Saturday, October 16, 2021

உயிர்கொடுப்பவனே! மரணிக்கச் செய்பவனே!

 -முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி

 

அல்லாஹ்வின் அழகிய பெயர்களுள் இரண்டு முஹ்யீ, முமீத் ஆகியவை ஆகும். உயிர் கொடுப்பவன், மரணிக்கச் செய்பவன் எனப் பொருளாகும். பிறந்த ஒவ்வொரு மனிதனும் இறக்கிறான்.  அதன்பின் மறுமையில் அவனுக்கு உயிர்கொடுத்து இறைவன் எழுப்புவான். எனவே அந்த இறைவனுக்கு முஹ்யீ என்றும் முமீத் என்றும் உள்ள பெயர்கள் சாலப் பொருத்தமானவை.

 

ஒவ்வொரு நாளும் நாம் ஓய்வு என்ற பெயரில் இரவில் உறங்கி விழித்தெழுகிறோம். அவ்வாறு நாம் தூங்குகிற தூக்கம் ஒரு சிறு மரணம் என அழைக்கப்படுகிறது. ஆக இச்செயலில் இறைவனுடைய ஆற்றலான, மரணிக்கச் செய்வதும் அதன்பின் உயிர்கொடுத்து எழுப்புவதும் அடங்கியுள்ளது. ஆகவே இறைவன் ஒவ்வொரு நாளும் நம்மை மரணிக்கச் செய்கிறான். உயிர்கொடுத்து எழுப்புகிறான்.

 

இது குறித்து திருக்குர்ஆனில் அல்லாஹ் கூறுகின்றான்: மனிதர்கள் இறக்கும்பொழுதும், இறக்காமல் நித்திரையிலிருக்கும் பொழுதும் அல்லாஹ்வே அவர்களுடைய உயிரைக் கைப்பற்றுகிறான். பின்னர், எவர்கள்மீது மரணம் விதிக்கப்பட்டதோ அவர்களுடைய உயிரை(த் தன்னிடமே) நிறுத்திக் கொள்கிறான். மற்றவர்க(ளின் உயிர்க)ளை, குறிப்பிடப்பட்ட காலம் வரை வாழ அவன் அவர்களிடமே அனுப்பிவிடுகின்றான். கவனித்து அறிந்துகொள்ளக்கூடிய மக்களுக்கு, நிச்சயமாக இதில் பல படிப்பினைகள் இருக்கின்றன. (39: 42)

 

இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் நம்ரூத் அரசன், உன் இறைவன் யார் என்று கேட்டபோது, உயிர்கொடுத்து, மரணிக்கச் செய்பவனே என் இறைவன் என்று பதிலளித்ததை  அல்லாஹ் திருக்குர்ஆனில் அல்பகரா அத்தியாயத்தின் 258ஆம் வசனத்தில் பதிவு செய்துள்ளான்.

 

ஒரு தடவை உஸைர் அலைஹிஸ்ஸலாம் ஓர் ஊரைக் கடந்து சென்றுகொண்டிருந்தார்கள். அது அப்போது புஃக்த்து நஸ்ஸர் என்பவனால் அழிக்கப்பட்டிருந்தது. இதன் பின்னர் இந்த ஊர் எப்படித்தான் செழிப்படையப்போகிறதோ என எண்ணிக்கொண்டு ஓரிடத்தில் தங்கினார்கள். அல்லாஹ் அவர்களை நூறாண்டுகள் அதே இடத்திலேயே உறங்கவைத்துவிட்டான். அதன்பின் அல்லாஹ்  அவர்களை எழுப்பியபோது அந்த ஊர் மிகவும் பசுமையாய்க் காட்சியளித்தது. அது மட்டுமின்றி, அவர்களுடைய கழுதை மக்கிப்போய் எலும்பாகக் கிடந்தது. அதன்பின் மக்கிய எலும்புகளையெல்லாம் ஒன்றாக்கி அதன்மீது தோல்போர்த்தி, அவர்களின் கண்முன்னே உயிர்கொடுத்து எழுப்பியதைக் கண்டு அவர்கள் அல்லாஹ்வின் பேராற்றலை உணர்ந்துகொண்டார்கள். இது குறித்து அல்பகரா அத்தியாயத்தின் 259ஆம் வசனத்தில் அல்லாஹ் தெளிவாக எடுத்தியம்புகிறான்.

 

மற்றோர் அரிய வரலாற்று நிகழ்ச்சி. அதாவது உரோம் நகரில் தக்யானூஸ் எனும் ஓர் அரசன் இருந்துவந்தான். அவன் தன்னை வணங்குமாறு தன் நாட்டு மக்களுக்கு ஆணையிட்டிருந்தான். ஏழு இளைஞர்கள் மட்டும் அவனை வணங்காமல் ஏக இறைவன் அல்லாஹ்வையே வணங்கினர்; அவனை எதிர்த்து நின்றனர். கோபமடைந்த அவன், அந்த இளைஞர்களைக் கொண்டுவருமாறு அவர்களுடைய பெற்றோருக்கு ஆணையிட்டான். அவர்களை இங்கு கொண்டுவராவிட்டால் கடும் தொல்லைகளுக்கும் துன்பங்களுக்கும் ஆளாக நேரிடும் என எச்சரித்தான். இதையறிந்த அவ்விளைஞர்கள் தம் ஊருக்கருகிலுள்ள ஒரு குகைக்குள் தஞ்சம் புகுந்து ஒளிந்துகொண்டனர். அங்கேயே அல்லாஹ் அவர்களை முந்நூறு ஆண்டுகள் உறங்கவைத்துவிட்டான். அதன் பிறகு அவர்களை எழுப்பினான். இதுவும் அல்லாஹ்வின் பேராற்றல் ஆகும். அல்லாஹ்வே உயிர்கொடுப்பவன், மரணிக்கச் செய்பவன் என்பதை இந்நிகழ்வு நிரூபிக்கிறது. இது பற்றிய விவரமான செய்தி கஹ்ஃப் அத்தியாயத்தில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.

 

இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் இறைவனின் தன்மைகள் குறித்துப் பேசியபோது, "நான் நோயுற்ற தருணத்தில் அவனே என்னைக் குணப்படுத்துகிறான். அவனே என்னை மரணிக்கச் செய்வான்; பின்னர் அவனே என்னை (மறுமையில்) உயிர்ப்பிப்பான்'' (26: 80-81) என்று கூறினார்கள்.

 

நாளை  மறுமையில் இறைமறுப்பாளர்கள்,  "எங்கள் இறைவா! இருமுறை நீ எங்களை மரணிக்கச் செய்தாய்; இருமுறை நீ எங்களுக்கு உயிர் கொடுத்தாய். நாங்கள் எங்கள் குற்றங்களை ஒப்புக்கொள்கின்றோம். ஆகவே, (இதில் இருந்து நாங்கள்) வெளியே செல்ல ஏதும் வழி உண்டா?'' என்று கேட்பார்கள். (40: 11) இந்த வசனத்தில் இரண்டு தடவை மரணிக்கச் செய்ததாகவும் இரண்டு தடவை உயிர்கொடுத்ததாகவும் அவர்கள் கூறுகின்றார்கள். அதாவது இல்லாமையிலிருந்து உருவம்  உண்டாக்கி, உயிர்கொடுத்து மனிதனாக வாழ வைத்து, மரணிக்கச் செய்தான். பின்னர் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பினான். ஆக ஒரு மனிதன் இரண்டு தடவை இறப்பு நிலையிலும் (இல்லா நிலை) பிறகு இரண்டு தடவை உயிர்பெற்ற நிலையிலும் உள்ளான். ஆக அதைத்தான் இரண்டு தடவை மரணிக்கச் செய்தாய்; இரண்டு தடவை உயிர் கொடுத்தாய் என்று இறைமறுப்பாளர்கள் கூறியுள்ளனர்.

 

மேற்கண்ட இறைவசனத்தின்மூலம் இறைவன் ஒவ்வொரு மனிதருக்கும் இரண்டு தடவை உயிர்கொடுப்பதாகவும் இரண்டு தடவை மரணிக்கச் செய்வதாகவும் விளங்கிக்கொள்ள முடிகிறது. இது பண்டைய அறிவியல் ஆகும். ஆனால் தற்கால அறிவியல்படி இறைவன் ஒவ்வொரு நொடிப் பொழுதும் மனிதருக்கு உயிர்கொடுப்பதும் மரணிக்கச் செய்வதுமாக உள்ளான் என்பதே உண்மை. ஆம்! இன்றைய அறிவியல் அதை நிரூபித்துள்ளது. நம் உடல் கோடிக்கணக்கான (37.2 டிரில்லியன் செல்) அணுக்களால் அமைந்துள்ளது. ஒரு டிரில்லியன் என்பது ஓராயிரம் பில்லியன் ஆகும். அதாவது ஒன்றுக்குப்பின் 12 சுழிகள் (1012) போட்டால் அதுவே ஒரு டிரில்லியன் ஆகும்.

 

ஒவ்வொரு செல்லின் ஆயுட்காலத்தையும் அறிவியல் தொகுத்து வழங்குகிறது. அதன்படி, சிறுகுடல்- 2 முதல் 4 நாள்கள், வயிறு- 2 முதல் 9 நாள்கள், இரத்தச் சிவப்பணுக்கள் 2-5 நாள்கள்நாவின் சுவை அரும்புகள் 10 நாள்கள், குடல் அணுக்கள் 20 நாள்கள், தோலின் மேல்தோல் அணுக்கள் 10 முதல் 30 நாள்கள். இவ்வாறு ஒவ்வோர் உறுப்பும் ஒரு குறிப்பிட்ட காலம் வரை உயிர் வாழ்ந்து, பின்னர் மரணித்துவிடுகின்றன. ஒவ்வொரு நாளும் இலட்சக்கணக்கான அணுக்கள் இறந்துபோவதும் அவை இறந்ததும் புதிய அணுக்கள் தோன்றுவதும் நாள்தோறும் தொடர்படியாக நடைபெற்றுவரும் செயலாகும். ஆக இதன்மூலம் இறந்த உயிர்களுக்கு உயிர்கொடுத்து எழுப்புபவன்  என்ற பண்பு இறைவனுக்கு ஒவ்வொரு கணமும் நிரூபணமாகிக்கொண்டே இருக்கிறது.

 

ஏழினை (ஈமான்) இறைநம்பிக்கைகொள்வது கடமை. அவற்றுள் ஒன்று, ‘மரணத்திற்குப்பின் உயிர்கொடுத்து எழுப்பப்படும் என்று நம்புதல்' ஆகும். இதை நம்ப மறுத்த இறைமறுப்பாளன்,  "(மரணித்தவர்களை உயிர்ப்பிக்க நம்மால் முடியாதென எண்ணிக்கொண்டு) ஓர் உதாரணத்தை நம்மிடம் எடுத்துக் காட்டுகின்றான். அவன் தன்னைப் படைத்த(து யார் என்ப)தை மறந்துவிட்டு "உக்கி மண்ணாகிப் போன இந்த எலும்பை உயிர்ப்பிப்பவன் யார்?'' என்று (ஓர் எலும்பை எடுத்து அதனைத் தூளாக்கி ஊதிவிட்டு) அவன் கேட்கின்றான். (நபியே!) அதற்கு நீங்கள் கூறுங்கள்: "முதன் முதலாக அதனைப் படைத்தவன் எவனோ அவனே அதனை உயிர்ப்பிப்பான். அவனோ எல்லாப் படைப்பினங்களையும் மிக அறிந்தவன்.'' (36: 79-80)

 

இன்று வரை இந்தச் சந்தேகம் மக்கள் பலரிடம் உள்ளது. நாம் இறந்துபோனபின், நம் பிரேதத்தை எரித்துச் சாம்பலாக்கிவிடுகின்றனர். அதன்பின் நாம் எவ்வாறு உயிர்ப்பிக்கப்படுவோம் என்று கேட்கின்றனர். மனித உடல் எவ்வளவுதான் எரிக்கப்பட்டாலும் அதில் அழிக்கமுடியாத ஓர் எலும்பு உள்ளது. அதுதான் முதுகுத்தண்டின் வேர்ப்பகுதியில் அமைந்துள்ள உள்வால் எலும்பு (Coccyx bone) என அழைக்கப்படுகிறது. அதை அழிக்க முடியாது என நபிமொழி (புகாரீ: 4935) கூறுகின்றது. இதனை இன்றைய விஞ்ஞானமும் உறுதி செய்துள்ளது.

 

ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி ஹான்ஸ் ஸ்பீமேன்  (Hans Spemann) இதைத் தம்முடைய ஆய்வுக்கூடத்தில் பல ஆயிரம் டிகிரி மூலம் கரிக்கவும், பல அமிலங்களைக் கொண்டு கரைக்கவும் முயற்சி செய்தார். அவரால் முடியவில்லை. மனித உடலிலுள்ள அழிக்க முடியாத பகுதி இது என்பதை இந்த உலகுக்குத் தம்முடைய சோதனையின் மூலம் நிரூபித்தார்.

 

அந்த உள்வால் எலும்புமூலமே மனிதன் உயிர்கொடுக்கப்பட்டு எழுப்பப்படுவான். இது குறித்து  இறைவன் பேசும்போது, இல்லாமையிலிருந்து படைத்த நமக்கு மீண்டும் அவனைப் படைப்பது அவ்வளவு சிரமமன்று என்று கூறுகின்றான்.

