சனி, 31 ஆகஸ்ட், 2019

சனி, 24 ஆகஸ்ட், 2019

வியாழன், 22 ஆகஸ்ட், 2019

ஒருவருக்கொருவர் பகைவர்


==========================
சொர்க்கத்திலிருந்து ஆதம் (அலை) அவர்களை அல்லாஹ் வெளியேறுமாறு சொன்னபோது...
"உங்களுள் ஒருவர் (மற்று) ஒருவருக்குப் பகைவராக இருக்க-நீங்கள் இங்கிருந்து இறங்கிவிடுங்கள்" என்று நாம் கூறினோம். (2: 36)
அல்லாஹ் கூறியுள்ள இவ்வசனத்தின் அடிப்படையில் சிந்தித்தால் இன்றைய நாட்டு நடப்புகள் குறித்து ஆயிரமாயிரம் விளக்கங்கள் எழுதலாம்.
-மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி
22.08.2019 20.12.1440



திங்கள், 19 ஆகஸ்ட், 2019

இறந்தோர்க்கு நன்மையைச் சேர்க்கும்போது பாலினம் பார்க்கக் கூடாது

-----------------------------------------------------------------------------------------
இறந்துவிட்ட பெற்றோருக்கு நன்மையைச் சேர்க்கும் விதமாகச் சிலர் ஆடைகளை வாங்கிக் கொடுப்பதுண்டு. அப்போது சிலர் தம் அம்மாவின் நினைவாகச் சேலை வாங்கிக் கொடுப்பதும் அப்பாவின் நினைவாக வேட்டி வாங்கிக் கொடுப்பதும் வழக்கமாக உள்ளது. 

உங்கள் வீட்டருகே ஓர் ஏழை மூதாட்டி இருக்கிறார். அவருக்கு மாற்றுச் சேலை இல்லை. ஆனால் நீங்கள் உங்கள் அப்பாவின் நினைவாக ஒரு வேட்டியை வாங்கித் தர்மம் செய்ய நினைக்கின்றீர்கள். அப்போது வேட்டி வாங்கும் உங்கள் எண்ணத்தை மாற்றிக்கொண்டு, அதற்குப் பதிலாக ஒரு சேலையை வாங்கி அம்மூதாட்டிக்குக் கொடுங்கள். நிச்சயமாக அந்த நன்மை உங்கள் அப்பாவிற்குச் சேர்ந்துவிடும். 

அதுபோலவே உங்கள் அம்மாவின் நினைவாக ஒரு சேலை வாங்கிக் கொடுத்து அதன் நன்மையை உங்கள் அம்மாவிற்குச் சேர்க்க நினைக்கின்றீர்கள். ஆனால் பக்கத்துத் தெருவில் ஒரு முதியவர் மாற்று வேட்டி இல்லாமல் வாழ்கிறார். இப்போது உங்கள் எண்ணத்தை மாற்றிக்கொண்டு, அதற்குப் பதிலாக ஒரு வேட்டியை வாங்கி உங்கள் அம்மாவின் நினைவாக அம்முதியவருக்கு வழங்கலாம். நிச்சயம் அதன் நன்மை உங்கள் அம்மாவிற்குச் சேர்ந்துவிடும்.

ஆக, உயிரோடுள்ள உங்கள் தாய்க்குச் சேலையும் அப்பாவுக்கு வேட்டியும் வாங்கிக் கொடுங்கள். அதேநேரத்தில் இறந்துவிட்ட தாய்-தந்தைக்கு நன்மையைச் சேர்க்க நாடும்போது பாலினம் பார்க்கத் தேவையில்லை. அருகிலிருப்போரின் தேவையைத்தான் முன்னிலைப்படுத்த வேண்டும் என்பதை உணர்வோம். இனி நீங்கள் அம்மாவின் நினைவாக ஒரு முதியவருக்கு வேட்டி வாங்கிக் கொடுக்கலாம். அப்பாவின் நினைவாக ஒரு மூதாட்டிக்குச் சேலை வாங்கிக் கொடுக்கலாம். உங்கள் வீட்டருகே உள்ளவர் என்ன தேவையுடையவராக இருக்கிறாரோ அதற்கேற்ப வழங்குங்கள். அவற்றின் நன்மை மட்டுமே இறந்தோருக்குச் சேரும் என்பதை மனதில் கொள்ளுங்கள். 

-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி, மணலி, சென்னை-68
=======================================================

ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2019

புர்காவைப் பேணுவோம்

ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2019

மகன் தந்தைக்காற்றும் உதவி!

மகன் தந்தைக்காற்றும் உதவி!



-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.
----------------------------------------------------------------------
தந்தை இறந்துவிட்டால் என்ன செய்ய வேண்டுமென அவருடைய பிள்ளைகள் அறிந்துகொள்வது மிகமிக அவசியமாகும். இறந்துவிட்ட தந்தையின் உடலை மிகத் துரிதமாக நல்லடக்கம் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும். அருகிலுள்ள நெருங்கிய உறவினர்களுக்குத் தகவல் கொடுத்துவிட்டு, தூரத்திலுள்ள உறவினர்களிடம், செய்தியைத் தெரிவித்து, துஆச் செய்யுமாறு மட்டும் கூறிவிட வேண்டும். ஏனென்றால் மிகத் தொலைவிலிருந்து அவர்கள் வந்துசேர்கின்ற வரை நல்லடக்கம் செய்வதைப் பிற்படுத்துவது சரியல்ல.

இரண்டாவது இமாமாக நின்று தந்தைக்கு ஜனாஸா தொழுகை நடத்துவது ஒரு மகனின் கடமையாகும். அது குறித்து மகன் அறிந்திருக்க வேண்டும். ஏனெனில் தந்தைக்கு அவர்தம் மகனைவிட மனமுருகி துஆச் செய்ய யாரால் முடியும்? யாருக்கு அத்தகைய உணர்வு ஏற்படும்? தன் தந்தை மன்னிக்கப்பட வேண்டும் என்பதில் அதிக ஆர்வமும் அக்கறையும் மகனுக்குத்தான் இருக்கும். ஜனாஸா தொழுகையை நடத்துமுன் அவர்தம் மகன் மக்கள் முன்னிலையில் வந்து, "என் தந்தை உங்களுக்கு ஏதேனும் தீங்கு செய்திருந்தால் அதை அல்லாஹ்வுக்காக மன்னித்துவிடுங்கள்'' என்று கோரிக்கை விடுக்க வேண்டும். அத்தோடு "என் தந்தை உங்களுள் யாரிடமாவது கடன் பெற்றிருந்தால், அதற்கான சான்றைக் காட்டி அக்கடனைத் திரும்பப் பெற்றுக்கொள்ளுங்கள்'' என்று வேண்டுகோள் விடுக்க வேண்டும். இதுவே ஒரு மகனின் தலையாய கடமை. 

நல்லடக்கம் செய்து முடித்தபின் அவருக்காகப் பாவமன்னிப்பு வேண்டி, அவரது மண்ணறை அருகே நின்று பிரார்த்தனை செய்துகொண்டிருக்க வேண்டும். அதன்மூலம் அவரது கேள்வி கணக்கு-விசாரணை எளிமையாக்கப்படுகிறது. நல்லடக்கம் செய்து முடித்தபின், இமாமோ முஅத்தினோ துஆ ஓதியவுடன் அங்கு வந்திருந்த மக்கள் சென்றுவிட்டாலும், மகன்களும் நெருங்கிய உறவினர்களும் அங்கேயே நின்று அவருடைய பாவமன்னிப்பிற்காக துஆச் செய்ய வேண்டும். இதைப் பலரும் அறிவதில்லை. 

இறந்துபோன தந்தையின் உடலைத் தாமதமாக நல்லடக்கம் செய்வது முதல் தவறு. இவர் வரவேண்டும், அவர் வர வேண்டும் என்று கூறி, மறுநாள் வரை தாமதப்படுத்துவதே நம் மக்களின் வழக்கமாக உள்ளது. இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். இரண்டாவது, தந்தையின் பிரேதத்தைக் குளிப்பாட்ட ஆள் தேடப்படுகிறது. ஒவ்வொரு மஹல்லாவிலும் பள்ளிவாசலில் பணியாற்றுகின்ற முஅத்தின் வரவேண்டும்; அவர் எங்கேனும் வெளியூர் சென்றுவிட்டால் அடுத்த மஹல்லாவிலுள்ள முஅத்தின் அழைக்கப்படுவார். ஆக முஅத்தின்தான் ஜனாஸாவைக் குளிப்பாட்ட வேண்டும் என்ற எழுதப்படாத விதி நம்மிடையே உள்ளது. ஒருவருக்குப் பிறந்த பிள்ளைகள் யாரும் அதைச் செய்ய முன்வருவதில்லை. இறந்தபின் உடனடியாகச் செய்ய வேண்டிய, 'ஆடை மாற்றுதல்' என்பதைக்கூட முஅத்தின் வந்துதான் செய்ய வேண்டும். இதுதான் நம் மக்களின் இன்றைய நிலை.

ஒரு தந்தை தன் பிள்ளைக்கு மார்க்க அறிவைக் கற்பித்திருந்தால் அவர் இறந்தபின் அவருக்குச் செய்ய வேண்டியவற்றை மகனே முன்னின்று செய்வான். ஆனால் அவரோ பள்ளிவாசல் பக்கமே அவனை அழைத்துச் சென்றதில்லை. ஆகவே அவர் இறந்தபின் அவன் தூரவிலகி நிற்கின்றான். அவருக்கு உடை மாற்றவோ, அவரைக் குளிப்பாட்டவோ தெரிவதில்லை. இதுவே தெரியாதபோது, அவருக்கு இறுதித் தொழுகை நடத்துவது குறித்தா தெரியப்போகிறது? தொழுகையில் அல்லது தொழுகை முடித்து, மனமுருகி மன்னிப்புக்கோரும் விதம் குறித்து எப்படி அவன் அறிவான்?

மனிதன் இறந்துவிட்டால் அவனுடைய மூன்று செயல்களைத் தவிர மற்ற அனைத்தும் நின்றுவிடுகின்றன; 1. நிலையான அறக்கொடை 2. பயன்பெறப்படும் கல்வி. 3. அவனுக்காகப் பிரார்த்திக்கும் (அவனுடைய) நல்ல குழந்தை என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்: 3358) 

இந்நபிமொழியின் அடிப்படையில் மகன் தன் தந்தைக்குச் செய்யும் கைம்மாறு அவன் மனமுருகிச் செய்யும் துஆதான். அதுவும் அவனுக்குத் தெரியாது. இமாம் துஆ ஓத, மற்றவர்களோடு சேர்ந்து அவனும் ஆமீன், ஆமீன் என்று மனம் ஒன்றாமல் சொல்லிவிட்டுச் செல்வான். ஒரு மகன் தன் தந்தைக்குச் செய்யும் கைம்மாறு அவன் செய்யும் துஆதானே? "என் இறைவா! நான் குழந்தையாக இருந்தபொழுது (மிக்க அன்பாக) என்னை அவர்கள் வளர்த்துப் பாதுகாத்தவாறே நீயும் அவ்விருவர் மீதும் அன்பும் அருளும் புரிவாயாக!'' என்று நீங்கள் பிரார்த்தனை செய்யுங்கள் (17:24) என அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுவதும் அதுதானே?

அது மட்டுமல்ல, தன் தந்தையின் இறுதித் தொழுகையில் கலந்துகொள்ள, பொதுமக்களுக்கு அழைப்புக் கொடுத்து, நிறையப் பேரைத் தொழுகையில் பங்குகொள்ளச் செய்வது ஒரு மகன் தன் தந்தைக்காற்றும் உதவியாகும். ஏனெனில் நிறையப் பேர் தொழுகையில் கலந்துகொண்டு, அவர்கள் அனைவரும் அவருக்காகப் பாவமன்னிப்புக் கோரினால் அல்லாஹ் அவர்களின் பரிந்துரையை ஏற்றுக்கொள்கிறான். 
அது குறித்துக் கூறுகின்ற நபிமொழியைப் பாரீர்!

"இறந்த ஒருவருக்கு நூறுபேர் கொண்ட முஸ்லி­ம் குழுவினர் (இறுதித்) தொழுகை தொழுது, அவர்களுள் ஒவ்வொருவரும் அவருக்காகப் பரிந்துரை செய்தால் அவர்களின் பரிந்துரை ஏற்கப்படாமல் இருப்பதில்லை'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்: 1729)

"ஒரு முஸ்லி­ம் இறந்தவுடன் அல்லாஹ்விற்கு எதையும் இணைவைக்காத நாற்பது பேர் அவருக்காக (இறுதித் தொழுகை) தொழுதால் அவர்களின் பரிந்துரையை அல்லாஹ் ஏற்காமல் இருப்பதில்லை'' என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியுற்றுள்ளேன்'' (முஸ்லிம்: 1730) என்று இப்னு அப்பாஸ் (ரளி) கூறியுள்ளார். ஆக நாற்பது முதல் நூறு பேர் வரை ஜனாஸா தொழுகையில் பங்குகொள்வதற்கான ஏற்பாட்டைச் செய்வது மகனின் தார்மீகக் கடமையாகும். அதுவே அவன் தன் தந்தைக்குச் செய்யும் பேருதவியாகும். 

இதன் முக்கியத்துவம் குறித்தெல்லாம் இன்றைய தலைமுறையினருக்குத் தெரிவதில்லை. எத்தனை பேர் வந்தால் என்ன, வராவிட்டால் என்ன எனும் அசட்டையான போக்கே காணப்படுகின்றது. ஜனாஸா தொழுகையின் முக்கியத்துவம், அதில் துஆ ஓதப்படுவதன் முக்கியத்துவம் எதுவும் அவர்களுக்குத் தெரிவதில்லை.

இறைநம்பிக்கைகொண்டு நமக்குமுன் இறந்துவிட்டோரின் பாவங்களுக்காக நாம் மன்னிப்புக் கோரிப் பிரார்த்தனை செய்வது நம் கடமையாகும். அது குறித்து அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுவதைப் பாருங்கள்: "எங்கள் இறைவா! எங்களையும் இறைநம்பிக்கை கொண்டு எங்களை முந்திச் சென்றுவிட்ட எங்கள் சகோதரர்களையும் மன்னிப்பாயாக. மேலும் இறைநம்பிக்கையாளர்கள்மீது எங்களின் உள்ளங்களில் எந்தக் குரோதத்தையும் ஏற்படுத்திவிடாதே... என்று அவர்கள் கூறுவார்கள்.'' (59: 10) முன்சென்றுவிட்ட சகோதர, சகோதரிகளுக்காக இவ்வாறு நாம் பாவமன்னிப்புக் கோர வேண்டுமென இறைவனே கற்பிக்கின்றான்.

நம் மஹல்லாவில் இறந்துவிட்ட ஒருவருக்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து அவரின் பாவங்களை மன்னித்துவிடுமாறு கோரிக்கை விடுத்தால் அக்கோரிக்கையை அல்லாஹ் ஏற்றுக்கொள்வான். இதனால்தான், ஒரு ஜனாஸாவுக்காக நாற்பது பேர் ஒன்றிணைந்து துஆச் செய்தால் அவர்களின் பரிந்துரையை அல்லாஹ் ஏற்றுக்கொள்கிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

இறந்துவிட்ட பெற்றோருக்காக நன்மையைச் சேர்த்துவைக்க எல்லோரும் தகுந்த முயற்சி செய்கின்றனர். அதில் எந்தக் குறையும் வைப்பதில்லை. ஏனென்றால் வாழும்போது பெற்றோருக்குப் பணிவிடை செய்யாதவன்கூட, அவனுடைய பெற்றோர் இறந்துவிட்டால் அவர்களுக்கான சடங்குகளைப் பின்பற்றுவதில் எந்தக் குறையும் வைப்பதில்லை, சிலர் விதிவிலக்கு இருக்கலாம். அந்த வகையில், பெற்றோருக்காக நன்மையைச் சேர்ப்பதில் முதலிடம் வகிப்பது, திருக்குர்ஆனை முழுமையாக ஓதி அதன் நன்மைகளைச் சேர்ப்பதுதான். மார்க்க அறிஞர்கள் சிலர் இதனை ஏற்றுக்கொள்வதில்லை. வேறு அறிஞர்கள், ஓதப்பட்ட திருக்குர்ஆனின் நன்மையை அன்பளிப்புச் செய்வது, இறந்துவிட்டவருக்குச் சேரும் என்று கூறுகின்றார்கள். அந்த அடிப்படையில்தான் நாம் செயல்படுகின்றோம். இருப்பினும் இது ஓர் ஒப்பீட்டளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட செயல்பாடுதானே தவிர நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நேரடியாக வழிகாட்டிய நல்லறம் இல்லை என்பதை நினைவில் கொள்வோம். 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய நேரடியான நல்லறங்கள் நிறையவே உள்ளன. அவற்றுள் முதன்மையானது தண்ணீர்த் தானம் ஆகும். சஅத் (ரளி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! சஅதின் தாய் இறந்துவிட்டார். எனவே (அவருக்காக) எதைத் தர்மம் செய்வது சிறந்தது?'' என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் "தண்ணீர்'' என்று கூறினார்கள். சஅத் (ரளி) அவர்கள் ஒரு கிணற்றைத் தோண்டி "இது சஅதுடைய தாயாருக்கு உரியதாகும்'' என்று கூறியதாக அவர்தம் மகனார் உபாதா (ரளி) அறிவிக்கிறார். (அபூதாவூத்: 1431)

ஆடையற்றோருக்கு ஆடை வாங்கிக் கொடுத்தல், கிணற்றைத் தோண்டி பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அன்பளிப்புச் செய்தல், குளத்தைத் தூர்வாரி பொதுமக்கள் பயன்பெறச் செய்தல், பயனுள்ள மரங்களை நட்டு, வளர்த்து அவற்றின் பயனைப் பொதுவுடைமையாக்குதல், மஸ்ஜிதைக் கட்டி பொதுமக்களுக்காக அன்பளிப்புச் செய்தல், திருக்குர்ஆனை வாங்கி அன்பளிப்புச் செய்தல், நூல் நிலையங்களை அமைத்தல், உள்ளிட்ட எத்தனையோ நிலையான நல்லறங்களைச் செய்ய முற்படலாமே? இவற்றுள் எதையாவது செய்தால், அது நீண்ட காலப் பயனை இறந்துவிட்ட பெற்றோருக்குச் சேர்க்குமே? ஏன் நம்முள் பலர் இதுபோன்று தூரநோக்கோடு சிந்திப்பதில்லை
=========================================






சனி, 10 ஆகஸ்ட், 2019

மறைவானவை மனித நன்மைக்கே!








-
முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

உலகில் எத்தனையெத்தனையோ விஷயங்கள் மறைவானவையாக உள்ளன. அவை அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே தெரிந்தவை. அவற்றை மனித அறிவாலும் ஆற்றலாலும் அறிய முடியாது. மனிதன் தனது புறக்கண்களால் காண முடியாதவையும் உள்ளன. ஆனால் இவற்றையெல்லாம் மனித நன்மைக்காகவே அல்லாஹ் இவ்வாறு ஏற்பாடு செய்துள்ளான். 

மனிதன் அறிய முடியாதவை ஐந்து என அகிலத்தைப் படைத்த அல்லாஹ் தனது திருமறையில் நவில்கின்றான்: நிச்சயமாக யுகமுடிவு (எப்போது ஏற்படும் என்பது பற்றிய அறிவு) அல்லாஹ்விடமே உள்ளது. அவனே மழையை இறக்கிவைக்கிறான். கருப்பைகளில் உள்ளதை அவன் அறிகின்றான். எந்த உயிரும் தான் நாளை என்ன சம்பாதிக்கும் என்பதை அறியாது. எந்த உயிரும் தான் எந்த நிலத்தில் உயிரிழக்கும் என்பதையும் அறியாது. நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தோனும் நுண்ணறிவாளனும் ஆவான்.” (31: 34)

தோன்றிய ஒவ்வொன்றிற்கும் அழிவு என்பது நிச்சயம் உண்டு. அதுபோலவே படைக்கப்பட்ட அண்டத்திற்கும் ஒரு நாள் அழிவுண்டு. அது எந்நாள் என்பது யாருக்கும் தெரியாது. ஒருவேளை அது குறிப்பிட்ட இன்ன நாளில் நிகழப்போகிறது என்று தெரிந்துவிட்டால், மனிதர்கள் இப்புவியில் நிம்மதியாக வாழ முடியுமா? அந்த அழிவு நாளை நினைத்து நினைத்தே வருந்திக்கொண்டிருப்பார்களே தவிர நிம்மதியாக வாழ மாட்டார்கள். 

அவனே மழையை இறக்கிவைக்கிறான்எனும் தொடரில் நிலத்தில் பொழிகின்ற மழை நீரில் எவ்வளவு மனிதனுக்குப் பயன்படும்; எவ்வளவு நிலத்தினுள் சேரும்; எவ்வளவு கடலில் கலக்கும் உள்ளிட்ட இவையெல்லாம் இறைவனின் நாட்டப்படியே நடக்கும். மேலும் மழைமூலம் விவசாயம் செழிக்குமா அழியுமா என்பதும் இறைவனுக்கு மட்டுமே தெரியும். புறக்காரணிகளை வைத்து இன்ன நாளில் மழை பெய்யலாம் என்று வானிலை ஆய்வாளர்கள் அறிக்கை வெளியிட்டாலும் அதனால் ஏற்படும் சாதக, பாதகங்களை மனிதன் அறிய முடியாதல்லவா?

கருப்பைகளில் உள்ளதை அவன் அறிகின்றான்எனும் தொடர் கவனிக்கத்தக்கது. ஒரு பெண்ணின் கர்ப்பப்பையில் உள்ள சிசுவின் உண்மை நிலை என்னவென்பதை அல்லாஹ் ஒருவனே அறிவான். அதாவது ஓர் ஆணின் உயிரணு பெண்ணின் சினைப்பையினுள் செலுத்தப்படுகின்றபோதே அது ஆணா, பெண்ணா என்பதை அவன் அறியும் ஆற்றல் உள்ளவன். 

அது ஆணா, பெண்ணா என்பதை அறிவது மட்டுமல்ல, அவன் நல்லவனா, கெட்டவனா, அவனுக்கான வாழ்வாதாரம் எவ்வளவு, புவியில் வாழும் காலம் எவ்வளவு உள்ளிட்டவையும் ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டுவிடுகின்றன. இவையெல்லாம் தாயின் கருவறையில் குழந்தை உண்டாகிய நான்காவது மாதத்தில் நடைபெறுகின்றன. இவற்றையெல்லாம் அல்லாஹ் மட்டுமே தீர்மானிக்கின்றானே தவிர, எந்த வருடியும் (ஸ்கேனும்) கண்டுபிடிக்க முடியாது. 

இவையெல்லாம் மனிதனுக்கு நன்மைதானே? ஆம். பிறந்தவுடன் இறந்துவிடும் அல்லது ஐந்து வயதில் அக்குழந்தை இறந்துவிடும் என்பது முன்பே தெரிந்துவிட்டால் என்னாகும்? அக்குழந்தையின் தாயும் தந்தையும் நிம்மதியாக வாழ முடியுமா? ஆசையோடும் பாசத்தோடும் அக்குழந்தையை வளர்க்கத்தான் முடியுமா?

எந்த உயிரும் தான் நாளை என்ன சம்பாதிக்கும் என்பதை அறியாதுஎனும் இத்தொடர் நாளை என்ன நடக்கும் என்பதை மனிதன் அறிய மாட்டான் என்பதைத் தெரிவிக்கிறது. நாளை அவன் செய்யப்போகின்ற தொழிலில், வியாபாரத்தில் இலாபம் கிடைக்குமா, நட்டம் ஏற்படுமா என்பது அவனுக்குத் தெரியாது. நாளை அவன் நன்மை செய்யப்போகின்றானா, தீமை செய்யப் போகின்றானா என்பதெல்லாம் அல்லாஹ் ஒருவனுக்கே வெளிச்சம். செய்யப்போகின்ற தொழிலில் ஏற்படப்போகின்ற நட்டம் குறித்த தகவல் முன்னரே அவனுக்குத் தெரிந்துவிட்டால் அவன் அந்தத் தொழிலைச் செய்ய முற்படமாட்டான். நாளை நடக்கவிருப்பதை முன்னரே தெரிந்துகொண்டால் அவன் நிம்மதியாக வாழ முடியாது. எதையும் நம்பிக்கையுடன் செய்யத் துணிவு ஏற்படாது. இதனால்தான் அல்லாஹ் அதையெல்லாம் மனித அறிவுக்குப் புலப்படாதவாறு மறைத்து வைத்துள்ளான். 

எந்த உயிரும் தான் எந்த நிலத்தில் உயிரிழக்கும் என்பதையும் அறியாதுஎனும் தொடர் பல்வேறு உண்மைகளை நமக்கு உணர்த்துகின்றது. பிறந்த ஒவ்வொருவருக்கும் இறப்புண்டு என்றாலும் அவன் எப்போது, எங்கே, எப்படி இறப்பான் என்பது யாருக்கும் தெரியாது. எப்போது, எங்கே, எப்படி மரணிப்பான் என்று மனிதனுக்குத் தெரிந்துவிட்டால் அவன் தன் வாழ்நாளை நிம்மதியாகக் கழிக்க முடியுமா? தம் குடும்பத்தாரோடு மகிழ்ச்சியாக வாழத்தான் முடியுமா? ஒவ்வொரு நாளும் தான் இறந்துபோகப்போவதைப் பற்றியல்லவா சிந்தித்துக்கொண்டிருப்பான். யாருடனும் மனம்விட்டு நிம்மதியாகப் பேச முடியாது. நிம்மதியாகத் தூங்க முடியாது. அவனுடைய வாழ்க்கையே அலங்கோலமாகிவிடுமே

இவை போக, மனிதனின் கண்களுக்குச் சாதாரணமாகப் புலப்படாத வகையில் பல்வேறு பொருள்களை மறைத்து வைத்துள்ளான் இறைவன். அவையும் மனிதனுக்கு நன்மையே. நாம் அன்றாடம் குடிக்கின்ற நீரில் நம் கண்களுக்குப் புலப்படாத எத்தனையோ நுண்ணுயிரிகள் மறைந்து இருக்கின்றன. அவற்றுள் பல நன்மையைத் தரக்கூடியவையும், அவற்றுள் சில தீமையை ஏற்படுத்தக்கூடியவையும் உள்ளன. அவையெல்லாம் சாதாரணமாக நம் கண்களுக்குத் தெரியக்கூடிய விதத்தில் இருந்தால் நம்முள் யாரும் தண்ணீரைக் குடிக்க முடியுமா?

அதுபோலவே தயிர், தோசைமாவு, கொய்யாப்பழம் உள்ளிட்ட எல்லா உணவுப் பொருள்களிலும் நன்மை செய்யக்கூடிய நுண்ணுயிரி (ஈஸ்ட்)கள் உள்ளன. அவையெல்லாம் சாதாரணமாக நம் கண்களுக்குப் புலப்படாத வகையில் அல்லாஹ் மறைத்துவைத்துள்ளான். ஒருவேளை அவையெல்லாம் அவற்றுள் இழைந்துகொண்டிருப்பது நம் புறக்கண்களுக்குப் புலப்பட்டால் நாம் அவற்றை நிம்மதியாகச் சாப்பிட முடியுமா? இரசித்து, ருசித்து உண்ணத்தான் முடியுமா?

நாம் செய்கின்ற நற்செயல்களுக்கான நன்மைகளையும் தீய செயல்களுக்கான தீமைகளையும் தூயோன் இறைவன் மறைத்தே வைத்துள்ளான். மனிதன் எவ்வளவு பாவங்கள் செய்தபோதிலும் அப்பாவங்கள் தெரியாதவாறு மறைத்துவைத்துள்ள இறைவன் கருணையாளன் ஆவான். நாம் செய்யும் பாவங்கள் உடனுக்குடன் நம் முகத்தில் வெளிப்படும் விதத்தில் படைக்கப்பட்டிருந்தால் நம் நிலை என்னவாகும்? அந்தோ! யாரும் நிம்மதியாக வாழ முடியாதே!
பிறர் நம்மைப் பற்றி எண்ணுவதையும் நாம் பிறரைப் பற்றி எண்ணுவதையும் அல்லாஹ் வெளிப்படுத்தினால் என்னவாகும் நம் நிலை? எத்தனையெத்தனை தவறான எண்ணங்கள், எத்தனையெத்தனை குரூர எண்ணங்கள் பிறர்மீது கொள்கின்றோம்! உதட்டில் புன்னகையோடு பேசுகின்ற பலர் உள்ளத்தில் மறைத்து வைத்துள்ள கபட எண்ணங்களையும் கடன் வாங்கும்போதே திருப்பிக்கொடுக்காமல் இவனை ஏமாற்றிவிட வேண்டும் என எண்ணிக்கொண்டே வாங்குவதையும் வெளிப்படுத்தினால் என்னாகும்? கணவனிடம் அன்பொழுகப் பேசும் மனைவியின் மனத்தில் உள்ளதையும் மனைவியிடம் காதலுடன் பேசும் கணவனின் உள்ளத்தில் உள்ளதையும் வெளிப்படையாகத் தெரியுமாறு செய்திருந்தால் யார்தாம் இவ்வுலகில் வாழ முடியும்? அத்தனையையும் மறைத்தே வைத்துள்ளானே இறைவன். இது அவன் நமக்குச் செய்த மிகப்பெரும் அருள் அல்லவா?

ஆக, அல்லாஹ் தன் படைப்பில் சிலவற்றை வெளிப்படையாகவும் பிறவற்றை மறைமுகமாகவும் அமைத்திருப்பது மனிதனின் நிம்மதியான வாழ்விற்காகத்தான் என்பதைப் புரிந்துகொண்டு நாம் அவனுக்கு உரிய முறையில் நன்றி செலுத்த முற்படுவோமாக!
===========================================


மறைவானவை மனித நன்மைக்கே

குர்பானி கொடுப்போம்

வியாழன், 8 ஆகஸ்ட், 2019

பயனுள்ள நூல்களைப் பரிசளிக்கலாமே?


ஒவ்வொருவரும் தம் பெற்றோரின் நாற்பதாம் நாள் நினைவாக அல்லது ஆண்டு நினைவாக விருந்து ஏற்பாடு செய்து உறவினர்களுக்கும் ஏனையோருக்கும் வழங்குவது மரபாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அப்போது அவர்கள் தம் பெற்றோரின் பெயரையும் அவர்கள் இறந்த தேதியையும் குறிப்பிட்டு யாஸீன் நூலையோ மன்ஸில் நூலையோ வழங்குவது வழக்கமாக உள்ளது. இவ்வாறு பலர் வழங்கி, வழங்கி ஒவ்வொருவரின் வீட்டிலும் பத்துக்கும் மேற்பட்ட யாஸீன், மன்ஸில் நூல்கள் உள்ளன. ஓதத்தான் நேரமில்லை. சிலர் ஓதலாம்.

எனவே பெற்றோரின் நினைவாக நூல் வழங்குவோர் இவை அல்லாத பயனுள்ள நூல்கள் எவ்வளவோ உள்ளன. அவற்றுள் ஏதேனும் ஒன்றைக் கொடுத்தால் மிகவும் பயனுள்ளதாக அமையும். அந்நூல் வாயிலாக ஒருவர் நல்வழி பெற்று, நல்லறங்கள் செய்யத் தொடங்கிவிட்டால் அந்நன்மைகள் யாவும் நம் பெற்றோருக்கு, நிலையான நல்லறமாகச் சென்று சேர்ந்துகொண்டே இருக்குமல்லவா?

இனியாவது இந்தக் கோணத்தில் சிந்தித்து, பயனுள்ள நூல்களைப் பரிசளிப்போம்.

-முனைவர் நூ. அப்துல் ஹாதி பாகவி, மணலி, சென்னை-68
08.08.2019 06.12.1440
==================================


நம்முடைய கைம்மாறு இவ்வளவுதானா?



===========================
இறந்துவிட்ட பெற்றோருக்கும் ஆசிரியர்களுக்கும் நன்மையைச் சேர்த்துவைக்க எல்லோரும் தகுந்த முயற்சி செய்கின்றனர். அதில் எந்தக் குறையும் வைப்பதில்லை. ஏனென்றால் வாழும்போது பெற்றோருக்குப் பணிவிடை செய்யாதவன்கூட, அவனுடைய பெற்றோர் இறந்துவிட்டால் அவர்களுக்காக துஆ மஜ்லிஸ் ஏற்படுத்தி, நன்மையைச் சேர்த்து வைக்கத் தவறுவதில்லை. சிலர் விதிவிலக்கு இருக்கலாம். அந்த வகையில், பெற்றோருக்கும் ஆசிரியர்களுக்கும் நன்மையைச் சேர்ப்பதில் முதலிடம் வகிப்பது, திருக்குர்ஆனை முழுமையாக ஓதி அதன் நன்மைகளைச் சேர்ப்பதுதான். மார்க்க அறிஞர்கள் சிலர் இதனை ஏற்றுக்கொள்வதில்லை. வேறு அறிஞர்கள், ஓதப்பட்ட திருக்குர்ஆனின் நன்மையை அன்பளிப்புச் செய்வது, இறந்துவிட்டவருக்குச் சேரும் என்று கூறுகின்றார்கள். அந்த அடிப்படையில்தான் நாம் செயல்படுகின்றோம். இருப்பினும் இது ஓர் ஒப்பீட்டளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட செயல்பாடுதானே தவிர நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நேரடியாக வழிகாட்டிய நல்லறம் இல்லை என்பதை நினைவில் கொள்வோம்.  

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய நேரடியான நல்லறங்கள் நிறையவே உள்ளன. அவற்றுள் முதன்மையானது தண்ணீர்த் தானம் ஆகும். சஅத் (ரளி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ""அல்லாஹ்வின் தூதரே! சஅதின் தாய் இறந்துவிட்டார். எனவே (அவருக்காக) எதைத் தர்மம் செய்வது சிறந்தது?'' என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் "தண்ணீர்'' என்று கூறினார்கள். சஅத் (ரளி) அவர்கள் ஒரு கிணற்றைத் தோண்டி "இது சஅதுடைய தாயாருக்கு உரியதாகும்'' என்று கூறியதாக அவர்தம் மகனார் உபாதா (ரளி) அறிவிக்கிறார். (அபூதாவூத்: 1431)

ஆடையற்றோருக்கு ஆடை வாங்கிக் கொடுத்தல், கிணற்றைத் தோண்டி பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அன்பளிப்புச் செய்தல், குளத்தைத் தூர்வாரி பொதுமக்கள் பயன்பெறச் செய்தல், பயனுள்ள மரங்களை நட்டு, வளர்த்து அவற்றின் பயனைப் பொதுவுடைமையாக்குதல், மஸ்ஜிதைக் கட்டி பொதுமக்களுக்காக அன்பளிப்புச் செய்தல், திருக்குர்ஆனை வாங்கி அன்பளிப்புச் செய்தல், நூல் நிலையங்களை அமைத்தல் உள்ளிட்ட எத்தனையோ நிலையான நல்லறங்களைச் செய்ய முற்படலாமே? இவற்றுள் எதையாவது செய்தால், அது நீண்ட காலப் பயனை இறந்துவிட்ட பெற்றோருக்கும் ஆசிரியர்களுக்கும் சேர்க்குமே? ஏன் நம்முள் பலர் இதுபோன்று தூரநோக்கோடு சிந்திப்பதில்லை?


ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2019