ஞாயிறு, 24 ஜூலை, 2016

பொறுமையின் பலன் (சிறுகதை)இஸ்லாம் பெண்களை அடிமைப்படுத்துகிறதா?


மௌலவி முனைவர் நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.          (மொழிபெயர்ப்பாளர், பத்திரிகையாளர்)

இமாம், மஸ்ஜித் ஜாமிஉல் அன்வார், மணலி, சென்னை-68

          இஸ்லாம் பெண்களை ஒடுக்குகிறது; அடிமைப்படுத்துகிறது என்று பல்வேறு சமுதாயத்தினர் கூறுவதற்குக் காரணம் இஸ்லாமியப் பெண்கள் அணிகின்ற புர்காதான். இஸ்லாம் பெண்களைப் பர்தாவுக்குள் அடைத்து வைக்கிறது; சிறைப்படுத்துகிறது என்று வெற்று முழக்கமிடுகின்றார்கள். அவர்கள் வெளியிலிருந்து பார்ப்பதால் உள்ளுக்குள் இஸ்லாமியப் பெண்களுக்கு உள்ள உரிமைகளும் சலுகைகளும் குறித்து அவர்களுக்குத் தெரியவில்லை. அது குறித்து ஓர் இஸ்லாமியப் பெண்ணிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள முன்வந்தால் அவர்கள் இப்படிப் பேச மாட்டார்கள். உலகின் முதலாவதாக விமானம் செலுத்திய பெண் விமானியும் கின்னஸ் உலகச் சாதனையாளருமான பாகிஸ்தானின் ஜஹனாஸ் லஹோரி பர்தாவுக்குள் பாதுகாப்பாக இருக்கின்ற ஒரு முஸ்லிம் பெண்தான் என்பதை பெண்ணியவாதிகள் உணர வேண்டும். இஸ்லாம் பெண்களை அடிமைப்படுத்துகிறதா என்று இப்போது அவர்கள் சொல்லட்டும்.

          சகோதரச் சமுதாயத்தில் கணவன் இறந்துவிட்டால் மறுமணம் உண்டா? வாழ்க்கைப்பட்ட கணவன் பிடிக்கவில்லையெனில் உடனடியாக அவனிடமிருந்து விடுதலை பெற முடியுமா? சொத்துரிமை முழுமையாக உண்டா? திருமணத்தில் விருப்ப உரிமை உண்டா? கைம்பெண்கள் திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகளில் முன்னிலை வகிக்க முடியுமா? இவையெல்லாம் இஸ்லாமியப் பெண்களுக்கு உண்டு; முடியும். இவை தவிர பிறப்புரிமை, பேச்சுரிமை, ஆலோசனை சொல்லும் உரிமை, வாக்குரிமை உள்ளிட்டவை உண்டு.

          கணவன் இறந்துவிட்டால் அவனுடைய சொத்தில் பங்குண்டு; அதே நேரத்தில் மறுமணமும் செய்துகொள்ளலாம்; மணமுடிக்கப்பட்ட கணவன் பிடிக்கவில்லையானால், உரிய காரணங்கள் இருந்தால் அவள் அவனிடமிருந்து (குலஉ) விடுதலை பெற்று, மனதிற்குப் பிடித்த மற்றொருவனை மணந்துகொள்ள இஸ்லாம் அனுமதிக்கிறது; சொத்துரிமை முழுமையாக உண்டு; அதாவது கணவன் இறந்துவிட்டால், தந்தை இறந்துவிட்டால், தாய் இறந்துவிட்டால் அவளுக்குச் சொத்தில் பங்குண்டு; திருமணத்தில் தனக்குப் பிடித்த மாப்பிள்ளையைத் தேர்வு செய்யலாம்; தனக்கு விருப்பமில்லாத ஒருவரைத் தன் தந்தை மணமுடித்து வைத்துவிட்டால் அதை இரத்துச் செய்யவும் அவளுக்கு உரிமை உண்டு (புகாரீ: 5138); ஒரு கைம்பெண் திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகளில் எவ்விதத் தங்கு தடையின்றி முன்னிலை வகிக்கலாம்; மற்ற பெண்களைப்போல் கலந்துகொள்ளலாம். இப்படி எல்லாவித உரிமைகளையும் இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியுள்ளது.