 

ஆக உயிர்கொடுப்பவன், மரணிக்கச் செய்பவன் என்பதைக் கடந்த காலங்களில் விளங்கியதைவிட, இன்றையக் காலத்தில் மிகத் தெளிவாக விளங்கிக்கொள்வதற்கான ஆதாரங்கள் உள்ளன. அவனே உயிர்கொடுத்து மீண்டும் நம்மை எழுப்புவான் என்பதை உறுதிபட நம்பி வாழ்வோம்!

===================


Saturday, October 2, 2021

“திருக்குர்ஆனை எளிதில் ஓதிட” நூல் வெளிவந்துவிட்டது

 


“திருக்குர்ஆனை எளிதில் ஓதிட”
நூல் வெளிவந்துவிட்டது
=============
திருக்குர்ஆனை எல்லோரும் எளிதில் ஓதக் கற்றுக்கொள்ளவேண்டும் என்ற முயற்சியில் நான் நீண்ட காலம் ஈடுபட்டு வருகிறேன் என்பது உங்களுள் பலருக்குத் தெரிந்திருக்கலாம்.
முதல் முயற்சியாகக் காணொலிக் குறுவட்டு வெளியிட்டேன். அதன் மூலம் பலர் எளிய முறையில் திருக்குர்ஆனை ஓதக் கற்றுக்கொண்டதாகக் கூறினார்கள். இப்போது அது நூல் வடிவில் வெளிவந்துள்ளது.
அல்ஹம்து லில்லாஹ்.

அதில் நான் எழுதியுள்ள முன்னுரையைப் படித்தால் நூலின் உள்ளடக்கம் என்னவென்று உங்களுக்கு நன்றாக விளங்கும்.
இதோ

முன்னுரை
==========

அன்பான சகோதர, சகோதரிகளே!
மாணவ மாணவிகளே!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு

திண்ணமாக அறிவுரை பெறுவதற்காகவே நாம் இந்தக் குர்ஆனை எளிமையாக்கியிருக்கிறோம். எனவே அறிவுரை பெறுவோர் யாரேனும் உண்டா? (54: 17) என்று உயர்ந்தோன் அல்லாஹ் கேட்கின்றான்.

படித்தால் எளிதில் புரியும்; ஓதினால் நாவு எளிதாக உச்சரிக்கும்; மனனம் செய்தால் எளிதில் மனத்தில் பதியும். ஆக எல்லா வகைகளிலும் அல்லாஹ் இந்தக் குர்ஆனை எளிமையாக அமைத்துள்ளான்.

அதனால்தான் இவ்வுலகில் வாழும் கோடானு கோடி இதயங்கள் இந்தக் குர்ஆனை மனனம் செய்துள்ளன. இச்சிறப்பு வேறு எந்த வேதத்திற்கும் இல்லை.

அதிகாலை எழுந்து தம் மஹல்லா பள்ளிவாசலில் உள்ள மக்தப் மத்ரஸாவிற்குத் தம் பிள்ளைகளை அனுப்பிவைத்து, திருக்குர்ஆனைக் கற்றுக்கொள்ளச் செய்தார்கள் அன்றைய பெற்றோர்கள். அவர்கள் அதைத் தம் கடமையாகக் கருதினார்கள். இன்றும் கிராமங்களில் அப்பழக்கம் தொடர்கிறது என்ற போதிலும் நகரங்களில் குறைந்துள்ளதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.


இந்தத் திருக்குர்ஆனை ஒவ்வொருவரும் ஓதுமாறும் ஆய்வு செய்யுமாறும் அல்லாஹ் கட்டளையிடுகின்றான். இதனை ஓதுவோருக்கு ஓரெழுத்துக்குப் பத்து நன்மை உண்டு என நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஊக்கப்படுத்தியுள்ளார்கள்.


ஓத வேண்டும் என்ற உந்துதலால் கண்பார்வையற்றோரும் புதிதாக இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக்கொண்டோரும் திருக்குர்ஆனை ஓதத் தொடங்கிவிட்டார்கள். ஓதுவது மட்டுமல்ல, மனனம் செய்த ஹாஃபிழ்களாகவும் திகழ்கின்றார்கள். அக்காட்சியைக் காணும்போது கண் இருந்தும் திருக்குர்ஆனைப் பார்த்து ஓதத் தெரியவில்லையே என்று ஏங்குவோர் உண்டு. அவர்களின் ஏக்கத்தைப் போக்கும்வண்ணம் ஒரு நூலை வெளியிட வேண்டுமென எண்ணினேன். அந்த எண்ணத்தின் வெளிப்பாடே, “திருக்குர்ஆனை எளிதில் ஓதிட” எனும் இந்நூல்.

