திங்கள், 18 டிசம்பர், 2017

இஸ்லாமிய இலக்கியக் கழகச் செயற்குழுக் கூட்டம்இஸ்லாமிய இலக்கியக் கழகச் செயற்குழுக் கூட்டம் 25-11-2017 அன்று காலை 11 மணிக்குச் சென்னை எஸ்-ஐஏஎஸ் அகாடமி அரங்கில் கழகத் தலைவர் பேராசிரியர் முனைவர் சேமுமு முகமதலி தலைமையில் நடைபெற்றது. நெறியாளர்கள் கேப்டன் அமீர் அலி, டாக்டர் சே.சாதிக் முன்னிலை வகித்தனர். நாகர்கோயில், திருநெல்வேலி, திருச்சி, பெரம்பலூர், ஈரோடு, புதுக்கோட்டை, அதிராம்பட்டினம், கோட்டைக்குப்பம் மற்றும் சென்னையைச் சார்ந்த 50 செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
பொதுச் செயலாளர் பேராசிரியர் அப்துல் சமது வரவேற்புரை வழங்கினார். மௌலவி முனைவர் நூ. அப்துல் ஹாதி பாகவி கிராஅத் ஓதினார். பொருளாளர் எஸ்.எஸ். ஷாஜஹான் நன்றி கூறினார். மௌலவி பஹாவுத்தீன் ஆலிம் துஆ ஓதினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப் பெற்ற தீர்மானங்கள்:-  
1. சென்னையில் ஊடகப் பயிலரங்கம், தஞ்சை அய்யம்பேட்டையில் கருத்தரங்கம், குற்றாலத்தில் பேச்சுப் பயிலரங்கம் ஆகியன நடத்துதல்.
2. சென்னையில் மாதமொருமுறை நூல் திறனாய்வு, வெளியீடு முதலியன நடத்துதல். 

3. உலமாப் பெருந்தகைகள் கேட்டுக் கொண்டதற்கிணங்க ஆலிம்கள் தமிழ் மொழியில் செம்மையாக இலக்கணப் பிழையின்றி எழுதவும் பேசவும் "தேர்ச்சி வகுப்புகள்' நடத்துதல்.  

4. மாவட்டம்தோறும் கிளைகள் அமைத்து நிகழ்ச்சிகள் நடத்துதல்.
5. 2019இல் "உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாபெரும் மாநாடு' நடத்துதல்.

6. அரசு வெளியிட்டுள்ள பாடத் திட்ட வரைவை ஆய்ந்து அதில் இஸ்லாத்திற்கு ஆட்சேபகரமான பகுதிகள் இருப்பின் அதனை அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்லுதல்.
7. சென்னைப் பல்கலைக்கழகத்தில் இஸ்லாமியத் தமிழ் இலக்கிய இருக்கை உண்டாக்க மீண்டும் முயற்சிகள் மேற்கொள்ளுதல்.
8. ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் ஆண்டுதோறும் 20 தலித் சகோதரர்களுக்குத்தங்களது பிஎச்.டி., போன்ற ஆய்வுகளை நூலாக வெளியிட தலா ரூ. 20,000/- வழங்கும் திட்டத்தைச் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் முஸ்லிம் ஆய்வாளர்களுக்கும் விரிவுபடுத்திட அரசைக் கேட்டுக்கொள்ளுதல்.

மேற்கண்ட தீர்மானங்கள் செயலாக்கம் பெற அனைவரும் தங்கள் ஆதரவையும் ஒத்துழைப்பையும் தந்துதவ இஸ்லாமிய இலக்கியக் கழகம் கேட்டுக்கொண்டுள்ளது.

செயற்குழுக் கூட்டத்தில் பேராசிரியர்கள்: மு.இ. அகமது மரைக்காயர், ஹாஜா கனி, புரவலர் ராஜகிரி தாவூது பாட்சா ஆகியோரும் ஊடகவியலாளர்கள்: பாத்திமா மைந்தன் ராசிக், நூருல்லாஹ், காயல் மஹ்பூப், சமரசம் அமீன், ஆ. மு. ரசூல் மொஹிதீன், மில்லத் இஸ்மாயில், வலியுல்லாஹ் ஸலாஹி, ஆர்.எஸ். தர்வேஷ் மொஹிதீன், கோம்பை நிஜாமுதீன் ஆகியோரும் மௌலவிகள்: பஹாவுத்தீன் ஆலிம், தேங்கை ஷறபுத்தீன் மிஸ்பாஹி, பீர் முஹம்மது பாகவி, முஹம்மது இல்யாஸ் ரியாஜி, நூ. அப்துல் ஹாதி பாகவி முதலானோரும் 

மூத்த எழுத்தாளர்கள்: ஏம்பல் தஜம்முல் முஹம்மது, அதிரை அஹமது, சி.ஜே. ஷாஜஹான், ஈரோடு தாஜ் முகைதீன், புதுக்கோட்டை ராஜா முகம்மது, ஏகவன் அப்துல் கரீம், தாழை மதியவன், உடன்குடி யூசுஃப் முதலானோரும் கவிஞர்கள்:  இ.பதுருத்தீன், தக்கலை ஹலீமா, சடையன் அமானுல்லாஹ், சோழபுரம் தாஹா, ஷேக் மதார் ஆகியோரும் நல்லாசிரியர்கள்: செங்கோட்டை அப்துர் ரஹ்மான், ஷேக் ரசீத் ஆகியோரும் எழுத்தாளர்கள்: திருச்சி அம்ஜத் இப்ராஹிம், கோட்டக்குப்பம் லியாகத் அலி, அரும்பாவூர் தாஹிர் பாட்சா, ஜனாபா கோரிஜான், மஃரூஃப் முதலானோரும் வழக்கறிஞர் ஷேக் தாவூது உள்ளிட்டோரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

============================================


எங்கிருந்தும் நபிகளாருக்கு ஸலாம் உரைக்கலாம்!


-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமைச் சந்திக்கின்றபோது கூறும் முகமன் "அஸ்ஸலாமு அலைக்கும்ஆகும். "அல்லாஹ்வின் சாந்தி உன்மீது உண்டாகட்டும்!' என்பது இதன் பொருள். இஸ்லாமிய மார்க்கம் கற்றுத்தந்துள்ள மிக முக்கியமானவற்றுள் இதுவும் ஒன்று. இதை ஒருவருக்கொருவர் கூறிக்கொள்வதால் அவர்கள் மத்தியில் அன்பு மலர்கிறது என அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அதற்குப் பதிலளிக்குமுகமாக "வ  அலைக்கும் ஸலாம்' (உன்மீதும் அல்லாஹ்வின் சாந்தி உண்டாகட்டும்!) என்று கூறுவது மரபு.

அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகின்றான்: (எவரேனும்) உங்களுக்கு "முகமன்' கூறினால் (அதற்குப் பிரதியாக) அதைவிட அழகான (வாக்கியத்)தைக் கூறுங்கள். அல்லது அதனையே திருப்பிக் கூறுங்கள். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தையும் கணக்கெடுப்பவனாக இருக்கின்றான். (4: 86) இந்த இறைவசனத்தின் அடிப்படையில் அதே வாக்கியத்தை அப்படியே திருப்பிக் கூறலாம். அல்லது அதைவிடச் சிறந்த வாக்கியத்தைத் திருப்பிக் கூறலாம். ஆனால் கூடுதல் வார்த்தைகளுக்குக் கூடுதல் நன்மை உண்டு என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
அதற்கான சான்றாகப் பின்வரும் நபிமொழி அமைந்துள்ளது. இம்ரான் பின் ஹுஸைன் (ரளி) அவர்கள் அறிவித்துள்ளதாவது: நபி (ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, "அஸ்ஸலாமு அலைக்கும்' என்று முகமன் கூறிவிட்டு அமர்ந்தார். நபி (ஸல்) அவர்கள் அவருக்குப் பதிலளித்துவிட்டு, "பத்து' என்று கூறினார்கள். பின்னர் மற்றொருவர் வந்து, "அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹ்' என்று முகமன் கூறிவிட்டு அமர்ந்தார். நபி (ஸல்) அவர்கள் அவருக்குப் பதிலளித்துவிட்டு, "இருபது' என்று கூறினார்கள். பின்னர் மற்றொருவர் வந்து, "அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு' என்று முகமன் கூறிவிட்டு அமர்ந்தார். நபி (ஸல்) அவர்கள் அவருக்குப் பதிலளித்துவிட்டு, "முப்பது' என்று கூறினார்கள். (நூல்: அபூதாவூத்: 4521)

அல்லாஹ்வே நபி (ஸல்) அவர்களுக்கு ஜிப்ரீல் (அலை) அவர்கள்மூலம் முகமன் கூறி அனுப்பியதும் நபி (ஸல்) அவர்களைச் சந்திக்க வந்த ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபியவர்களின் மனைவி ஆயிஷா (ரளி) அவர்களுக்கு நபியின்மூலம் முகமன் கூறியதும் நபிமொழித் தொகுப்பு நூல்களில் பதிவுசெய்யப்பட்டுள்ளன. ஏன், அல்லாஹ் ஆதம் (அலை) அவர்களைப் படைத்தபின் அவரை வானவர்களிடம் அனுப்பி, அவர்களுக்கு "அஸ்ஸலாமு அலைக்கும்' எனக் கூறுமாறு கட்டளையிட்டான். அவர் சென்று முகமன் கூறியதும் அவர்கள்,  "வ  அலைக்கஸ் ஸலாம் வ ரஹ்மத்துல்லாஹ்' என்று பதிலளித்தார்கள். "இதுவே உம்முடையவும் உம்முடைய பிள்ளைகளுடையவும் முகமன்'' ஆகும் என்று அல்லாஹ் கூறினான். (நூல்: திர்மிதீ: 3290) ஆக மனிதப் படைப்பின் தொடக்கத்திலிருந்தே தொடங்கியுள்ளது முகமன் கூறும் பழக்கம்.
இப்பழக்கம் மரணத்திற்குப் பின்னும் தொடர்கிறது. ஆம், மண்ணறையில் அடக்கம் செய்யப்பட்டுத் துயில்கொள்ளும் மண்ணறைவாசிகளைத் தரிசனம் (ஸியாரத்) செய்யச் செல்லும் மனிதர்கள் அவர்களுக்கு முகமன் கூற வேண்டும். அதற்கு அவர்கள் பதிலளிக்கிறார்கள்.

மண்ணறையை ஸியாரத் செய்யும் (பார்க்கும்) போது என்ன ஓத வேண்டும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் "இந்த துஆவை ஓது'' எனக் கூறினார்கள்: "அஸ்ஸலாமு அலா அஹ்லித் தியார் மினல் முஃமினீன வல்முஸ்லிமீன். வ யர்ஹமுல்லாஹுல் முஸ்தக்திமீன மின்னா வல் முஸ்தஃகிரீன வ இன்னா இன்ஷா அல்லாஹு பிகும் ல லாஹிகூன்- இங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ள முஃமின்கள், முஸ்லிம்கள் மீது சாந்தி உண்டாகட்டும். நம்மில்  முந்திச் சென்றோருக்கும் (உங்களுக்கும்) பிந்தியோருக்கும் (எங்களுக்கும்) அல்லாஹ் அருள்புரிவானாக. அல்லாஹ் நாடினால் உங்களோடு நாங்களும் (விரைவில்) சேருவோம்'' என்ற செய்தியை ஆயிஷா (ரளி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (நூல்: முஸ்லிம்: 1774)
நாம் ஒவ்வொரு தடவை தொழுகின்ற போதும் நபி (ஸல்) அவர்களுக்கு முகமன் கூறுகின்றோம். ஆம், அத்தஹிய்யாத் ஓதும்போது "அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹன் நபிய்யு-நபியே, உங்கள்மீது அல்லாஹ்வின் சாந்தி உண்டாவதாக''-என்று கூறுகின்றோம்.

ஒருவருக்கொருவர் சந்தித்துக்கொள்ளும்போதுதான் முகமன் கூறவேண்டுமென்பதில்லை. ஒருவர்  ஒரு குறிப்பிட்ட ஊருக்கோ மாநிலத்திற்கோ பயணம் புறப்படும்போது நமக்குத் தெரிந்தவர் அங்கு இருந்தால், "அவரைச் சந்திக்கின்றபோது என் ஸலாமை அவருக்குத் தெரிவியுங்கள்'' என்று முகமன் கூறி அனுப்புவதும் நபிவழிதான். இவ்வாறு பக்கத்து ஊரில் உள்ளவருக்கோ அண்டை நாட்டில் உள்ள உறவினருக்கோ நண்பருக்கோ முகமன்  சொல்லி அனுப்புவது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்காலத்தில், எங்குள்ளவரையும் நேரடியாகத் தொடர்புகொள்ள முடியும் என்பதால் அவ்வாறு ஸலாம் கூறி அனுப்ப வேண்டிய தேவை ஏற்படுவதில்லை. குறிப்பிட்ட ஆளிடம் தொலைத் தொடர்புச் சாதனம் இல்லையென்றால், அவரைச் சந்திக்கச் செல்கின்ற ஆளிடம்  முகமன் கூறி அனுப்பலாம்.

பிறருடைய ஸலாமை நம்மிடம் சொல்பவரிடம், "அலைக்க வ அலைஹிஸ் ஸலாம் (உன்மீதும் அவர்மீதும் அல்லாஹ்வின் சாந்தி உண்டாவதாக)'' என்று பதில் சொல்ல வேண்டும் என்பதையும் நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்துள்ளார்கள். ஸலாம் சொன்னவரும் நம்மிடம் வந்து சொல்பவரும் பெண்ணாக இருந்தால், "அலைக்கி வ அலைஹஸ் ஸலாம்'' என்று பதிலளிக்க வேண்டும்.

நம்முள் யாராவது, நான் ஹஜ்ஜுக்குப் போகிறேன் என்றோ உம்ராவுக்குப் போகிறேன் என்றோ  சொன்னால், "எங்களுக்காக துஆச் செய்யுங்கள், மதீனா செல்லும்போது, நபி (ஸல்) அவர்களுக்கு என்னுடைய ஸலாமைத் தெரிவியுங்கள்'' என்று வேண்டுகோள் விடுப்பதைக் கேள்விப்பட்டுள்ளோம். துஆச் செய்யுங்கள் என்று கேட்டுக்கொள்வது சரிதான். அதேநேரத்தில் நபி (ஸல்) அவர்களுக்கு ஸலாமைத் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் இவ்வாறு கேட்டுக்கொள்வது மற்றவர்களைப் பொறுத்த வரை சரிதான். நபி (ஸல்) அவர்களைப் பொறுத்த வரை அவர்களின் சமுதாயத்திற்கு அத்தகைய ஒரு சிரமத்தை அல்லாஹ் ஏற்படுத்தவில்லை.

ஈருலகத் தலைவர் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு உலகில் வாழும் ஒவ்வொருவரும் ஸலாம் கூற ஆசைப்படுவார்கள். அப்படியிருக்க எல்லோரும் அவர்களின் சமூகம் சென்று நேரடியாக ஸலாம் உரைக்க இயலாமல் போய்விடலாம். பயணம் செல்லும் வாய்ப்பும் கிடைக்காமல் போகலாம். அப்போது அவர்களின் ஆசை நிராசையாகிவிடலாம் என்ற காரணத்தைக் கணக்கில்கொண்டுதான், இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு ஸலாம் கூற நினைப்பவர் எங்கிருந்துகொண்டும் அதை உரைக்கலாம்.  அதை அவர்களின் சமூகம் சமர்ப்பிப்பது தனது கடமையாக அல்லாஹ் ஏற்றுக்கொண்டுள்ளான். எனவே போவோர் வருவோரிடம் நபி (ஸல்) அவர்களுக்கு ஸலாம் கூறி அனுப்ப வேண்டிய சிரமத்தை அல்லாஹ் இந்தச் சமுதாயத்திற்கு ஏற்படுத்தவில்லை.

இது குறித்துத் தெளிவாக விளக்கிச் சொல்கின்ற நபிமொழியைப் படியுங்கள்: "(உலகைச்) சுற்றிவரும் வானவர்கள் அல்லாஹ்வுக்கு உள்ளார்கள். அவர்கள் என் சமுதாயத்தினர் சொல்கின்ற ஸலாமை என்னிடம் கொண்டு வந்து சேர்க்கின்றார்கள். நான் உயிரோடிருப்பது உங்களுக்கு நல்லது. நீங்கள் (என்னிடம்) பேசுகின்றீர்கள். நாம் உங்களோடு பேசுகிறோம். என் மரணமும் உங்களுக்கு நல்லதுதான். (ஏனென்றால்) உங்களின் செயல்பாடுகள் எனக்கு எடுத்துக்காட்டப்படுகின்றன. (என் சமுதாயத்தாராகிய உங்களின்) நன்மைகளைப் பார்த்தால் அதற்காக அல்லாஹ்வைப் புகழ்வேன். தீமைகளைப் பார்த்தால் உங்களுக்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடுவேன்'' என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: முஸ்னதுல் பஸ்ஸார்: 1925)
"உங்கள் வீடுகளை அடக்கத்தலங்களைப் போல் ஆக்காதீர்கள். என்னுடைய அடக்கத்தலத்தை கொண்டாடும் இடமாக ஆக்காதீர்கள். என்மீது ஸலவாத் கூறுங்கள். திண்ணமாக உங்கள் ஸலவாத்-நீங்கள் எங்கிருந்தாலும்-(வானவர்கள்மூலம்) என்னை வந்தடைகிறது'' என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: அபூதாவூத்: 1746)

ஆகவே ஒருவர் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அவர் நபி (ஸல்) அவர்கள்மீது கூறும் ஸலாமையும் ஸலவாத்தையும் வானவர்கள் நபியவர்களுக்குக் கொண்டுபோய்ச் சேர்த்து விடுகின்றார்கள். எனவே நபி (ஸல்) அவர்களுக்காகப் பிறரிடம் ஸலாம் சொல்லி அனுப்பத் தேவையில்லை. அது பிற மனிதர்களுக்குத்தான் பொருந்தும் என்பதை மேற்கண்ட நபிமொழிகள் மூலம் நாம் தெள்ளத்தெளிவாக உணர்ந்து கொள்ளலாம்.
==============================================புதன், 13 டிசம்பர், 2017

இன் ஷா அல்லாஹ் விரைவில் வெளிவருகிறது.


படிக்காதவர்கள் படும்பாடு!


-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

படிப்பறிவில்லாதவர்கள் இப்பாரினில் படும்பாடு சொல்லிமாளாது. பார்த்துப் படிக்கத் தெரியாமலும் தம்முடைய பெயரை எழுதத் தெரியாமலும் சிரமப்படுகின்றார்கள். படிப்பறிவில்லாததால் தம்முடைய பெயரைச் சரியாகப் பிறருக்குத் தெரிவிக்க முடியாமல் போவதும், அதனால் அவர்களுடைய ஆவணங்களில் பெயர் தவறாகப் பதிவுசெய்யப்படுவதும் உண்டு. அதன் காரணமாக அவர்கள் அப்பெயரைச் சரிசெய்வதற்காக இங்குமங்கும் அலைய வேண்டிய நிர்ப்பந்த நிலைக்குத் தள்ளப்படுகின்றார்கள். அவர்கள் செல்லுமிடமெல்லாம் அலைக்கழைக்கப்படுகின்றார்கள். 


படிப்பறிவில்லாதவர்கள் தம் இளமைக் காலத்தில் ஏதோ ஓர் அடிமட்ட அளவில் வேலை செய்து தம் குடும்பத்தாரைக் காப்பாற்றுவதில் காலத்தைக் கழித்துவிடுகின்றனர். ஆனால் தம் முதுமைக் காலத்தில் மிகுந்த சிரமப்படுகின்றனர். வேலையும் செய்ய முடியாது; தேவையான சேமிப்பும் இருக்காது. உணவிற்காகத் தம் உறவுகளை ஒட்டிக்கொண்டிருக்க வேண்டிய நிர்ப்பந்த நிலை ஏற்படுகிறது. வீட்டிற்குப் புதிதாக வந்துள்ள மருமகள் தன் விருப்பப்பட்ட நேரத்திற்குத் தருகின்ற உணவை உண்டு ஓர் ஓரத்தில் ஒதுங்கிக்கொள்ள வேண்டிய நிலையில் பலர் உள்ளனர். 


வயதானவர்கள் ஆரோக்கியமாக இருக்கும் வரை சிக்கல் இல்லை. ஏதேனும் நோய் வந்துவிட்டால் அவர்களுக்கான மருத்துவச் செலவுக்குத் திண்டாட்டம்தான். மகன்கள் சிலர் நல்லமுறையில் கவனித்துக் கொண்டாலும், பலர் வயதான தம் பெற்றோரைக் கவனித்துக்கொள்வதில்லை. அதனால் அவர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றார்கள். 


இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் படிக்கத் தெரியாதவர்கள் தம் முதுமைக் காலத்தில் வேறொரு வகையில் மிகுந்த சிரமப்படுகின்றார்கள். எஞ்சிய காலத்தை எவ்வாறு கழிப்பது என்பதுதான் அவர்களுக்கு முன்னுள்ள மிகப்பெரும் கேள்வி. படிக்கத் தெரிந்தவர்கள் படிக்க வேண்டிய முக்கியமான நூல்களைப் படித்தே எஞ்சிய காலத்தை எளிதாகக் கழித்துவிடலாம்; திருக்குர்ஆன் ஓதத் தெரிந்தவர்கள் அதனை ஓதுவதிலும் அதன் மொழிபெயர்ப்பைப் படிப்பதிலும் காலத்தைக் கழிக்கலாம். ஆனால் படிக்கவோ ஓதவோ தெரியாதவர்கள் தம் நேரத்தை வீணாகக் கழிப்பதைத் தவிர வேறு வழி தேடுவதில்லை.
அவர்கள் தம் வயதொத்த முதியவர்கள் கிடைத்தால் கடந்த கால அனுபவங்களைப் பேசுவதிலும் அரட்டையடிப்பதிலுமே காலத்தைக் கழிக்கின்றார்கள்; அல்லது தம் வீடுகளில் உள்ள தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதிலேயே பொழுதைக் கழிக்கின்றார்கள். நன்மையைச் சேர்ப்பதற்கான மாற்று வழியைத் தேடுவதில்லை. 


இளமைக் காலத்தில் நன்றாகப் படித்திருந்தால், மஸ்ஜிதுகளில் நடைபெற்று வருகின்ற பாலர் வகுப்புகளுக்குச் சென்று திருக்குர்ஆனை ஓதக் கற்றிருந்தால், ஓய்வாக உள்ள முதுமைக் காலத்தில் திருக்குர்ஆனை ஓதி நன்மையைச் சேர்ப்பதிலேயே காலத்தைக் கழித்திருக்கலாமே என்று அவர்களுள் சிலர் எண்ணலாம். நாம் நம்முடைய சிறுபிராயத்தையும் இளமைக் காலத்தையும் வீணடித்துவிட்டோமே என்று எண்ணிப் பார்க்கும்போது வேதனைதான் மிஞ்சும். “படைத்த உம் இறைவனின் பெயரால் ஓதுவீராக” எனும் இறைவசனம் படிப்பைக் கற்றுக்கொள்ளவே வலியுறுத்துகிறது. அல்லாஹ்வின் முதல் கட்டளையையே முறையாகக் கடைப்பிடிக்காமல் அலட்சியப்படுத்திவிட்டதால் இப்போது முதுமைக் காலத்தில் சிரமப்பட வேண்டியுள்ளது என்று பலர் எண்ணலாம். 

இத்தகைய முதியோர்களைப் பார்க்கின்ற இளைஞர்களுக்கு அவர்களில் ஒரு பாடம் இருக்கிறது. இளைஞர்கள் தம் இளமைக் காலத்திலேயே திருக்குர்ஆனைப் பார்த்து ஓதக் கற்றுக்கொண்டால்தான் அவர்கள் தம் முதுமைக் காலத்தில் அதனை ஓதுவதில் ஈடுபட்டு, நன்மையைச் சேர்த்துக்கொள்வதோடு நிம்மதியாகத் தம் ஓய்வுநேரத்தைக் கழிக்கலாம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இல்லையேல் முதுமையைக் கழிப்பது பெரும்பாடுதான்.  


படிக்கத் தெரியாதவர்கள் பணியிலிருந்து ஓய்வுபெற்று, முதுமையின் வாசலில் அடியெடுத்து வைத்துள்ள அவர்கள் தற்போது முயன்றாலும் திருக்குர்ஆனை ஓதக் கற்றுக்கொள்ளலாம். முழுமையாகக் கற்றுக்கொள்ள இயலாவிட்டாலும் அந்த முயற்சியிலேயே காலத்தைக் கழிக்கலாம் அல்லவா?


“(மனிதர்கள்) நல்லுணர்வு பெறும் பொருட்டு இந்தக் குர்ஆனை, நிச்சயமாக நாம் மிக எளிதாக்கி வைத்திருக்கின்றோம். (இதனைக் கொண்டு) நல்லுணர்வு பெறுபவர்கள் உண்டா?” (54: 40) என்று திருக்குர்ஆனில் அல்லாஹ் கேட்கிறான். இதனைப் படிக்க, ஓத, கற்றுக்கொள்ள, புரிந்துகொள்ள, மனனம் செய்ய-ஆகிய அனைத்திற்கும் எளிதாகவும் இலகுவாகவும் அல்லாஹ் அமைத்துள்ளான். எனவே இப்போது முயன்றாலும் குறிப்பிட்ட காலத்தில் திருக்குர்ஆனை ஓதக் கற்றுக்கொண்டுவிடலாம் என்பதுதான் உண்மை.


கற்றுக்கொள்ள இயலாதவர்களுக்கு அல்லாஹ் வேறொரு வழியைக் காட்டியுள்ளான். வாயை ஒன்று என அமைத்த இறைவன், காதுகள் இரண்டைக் கொடுத்துள்ளான். ஆகவே திருக்குர்ஆன் ஓதப்படுவதைக் கேட்டுக் கேட்டே நன்மைகளைச் சம்பாதிக்கலாம்.  “(மனிதர்களே!) திருக்குர்ஆன் ஓதப்பட்டால் வாய்மூடி, செவி தாழ்த்தி  அதனைக் கேளுங்கள். (அதனால்) நீங்கள் (இறைவனின்) அருளை அடைவீர்கள்” (7: 204) என அல்லாஹ் கூறுகின்றான். 

ஆகவே யாரேனும் திருக்குர்ஆன் ஓதினால் அதனைச் செவிதாழ்த்திக் கேட்க வேண்டும்; பிறரை ஓதச் சொல்லிக் கேட்க வேண்டும்.  அல்லது தற்காலத்தில் எல்லோர் கையிலும் உள்ள செல்பேசியில் திருக்குர்ஆன் ஓதல் பதிவுகளைச் சேமித்து வைத்துக்கொண்டு அதைத் திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டிருக்கலாம். இதனால் வெறுமையான முதுமைக் காலம் இனிமையாகக் கழிவதோடு மனதுக்கு நிம்மதியும் ஏற்படும்; நன்மையும் பெருகும். 


அதையும் தாண்டி மற்றொரு வழியையும் அல்லாஹ் ஏற்பாடு செய்து வைத்துள்ளான். அதற்கு எந்தப் பொருளும் பணமும் தேவையில்லை. எங்கும் செல்லத் தேவையில்லை. இருந்த இடத்திலிருந்தே நன்மையைச் சம்பாதிக்கலாம். அதுதான் இறைக்கீர்த்தனை-திக்ர் ஆகும். படைத்த இறைவனை எப்போதும் நினைவுகூருமுகமாக, சுப்ஹானல்லாஹ், அல்ஹம்து லில்லாஹ், அல்லாஹு அக்பர், அஸ்தஃக்ஃபிருல்லாஹ், யா ரஹ்மான், யா ரஹீம் உள்ளிட்ட அல்லாஹ்வின் தொண்ணூற்றொன்பது பெயர்களையும் திரும்பத் திரும்பத் துதித்துக்கொண்டிருக்கலாம்.

 இது குறித்து அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுவதைப் பாருங்கள்: (இறைநம்பிக்கைகொண்டோரே!) நீங்கள் தொழுகையை நிறைவேற்றிவிட்டால் நின்ற நிலையிலும், அமர்ந்த நிலையிலும், ஒருக்களித்துப் படுத்த நிலையிலும் அல்லாஹ்வை நினைவுகூருங்கள். (4: 103)


முதுமைக் காலத்திலும் நன்மைகளை ஈட்டிக்கொள்ள, மறுமை வாழ்க்கையை மேலானதாக ஆக்கிக்கொள்ள இத்தனை வழிகள் இருந்தும், வயதான ஆண்களும் பெண்களும் தம் குடும்பங்களில் பிரச்சனையை உண்டாக்குவதிலும் சிக்கல்களை ஏற்படுத்துவதிலும் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றார்கள் என்பது கசப்பான உண்மை. முதுமைக் காலத்துப் பெண்கள் தம் மருமகள்களோடு சண்டை போடுவதிலேயே காலத்தைக் கழிக்கின்றார்கள்; வயதான ஆண்கள் வெட்டிப் பேச்சு பேசுவதிலேயே காலத்தைக் கழிக்கின்றார்கள். இதை நீங்கள் ஊர்கள்தோறும் காணலாம். 


எனவே படிக்காதவர்கள்கூடத் தம் முதுமைக் காலத்தில் நன்மைகளைச் சேர்த்துக்கொள்வதற்கான வழியை அல்லாஹ் ஏற்படுத்தியுள்ளதைக் கவனத்தில்கொண்டு, இனி எஞ்சியுள்ள காலங்களை வீணடித்துவிடாமல் நன்மைகளைச் சேர்த்து மறுமை வாழ்க்கையை மேலானதாக ஆக்கிக்கொள்வதற்கான வழிகளைத் தேட  வேண்டும். “நம்மால் பிறருக்கு எந்தத் தொந்தரவும் ஏற்படக் கூடாது” என்ற எண்ணம் வயதானவர்கள் உள்பட அனைவருக்கும் வேண்டும். திருக்குர்ஆன் ஓதுதல், கேட்டல், இறைவனைத் துதிப்பதில் ஈடுபடுதல் உள்ளிட்ட நன்மைகளைச் செய்ய முதியோர்கள் முன்வருவார்களா? அவர்கள் தம் எஞ்சிய காலத்தை வீணாக்கும் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்வார்களா?

==================================================