திங்கள், 31 மார்ச், 2014

தெரிந்ததைச் சொல்கிறேன் (முன்னுரை)
முன்னுரை

எழுதுகோலால் கற்பித்த ஏக இறைவன் அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் உரித்தாகுக! நற்போதனைகளை மக்கள் யாவருக்கும் போதிக்க வந்த அண்ணல் நபி (ஸல்) அவர்கள்மீதும் அவர்கள்தம் குடும்பத்தார்மீதும் அவர்கள்தம் தோழர்கள்மீதும் அல்லாஹ்வின் கருணையும் சாந்தியும் உண்டாவதாக!

ஜனாப் டாக்டர் ஏ.பீ. முஹம்மது அலீ ஐ.பீ.எஸ். அவர்கள் எழுதியுள்ள, தெரிந்ததைச் சொல்கிறேன் எனும் நூல் என் பார்வைக்கு வந்தது. இந்நூலின் தமிழ்நடையைச் சீராக்கி, பிழைதிருத்தம் செய்து தருமாறு அவர் என்னிடம் கேட்டுக்கொண்டார். ஆகவே இந்நூலைப் புரட்டிப் பார்த்தபோது அவர் தம் நெஞ்சத்தில் தோன்றிய கருத்துகளை எந்த வஞ்சமும் இல்லாமல் சமுதாயம் சீராக வேண்டும் என்ற நன்னோக்கத்தில்தான் கூறியுள்ளார் என்பதைப் புரிந்துகொண்டேன்.

அவர் எதையும் நேர்படப் பேசுகின்ற பழக்கமுடையவர். அவர் காவல்துறையில் முப்பதுக்கும் மேற்பட்ட ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளதால், அவர் தம் கருத்துகளை எடுத்துச் சொல்லும்போதும்  காவல்துறைக்கே உரித்தான மிடுக்கு தென்படுகிறது. கண்டிக்கும் உணர்வோடும் ஆதங்கத்தோடும் கருத்துகளை எடுத்து வைக்கிறார். ஆனால் அவை அனைத்தும் நம் சமுதாயத்தில் புரையோடிக்கிடப்பவை.
அவர் இந்நூலில் எழுதியுள்ள ஒரு கட்டுரையில், சிலருக்குப் பேசுவது எவ்வாறு என்றுகூடத் தெரிவதில்லை. மனைவியிடம் பேசுவதைத் தாயிடம் பேசுகிறார். தாயிடம் பேசுவதை மனைவியிடம் பேசுகிறார். அறிவாளிகளிடம் பேச வேண்டியதைப் பொதுமக்களிடம் பேசுகிறார். பொதுமக்களிடம் பேச வேண்டியதை அறிவாளிகளிடம் பேசுகிறார் என்று தெரிவிக்கிறார். ஆம்! நம்முள் இருவர் சந்தித்துக்கொண்டால் எதையாவது பேசித்தான் ஆக வேண்டும் என்று நினைத்துக்கொண்டு தொடர்பே இல்லாததையெல்லாம் பேசிக்கொள்கின்றார்கள். நாம் எதுவும் பேசவில்லையானாலும், “என்ன நீங்கள் பேசவே மாட்டீர்களா?” என்று 
கேட்கின்றார்கள்.

பேசுவதை அறிந்து பேச வேண்டும். தெரிந்ததைப் பற்றிப் பேச வேண்டும். தெரியாததைப் பற்றிப் பேசக்கூடாது. தெரியாததையெல்லாம் தெரிந்ததைப் போல் பேசினால் இறுதியில் நாம் அறிவிலிகளாக ஆகிவிடுவோம். எனவே எதைப் பேசினாலும் பொருள்படப் பேசுவோம்.

மற்றொரு கட்டுரையில், “தொலைக்காட்சிப்பெட்டி, கணிப்பொறி ஆகியவற்றைப் பிள்ளைகளின் படுக்கை அறைகளில் வைக்காமல் பொதுஅறையில் வைக்க வேண்டும். ஆடல், பாடல், ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என்ற போர்வையில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஒளி பரப்பப்படுகின்றன. அதில் ஆபாசக் காட்சிகளும் காட்டப்படுகின்றன. அவை ஒளிபரப்பப்பட்டால் உடனே அந்த நிகழ்ச்சியை மாற்றிவிட வேண்டும். அதுபோன்ற காட்சிகளை நம்முடைய பெற்றோர் பார்க்கமாட்டார்கள். நாமும் பார்க்கக்கூடாதுஎன்ற எண்ணத்தைப் பிள்ளைகள் மனதில் தோன்றச் செய்ய வேண்டும். அதை விட்டுவிட்டுப் பிள்ளைகளுடன் அமர்ந்து பெற்றோரும் அக்காட்சியைப் பார்த்துக்கொண்டிருக்கக்கூடாதுஎன்று அறிவுரை கூறுகிறார்.
 
இன்றைக்கு நம்முடைய பிள்ளைகள் கெட்டுப்போக நாமே காரணமாக இருக்கின்றோம். குறிப்பாகத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்கின்றபோது ஒரு கட்டுப்பாடு வேண்டும். எதைப் பார்க்க வேண்டும். எதைப் பார்க்கக்கூடாது என்று ஒரு பட்டியல் போட்டுத்தான் நிகழ்ச்சிகளைப் பார்க்க வேண்டும். நிகழ்ச்சிகளைப் பார்ப்பதில் கட்டுப்பாடு இல்லையென்றால் பிள்ளைகள் கெட்டுப்போய்விடுவார்கள் என்பதைப் 
பெற்றோர் உணர வேண்டும். 

இன்றைக்குச் சின்னப் பிள்ளைகள்கூடத் திரைப்படங்களில் பேசப்படுகின்ற வசனங்களைத் தம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தத் தொடங்கிவிட்டார்கள். அவற்றில் பல மோசமான பொருள்கொண்ட வசனங்கள். அவற்றின் பொருள்கூடப் புரியாமல் சிறுபிள்ளைத்தனமாக அவர்கள் பேசிக்கொண்டிருக்கின்றார்கள். இதிலிருந்து விடுதலை பெறச் செய்வது பெற்றோரின் பொறுப்புதான். அதற்காக அவர்கள் தம்முடைய மகிழ்ச்சிகளைத் தியாகம் செய்யத்தான் வேண்டும்.
தன் செல்ல மகள் விருப்பப்பட்டுக் கேட்கின்றாளே என்று அந்த அப்பாவிப் பெற்றோரும் ஒரு செல்பேசி வாங்கிக் கொடுத்தார்கள். செல்பேசி வாங்கியதும் அவளுடைய நடை, உடை, பாவனை, பேச்சு அத்தனையும் மாறிவிட்டனஎன்று சொல்கிறார்.

நவீனச் சாதனங்கள் யாவற்றிலும் நன்மையும் தீமையும் கலந்தே உள்ளன. அவற்றை நன்மைக்காகப் பயன்படுத்துவது எப்படி என்பதை நாம் நம் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும். கத்தியை வைத்துக்கொண்டு ஓர் ஆப்பிளை நறுக்கிச் சாப்பிடலாம். அதே கத்தியில்  ஒரு மனிதனின் உயிரையும் மாய்க்கலாம். ஆனால் எது அறிவுடைமை என்பதை நாம் நம் பிள்ளைகளுக்கு விளக்கிச் சொல்ல வேண்டும்.

செல்பேசி, இணையதள வசதியுடன்கூடிய கணினி போன்றவற்றை நாம் நம் செல்லப் பிள்ளைகளுக்கு அன்போடு வாங்கிக்கொடுக் கின்றபோது, அதன்மூலம் அவர்கள் கல்வியறிவையும் பொது அறிவையும் வளர்த்துக்கொண்டால் அது அவர்களுக்கும் சமுதாயத்திற் கும் நல்லது. அதற்கு மாறாக, அவர்கள் தேவையில்லாதவற்றைப் பார்க்கவோ படிக்கவோ தொடங்கிவிட்டால் அது அவர்களுக்கும் சமுதாயத்திற்கும் தீமையாகவே முடியும். அதனால்தான் அவற்றை வீட்டின் பொதுவான 
இடத்தில் வைக்குமாறு அறிவுரை கூறுகிறார்.

இன்னும் இந்தச் சமுதாயத்திலுள்ள செல்வர்கள் தம் செல்வத்தை அல்லாஹ்வின் திருப்தியையும் உவப்பையும் நாடிச் சமுதாய முன்னேற்றத்திற்காகத் தாராளமாகச் செலவு செய்கின்ற மனப்பான்மையை வளர்த்துக்கொள்ளவில்லை என்பதையும் சுட்டிக்காட்டுகிறார். அவர்கள் மனமுவந்து மாசற்ற மனதோடு இறைப்பாதையில் செலவழிக்கத் தொடங்கிவிட்டால் இஸ்லாமியச் சமுதாயம் மென்மேலும் வளர்ச்சிப் பாதையை நோக்கிப் பயணிக்கும் என்று தெரிவிக்கிறார்.

