புதன், 23 டிசம்பர், 2020

இம்மைத் தோட்டத்தில் செம்மையாய்ப் பயிரிடு|


---------------------------
மறுமைத் தோட்டத்தில் 
நிம்மதியாய் வாழ
இம்மைத் தோட்டத்தில்-நீ 
செம்மையாய்ப் பயிரிடு!

உன்வீட்டுத் தோட்டத்தைப்
பண்படுத்தாமல் விட்டுவிட்டால்
ஏதேதோ முளைக்கும். 
செப்பனிட்டு விதைபோட்டால்-நீ
எண்ணியது முளைக்கும்-அது
திண்ணமாய்த் தழைக்கும். 

உன் உள்ளத்தைப் பண்படுத்தி
உயர்வான நற்குணங்களை
உடனடியாய் விதைக்காவிடில்
கேடுகெட்ட குணங்களெல்லாம்
கேட்காமலே குடிபுகுந்துவிடும்; உனைக்
கேவலப்படுத்திவிடும்.  

அதிகாலைத் துயிலெழுந்து
நீர்பாய்ச்சச் செல்வான் உழவன். 
மறுமைத் தோட்டத்தில் 
மகிழ்ச்சியாய் வாழ நினைப்பவன்
அதிகாலைத் துயில்முறித்து
அல்லாஹ்வை அஞ்சியே 
அனுதினமும் தொழுவான். 

விதை போட்ட தோட்டத்தில் 
நீரின்றிப் பயிர்கள் அழியும். 
மறுமைத் தோட்டத்தில் 
நல்லறங்கள் இல்லையென்றால் 
நரகத்தில் மனித உடல் அழியும்.

வளர்ந்துவிட்ட பயிர்களிடையே 
வீணாக வளர்ந்தவற்றைக்   
களையெடுப்பான் உழவன்.
தன்னில் புகுந்துவிட்ட
அல்லாத பழக்கங்களைக்
களைந்திடுவான் தொழுவோன். 

பல நாட்கள் பாடுபட்டு 
பயிரிட்டு வளர்த்ததை
மகிழ்வோடு
அறுவடை செய்வான் உழவன்.
அல்லாஹ்வின் அன்பைப் பெற
அல்லும் பகலும் தொழுது 
நல்லறங்கள் பல செய்தோன்
நல்சொர்க்கத்தையே பெறுவான்.

பசித்தோர்க்கு உணவளித்தல்
ஆடையற்றோர்க்கு ஆடையணிவித்தல்
ஈந்து ஈந்து மகிழ்தல்
ஏழைக்கு உதவுதல்
துன்பத்தில் சிக்குண்டோருக்கு 
உதவிக்கரம் நீட்டுதல்
உள்ளிட்ட பயிர்களை
இம்மைத் தோட்டத்தில் விதைத்தால்
மறுமைத் தோட்டத்தில்
மகிழ்ச்சியோடு வாழலாம்.

 
-நூ. அப்துல் ஹாதி பாகவி
சென்னை
23.12.2020 07 05 1442  
==========================================

செவ்வாய், 22 டிசம்பர், 2020

அறிவுத் துறையில் ஒரு புரட்சி செய்


__________

முஸ்லிம் சமூகம் முன்னேற்றம் பெறுவதில் எல்லோருக்கும் ஆசை உண்டு. அதற்காக ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான யோசனையைச் சொல்லிவிட்டுச் சென்று விடுகின்றனர்.

ஆனால் அதற்காக ஆர்வத்தோடும் அக்கறையோடும் உழைத்திருக்கின்றார்களா என்றால் சிலரை வேண்டுமானால் சுட்டிக்காட்டலாம். பலர் தம் பேச்சோடு முடித்துக் கொள்கின்றனர்.

அறிவுசார் துறைகளில் இஸ்லாமியச் சமூகம் முன்னேற என்ன செய்ய வேண்டும் தெரியுமா?ஒவ்வொருவரும் தம்மைப் போன்று குறைந்தபட்சம் பத்துப் பேரையாவது உருவாக்க வேண்டும்.


ஒரு தலைசிறந்த பேச்சாளன் தன்னைப் போன்று பத்துப் பேரை உருவாக்க வேண்டும். ஓர் எழுத்தாளன் தன்னைப் போன்று பத்துப் பேரை உருவாக்க வேண்டும்.

ஒரு மொழிபெயர்ப்பாளன் தன்னைப் போன்று பத்துப் பேரை உருவாக்க வேண்டும். ஐ.ஏ.எஸ்., ஐ.பீ.எஸ்., ஐ.ஆர்.எஸ், ஐ.எஃப்.எஸ். உள்ளிட்ட அரசுத் துறைகளில் உள்ள முஸ்லிம்கள் தம்மைப் போன்று பத்துப் பேரை உருவாக்க முனைந்திருந்தால் இந்தச் சமூகம் எப்போதோ முன்னேறியிருக்கும்.


ஆனால் ஒவ்வொருவனும், தமக்குப் போட்டியாக இன்னொருவன் வந்துவிடக் கூடாது என்றுதான் நினைக்கிறான். ஒரு வேளை எவனாவது தானாகச் சிரமப்பட்டு மேலே வர முனைந்தாலும் அவனைக் கீழே தள்ளிவிடவே முயல்கிறான். இது தான் யதார்த்த நிலை.

பத்துப் பேரை உருவாக்குவது என்றால், புதிதாக விதை போட்டு, உரம் போட்டு வளர்க்க வேண்டும் என்று சொல்லவில்லை.

ஒவ்வொரு துறையிலும் முன்னேறுவதற்காக ஆங்காங்கே முஸ்லிம் இளைஞர்கள் வழி தெரியாமல் வேறெங்கோ முட்டி மோதிக் கொண்டிருப்பார்கள். அவர்களை இனமறிந்து, "தம்பி இந்த வழியில் சென்றால் இதை அடைய முடியாது. இந்த வழியில் செல்; எளிதாக வெற்றியடையலாம்; இன்னவரைச் சந்தி; உன் இலக்கை அடையலாம்" என்று வழிகாட்டுங்கள் போதும். அவன் தானாக முன்னேறி விடுவான்.

ஒரு தலை சிறந்த பேச்சாளனாகிய நீ, திறமைகளை வைத்துக்கொண்டு மேடை கிடைக்காமல் ஏக்கத்தோடு காத்திருப்பவனை இனங்கண்டு, அவனைப் பிறருக்கு அடையாளம் காட்டு. எனக்குப் பதிலாக இன்னவரை அழையுங்கள் என்று கூறு. அது போதும்.


ஒரு தலைசிறந்த மொழிபெயர்ப்பாளனாக உள்ள நீ, பிறருக்கு அக்கலையைக் கற்பித்து, அதன் நுட்பங்களைப் போதித்து உன்னைப் போல் பத்துப் பேரை உருவாக்கு. அது போதும். இந்தச் சமூகம் தானாக முன்னேறும்.

இப்படி ஒவ்வொரு துறையில் உள்ளோரும் தத்தம் துறைகளில் செய்யத் தொடங்கி விட்டால் நம் சமூகத்தின் முன்னேற்றம் வெகு தொலைவில் இல்லை.

பிறரைக் குறை சொன்னது போதும். கடந்தவை கடந்து விட்டன. இனி எதிர்காலத்தை எங்ஙனம் கட்டமைப்பது என்பதில் மட்டும் கவனம் செலுத்துவோம்.


"வருங்காலத்தில் நான் என்னைப் போல் குறைந்தபட்சம் பத்துப் பேரையாவது உருவாக்கி, இந்தச் சமூகத்திற்கு அர்ப்பணித்து விட்டுத்தான் ஓய்வேன்" என்று ஒவ்வொருவரும் இந்நாளில் உறுதி ஏற்போம்.


அன்புடன்
நூ.அப்துல் ஹாதி பாகவி
20/12/2020
04/05/1442
____________

திங்கள், 23 நவம்பர், 2020

இறைத்தூதருக்கு இச்சமுதாயம் செய்ய வேண்டிய கடமைகள்

 

-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், தாம் அனுப்பப்பட்ட சமுதாய மக்கள் நலனுக்காகத் தம்  வாழ்க்கையையே அர்ப்பணித்தார்கள். இச்சமுதாய மக்களுள் யாரும் நரகத்திற்குச் சென்றுவிடக் கூடாது என்பதற்காகப் பெருமுயற்சி செய்தார்கள். எல்லோரும் இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்று, ஏகத்துவ உறுதிமொழியை மனதாரச் சொல்லிவிட வேண்டுமென்பதற்காக அல்லும் பகலும் பெருமுயற்சி செய்தார்கள். அதை ஏற்காதவர்களை எண்ணியெண்ணிக் கவலையடைந்தார்கள். அவர்களின் பெருங்கவலையைக் கண்ட அல்லாஹ், “(நபியே!) இவ்வேதத்தை அவர்கள் நம்பிக்கை கொள்ளாவிட்டால் அவர்களின் போக்கிற்காகக் கடும் துக்கப்பட்டு உம்மைநீரே மாய்த்துக் கொள்வீர் போலும்!” (18: 6) என்று திருக்குர்ஆனில் பதிவு செய்துள்ளான்.

