வியாழன், 12 ஜனவரி, 2017

ஔவையின் அறநெறி நூல்களில் சமுதாயச் சிந்தனைகள்

ஜமால் முஹம்மது கல்லூரியில் 11-01-2017 அன்று “தமிழ் இலக்கியங்களில் முதாயச் சிந்தனைகள் என்னும் பொருண்மையில் நடைபெற்ற பன்னாட்டுக் கருத்தரங்கில் கலந்து கொண்டு என் ஆய்வுக் கட்டுரையைச் சமர்ப்பித்தேன்.

இதோ அக்கட்டுரை உங்கள் பார்வைக்கு...

ஔவையின் அறநெறி நூல்களில் சமுதாயச் சிந்தனைகள்
முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி எம்.ஏ., எம்.ஃபில்., பிஎச்.டி.
(மொழிபெயர்ப்பாளர், பத்திரிகையாளர்)

ஔவையைத் தமிழ் மூதாட்டிஎனத் தமிழர்கள் அன்போடு அழைப்பர். அவர் ஏராளமான பாடல்களை இயற்றித் தமிழுலகிற்கு ஈந்துள்ளார். அவை அனைத்தும் படிப்போர் இதயங்களைப் பண்படுத்துபவை; சமுதாயச் சிந்தனையோடு எழுதப்பட்டவை. அவர் இயற்றிய அறநெறி நூல்களான ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி ஆகிய நூல்களில் காணப்படுகின்ற சமுதாயச் சிந்தனைகளைக் கோடிட்டுக்காட்ட விரும்புகிறேன்.

பிறருக்கு உதவிசெய்தல், நல்லவர்களோடு நட்புகொள்ளுதல், இல்லார்க்கு ஈதல், உழைத்துண்ணல், மணம் புரிந்து வாழ்தல், இல்லாளை நல்லவளாய்த் தேர்ந்தெடுத்தல், விதியை நம்புதல் உள்ளிட்ட பல்வேறு சமுதாயச் சிந்தனைகளை உள்ளடக்கித் தம் பாடல்களை இயற்றியுள்ளார். படிப்போர் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் விதத்தில் அவர்தம் பாடல்கள் அமைந்துள்ளன. அவற்றுள் குறிப்பிடத்தக்க சில சமுதாயச் சிந்தனைகளை விரிவாகக் காணலாம்.

உதவி செய்தல்

பிறருக்கு உதவி செய்தல் மிகச் சிறந்த மனிதப் பண்பு என்பதை நாம் பல்வேறு நன்னெறி நூல்கள் மூலமும் ஆன்றோர்களின் அறவுரைகள் மூலமும் தெரிந்து வைத்துள்ளோம். அதே நேரத்தில் கைம்மாறு கருதாமல் பிறருக்கு உதவி செய்ய வேண்டுமென்பதைத் தமிழ் மூதாட்டி ஔவையார் தம் மூதுரைப் பாடல் மூலம் எடுத்துரைக்கிறார்.    

நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந்நன்றி
என்று தருங்கொல்?' என வேண்டா-நின்று
தளரா வளர் தெங்கு தாள் உண்ட நீரைத்
தலையாலே தான் தருதலால்.

ஒருவருக்கு உபகாரம் செய்யும்போதே அதற்கான பிரதிபலனையோ கைம்மாறையோ எதிர்பார்த்துச் செய்யலாகாது. ஒரு தென்னை மரம் தன் வேர்களால் நிலத்திலிருந்து உறிஞ்சுகின்ற நீரை இளநீர் மூலம் திருப்பித் தருவதைப்போல் ஒருவர் பிறருக்குக் கைம்மாறு கருதாமல் உதவி செய்தால் அதற்கான  பிரதிபலன் பிற்காலத்தில் திண்ணமாக அவருக்குக் கிடைத்தே தீரும் என அறிவுறுத்துகிறார்.

நல்லவர்களோடு நட்பு கொள்ளுதல்

ஒவ்வொருவரும் தத்தம் இன்ப துன்பங்களைப் பகிர்ந்துகொள்ள ஒரு நட்பு தேவை. அந்த நட்பு நல்ல நட்பாக, பயனுள்ள நட்பாக, நல்வழியில் செலுத்தும் நட்பாக, நற்குணங்களைப் போதிக்கும் நட்பாக இருக்க வேண்டும். பொய்யாமொழிப் புலவர் திருவள்ளுவரும் நட்பைக் குறித்து ஓர் அதிகாரத்தையே அமைத்துள்ளார். அதில் அவர் ஆழமான கருத்துகளை முன்வைத்துள்ளார். அதுபோலவே தமிழ் மூதாட்டி ஔவையார் மூதுரைப் பாடலில் நட்பின் இலக்கணத்தை வரையறுக்கிறார்:
நல்லாரைக் காண்பதுவும் நன்றேஎனத் தொடங்கும் பாடலில், நல்லவரைக் காண்பதும், அவர்தம் அறிவுரைகளைக் கேட்டு அதன்படி நடப்பதும் அவர் சொன்ன அறிவுரைகளைப் பிறருக்கு எடுத்துரைப்பதும் நல்லவரோடு இணங்கி இருப்பதும் தோழமையுடன் பழகுவதும் நன்மைக்குரிய செயலாகும் என அறிவுரை பகர்கின்றார்.

வாய்மையாளர்களோடு இருங்கள்எனும் திருக்குர்ஆனின் கூற்று இங்கு நினைவுகூரத்தக்கது.

அதே நேரத்தில் தீயவர்களோடு தொடர்பு வைத்துக்கொள்ளக் கூடாது என்பதையும், “தீயாரைக் காண்பதுவும் தீதேஎனும் அதற்கடுத்த பாடலின்மூலம் விளக்குகிறார். தீயாரைக் காண்பதும், தீயார் சொல் கேட்பதும், தீயாரோடு இணக்கமாக இருப்பதும் அவர் கூறுவதைப் பிறருக்கு எடுத்துச் சொல்வதும் தீது என்றுரைக்கிறார்.
தீயாரோடு சேர்ந்து அமர்வதைவிடத் தனிமையில் இருப்பது மேலானதுஎனும் நபிகள் நாயகத்தின் பொன்மொழி இவ்விடத்தில் நினைவுகூரத்தக்கது.

இல்லார்க்கு ஈதல்

தமிழ் மூதாட்டி ஆத்திசூடியில் பல இடங்களில் ஈதல் குறித்துப் பாடியுள்ளார். அறம் செய விரும்பு, ஈவது விலக்கேல், ஐயம் இட்டு உண், தானமது விரும்பு உள்ளிட்ட பல அறிவுரைகள் மூலம் ஈதல் குறித்து வலியுறுத்துகிறார். கொன்றை வேந்தனில், ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர், சை ஒத்து இருந்தால் ஐயம் இட்டு உண் என்று ஈதலின் அவசியத்தை எடுத்துரைக்கிறார்.

நல்வழியில், “சாதி இரண்டொழிய வேறில்லைஎனத் தொடங்குகின்ற பாடலில், “இட்டார் பெரியோர்; இடாதார்இழி குலத்தோர்என்றும், “ஆண்டாண்டுதோறும் அழுது புரண்டாலும்எனத் தொடங்கும் பாடலில், “இட்டு உண்டு இரும்எனவும் கூறி ஈதலின் மேன்மையை எடுத்துரைக்கிறார். பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்து வைத்துஎனத் தொடங்கும் பாடலில், பணத்தைப் பிறருக்கு ஈயாமல் சேர்த்து வைத்துக் கொள்ளும் மானிடரைப் பழிக்கின்றார்; மனிதன் இறந்த பின் யாரோ அனுபவிக்கப்போகின்ற அந்தப் பணத்தைச் சேர்த்துச் சேர்த்து வைத்துக்கொள்வதால் யாருக்கு என்ன பயன் என்று கேட்டு, ஈயாதோரை இடித்துரைக்கிறார்.

மேலும் மரம் பழுத்தால்எனத் தொடங்கும் பாடலில், “கரவாது அளிப்பரேல் உற்றார் உலகத் தவர்எனும் வரியின் மூலம், தேவையுடையோர் தம்மிடம் கேட்காத போதிலும், தேவையுடையோர் யாரெனத் தாமே கண்டறிந்து ஈதல் வேண்டும் என வலியுறுத்துகிறார்.

உழைத்துண்ணல்

ஒருவர் தமக்கான வாழ்வாதாரத்தை ஈட்டிக்கொள்ள உழைத்தல் அவசியமாகும். உழைப்பின்மூலமே ஒருவர் தம் வாழ்வில் உயர்வடைய முடியும். உழைப்பால் உய்யும் இவ்வையகம் எனும் முதுமொழிக்கேற்ப தமிழ் மூதாட்டி தம் பல்வேறு பாடல்கள்மூலம் உழைப்பின் முக்கியத்துவத்தை உலகோர்க்கு உணர்த்துகிறார். ஆத்தி சூடியில், கைவினை கரவேல், நெற்பயிர் விளைவு செய், பூமி திருத்தி உண், பொருள்தனைப் போற்றி வாழ் உள்ளிட்ட பாடல்கள் உழைப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கின்றன. கொன்றை வேந்தனில், அஃகமும் காசும் சிக்கெனத் தேடு, சீரைத் தேடின் ஏரைத் தேடு, திரைகடல் ஓடியும் திரவியம் தேடு, தேடாது அழிக்கின் பாடாய் முடியும் முதலிய அறநெறிப் பாடல்கள்மூலம் உழைப்பின் உயர்வையும் பொருளாதாரத்தைத் தேடுவதன் அவசியத்தையும் எடுத்துரைத்து உழைத்துண்ண வழிகாட்டுகிறார்.

ஆகுமானவற்றை உழைத்துப் பெறுவது கட்டாயக் கடமைகளுக்குப் பிறகுள்ள கடமையாகும்எனும் நபிகள் நாயகத்தின் பொய்யாமொழி இங்கு நினைவுகூரத்தக்கது.

மேலும் நல்வழியில், “கல்லானே ஆனாலும்எனத் தொடங்கும் பாடலில், ஒருவன் கல்லாதவனாக இருந்தாலும் அவனிடம் பணமிருந்தால் எல்லாரும் அவனைக் கொண்டாடுவர். பணமில்லாதவனை அவனுடைய மனைவியோ தாயோகூட மதிக்கமாட்டார்கள்; அவனுடைய எந்தக் கருத்தும் சபை ஏறாது எனக் கூறிப் பொருளாதாரத்தைத் தேடவேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்த்துகிறார்.

மணம் புரிந்து வாழ்தல்

ஓர் ஆண்மகன் தனக்கொரு பெண்ணைத் தேர்வுசெய்து, அவளை மணந்துகொண்டு அவளோடு இல்லறம் நடத்துவதே குடும்ப வாழ்க்கையாகும். தன் இன்ப துன்பங்களைப் பகிர்ந்துகொள்வதற்கான இனிய தோழியாக அவள் விளங்குவாள். இல்லறத்தை நல்லறமாய் நடத்த ஒவ்வோர் ஆணுக்கும் ஒரு மங்கை நல்லாள் துணையாக இருக்க வேண்டும் என்பதைத் தமிழ் மூதாட்டி தம் பாடல்கள் மூலம் வலியுறுத்துகிறார். இல்லாள் அகத்திருக்க இல்லாதது ஒன்றில்லைஎனும் மூதுரைப் பாடலில், இல்லாள் ஒருத்தி வீட்டிலிருந்தால் அவனுக்கு இல்லை என்று சொல்ல எதுவுமில்லை; எல்லா வளங்களையும் பெற்றவனைப் போன்றவனாகின்றான் என்ற கருத்தின்மூலம் இல்லற வாழ்வின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறார்.

மேலும், “நீறில்லா நெற்றி பாழ்எனத் தொடங்கும் நல்வழிப் பாடலில், “பாழே மடக்கொடி இல்லா மனைஎனும் வரியின்மூலம், பெண் இல்லாத வீடு பாழாகிவிடும் எனக் கூறி, இல்வாழ்க்கையின் முக்கியத்துவத்தை எடுத்தியம்புகிறார்.

மெல்லி நல்லாள் தோள்சேர்என ஆத்தி சூடியிலும் இல்லறம் அல்லது நல்லறம் அன்றுஎனக் கொன்றை வேந்தனிலும் எடுத்தியம்பி இல்லறம் ஏற்று நல்லறம் நடத்த வலியுறுத்துகிறார். திருமணம் எனது வழிமுறைஎனும் நபிகள் நாயகத்தின் பொன்மொழி இவ்விடத்தில் நினைவுகூரத்தக்கது.

இல்லாளை நல்லவளாய்த் தேர்ந்தெடுத்தல்

மணம் புரிந்து வாழ வேண்டும் என்று கூறுகின்ற எவரும் மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்எனும் முதுமொழியையும் கூற மறப்பதில்லை. ஒருவனுக்கு மனைவி சரியாக அமைந்துவிட்டால் அவ்வீட்டில் மகிழ்ச்சிக்குக் குறைவிருக்காது என்பது யாவரும் ஒத்துக்கொள்ளும் உண்மையாகும். அதற்கேற்பவே தமிழ் மூதாட்டி, மணம் புரிந்து வாழ வேண்டியதன் முக்கியத்துவத்தைத் தம் பாடல்களில் எடுத்தியம்பியதோடு நின்றுவிடாமல், இல்லாள் எப்படி இருக்கக் கூடாது என்பதையும் தெரிவிக்கிறார்.

கணவனின் சொற்படி நடக்காத பெண்ணாக இருந்தால் அவளோடு வாழ்வது கானகத்தில் வாழும் காட்டுப் புலியோடு குடும்பம் நடத்துவதற்கு ஒக்கும் என்ற கருத்தை, “இல்லாள் வலி கிடந்த மாற்றம் உரைக்குமேல் அவ்இல் புலி கிடந்த தூறாய் விடும்எனும் பாடல் வரிகளின்மூலம் எடுத்துரைக்கிறார்.

மேலும் கல்லாத மாந்தர்க்குக் கற்று உணர்ந்தார் சொல் கூற்றம்எனத் தொடங்கும் பாடலில், “கூற்றமே இல்லிற்கு இசைந்து ஒழுகாப் பெண்”-கணவனுக்குக் கட்டுப்பட்டு நடக்காதவள் தன் கணவனுக்கு இயமனைப் போன்றவள் எனக் கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து, “இழுக்கு உடைய பாட்டிற்கு இசை நன்றுஎனத் தொடங்கும் பாடலில், “பழிக்கஞ்சாத் தாரத்தின் நன்று தனி”- பழிக்கஞ்சாத பெண்ணை மனைவியாக ஏற்று இல்லறம் நடத்துவதைவிடத் தனியாக வாழ்ந்துவிடுவதே மேல் எனத் தெளிவுபட உரைக்கிறார்.

பெண்கள் நான்கு நோக்கங்களுக்காக மணமுடிக்கப்படுகிறார்கள். 1. அவளது செல்வத்திற்காக, 2. அவளுடைய குலத்திற்காக, 3. அவளது அழகிற்காக. 4. அவளது மார்க்க (நல்லொழுக்க)த்திற்காக. ஆகவே, மார்க்க (நல்லொழுக்க)ம் உடைய பெண்ணை மணந்துகொள்! (இல்லையேல்) உன்னிரு கைகளும் மண்ணாகட்டும்எனும் நபிகள் நாயகத்தின் அறவுரை நினைவுகூரத்தக்கது. (நூல்: நஸாயீ: 3178)

விதியை நம்புதல்

நடப்பவை யாவும் விதிப்படியேஎனும் முதுமொழிக்கேற்ப இவ்வுலகில் நடப்பவை யாவும் இறைவனின் விதிப்படியே நடக்கின்றன. எனவே வாழ்க்கையில் வெற்றி கிடைத்தாலும் தோல்வி ஏற்பட்டாலும் அவை இறைவனின் நியதிப்படிதான் நடக்கின்றன என்ற பக்குவம் வேண்டும். இல்லையேல் வீண் கவலை ஏற்பட்டு வாழ்க்கை சோகமானதாக மாறிவிடும். எனவே இறைவனின் விதியை நம்புவதே அனைவருக்கும் சாலச் சிறந்ததாகும்.

