வெள்ளி, 24 டிசம்பர், 2021

இறைநேசர்களின் பண்புகள்

 

-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

இறைநேசர்கள் என்றாலே முற்காலத்தில் வாழ்ந்து மறைந்தவர்களையே உதாரணம் காட்டுகிறோம். அண்மையில் வாழ்ந்து மறைந்தோரை நாம் உதாரணம் காட்டுவதில்லை. அப்படியெனில் இறைநேசர்கள் ஆகுதல் எனும் கதவு  அடைக்கப்பட்டுவிட்டதா? நம் காலத்தில் யாரும் இறைநேசர் ஆகமுடியாதா? என்ற வினாக்கள் எழுகின்றன. இல்லை. அது அடைக்கப்படவில்லை என்பதே அதற்கான விடையாகும்.

அப்படியெனில் நாம் எவ்வாறு இறைநேசர் ஆவது? நாம் இறைநேசர் ஆக வேண்டுமெனில் அல்லாஹ்வின் கட்டளைகளை அப்படியே ஏற்று நடக்க வேண்டும். அவன் எவற்றையெல்லாம் தடைசெய்திருக்கின்றானோ அவற்றிலிருந்து விலகிக்கொள்ள வேண்டும். நல்லறங்கள் செய்வதோடு, நற்பண்புகளைக் கடைப்பிடிக்க வேண்டும். ஒருவர் இறைநேசர் ஆவதற்கு என்னென்ன நற்பண்புகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை இக்கட்டுரையில் காணலாம்.

இறைநேசர்கள் என்றால், அவர்கள் அல்லாஹ்வை நேசிப்பார்கள். அல்லாஹ்வும் அவர்களை நேசிப்பான். அவர்கள்தாம் இறைநேசர்கள். அல்லாஹ் நம்மை நேசிக்க வேண்டுமானால் நாம் என்ன செய்ய வேண்டும்? அல்லாஹ்வை மட்டுமே அஞ்ச வேண்டும்; எதிர்காலத்தைப் பற்றிய கவலை இருக்கக்கூடாது. அது குறித்து அல்லாஹ் கூறுகின்றான்: அறிந்துகொள்க! நிச்சயமாக அல்லாஹ்வின் நல்லடியார்களுக்கு யாதொரு பயமுமில்லை; அவர்கள் கவலைப்படவுமாட்டார்கள்.” (10: 62)

இறைநேசர்களுக்கு எதனால் எந்த அச்சமும் இருப்பதில்லை. ஏனெனில் அவர்கள் அல்லாஹ்வை மட்டுமே அஞ்சுபவர்கள் ஆவர். அல்லாஹ்வை மட்டுமே அஞ்சுவோருக்கு வேறு எந்த அச்சமும் இருப்பதில்லை. எந்த அச்சமும் இல்லையெனில் எதிர்காலத்தைப் பற்றிய எந்தக் கவலையும் இருக்காது. கடந்த காலத்தைப் பற்றிய துக்கமோ எதிர்காலத்தைப் பற்றிய கவலையோ அவர்களின் மனத்தில் அறவே இருக்காது. 

மதீனாவில் ஒரு நாள் இரவு நேரத்தில் மக்கள் மத்தியில் ஒரு பேரச்சம் நிலவியது. அப்போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஒரு குதிரைமீதேறி, தன்னந்தனியாகச் சென்று திரும்பி வந்து, எந்த அச்சமும் வேண்டாம் என்று மக்களைத் தேற்றினார்கள். அது குறித்த நபிமொழி புகாரீ நூலில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.  

(எதிரிகள் படையெடுத்து வருவதாக) மதீனா நகரில் பீதி நிலவியது. உடனே, அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், அபூதல்ஹா ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் குதிரையில் ஏறி (விவரமறிந்து வர)ப் புறப்பட்டார்கள். அப்போது அவர்கள், “(பீதி ஏற்படுத்தும்) எதனையும் நாம் காணவில்லை.  தங்கு தடையின்றி வேகமாக ஓடக் கூடியதாகவே நாம் இந்த குதிரையைக் கண்டோம்'' என்று கூறினார்கள். (நூல்: புகாரீ: 2968) அல்லாஹ்வின் மீதான அச்சம் மட்டுமே உள்ளோருக்கு வேறு எந்த அச்சமும் இருப்பதில்லை என்பதற்கான சான்றாக இந்த நபிமொழி திகழ்கிறது.

இறைநேசர்களின் நற்பண்புகளுள் ஒன்று அல்லாஹ்விற்காகவே எதையும் செய்தல் ஆகும். அவர்கள் எதையும் விரும்பினாலும், எதையேனும் வெறுத்தாலும், எதையேனும் யாருக்கேனும் கொடுத்தாலும், கொடுக்காமல் தடுத்து வைத்துக்கொண்டாலும் எல்லாமே அல்லாஹ்வுக்காகவே இருக்கும். அவனது திருப்தியைப் பெற வேண்டுமென்ற எண்ணமே மேலோங்கி இருக்கும். உலகாதாய நோக்கமோ, உலகாதாயப் பயன்களைப் பெறுவதாகவோ இருக்காது.

இது குறித்து ஒரு நபிமொழி இவ்வாறு கூறுகின்றது: யார் அல்லாஹ்வுக்காகவே நேசித்தாரோ, அல்லாஹ்வுக்காகவே (ஒருவனை) வெறுத்தாரோ, அல்லாஹ்வுக்காகவே கொடுத்து, அல்லாஹ்வுக்காகவே தடுத்துக்கொண்டாரோ அவர் ஈமானை (இறைநம்பிக்கையை) முழுமைப்படுத்திக்கொண்டுவிட்டார் என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (அபூதாவூத்: 4681)

எதைச் செய்தாலும் அல்லாஹ்வுக்காகச் செய்வதே ஒருவர் தம் இறைநம்பிக்கையை முழுமைப்படுத்திக்கொள்வதற்கான வழியாகும். அதை ஒருவர் செய்தால் அவர் இறைநேசர்களுள் ஒருவர் எனத் தம்மைக் கருதிக்கொள்ளலாம். அதாவது ஒருவர் அல்லாஹ்வின் கட்டளைகளைச் செவ்வனே நிறைவேற்றுகிறார்; அன்றாடம் ஐவேளைத் தொழுகைகளைத் தொழுகிறார்; உரிய முறையில் ஸகாத்தை வழங்கிவருகிறார்; உபரியான தான தர்மங்களைச் செய்து வருகிறார்; தீன்பற்று மிக்கவராகத் திகழ்கிறார்; அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கட்டுப்படுவதில் முன்னிற்கிறார். இத்தகைய ஒருவரை நாம் நேசிப்பதே அல்லாஹ்வுக்காக நேசித்தல் ஆகும்.

அதேநேரத்தில் ஒருவர் அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு மாறு செய்கிறார்; வட்டி வாங்குகிறார்; தடை செய்யப்பட்ட தொழில்களைச் செய்கின்றார். இத்தகையோரை நாம் வெறுக்க வேண்டும். இத்தகையோர்மீது நமக்கு இயல்பாகவே வெறுப்பு ஏற்பட்டால் அதுதான் அல்லாஹ்வுக்காகவே ஒருவரை வெறுத்தல் ஆகும். ஆக அல்லாஹ்விற்காகவே விரும்புதலும் அல்லாஹ்வுக்காகவே வெறுத்தலும் இறைநேசர்களின் பண்பாகும். இப்பண்பை நாம் கொண்டிருந்தால் நாமும் இறைநேசர்களுள் ஒருவராக ஆகிவிடலாம்.

அடுத்து, அல்லாஹ் கடமையாக்கியுள்ள கடமையான வழிபாடுகளைச் செவ்வனே நிறைவேற்றுவதோடு  உபரியான (நஃபிலான) வழிபாடுகளையும் நிறைவேற்ற வேண்டும். இவற்றைப் பார்க்கின்ற அல்லாஹ் அந்த அடியானை விரும்புகின்றான். இது குறித்து நபியவர்கள் கூறியுள்ள ஒரு செய்தி புகாரீ எனும் நபிமொழித் தொகுப்பு நூலில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

அல்லாஹ் கூறியதாக அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்: ...எனக்கு விருப்பமான செயல்களில் நான் கடமையாக்கியதைவிட வேறு எதன் மூலமும் என் அடியான் என்னுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதில்லை. என் அடியான் கூடுதலான (நஃபிலான) வணக்கங்களால் என் பக்கம் நெருங்கி வந்துகொண்டேயிருப்பான். இறுதியில் அவனை நான் நேசிப்பேன்... (புகாரீ: 6502)

ஆக கடமையான வழிபாடுகள் என்பதில் ஐவேளைத் தொழுகை, ரமளான் மாத நோன்பு, ஸகாத், ஹஜ் ஆகியவை அடங்கும். ஸகாத்தும் ஹஜ்ஜும் வசதியுள்ளோருக்கு மட்டுமே பொருந்தும். அதன்பின் உபரியான தொழுகை என்பதில் கடமையான ஐவேளைத் தொழுகைக்கு முன்-பின் உள்ள சுன்னத்துகள், நஃபில்கள், இஷ்ராக், லுஹா, அவ்வாபீன், தஹஜ்ஜுத் உள்ளிட்டவை அடங்கும். உபரியான நோன்புகள், அவ்வப்போது ஏழைகளுக்குத் தர்மங்கள், தனிமையில் அமர்ந்து இறைவனைப் புகழ்ந்து திக்ர் செய்தல் ஆகியவற்றை நிறைவேற்ற வேண்டும். அவரே இறைநேசராகத் திகழ முடியும்.

அல்லாஹ்வின் வழியில் செலவு செய்தாலோ ஏழைகளுக்கும் உறவினர்களுக்கும் பொருளாதார உதவிகள் செய்தாலோ பொருட்செல்வம் குறைந்துவிடும் என்ற எண்ணம் ஏற்படக்கூடாது. அவர்களே இறைநேசர்கள்  ஆவர். இறைநேசர்கள் பொய் பேச மாட்டார்கள்; வீண் விளையாட்டுகளில் ஈடுபட மாட்டார்கள்; வீண் வேடிக்கைகளைப் பார்க்க மாட்டார்கள்; அறிவிலிகள் ஏதாவது அரட்டையடிக்கும் விதமாகவோ வம்பிழுக்கும் விதமாகவோ பேசினால் ஸலாம் எனக் கூறி ஒதுங்கிவிடுவார்கள். இவ்வாறு பற்பல நற்பண்புகள் அவர்களிடம் இருக்கும்.

இறைநேசர்கள் தம்மைப் படைத்துப் பரிபாலிக்கின்ற பேரிறைவன் அல்லாஹ்வுக்கு அதிகமாக நன்றி செலுத்துவார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அல்லாஹ்வுக்கு மிக அதிகமாக நன்றி செலுத்தி வந்தார்கள் என்பதை நாம் அறிவோம். அது குறித்து முஃகீரா பின் ஷுஅபா ரளியல்லாஹு அன்ஹு அறிவித்துள்ள ஒரு நபிமொழியைப் பார்க்கலாம்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் "தமது பாதங்கள்' அல்லது "கணைக்கால்கள்' வீங்கும் அளவுக்கு நின்று தொழுவார்கள். இது குறித்து அவர்களிடம் கேட்கப்படும்போது நான் நன்றியுள்ள அடியானாக இருக்க வேண்டாமா?'' என்று கேட்பார்கள்.  (புகாரீ: 1130)

இறைத்தூதர்கள், இறைநேசர்கள் ஆகியோர் குறித்து அல்லாஹ் திருக்குர்ஆனில் எங்கெல்லாம் கூறுகின்றானோ அங்கெல்லாம் நன்றி செலுத்துதல் குறித்துக் கூறுகின்றான். அதாவது அவர்கள் அல்லாஹ்வின் அருட்கொடைகளுக்கு மிகுந்த நன்றி செலுத்துபவர்களாக இருந்தனர் என்று தெரிவிக்கின்றான்.

சுலைமான் அலைஹிஸ்ஸலாம் சொன்ன செய்தி: ...இது நான் அவனுக்கு நன்றி செலுத்துகின்றேனா இல்லையா என்று என்னைச் சோதிப்பதற்காக என் இறைவன் எனக்குப் புரிந்த பேரருளாகும். எவன் (இறைவனுக்கு) நன்றி செலுத்துகிறானோ அவன் தனக்கே நன்மை செய்து கொள்கிறான்... (27: 40)

லுக்மான் அலைஹிஸ்ஸலாம் அவர்களைக் குறித்த ஒரு செய்தி: லுக்மானுக்கு நாம் ஞானத்தைக் கொடுத்து அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும்படி கூறினோம். ஏனென்றால், எவர் நன்றி செலுத்துகிறாரோ அவர் தம் நன்மைக்காகவே நன்றி செலுத்துகிறார். எவன் (அதனை) நிராகரிக்கிறானோ (அவன் தனக்குத் தீங்கைத் தேடிக்கொள்கிறான். அதனால் அல்லாஹ்வுக்கு ஒன்றும் நட்டமில்லை. ஏனென்றால்) நிச்சயமாக அல்லாஹ் தேவையற்றவனும் புகழுக்குரியோனும் ஆவான்.  (31: 12)

இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களைக் குறித்த ஒரு செய்தி: இறைவனின் அருட்கொடைகளுக்கு (எந்நேரமும்) நன்றி செலுத்துபவராக இருந்தார்.” (16: 121)

 

இவ்வாறு இறைநேசர்களும் இறைத்தூதர்களும் அல்லாஹ்வின் அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துவோராக இருந்தார்கள். எனவே நாம் அல்லாஹ்வுக்கு நன்றிக்குரியோராக இருந்தால் அவனுடைய அடியார்களாக, இறைநேசர்களாக உருவாகலாம்.

படைத்த இறைவனுக்கு நன்றி செலுத்துகிற அதேநேரத்தில் நம்மைச் சார்ந்த எத்தனையோ பேர் நமக்கு உதவி செய்கின்றார்கள். அவர்கள் செய்கின்ற சின்னச்சின்ன உதவிகளுக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டே இருக்க வேண்டும். நம்மால் இயன்ற கைம்மாறையும் செய்துவர வேண்டும். அதுதான் இறைவனுக்கு நன்றி செலுத்தத் தூண்டுகோலாக அமையும். ஆக இத்தனை நற்பண்புகளையும் நாம் நம்முடைய அன்றாட வாழ்வில் கடைப்பிடித்தால் நாமும் இறைவன் விரும்பும்  இறையடியார்களாக-இறைநேசர்களாக ஆகிவிடலாம். அதற்காக நாம் நாள்தோறும் முயன்றுகொண்டே இருப்போம்.

==========================

வியாழன், 16 டிசம்பர், 2021

வார்த்தைகளை வடிகட்டுவோம்!

 

-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

 

மனிதர்களின் அன்றாடப் பிரச்சனைகளுக்கு அவர்கள் பயன்படுத்தும் வார்த்தைகளே முக்கியப் பங்கு வகிக்கின்றன. வாகனத்தில் செல்லும்போது அடுத்தவர் வாகனத்தில் இலேசாக உராய்வை ஏற்படுத்திவிட்டபோது எதிராளி கோபப்பட்டுப் பேசுவான். இடித்தவனும் கோபப்பட்டுப் பேசுவான். அதனால் அங்கு ஒரு மிகப்பெரும் சண்டையே உருவாகிவிடும். "சாரி சார்' என்று இடித்தவன் அன்பாக, மெதுவாகக் கூறியிருந்தால் அவ்வளவு பெரிய சண்டையே தேவையில்லை. சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு, சினத்தைத் தூண்டுகின்ற வார்த்தைகளைக் கூறாமல் மனதுக்கு இதமளிக்கின்றமனதைச் சாந்தப்படுத்தி, மகிழ்ச்சியைத் தூண்டும் வார்த்தைகளையே கூற வேண்டும்.

 

இதுபோலவே நல்ல நல்ல வார்த்தைகளை நம் பிள்ளைகளுக்குத் தொடக்கத்திலிருந்தே கற்பிக்க வேண்டும். தக்க தருணத்தில் வெளிப்படுத்துகின்ற அன்பான வார்த்தைகள் பிறரின் மனக்கவலைகளை மாற்றி மகிழ்ச்சியைக் கொண்டுவரும். துக்கத்தில் இருப்பவருக்கு நம்முடைய ஆறுதலான வார்த்தைகள்தாம் அருமருந்து. அதை விட்டுவிட்டு, துக்கத்தில் இருப்பவர் முன்னால் நாம் மகிழ்ச்சிக் கொண்டாட்டம் போடுவதோ, அவரைக் கேலி செய்யும் விதமாக நடந்துகொள்வதோ, "உனக்கு இதுவும் வேண்டும்; இன்னமும் வேண்டும்'' என்று எகத்தாளமாகப் பேசுவதோ கூடாது.

 

மரியாதையற்ற வார்த்தைகளைக் கூறாமல் மதிப்புமிக்க வார்த்தைகளையே கூற வேண்டும். அதையே நம் பிள்ளைகளுக்கும் கற்பிக்க வேண்டும். மரியாதையற்ற வார்த்தைகளைப் பேசியதாலேயே பலரின் குடும்ப வாழ்வு சிதைந்திருக்கிறது. பள்ளிவாசலில் குர்ஆன் வகுப்பு நடத்தி வருகின்ற என்னிடம் பல்வேறு சூழலில் வளர்ந்த பிள்ளைகள் வருகை தருகின்றார்கள். அவர்களிடம் எப்போதும் ஒரு பிரச்சனை இருந்து வந்தது. "இவனைவிட நான் வயதில் மூத்தவன்; இவன் என்னை "டா' என அழைக்கிறான்'' என்று ஒருவருக்கொருவர் முறையீடு செய்துகொண்டே இருந்தனர். அதனால் நான், இனி அனைவரும் அவரவர் பெயரோடு "ஜீ' என்பதைச் சேர்த்து, ஆரிப்ஜீ, நூருல்லாஹ்ஜீ என்றுதான் அழைக்க வேண்டும்'' என்றொரு கட்டளை பிறப்பித்தேன். பிரச்சனை ஓய்ந்தது மட்டுமல்ல ஒருவருக்கொருவர் மரியாதையாக அழைக்கத் தொடங்கிவிட்டனர்.

 

குடும்ப உறவுகளைச் சிதைப்பதில் முக்கியப் பங்கு வகிப்பது மரியாதையற்ற பேச்சுதான். ஆசிரியர்-மாணவர்களிடையே இருக்க வேண்டிய மரியாதையான உறவு சிதைந்துபோய்க் கிடப்பதற்கான காரணம் மரியாதையற்ற பேச்சுதான். கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி சண்டை ஏற்படுவதற்கான காரணம் மரியாதையற்ற போங்குதான். ஆக, எல்லா இடங்களிலும் மரியாதையற்ற பேச்சு உறவுகளையும் அன்னியோன்யத்தையும் சிதைக்கிறது. அதேநேரத்தில் மரியாதையான பேச்சுக்கு உள்ளத்தைக் கவரும் ஆற்றல் உண்டு. வார்த்தைகளைக் கோர்த்துக் கோர்த்துப் பேசுவதைவிடப் பார்த்துப் பார்த்துப் பக்குவமாகப் பேசுவதே சிறந்தது.

 

இன்றைக்கு ஆசிரியர்-மாணவர் இடையே இருக்க வேண்டிய மரியாதையான உறவு சிதைந்து போனதற்குக் காரணம், மாணவர்களின் மனதில் தம் ஆசிரியர்களைப் பற்றிய மரியாதையான எண்ணம் இல்லை. பட்டப் பெயர் சூட்டி அழைப்பது, கேலி கிண்டல் செய்வது மிகுந்து காணப்படுகிறது. ஆசிரியரைப் பற்றிய கண்ணியமான எண்ணமும் மரியாதையான பார்வையும் இல்லாதபோது அவர் நடத்துகின்ற பாடத்தை எவ்வாறு அந்த மாணவன் முக்கியத்துவம் கொடுத்துக் கவனிப்பான்?

 

ஒருவன் தன் தாய்-தந்தையை மதிப்பதில்லை என்றால் அதன் அடிப்படைக் காரணம் தன் பெற்றோரைப் பற்றிய மரியாதை அவனுடைய மனதில் இல்லை என்பதே. அதன் மூலவேர் அவர்களை மரியாதையாக அழைப்பதிலிருந்து தொடங்குகிறது. ஒருவன் தன் தாய்-தந்தையை வாங்க, போங்க என்று மரியாதையாக அழைக்கத் தொடங்கினாலே அவர்கள் இட்ட கட்டளைக்குப் பணிந்து நடக்கத் தொடங்கிவிடுவான். வா, போ என்று மரியாதைக் குறைவாக அழைப்பவன் அவர்களின் கட்டளைக்குப் பணிய மறுப்பான். இதுதான் அடிப்படை. ஆக, குடும்ப உறவுகள் மேம்பட, தாய்-தந்தைக்குப் பிள்ளைகள் பணிந்து நடக்க வார்த்தைகள் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். இதை ஒவ்வொரு பெற்றோரும் ஆசிரியரும் தம் பிள்ளைகளுக்குக் கற்பிக்க வேண்டும்.

