Monday, November 23, 2020

பெண்மையைப் போற்றிய பெருமான் நபி!

 


-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

--------------------------------------------------

பெண் குழந்தை பிறந்தவுடன் அதை உயிருடன் புதைக்கும் பழக்கம் அரபியர்களிடம் பரவலாகக் காணப்பட்டது. பெண் குழந்தை பிறந்துவிட்டால் அக்குழந்தையை இழிநிலையோடு வைத்துக்கொள்ளலாமா? அல்லது புதைத்துவிடலாமா? என்று நினைப்பான். மக்கள் கேலி செய்வதையும் ஏளனம் செய்வதையும் எண்ணிப் பார்த்து, அக்குழந்தையை உயிருடன் புதைத்துவிடுவான். அத்தகைய கல்நெஞ்சினர்களாக இருந்த அரபியர்கள் மத்தியில் இறைத்தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பிறந்தார்கள்.

அன்றைய மக்களின் மனோநிலையை அல்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது: அவர்களுள் ஒருவனுக்குப் பெண் குழந்தை பிறந்ததாக நற்செய்தி கூறப்பட்டால் அவனுடைய முகம் (துக்கத்தால்) கறுத்து, கோபத்தை விழுங்குகிறான். (பெண் குழந்தை பிறந்ததென) அவனுக்குக் கூறப்பட்ட இந்தக் கெட்ட செய்தியைப் பற்றி (வெறுப்படைந்து) இழிவுடன் "அதை வைத்திருப்பதா? அல்லது (உயிருடன்) மண்ணில் புதைத்து விடுவதா?'' என்று கவலைப்பட்டு மக்கள்முன் வராது மறைந்துகொண்டு அலைகிறான். (16: 58-59)

அவ்வாறு உயிருடன் புதைக்கின்ற மனிதாபிமானமற்ற செயலைக் கண்டிக்கும் விதமாக அல்லாஹ் மற்றோர் இடத்தில் இவ்வாறு சொல்கிறான்: (உயிருடன்) புதைக்கப்பட்ட பெண் குழந்தைகளை நோக்கி, "எந்தக் குற்றத்திற்காக நீங்கள் (உயிருடன் புதைக்கப்பட்டுக்) கொலை செய்யப்பட்டீர்கள்?'' என்று கேட்கப்படும். (81: 8-9)

இத்தகைய தருணத்தில்தான் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மக்கள் மத்தியில் ஏகத்துவப் பிரச்சாரம் மேற்கொண்டார்கள். அத்தோடு பெண் குழந்தைகளைக் கொல்லாதீர்கள் என்ற இறைவசனங்களையும் எடுத்துரைத்தார்கள். மேலும் இவ்வாறு கூறினார்கள்: "யார் மூன்று மகள்களைப் பேணி வளர்த்து, அவர்களுக்கு ஒழுக்கம் கற்பித்து, அவர்களுக்குத் திருமணம் செய்துவைத்து, அவர்களிடம் நல்லமுறையில் நடந்துகொண்டாரோ அவருக்குச் சொர்க்கம் உண்டு.'' (நூல்: அபூதாவூத்: 5147) 

"யார் இரண்டு பெண்பிள்ளைகளைப் பேணி வளர்த்தாரோ அவரும் நானும் இவ்வாறு சொர்க்கத்தில் நுழைவோம்'' என்று கூறித் தம் இரண்டு விரல்களைக் காட்டினார்கள். (நூல்: திர்மிதீ: 1914)

பெண் பிள்ளைகளை மட்டுமின்றி, ஒரு பெண் திருமணத்திற்குப் பின் குழந்தையை ஈன்றெடுத்தால் தாய் எனும் உயரிய மதிப்பைப் பெறுகிறாள். எனவே அவள் ஈன்றெடுத்த பிள்ளைகள் அவளை மதிக்க வேண்டும் என்ற அடிப்படையில், "தாயின் காலடியில் சொர்க்கம் உண்டு'' என்று கூறிப் பெண்ணை மேன்மைப்படுத்தினார்கள். இதன் மூலம், ஓர் ஆண் சொர்க்கத்தை அடைய, தாய் எனும் பெண்ணைப் போற்றி மதித்து அவருக்குப் பணிவிடைகள் செய்ய வேண்டுமென்ற நிபந்தனையை விதித்தார்கள் நபிகள் நாயகம்.