இது குறித்து தமிழ் மூதாட்டி தம் பாடல்களில் தெளிவாகவே எடுத்துரைக்கிறார். அடுத்து முயன்றாலும்எனத் தொடங்கும் மூதுரைப் பாடலில் ஒருவர் ஒரு செயலைச் சீக்கிரம் செய்து முடிக்க வேண்டுமென்பதற்காகத் தம்மை வருத்திக்கொண்டு அல்லும் பகலும் முயன்றாலும் அது நடக்க வேண்டிய நேரத்தில்தான் நடந்தேறும். உயர்ந்த மரங்களெல்லாம் உரிய பருவத்தில்தான் கனிகளைத் தருகின்றன. அதுபோலவே மனித முயற்சிக்குரிய பலன் அதற்குரிய நேரத்தில் திண்ணமாகக் கிட்டும். கிடைக்கவில்லையே என ஏங்கித் தவிக்கவோ தம்முயிரை மாய்த்துக்கொள்ளவோ கூடாது என்ற கருத்தை உள்ளடக்கித் தெளிவுபட உரைக்கிறார்.

மேலும் இல்வாழ்வில் ஈடுபட்டுள்ள பெண்கள் தம் இல்வாழ்க்கையை எண்ணியெண்ணிக் கவலைப்படுவதுண்டு. கேட்டதையெல்லாம் வாங்கிக்கொடுக்கும் நல்லதொரு கணவன் கிடைத்தும் வாழ்க்கை மகிழ்ச்சியாக இல்லையே எனத் துக்கப்படுவோர் உண்டு. சிலருக்கு நல்ல கணவன் அமைந்து, மிகக் குறுகிய காலத்திலேயே அவன் இறந்துவிடுவதும் உண்டு. அத்தகைய பெண்களுக்கு ஆறுதல் கூறுமுகமாக, “ஆழ அமுக்கி முகக்கினும்எனும் மூதுரைப் பாடலில், ஒரு வாளியைக் கடலுக்குள் எவ்வளவுதான் ஆழமாக அமுக்கி எடுத்தாலும் அதன் கொள்ளளவு எவ்வளவோ அவ்வளவுதான் அதனுள் நீர் இருக்கும். அதுபோலவே ஒரு பெண்ணுக்குப் பணக்காரக் கணவன் கிடைத்துவிட்டாலும், கேட்டதையெல்லாம் வாங்கிக் கொடுக்கும் கணவனே அமையப்பெற்றாலும் அவளது விதியில் எவ்வாறு எழுதப்பட்டுள்ளதோ அதன்படிதான் அவளின் வாழ்க்கை அமையும் என்று அறிவுரை பகர்கின்றார்; பெண்களின் மனதைத் தேற்றுகிறார். 

மேலும் எழுதியவாறேதான்எனும் மூதுரைப் பாடலில், எது விதியில் எழுதப்பட்டுள்ளதோ அதுதான் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் நடைபெறும். நாம் மனதில் எண்ணியதெல்லாம் நடைபெறாது எனக் கூறிக் கற்பனையில் சஞ்சரிக்கும் மாந்தர்களைத் தட்டியெழுப்புகிறார்.

இவ்வாறு சமுதாய மக்களுக்குத் தேவையான பல்வேறு அறநெறிக் கருத்துகளைத் தம் பாடல்கள்மூலம் சாறெடுத்துத் தமிழுலகிற்குத் தந்துள்ளார் தமிழ் மூதாட்டி. அவற்றின்மூலம் அவர் என்றென்றும் மக்கள் மனங்களில் நீடித்து வாழ்வாங்கு வாழ்ந்துகொண்டிருப்பார் என்பதில் ஐயமில்லை.

=(())=====(())======(())=


கருத்துகள் இல்லை: