புதன், 23 டிசம்பர், 2020

இம்மைத் தோட்டத்தில் செம்மையாய்ப் பயிரிடு|


---------------------------
மறுமைத் தோட்டத்தில் 
நிம்மதியாய் வாழ
இம்மைத் தோட்டத்தில்-நீ 
செம்மையாய்ப் பயிரிடு!

உன்வீட்டுத் தோட்டத்தைப்
பண்படுத்தாமல் விட்டுவிட்டால்
ஏதேதோ முளைக்கும். 
செப்பனிட்டு விதைபோட்டால்-நீ
எண்ணியது முளைக்கும்-அது
திண்ணமாய்த் தழைக்கும். 

உன் உள்ளத்தைப் பண்படுத்தி
உயர்வான நற்குணங்களை
உடனடியாய் விதைக்காவிடில்
கேடுகெட்ட குணங்களெல்லாம்
கேட்காமலே குடிபுகுந்துவிடும்; உனைக்
கேவலப்படுத்திவிடும்.  

அதிகாலைத் துயிலெழுந்து
நீர்பாய்ச்சச் செல்வான் உழவன். 
மறுமைத் தோட்டத்தில் 
மகிழ்ச்சியாய் வாழ நினைப்பவன்
அதிகாலைத் துயில்முறித்து
அல்லாஹ்வை அஞ்சியே 
அனுதினமும் தொழுவான். 

விதை போட்ட தோட்டத்தில் 
நீரின்றிப் பயிர்கள் அழியும். 
மறுமைத் தோட்டத்தில் 
நல்லறங்கள் இல்லையென்றால் 
நரகத்தில் மனித உடல் அழியும்.

வளர்ந்துவிட்ட பயிர்களிடையே 
வீணாக வளர்ந்தவற்றைக்   
களையெடுப்பான் உழவன்.
தன்னில் புகுந்துவிட்ட
அல்லாத பழக்கங்களைக்
களைந்திடுவான் தொழுவோன். 

பல நாட்கள் பாடுபட்டு 
பயிரிட்டு வளர்த்ததை
மகிழ்வோடு
அறுவடை செய்வான் உழவன்.
அல்லாஹ்வின் அன்பைப் பெற
அல்லும் பகலும் தொழுது 
நல்லறங்கள் பல செய்தோன்
நல்சொர்க்கத்தையே பெறுவான்.

பசித்தோர்க்கு உணவளித்தல்
ஆடையற்றோர்க்கு ஆடையணிவித்தல்
ஈந்து ஈந்து மகிழ்தல்
ஏழைக்கு உதவுதல்
துன்பத்தில் சிக்குண்டோருக்கு 
உதவிக்கரம் நீட்டுதல்
உள்ளிட்ட பயிர்களை
இம்மைத் தோட்டத்தில் விதைத்தால்
மறுமைத் தோட்டத்தில்
மகிழ்ச்சியோடு வாழலாம்.

 
-நூ. அப்துல் ஹாதி பாகவி
சென்னை
23.12.2020 07 05 1442  
==========================================

செவ்வாய், 22 டிசம்பர், 2020

அறிவுத் துறையில் ஒரு புரட்சி செய்


__________

முஸ்லிம் சமூகம் முன்னேற்றம் பெறுவதில் எல்லோருக்கும் ஆசை உண்டு. அதற்காக ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான யோசனையைச் சொல்லிவிட்டுச் சென்று விடுகின்றனர்.

ஆனால் அதற்காக ஆர்வத்தோடும் அக்கறையோடும் உழைத்திருக்கின்றார்களா என்றால் சிலரை வேண்டுமானால் சுட்டிக்காட்டலாம். பலர் தம் பேச்சோடு முடித்துக் கொள்கின்றனர்.

அறிவுசார் துறைகளில் இஸ்லாமியச் சமூகம் முன்னேற என்ன செய்ய வேண்டும் தெரியுமா?ஒவ்வொருவரும் தம்மைப் போன்று குறைந்தபட்சம் பத்துப் பேரையாவது உருவாக்க வேண்டும்.


ஒரு தலைசிறந்த பேச்சாளன் தன்னைப் போன்று பத்துப் பேரை உருவாக்க வேண்டும். ஓர் எழுத்தாளன் தன்னைப் போன்று பத்துப் பேரை உருவாக்க வேண்டும்.

ஒரு மொழிபெயர்ப்பாளன் தன்னைப் போன்று பத்துப் பேரை உருவாக்க வேண்டும். ஐ.ஏ.எஸ்., ஐ.பீ.எஸ்., ஐ.ஆர்.எஸ், ஐ.எஃப்.எஸ். உள்ளிட்ட அரசுத் துறைகளில் உள்ள முஸ்லிம்கள் தம்மைப் போன்று பத்துப் பேரை உருவாக்க முனைந்திருந்தால் இந்தச் சமூகம் எப்போதோ முன்னேறியிருக்கும்.


ஆனால் ஒவ்வொருவனும், தமக்குப் போட்டியாக இன்னொருவன் வந்துவிடக் கூடாது என்றுதான் நினைக்கிறான். ஒரு வேளை எவனாவது தானாகச் சிரமப்பட்டு மேலே வர முனைந்தாலும் அவனைக் கீழே தள்ளிவிடவே முயல்கிறான். இது தான் யதார்த்த நிலை.

பத்துப் பேரை உருவாக்குவது என்றால், புதிதாக விதை போட்டு, உரம் போட்டு வளர்க்க வேண்டும் என்று சொல்லவில்லை.

ஒவ்வொரு துறையிலும் முன்னேறுவதற்காக ஆங்காங்கே முஸ்லிம் இளைஞர்கள் வழி தெரியாமல் வேறெங்கோ முட்டி மோதிக் கொண்டிருப்பார்கள். அவர்களை இனமறிந்து, "தம்பி இந்த வழியில் சென்றால் இதை அடைய முடியாது. இந்த வழியில் செல்; எளிதாக வெற்றியடையலாம்; இன்னவரைச் சந்தி; உன் இலக்கை அடையலாம்" என்று வழிகாட்டுங்கள் போதும். அவன் தானாக முன்னேறி விடுவான்.

ஒரு தலை சிறந்த பேச்சாளனாகிய நீ, திறமைகளை வைத்துக்கொண்டு மேடை கிடைக்காமல் ஏக்கத்தோடு காத்திருப்பவனை இனங்கண்டு, அவனைப் பிறருக்கு அடையாளம் காட்டு. எனக்குப் பதிலாக இன்னவரை அழையுங்கள் என்று கூறு. அது போதும்.


ஒரு தலைசிறந்த மொழிபெயர்ப்பாளனாக உள்ள நீ, பிறருக்கு அக்கலையைக் கற்பித்து, அதன் நுட்பங்களைப் போதித்து உன்னைப் போல் பத்துப் பேரை உருவாக்கு. அது போதும். இந்தச் சமூகம் தானாக முன்னேறும்.

இப்படி ஒவ்வொரு துறையில் உள்ளோரும் தத்தம் துறைகளில் செய்யத் தொடங்கி விட்டால் நம் சமூகத்தின் முன்னேற்றம் வெகு தொலைவில் இல்லை.

பிறரைக் குறை சொன்னது போதும். கடந்தவை கடந்து விட்டன. இனி எதிர்காலத்தை எங்ஙனம் கட்டமைப்பது என்பதில் மட்டும் கவனம் செலுத்துவோம்.


"வருங்காலத்தில் நான் என்னைப் போல் குறைந்தபட்சம் பத்துப் பேரையாவது உருவாக்கி, இந்தச் சமூகத்திற்கு அர்ப்பணித்து விட்டுத்தான் ஓய்வேன்" என்று ஒவ்வொருவரும் இந்நாளில் உறுதி ஏற்போம்.


அன்புடன்
நூ.அப்துல் ஹாதி பாகவி
20/12/2020
04/05/1442
____________