மேலும் பெற்றெடுத்த தாயைப் பற்றித் திருக்குர்ஆனில் அல்லாஹ் கூறியுள்ள செய்தியையும் மக்கள் மத்தியில் எடுத்தோதினார்கள்: உங்களிடம் இருக்கும் அவர்களுள் ஒருவரோ இருவருமோ முதுமையை அடைந்துவிட்டபோதிலும் அவர்களை விரட்டவும் வேண்டாம்; அவர்களை (நிந்தனையாகச்) "சீ' என்றும் சொல்ல வேண்டாம். அவர்களிடம் (எதைக் கூறியபோதிலும்) மிக்க மரியாதையாக(வும் அன்பாகவுமே) பேசுங்கள். (17: 23)

பெண்களின் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பல்வேறு தருணங்களில் ஆர்வமூட்டிக் கூறியுள்ளார்கள். கல்வியைத் தேடுவது ஒவ்வொரு முஸ்லிம் (ஆண்-பெண்) மீதும் கடமையாகும். (நூல்: இப்னுமாஜா: 224)

பெண்களைப் போகப்பொருளாக மட்டுமே அக்கால மக்கள் கருதிவந்த நேரத்தில், அவர்களை நிர்ப்பந்தப்படுத்தி அடையக்கூடாது; அவர்களை விபச்சாரத்திற்காக நிர்ப்பந்தப்படுத்தக்கூடாது என்றெல்லாம் திருக்குர்ஆன் கூறியது. அவர்களின் கற்பை அடைய வேண்டுமெனில், அவர்களுக்குரிய மஹ்ரை (மணக்கொடையை) உரிய முறையில் வழங்கி, முறைப்படி திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற திருக்குர்ஆனின் கட்டளையை எடுத்துரைத்து அம்மக்களைச் சீர்படுத்தினார்கள்.    

திருக்குர்ஆன் கூறுகிறது: நீங்கள் (திருமணம் செய்துகொண்ட) பெண்களுக்கு அவர்களுடைய "மஹரை' (மணக்கொடையை)க் கண்ணியமான முறையில் கொடுத்துவிடுங்கள். (4: 4)

மணப்பெண் வீட்டாரிடமிருந்து இயன்றதைக் கறந்துவிடுவோர் இன்றும் உள்ளனர். சகோதரச் சமுதாயத்தைச் சார்ந்த பெண்களுக்குச் சொத்துரிமை இல்லாத காலக் கட்டத்தில் உருவானதுதான் வரதட்சணை எனும் பெண்களுக்கு எதிரான பழக்கம். அப்பழக்கம் பெண்களுக்குச் சொத்துரிமை உண்டு என்று சட்டமியற்றப்பட்ட பிறகும் தொடர்வது கவலைக்குரியதாகும். சகோதரச் சமுதாயத்தோடு சேர்ந்து வாழ்கின்ற முஸ்லிம்களுக்கும் அப்பழக்கம் தொற்றிக்கொண்டது. இஸ்லாமிய ஷரீஅத் சட்டத்தை அறியாத முஸ்லிம்கள் பெண்வீட்டாரிடமிருந்து வரதட்சணை பெற்றுக்கொண்டிருக்கிறார்கள். அதேவேளையில் இஸ்லாமிய ஷரீஅத் சட்டங்களை அறிந்த முஸ்லிம்கள் மணப்பெண்ணுக்கு உரிய மணக்கொடையைக் கொடுத்தே திருமணம் செய்துவருகின்றனர். இன்று இப்பழக்கம் பரவலாக அறியப்பட்டுள்ளதால் பெரும்பாலோர் மணக்கொடை கொடுத்தே மணம்புரிகின்றனர். இது இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியுள்ள உயர்வும் மேன்மையும் ஆகும்.

பிறப்புரிமை, சொத்துரிமை, கல்வி கற்கும் உரிமை, வாக்குரிமை, நடமாடும் உரிமை உள்ளிட்ட பல்வேறு உரிமைகளை இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியுள்ளது. இவை அனைத்தும் இன்று நேற்றல்ல, பதினைந்து நூற்றாண்டுகளாக நடைமுறையில் இருந்து வருகின்றன.

யூதர்களும் கிறிஸ்தவர்களும் பெண்களை அவர்கள்தம் மாதவிடாய்க் காலத்தில் ஒதுக்கி வைத்தனர். அது அவர்களுக்கு மனத்தளவில் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியது. இன்றும் அப்பழக்கம் அவர்களிடம் இருந்து வருகின்றது. ஆனால் மாதவிடாய்க் காலத்தில் கணவன்-மனைவி உடலுறவு கொள்வதைத் தவிர மற்றெல்லாவற்றிலும் அவர்கள் இருவரும் சேர்ந்து இருப்பதில் தவறில்லை என்று திருக்குர்ஆன் சட்டமியற்றியது. அதற்கேற்ப அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தம் மனைவியரோடு இணைந்து இணக்கமாகவே வாழ்ந்துள்ளார்கள் என்பதை இஸ்லாமிய வரலாற்றில் காண்கிறோம்.