இந்நூலில் அவர் தம் சிந்தனையில் பட்டதை உள்ளது உள்ளபடி கூற முனைந்துள்ளார். எனவே இந்நூலின் கருத்துகள் செயல்பாட்டுக்கு வந்தால் சமுதாயம் பயனடையும் என்பதில் ஐயமில்லை.

அவர் மென்மேலும் பல நூல்களை எழுதி, இச்சமுதாய மக்களைத் தட்டி 
எழுப்ப உயர்ந்தோன் அல்லாஹ் அருள்புரிவானாக!
 அன்புடன்
மௌலவி, காரீ, நூ. அப்துல் ஹாதி பாகவி எம்.ஏ.,எம்.ஃபில்
ஆலங்குடி 
09-12-2013

திங்கள், 17 மார்ச், 2014

சகோதரியே! சற்று கேள்!

                                                                        
அன்பிற்கினிய சகோதரியே! இவ்வுலகில் வாழ ஒவ்வொருவருக்கும் ஒரு வாழ்க்கை கொடுக்கப்பட்டிருக்கிறது. அது ஒரு குறிப்பிட்ட காலம் வரைதான் நீடிக்கும். அக்குறிப்பிட்ட கால வரையறை முடிவுற்ற அடுத்த கணமே மரணம் வந்துவிடும். ஆனால் ஒரு குறிப்பிட்ட கால வரையறைக்குள் அமைக்கப்பட்டுள்ள நம் வாழ்க்கையை நாம்தாம் மகிழ்ச்சியானதாக ஆக்கிக்கொள்ள வேண்டும்.

சோகங்களே நிறைந்துள்ள என் வாழ்க்கையை நான் எப்படி மகிழ்ச்சியானதாக ஆக்கிக்கொள்ள முடியும்? என்று நீ கேட்கலாம். ஆனால் அந்தச் சோகங்கள் நிரந்தரமானவை அல்ல என்றும் அச்சோகங்களைக் கொடுத்த அல்லாஹ்வே அவற்றை நீக்கக்கூடிய ஆற்றல் கொண்டவன் என்பதையும் நீ உன் மனதினுள் ஆழமாகப் பதிய வைத்துக்கொள்ளும்போது உன் சோகங்கள் அகன்று இன்பமாக மாறிவிடும்.

சுகமும் சோகமும் நிரந்தரமல்ல என்பது  பொதுவிதி. துன்பத்திற்குப் பின் இன்பமே. துன்பத்திற்குப் பின் இன்பமே என்று அல்லாஹ் திருமறைக் குர்ஆனில் கூறுவதை ஒரு கணம் நீ எண்ணிப்பார். உன் சோகம் சுகமாக மாறிவிடும்.

ஒரு தடவை  திடீரெனப் பயணம் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை எனக்கு ஏற்பட்டது. இரவு நேரம். பயணச்சீட்டு முன்பதிவு செய்யவில்லை. தொடர்வண்டியில் பொதுப்பெட்டிக்குள் மக்களோடு மக்களாகப் பயணம் செய்ய வேண்டிய கட்டாயம். கூட்டம் நிறைந்து வழிகிறது. படியில் கால்வைத்து ஏறுமிடத்திலும் பயணிகள் அமர்ந்திருக்கின்றார்கள். உள்ளே ஏறுவதற்குள் பெருந்துன்பமாகிவிட்டது. நீண்ட நேரம் நின்றுகொண்டே செல்ல வேண்டிய நிர்ப்பந்த நிலை. என் மனைவி என்னைத் திட்டிக்கொண்டே வருகிறாள். என் பிள்ளைகள் தூக்க மயக்கத்தில் இருந்ததால், அங்கு கிடைத்த இடத்தில், தரையில் படுக்க வைத்தோம். அவ்வளவு கடினமான பயணம். அந்தச் சூழ்நிலையிலும் நான் சிரித்துக்கொண்டுதான் வந்தேன். துக்கப்படவில்லை. மனம் வருந்தவில்லை.

உ.பி., பிகார் போன்ற வட மாநிலங்களில் தொடர்வண்டி பற்றாக்குறையாலும் மக்கள்தொகை மிகுதியாலும் பயணம் செய்ய இடம் கிடைக்காமல் தொடர்வண்டியின் மேற்கூரையில் பயணம்  செய்வதை நாளிதழ்களில் படித்திருக்கிறேன். நமக்குத் தொடர்வண்டிக்குள் நிற்பதற்கேனும் இடம் கிடைத்ததே என்றெண்ணி மகிழ்ச்சியடைந்தேன். ஆம்! இப்படித்தான் நம் வாழ்க்கையில் எண்ணற்ற சிக்கல்கள் அவ்வப்போது நம்மை எதிர்நோக்கி வந்துகொண்டே இருக்கும். அவற்றைச் சமாளித்து, வெற்றிகொண்டு மகிழ்வதே வாழ்க்கை.

சின்னச் சின்னச் சிக்கல்கள் உன் வாழ்க்கையில் வரும்போது நீ அதற்காகப் பெரிய அளவில் வருத்தப்படக்கூடாது. மாறாக, அத்தருணத்தில் அதைவிடப் பெரிய சிக்கலை எண்ணிப் பார்த்து, அது நம்மை அடையாமல் போனதே என்று மகிழ்ச்சி கொள்ள வேண்டும். பெரிய கோட்டைச் சிறிய கோடாக மாற்ற, அதைவிடப் பெரியதொரு கோட்டை அதனருகில் வரைந்தால் முதல்கோடு மிகச் சிறியதாக மாறிவிடும். அதே நிலைதான் வாழ்க்கையை இயல்பாக எடுத்துக்கொள்கின்ற, இறைநம்பிக்கைகொண்ட ஆண்-பெண்களின் நிலை. அதையே அல்லாஹ் விரும்புகின்றான்.

உனக்கு உன் கணவன்தான் பிரச்சனை என்றால், கணவனே இல்லாமல் விதவையாக இருந்துகொண்டு, நாள்தோறும் சமுதாய மக்களின் ஏச்சுப் பேச்சுகளை காதில் வாங்கிக்கொண்டு, வெம்பி, நொந்து வாழ்ந்துகொண்டிருக்கிற பெண்களைப் பார். அத்தகைய சோக நிலையை எனக்குத் தராத அல்லாஹ்வுக்கே நன்றி என்று கூறு. உன் பிரச்சனை எங்கோ ஓடி மறைந்துவிடும்.

உன் மாமியார்தான் உனக்கு ஒரு மிகப்பெரும் சிக்கல் என்றால், அவரின் மனதைக் கவர உன்னால் இயன்றதைச் செய். உங்களுக்கு என்ன பிடிக்கும் மாமி? என்று மனம் விட்டுக் கேள்! அதை அவருக்குச் செய்துகொடு. உன் பிரச்சனை தீர்ந்துவிடும். அத்தோடு குடும்பமே இல்லாமல், உறவினர்களே இல்லாமல் ஒற்றையாக வாழ்ந்துகொண்டிருக்கிற பெண்டிர்களைச் சற்று உற்றுநோக்கு. எனக்கு ஓர் அழகான குடும்பத்தையும், கணவன், பிள்ளைகள், மாமனார், மாமியார் போன்ற உறவுகளையும் அமைத்துக் கொடுத்துள்ள அல்லாஹ்வுக்கே நன்றி என நீயாகவே கூறுவாய். அதன்பின் உன் சோகம் மறைந்து மகிழ்ச்சி பிறக்கும் என்பதை நான் சொல்லவும் வேண்டுமா?

இப்படி ஒவ்வொரு துக்கம் ஏற்படும்போதெல்லாம், அதைவிடப் பெரியதை எண்ணிக்கொள். கவலையே உன் வாழ்வில் இருக்காது. நாம் இவ்வுலகில் கவலைகொள்ள பத்துக் காரணங்கள் இருந்தால், நாம் மகிழ்வோடு இருக்க நூறு வழிகளை அல்லாஹ் வைத்துள்ளான். ஒவ்வொன்றையும் நாம் அணுகும்விதத்தில்தான் இருக்கிறது. எனவே உன் மகிழ்ச்சி உன் கையில் என்றுதான் நான் சொல்வேன்.

உன் சோகத்தை மறந்து உன் கணவனை மகிழ்விக்க என்னென்ன வழிகள் உள்ளனவோ அவற்றை  நீ கற்றுக்கொள்! உன் உடல் நிறைய பொன் நகைகள் அணிந்துகொண்டு உன் கணவனை மகிழ்விக்க நினைப்பதைவிட, உன் உதட்டோரப் புன்னகையால் அவனைப் பல மடங்கு மகிழ்விக்க முடியும். எனவே அவனைக் காணும்போதெல்லாம் உன் உதட்டில் புன்னகை இழையோடட்டும்!

