சனி, 19 மார்ச், 2022

ஒன்றிணைந்து உயர்வடைவோம்!

  

 


-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

 

இவ்வுலகில் யாரும் தனிமனிதனாக வாழ்ந்துவிட முடியாது. ஒவ்வொருவரும் ஏதேனும் ஒருவகையில் பிறரைச் சார்ந்தே வாழ வேண்டியுள்ளது. சிலருக்குப் பலரின் தேவை ஏற்படலாம். வேறு சிலருக்கு மிகச் சிலரின் தேவையே போதுமானதாக இருக்கலாம். தனிமனிதரைப் பொருத்த வரை, சார்புநிலை கூடுதல் குறைவாக இருக்கலாமே தவிர பிறரின் உதவி எனக்குத் தேவையில்லை என யாரும் ஒதுங்கிக்கொள்ள முடியாது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் பிறரின் தேவையும் உதவியும் இன்றியமையாதவர்களாகவே உள்ளனர்.

 

நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஒற்றைச் சமுதாயமாக வாழ முற்பட்டால் நம்மால் மற்றவர்களுக்குப் பற்பல நன்மைகள் உண்டாகும். பல்வேறு தீமைகள் அகலும். ஆனால் நம் சமுதாயத்தின் துர்பாக்கியநிலை என்னவெனில், ஒரே கொள்கையைக்கொண்ட நாம் ஒரே கொடியின்கீழ் இணைவதில்லை என்பதுதான். அதனால் நம் சமுதாயத்திற்கு பெருமளவில் இழப்பு ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை. கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம், தொழில், அரசியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இழப்புகள் ஏற்பட்டுள்ளன.

 

ஒன்றிணைந்து வாழ ஒற்றுமையாக இருப்பதும், தன் சகோதரனுக்காக விட்டுக்கொடுப்பதும் முக்கியமானதாகும். விட்டுக் கொடுத்தால்தான் நாம் அனைவரும் ஒன்றுபட்டு ஒற்றுமையாக ஒரே குடையின்கீழ் வாழ முடியும். அது நமக்கு மத்தியில் இல்லாததால்தான் பிற சமுதாயத்தினர் நம்மைப் படிக்கட்டுகளாகப் பயன்படுத்தி, நம்மீது ஏறி உச்சத்தை அடைகின்றனர். நாமோ எச்சமாகக் கீழ்நிலையிலேயே கிடக்கின்றோம்.

 

நடந்து முடிந்த உள்ளாட்சி மன்றத் தேர்தலில் நம்முடைய ஒற்றுமையின்மையால் பல்வேறு வார்டுகளைப் பிற சமுதாயத்தினர் தட்டிச் சென்றுள்ளனர். ஒரே வார்டில் ஐந்து முஸ்லிம் சகோதரர்கள் களம் கண்டனர். பிற சமுதாயத்தைச் சார்ந்த ஒருவர் குறைந்த வாக்குகளையே பெற்றாலும், முஸ்லிம்களின் வாக்குகள் ஐந்து பேருக்குப் பிரிந்து, சிதறிப்போய்விட்டதால் அவரே வெற்றி பெற்றுவிட்டார். முஸ்லிம்கள் அடர்த்தியாக வாழும் ஊரில் ஒரு வார்டையே கைப்பற்ற முடியவில்லை. இந்நிலை பல ஊர்களில் பல வார்டுகளில் ஏற்பட்டது. இதுவே நமது ஒற்றுமையின்மைக்கும் விட்டுக்கொடுக்காமைக்கும் தக்க சான்றாகும்.

 

தன்னைவிடத் தன் சகோதரனை முன்னிலைப்படுத்துவது பூரண இறைநம்பிக்கையின் அடையாளம் ஆகும்.  அதற்கு வரலாற்றில் ஒரு நிகழ்வு உண்டு. அதை இத்தருணத்தில் நாம் அனைவரும் தெரிந்துகொள்வது சாலப் பொருத்தமாகும்.

 

யர்மூக் போரில் அம்புகளால் தாக்கப்பட்டு, காயங்களோடு இரத்த வெள்ளத்தில் கிடந்த இக்ரிமாவையும் அவர்தம் சிற்றப்பா ஹாரிஸையும் இழுத்து வந்தனர். அய்யாஷ் என்பவரையும் கொண்டு வந்து கிடத்தினர். மூவரும் குற்றுயிராக, உயிர் போய்விடும் நிலையில் இருந்தனர். இரத்த வெள்ளத்தில் இருந்த இக்ரிமாவை காலித் பின் வலீத் அவர்களின் மடியிலும் அவரின் கால்பகுதியில் அவர்தம் சிற்றப்பாவையும் கிடத்தினர். காலித் பின் வலீத் அவ்விருவரையும் தாங்கியவராய் கால்நீட்டி அமர்ந்திருந்தார்.

 

உயிர்போகும் அவ்வேளையில் தண்ணீர் தாகம் ஏற்பட்டது. ஹாரிஸ் தண்ணீர் கேட்டார். தண்ணீர் எடுத்துக் கொண்டுவந்து கொடுக்கப்பட்டது. அப்போது அதை இக்ரிமா பார்த்தார். உடனே  ஹாரிஸ் தண்ணீரைக் குடிக்காமல், "அவருக்குக் கொடுங்கள்'' என்று இக்ரிமாவின் பக்கம் சாடை காட்டினார். இக்ரிமாவுக்குக் கொடுக்க முனைந்தபோது அவர் அருகில் கிடத்தப்பட்டிருந்த அய்யாஷ் தாகம் என்றார். எனவே இக்ரிமா, தாம் அதைப் பருகாமல் "அவருக்குக் கொடுங்கள்''  என்று கூறினார்.

 

அவருக்குக் கொண்டு சென்று கொடுப்பதற்குள் அவர் இறந்துவிட்டார். தண்ணீரை எடுத்துக்கொண்டு மீண்டும் முதலாமவரிடமும் இரண்டாமவரிடமும் வந்தால் அவ்விருவரும் இறந்துவிட்டனர். ஆக மூவரும் தண்ணீர் பருகாமலேயே இறந்துபோய்விட்டனர். இறக்கின்ற அந்தத் தருணத்திலும் தம்மைவிடப் பிறரை முன்னிலைப்படுத்திய  சகோதரத்துவமும் மனிதநேய உணர்வும் இஸ்லாமிய மார்க்கத்தில் தவிர வேறெங்கும் காண இயலாது.

 

மரணத் தருவாயில் கிடந்தபோதும் தம்மைவிடத் தம் சகோதரருக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற ஈமானிய உணர்வுதான் அவர்களின் வெற்றிக்குக் காரணமாகும். "உங்களுள் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பாத வரை (முழுமையான) இறைநம்பிக்கை கொண்டவர் ஆக மாட்டார்'' (புகாரீ: 13) என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உரைத்த பொன்மொழிக்கேற்ப வாழ்ந்து மறைந்தார்கள். எனவேதான் உயர்ந்தோன் அல்லாஹ் அவர்களுக்கு உயரிய மதிப்பையும் கண்ணியத்தையும் இருமையிலும் வழங்கினான்.

 

நாம் அனைவரும் ஒன்றுபட்டால் நமக்கான வங்கியை நாமே உருவாக்கிக்கொள்ள முடியும். நாம் ஒன்றுபட்டால் நமக்கான பொருளாதார உதவி மையத்தை (பைத்துல் மால்) உருவாக்கிக் கொள்ளலாம். நாம் ஒன்றுபட்டால் நமக்கான பள்ளிக்கூடங்களையும் கல்லூரிகளையும், பெண்களுக்கான பள்ளிகள், கல்லூரிகள் ஆகியவற்றையும் நிர்மாணித்துக்கொள்ள முடியும். நாம் அனைவரும் ஒன்றுபட்டால் நமக்கான மருத்துவக் கல்லூரிகளையும் உருவாக்கலாம். இன்னும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களையும் தீட்டி, அவற்றை நடைமுறைக்குக் கொண்டுவரலாம்.

 

நம்மை அழித்தொழிக்க வேண்டுமெனக் கருதும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தினரின் சதித்திட்டங்களும் சூழ்ச்சிகளும் நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே செல்கின்றன. நடந்து முடிந்த உள்ளாட்சி மன்றத் தேர்தலில் சென்ற தடவையைவிடக் கூடுதலான இடங்களில் பிஜேபி வேட்பாளர்கள் வென்றுள்ளனர் என்பது அவர்களின் வளர்ச்சியைக் காட்டுகிறது. அவர்களுடைய இயக்கங்களைச் சார்ந்தவர்கள்தாம் அரசுத் துறையின்  பல்வேறு பதவிகளில் அமர வைக்கப்பட்டுள்ளனர். முஸ்லிம் என்றதும் ஏதாவது ஒரு வகையில் அவருக்குச் சிரமத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே அவர்களின் எண்ணம். அரசு அலுவலகங்களில்  நாம் எளிதாக எதையும் செய்து முடித்துவிட இயலாத சூழ்நிலை உருவாகியுள்ளது. இத்தகைய மிகக் கடினமான தருணத்திலும் நாம் ஒன்றிணையாமல் இருந்தால் நம்மைவிடச் சுயநலவாதிகள் யாரும் இருக்க முடியாது.

 

"இறைநம்பிக்கையாளர்கள் ஒருவருக்கொருவர் (துணை நிற்கும் விஷயத்தில்) ஒரு கட்டடத்தைப் போன்றவர்கள் ஆவர். அதன் ஒரு பகுதி மற்றொரு பகுதிக்கு வலுவூட்டுகின்றது'' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (இப்படிக் கூறியபோது) நபியவர்கள் தமது கைவிரல்களை ஒன்றோடொன்று கோர்த்துக் காண்பித்தார்கள் என அபூமூஸா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள். (புகாரீ: 2446)

 

"ஒருவருக்கொருவர் கருணைபுரிவதிலும், அன்பு செலுத்துவதிலும், இரக்கம் காட்டுவதிலும் (உண்மையான) இறைநம்பிக்கையாளர்களை ஓர் உடலைப் போன்று நீ காண்பாய். (உடலின்) ஓர் உறுப்பு சுகவீனமடைந்தால் அதனுடன் மற்ற உறுப்புகளும் (சேர்ந்துகொண்டு) உறங்காமல் விழித்துக் கொண்டிருக்கின்றன. அத்துடன் (உடல் முழுதும்) காய்ச்சலும் ஏற்பட்டுவிடுகிறது'' என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.  (புகாரீ: 6011)

 

இறைநம்பிக்கையாளர்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்துகொள்வதன்மூலம் சமுதாயத்தை வலுப்படுத்த வேண்டும் என்றும் ஒருவருக்கொருவர் கருணைபுரிவதிலும், அன்பு செலுத்துவதிலும் ஓர் உடலைப் போன்று செயல்பட வேண்டும் என்றும் மேற்கண்ட நபிமொழிகள் கூறுகின்றன.  ஆகவே நம் சமுதாயத்தில் ஒரு முஸ்லிமுக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் அவருக்காக நாம் துணைநிற்க வேண்டும். அவர் அநியாயமாகப் பாதிக்கப்பட்டிருந்தால் அவருடைய உரிமையைப் பெற்றுத்தர நாம் அனைவரும் ஓரணியில் போராட வேண்டும். இதுவே நாம் நம்முடைய முஸ்லிம் சகோதரனுக்குச் செய்ய வேண்டிய கடமையாகும்.

 

நாம் அனைவரும் ஒன்றாக ஒன்றிணைந்து ஒரே குடையின்கீழ் செயல்பட முடிவெடுத்துவிட்டால், முதலில் நம் மஹல்லா ஜமாஅத்திற்குக் கட்டுப்பட வேண்டும். ஒவ்வொரு வரும் தத்தமது மஹல்லா ஜமாஅத்திற்குக் கட்டுப்பட்டால், அந்தந்தப் பள்ளி நிர்வாகக் குழுவினர்  ஒன்றிணைந்து ஆலோசித்து, அந்த மஹல்லா சார்பாக ஏகமனதாக ஒரு வார்டு வேட்பாளரை நிறுத்தலாம். எல்லோரும் அவருக்கே வாக்களித்து அவரை வெற்றிபெறச் செய்யலாம். முஸ்லிம்கள் அடர்த்தியாக வாழ்கின்ற ஒவ்வொரு மஹல்லாவிலும் இவ்வாறு செய்தால் பற்பல வார்டுகளை வெல்லலாம். அதுபோலவே ஒரு எம்எல்ஏ தொகுதியில் உள்ள அத்துணை பள்ளிவாசல் நிர்வாகிகளும் ஒன்றிணைந்து ஆலோசித்து, தமக்கான வேட்பாளரைச் சுயேச்சையாக நிறுத்தி வெற்றிபெறச் செய்யலாம். அல்லது நம் சமுதாயத்திற்கு நன்மைகள் செய்கின்ற, மதச்சார்பற்ற ஒரு வேட்பாளருக்கு நாம் ஆதரவு தெரிவிக்கலாம்.

 

நபியவர்கள் மக்காவிலிருந்து மதீனா சென்றதும், மக்கா முஹாஜிர்களுக்கும் மதீனாவின் அன்ஸாரித் தோழர்களுக்கும் இடையே சகோதரத்துவத்தை ஏற்படுத்தி அவர்களை மனதளவில் ஒன்றிணைத்தார்கள். முஹாஜிர்களுள் ஒருவர், அன்ஸாரித் தோழர்களுள் ஒருவர் என அனைவருக்கும் மத்தியில் அன்புப் பாலத்தை உண்டாக்கி, சகோதரத்துவ உணர்வை வளர்த்தார்கள். அவ்வாறு செய்தபோது, அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் அவர்களுக்கும் சஅத் பின் ரபீஉ அவர்களுக்கும் இடையே சகோதரத்துவத்தை ஏற்படுத்தினார்கள்.

 

அப்போது சஅத் பின் ரபீஉ அவர்கள், "நான் அன்ஸாரிகளில் அதிகச் செல்வமுடையவன்; எனவே, என் செல்வத்தில் பாதியை உமக்குப் பிரித்துத் தருகிறேன். என் இரு மனைவியருள் நீர் யாரை விரும்புகிறீர் என்று பாரும்! அவரை உமக்காக விவாகரத்துச் செய்கிறேன். அவரது இத்தா முடிந்ததும் அவரை உமக்கு மணம் முடித்துத் தருகிறேன்!'' எனக் கூறினார். (புகாரீ: 2048) தம் மார்க்கச் சகோதரருக்காகத் தம் செல்வத்தையும் அன்பான மனைவியையும் விட்டுக்கொடுக்க முன்வந்த தோழர்களை இஸ்லாமிய வரலாற்றில்தான் நாம் காணமுடியும். அத்தகைய தியாக உள்ளம் கொண்டோரின் வழியில் வந்த நாம் இன்னும் ஒன்றிணையாமல் ஓரணியில் நிற்காமல், தனித்தனியாக ஒதுங்கி நின்றால் நாம் வெற்றி பெறுவது எப்போது? இழந்த உரிமைகளை மீட்பது எப்போது?

 

நபியவர்களின் தலைமையில் அந்த அன்ஸாரித் தோழர்களும் முஹாஜிர்களும் ஒன்றிணைந்து ஓரணியில் நின்றதால்தான் எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடித்தார்கள்; போர்க்களத்தில் வென்றார்கள். இறுதியில் அவர்கள் தம் தோழர்களோடு சேர்ந்து மக்காவையே வென்றார்கள். எனவே இனிவரும் காலங்களில் நாம் அனைவரும் மஹல்லாதோறும் ஓரணியில் ஒன்றுபட்டு, ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வெற்றிப் பாதை நோக்கி நடைபோடுவோம். இழந்த நம் உரிமைகளைப் போராடிப் பெற்று உயர்வடைவோம்.

====================செவ்வாய், 15 மார்ச், 2022

மனித இனத்தின் பகிரங்க எதிரி!

 

-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

நன்மைகள் செய்து நம் வினைச்சுவடியின் எடையை அதிகரித்துக்கொள்ளலாம் என்று எண்ணினால், சோம்பல் எனும் வலையைப்போட்டு முடக்கிவிடுவான்; தானம் செய்து நம் வினைச்சுவடியின் எடையை மிகுதியாக்கிக்கொள்ளலாம் என்று நினைத்தால், “தானம் செய்யாதே; உன் பணம் செலவழிந்துவிடும்; தீர்ந்துவிடும்என்று சொல்லி கஞ்சத்தனத்தைக் கண்முன் காட்டி மயக்கிவிடுவான்; கற்போடும் கண்ணியத்தோடும் வாழலாம் என்று மிகவும் பேணிக்கையாக வாழ்ந்தால், அலங்காரம் செய்துகொண்டு, காலில் கொலுசோடு, தலையில் மல்லிகைப் பூச்சூடிய பெண்ணை நமக்குமுன் நடக்கவைத்து, ‘அவளைப் பார், பார்என்று நம் ஆழ்மன வேட்கையைத் தூண்டிவிட்டு, நம்மைத் தகாத செயலைச் செய்யவைத்துவிட்டுச் சிரித்துக்கொண்டிருப்பான். அவன்தான் ஷைத்தான்; அவன்தான் மனித இனத்தின் பகிரங்க எதிரி.

 

அவனைக் குறித்துத் திருக்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது: திண்ணமாக ஷைத்தான் மனிதனுக்குப் பகிரங்க எதிரி ஆவான். (12: 5)

 

அவன் மனித இனத்தின் மனங்களில் புகுந்து செய்யாத சேட்டைகளே இல்லை; அவன் மனிதனின் இரத்த நாளங்களிலும் ஊடுருவிச் சென்று சேட்டைகள் செய்பவன்; காலமெல்லாம் சேர்த்து வைத்த கண்ணியத்தையும்  நல்லறங்களையும் கணநேரத்தில் குலைத்துவிடுவான். கற்போடு வாழ்ந்து வருகின்ற ஆணையும் பெண்ணையும் கணநேரத்தில் திக்குமுக்காடச் செய்துவிடுவான். அவனிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென அல்லாஹ்வும்  அவனுடைய இறுதித்தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் நமக்கு அறிவுறுத்தியுள்ளார்கள்.

திருக்குர்ஆனின் பல்வேறு இடங்களில் அவன் குறித்து எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. அவன் ஆதி மனிதர்  ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களையும் அவர்தம் மனைவியையும் வழிகெடுத்து, தடைசெய்யப்பட்ட மரத்திலிருந்து புசிக்கச் செய்து, சொர்க்கத்திலிருந்து வெளியேற்றினான். அவன் பலவீனமானவர்களிடம் எளிதில் புகுந்து ஊடுருவி வழிகெடுத்துவிடுவான். இறைநம்பிக்கையில் உறுதிமிக்கோரை, அதில் பலவீன நிலையிலுள்ளோர் மூலம் ஊடுருவிச் சென்று வழிகெடுக்க முயல்வான்.

 

அவன் மனிதனுடைய ஒவ்வொரு செயலிலும் ஒன்றிணைந்து வந்துகொண்டே இருப்பான். பள்ளிவாசலுக்குச் சென்று, கூட்டாக (ஜமாஅத்) தொழுகையைக் கடைப்பிடிக்கும் வழக்கத்தைக் கொண்டிருக்கிற ஒருவரை, வீட்டில் தொழுதால் என்ன என்ற எண்ணத்தைப் போட்டு மடைமாற்ற முயல்வான்; தொடர்ந்து குர்ஆன் ஓதுகின்றவரை வழிகெடுத்து, பாடல் கேட்கத் தூண்டுவான். வேறு ஏதாவது கேளிக்கையில் ஈடுபடத் தூண்டுவான்.

 

நேர்மையாக உழைத்துச் சம்பாதிக்கும் வியாபாரியிடம் சென்று, அளவு நிறுவையில் மோசடி செய்து, குறுக்கு வழியில் சம்பாதிக்கத் தூண்டுவான்; பொருளில் கலப்படம் செய்து விற்கச் செய்வான்; அதிகமான இலாபம்  வைத்து விற்கத் தூண்டுவான். அலுவலகத்தில் நேர்மையாகப் பணியாற்றி வருகின்ற ஒருவரை, ‘நேர்மையாக இருந்து என்ன பயன் கண்டாய்என்று யாரோ ஒருவர்மூலம் சொல்லவைத்து ஊழல் செய்யத் தூண்டுவான்; கையூட்டு வாங்க ஆசையூட்டுவான். திடீரென இலஞ்ச ஒழிப்புத்துறை சோதனை மேற்கொண்டு, கையும் களவுமாகப் பிடித்துச் சென்று விசாரணைசெய்து, சிறையில் அடைக்கப்பட்டபின் அவரைப் பார்த்து மறைந்துநின்று சிரிப்பான்.