          மேலும் ஒரு பெண் ஆண்களைப்போல் உயர்கல்வி வரை கற்க இஸ்லாம் அனுமதிக்கிறது. கல்வியைத் தேடுவது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமைஎன்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (நூல்: இப்னுமாஜா) இந்த நபிமொழியின் அடிப்படையில் கல்வியைக் கற்பதில் எவ்விதத் தடையுமில்லை. அதேநேரத்தில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துகொள்ளுமாறு கட்டளையிடுகின்றது.

          ஆண்-பெண் உடலமைப்பு வெவ்வேறு விதத்தில் படைக்கப்பட்டுள்ளது. ஆணைவிடப் பெண்ணின் உடலமைப்பு பார்த்த பார்வையில் கவரும் விதத்தில் அல்லாஹ் படைத்துள்ளான். எனவே படைத்த இறைவனே பெண்களை  ஆடையிட்டு மறைத்துக்கொள்ளுமாறும் அந்நிய ஆண்களின் பார்வைக்குப் படாதவாறு திரையிட்டு மறைத்துக்கொள்ளுமாறும் கட்டளையிடுகின்றான். எனவே அவர்கள் அந்நிய ஆண்களின் பார்வையிலிருந்து தங்கள் அழகை மறைத்துக்கொள்ளவும் தங்கள் அழகைத் தம் கணவன் மட்டுமே காண வேண்டும் என்று  விரும்புவது எப்படி அடிமைத்தனமாகும்?

          இன்றைய ஆடைக்கலாச்சாரம்தானே மிகுதியான வன்புணர்வுக்குக் காரணம்? யாராவது மறுக்க முடியுமா? குட்டை ஆடைகளும் இறுக்கமான ஆடைகளும் பெண்களின் அந்தரங்க உறுப்புகளின் வடிவங்களை வெளிக்காட்டுவதாக அமைந்துள்ளன. அதுவும் மெல்லிய ஆடைகள் உள்ளே இருப்பதைப் படம் பிடித்துக் காட்டுவதைப்போல் உள்ளன. எனவேதான் உணர்ச்சியின் தூண்டுதலுக்கு ஆட்பட்ட ஆடவர் சிலர் பெண்களின் கற்புகளைச் சூறையாடுகின்றனர். பெண்களை இந்த அளவிற்குப் போகப் பொருளாகக் காட்டுவதுதான் சுதந்திரமா?

          எல்லாப் பொருள்களின் விளம்பரங்களுக்கும் பெண்கள்தாம் காட்சி தருகின்றார்கள். ஆண்கள் பயன்படுத்துகின்ற பொருள்களுக்கும் பெண்கள்தாம் காட்சி தருகின்றார்கள். ஆண்கள் விளையாடுகின்றபோது நன்றாக மறைக்கின்ற ஆடைகளையும் பெண்கள் விளையாடுகின்றபோது குட்டையான ஆடைகளையும் அணியச் செய்வது ஏன்? பெண்களின் அழகைக் காட்டி ஆண்களைக் கவர்வதற்குத்தானே? அதன்மூலம் சம்பாதிப்பதற்குத்தானே? இப்படிப்பட்ட விளையாட்டுகள் தேவையா? அதேநேரத்தில் ஈரான் போன்ற நாடுகளில் முஸ்லிம் பெண்கள் தம் உடலை முற்றிலுமாக மறைக்கின்ற விதத்தில் ஆடைகள் அணிந்துகொண்டு விளையாடுகின்றார்கள். போட்டியில் வெற்றிபெறுகின்றார்கள். அது எப்படி முடிகிறது?

          “உங்கள் இஸ்லாமிய மார்க்கத்தில், மனைவியைப் பிடிக்கவில்லையானால் தலாக், தலாக், தலாக் என்று மூன்று தடவை கூறி மணவிலக்குச் செய்துவிடுகின்றனர். இதனால் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர்என்ற வாதம் பரவலாக உள்ளது. இதில் அடங்கியுள்ள உண்மை அவர்களுக்குத் தெரியவில்லை. ஒரு பெண் குடும்ப வாழ்க்கையில் எல்லை தாண்டுகின்றபோதும் வரம்புமீறுகின்றபோதும்தான் சினத்தின் உச்சத்தில் ஓர் ஆணின் வாயிலிருந்து அவ்வார்த்தை வெளிப்படுகின்றது. 