ஒரு நல்ல பெண்மணியின் இலக்கணத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியபோது, கணவன் அவளைப் பார்த்தால் அவனுக்கு மகிழ்வூட்டுவாள். அவன் வெளியே சென்றுவிட்டால் அவனுடைய பொருள்களைப் பாதுகாப்பாள். தன் கற்பைப் பாதுகாத்துக்கொள்வாள் என்றுரைத்தார்கள்.

கணவனை மகிழ வைப்பது மனைவியாக உள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும் அவசியமாகும். நீ அவனை மகிழ்ச்சிப்படுத்தினால் அதன் பயனை அனுபவிக்கப்போவது நீதான். ஆம்! அவன் மகிழ்ச்சியாக இருக்கும்போது உன்னைத் திட்டமாட்டான். உன்னைக் கடிந்துகொள்ள மாட்டான். உன் சமையலில் குறைகாண மாட்டான். கண்டாலும் மென்மையாகச் சொல்வான். அவனுடைய தாய் உன்னைப் பற்றிக் குறை கூறினால், அவனுடைய பேச்சில் அவ்வளவு வீரியம் இருக்காது. இவையெல்லாம் உனக்கு நன்மைதானே? எனவே நீ உன் கணவனைப் பார்க்கும்போதெல்லாம் உன் உதட்டோரத்தில் புன்னகையைத் தவழவிட மறவாதே!

இதையே உன் மாமியாரிடமும் அண்டை வீட்டுப் பெண்களிடமும் கடைப்பிடி. எல்லோரும் உனக்குச் சாதகமானவர்களாக ஆகிவிடுவார்கள். பிறகு உனக்கென்ன கவலை?


வியாழன், 6 மார்ச், 2014

எனது வாசகர் கடிதம்

சமநிலைச் சமுதாயம் மாத இதழில் எனது வாசகர் கடிதம்

எச். பீர் முஹம்மது எழுதியிருந்த பொங்கல் பண்டிகையும் தமிழ் முஸ்லிம் அடையாள அரசியலும் கட்டுரை வாசித்தேன்.  பொங்கல் பண்டிகையை முஸ்லிம்கள் அல்லாத தமிழர்களைப்போல் முஸ்லிம்களும் முஸ்லிம் விவசாயிகளும் கொண்டாட வேண்டும் என்றும் தமிழ் முஸ்லிம்கள் என்பதை இக்கொண்டாட்டத்தின் மூலம் அடையாளப்படுத்த வேண்டும் என்றும் கூறுகிறார்.

முஸ்லிம்கள் கொண்டாடும் பண்டிகைகள், கொண்டாட்டங்கள் எதுவாக இருந்தாலும் அல்லாஹ்வின் உவப்பையும் திருப்தியையும் பெறுவதாக இருக்க வேண்டும். அந்த வகையில் முஸ்லிம் விவசாயிகள் தம் அறுவடையை முடித்து, மகசூலை வீட்டுக்குக் கொண்டுவந்த பிறகு பொங்கல் பண்டிகையன்று ஒரு சிறப்பு விருந்துக்கு ஏற்பாடு செய்து விவசாயத் தொழிலுக்கும், வேளாண்மைக்கும், அறுவடைக்கும் பாடுபட்ட அத்தனை உழவர்களையும் அழைத்து விருந்துண்ணச் செய்தால் அதை எந்த ஆலிமும் எதிர்க்க மாட்டார். இஸ்லாமியச் சட்டப்படிஒரு விவசாயி சுயமாகத் தண்ணீர் இறைத்து வேளாண்மை செய்தால் 5 சதவிகிதமும், மழைநீர் மூலம் விவசாயம் செய்தால் 10 சதவிகிதமும் ஸகாத் கொடுக்க வேண்டும். அதை இந்த வகையிலாவது அவர்கள் நிறைவேற்றலாம்.