எல்லா இறைத்தூதர்களுக்கும் தனிப்பட்ட முறையில் ஒரு சிறப்புப் பிரார்த்தனையைக் கொடுப்பது அல்லாஹ்வின் வழக்கம். அவ்வாறு இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட சிறப்புப் பிரார்த்தனையைப் பயன்படுத்தித் தம் தேவையை நிறைவேற்றிக்கொள்ளாமல், அதைத் தமது சமுதாய மக்களின் மறுமை நலனுக்காகப் பத்திரப்படுத்தி வைத்துள்ளார்கள்.

இந்த அளவிற்குத் தம் சமுதாய மக்கள்மீது பேரன்பு கொண்டுள்ள இறைத்தூதருக்கு இச்சமுதாய மக்களாகிய நாம் செய்ய வேண்டிய கடமைகள் யாவை என்ற வினா நம்முன் நிற்கிறது. அத்தகைய கடமைகளுள் மிக முக்கியமானவை மூன்று உள்ளன. 1. அவர்களை நம் உயிரைவிட மேலாக நேசித்தல், 2. அவர்களின் வழிமுறைகளைப் பின்பற்றுதல், 3. அவர்கள்மீது அதிகமாக ஸலவாத் ஓதுதல் ஆகியவையாகும்.

நம் உயிரைவிட மேலாக நாம் ஏன் அவர்களை நேசிக்க வேண்டும் என்று கேட்கலாம். அவ்வாறு  நேசித்தால்தான் நம்முடைய இறைநம்பிக்கையே- ஈமானே- முழுமையடையும்.

அல்லாஹ் கூறுகின்றான்: இறைநம்பிக்கையாளர்களுக்கு அவர்களுடைய உயிர்களைவிட (நமது தூதரான) நபிதான் மிக்க மேலானவர். (33: 6)

உங்களுள் ஒருவருக்கு அவருடைய  தந்தை, அவருடைய பிள்ளை, ஏனைய மக்கள் அனைவரையும்விட நான் நேசத்திற்குரியவனாக ஆகாத வரை அவர் (உண்மையான) இறைநம்பிக்கை (ஈமான்) கொண்டவர் ஆகமாட்டார்என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  கூறினார்கள். (நூல்: புகாரீ: 15)

மேற்கண்ட திருக்குர்ஆன் வசனமும் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பொன்மொழியும் சான்றுக்காக ஒவ்வொன்று மட்டும் கூறப்பட்டுள்ளது. இதுபோல் திருக்குர்ஆனின் பல வசனங்களில் இந்த இறைத்தூதரை நேசித்தல், கண்ணியப்படுத்துதல், உதவி செய்தல், குரலைத் தாழ்த்திப் பேசுதல், முந்திக்கொண்டு கருத்துச் சொல்லாதிருத்தல் உள்ளிட்ட பலவற்றையும் அல்லாஹ் கூறியுள்ளான். மேலும் தம்மை மக்கள் நேசிக்க வேண்டும் என்பது குறித்து இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் பல்வேறு தருணங்களில் வலியுறுத்திக் கூறியுள்ளார்கள். 

அல்லாஹ்வின் தூதர்மீது அவர்கள்தம் தோழர்கள் எந்த அளவிற்கு அன்பும் நேசமும் கொண்டிருந்தார்கள் என்பதை வரலாற்றில் காண்கிறோம். ஹுதைபிய்யா ஒப்பந்தத்தின்போது உர்வா பின் மஸ்ஊத் என்பவர் குரைஷிகள் சார்பாகப் பேச்சுவார்த்தை நடத்த இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்திருந்தார். அப்போது பல விஷயங்களைப் பேசியபின், “இந்த முகங்களையெல்லாம் பார்த்தால், உமக்கு ஒரு துன்பம் ஏற்படும்போது உம்மை விட்டுவிட்டு ஓடிவிடுவார்கள் என்றுதான் தெரிகிறது” என்றார். அதைக் கேட்ட அபூபக்ர் ஸித்தீக் ரளியல்லாஹு அன்ஹு, “லாத் உடைய அந்தரங்க உறுப்பைச் சப்புடா. நாங்கள் எங்களுடைய இறைத்தூதரை விட்டுவிட்டு ஓடிவிடுவோம் என்றா சொல்கிறாய்?” என மிகுந்த சினத்துடன் கேட்டார்கள். அவர்கள் இதற்கு முன்பும் இதற்குப் பின்பும் இதுபோன்று சினம் கொண்டதில்லை. அந்த அளவிற்கு இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்மீது  நேசம் கொண்டிருந்தார்கள்.

உர்வா பின் மஸ்ஊத் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அருகில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது, அவர் நபியவர்களின் தாடியைப் பிடித்துத் தடவினார். பாதுகாப்பிற்காக நபியவர்களின் அருகில் நின்றுகொண்டிருந்த முஃகீரா பின் ஷுஅபா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அவருடைய கையைத் தமது வாளால் தட்டிவிட்டார்கள். இரண்டாவது முறையும் அவர் நபியவர்களின் தாடியைப் பிடித்துத் தடவியபோது தமது வாளால் தட்டிவிட்டார்கள். மூன்றாம் முறை பிடித்தபோது, உடனே அவர்கள் தமது வாளால் அவரது கையைத் தட்டிவிட்டு, “கையை எடுத்துவிடு. இல்லையேல் உன் கை உன்னிடம் திரும்பாதுஎன்று கடும் சினத்தோடு கூறினார்கள். இந்த அளவிற்கு   இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்மீது நேசம் கொண்டிருந்தார்கள். விரும்புவோர் புகாரீ எனும் நபிமொழித் தொகுப்பு நூலில் விரிவாகப் படித்துக்கொள்ளலாம். (2731)

உஹுதுப் போர் மிகக் கடினமான போர். முஸ்லிம்கள் பல்வேறு துன்பங்களைச் சந்தித்தார்கள். முஸ்லிம்கள் பலர் ஷஹீதாக்கப்பட்டார்கள். அந்தப் போரின் இடையே எதிரிகளின் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் முஸ்லிம்கள் அங்குமிங்கும் ஓடினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அருகில் யாருமில்லாத நிலை ஏற்பட்டது. அதையறிந்த தல்ஹா ரளியல்லாஹு அன்ஹு நபியவர்கள்மீது எதிரிகள் எய்த அம்புகளையெல்லாம் தம் உடலைக் கேடயமாக்கி, அவர்களைப் பாதுகாத்தார்கள்.  பற்பல அம்புகள் அவர்களின் உடலைத் துளைத்தன. தம் உயிரையே பணயம் வைத்து நபியவர்களைக் காத்தார்கள். இதுதான் அன்பின் வெளிப்பாடு; நேசத்தின் அடையாளம்.

நபிவழியை-சுன்னத்தை-ப் பின்பற்றுதல்: இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்மீது நேசம் கொண்டோர் அவர்கள் காட்டித்தந்த வழிமுறைகளை-வாழ்க்கை நெறிமுறைகளை அப்படியே பின்பற்ற வேண்டும். அதுதான் அவர் நபியவர்கள்மீது நேசம் கொண்டிருப்பதற்கான அடையாளமாகும். வெறுமனே வாயளவில் சொன்னால் மட்டும் போதாது. நம்முடைய வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் அவர்களுடைய வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.  

ஒருவர் நம்மைப் பார்த்ததும் இவர் ஒரு முஸ்லிம்என்று தெரிகின்ற விதத்தில் நம் தோற்றத்தை அமைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் நாம் வழியில் காணும் ஒவ்வொரு  முஸ்லிமுக்கும் ஸலாம்-முகமன் கூற வேண்டும். நாம் தும்மினால் அல்ஹம்து லில்லாஹ் கூறுதல், பிறர் தும்மி அல்ஹம்து லில்லாஹ் கூறினால் அதற்குப் பதிலளிக்குமுகமாக யர்ஹமுகல்லாஹ் கூறுதல், கொட்டாவி விட்டால் அஊது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம் கூறுதல், சாப்பிடுமுன்-சாப்பிட்டபின்-தூங்குமுன்-தூங்கி எழுந்தபின்-கழிவறைக்குள் நுழையுமுன்-அங்கிருந்து வெளியே வந்தபின்- முதலான தருணங்களில் துஆ ஓதுதல்- இவை யாவும் நபிவழிகளாகும்.

மஸ்ஜிதுக்குள் நுழையும்போது நபியவர்களுக்கு ஸலாம் கூறி, பின்னர் அல்லாஹும்ம ஃப்தஹ்லீ அப்வாப ரஹ்மத்திக என்று துஆ ஓதுவதும், பாங்கு சொல்லப்படும்போது அவ்வார்த்தைகளையே பதிலாகக் கூறுவதும், அதன்பின் நபியவர்கள்மீது ஸலவாத் ஓதி, அவர்களுக்காக வசீலாஎனும் உயர்பதவியை அல்லாஹ்விடம் கேட்டு துஆ செய்வதும், மனைவியிடம் நல்ல முறையில் நடந்துகொள்வதும், பிள்ளைகளிடம் அன்போடு நடந்து கொள்வதும், உறவினர்களைப் பேணி வாழ்வதும், அண்டை வீட்டாரை அரவணைத்து வாழ்வதும், துன்பங்களைச் சகித்துக்கொள்வதும், பிறரைப் பார்க்கும்போது முகமலர்ச்சியோடு சந்திப்பதும், கடமையான தொழுகைகளை நிறைவேற்றியபின் சுன்னத்தான தொழுகைகளைத் தொழுவதும், வியாபாரத்தை நேர்மையாகச் செய்வதும், கடன் வாங்கினால் குறிப்பிட்ட தவணைக்காலத்தில் உரிய முறையில் நிறைவேற்றுவதும், கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதும், பெற்றோருக்குப் பணிவிடை செய்வதும் நபிவழிகளாகும்.

பெண்கள் தம் கணவருக்குக் கட்டுப்பட்டு நடப்பதும், அவரை முகமலர்ச்சியோடு வரவேற்பதும், மகிழ்ச்சிப்படுத்துவதும், அவருடைய கட்டளைகளுக்குப் பணிவதும், அவருக்குப் பணிவிடைகள் செய்வதும், அவருடைய பொருள்களைப் பாதுகாப்பதும், பிள்ளைகளைப் பேணி வளர்ப்பதும் அவர்கள் நபியவர்கள்மீது கொண்டுள்ள அன்பை வெளிப்படுத்துவதற்கான அடையாளங்களாகும்.

ஸலவாத் கூறுதல்: நபியவர்கள்மீது நாம் ஒவ்வொரு நாளும் ஸலவாத் கூறுமுகமாகவே அல்லாஹ் ஆக்கியுள்ளான். அவர்களின் பெயர் கூறாமல் அவர்கள்மீது ஸலவாத் ஓதாமல் தொழுகை என்பதே கிடையாது.  அவர்களின் பெயர் கூறப்படாமல் பாங்கும் இகாமத்தும் கிடையாது; கலிமாவும் இல்லை.

அல்லாஹ் கூறுகின்றான்: திண்ணமாக அல்லாஹ்வும் அவனுடைய வானவர்களும் நபிமீது ஸலவாத்துச் சொல்கின்றார்கள். ஆகவே, இறைநம்பிக்கை கொண்டோரே! நீங்களும் அவர்கள்மீது ஸலவாத்துச் சொல்லி ஸலாமும் கூறிக் கொண்டிருங்கள். (33: 56) இந்த இறைவசனத்தின்படி அவர்களுக்கு முகமன் கூறுவதும் அவர்கள்மீது ஸலவாத் ஓதுவதும் நம் கடமையாகும். அஸ்ஸலாமு அலைக்கும் யா ரசூலல்லாஹ்என்று நாம் கூறினால் அதை எடுத்துச் சென்று அவர்களிடம் சமர்ப்பிக்கும் வானவர்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றார்கள்.  அவர்கள் அதை எடுத்துச் சென்று இன்னார் உங்களுக்கு ஸலாம் சொன்னார் என்று தெரிவித்துவிடுவார்கள்.  இதனால்தான் நாம் பள்ளிவாசலுக்குள் நுழைகின்றபோது அவர்களுக்கு ஸலாம்-முகமன் கூற வேண்டுமென அறிவுறுத்தியுள்ளார்கள்.

ஆகவே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நம் உயிரைவிட மேலாக நேசிப்பதும் நம் வாழ்வின் ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் வழிமுறையைப் பேணி நடப்பதும், அவர்கள்மீது ஸலவாத் ஓதுவதும் நம் ஒவ்வொருவரின் கடமையாகும். உயர்ந்தோன் அல்லாஹ் நம் அனைவருக்கும் அத்தகைய நற்பேற்றை நல்குவானாக.

=========================







பெண்மையைப் போற்றிய பெருமான் நபி!

 


-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

--------------------------------------------------

பெண் குழந்தை பிறந்தவுடன் அதை உயிருடன் புதைக்கும் பழக்கம் அரபியர்களிடம் பரவலாகக் காணப்பட்டது. பெண் குழந்தை பிறந்துவிட்டால் அக்குழந்தையை இழிநிலையோடு வைத்துக்கொள்ளலாமா? அல்லது புதைத்துவிடலாமா? என்று நினைப்பான். மக்கள் கேலி செய்வதையும் ஏளனம் செய்வதையும் எண்ணிப் பார்த்து, அக்குழந்தையை உயிருடன் புதைத்துவிடுவான். அத்தகைய கல்நெஞ்சினர்களாக இருந்த அரபியர்கள் மத்தியில் இறைத்தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பிறந்தார்கள்.

அன்றைய மக்களின் மனோநிலையை அல்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது: அவர்களுள் ஒருவனுக்குப் பெண் குழந்தை பிறந்ததாக நற்செய்தி கூறப்பட்டால் அவனுடைய முகம் (துக்கத்தால்) கறுத்து, கோபத்தை விழுங்குகிறான். (பெண் குழந்தை பிறந்ததென) அவனுக்குக் கூறப்பட்ட இந்தக் கெட்ட செய்தியைப் பற்றி (வெறுப்படைந்து) இழிவுடன் "அதை வைத்திருப்பதா? அல்லது (உயிருடன்) மண்ணில் புதைத்து விடுவதா?'' என்று கவலைப்பட்டு மக்கள்முன் வராது மறைந்துகொண்டு அலைகிறான். (16: 58-59)

அவ்வாறு உயிருடன் புதைக்கின்ற மனிதாபிமானமற்ற செயலைக் கண்டிக்கும் விதமாக அல்லாஹ் மற்றோர் இடத்தில் இவ்வாறு சொல்கிறான்: (உயிருடன்) புதைக்கப்பட்ட பெண் குழந்தைகளை நோக்கி, "எந்தக் குற்றத்திற்காக நீங்கள் (உயிருடன் புதைக்கப்பட்டுக்) கொலை செய்யப்பட்டீர்கள்?'' என்று கேட்கப்படும். (81: 8-9)

இத்தகைய தருணத்தில்தான் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மக்கள் மத்தியில் ஏகத்துவப் பிரச்சாரம் மேற்கொண்டார்கள். அத்தோடு பெண் குழந்தைகளைக் கொல்லாதீர்கள் என்ற இறைவசனங்களையும் எடுத்துரைத்தார்கள். மேலும் இவ்வாறு கூறினார்கள்: "யார் மூன்று மகள்களைப் பேணி வளர்த்து, அவர்களுக்கு ஒழுக்கம் கற்பித்து, அவர்களுக்குத் திருமணம் செய்துவைத்து, அவர்களிடம் நல்லமுறையில் நடந்துகொண்டாரோ அவருக்குச் சொர்க்கம் உண்டு.'' (நூல்: அபூதாவூத்: 5147) 

"யார் இரண்டு பெண்பிள்ளைகளைப் பேணி வளர்த்தாரோ அவரும் நானும் இவ்வாறு சொர்க்கத்தில் நுழைவோம்'' என்று கூறித் தம் இரண்டு விரல்களைக் காட்டினார்கள். (நூல்: திர்மிதீ: 1914)

பெண் பிள்ளைகளை மட்டுமின்றி, ஒரு பெண் திருமணத்திற்குப் பின் குழந்தையை ஈன்றெடுத்தால் தாய் எனும் உயரிய மதிப்பைப் பெறுகிறாள். எனவே அவள் ஈன்றெடுத்த பிள்ளைகள் அவளை மதிக்க வேண்டும் என்ற அடிப்படையில், "தாயின் காலடியில் சொர்க்கம் உண்டு'' என்று கூறிப் பெண்ணை மேன்மைப்படுத்தினார்கள். இதன் மூலம், ஓர் ஆண் சொர்க்கத்தை அடைய, தாய் எனும் பெண்ணைப் போற்றி மதித்து அவருக்குப் பணிவிடைகள் செய்ய வேண்டுமென்ற நிபந்தனையை விதித்தார்கள் நபிகள் நாயகம்.

மேலும் பெற்றெடுத்த தாயைப் பற்றித் திருக்குர்ஆனில் அல்லாஹ் கூறியுள்ள செய்தியையும் மக்கள் மத்தியில் எடுத்தோதினார்கள்: உங்களிடம் இருக்கும் அவர்களுள் ஒருவரோ இருவருமோ முதுமையை அடைந்துவிட்டபோதிலும் அவர்களை விரட்டவும் வேண்டாம்; அவர்களை (நிந்தனையாகச்) "சீ' என்றும் சொல்ல வேண்டாம். அவர்களிடம் (எதைக் கூறியபோதிலும்) மிக்க மரியாதையாக(வும் அன்பாகவுமே) பேசுங்கள். (17: 23)

பெண்களின் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பல்வேறு தருணங்களில் ஆர்வமூட்டிக் கூறியுள்ளார்கள். கல்வியைத் தேடுவது ஒவ்வொரு முஸ்லிம் (ஆண்-பெண்) மீதும் கடமையாகும். (நூல்: இப்னுமாஜா: 224)

பெண்களைப் போகப்பொருளாக மட்டுமே அக்கால மக்கள் கருதிவந்த நேரத்தில், அவர்களை நிர்ப்பந்தப்படுத்தி அடையக்கூடாது; அவர்களை விபச்சாரத்திற்காக நிர்ப்பந்தப்படுத்தக்கூடாது என்றெல்லாம் திருக்குர்ஆன் கூறியது. அவர்களின் கற்பை அடைய வேண்டுமெனில், அவர்களுக்குரிய மஹ்ரை (மணக்கொடையை) உரிய முறையில் வழங்கி, முறைப்படி திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற திருக்குர்ஆனின் கட்டளையை எடுத்துரைத்து அம்மக்களைச் சீர்படுத்தினார்கள்.    

திருக்குர்ஆன் கூறுகிறது: நீங்கள் (திருமணம் செய்துகொண்ட) பெண்களுக்கு அவர்களுடைய "மஹரை' (மணக்கொடையை)க் கண்ணியமான முறையில் கொடுத்துவிடுங்கள். (4: 4)

மணப்பெண் வீட்டாரிடமிருந்து இயன்றதைக் கறந்துவிடுவோர் இன்றும் உள்ளனர். சகோதரச் சமுதாயத்தைச் சார்ந்த பெண்களுக்குச் சொத்துரிமை இல்லாத காலக் கட்டத்தில் உருவானதுதான் வரதட்சணை எனும் பெண்களுக்கு எதிரான பழக்கம். அப்பழக்கம் பெண்களுக்குச் சொத்துரிமை உண்டு என்று சட்டமியற்றப்பட்ட பிறகும் தொடர்வது கவலைக்குரியதாகும். சகோதரச் சமுதாயத்தோடு சேர்ந்து வாழ்கின்ற முஸ்லிம்களுக்கும் அப்பழக்கம் தொற்றிக்கொண்டது. இஸ்லாமிய ஷரீஅத் சட்டத்தை அறியாத முஸ்லிம்கள் பெண்வீட்டாரிடமிருந்து வரதட்சணை பெற்றுக்கொண்டிருக்கிறார்கள். அதேவேளையில் இஸ்லாமிய ஷரீஅத் சட்டங்களை அறிந்த முஸ்லிம்கள் மணப்பெண்ணுக்கு உரிய மணக்கொடையைக் கொடுத்தே திருமணம் செய்துவருகின்றனர். இன்று இப்பழக்கம் பரவலாக அறியப்பட்டுள்ளதால் பெரும்பாலோர் மணக்கொடை கொடுத்தே மணம்புரிகின்றனர். இது இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியுள்ள உயர்வும் மேன்மையும் ஆகும்.

பிறப்புரிமை, சொத்துரிமை, கல்வி கற்கும் உரிமை, வாக்குரிமை, நடமாடும் உரிமை உள்ளிட்ட பல்வேறு உரிமைகளை இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியுள்ளது. இவை அனைத்தும் இன்று நேற்றல்ல, பதினைந்து நூற்றாண்டுகளாக நடைமுறையில் இருந்து வருகின்றன.

யூதர்களும் கிறிஸ்தவர்களும் பெண்களை அவர்கள்தம் மாதவிடாய்க் காலத்தில் ஒதுக்கி வைத்தனர். அது அவர்களுக்கு மனத்தளவில் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியது. இன்றும் அப்பழக்கம் அவர்களிடம் இருந்து வருகின்றது. ஆனால் மாதவிடாய்க் காலத்தில் கணவன்-மனைவி உடலுறவு கொள்வதைத் தவிர மற்றெல்லாவற்றிலும் அவர்கள் இருவரும் சேர்ந்து இருப்பதில் தவறில்லை என்று திருக்குர்ஆன் சட்டமியற்றியது. அதற்கேற்ப அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தம் மனைவியரோடு இணைந்து இணக்கமாகவே வாழ்ந்துள்ளார்கள் என்பதை இஸ்லாமிய வரலாற்றில் காண்கிறோம்.

இது குறித்து அவர்கள்தம் அன்பு மனைவி ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா இவ்வாறு கூறுகிறார்: எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும்போது நான் (ஏதேனும் பானத்தைப்) பருகிவிட்டு அதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கொடுப்பேன். அப்போது அவர்கள் நான் வாய் வைத்த இடத்தில் தமது வாயை வைத்து அருந்துவார்கள். மாதவிடாய் ஏற்பட்டிருந்த நான் இறைச்சியுள்ள எலும்புத் துண்டைக் கடித்துவிட்டு அதை நபியவர்களிடம் கொடுப்பேன். நான் வாய் வைத்த இடத்தில் அவர்கள் தமது வாயை வை(த்துப் புசி)ப்பார்கள். (நூல்: முஸ்லிம்: 505)

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் (பள்ளிவாசலில் இஃதிகாஃபில் இருக்கும்போது) அறையிலிருக்கும் என் பக்கம் தமது தலையை நீட்டுவார்கள். மாதவிடாய் ஏற்பட்டுள்ள நிலையிலும் நான் அவர்களுக்குத் தலை வாரிவிடுவேன் என்று ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா கூறினார்கள். (நூல்: முஸ்லிம்: 500) எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும்போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என் மடியில் தலை வைத்துப் படுத்துக்கொண்டு குர்ஆன் ஓதுவார்கள் என்று ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா கூறினார்கள். (நூல்: முஸ்லிம்: 506)

அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பள்ளிவாசலில் (இஃதிகாஃப்) இருந்து கொண்டிருந்தபோது (தம் துணைவியாரிடம்), "ஆயிஷா! அந்தத் துணியை எடுத்துத் தா!'' என்றார்கள். ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, "எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுள்ளதே!'' என்றார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், "மாதவிடாய் உனது கையிலில்லை'' என்று சொன்னார்கள். அதையடுத்து அந்தத் துணியை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா எடுத்துக் கொடுத்தார்கள். (நூல்: முஸ்லிம்: 504)

இவ்வாறு பல்வேறு நபிமொழிகள் காணப்படுகின்றன. அவை அனைத்தும் பெண்களின் மாதவிடாய்க் காலத்தில் அவர்களை ஒதுக்காமலும் அந்நியப்படுத்தாமலும் அவர்களோடு அண்மித்து வாழ வேண்டும் என்று உணர்த்துகின்றன. இவற்றைப் படிக்கின்ற யாரும் நபியவர்கள் பெண்களுக்குக் கொடுத்திருந்த முக்கியத்துவத்தை விளங்கிக்கொள்ளலாம்.

பெண்களுக்கான ஆடை அணியும் பழக்கம் முறைகேடாக இருந்த அக்காலத்தில் பெண்கள் ஆண்களுக்குக் காட்சிப்பொருளாகக் காணப்பட்டனர். ஆகவே அவர்களின் ஆடை அணியும் முறையைச் சீர்படுத்தி, அவர்கள் கண்ணியமான முறையில் ஆடை அணியும் பழக்கத்தை ஏற்படுத்தியது இஸ்லாம். அன்று முதல் இன்று வரை இஸ்லாமியப் பெண்களின் ஆடை குறித்துப் பல்வேறு விமர்சனங்கள் வந்தவண்ணம் இருக்கின்றன. ஆனால் அதேவேளையில் பெண்களுக்கெதிரான குற்றங்கள் இன்று மலிந்து காணப்படுவது கண்கூடு. அதற்கு முக்கியக் காரணங்களுள் ஒன்று அவர்களின் உடலுறுப்புகள் கவர்ச்சியாக வெளியே தெரியும்வண்ணம் அணிகின்ற ஆடைதான் என்பதைப் பலரும் ஒத்துக்கொள்கிறார்கள். ஆகவே நபியவர்கள் பெண்களுக்கான ஆடைச் சீர்திருத்தத்தை மேற்கொண்டதன்மூலம் அவர்களுக்குப் பாதுகாப்பைபே வழங்கியுள்ளார்கள்; அதில் அடிமைத்தனம் அறவே இல்லை என்பதை நடுநிலையாளர்கள் எளிதாகப் புரிந்துகொள்ளலாம். 

ஆக இவ்வாறு பல்வேறு உரிமைகளையும் உயர்வுகளையும் இஸ்லாமிய மார்க்கம் பெண்களுக்கு வழங்கியுள்ளது. இம்மார்க்கத்தின் வழிகாட்டியாக இறுதியாக வந்த இறைத்தூதர் முஹம்மது  ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பெண்களுக்குரிய உரிமைகளை வழங்கி, அவர்களை மேன்மைப்படுத்தியுள்ளார்கள் என்பதை இன்றைய கணினி உலகில் வாழும் பெரும்பாலோர் விளங்கியுள்ளார்கள் என்பதை அறிந்து, இம்மார்க்கத்தைத் தம் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டுள்ள நாம் அனைவரும் பெருமகிழ்ச்சியடைகிறோம்.  

===================================





 

வியாழன், 22 அக்டோபர், 2020

துன்பம் சகிப்போம்_

-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி

 

நாம் அன்றாடம் பல்வகை மக்களுடன் சேர்ந்து வாழ்ந்தாக வேண்டிய கட்டாயச் சூழலில் சிக்குண்டுள்ளோம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு பண்புடையவர்; ஒவ்வோர் இயல்புடையவர். நம்மிடம் உதவி பெற்றுக்கொண்டு நமக்கெதிராகச் செயல்படுபவர்; நம்மிடம் கடன் பெற்றுக்கொண்டு நம்மை எதிர்த்துப் பேசுபவர்; நம்மைச் சார்ந்து வாழ்ந்துகொண்டு நமக்கே இடையூறும் இடைஞ்சலும் கொடுப்பவர்; அண்டைவீட்டில் வாழ்ந்துகொண்டு நமக்குத் தொல்லை கொடுப்பவர்; நம் உறவினராக இருந்துகொண்டு நமக்குத் துன்பமிழைப்பவர்#இப்படிப் பல்வேறு வகையினரைச் சகித்துக்கொண்டுதான் நாம் வாழ்ந்தாக வேண்டும்.

 

துன்பத்தைச் சகித்துக்கொள்ள வேண்டும் என்று சொல்லும்போதே அதனுள் பொறுமை என்ற பண்பு பொதிந்திருக்கிறது என்பதை விளங்கிக்கொள்ளலாம். துன்பத்தைச் சகித்துக்கொள்ள வேண்டுமெனில் பொறுமை வேண்டும். நம்மைச் சுற்றி வாழ்பவர்கள் ஏதாவது ஒரு வகையில் நமக்குத் துன்பமும் இடையூறும் கொடுத்துக்கொண்டே இருப்பார்கள்; நம் உறவினர்களும் நமக்கு எதிராகச் செயல்படலாம்; நம்மோடு சேர்ந்து வாழ்கின்ற மனைவியே நமக்குத் தொல்லையாக இருக்கலாம். இதையெல்லாம் சகித்துக்கொள்ளப் பழகிக்கொள்ள வேண்டும்.

 

சகித்துக்கொள்ளும் பண்பு இல்லையென்றால் நாள்தோறும் துன்பமே தொடரும். சான்றாக, நம் அண்டைவீட்டார் நமக்கு அவ்வப்போது தொல்லை கொடுக்கும்போது அதைச் சகித்துக்கொள்வதால் அது அல்லாஹ்வின் பார்வையில் நமக்கு நன்மையாக மாறிவிடுகிறது. மாறாக, சகித்துக்கொள்ள மனமில்லாமல், எதிர்த்துப் பேசவோ திட்டவோ செய்தால், அவர் தம் தவறை உணரப் போவதில்லை. நமக்கு ஓர் எதிரியாக மாறிவிடுவார். அவ்வளவுதான். அதன்பின் அக்குடும்பத்தாருள் யாரேனும் நம் வீட்டைக் கடந்து செல்லும்போது நாமும் அவரும் ஒருவருக்கொருவர் முறைத்துப் பார்த்துக்கொண்டுதான் செல்ல நேரிடும். அது அவ்வாறே தொடரும். அங்கு இருக்கும் வரை அது ஒரு தொல்லையாகவும் துன்பமாகவும் மாறிவிடும்.

 

நம் உறவினர் ஒருவர் நமக்கு அடிக்கடி தொல்லை கொடுத்து வருகிறார். அதை நாம் சகித்துக்கொள்கிறோம். அவ்வாறு சகித்துக்கொள்வது அல்லாஹ்வின் பார்வையில் நமக்கு நன்மையாக அமைந்துவிடும். அதேவேளையில் நாம் அவரை எதிர்த்துப் பேசினாலோ எதிர் கேள்வி கேட்டுச் சண்டைபோட்டாலோ அவரும் நம்மை எதிர்த்துப் பேசுவார். அது சண்டையாக மாறும். பின்னர் அவர் நம்மோடு பேசுவதை நிறுத்திக்கொள்வார். திருமணம் உள்ளிட்ட நற்காரியங்களில் உறவினர்கள் அனைவரும் ஒன்றிணைகின்றவேளையில் நம்மைப் பார்க்கும் அவர் நம்மைவிட்டு விலகிச் சென்றுவிடுவார். அது காலம் முழுக்க நமக்கொரு துன்பமேயாகும்.

 

அபூபக்ர் ஸித்தீக் ரளியல்லாஹு அன்ஹு தம் உறவினரான மிஸ்தஹ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு அவ்வப்போது உதவித்தொகை வழங்கிவந்தார்கள். தம் மகள் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா குறித்த அவதூறுச் செய்தி பரவியபோது அதில் அவருக்கும் பங்கிருந்தது. அதையறிந்த அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு, இனி நான் அவருக்கு உதவித்தொகை வழங்கமாட்டேன் என்று கூறிச் சத்தியம் செய்துவிட்டார்கள்.  அவ்வாறு உதவித்தொகை வழங்கமாட்டேன் எனச் சத்தியம் செய்தது தவறு; மாறாக அவரை மன்னித்து மறந்துவிட வேண்டுமென்று உணர்த்தும் வகையில் அல்லாஹ் கீழ்க்காணும் வசனத்தை அருளினான்:

 

உங்களுள் வசதியுடையவரும் (பிறருக்கு உதவி செய்யும்) இயல்புடையவரும், தங்கள் உறவினர்களுக்கோ, ஏழைகளுக்கோ, அல்லாஹ்வுடைய பாதையில் ஹிஜ்ரத் செய்தவர்களுக்கோ (யாதொன்றும்) கொடுக்க மாட்டேன் என்று சத்தியம் செய்ய வேண்டாம். (அவர்களால் ஏதும் வருத்தம் ஏற்பட்டிருந்தால்) அதனை அவர்கள் மன்னித்துப் புறக்கணித்துவிடட்டும். அல்லாஹ் உங்களுக்கு மன்னிப்பளிப்பதை நீங்கள் விரும்பமாட்டீர்களா? அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாகவும் கருணையுடையவனாகவும் இருக்கின்றான். (24: 22)

 

ஒன்றாகச் சேர்ந்து வாழ்கின்ற தம்பதியருள் மனைவியோ கணவனோ ஒருவர் மற்றொருவருக்குத் தொல்லையோ துன்பமோ கொடுக்கின்றபோது அதை அவர் சகித்துக்கொள்ள வேண்டும். கணவனின் கட்டளைக்குக் கட்டுப்படாத மனைவி அல்லது அடிக்கடி கோபப்படுகின்ற மனைவி அல்லது எப்போதும் எதிர்த்துப் பேசிக்கொண்டே இருக்கின்ற மனைவியைப் பெற்றுள்ள கணவன் அதைச் சகித்துக்கொண்டால் அது அவனுக்கு நன்மையாக மாறிவிடும். அதேநேரத்தில் அவளை எதிர்த்துப் பேசவோ அடிக்கவோ செய்தால் அது ஒரு தீராப் பிரச்சனையாக ஆகிவிடும்.

 

காலம் முழுக்க வாழப்போகின்ற வாழ்க்கையில் மனைவி-கணவன் பிரிக்க முடியாத அங்கம். ஆனால் அவள் நம்மிடம் பேசாமலோ நம்மைவிட்டுப் பிரிந்து தனியாக வாழ நேரிட்டாலோ அது அவளுக்கும் தொல்லை, நமக்கும் தொல்லை. அவளைக் கண்டித்துத் திருத்த முனைந்தால் அதை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் அவளுக்கு இல்லை. எதிர்த்தே பேசிக்கொண்டிருக்கிறாள். இந்த நேரத்தில் சகித்தல் என்ற நற்குணம்தான் அக்கணவனுக்குப் பயனளிக்கும். அதனால்தான் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இவ்வாறு கூறினார்கள்: பெண் (வளைந்த) விலா எலும்பைப் போன்றவள் ஆவாள். அவளை நீ (ஒரேயடியாக) நிமிர்த்தப்போனால் அவளை ஒடித்தே விடுவாய். அவளை (அப்படியே) நீ விட்டுவிட்டால், அவளிடம் கோணல் இருக்கவே அவளிடம் அனுபவிக்க வேண்டியதுதான். (நூல்: திர்மிதீ: 1109) 

 

எப்போதும் தொல்லை கொடுத்துக்கொண்டிருக்கிற கணவனைப் பெற்றுள்ள மனைவி அவனுடைய தொல்லையை அல்லாஹ்விற்காகப் பொறுத்துக்கொண்டு சகித்து வாழ்கிறாள் என்றால் அது அவளுக்கு நன்மையாக மாறிவிடும். அதேவேளையில் அவனது தொல்லைகளைப் பொறுமையோடு  சகிக்க முடியாமல் பொங்கி எழுந்தால், அவள் அவனுடனான வாழ்க்கையை இழக்க நேரிடும். பின்னர் தான் பெற்ற குழந்தைகளோடு தாய் வீட்டில் தஞ்சமடைந்து, நாளடைவில் வாழ்க்கையே வெறுத்துப் போய்விடும் நிலையும் ஏற்படும். குழந்தைகளை வைத்துக்கொண்டு மறுமணம் என்பது  இயலாத ஒன்று. காலம் முழுக்க அவதிப்படும் நிலை அந்த அபலைப் பெண்ணுக்கு ஏற்படலாம். 

 

சகித்தல்தான் எல்லாவற்றுக்கும் ஒரே தீர்வு. அந்தப் பண்பு இல்லையென்றால் நாம் எல்லாவற்றிற்கும் கோபப்பட வேண்டி வரும். எல்லாவற்றுக்கும் எதிர்வினையாற்றத் தொடங்கினால் நம் வாழ்க்கையே துன்பமானதாக மாறிவிடும்.

 

பிடிவாதக்காரியான மனைவியைவிட்டுப் பிரிந்துவிடலாம் என்றெண்ணி ஒரு துன்பத்திலிருந்து விடுதலை பெற்றால் மற்றொரு துன்பம் நம்மைத் துரத்தும். அதற்குப் பதிலாக அந்தத் துன்பத்திலேயே  இருந்துவிட்டுப் போய்விடலாம். சகிப்புத்தன்மையில்லாமல் மனைவியைப் பிரிந்து சென்றால், பிள்ளைகளை அவள் தன்னுடன் அழைத்துச் சென்றுவிடுவாள். அப்பிள்ளைகளைப் பார்க்க அவள் வீடு தேடி நாம் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். அவர் சார்பாக யாரேனும் ஒருவர் அழைத்து வருவார். அவரின் வருகைக்காகக் காத்திருக்க வேண்டும். இப்படியே அத்துன்பம் தொடரும்.

 





அலுவலகத்தில் பணியாற்றுகின்ற சக ஊழியர்களின் தொல்லைக்கு ஆளாக நேரிடுகின்றபோது  அதைச் சகித்துக்கொள்ள வேண்டும். இல்லையேல் அவன் நமக்கெதிராகச் செயல்படத் தொடங்கிவிடுவான். நமக்கெதிராக மேலாளரிடம் எதையாவது சொல்லி பிரச்சனையை ஏற்படுத்த முனைவான். சின்னச் சின்ன விஷயங்களை ஊதிப் பெரிதாக்குவான். அதனால் அந்த அலுவலகத்தில் நம்முடைய பணி பாதிக்கப்படும். இறுதியில் பணியிலிருந்தே வெளியேற வேண்டிய கட்டாய நிலை ஏற்படும். இதையெல்லாம் தவிர்க்க சகித்தல்தான் ஒரே வழி.

 

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தம் வாழ்வில் எதிர்கொண்டு அனுபவித்த பல்வேறு தருணங்களில் சகிப்புத்தன்மை ஒன்றையே தமது பலமான ஆயுதமாகக் கொண்டிருந்தார்கள். சகித்துக்கொண்டே இடும்பைக்கு இடும்பை தரும் விதமாக வாழ்ந்தார்கள். துன்பமே அவர்களைக் கண்டு துன்பப்படும் அளவிற்குச் சகித்தார்கள். அதனால் அவையெல்லாம் அவர்களின் உயர்வுக்கும் கண்ணியத்திற்குமே காரணமாக அமைந்தன.

 

ஏனென்றால் சகித்தல் என்பது மனிதர்களின் பண்பு மட்டுமல்ல, அது அல்லாஹ்வின் அழகிய பண்புகளுள் ஒன்றாகும். அவனால் படைக்கப்பட்ட அடியார்கள் அவனுக்கு மாறு செய்து, அவனுடைய கட்டளைகளை நிறைவேற்றாமல் அவனைப் புறக்கணிப்பதோடு பாவமும் செய்துகொண்டிருக்கின்றார்கள். இதையெல்லாம் அவன் சகித்துக்கொண்டு அவரவர்களின் தவணைக்காலம் வரை விட்டுவைத்திருக்கிறான். அத்தோடு நாள்தோறும் அவர்களுக்கு அருள்புரிந்துகொண்டிருக்கிறான். ""அல்லாஹ் மிக மன்னிப்பவனாகவும் சகிப்பவனாகவும் இருக்கின்றான்.'' (2: 225)

 

ஆக துன்பங்களையும் தொல்லைகளையும் கண்டு சகித்துக்கொண்டு வாழ்கின்ற மனிதனைக் கோழை என்று எண்ண வேண்டாம். துன்பங்களைப் பொறுமையோடு சகித்துக்கொள்வதால் நாம் உயர்வடைவோமே தவிர தாழ்ந்துவிட மாட்டோம். எனவே நம்மால் இயன்ற வரை பொறுமையோடு சகிப்போம். அதன் பிரதிபலன் இம்மையிலும் மறுமையிலும் சிறந்ததாகவே இருக்கும் என்பதை உறுதிகொள்வோம்.

=========================

 

வெள்ளி, 9 அக்டோபர், 2020

இதுவும் இபாதத்தான்...

 

-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

-------------------------------------------

உயர்ந்தோன் அல்லாஹ் ஒவ்வோர் இனத்தையும் இணை இணையாகப் படைத்துள்ளான். அந்தந்த இணைகள் தத்தம் தேவையை நிறைவேற்றிக்கொள்வதற்கான உந்து சக்தியையும் ஈர்ப்பாற்றலையும் வழங்கியிருக்கிறான். அந்தந்த இணைகள் தம் மெய்நிலை மறந்து இன்பம் துய்க்கும்போது அதன்மூலம் இனப்பெருக்கத்தையும் உண்டாக்கிவிடுகின்றான் இறைவன். ஒரே செயலில் இரண்டு நன்மைகள்.

மனித இனம் தவிர, மற்ற உயிரினங்களுக்கு எந்தச் சட்டமும் இல்லை; எந்த நிபந்தனையும் இல்லை. ஆனால் மனிதர்கள் தம் உடல்சார் தேவையை நிறைவேற்றிக்கொள்ள சில சட்டங்களும் நிபந்தனைகளும் உள்ளன. அவற்றைப் பின்பற்றியே அவர்கள் தம் தேவையை நிறைவேற்றிக்கொள்ள முடியும். அதன் அடிப்படையில்தான் குறிப்பிட்ட நிபந்தனைகளோடு திருமணம் நடைபெறுகிறது. பிறகு அவ்விருவரும் இல்லற வாழ்வில் ஈடுபடுகிறார்கள்.