விளையாட்டுக்காகவோ வேண்டுமென்றோ யாரும் அவ்வாறு செய்வதில்லை. தனக்குப் பிடிக்கவில்லை என்றால் அவளை முறைப்படி மணவிலக்குச் செய்துவிட்டு மற்றொருத்தியை மணந்துகொள்ள இஸ்லாம் காட்டுகின்ற எளிய வழிமுறைதான் தலாக் ஆகும்.  இது இருபாலருக்கும் நன்மையைத்தான் நல்குகிறது.

          இந்த எளிய வழிமுறை ஏனைய மதங்களில் இல்லாததால்தான் மருமகளைத் தீயிட்டுக் கொளுத்துகின்றார்கள்; ஸ்டவ் வெடிக்கின்றது; கேஸ் அடுப்பு பற்றிக்கொள்கின்றது; கொலை செய்யப்படுகின்றாள்; அல்லது தற்கொலை  செய்துகொள்ளுமாறு தூண்டப்படுகின்றாள். இவற்றைத் தவிர்ப்பதற்காகத்தான் இஸ்லாம் ஓர் எளிய முறையிலான தலாக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. இது பெண்களின் உயிரைப் பாதுகாக்கிறது.

          “இஸ்லாத்தில் ஆண்கள் நான்கு பெண்களை மணந்துகொண்டு பெண்களுக்குத் துரோகமிழைக்கின்றார்கள்; அவர்களை அடிமைத்தனமாக நடத்துகின்றார்கள்என்ற வாதமும் முன்வைக்கப்படுகின்றது. ஒருவனுக்கு ஒருத்திஎன்பது மாற்றுமதக் கலாச்சாரம்; இஸ்லாமிய மார்க்கத்தில் ஒருத்திக்கு ஒருவன்என்பதே கோட்பாடு; அதேநேரத்தில் ஆணைப் பொறுத்தமட்டில் நான்கு வரை மணந்துகொள்ள உரிமம் வழங்கப்பட்டுள்ளதே தவிர கட்டாயம் இல்லை; எத்தனை முஸ்லிம் ஆண்கள் நான்கு பெண்களை மணந்துகொண்டுள்ளனர்? அதேநேரத்தில் சகோதரச் சமுதாயத்தில் உள்ள ஒருவர் ஒரு பெண்ணையே மணந்துகொள்ள வேண்டும்; திருமணமின்றிச் சின்னவீடுஎன்று எத்தனை வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம்; தவறில்லை. இதுதான் உண்மையில் பெண்களுக்கு இழைக்கப்படுகின்ற அநீதியாகும். இஸ்லாத்தைப் பொறுத்தமட்டில், ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை மணமுடிக்க வேண்டுமானால் அதற்குக் கடுமையான நிபந்தனைகள் இருக்கின்றன, பொருளாதார ரீதியாகவும் உடல் ரீதியாகவும் ஆணுக்கு ஆற்றல் வேண்டும்; உணவு, உடை, உறைவிடம் ஆகியவற்றை வாழ்நாள் முழுவதும் கொடுக்க வேண்டும். அத்தகையவர்தாம் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை மணந்துகொள்ளலாம். இல்லையேல் முடியாது.

          மேலும் இந்த அனுமதியை யார் கொடுத்தார்? படைத்த இறைவன் கொடுத்தான். மனிதனுக்கு என்னென்ன, எப்படியெப்படிக் கொடுக்க வேண்டும் என்பது படைத்த இறைவனுக்கு நன்றாகத் தெரியும். ஏனெனில் அவன்தான் ஆண்களின் ஹார்மோன்களையும் பெண்களின் ஹார்மோன்களையும் மாற்றியமைத்தான். பெண்களைவிட ஆண்களுடைய ஹார்மோன்களின் எண்ணிக்கை அதிகம். எனவே தாம்பத்திய உறவில் பெண்களைவிட ஆண்களுக்கு அதிகமான நாட்டமும் தேவையும் ஏற்படும். ஆகவேதான் படைத்த இறைவன் ஆணுக்கு நான்கு மனைவியர் வரை அனுமதி கொடுத்துள்ளான். இது குறித்த உண்மையை மருத்துவர் ஷாலினி தமது, ‘அர்த்தமுள்ள அந்தரங்கம்எனும் நூலில் கூறியுள்ளார். ஆதலால் ஆண்களின் தேவையைக் கருதி அவன் வழங்கியுள்ள அனுமதியைத் தடுக்க யாருக்கும் எந்த அதிகாரமும் கிடையாது. இஸ்லாமிய மார்க்கத்தைப் பின்பற்றுவோரே இவ்வனுமதியை மறுக்கின்றனர்; கொச்சைப்படுத்துகின்றனர். இது அவர்களின் அறியாமையைத்தான் வெளிச்சம்போட்டுக் காட்டுகின்றது.

          இஸ்லாம் பெண்களை அடிமைப்படுத்துகிறது என்ற வாதம் முற்றிலும் பொய்யானது. உண்மைக்கு முரணானது.  இஸ்லாமியப் பெண்கள் பல்வேறு வழிகளில் முன்னேறி வருவதை இதற்குச் சான்றாகக் காட்டலாம். ஓர் இஸ்லாமியச் சமுதாயத்தைச் சார்ந்த ஃபாத்திமா பீவி தமிழ்நாட்டின் ஆளுநராகப் பதவி வகித்துள்ளார்; ஹைதராபாத்தைச் சார்ந்த சய்யிதா சல்மா ஃபாத்திமா, பெங்களூருவைச் சார்ந்த சாரா ஹமீது அஹ்மத் ஆகியோர் விமானத்தைச் செலுத்துகிறார்கள்; சானியா மிர்ஸா இந்தியாவுக்காக டென்னிஸ் விளையாடுகிறார். இவர்கள் வெளியில் தெரிந்தவர்கள்.

          அதேநேரத்தில் புர்கா அணிந்துகொண்டு படித்துப் பட்டம் பெற்றுப் பல்வேறு பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் ஆகியவற்றில் ஆசிரியைகளாக, பேராசிரியைகளாகப் பணிபுரிகின்றார்கள் இஸ்லாமியப் பெண்கள்; தொழில்நுட்பப் பணிகளை மேற்கொள்கின்றார்கள்; எழுத்துப் பணியில் பல்வேறு பெண்கள் மிளிர்கின்றார்கள்; இப்படி எதற்கும் இஸ்லாம் தடைவிதிக்கவில்லை. ஆனால் எதைச் செய்தாலும் புர்காவை அணிந்து அழகை மறைத்துக்கொள்ளுங்கள் என்றே இஸ்லாம் கூறுகிறது.

          இதைத்தாண்டி மார்க்கச் செயல்பாடுகளில் பெண்களுக்கான சலுகையைப் பார்த்தால் அதுவும் ஏராளம். ஒவ்வொரு மாதமும் பெண்களுக்கு ஏற்படுகின்ற மாதாந்திர உதிரப்போக்கு இயல்பானது. அந்நாள்களில் அவர்கள் தொழுகத் தேவையில்லை; அது கடமையான நோன்பு நோற்கின்ற ரமளான் மாதமாக இருந்தால் நோன்பு நோற்கத் தேவையில்லை; பிள்ளையைப் பெற்ற பெண்கள் நாற்பது நாள்கள் தொழுகத் தேவையில்லை; பாலூட்டும் பெண்டிர் கடமையான ரமளான் நோன்பை நோற்கத் தேவையில்லை. பிறந்த பிள்ளை ஆணாக இருந்தால் ஈராடுகள் அறுத்துப் பலியிட வேண்டிய அதேநேரத்தில் பெண்ணாக இருந்தால் ஓர் ஆடே போதுமானது என்பதும் அவர்களுக்கான சலுகையே என்பதை நாம் உணர வேண்டும். இப்படிப் பெண்களுக்கான சலுகைகள் இஸ்லாமிய மார்க்கத்தில் ஏராளம் உள்ளன.

          அதேநேரத்தில் மாதாந்திர உதிரப்போக்கு ஏற்படும் காலங்களில் பெண்களைத் தனியாக ஒதுக்கிவிடுவதோ அவர்களுக்கெனத் தனியாகப் பாத்திரங்களை ஒதுக்குவதோ இஸ்லாத்தில் இல்லை. தாம்பத்திய உறவு மேற்கொள்வதைத் தவிர மற்றெல்லாச் செயல்பாடுகளும் ஏனைய காலங்களில் எவ்வாறு உள்ளனவோ அவ்வாறே  தொடரும். வாழ்க்கைப்பட்ட கணவனோடு ஒரே படுக்கையில் ஒன்றாகத் துயில்கொள்ளவும் தடையில்லை. ஆக மனதளவில்கூடப் பெண்களைச் சங்கடப்படுத்த இஸ்லாமிய மார்க்கம் விரும்பவில்லை.

          கிறிஸ்தவ மதத்தில் கன்னிப்பெண்கள் திருமணம் செய்துகொள்ளாமல் தம் வாழ்க்கையைக் கடவுளுக்காக அர்ப்பணிக்கின்றனர். அவர்கள் கன்னியாஸ்திரிகள்என்று அழைக்கப்படுகின்றனர். அதேபோல் இந்து மதத்தில் உள்ள கன்னிப்பெண்களும் திருமணம் செய்துகொள்ளாமல் தம் வாழ்க்கையைக் கடவுளுக்காக அர்ப்பணிக்கின்றனர். அவர்கள் இந்திரகுமாரிகள்என்று அழைக்கப்படுகின்றனர். ஆனால் இஸ்லாம் ஆண்களின் உணர்வுகளைப்போலவே பெண்களின் உள்ளுணர்வுகளுக்கு உரிய முறையில் மதிப்பளிக்கிறது. எனவே அல்லாஹ்விற்காகத் தம் இல்வாழ்க்கையைத் துறக்கவோ அர்ப்பணிக்கவோ வேண்டிய எந்த அவசியமுமில்லை. மாறாக ஆண்களைப்போலவே இல்வாழ்வில் ஈடுபட்டு, தம் கணவருக்கு உரியமுறையில் பணிவிடை செய்வதன்மூலமும் ஐவேளைத் தொழுகை உள்ளிட்ட இறைக்கடமைகளை நிறைவேற்றுவதன் மூலமுமே அவர்கள் சொர்க்கத்தில் நுழைய முடியும். அதுவே அல்லாஹ்விற்காக அவர்கள் செய்யும் அர்ப்பணிப்பு ஆகும்.

          அப்பெண்களுக்குக் கடமைகள் இருப்பதைப்போலவே நல்லமுறையில் உரிமைகளும் உள்ளன. ஆயினும், ஆண்களுக்குப் பெண்களைவிட (ஓர்) உயர்பதவி உண்டு. (2: 228) இந்த இறைவசனத்தை முன்வைத்து இஸ்லாம் பெண்களைத் தாழ்த்துகிறது என்று வாதம் செய்கின்றனர். குடும்பத்தை நிர்வகிக்கின்ற பொறுப்பு ஆண்களைச் சார்ந்தது என்று இஸ்லாம் கூறுகிறது. இது பெண்களைத் தாழ்த்துவதோ அடிமைப்படுத்துவதோ கிடையாது. ஒரு குடும்பத்திற்குத் தேவையான வாழ்வாதாரத்திற்காகப் பொருளீட்டுவதும் மனைவி, பிள்ளைகளுக்காகச் செலவழிப்பதும் ஆண்களின் பொறுப்பேயன்றிப் பெண்களின் பொறுப்பில்லை. இஸ்லாமிய மார்க்கத்தைப் பொறுத்தமட்டில் ஒரு பெண் தன் கணவனைக் காப்பாற்ற வேண்டும் என்ற எந்த அவசியமுமில்லை. ஆண்தான் சம்பாதித்துப் பொருளீட்டி, தன் மனைவி, பிள்ளைகள் ஆகியோருக்கு உணவு, உடை, உறைவிடம் முதலானவற்றை வழங்க வேண்டும். அதனால்தான் அவனுக்கு ஒருபடி உயர்வுண்டு என்று திருக்குர்ஆன் கூறுகின்றதே தவிர பெண்களைத் தாழ்த்துவதாகக் கருதக்கூடாது. ஒரு மின்விளக்கு எரிய வேண்டுமெனில் நேர் மின்னோட்டம் எதிர் மின்னோட்டம் (பிளஸ், மைனஸ்) ஆகிய இரண்டும் இணைய வேண்டும். அதுபோல் ஒரு குடும்பம் சீராக நடைபெற ஆண்-பெண் இருவரும் இணைய வேண்டும். அந்த நேர் மின்னோட்டம் இடத்தில் ஆணும் எதிர் மின்னோட்டம் இடத்தில் பெண்ணும் இருக்கின்றனரேயன்றி அவர்களுக்கிடையே எந்த ஏற்றத்தாழ்வும் இல்லை.