முஸ்லிம்களின் பண்டிகைகளின்போது பிற சமய அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்துகளைப் பரிமாறிக்கொள்கின்றனர். ஆனால் பிற சமயத்தவர் பண்டிகைகளில் குறிப்பாகத் தமிழர் திருநாளாம்  பொங்கல் பண்டிகையின்போது முஸ்லிம் அரசியல்-சமூகத் தலைவர்கள் ஒரு வாழ்த்துக்கூடச் சொல்வதில்லையே ஏன்? என்று வினவுகிறார். இது எப்படி இருக்கின்றதென்றால், பிற சமயத்தவர் நம்முடைய தர்ஹாக்களுக்கு வருகின்றனர். நாம் ஏன் அவர்களுடைய கோவில்களுக்குப் போகக்கூடாது? என்று கேட்பதைப்போல் உள்ளது. அவர்கள் எதைச் செய்தாலும் அது அவர்களுடைய தெய்வங்களோடு இணைந்துதான் இருக்கும். அப்போது நாம் வாழ்த்தினால் அவர்களுடைய தெய்வ வழிபாட்டைச் சரியென ஆமோதிப்பதாகவே கருதப்படும். அதனால்தான் யாரும் அவர்களுக்கு வாழ்த்துத் தெரிவிப்பதில்லை என்பதைக் கட்டுரையாளர் உணர வேண்டும்

அதேநேரத்தில் எந்த ஊரிலும் முஸ்லிம்கள் பொங்கல் ஆக்குவதில்லை என்றும் சொல்லிவிட முடியாது. எனக்குத் தெரிந்து புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஓணாங்குடி எனும் கிராமத்தில் முஸ்லிம்கள் பலர் விவசாயிகள். அவர்கள் தம் அறுவடைக்காலம் முடிந்ததும் தைப் பொங்கலன்று தம் வீடுகளின்முன் பொங்கல் வைக்கின்றனர். இதை எந்த ஆலிமும் தடுக்கவில்லை.

ஈத் திருநாளில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வீரவிளையாட்டுக்கு அனுமதியளித்ததைப்போல் பொங்கல் திருநாளில் முஸ்லிம்கள் வீரவிளையாட்டுகளை நடத்தலாமே? என்று கூறுகிறார். வீர விளையாட்டுகளைத் திருநாளில் மட்டுமின்றி, மற்ற நாள்களிலும் விளையாட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பரிந்துரைத்துள்ளார்கள். குதிரையேற்றம், அம்பெய்தல், ஓட்டப்போட்டி உள்ளிட்ட உடல் நலனை மேம்படுத்துகின்ற விளையாட்டுகளை விளையாடத் தூண்டியிருக்கின்றார்கள். ஆகவே அதையெல்லாம் எந்த ஆலிமும் தடுக்கப்போவதில்லை.

ஈத் திருநாள்களைத் தவிர மற்ற எந்தக் கொண்டாட்டத்திற்கும் உலமாக்களின் ஆதரவு இல்லை என்பதை இலைமறை காயாகக் குறிப்பிடுகிறார். அவ்வாறில்லை. வழிபாடு சாராத தேச நலனையும் உயர்வையும் கொண்ட எந்தக் கொண்டாட்டத்தையும் உலமாக்கள் உதாசீனப்படுத்தியதில்லை. இந்திய விடுதலை  நாள், குடியரசு நாள் போன்ற தேசிய நாள்களில் முஸ்லிம்கள் கலந்துகொள்ளத்தான் செய்கிறார்கள். அதை உலமாக்கள் ஒருபோதும் எங்கேயும் தடுத்ததில்லை. இன்னும் சொல்லப்போனால், ஓர் ஆலிம் தலைமையேற்றுள்ள கட்சிதான் மதுரையில் ஆகஸ்ட் 15ஆம் நாளன்று சுதந்திர நாளை மாபெரும் பேரணியாக நடத்திக்காட்டியது. கலந்துகொண்டவர்கள் அனைவரும் முஸ்லிம்கள்தாம் என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

மேலும் இங்கு தமிழன் கொண்டாடுகின்ற எந்தக் கொண்டாட்டமும் கடவுளை மையமாக வைத்துத்தான் நடைபெறுகிறது. எனவே அதை அப்படியே பின்பற்றித் தமிழ்பேசுகின்ற முஸ்லிம்கள் கொண்டாட வேண்டுமென்ற எந்த அவசியமுமில்லை. அதேநேரத்தில் தமிழ்மொழியையோ, தமிழ்நாட்டையோ, இந்தியாவையோ மையமாக வைத்து ஒரு விழா நடந்தால் அதில் முஸ்லிம்கள் கலந்துகொள்வதற்கு எந்தத் தடையும் இல்லை.

     -மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி, துணையாசிரியர்-இனிய திசைகள் மாத இதழ்