இது குறித்து அவர்கள்தம் அன்பு மனைவி ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா இவ்வாறு கூறுகிறார்: எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும்போது நான் (ஏதேனும் பானத்தைப்) பருகிவிட்டு அதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கொடுப்பேன். அப்போது அவர்கள் நான் வாய் வைத்த இடத்தில் தமது வாயை வைத்து அருந்துவார்கள். மாதவிடாய் ஏற்பட்டிருந்த நான் இறைச்சியுள்ள எலும்புத் துண்டைக் கடித்துவிட்டு அதை நபியவர்களிடம் கொடுப்பேன். நான் வாய் வைத்த இடத்தில் அவர்கள் தமது வாயை வை(த்துப் புசி)ப்பார்கள். (நூல்: முஸ்லிம்: 505)

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் (பள்ளிவாசலில் இஃதிகாஃபில் இருக்கும்போது) அறையிலிருக்கும் என் பக்கம் தமது தலையை நீட்டுவார்கள். மாதவிடாய் ஏற்பட்டுள்ள நிலையிலும் நான் அவர்களுக்குத் தலை வாரிவிடுவேன் என்று ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா கூறினார்கள். (நூல்: முஸ்லிம்: 500) எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும்போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என் மடியில் தலை வைத்துப் படுத்துக்கொண்டு குர்ஆன் ஓதுவார்கள் என்று ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா கூறினார்கள். (நூல்: முஸ்லிம்: 506)

அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பள்ளிவாசலில் (இஃதிகாஃப்) இருந்து கொண்டிருந்தபோது (தம் துணைவியாரிடம்), "ஆயிஷா! அந்தத் துணியை எடுத்துத் தா!'' என்றார்கள். ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, "எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுள்ளதே!'' என்றார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், "மாதவிடாய் உனது கையிலில்லை'' என்று சொன்னார்கள். அதையடுத்து அந்தத் துணியை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா எடுத்துக் கொடுத்தார்கள். (நூல்: முஸ்லிம்: 504)

இவ்வாறு பல்வேறு நபிமொழிகள் காணப்படுகின்றன. அவை அனைத்தும் பெண்களின் மாதவிடாய்க் காலத்தில் அவர்களை ஒதுக்காமலும் அந்நியப்படுத்தாமலும் அவர்களோடு அண்மித்து வாழ வேண்டும் என்று உணர்த்துகின்றன. இவற்றைப் படிக்கின்ற யாரும் நபியவர்கள் பெண்களுக்குக் கொடுத்திருந்த முக்கியத்துவத்தை விளங்கிக்கொள்ளலாம்.

பெண்களுக்கான ஆடை அணியும் பழக்கம் முறைகேடாக இருந்த அக்காலத்தில் பெண்கள் ஆண்களுக்குக் காட்சிப்பொருளாகக் காணப்பட்டனர். ஆகவே அவர்களின் ஆடை அணியும் முறையைச் சீர்படுத்தி, அவர்கள் கண்ணியமான முறையில் ஆடை அணியும் பழக்கத்தை ஏற்படுத்தியது இஸ்லாம். அன்று முதல் இன்று வரை இஸ்லாமியப் பெண்களின் ஆடை குறித்துப் பல்வேறு விமர்சனங்கள் வந்தவண்ணம் இருக்கின்றன. ஆனால் அதேவேளையில் பெண்களுக்கெதிரான குற்றங்கள் இன்று மலிந்து காணப்படுவது கண்கூடு. அதற்கு முக்கியக் காரணங்களுள் ஒன்று அவர்களின் உடலுறுப்புகள் கவர்ச்சியாக வெளியே தெரியும்வண்ணம் அணிகின்ற ஆடைதான் என்பதைப் பலரும் ஒத்துக்கொள்கிறார்கள். ஆகவே நபியவர்கள் பெண்களுக்கான ஆடைச் சீர்திருத்தத்தை மேற்கொண்டதன்மூலம் அவர்களுக்குப் பாதுகாப்பைபே வழங்கியுள்ளார்கள்; அதில் அடிமைத்தனம் அறவே இல்லை என்பதை நடுநிலையாளர்கள் எளிதாகப் புரிந்துகொள்ளலாம். 

ஆக இவ்வாறு பல்வேறு உரிமைகளையும் உயர்வுகளையும் இஸ்லாமிய மார்க்கம் பெண்களுக்கு வழங்கியுள்ளது. இம்மார்க்கத்தின் வழிகாட்டியாக இறுதியாக வந்த இறைத்தூதர் முஹம்மது  ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பெண்களுக்குரிய உரிமைகளை வழங்கி, அவர்களை மேன்மைப்படுத்தியுள்ளார்கள் என்பதை இன்றைய கணினி உலகில் வாழும் பெரும்பாலோர் விளங்கியுள்ளார்கள் என்பதை அறிந்து, இம்மார்க்கத்தைத் தம் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டுள்ள நாம் அனைவரும் பெருமகிழ்ச்சியடைகிறோம்.  

===================================

 

No comments: