்டேவுக்கு உண்மை தெரியவந்தது. (டாக்டர் ஹரி பிரசாத் சாஸ்திரி தம்முடைய நூலில் அந்த வாதத்தை முன்வைத்துள்ளார். இவர் கல்கத்தா பல்கலைக் கழகத்தின் அப்போதைய சமஸ்கிருதத் துறைத் தலைவராக இருந்தார்) அதாவது, திப்புசுல்தான் ஆட்சிக்காலத்தில் பிராமணர்கள் 3000 பேர் இஸ்லாத்துக்கு மாறிவிடாமல் இருப்பதற்காகத் தற்கொலை செய்துகொண்டார்கள். இந்தச் செய்திக்கு ஆதாரம், மைசூர் செய்தி ஆவணத் தொகுப்பில் உள்ளது என்று டாக்டர் சாஸ்திரி முன்மொழிந்துள்ளார். ஆனால் அங்கு அத்தகைய செய்தி ஆவணம் ஏதும் இல்லை.


திப்புவைப் பற்றிய ஆராய்ச்சியில் டாக்டர் பாண்டே மேலும் கூறுவதாவது: அவர் 156 கோவில்களுக்கு ஒவ்வோர் ஆண்டும் நன்கொடை கொடுத்துவந்தார் என்பது மட்டுமின்றி, ஸ்ரீநகர் மடத்திலுள்ள சங்கராச்சாரியாருடன் உளப்பூர்வமான தொடர்பு வைத்திருந்தார். குறைந்த பட்சம் அவருக்கு 30 கடிதங்களையும் எழுதியுள்ளார். அன்றைய காலத்தில் இந்தியா முழுவதும் உயர்நிலைப் பள்ளிகளில் பாடத்தில் இருந்த டாக்டர் சாஸ்திரி எழுதிய நூலில் இருந்த கருத்தே பிற்காலத்தில் தவறான விளக்கத்தைக் கொடுத்தது. ஆனால், உறுதி செய்யப்படாத அந்தக் குற்றச்சாட்டு பிற்காலத்தில் எழுதப்பட்ட வரலாற்றுப் பாட நூல்களிலும் உண்மை மறைக்கப்பட்டதாகவே தொடர்கிறது.

நீதிபதி கட்சு மேலும் கூறியதாவது: இந்தியாவின் ஜனநாயகப் பன்முகம், இந்திய அரசமைப்பையும் இந்திய மக்கள் தொகையின் ஒப்பற்ற வேற்றுமையையும் கட்டிக்காத்து வந்தது. இந்த வேற்றுமை 10,000 ஆண்டுகளுக்கு முன்பாக ஏற்பட்டதாகும். அதற்குமுன் இது ஒரே நிலமாகவே இருந்து வந்தது. பழைய குடிமக்களின் வருகையால்தான் இந்தியாவில் வேற்றுமையே ஏற்பட்டது.

வேற்றுமையின் காரணமாகப் பல்வேறு மதங்கள், சாதிகள், மொழிகள் மக்கள் மத்தியில் பரவியதோடு அவை சந்ததிகளிடம் தாக்கத்தையும் பிரதிபலிப்பையும் ஏற்படுத்தின. சட்ட வல்லுநர்கள் வலுவான சிறப்பம்சங்களோடு சட்டங்களை வகுத்தார்கள். நிலையான ஜனநாயகத்துக்கு உத்திரவாதமும், நமது சொத்தும் பன்முகக் கலாச்சாரமே ஆகும்.

 முன்னதாக, இந்த மாநாட்டில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. உடனடியாக, இராஜிந்தர் சச்சார் குழுவின் பரிந்துரைப்படி, `சம வாய்ப்பு ஆணையத்தை உருவாக்க வேண்டும் என்று அரசை வலியுறுத்தியது. சமுதாயத்தின் அனைத்துப் பிரிவினருக்கும், குறிப்பாகச் சிறுபான்மையினருக்கும், ஏனைய தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களுக்கும் சம வாய்ப்பு வழங்கப்படாத வரை இந்தியா முழுமையான வளர்ச்சியை அடைய முடியாது என்றும் அந்தத் தீர்மானம் தெரிவிக்கிறது.

-இந்து நாளிதழ் 18-04-11 தமிழில்: நூ.அப்துல் ஹாதி பாகவி

வெள்ளி, 15 ஏப்ரல், 2011

வாழ்வைத் தொடக்கிவைப்போம்!இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இனிய இல்வாழ்வுக்கு வழிகாட்டி யுள்ளார்கள். நவீனக் கலாச்சாரச் சீரழிவால் சமுதாயத்தில் தொடர்ந்து கொண்டிருக்கின்ற மார்க்க அடிப்படையிலான இல்வாழ்வு முறையே குலைந்து வருகின்ற நேரத்தில் இது பற்றித் தெரிந்து கொள்வது முற்றி லும் அவசியமாகும். இன்றைக்கு எத்தனையோ சீரழிவுகள் சமுதாயத்தில் புதிது புதிதாகத் தோன்றிவிட்டாலும் இயற்கையான திருமணமுறையே சிதைந்து வருவது ஓர் ஆரோக்கியமான சமுதாய வளர்ச்சிக்கு உகந்ததில்லை.

ஓர் ஆண் மகனுக்குத் தோதுவான பொருத்தமான பெண் பார்த்து, நிச்சயம் பேசி, நாள் குறிப்பிட்டு, குறித்த அந்த நாளில் உறவினர் அனைவரும் ஒன்றிணைந்து மணமுடித்து வைப்பது ஆண்டாண்டு காலமாக நிகழ்ந்து வருகின்ற திருமண முறை. ஆனால் இன்று இதற்கெல்லாம் பிள்ளைகள் தம் பெற்றோருக்கு வாய்ப்பே கொடுப்பதில்லை. தமக்குப் பிரியமானவளைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு காதல் புரிவது, குறிப்பிட்ட நாளில் இருவரும் தம் வீட்டைவிட்டு எங்காவது ஓடிப்போய்த் திருமணம் செய்துகொண்டு வாழத் தொடங்குவது தொடர்கதையாகிவருகிறது.

சின்னஞ்சிறு வயதுமுதல் பார்த்துப் பார்த்து வளர்த்து, தேவையானவற்றை வாங்கிக் கொடுத்து, தாம் பசியோடு இருந் தாலும் தம் பிள்ளைகள் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக நல்லதொரு பள்ளியில் சேர்த்துப் படிக்க வைத்தால் பிள்ளைகளோ இவ்வாறு செய்வது எந்த வகையில் நியாயம்?
அவர்கள் தம் காதலையும் காமத்தையும்தான் முன்னிலைப் படுத்துகிறார்களே தவிர தம் பெற்றோரின் கனவையும் ஆசையையும் நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணம் சிறிதும் தோன்றவில்லையே ஏன்? இத்துணை காலம் பாடுபட்டு வளர்த்த பெற்றோருக்குப் பிள்ளைகள் கொடுக்கும் பரிசு இதுதானா?

தனக்குப் பிடித்தவனை அழைத்துக்கொண்டு ஒரு பெண் ஓடுவதும், தனக்குப் பிடித்தவளை அழைத்துக்கொண்டு ஓர் ஆண் ஓடிப்போவதும் தொடர்கின்ற இந்நேரத்தில் அது பற்றி இஸ்லாமிய மார்க்கம் என்ன சொல்கிறது என்பதை நாம் தெரிந்து கொள்வது மிக்க அவசியமாகும்.
எப்பெண் தன்னுடைய வலீ (பொறுப்பாளி)யின் அனுமதியின்றித் திருமணம் செய்துகொண்டாளோ அவளுடைய திருமணம் செல்லாது என்று மும்முறை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அன்னை ஆயிஷா (ரளி) அவர்கள் அறிவித்துள்ளார்கள். (நூல்கள்: அபூதாவூத், திர்மிதீ)

இதனடிப்படையில், ஒரு பெண் தன் பெற்றோருக்குத் தெரியாமல், தன் மனம் விரும்பியவனோடு ஓடிச் சென்றுபதிவு அலுவலகத்தில் பதிவுத் திருமணம் செய்துகொண்டு தன் இல்வாழ்வைத் தொடர முடியாது.  இஸ்லாமிய மார்க்கத்தின்படி அவளுடைய திருமணம் செல்லாது. இதை நாம் ஆழமாகச் சிந்தித்துப் பார்த்தால், ஒரு பெண் தன் மனம்போன போக்கில் செல்ல அனுமதி இல்லை என்பதை விளங்க முடிகிறது.

 அதற்குப் பற்பல காரணங்கள் இருக்கலாம்.  காரணங்கள் பல இருந்தாலும் இறைத்தூதரின்  கூற்றுக்கே நாம் முன்னுரிமை கொடுக்க வேண்டும். ஒரு பெண்ணின் பொறுப்பாளராக (வலீ) அவளுடைய தந்தை, சகோதரன், சிற்றப்பா, பெரியப்பா ஆகியோர் இருப்பார்கள். அவர்களுள் யாரேனும் பொறுப்பாளராக இருந்துதான் ஒரு பெண்ணின் திருமணத்தை நடத்திவைக்க வேண்டும். ஒரு பெண்ணோ, ஆணோ தனக்குப் பிடித்த பெண்ணைக் கூட்டிக்கொண்டு ஓட வேண்டிய நிலை ஏன் ஏற்படுகிறது? அதற்குக் காரணம் யார்?
இந்நிலைக்கு முழு முதற்காரணம் பெற்றோரே ஆவர். இந்நிலை தொடர இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று, ஒரு பெண்ணோ ஆணோ அவர்கள் படிக்கின்ற பள்ளி அல்லது கல்லூரி  ஒரு  காரணம்.
நாம்  நம் பிள்ளைகளைப் பள்ளியில் சேர்க்கின்றபோது ஆண் களை ஆண்களுக்கான பள்ளிக்கூடத்திலும் பெண்களைப் பெண்களுக் கான பள்ளிக்கூடத்திலும் சேர்க்க வேண்டும். அப்படிச் செய்தால் அவர்கள் தம் படிப்பில் மட்டுமே  கவனம் செலுத்துவர். அதைவிட்டு அவர்களின் கவனம் சிதறாது. மாறாக, நாம் ஆண்-பெண் கலந்து பயில்கின்ற இருபாலர் பள்ளியில்தான் சேர்க்கிறோம். பள்ளிக்கூடத்தைக் கடந்து வந்துவிட்டால் கல்லூரியில் சேர்க்கிறோம். பெரும்பாலும் இருபாலர் கல்லூரிகளே உள்ளன. எனவே நாம் தூரநோக்கோடு சிந்திக்காமல் நம் பொறுப்பை நிறைவேற்றிவிட வேண்டும் என்ற அடிப்படையில் சேர்த்துவிடுகிறோம். ஆனால் அங்கு அவர்கள் பெறு வதோ கல்வியைவிட அதிகம் பெறுவது காதலைத்தான்.

இறுதியில் கல்வியா, காதலா என்ற மனப்போராட்டத்தில் கல்வி தோற்றுப்போய்விடுகிறது. காதல் வெற்றிகொள்கிறது. எனவே இதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டுமாயின் கல்லூரியில் சேர்க்கும்போதே நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். குறிப்பாக, பெண்களுக்கான கல்லூரியில் மட்டுமே பெண்களைச் சேர்க்க வேண்டும். ஆண்களுக்குப் போட்டியாகப் பெண்களைப் படிக்க வைக்க வேண்டும் என்ற போட்டி மனப்பான்மை நம் பிள்ளைகளின் வாழ்க்கையையே திசைதிருப்பிவிடுகின்றது. அதனால் அந்தோ பரிதாபம்!  மாற்றுச் சமுதாய ஆண்களோடு வாழ்க்கையைத் தொடர வேண்டிய கட்டாய நிலைக்கு ஆளாகிவிடுகின்றனர்.

பருவ வயதடைந்தவுடன் திருமணம் செய்து வைக்காதிருத்தல் மற்றொரு காரணமாகும். ஒவ்வொரு பெண்ணும் தன் பருவ வயதை அடைந்தவுடன் அவளை மணமுடித்துக்கொடுத்து விடுவது  ஒவ்வொரு பெற்றோரின் கடமையாகும். இதை எத்தனை பெற்றோர் மிகச் சரியாகச் செய்துவருகின்றனர்? பெற்றோர் தம் பெண்பிள்ளைகளைப் படிக்க வைக்க வேண்டும்; பணிக்கு அனுப்ப வேண்டும் என்று எண்ணுகின்ற அதேநேரத்தில் உரிய நேரத்தில் அவளுக்கு வாழ்க்கையை அமைத்துக்கொடுக்க வேண்டும்  என்று எண்ணுவதில்லை. காலம் கடந்த பின்பே அது பற்றி யோசிக்கின்றனர். இதுவே அவர்களின் வாழ்க்கை திசைதிரும்பிவிட முக்கியக் காரணமாகும். இது பெற்றோரின் பொறுப்பின்மையால் விளைந்த கேடே தவிர பிள்ளைகளின் தவற்றினால் ஏற்பட்டதில்லை.

ஆனால், படிக்க வைப்பதே தவறு என்று விளங்கிக்கொள்ளக்கூடாது. இரண்டிலும் கவனம் செலுத்த வேண்டும் என்றுதான் கூறுகிறோம். படிப்பும் அவசியம்; திருமணமும் அவசியம். இரண்டில் முன்னுரிமை, பருவ வயதை அடைந்தவுடன் திருமணம். இதுவே இறைத்தூதரின் பொன்மொழி. பெண்களுக்கு ஆண்களைப் போன்ற கல்வியைக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. பெண்களுக்கேற்ற துறைகளில் படிக்க வைத்து, அத்துறைகளில் பெண்கள் தாராளமாகப் பணியாற்றலாம்.

இன்னும், உங்களுள் வாழ்க்கைத் துணையில்லாதவர்களுக்கும் உங்கள் அடிமைகளாக(ப் பணியாற்றுகின்ற) ஆண்-பெண்களுள் உள்ள நல்லோர்களுக்கும் திருமணம் செய்துவையுங்கள். அவர்கள் ஏழைகளாக இருந்தாலும் அவர்களை அல்லாஹ் தன் கருணையால் செல்வந்தர்களாக ஆக்கிவைப்பான். (24: 32)

இன்றைய மக்கள் பலர், திருமணம் செய்கின்றபோதே ஆண் எவ்வளவு சம்பாதிக்கிறான் என்றுதான் பார்க்கின்றார்கள். வேலை இல்லாத ஆண்களுக்குப் பெண் கொடுக்க முன்வருவதில்லை. இத்தகைய போக்கு ஆரோக்கியமான சமுதாயத்துக்கு வழிவகுக்காது. இஸ்லாமியப் பார்வையிலும் இது தவறானதே. எனவே பருவ வயதை அடைந்துள்ள ஆரோக்கியமான ஓர் ஆண்மகனுக்கு உங்கள் பெண்களைத் தாராளமாக இறைவனை நம்பித் திருமணம் செய்துவையுங்கள். அல்லாஹ் அவர்களுடைய தேவைகளை நிறைவேற்றப்போதுமான செல்வத்தைக் கொடுப்பான். திருமண வாழ்க்கையைத் தொடங்க, செல்வம் ஒரு தடையாக இருக்கக்கூடாது என்பதை இனியாகிலும் நாம் விளங்க முற்படுவோம். 

நபியவர்களின் முன்னிலையில் வந்து நின்றுகொண்டு என்னைத் தங்களுக்கு ஒப்படைக்கிறேன் என்று கூறிய பெண்ணை, ஓர் இளைஞருக்குத்தான் நபியவர்கள் மணமுடித்துவைத்தார்கள். அந்த இளைஞரிடம் ஓர் இரும்பு மோதிரம்கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இறுதியில் அவர் மனனம் செய்திருந்த திருக்குர்ஆன் அத்தியாயங்களுக்குப் பகரமாக மண முடித்துவைத்தார்கள். அவர்கள் வாழவில்லையா? புகாரீயில் பதிவுசெய்யப்பட்டுள்ள (5121) இத்தகவலை நீங்கள் படித்துப் பாருங்கள் புரியும்.

பதின்ம வயதினர் தம் விருப்பப்படி ஒருத்தியை அல்லது ஒரு வனை அழைத்துக்கொண்டு வீட்டைவிட்டு ஓடுவதைத் தடுக்க இஸ்லாமிய மார்க்கத்தில் மற்றொரு தீர்வும் உள்ளது.

நம் பிள்ளைகள் ஒரு குறிப்பிட்ட வயதை அடைந்தவுடன் திருமண உறவை நிச்சயம் செய்துவிடுவது; பின்னர் திருமண உறவுக்கான முதிர்ச்சியடைந்தவுடன் அவர்களை இணைத்து வைப்பது. இது ஒன்றும் புதிதன்று. சில பல ஊர்களில் இன்றும் நடைமுறையில் உள்ளதுதான். இதே நடைமுறையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் பின்பற்றியிருக்கின்றார்கள். நபியவர்களுக்கும் அன்னை ஆயிஷா (ரளி) அவர்களுக்கும் திருமண ஒப்பந்தம் நடைபெற்றது. அப்போது அன்னை ஆயிஷா (ரளி) அவர்களுக்கு ஆறு வயது. பின்னர் மூன்றாண்டுகள் கழித்து அவர்களின் ஒன்பதாம் வயதில்தான் நபியவர்களும் அன்னை ஆயிஷா அவர்களும் ஒன்றாக இணைந்தார்கள். இது பற்றி அன்னை ஆயிஷா (ரளி) அவர்கள் அறிவிக்கின்ற நபிமொழி புகாரீ உள்ளிட்ட பல்வேறு நபிமொழித் தொகுப்புகளில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. "நான் ஆறு வயதுடையவளாக இருந்தபோது என்னை நபி (ஸல்) அவர்கள் மணந்துகொண்டார்கள். எனக்கு ஒன்பது வயதானபோது என்னுடன் தாம்பத்திய உறவைத் தொடங்கினார்கள். நான் அவர்களுடன் ஒன்பது ஆண்டுகள் (மனைவியாக) வாழ்ந்தேன். (புகாரீ-5158)

ஆக, ஒரு கோணத்தில் நாம் இன்றைய தலைமுறையினரைச் சிந்தித்துப் பார்க்கும்போது, அவர்கள் மிக வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறார்கள் என்பதை நாம் ஒத்துக்கொண்டுதான் ஆக வேண்டும். ஏனெனில் ஓர் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தோரை எடுத்துக்கொண்டால் அவர்கள் தம்முடைய பதினைந்து வயதில் அறிந்து கொண்டதை இன்றைய நான்கு அல்லது ஐந்து வயதுள்ள சிறுவர்கள் தெரிந்துகொண்டு விடுகின்றார்கள். பாலியல் பற்றி திருமணத்தின்போதுதான் அன்றையவர்களுக்குத் தெரியவரும். ஆனால் இன்று பத்து வயது முதலே அது பற்றி முழுமையாக அறியத் தொடங்கி விடுகின்றார்கள்.

ஏனென்றால் அதற்கான எல்லாவிதச் சாத்தியங்களும் இன் றைக்கு உள்ளன. தொலைக்காட்சி முதல் இணையதளம் வரை மிக எளிதாகப் பயன்படுத்தும் விதத்தில் உள்ளன. தொலைக்காட்சியில் ஆண்-பெண் கலந்த நிகழ்ச்சிகளையும் ஒன்றாகக் கட்டியணைத்து நடிக் கின்ற காட்சிகளையுமே ஒளிபரப்புகின்றனர்; அக்காட்சிகளை நாள் தோறும் காண்கின்ற இளவயதினர் அதைத் தாமும் செய்ய வேண்டும் என்ற ஆவல்கொள்கின்றனர். இணையதளத்தில் அமர்ந்தால் அ முதல் ஃ வரை உடற்கூறு சார்ந்த அத்துணை தகவல்களும் படங்களுடன் கிடைக்கின்றன. ஆகவே அனைத்தையும் மிக விரைவிலேயே தெரிந்து கொண்டுவிடுகின்றனர். அது மட்டுமல்லாமல்  அதையெல்லாம் செயல்படுத்திப் பார்க்க வேண்டுமென்ற மனநிலைக்கும் வந்துவிடுகின்றனர்.

இவையெல்லாம் போதாதென்று, இன்று கைப்பேசி அனைவரின் கைகளிலும் தவழத் தொடங்கிவிட்டது. அதில் தாம் விரும்பியபடி எங்கிருந்தாலும் யாருடனும் பேசிக்கொள்கின்ற வசதி; குறுஞ்செய்திகளை உடனுக்குடன் பரிமாறிக்கொள்ளும் வசதி. இத்தனையையும் மீறித்தான் நாம் நம்முடைய பிள்ளைகளை ஒழுக்கமாக வளர்க்க வேண்டியுள்ளது. எனவே சிறுவர்களுக்கு ஒன்றும் தெரியாதுஒன்றும் புரியாது என்பதெல்லாம் பழைய வாதம். ஆகவே இஸ்லாமியக் கண்ணோட்டத்தின்படி ஒருவன் சிற்றிளைஞனாக ஆகின்றபோதே திருமணத்துக்கான ஒப்பந்தத்தை நிறைவேற்றலாம். `இவளுக்கு இவன்தான்' என்று முன்னரே முடிவாகிவிடுகின்றபோது அவன் மற்றவளை நோக்க வேண்டிய அவசியம் ஏற்படாது.

அவர்கள் எப்போது வேண்டுமானாலும் சேர்ந்துகொள்ளலாம்; அவர்கள் இருவரும் ஒன்றாகப் படிக்கலாம்; ஒன்றாகச் சேர்ந்து விளை யாடலாம்; தம்முடைய வாழ்க்கையை அவர்களே தீர்மானித்துக் கொள்ளலாம். ஆக இது ஒரு புதுமையான கருத்தாகத் தோன்றினாலும் இன்றைய தலைமுறை அவ்வளவு வேகமாக வளர்ந்துவருகிறது என்பதைத்தான் நான் சொல்ல வருகிறேன். அதே நேரத்தில் அதற்கான தீர்வையும் இஸ்லாம் சொல்லாமல் விட்டு வைக்கவில்லை என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஆக, நம்முடைய தலைமுறையினர் கெட்டுப்போகாமல் பாதுகாக்க வேண்டுமாயின் அதற்கு என்னென்ன வழிமுறைகள் இருக்கின்றனவோ, அதற்கு இஸ்லாம் என்னென்ன முன்னேற்பாடுகளைக் கையாளச் சொல்கிறதோ அவற்றை உரிய நேரத்தில் முறைப்படி நடைமுறைப்படுத்தி அவர்களின் வாழ்க்கைக்கு வழிகாட்டுவது ஒவ்வொரு பெற்றோரின் கடமை. ஆகவே நாம் நம் பிள்ளைகளின் படிப்பு, திருமணம், பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றில் கவனம் செலுத்துவோம். அவர்களின் எதிர்காலம் சிறக்கவும், அவர்கள் தம் வாழ்க்கையை இறைவேதத்தின்படியும் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் வாக்குப்படியும் அமைத்துக்கொள்ள நாம் துணைபுரிவோம். அவர்களின் இல்வாழ்வை மிக விரைவாகவே தொடங்கிவைப்போம்!    ***
சனி, 2 ஏப்ரல், 2011

இப்ராஹீம் நபியின் வரலாறு (தொடர் 19)


தொன்மையான இறையாலயத்தைக் கட்டுதல்

* அல்லாஹ் கூறுகின்றான்: நாம் இப்ராஹீமுக்குப் புனித ஆலயத்தின் இடத்தை நிர்ணயித்து `நீர் எனக்கு எவரையும் இணைவைக்காதீர்; என்னுடைய  (இந்த) ஆலயத்தைச் சுற்றி வருவோருக்கும், அதில் நிற்போருக்கும், குனிந்தும் (ருகூஉ) , சிரம்பணிந்தும் (சுஜூத்) வணங்குவோருக்கும்- தூய்மையாக்கிவைப்பீராக! என்று சொல்லியதை (நபியே!) நீர் எண்ணிப்பார்ப்பீராக!  ஹஜ்ஜைப் பற்றி மக்களுக்கு அறிவிப்பீராக! அவர்கள் நடந்தவர்களாக உம்மிடம் வருவார்கள்; இன்னும், மெலிந்த எல்லா ஒட்டகத்தின் மீதும் (வருவார்கள்); அவை வெகுதூரமான எல்லா வழிகளிலிருந்தும் (அவர்களைக் கொண்டு)வரும். (22: 26-27)

* அருள்வளமிக்கதாகவும் அகிலத்தாருக்கு வழிகாட்டியாகவும் மனிதர்களுக்காக அமைக்கப்பெற்ற முதல் (இறை) ஆலயம் `பக்கா (மக்கா)வில் உள்ளதுதான். அதில் தெளிவான சான்றுகளும் `மகாமு இப்ராஹீமும் உள்ளன. மக்களுள் அங்குச் சென்றுவரச் சக்திபெற்றோர் அல்லாஹ்வுக்காக அவ்வில்லத்தை `ஹஜ் செய்வது கடமையாகும். யார் மறுத்தாரோ (அதனால் அல்லாஹ்வுக்கு இழப்பில்லை. ஏனெனில்,) அல்லாஹ் அகிலத்தாரிடம் தேவையற்றவன் ஆவான்.  (03: 96-97)

* இப்ராஹீமை அவருடைய இறைவன் பல கட்டளைகள் மூலம் சோதித்ததை எண்ணிப்பாருங்கள். அவர் அவற்றை முழுமையாக நிறைவேற்றினார். (அதனால்,) உம்மை மனிதர்களுக்குத் தலைவராக ஆக்கப்போகிறேன் என்று அல்லாஹ் கூறினான். என்னுடைய வழித்தோன்றல்களிலும் (தலைவர்களை உருவாக்குவாயாக!) என்று அவர் கோரினார். (அதற்கு, ஆம்! அப்படியே செய்கிறேன். ஆனால்,) எனது வாக்குறுதி (உம்முடைய வழித்தோன்றல்களுள்) அநீதி இழைத்தோரைச் சேராது என்று அவன் கூறினான். இந்த (கஅபா) ஆலயத்தை ஒன்றுகூடுமிடமாகவும், அபய பூமியாகவும் மக்களுக்கு நாம் ஆக்கியதை நீங்கள் எண்ணிப்பாருங்கள். இப்ராஹீம் நின்ற இடத்தை நீங்கள் தொழுமிடமாக ஆக்கிக்கொள்ளுங்கள். (தவாஃப்) சுற்றுவோருக்காகவும், தங்கி வழிபாடு (இஃதிகாஃப்) செய்வோருக்காகவும், குனிந்தும் சிரம்பணிந்தும் வணங்குவோருக்காகவும் என்னுடைய (இந்த) ஆலயத்தை நீங்கள் இருவரும் தூய்மைப்படுத்துங்கள் என்று இப்ராஹீமிடமும் இஸ்மாயீலிடமும் நாம்  உறுதிமொழி வாங்கினோம்.

என் இறைவா! இதைப் பாதுகாப்பளிக்கும் நகரமாக ஆக்குவாயாக! இந்நகரவாசிகளில் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டோருக்குக் கனிகளை வழங்குவாயாக! என்று இப்ராஹீம் வேண்டியதை எண்ணிப்பாருங்கள். அப்போது அல்லாஹ், (என்னை) நிராகரிப்பவனுக்கும் சிறிது காலம் நான் வசதிகளை வழங்குவேன்; பின்னர் நரக வேதனைக்கு அவனை ஆட்படுத்துவேன்; போய்ச் சேர்கின்ற இடங்களில் அது மிகவும் மோசமானது என்று கூறினான்.

இப்ராஹீமும் இஸ்மாயீலும் அந்த ஆலயத்தின் அடித்தளங்களை உயர்த்திக் கட்டியபோது, எங்கள் இறைவா! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்பாயாக! நீயே நன்கு செவியுறுவோனும் நன்கறிந்தோனும் ஆவாய் (என்று பிரார்த்தனை செய்தனர்). எங்கள் இறைவா! எங்களை உனக்குக் கட்டுப்பட்டவர்களாக ஆக்குவாயாக! எங்கள் வழித்தோன்றல்களுள் உனக்குக் கட்டுப்பட்ட ஒரு சமுதாயத்தாரையும் (உருவாக்குவாயாக)! எங்களுக்கு எங்களது வழிபாட்டு முறைகளைக் காட்டுவாயாக! எங்களை மன்னிப்பாயாக!  நீயே மிகவும் மன்னிப்பவனும் மிகுந்த கருணையாளனும் ஆவாய் (என்றும் அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள்). எங்கள் இறைவா! அவர்களுக்காக அவர்களிலிருந்து ஒரு தூதரை நீ அனுப்புவாயாக! அவர் உன் வசனங்களை அவர்களுக்கு ஓதிக்காட்டுவார்; வேதத்தையும் ஞானத்தையும் அவர்களுக்குக் கற்றுக்கொடுப்பார்; அவர்களைத் தூய்மைப்படுத்தவும் செய்வார். நீயே வல்லமை படைத்தோனும் ஞானம்  நிறைந்தோனும் ஆவாய் (என்றும் பிரார்த்தனை செய்தார்கள்).  (2: 124-129)

தொன்மையான வீட்டைக் கட்டுதல்

அல்லாஹ்வின் அடியார், அவனுடைய தூதர், அவனுடைய நண்பர், நல்லோர்களின் இமாம், இறைத்தூதர்களின் தந்தை இப்ராஹீம் (அலை) அவர்கள் தொன்மையான வீட்டைக் கட்டினார் என்று அல்லாஹ் கூறுகின்றான். அதுதான் மக்கள் அனைவருக்காகவும் நிர்மாணிக்கப்பட்ட  உலகின் முதல் இறையாலயம் ஆகும். அதில் அவர்கள் அல்லாஹ்வை வழிபடுகின்றார்கள். அல்லாஹ் அவ்விடத்தை அவருக்கு வழிகாட்டினான்; அங்குக் கட்டச் சொல்லி அறிவித்தான். அவ்விடத்தில் கட்டுவதற்கு அல்லாஹ் இப்ராஹீம் நபிக்கு வேத அறிவிப்புச் செய்தான் என்று இறைநம்பிக்கையாளர்களின் தலைவர் அலீ பின் அபீதாலிப்  (ரளி) மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. (நூல்: தாரீக் தப்ரீ)

வானங்களைப் படைத்துள்ள விதம் தொடர்பாக நாம் கூறியுள்ளோம். நிச்சயமாக கஅபா `பைத்துல் மஅமூருக்கு*1 நேராக உள்ளது. அதாவது அந்த `பைத்துல் மஅமூர் விழுந்தால் கஅபா மீதுதான் விழும். அதேபோலவே ஏழு வானங்களின் வழிபாட்டுத்தலங்களும் கஅபாவுக்கு நேராக அமைந்துள்ளன. ஒவ்வொரு வானத்திலும் ஓர் இறையில்லம் உள்ளது. அதில் அந்தந்த வானத்திலுள்ளவர்கள்  அதை முன்னோக்கியே அல்லாஹ்வை வணங்குகின்றார்கள். அது புவியிலுள்ளோர்க்கு உள்ள கஅபாவைப் போன்றே அமைந்துள்ளது என்று முற்கால அறிஞர்கள் சிலர் கூறியுள்ளனர்.

வானங்களில் வானவர்களுக்கு உள்ள வழிபாட்டுத் தலங்களைப் போன்றே புவியிலுள்ளோர்க்கு ஓர் இறையாலயத்தைக் கட்டுவதற்கு அல்லாஹ் இப்ராஹீம் (அலை) அவர்களுக்குக் கட்டளையிட்டான்.  வானங்களையும் பூமியையும் படைத்ததிலிருந்தே அதற்காக ஒதுக்கப்பட்ட அந்த இடத்தை அல்லாஹ் இப்ராஹீம் (அலை) அவர்களுக்குக்  காண்பித்தான். இது பற்றிய நபிமொழி புகாரீ-முஸ்லிம் இரண்டு நூல்களிலும் பதிவாகியுள்ளது.

 வானங்களையும் பூமியையும் அல்லாஹ் படைத்த நாளிலேயே இந்த ஊரை அவன் கண்ணியப்படுத்திவிட்டான். எனவே, இந்த ஊர் அல்லாஹ்வின் கண்ணியத்தால் மறுமை நாள் வரை கண்ணியமானதாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.  (நூல்கள்: புகாரீ, முஸ்லிம்)

மக்களுக்கான முதல் இறையாலயம்

இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு முன்னரே கஅபா கட்டப்பட்டிருந்தது என்று கூறுவதற்கு ஆதாரப்பூர்வமான எந்த நபிமொழியும் இல்லை. மகானல் பைத் என்ற வார்த்தையை வைத்துக்கொண்டு, கஅபா ஏற்கெனவே கட்டப்பட்டுவிட்டது என்று கூறுவது தவறான செய்தியாகும். இவ்வசனம் எவ்விதத்திலும் ஆதாரமாக அமையாது.  ஏனென்றால், இவ்வசனத்தின் நோக்கம், அல்லாஹ்வின் ஞானத்தில் ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்ட இடம்; அவனுடைய விதியில் நிர்ணயிக்கப்பட்ட இடம்; ஆதம் நபியின் காலம் தொட்டு இப்ராஹீம் நபியின் காலம்வரை இறைத்தூதர்களிடம் மகிமைவாய்ந்த இடம் அவ்விடமே  என்பதாகும்.

நிச்சயமாக ஆதம் (அலை) அவர்கள்தாம் அதன்மீது ஒரு குப்பாவை அமைத்தார். வானவர்கள் அவரிடம், உமக்கு முன் நாங்கள்தாம் இவ்வீட்டைச் சுற்றிவந்துள்ளோம் என்று கூறினார்கள். நூஹ் (அலை) அவர்களின் கப்பல் இவ்வீட்டை நாற்பது (அல்லது அதைவிடக் கூடுதல்,குறைவான) நாள்கள் சுற்றிவந்தது. எனினும் மேற்கண்ட அனைத்தும் பனூஇஸ்ரவேலர்களிடமிருந்து கிடைத்த செய்திகளாகும். எனவே, அவற்றை நாம் பொய்மைப்படுத்தவோ உண்மைப்படுத்தவோ ஆதாரமாக எடுத்துக்கொள்ளவோ மாட்டோம். உண்மையான கூற்றுக்கு அவை முரணாக இருந்தால், அவற்றை நிராகரித்துவிடுவோம்.

*அருள்வளமிக்கதாகவும் அகிலத்தாருக்கு வழிகாட்டியாகவும் மனிதர்களுக்காக அமைக்கப்பெற்ற முதல் (இறை) ஆலயம் `பக்கா (மக்கா)வில் உள்ளதுதான். (3: 96) அதாவது பொதுமக்களுக்காக அருள்வளமிக்கதாகவும் அகிலத்தாருக்கு வழிகாட்டியாகவும் முதன் முதலில் உருவாக்கப்பட்ட இறையாலயம் அதுதான். அது பக்கா (மக்கா)வில் அமைந்துள்ளது. அது கஅபா அமைந்துள்ள இடத்தைக் குறிக்கிறது என்று கூறப்பட்டுள்ளது. அதில் தெளிவான சான்றுகள் உள்ளன என்பது, நிச்சயமாக அந்த ஆலயத்தை இப்ராஹீம் நபி கட்டினார்; அவர்தாம் அவருக்குப் பின்னுள்ள இறைத்தூதர்களுக்குத் தந்தையாக உள்ளார்; அவருடைய பிள்ளையிலிருந்து வருகின்ற நல்லோர்களின் தலைவர்; அவர்கள் அவரைப் பின்பற்றுவார்கள்; அவருடைய வழிகாட்டுதல்களைப் பேணுவார்கள்-போன்ற விளக்கங்களைப் பொதிந்துள்ளது.

இதனால்தான் அல்லாஹ், `இப்ராஹீம் நின்ற இடம் என்று கூறியுள்ளான். அதாவது அவர் கஅபாவைக் கட்டியபோது, அக்கட்டடம் அவருடைய உயரத்தைத் தாண்டிச் சென்றபோது, அவர் அதைத் தொடர்ந்து கட்டுவதற்காகப் பயன்படுத்திய கல்; அதன் மீது ஏறி நின்றுகொண்டு அவர் அக்கட்டடத்தைக் கட்டுவதற்காக அவருடைய மகனார் வைத்த பிரபலமான கல் ஆகும். இது பற்றிய நீண்ட நபிமொழி ஒன்றை இப்னு அப்பாஸ் (ரளி) அறிவித்துள்ளார்கள். பழங்காலத்திலிருந்து உமர் பின் அல்கத்தாப் (ரளி) அவர்களின் காலம் வரை அந்தக்கல் கஅபாவோடு சேர்ந்தே இருந்தது. உமர் (ரளி) அவர்கள், அக்கல்லை கஅபாவைவிட்டுச் சற்று நகர்த்திவைத்தார்கள். ஏனென்றால், கஅபாவைச் சுற்றிவருபவர்கள் தொழுபவர்களின் கவனத்தைத் திசைதிருப்பாமல் இருப்பதற்காகவே அவ்வாறு செய்தார்கள். இவ்விசயத்தில் உமர் (ரளி) அவர்களின் கருத்து ஏற்கப்பட்டுள்ளது. 

அல்லாஹ்  பல்வேறு விசயங்களில் அவருடைய கருத்தை வரவேற்றுள்ளான். அவற்றுள் சில:  அவர் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம், இப்ராஹீம் நபி நின்ற இடத்தை நாம் தொழுமிடமாக ஆக்கிக்கொள்ளலாமே! என்று கருத்துக் கூறினார். உடனே, அல்லாஹ்  பின்வருகின்ற வசனத்தை இறக்கினான்.

இப்ராஹீம் நின்ற இடத்தை நீங்கள் தொழுமிடமாக ஆக்கிக்கொள்ளுங்கள். (2: 125) ஸ்லாமின் தொடக்கக்காலம் வரை அக்கல் மீது இப்ராஹீம் நபியின் இரண்டு கால்களின் தடங்களும் பதிந்திருந்தன.
அபூதாலிப் அவர்கள் தம்முடைய பிரபலமான லாமிய்யா கவிதையில் பின்வருமாறு பாடியுள்ளார்:
ஸவ்ர் குகை மீது சத்தியமாக!
எவன் ஸபீர் எனும் மலையை அதன் இடத்தில் நட்டுவைத்தானோ
அவன் மீது சத்தியமாக!
ஹிரா மலை மீது ஏறுவதற்காகவும் இறங்குவதற்காகவும்
மக்காவின் நடுவே அமைந்துள்ள உண்மையான அவ்வீட்டின் மீது சத்தியமாக!
அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நிச்சயமாக அல்லாஹ் கவனக்குறைவானவன் இல்லை. முற்பகலிலும் மாலைப்பொழுதிலும் சூழ்ந்து தடவக்கூடிய ஹஜ்ருல் அஸ்வத் மீது சத்தியமாக!
இப்ராஹீம் நபி அக்கல் மீது ஏறியபோது பதிந்த தடம் இன்னும் ஈரமாக இருக்கிறது.(அழியாமல் இருக்கிறது). அவர் அதன் மீது காலணியில்லாமல் வெற்றுக்காலில் நின்றார்.

அதாவது அவருடைய கண்ணியமான கால்கள் அக்கல்லில் பதிந்துவிட்டன. அவருடைய அந்தக் கால்களின் அளவுக்கு அக்கல்லில் தடம் பதிந்துவிட்டது. அவை வெற்றுக்கால்களாகவே இருந்தன; காலணி அணியப்பட்டவையாக இல்லை. இதனால்தான் அல்லாஹ் கூறுகின்றான்.
இப்ராஹீமும் இஸ்மாயீலும் அந்த ஆலயத்தின் அடித்தளங்களை உயர்த்திக் கட்டியபோது, எங்கள் இறைவா! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்பாயாக! நீயே நன்கு செவியுறுபவனும் நன்கறிந்தோனும் ஆவாய் (என்று பிரார்த்தனை செய்தார்கள்). (2: 127) 

இப்ராஹீம்-இஸ்மாயீல் (அலைஹிமஸ்ஸலாம்) இருவரும் ஆழ்ந்த மனத்தூய்மையுடனும் அல்லாஹ்வுக்குப்  பணிந்தும் இருந்தனர். அவ்விருவரும் அல்லாஹ்வுக்குச் செலுத்திய ஆழ்ந்த பணிவையும் நன்றிசெலுத்துதலையும் அவ்விருவரிடமிருந்து ஏற்றுக்கொள்ளுமாறு மிகுந்த தாழ்மையுடன் கோரினர். மேலும் அவ்விருவரும் கோரினர்: எங்கள் இறைவா! எங்களை உனக்குக் கட்டுப்பட்டவர்களாக ஆக்குவாயாக! எங்கள் வழித்தோன்றல்களுள் உனக்குக் கட்டுப்பட்ட ஒரு சமுதாயத்தாரையும் (உருவாக்குவாயாக)! எங்களுக்கு எங்களது வழிபாட்டு முறைகளைக் காட்டுவாயாக! எங்களை மன்னிப்பாயாக!  நீயே மிகவும் மன்னிப்போனும்  மிகுந்த கருணையாளனும் ஆவாய் (என்று பிரார்த்தனை செய்தார்கள்).

----------------அடிக்குறிப்பு------------------------

*1 (அ.கு.) பைத்துல் மஅமூர் என்பது ஏழாம் வானத்தில் வானவர்கள் முன்னோக்கித் தொழுகின்ற ஆலயமாகும். அதில் ஒவ்வொரு நாளும் எழுபதாயிரம் வானவர்கள் வந்து அல்லாஹ்வை வணங்குகின்றார்கள். பின்னர்அவர்கள் மறுமை நாள் வரை ஒருபோதும் அங்கு மீண்டும் வரவே மாட்டார்கள்.


அரபி:           அல்பிதாயா வந்நிஹாயா (இமாம் இப்னு கஸீர்- ரஹ்) 
தமிழாக்கம்: நூ. அப்துல் ஹாதி பாகவி M.A., M.Phil.