திங்கள், 30 மே, 2022

எடை மூவிதம் (Three kinds of weight)

திங்கள், 23 மே, 2022

விளிம்புநிலைப் பெண்களுக்குக் கைகொடுப்போம்!

 -முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

---------------------

இஸ்லாமிய மார்க்கத்தில் மறுமண உரிமை ஆண்களுக்கு உள்ளதைப்போல் பெண்களுக்கும் உண்டு. அதாவது மனைவியை இழந்தவர் அல்லது விவாக விடுதலை செய்தவர் மறுமணம் செய்துகொண்டு வாழலாம். அதேபோல் கணவனை இழந்த பெண் அல்லது விவாக விலக்குப்பெற்ற பெண் தன்னுடைய (இத்தா) காத்திருப்புக் காலம் முடிவுற்றபின் மறுமணம் செய்துகொண்டு நிம்மதியாக வாழ இஸ்லாம் அனுமதி வழங்கியுள்ளது.

இருப்பினும் ஆண்கள் மறுமணம் செய்ய முனையும்போது எந்தச் சிக்கலும் ஏற்படுவதில்லை. ஆனால் பெண்கள் மறுமணம் செய்ய முனையும்போது அவளுடைய முன்னாள் கணவருக்குப் பிறந்த பிள்ளைகள் ஒருவரோ இருவரோ இருந்தால் அப்போது மறுமணம் செய்துகொள்வதில் அவளுக்குச் சிக்கல் ஏற்படுகிறது. திருமணத்திற்குப்பின் அப்பிள்ளைகள் யாருடன் இருப்பார்கள் என்ற கேள்வி எழுகிறது. ஏனெனில் அவளை மறுமணம் செய்துகொள்ள முன்வருகிற ஆண் அவளுடைய பிள்ளைகளை ஏற்றுக்கொள்ள முன்வருவதில்லை. எவனோ பெற்ற பிள்ளைகளை நான் ஏன் பராமரிக்க வேண்டும் என்ற மனோநிலை இருப்பதைக் காணமுடிகிறது. மற்றவர்களின் பிள்ளைகளைப் பராமரிக்க வேண்டிய தேவை எனக்கில்லை என்ற எண்ணமே மேலோங்கி நிற்கிறது. இதனாலேயே பெண்கள் மறுமணம் செய்துகொள்வது தாமதமாகின்றது. அல்லது அம்முடிவையே அவர்கள் கைவிட்டுவிடுகின்றார்கள்.

மனிதன் பொருளாதார ரீதியில் சிந்திக்கிறான். பிறரின் சுமையைத் தான் தாங்கிக்கொள்ள மறுக்கின்றான். ஆனால் இதற்கு ஆன்மிக ரீதியில்தான் பதிலளிக்க வேண்டும். இப்புவியில் பிறந்து வாழ்கிற ஒவ்வொருவருக்கும் உணவளித்தல் இறைவனின் பொறுப்பாகும். எனவே ரிஸ்க்-வாழ்வாதாரம் குறித்து எம்மனிதனும் கவலைப்படத் தேவையில்லை. அந்த அடிப்படையில் அல்லாஹ்வே அவர்களுக்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டுவிட்டான். ஆதலால் அவன் தன்னுடைய பராமரிப்பின்கீழ் அப்பிள்ளைகள் இருக்க அங்கீகாரம் கொடுத்தால் மட்டும் போதுமானது. அதற்கான நன்மை இம்மையிலும் மறுமையிலும் அவனுக்குக் கிடைக்கும்.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், நானும் அநாதையின் காப்பாளரும் சொர்க்கத்தில் இப்படி இருப்போம் என்று கூறியபடி தம் சுட்டுவிரலையும் நடுவிரலையும் இணைத்து, அந்த இரண்டிற்குமிடையே சற்று இடைவெளி விட்டுச் சைகை செய்தார்கள். (புகாரீ: 5304)

இந்த நபிமொழியின் அடிப்படையில், கணவனை இழந்துவிட்ட பெண்ணின் பிள்ளைகளைப் பராமரிக்கும் பொறுப்பேற்கின்றவர் அநாதைகளைப் பராமரித்த நன்மையை அடைகின்றார். அதன்மூலம் அவர் சொர்க்கத்தை அடைவதற்கான நல்வாய்ப்பைப் பெறுகின்றார். ஆக கணவனை இழந்த ஒரு பெண்ணை மனைவியாக ஏற்றுக்கொள்கின்ற அவளுடைய கணவர் அவளுடைய பிள்ளைகளைப் பராமரிக்கும் பொறுப்பையும் ஏற்றுக்கொள்வது அவர் சொர்க்கம் செல்வதற்கான வாய்ப்பைப் பெற்றுத்தருகிறது என்பதை நினைவில் கொள்ளட்டும்.

இந்தச் செய்தியை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வெறுமனே சொல்லிவிட்டுச் சென்றுவிடாமல் தம் வாழ்க்கையில் செயல்படுத்தியும் காட்டியுள்ளார்கள். இது குறித்து அன்னை உம்முஸலமா ரளியல்லாஹு அன்ஹா, தம்முடைய கணவர் அபூஸலமா இறந்தபின் நடந்த நிகழ்வைப் பின்வருமாறு அறிவிக்கின்றார்கள்.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்னிடம் ஹாத்திப் பின் அபீபல்தஆ ரளியல்லாஹு அன்ஹு அவர்களை அனுப்பி, தமக்காக என்னைப் பெண் கேட்டார்கள். அப்போது நான் "எனக்கு ஒரு மகள் இருக்கிறாள். நானோ முன்கோபக்காரி ஆவேன்'' என்று கூறிவிட்டேன். (எனது பதிலைக் கேட்ட) அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் "அவருடைய மகள் (அவரது துணையின்றியே) தன்னிறைவுடன் இருக்க நாம் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்கிறோம். அவரது முன்கோபத்தைப் போக்கவும் நான் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்கிறேன்'' என்று கூறினார்கள். (முஸ்லிம்: 1674)

அன்னை உம்முஸலமா அவர்களின் முன்னாள் கணவருக்குப் பிறந்த பிள்ளையையும் நபியவர்கள் ஏற்றுக்கொண்டு அந்தக் கைம்பெண்ணுக்கு வாழ்க்கை கொடுத்தார்கள். மறுமணம் செய்ய முனைகின்ற இன்றைய இளைஞர்கள் இதைத்தான் செய்ய வேண்டும். அதுவே அவர்களுடைய இறைநம்பிக்கையில் உள்ள வலுவான நிலையை நிரூபிக்கும்.

ஒரு பெண் தன் திருமண வாழ்க்கை தோல்வியில் முடிந்து தன் பெற்றோரின் வீட்டிற்கே திரும்பி வருகிறபோது அவளை முகம் கோணாமல் வரவேற்பதும் அவளுக்கு அடைக்கலம் கொடுத்துப் பராமரிப்பதும் தந்தையின் கடமையாகும். அதற்கான பிரதிபலனை அல்லாஹ்விடம் அவர் பெற்றுக்கொள்வார். ஊரார்க்குச் செய்யும் தர்மத்தைவிட வாழ்க்கையில் தோல்வி கண்டு, பெற்றோரின் இல்லத்திற்குத் திரும்பி வந்திருக்கிற மகளுக்குச்செய்யும் செலவு மிகச் சிறந்த தர்மம் ஆகும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

நான் உனக்குச் சிறந்ததொரு தர்மத்தைப் பற்றி அறிவிக்கட்டுமா? என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கேட்டுவிட்டு (திருமணத்திற்குப்பின்) உம்முடைய மகள் (மணவிலக்குச் செய்யப்பட்டு) உம்மிடமே திருப்பி அனுப்பப்பட்ட நிலையில், அவளுக்கு உம்மைத் தவிர சம்பாதித்துக்கொடுப்பவர் யாரும் இல்லாதபோது (நீர் செய்யும் தர்மமாகும்) என்று கூறினார்கள் என சுராக்கா பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள். (இப்னுமாஜா: 3657)

இதை அறியாத பலர், வாழ்க்கையில் தோல்வி கண்ட பெண்ணை, வாழாவெட்டி என்றும் அதிர்ஷ்டம் இல்லாதவள் என்றும் தூற்றுவது மிகப்பெரும் பாவமாகும். மீண்டும் ஒரு நல்ல வாழ்க்கை அமைந்து கணவனின் வீட்டிற்குச் செல்லும் வரை அவ்வீட்டிற்கு வாழ வந்த பெண்களால் அவள் மறைமுகமாகவோ நேரடியாகவோ பாதிக்கப்படுகிறாள் என்பதை யாரும் மறுக்க முடியாது. நேரடியாகப் பேசாவிட்டாலும் குத்திக் காட்டி மறைமுகமாகத் தாக்கும் தாக்குதலிலிருந்து அவள் தப்பிக்க முடியாது. இத்தகைய பெண்ணுக்கு உதவி செய்ய முடியாவிட்டாலும் வார்த்தைகளால் காயப்படுத்தாமலாவது இருக்கலாம் அல்லவா?

மணவிலக்குப் பெற்ற அல்லது கணவன் இறந்துபோனதால் கைம்பெண்ணாகிவிட்டவள் தன்னுடைய பிள்ளைகளை வைத்துக்கொண்டு தனியாக வாழ்ந்து வருவதை மஹல்லாதோறும் நாம் காணலாம். இத்தகைய விளிம்பு நிலையில் உள்ள பெண்கள், தம் இல்லற வாழ்க்கையைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் தம் பிள்ளைகளின் எதிர்கால நலனை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்து வருகின்றார்கள். இத்தகையோருக்கு அந்த மஹல்லாவாழ் மக்கள் ஆதரவு கொடுப்பதும் பொருளாதார உதவி செய்வதும் தார்மிகக் கடமையாகும்.

தனக்கும் தன் பிள்ளைகளுக்கும் சம்பாதித்துக்கொடுக்க ஆளின்றிச் சிரமப்படுகிற, அரசுப் பணியோ, தனியார் பணியோ இல்லாமல், வீட்டுவேலைகளில் ஈடுபட்டு, பொருளீட்டித் தன்னையும் தன் பிள்ளைகளையும் வளர்த்து ஆளாக்க நினைக்கிற அந்தப் பெண்ணின் தியாக வாழ்க்கையை எண்ணி உதவி செய்ய யாரும் முன்வருவதில்லை. இவ்வாறு வாழ்க்கையின் விளிம்பு நிலையில் பெண்கள் பலர் வாழ்ந்து வருகிறார்கள். இத்தகையோரை இனங்கண்டு உதவி செய்வது அந்தந்த மஹல்லா பள்ளிவாசல் பொறுப்பாளர்களின் கடமையாகும். இதையெல்லாம் கண்டுகொள்ளவோ சிந்திக்கவோ நேரமில்லா மனிதர்கள்தாம் பள்ளிவாசல் பொறுப்பாளர்களாகப் பதவி வகிக்கின்றார்கள் என்பது கசப்பான உண்மை.

பெண்கள் சிலர் தம் கணவனோடு வாழ முடியா நிலையில் தம் பெற்றோரே தஞ்சமெனத் திரும்பி வந்துவிடுகின்றனர். கணவன் குடிகாரனாக இருக்கலாம். ஆண்மையற்றவனாக இருக்கலாம். மனைவியைக் கண்டுகொள்ளாத பொறுப்பற்றவனாக இருக்கலாம். இவை போன்ற பல்வேறு காரணங்களுக்காகத் தம் பெற்றோரின் இல்லம் நோக்கி வந்துவிடுகின்றனர். அவர்கள் தம் கணவரோடும் வாழ முடியாமல் மறுமணமும் செய்துகொள்ள முடியாமல் அந்தரத்தில் நின்று தவித்துக்கொண்டிருக்கின்றார்கள். இத்தகைய இரண்டும் கெட்டான் நிலையில் ஆங்காங்கே பெண்கள் சிலர் கண்ணீரை உகித்துக்கொண்டிருக்கின்றார்கள். இவர்கள் தாம் சார்ந்த மஹல்லா ஜமாஅத் பொறுப்பாளர்களைச் சந்தித்தால் அதற்கான தீர்வு கிடைத்துவிடுமா? அதற்கான தீர்வு காணும் வகையில் மஹல்லாதோறும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா? இவர்களுக்கு உதவுபவர் யார்? இவர்களின் கண்ணீரைத் துடைக்க வழிகாண்பது யார்?

இவ்வாறு பல்வேறு நிலைகளில் பெண்கள் தவித்துக் கொண்டுள்ளனர். அவர்களுக்கு உதவும் நோக்கில் ஒவ்வொரு மஹல்லாவிலும் அதற்கான ஏற்பாட்டைச் செய்வது அந்தந்த மஹல்லா ஜமாஅத் பொறுப்பாளர்களின் கடமையன்றோ? சிந்திப்போம். செயல்படுவோம்.
=========