இதுவரை எல்லோருக்கும் தெரிந்ததுதான். ஆனால் பலருக்கும் தெரியாத ஒன்று உள்ளது. கணவன்-மனைவியாக இல்லறத்தில் இணையும் இருவரும் ஒருவர் மற்றொருவரின் தேவையை நிறைவேற்றுவது குறித்து இஸ்லாம் என்ன கூறுகிறது; இதற்கு நன்மை ஏதும் உண்டா? பின்வரும் நபிமொழி அதற்கான தீர்வைச் சொல்கிறது.

அபூதர் (ரளி) கூறியதாவது: நபித்தோழர்களில் (ஏழைகளான) சிலர் நபி (ஸல்) அவர்களிடம் "அல்லாஹ்வின் தூதரே! வசதிபடைத்தோர் நன்மைகளை (தட்டி)க் கொண்டு போய்விடுகின்றனர். நாங்கள் தொழுவதைப் போன்றே அவர்களும் தொழுகின்றனர்; நாங்கள் நோன்பு நோற்பதைப் போன்றே அவர்களும் நோன்பு நோற்கின்றனர்;  (ஆனால், அவர்கள்) தங்களது அதிகப்படியான செல்வங்களைத் தானதர்மம் செய்கின்றனர். (அவ்வாறு தானதர்மங்கள் செய்ய எங்களிடம் வசதி இல்லையே!)'' என்று கூறினர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "நீங்களும் தர்மம் செய்வதற்கான (முகாந்தரத்)தை அல்லாஹ் உங்களுக்கு ஏற்படுத்தவில்லையா? இறைவனைத் துதிக்கும் ஒவ்வொரு துதிச் சொல்லும் (சுப்ஹானல்லாஹ்) தர்மமாகும்; இறைவனைப் பெருமைப்படுத்தும் ஒவ்வொரு சொல்லும் (அல்லாஹு அக்பர்) தர்மமாகும்; ஒவ்வொரு புகழ்மாலையும் (அல்ஹம்து லில்லாஹ்) தர்மமாகும்; ஒவ்வோர் "ஓரிறை உறுதிமொழி'யும் (லா இலாஹ இல்லல்லாஹ்) தர்மமாகும்; நல்லதை ஏவுதலும் தர்மமே; தீமையைத் தடுத்தலும் தர்மமே; உங்களுள் ஒருவர் தமது பாலுறுப்பி(னைப் பயன்படுத்துகின்ற விதத்தி)லும் தர்மம் உண்டு'' என்று கூறினார்கள். மக்கள், "அல்லாஹ்வின் தூதரே! எங்களுள் ஒருவர் (தம் துணைவியிடம்) ஆசைகளைத் தீர்த்துக்கொள்வதற்கும் நன்மை கிடைக்குமா?'' என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "(நீங்களே) சொல்லுங்கள்: தடை செய்யப்பட்ட வழியில் அவர் தமது ஆசையைத் தீர்த்துக்கொண்டால் அவருக்குக் குற்றம் உண்டல்லவா! அவ்வாறே அனுமதிக்கப்பட்ட வழியில் அவர் தமது ஆசையை நிறைவேற்றிக்கொள்ளும்போது அதற்காக அவருக்கு நன்மை கிடைக்கவே செய்யும்'' என்று விடையளித்தார்கள். (நூல்: முஸ்லிம்: 1832)

சுப்ஹானல்லாஹ் என்று தஸ்பீஹ் செய்வதும் அல்லாஹு அக்பர் என்று தக்பீர் சொல்வதும் அல்ஹம்து லில்லாஹ் என்று அல்லாஹ்வைப் புகழ்வதும் லாயிலாஹ இல்லல்லாஹ் என்று கலிமா ஓதுவதும் அறச் செயலாகும். அதுபோலவே ஒருவன் தன் மனைவியிடம் ஆகுமான முறையில் தனது ஆசையைத் தீர்த்துக்கொள்வதும் அறச் செயலே ஆகும். எனவே அதற்கும் நன்மையுண்டு என்று இந்நபிமொழி தெரிவிக்கிறது.

முஸ்லிம் எனும் நபிமொழித் தொகுப்பு நூலில் இடம்பெற்றுள்ள இந்நபிமொழிக்கு விளக்கவுரை எழுதியுள்ள நவவீ (ரஹ்) கூறியதாவது: ஒருவரது சரியான நிய்யத்-எண்ணம் அவருக்கு நன்மையாக மாறிவிடுகிறது. அதுபோலவே ஒருவன் தன் மனைவியோடு தாம்பத்திய உறவு கொள்வதும் ஒரு வகை இபாதத்தான். அதற்கும் நன்மையுண்டு. அதாவது அதன்மூலம் அவன், தன் மனைவியின் உரிமையை நிறைவேற்றுகிறான்; அல்லாஹ் கட்டளையிட்டவாறு அவளை அவன் கண்ணியமாக நடத்துகிறான்; அல்லது இறைவனுக்கு அஞ்சுகின்ற சந்ததிகளைப் பெற்றெடுக்க எண்ணுகிறான்; அவன் கற்புள்ளவனாக இருக்க அல்லது தன் மனைவி கற்புள்ளவளாக இருக்க வேண்டுமென விரும்புகிறான்; அல்லது இருவருள் ஒவ்வொருவரும் ஷரீஅத்தால் தடைசெய்யப்பட்ட  பார்வையைவிட்டு விலகிக்கொள்ள நாடுகிறார்கள். வேறு ஏதேனும் புகழத்தக்க இலக்கை நெஞ்சில் வைத்து, தன் மனைவியோடு உறவுகொண்டால் அதுவும் இபாதத்தான். (மின்ஹாஜ்)

இஸ்லாமியப் பார்வையில் கணவன்-மனைவி தாம்பத்திய வாழ்க்கையில் ஈடுபடுவது ஒரு வகை இபாதத்-வழிபாடு ஆகும். அது தம்பதியர் இருவருள் ஒருவர் மற்றொருவருக்குச் செய்ய வேண்டிய கடமை; ஒருவர் மற்றொருவருக்குக் கொடுக்க வேண்டிய உரிமை; ஒருவர் மற்றொருவரிடம் கேட்டுப் பெறும் உரிமை; ஒருவர் கேட்கும்போது மற்றொருவர் மறுத்தால் அதற்குத் தண்டனை உண்டு.

இந்தக் கோணத்தில் பின்வரும் நபிமொழியைப் பாருங்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவர் தம் மனைவியைப் படுக்கைக்கு அழைத்து, அவள் (அவருக்கு உடன்பட) மறுத்துவிட, அதன் விளைவாக அவர் இரவைக் கோபத்துடன் கழித்தாரென்றால் அவளை, காலை விடியும் வரை வானவர்கள் சபித்துக் கொண்டேயிருக்கின்றனர். (நூல்: புகாரீ: 3237)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! ஒருவர் தம் மனைவியை அவளது படுக்கைக்கு அழைத்து, அவள் அவருக்கு (உடன்பட) மறுத்தால் வானிலுள்ளவன் அவள்மீது கோபம் கொண்டவனாகவே இருக்கிறான்; அவள்மீது கணவன் திருப்தி கொள்ளும்வரை. (நூல்: முஸ்லிம்: 2830) 

ஆக இந்த இரண்டு நபிமொழிகளின் அடிப்படையில், தாம்பத்திய உறவு தம்பதியரின் உரிமை. அவ்விருவருள் ஒருவருக்கொருவர் அதைக் கொடுப்பதும் பெறுவதும் அவரவர் உரிமை. அதை மறுக்கும் பெண் அல்லாஹ்வின் கோபத்திற்கும் வானவர்களின் சாபத்திற்கும் ஆளாகின்றாள். ஷரீஅத் ரீதியாக அனுமதிக்கப்பட்ட காரணம் இருந்தால் தவிர மற்ற தருணங்களில் கணவனின் தேவையை நிறைவேற்ற மறுத்தால், அவள் சாபத்திற்கு உள்ளாகின்றாள். ஏனென்றால் அவள் தன் கணவனின் உரிமையைத் தர மறுக்கிறாள். கணவனோ கற்போடு வாழ நினைக்கிறான். தன் மனைவியைத் தவிர பிற பெண்களிடமோ விலை மாதுக்களிடமோ செல்வது குற்றம் என்பதை உணர்ந்துள்ளான். எனவே மனைவியிடம் மட்டுமே தன் தேவையை நிறைவேற்றிக்கொள்ள நாடுகிறான். அத்தகைய தருணத்தில் அவனது ஆசையை நிறைவேற்ற வேண்டிய அவள், அவனுக்கு இணங்க மறுத்ததால் அவனது உரிமையைத் தர மறுத்த குற்றத்திற்கு ஆளாகின்றாள். இதை மனிதர்களிடம் சொல்ல முடியாமல் மனதுக்குள்ளேயே புழுங்குவதால் அவனுக்கு ஆதரவாக அல்லாஹ் அவள்மீது சினம்கொள்கிறான்; வானவர்கள் அவளைச் சபிக்கின்றார்கள்.







இஸ்லாம் ஆண்-பெண் இடையே சமநிலையான பார்வை கொண்டுள்ளது என்பதை நாம் அறிவோம். அந்த வகையில் கணவனின் உரிமையைத் தர மறுக்கின்ற பெண் எவ்வாறு அல்லாஹ்வின் கோபத்திற்கு உரியவளாகின்றாளோ அதேபோல் கணவன் தன் மனைவியின் ஆசையை நிறைவேற்றத் தவறினாலும், அவன் தன் மனைவியின் உரிமையைக் கொடுக்க மறுத்த குற்றத்திற்கு ஆளாகின்றான்.

தற்காலத்தில் கணவனும் மனைவியும் வேலைக்குச் செல்வதால் இரவில் களைப்பாகத் தூங்கிவிடுகின்றார்கள். இப்படியே ஒவ்வொரு நாளும் கழிந்து விடுவதுண்டு. அதன் காரணமாக அவ்விருவரிடையே முறையான தாம்பத்திய உறவு நடைபெறுவதில்லை. அதன் காரணமாக அவ்விருவரிடையே அன்பும் காதலும் குறைந்துவிடுவதோடு கோபம், படபடப்பு, பதற்றம் இவை மிகுதியாகின்றன. அமைதியான வாழ்க்கையையும் மனநிம்மதியையும் இழக்கின்றனர். இதனால்தான் இன்றையக் காலத்தில் பலர் படபடப்போடும் பதற்றத்தோடும் காணப்படுகின்றார்கள்.

கணவன் தன் மனைவியின் ஆசைகளையும் உடல்ரீதியான தேவையையும் நிறைவேற்ற வேண்டும் என்பதற்கு, நபிமொழித் தொகுப்பு நூலில் இடம்பெற்றுள்ள ஒரு நபிமொழியே சான்றாகும்.

அபூஜுஹைஃபா (ரளி) கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் சல்மான் (ரளி), அபுத்தர்தா (ரளி) ஆகிய இருவரையும் சகோதரர்களாக ஆக்கினார்கள்.  சல்மான் அபுத்தர்தாவைச் சந்திக்கச் சென்றபோது (அபுத்தர்தாவின் மனைவி) உம்முத் தர்தாவை அழுக்கடைந்த ஆடை அணிந்திருக்கக் கண்டார். உமக்கு என்ன நேர்ந்தது? என்று அவரிடம் சல்மான் கேட்டார். அதற்கு உம்முத்தர்தா (ரளி), உம் சகோதரர் அபுத்தர்தாவுக்கு இவ்வுலகில் எந்தத் தேவையுமில்லை என்று விடையளித்தார். (சற்று நேரத்தில்) அபுத்தர்தா வந்து சல்மானுக்காக உணவு தயாரித்தார். சல்மான் (ரளி) அபுத்தர்தாவிடம், “உண்பீராக!என்று கூறினார். அதற்கு அபுத்தர்தா, “நான் நோன்பு நோற்றிருக்கிறேன்என்றார். சல்மான், “நீர் உண்ணாமல் நான் உண்ண மாட்டேன்என்று கூறியதும் அபுத்தர்தாவும் உண்டார். இரவானதும் அபுத்தர்தா (ரளி) நின்று வணங்கத் தயாரானார். அப்போது சல்மான் (ரளி), “உறங்குவீராக!என்று கூறியதும் உறங்கினார். பின்னர் நின்று வணங்கத் தயாரானார். மீண்டும் சல்மான், “உறங்குவீராக!என்றார். இரவின் கடைசி நேரம் வந்ததும் சல்மான் (ரளி), “இப்போது எழுவீராக!என்று கூறினார். இருவரும் தொழுதனர். பிறகு அபுத்தர்தாவிடம் சல்மான் (ரளி), “நிச்சயமாக உம் இறைவனுக்கு நீர் செய்ய வேண்டிய கடமைகள் இருக்கின்றன; உமக்கு நீர் செய்ய வேண்டிய கடமைகள் இருக்கின்றன; உம் குடும்பத்தாருக்கு நீர் செய்ய வேண்டிய கடமைகள் இருக்கின்றன; அவரவருக்குரிய கடமைகளை நிறைவேற்றுவீராக!என்று கூறினார். பிறகு அபுத்தர்தா (ரளி), நபி (ஸல்) அவர்களிடம் வந்து இந்த விஷயத்தைக் கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “சல்மான் உண்மையையே கூறினார்!என்றார்கள். (நூல்: புகாரீ: 1968)

மற்ற தேவைகளை நிறைவேற்றுவதைவிட மிக அவசரமாக நிறைவேற்ற வேண்டிய தேவைதான் ஓர் ஆணுடைய பாலுணர்வுத் தேவை. மற்ற தேவைகளை நிறைவேற்ற எவ்வளவு கால அவகாசம் எடுத்துக்கொண்டாலும் அதனால் எந்தப் பாதிப்புமில்லை. ஆனால் ஓர் ஆணுடைய இல்லறத் தேவையை அவனுடைய மனைவி மிக அவசரமாக நிறைவேற்றுவது அவளது கடமையாகும். அதை அவன் விரும்பும் எந்த நேரத்திலும் அவளிடமிருந்து அடைந்துகொள்வது அவனது உரிமையாகும். அதனால்தான்  நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள்: கணவர் தாம்பத்திய உறவுக்காக அழைக்கும்போது மனைவி செல்லட்டும். அப்போது அவள் அடுப்பின் அருகில் இருந்தாலும் சரியே!” (நூல்: திர்மிதீ: 1080)

ஏனெனில் ஓர் ஆண் வெளியில் சென்று சம்பாதிப்பவன். அவன் வெளியில் செல்லும்போது பல பெண்களை நிர்ப்பந்தமாகப் பார்க்க வேண்டிய நிலை ஏற்படலாம். அப்போதெல்லாம் உந்தி வருகின்ற ஆசையை அடக்கிக்கொண்டு கற்போடு வீடு வந்து சேர்ந்து, தன் மனைவியிடம் தன் தேவையை நிறைவேற்றிக்கொள்ள முயல்கின்றபோது, “கொஞ்சம் தள்ளிப்படுங்கஎன்று மனைவி கூறினால் அது அவனுக்கு எவ்வளவு ஏமாற்றமாக அமையும் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். இந்தக் கோணத்தில் சிந்தித்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள்: உங்களுள் ஒருவரை ஒரு பெண்(ணின் அழகு) கவர்ந்து, அவரது உள்ளத்தில் தவறான எண்ணம் தோன்றினால், உடனே அவர் தம் மனைவியை நாடிச் சென்று, அவளுடன் உறவு கொள்ளட்டும். ஏனெனில் அது அவரது உள்ளத்தில் தோன்றும் (கெட்ட) எண்ணத்தை அகற்றிவிடும்.”  (நூல்: முஸ்லிம்: 2719)   

கணவன் தன் மனைவிக்குச் செய்ய வேண்டிய மிக முக்கியமான கடமைகளுள் ஒன்று, அவளது உடல்சார் தேவையை நிறைவேற்றுவதாகும் என்பதை மேற்கண்ட நபிமொழிகள் உணர்த்துகின்றன. ஆகவே கணவன்-மனைவியாக உள்ள தம்பதியர் இருவரும் கற்போடு வாழ வேண்டும் என்பதற்காகவும் இறைவனின் கட்டளைகளுக்கும் வரம்புகளுக்கும் கட்டுப்பட்டு வாழ வேண்டும் என்ற அடிப்படையிலும் ஒருவருக்கொருவர் தத்தம் உரிமையைக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்திலும் தாம்பத்திய உறவு கொள்வது இபாதத்தான் என்பதை உணர்ந்து கணவன்-மனைவி இருவரும் இணைந்து வாழ இறைவன் அருள்வானாக.

==========================