          “கர்ப்பமான பெண்களுக்குக் காத்திருப்புக் கால (இத்தாவின்) தவணை அவர்கள் பிரசவிக்கும் வரை இருக்கின்றது” (65: 4) எனும் இறைவசனத்திற்கேற்ப அவர்கள் பிரசவித்தபின் பிரசவ உதிரப்போக்கு முடிவடைந்த உடனேயே மறுமணம் செய்துகொண்டு இல்வாழ்க்கையைத் தொடர எளிய வழி காட்டுகிறது இஸ்லாம். மாறாக கணவன் இறந்தபின் உடன்கட்டை ஏறவோ கைம்பெண்ணாகவே எஞ்சிய காலத்தை வெறுமனே கழிக்கவோ வேண்டிய நிர்ப்பந்தம் இஸ்லாத்தில் இல்லை.

          “(மணவிலக்குச் செய்யப்பட்ட) அவர்களுக்கு ஆடையும் உணவும் முறைப்படி கொடுத்து வருவது குழந்தையின் தந்தைமீது கடமை” (2: 233) எனும் இறைவசனத்தின் அடிப்படையில் ஒரு பெண் மணவிலக்குச் செய்யப்பட்டுவிட்டால் அவளுடைய காத்திருப்புக் காலத்திற்குப்பின், அவள் தன் கணவனுக்காகப் பெற்றெடுத்த பிள்ளைகளை அவனிடமே விட்டுவிட்டுச் சென்றுவிடலாம். அப்பிள்ளைகளை வளர்க்க வேண்டிய பொறுப்பு கணவனைச் சார்ந்ததுதானே தவிர, மனைவியைச் சார்ந்தது இல்லை என்று கூறி இஸ்லாம் பெண்களின் சுமையை இலகுவாக்குகிறது. ஆக இது பெண்களுக்கான சலுகையாகும். இதனால் அவள் எளிய முறையில் மறுமணம் புரிந்துகொண்டு இல்வாழ்வைத் தொடரலாம்.  தற்கால முஸ்லிம் பெண்கள் இவ்விசயத்தை அறியாமல் மணவிலக்கிற்குப்பின் பிள்ளைகளையும் சுமந்துகொண்டு மறுமணம் புரிய முடியாமல் தவிப்பது அவர்களின் அறியாமையாகும். 
  
          ஆக, இப்படி ஏராளமான சலுகைகளும் உரிமைகளும் இஸ்லாமிய மார்க்கத்தில் மகளிர்க்கு உண்டு என்பதை  பெண்ணியவாதிகள் உணர வேண்டும். படைத்த இறைவன் ஆண்-பெண் என்று ஈரினத்தைப் படைத்திருப்பது இருவரும் இணைந்து மகிழ்ச்சியாக வாழ்வதற்காகத்தானே தவிர ஏற்றத்தாழ்வு காண்பதற்காக அன்று. இஸ்லாம் ஒருபோதும் பெண்களை அடிமைப்படுத்தவில்லை. இஸ்லாமிய மார்க்கச் சட்டங்களையும் திருக்குர்ஆனையும் திறந்த மனதோடு படிப்போர் இதை உணர்ந்துகொள்ளலாம்.

==========================