 

இவ்வாறு மரியாதையான வார்த்தைகள் சிதைந்துபோனதில் திரைப்படங்களுக்கு முக்கியப் பங்குண்டு. நகைச்சுவைக் காட்சிகளுக்காக அப்பாவை பிள்ளை வாடா, போடா என்று அழைப்பதும் அப்பாவிடம் மரியாதையின்றி நடந்துகொள்வதும், தன் தாயைக் காலால் எட்டி உதைப்பதும் காட்சிப்படுத்தப்படுகின்றன. அதைக் காணும் பிள்ளைகள் அதை அப்படியே தம் பெற்றோரிடம் பிரதிபலிக்கின்றனர். நிழலுக்கும் நிஜத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் தம் வாழ்க்கையைச் சிதைத்துக்கொள்கின்றனர்.

 

அதேகோணத்தில் அன்றாட வாழ்க்கையில் நாம் பயன்படுத்தும் அதைரியப்படுத்துகின்ற வார்த்தைகள் ஏராளம். பிள்ளைகளோ மற்றவர்களோ நம்மிடம் ஒரு போட்டி குறித்தோ, ஒரு தேர்வு குறித்தோ கூறும்போது, நாம் அவர்களை வாழ்த்தி ஓரிரு வார்த்தைகள் கூறினால் அது அவர்களுக்குப் புத்துணர்வூட்டும். அதற்கு முரணாக, "போ, போ நீ உருப்புட்ட மாதிரிதான்'', "நீயெல்லாம் தேறமாட்டாய்'' என்ற அமங்கலமான, எதிர்மறையான வார்த்தைகளைக் கூறினால் அது அவர்களின் மனதைக் காயப்படுத்துவதோடு, எடுத்த முயற்சியையும் கைவிட்டுவிடுவார்கள். எனவே நாம் பேசுகின்ற வார்த்தைகள் மிக முக்கியமானவை. அவை பிறரின் வெற்றிக்கும் முன்னேற்றத்திற்கும் காரணமாக இருக்க வேண்டுமே தவிர அவர்களின் தோல்விக்கும் பின்னடைவுக்கும் ஒருபோதும் காரணமாக ஆகிவிடக்கூடாது.

 

அதுபோல், நம்முடைய அன்றாட வாழ்க்கைப் பயன்பாட்டில் உள்ள கொச்சை வார்த்தைகள், வன்முறை வார்த்தைகள் பல உள்ளன. அவற்றைக் களைந்து அவற்றின் இடத்தில் வேறு நல்ல வார்த்தைகளைப் பயன்படுத்தக் கற்றுக்கொள்ள வேண்டும். அதைச் செவியுறுகின்ற நம் பிள்ளைகள் தாமாகவே அவற்றை நம்மிடமிருந்து கற்றுக்கொள்வார்கள். "நான் இதை வெற்றிகொள்ள வேண்டும் என வெறி கொண்டிருந்தேன். அதனால்தான் என்னால் வெற்றிகொள்ள முடிந்தது'' என்று சொல்கின்ற வாக்கியத்தில், "வெறி' என்ற வார்த்தைக்குப் பதிலாக "வைராக்கியம்' கொண்டிருந்தேன் என்று பயன்படுத்தலாம். "அவன்மீது எனக்குக் கொலைவெறி'' என்று சொல்வதற்குப் பதிலாக "அவன்மீது எனக்கு மிகுந்த சினம்'' என்று கூறலாம். இப்படி வார்த்தைகளில் வன்முறை கலப்பதைத் தவிர்க்கத்தான் வேண்டும். இல்லையேல் அதுவே நம்மை மீளாத் துயருக்குள் ஆழ்த்திவிடும்.     

 

நாம் பேசுகின்ற வார்த்தைகள் பிறரின் மனத்தைப் பண்படுத்த வேண்டுமே தவிர புண்படுத்திவிடலாகாது. எனவே வார்த்தைகளை வடிகட்டிப் பேசுவோம். பிறர் மகிழப் பேசுவோம். "நல்ல வார்த்தைகளைப் பேசுவது தர்மமாகும்'' (புகாரீ) என்ற நபிமொழியை நினைவில் கொள்வோம்.

 ===================