பதினைந்தே பாடங்களில் அமைக்கப்பட்டுள்ள இந்நூலை வைத்துக்கொண்டு எளிய முறையில் நீங்களே சுயமாகத் திருக்குர்ஆனை ஓதக் கற்றுக்கொள்ளலாம். அதேநேரத்தில் கற்றுக்கொள்ள ஓர் ஆசிரியரின் உதவி தேவை என்பதைத் தவிர்க்க முடியாது. அதற்காகவே ஓர் ஆசிரியர் உங்களோடு இருந்து உங்களுக்குச் சொல்லிக்கொடுக்கும் விதத்தில் காணொலி வடிவில் பாடங்கள் நடத்தப்பட்டு யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. அதை நீங்கள் உங்கள் கணினியிலோ அலைபேசியிலோ இயக்கி, காட்சியைப் பார்த்துக்கொண்டே இந்நூலைக்
கவனித்தால் அல்லாஹ்வின் உதவியால் நீங்கள் சுயமாகவே திருக்குர்ஆனை எளிய முறையில் ஓதக் கற்றுக்கொள்ளலாம். அதன்பின் சில மாதங்களில் திருக்குர்ஆனை அதன் மூலமொழியான அரபியில் சரளமாக வாசிக்கத் தொடங்கிவிடலாம்.


இவ்வளவு வயதானபின்னர் இனி என்னால் எவ்வாறு கற்றுக்கொள்ள இயலும் என்று மலைப்பாக எண்ணாதீர்கள். “என்னால் முடியும்” என்ற நேர்மறை எண்ணத்தோடு ஓத முன்வாருங்கள். “ஓதியே தீருவேன்” என்று மனத்தில் வைராக்கியம் கொள்ளுங்கள். உங்கள் உயர்வான எண்ணமே உங்களை உயர்த்தும். உயர்ந்தோன் அல்லாஹ் நம் அனைவரின் முயற்சிகளையும் வெற்றிபெறச் செய்வானாக.


Dr.N.Abdul Hadi Baquavi எனும் யூடியூப் சேனலில் “திருக்குர்ஆனை எளிதில் ஓதிட...” எனும் தலைப்பிலான பிளே லிஸ்டில் காணொலி வடிவிலான பாடங்களைப் பார்த்துக் கற்றுக்கொள்ளலாம்.
இந்நூலை வெளியிட இன்முகத்தோடு முன்வந்த சாஜிதா பதிப்பக உரிமையாளர் ஜனாப் ஜகரிய்யா அண்ணன் அவர்களுக்கு இறைவன் தன் அருளையும் பொருளையும் அளவின்றி அள்ளி வழங்குவானாக! ஆமீன்.

அன்புடன்
மௌலவி காரீ Dr. நூ. அப்துல் ஹாதி பாகவி
02 10 2021 24 02 1443
============


நூல் விவரம்:

நூல் பெயர் : திருக்குர்ஆனை எளிதில் ஓதிட...

ஆக்கம் : முனைவர் மௌலவி. நூ. அப்துல் ஹாதி பாகவி

விலை : ரூ. 35/-

மதரஸாவுக்கும் நண்பர்களுக்கும் அன்பளிப்பு செய்ய மொத்தமாக வாங்குபவர்களுக்கு விலையில் சலுகை உண்டு.

பக்கங்கள் : 56 (டபுள் கிரவுன் சைஸ்)

வெளியீடு : சாஜிதா புக் சென்டர்
248, தம்புச் செட்டி தெரு, மண்ணடி, சென்னை - 600 001.

போன் : (044) 2522 4821 / 98409 77758


98409 77758, 72996 94049 - என்ற எண்ணில் கூகுள் பே மூலமாகவும் பணம் செலுத்தலாம்.
=================


Friday, September 17, 2021

இமாமும் முத்தவல்லியும் சமுதாயத்தின் இரு கண்கள்

 

-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

ஒரு பள்ளிவாசல் இமாமும் அப்பள்ளியின் முத்தவல்லியும் ஒரு மஹல்லாவின் இரண்டு கண்கள் என்றால் அது மிகையாகாது. ஒவ்வொரு பள்ளியின் இமாமும் முத்தவல்லியும் (பள்ளிவாசல் தலைவர்) ஒன்றாக, ஒரே நேர்க்கோட்டில் பயணித்தால், இணைந்து களப்பணியாற்றினால் அந்த மஹல்லா மக்கள் ஏற்றம் பெறவும் அவர்களின் வாழ்வில் மாற்றம் ஏற்படவும் வழியேற்படும் என்பது உறுதி.


கணக்கெடுப்பு: ஒரு மஹல்லாவின் பள்ளித்தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் ஒன்றிணைந்து ஆலோசனை செய்து, தம் மஹல்லாவில் சந்தா செலுத்துவோர், சந்தா செலுத்தாதோர், படித்துப் பட்டம் பெற்றோர், அரசுப் பணிசெய்வோர், ஆசிரியர்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், தொழிலதிபர்கள்ஸகாத் வழங்குவோர், ஸகாத் பெறத் தகுதியுடையோர் உள்ளிட்ட எல்லாவித விவரங்களையும் சேகரித்துப் பள்ளியில் வகைப்படுத்தி வைத்துக்கொள்ள வேண்டும். இந்தத் தகவல்கள்தாம் ஒரு மஹல்லாவின் முன்னேற்றத்திற்கு அடிப்படையாகும். இதை வைத்துக்கொண்டுதான் அடுத்தடுத்த சேவைகளைச் செய்ய முடியும். 


இந்தக் கணக்கெடுப்பிற்குப்பின் அந்த மஹல்லாவில் சந்தா செலுத்துவோர் அனைவருக்கும் ஓர் அடையாள அட்டை வழங்க வேண்டும். அந்த அட்டையில் சந்தா எண், வீட்டு முகவரி உள்ளிட்டவை இடம்பெற்றிருக்க வேண்டும். அடுத்தடுத்து அவர் பள்ளி நிர்வாகத்தைத் தொடர்புகொள்கிறபோது அந்த எண்ணை ஓர் அடையாளமாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அதாவது திருமணத்திற்காகத் தடையில்லாச் சான்றிதழ் (என்ஓசி), இறப்புச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்கள் பெறும்போது அந்த எண்ணைக் கூறினால் அவருடைய பெயரும் முகவரியும் தெரிந்துவிடும். ஒவ்வொரு தடவையும் அதைக் கொண்டுவா, இதைக் கொண்டுவா என்று கூறத் தேவையிருக்காது.


சந்தா எண் அடிப்படையில் ஒவ்வோர் ஆண்டும் சந்தா செலுத்தியோர், சந்தா செலுத்தாதோர் விவரங்களைப் பதிவு செய்துகொண்டு, கடந்த ஆண்டில் தொடர்ந்து சந்தா செலுத்தாதோரிடம்  நேரடியாகச் சென்று, சந்தா செலுத்தாத காரணத்தை அறிந்து, பொருளாதார நெருக்கடி என்றால் அதை ஏற்றுக்கொண்டு, அவருக்குப் பள்ளி நிர்வாகம் பொருளாதார உதவி செய்ய முன்வர வேண்டும். பொருளாதார நெருக்கடியின்றி, வேண்டுமென்றே சந்தா செலுத்தாமல் இருந்தால், சந்தா செலுத்துமாறு கூற வேண்டும். மீண்டும் அவ்வாறே தொடர்ந்தால் "மஹல்லாவாசிகள்' பட்டியலிலிருந்து அவரை நீக்கம் செய்துவிட வேண்டும்.


மாறாக ஆண்டுக்கொரு முறை சந்தா கணக்கெடுப்பைச் சரிசெய்யாமல், ஒருவர் தம் வீட்டில் திருமணம் என்றோ, மரணம் என்றோ வரும்போது அவரை உட்கார வைத்து, மொத்தமாக ஆயிரக்கணக்கில் சந்தா வசூலிக்கக்கூடாது. இது அவருக்கு மிகப்பெரும் பொருளாதாரச் சுமையை உண்டாக்கும். அதுவும் வீட்டில் மரணம் என்று சந்தூக் பெறுவதற்காக வரும்போது, அது அவருக்கு அடிமேல் அடியாக அமைந்துவிடும். சில மஹல்லாக்களில் இது தீர்க்க முடியாத சிக்கலாக நீடிப்பதைக் கேள்விப்படுகிறோம். இது முற்றிலும் களையப்பெற வேண்டும். 


நிதியுதவி: கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்டோர், சம்பாதிக்க எந்த ஆணும் இல்லாத பெண்கள், முதியோர் முதலானோரைக் கணக்கெடுத்து, அவர்களுக்குப் பொருளாதார உதவி தேவைப்பட்டால் மாதந்தோறும் குறிப்பிட்ட தொகையை வழங்குவது பள்ளி நிர்வாகம் செய்ய வேண்டிய முக்கியமான பணியாகும். ஒவ்வொரு பள்ளி நிர்வாகமும் இத்திட்டத்தைச் செயல்படுத்தத் தொடங்கிவிட்டால் நம் சமுதாயத்தில் யாசகர்கள் அருகிப் போய்விடுவார்கள். இதற்கான நிதியாதாரம் பெரும்பாலான பள்ளிகளில் இருக்கவே செய்கின்றது. போதிய நிதியாதாரம் இல்லாத பள்ளி நிர்வாகத்தார், இத்திட்டத்தைச் செயல்படுத்த, பள்ளியில் பொது அறிவிப்புச் செய்தால் போதும். செல்வர்கள் பலர் பொறுப்பேற்றுக் கொள்ளத் தயாராக இருக்கின்றார்கள். நல்ல திட்டங்களுக்குச் செலவழிக்க அவர்கள் எப்போதும் தயாராகவே இருந்து வருகிறார்கள் என்பது கடந்த காலம்தொட்டு இந்நாள் வரையுள்ள யதார்த்தமான உண்மையாகும்.


ஸகாத்தை முறைப்படுத்துதல்: ஸகாத் பெறத் தகுதியுடையோர் எத்தனை பேர், ஸகாத் கொடுப்போர் எத்தனை பேர் என்ற பட்டியல் பள்ளியில் இருந்தால் ஸகாத் கொடுப்போரிடமிருந்து ஸகாத்தை வசூல் செய்து ஸகாத் பெறத் தகுதியுடைய மஹல்லாவாழ் மக்களுக்குப் பள்ளி நிர்வாகமே வழங்கலாம். இதனால் குறிப்பிட்ட சிலருக்கு மீண்டும் மீண்டும் வழங்கப்படுவதும், வேறு சிலருக்கு அறவே கிடைக்காமல் போவதும் தடுக்கப்படும். 


கல்வி உதவித்தொகை: ஒவ்வொரு மஹல்லா நிர்வாகிகளும் ஒருங்கிணைந்து நன்றாகப் படிக்கின்ற, அதேநேரத்தில் கல்விக் கட்டணம் கட்ட முடியாமல் வறுமையில் தடுமாறுகிற பத்து மாணவர்களைத் தேர்ந்தெடுத்து குறிப்பிட்ட துறைகளில் படித்து, பட்டம்பெற கல்வி உதவித்தொகை வழங்கலாம். குறிப்பாக மருத்துவம், பொறியியல், ஊடகத்துறை, நீதித்துறை (வக்கீல்), கணிதத்துறை, பட்டயக் கணக்கு முதலான துறைகளில் படிக்க ஆர்வமூட்டலாம். அந்தப் பத்துப்பேர்களுள் இருவரோ மூவரோ மாணவிகளாக இருக்கலாம். இவ்வாறு ஒவ்வொரு மஹல்லா நிர்வாகமும் கல்வித்துறையில் மாணவர்களுக்கு ஊக்கமளித்தால் நம் சமுதாய இளைஞர்கள் எதிர்காலத்தில் நல்லதொரு முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைக்கத் தொடங்கிவிடுவார்கள்.  அது மட்டுமல்ல அவர்கள் நல்ல நிலைக்கு வந்து பலருக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நிலை ஏற்படும்.


பாலர் வகுப்புகள்: சிறுவர் சிறுமியர்க்கான பாலர் வகுப்புகள் (மக்தப் மத்ரஸா) ஒவ்வொரு பள்ளிவாசலிலும்  காலை மாலை நடைபெற பள்ளிவாசல் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது அவர்களின் தலையாயக் கடமையாகும். சிலருக்குக் காலை நேரம் வசதியாக இருக்கும். வேறு சிலருக்கு மாலை நேரம் வசதியாக இருக்கும். யாருக்கு எந்நேரம் வசதியாக இருக்கிறதோ அவர்கள் அந்த நேரத்தில் வந்து கற்றுக்கொள்ளலாம். தற்போது கொரோனா எனும் தொற்றுநோய் அச்சத்தில் உலக மக்கள் சிக்கவைக்கப்பட்டுள்ளதை அறிவோம். எனவே பாலர் வகுப்பு தடைபடாமல் இருக்க, ஆன்லைன் வழி வகுப்புகள் நடைபெற வழிவகை காண வேண்டும்.


அதை விடுத்து, நமக்கென்ன என்று வெறுமனே இருந்துவிடக்கூடாது. இதற்கான வழிவகை செய்யாமல் விட்டுவிட்டால் ஒரு தலைமுறையே திருக்குர்ஆனை ஓதத் தெரியாச் சமூகமாக மாறிவிடும். ஏற்கெனவே பல்வேறு சூழ்ச்சிகளால் முஸ்லிம் சிறார்களும் சிறுமியரும் குர்ஆன் ஓதக் கற்பதிலிருந்து பல்வேறு வழிகளில்  தடுக்கப்பட்டிருக்கின்றார்கள். இப்போது பாலர் வகுப்புக்கான தடை தொடர்ந்தால், கற்றுக்கொள்ள முனைகின்ற சிலரும் கற்க வாய்ப்பில்லாமல் போய்விடும். நூறு சதவிகிதம் ஒவ்வொரு மஹல்லாவிலும் திருக்குர்ஆனைப் பார்த்துப் படிக்கக் கற்றுக்கொள்வதை உறுதி செய்வது நிர்வாகத்தின் கடமையாகும்.


முதியோர் கல்வி: எத்தனையோ பேர் தம் இளம் பிராயத்தில் குர்ஆன் குறித்த புரிதல் இல்லாமல்  அதன் முக்கியத்துவம் உணராமல், ஓதக் கற்றுக்கொள்ளாமல் விட்டுவிட்டனர். முதுமையை அடைந்த அவர்கள் இப்போதாவது திருக்குர்ஆனை ஓதக் கற்றுக்கொள்ளலாமே என்று ஆர்வம்கொள்கின்றனர்.


அவர்களுக்கென ஒரு குறிப்பிட்ட நேரத்தில் முதியோர் வகுப்பு தொடங்கப்பட்டால் முதியோர் பலர் அதன்மூலம் பயன்பெறுவார்கள். மேலும் தம் முதுமையைப் பயனுள்ள வழியில் கழிக்க இது ஒரு நல்வாய்ப்பாக அமையும். அதேநேரத்தில் அவர்களுக்குக் கற்றுக்கொடுக்கும் உஸ்தாதாக அவர்களின் வயதொத்த ஒருவரை நியமித்தால் மனச் சங்கடமின்றிக் கற்றுக்கொள்வார்கள்.


மகளிர் மேம்பாடு: பெண்களின் கல்விக்கென கற்றறிந்த ஆலிமாக்களை நியமிப்பதும் வாரந்தோறும்  பெண்கள் பயான் ஏற்பாடு செய்வதும் இளம்பெண்களுக்கெனத் தனி வகுப்புகள் நடத்த அவர்களுக்கான ஷரீஅத் சட்டங்களை விளக்கிக் கூறும் வகையில் ஆலிமாக்களை நியமிப்பதும் பள்ளி நிர்வாகம் மேற்கொள்ள  வேண்டிய பணிகளாகும். 


இச்சமுதாயத்திற்குச் செய்ய வேண்டிய இன்னும் எத்தனையெத்தனையோ பணிகளும் தொண்டுகளும் உள்ளன. அவற்றையெல்லாம் தொகுத்து எழுதினால் தனி ஒரு நூலே உருவாகிவிடும். அந்தந்த மஹல்லாவின் பொருளாதார வசதிக்கேற்பவும் தேவைகளுக்கேற்பவும் அவரவர் தொண்டுகள் செய்வதும் சேவையாற்றுவதும் தற்காலத்தில் மிக மிக அவசியமாகும்.


ஒருவர் தம் மஹல்லாவின் முத்தவல்லியாக இருந்துகொண்டு, இமாமுக்கும் முஅத்தினுக்கும் சம்பளம் கொடுப்பதும் அவர்கள்மீது தமது சீற்றத்தைப் பாய்ச்சுவதும் தவிர, மஹல்லா முன்னேற்றத்திற்காக எதையுமே செய்யவில்லையெனில் அல்லது எத்தொண்டும் செய்ய ஆர்வமில்லையெனில் அவர் தம் பொறுப்பைத் தகுதியான ஒருவருக்கு விட்டுக்கொடுத்துவிட்டுதம் பதவியிலிருந்து ஒதுங்கிக்கொள்வது நல்லது. ஏனெனில், "உங்களுள் ஒவ்வொருவரும் பொறுப்பாளி; உங்களுள் ஒவ்வொருவரும் தத்தமது பொறுப்பைப் பற்றி விசாரிக்கப்படுவார்'' (புகாரீ:  893) என்ற நபிமொழிசமுதாயப் பொறுப்பு வகிக்கின்ற ஒவ்வொருவரையும் எச்சரிக்கிறது என்பதை நினைவில் கொள்வோம்; நம் பொறுப்பைச் செவ்வனே நிறைவேற்றுவோம்.

================