 

கண்கவர் கணவனோடும் அழகான பிள்ளைகளோடும் கற்பொழுக்கம் பேணி மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருப்பவளிடம் சென்று, யாரோ ஒருவனைக் காட்டி மயக்க முயல்வான்; மீண்டும் மீண்டும் முயல்வான். அவளது மனதை இளகச் செய்து, சபலத்தைப் போடுவான்; தடுமாறச் செய்வான். சரி, இவ்வளவு காலம் இவனிடம் இருந்து என்ன சுகத்தைக் கண்டோம்என்ற நன்றிகெட்ட எண்ணத்தை விதைப்பான். பிறகு ஒரு நாள் அந்தக் கள்ளக்காதலனோடு ஓடச் செய்வான். ஒழுக்கத்தோடு வாழ்ந்தவளுக்கு ஓடுகாலிஎன்ற பெயரைச் சூட்டி மகிழ்வான்; அவளது வாழ்க்கையை அத்தோடு ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடுவான்.

 

மணந்துகொண்ட மனைவியோடு மனஅமைதியோடு வாழ்ந்துகொண்டிருக்கிற ஆடவனிடம், அவன் பணியாற்றும் இடத்தில் ஒரு பெண்ணை அனுப்பி, அவனது கண்களுக்கு அவளை அழகுபடுத்திக் காட்டுவான். அவனிடம் அவளைச் சிரித்துச் சிரித்துப் பேசவைப்பான்; அவனது மனத்தில் சஞ்சலத்தைப் போடுவான். ஒரு நாளாவது அவளை அடைந்துவிட வேண்டுமென்ற தீய எண்ணத்தை விதைப்பான்; அவள்மீது தீராக் காதலை ஏற்படுத்துவான்.  பிறகு அவ்விருவருக்கிடையே தவறான உறவை ஏற்படுத்திவிட்டு, அவன் ஒதுங்கிக்கொள்வான்.

 

இவ்வாறு அவன் செய்யாத சேட்டைகளே இல்லை எனும் அளவிற்கு எல்லாவிதமான சேட்டைகளையும் செய்வான். எல்லா வயது மனிதர்களையும் கெடுக்க முனைவான்; பலரிடம் வெற்றிபெற்றுவிடுவான். சிலரிடம் மட்டுமே தோற்பான். ஆனால் வல்லோன் அல்லாஹ் அவனைத் தோற்கடிக்கவே மன்னிப்புஎனும் கதவை மனித இனத்திற்காக எப்போதும் திறந்தே வைத்துள்ளான். ஒரு மனிதன் ஷைத்தானின் தூண்டலால் பாவம் செய்துவிடுகிறபோது, உடனடியாக அதை உணர்ந்து, வருந்தி அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கேட்டால், அவன்  அம்மனிதனின் பாவத்தை மன்னித்துவிடுகின்றான். அதைக் கண்டு ஷைத்தான் அழுகின்றான். தான் செய்த அத்தனை முயற்சிகளும் வீணாகிவிட்டனவே என்று புலம்புகின்றான். மீண்டும் அவனைக் கெடுக்க முனைகிறான்.

 

தீர்க்கமான முடிவெடுத்து, எடுத்த முடிவில் உறுதியாக இருந்து செயல்பட்டாலே தவிர அவனிடமிருந்து தப்ப முடியாது. அதாவது நாம் ஒவ்வொன்றுக்கும் ஒரு நேரத்தைக் குறிப்பிட்டு வைத்துக்கொண்டு அந்தந்த நேரத்தில் அதையதைச் செய்து முடித்துவிட வேண்டும். இல்லையேல் பிறகு செய்யலாம்; பிறகு செய்யலாம் என ஒத்திப்போடச் செய்து, அதைச் செய்ய விடாமல் தடுத்துவிடுவான். ஆக நேரடியாகக் கெடுப்பது மட்டுமின்றி, ஒரு நல்ல செயலைத் தொடங்கவிடாமல் தடைகளை ஏற்படுத்துவதன்மூலமும் அவன் மனித இனத்திற்கு எதிரியாக உள்ளான் என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும்.

 

திருக்குர்ஆனை ஓதத் தெரியாத ஒருவர், குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி, அதைக் கற்றுக் கொள்ளலாம் என நினைப்பார். ஆனால் அதற்காக நேரம் ஒதுக்காமல் பிறகு பார்க்கலாம்; நாளை ஒதுக்கலாம் என்று ஒத்திப்போட்டுக்கொண்டே போவார். அதற்குள் அடுத்த ரமளான் வந்துவிடும். அம்மாதத்தில் இமாம் திருக்குர்ஆனின் முக்கியத்துவத்தையும் அதை அரபியில் ஓதினால் கிடைக்கும் நன்மைகளையும் தம் சொற்பொழிவில் கூறுவார். அதைக் கேட்கும்போது, திருக்குர்ஆனை நாமும் ஓதக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று தோன்றும். பெருநாளுக்குப்பின் தொடங்கிவிட வேண்டும் என்று மனத்தில் உறுதி கொள்வார். ஆனால் நேரம் ஒதுக்க முடியாமல் தள்ளிக்கொண்டே போகும்; அப்படியே காலம் கரைந்துவிடும். இனி நாம் ஓதி என்ன பயன்; நம் பிள்ளைகள் ஓதினால் போதும்என்ற எண்ணத்தை ஏற்படுத்தி அத்திட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துவிடுவான்; அவன் தன் திட்டத்தில் வெற்றிபெற்றுவிடுவான்.

 

இதனால்தான் நல்ல செயல்பாடுகளை ஒத்திப்போடக் கூடாது என்று சொல்வார்கள். ஏனென்றால் இன்றைய நாள் நம்முடையது. நாளை வரும்போது நாம் இருப்போமா என்பது உறுதியில்லை. அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகின்றான்:  உங்கள் இறைவனின் மன்னிப்புக்கும், சொர்க்கத்துக்கும் விரைந்து செல்லுங்கள். (3: 133) “செயல்களுள் சிறந்தது எது?” என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வினவப்பட்டபோது, “தொழுகையை அதன் ஆரம்ப நேரத்தில் தொழுவதுஎன்று கூறினார்கள். (அபூதாவூத்: 426) ஆக நல்ல செயல்பாடுகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பதை இதன்மூலம் அறியலாம்.

 

இவ்வாறே பள்ளிவாசலில் சென்று ஐவேளைத் தொழுகையைக் கூட்டாகத் தொழவேண்டும் என்று ஒருவர் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் முடிவெடுப்பார். பள்ளியைவிட்டு வெளியே சென்றதும் அந்த எண்ணத்தை மழுங்கடித்து விடுவான்; மறக்கச் செய்துவிடுவான். அதற்குள் அடுத்த வெள்ளிக்கிழமை வந்துவிடும். மீண்டும் அவர் தம் மனத்தில் உறுதிகொள்வார். பின்னரும் அவன் அவருடைய எண்ணத்தை மழுங்கச் செய்துவிடுவான். இவ்வாறே அவன் தன் திட்டத்தில் வெற்றிபெற்றுவிடுவான். மனிதன் மிக உறுதியாகவும் தீர்மானமாகவும் முடிவெடுக்கின்ற வரை இதே நிலைதான்.

 

ஒழுங்காக ஒரு வீட்டில் வாழ்ந்து வருபவரைக் கெடுக்க முனைவான்; பக்கத்திலுள்ள நிலத்தை அபகரித்துக்கொள் என்றோ பக்கத்து இடத்திலிருந்து ஒரு பகுதியை உன் இடத்தோடு இணைத்துக்கொள் என்றோ தூண்டுவான். யார் ஒரு சாண் நிலத்தை அபகரித்தாரோ அவருக்கு மறுமையில் அது போன்ற ஏழு நிலப்பகுதிகள் கழுத்தில் மாலையாகப் போடப்படும்என்ற நபிமொழியை மறக்கச் செய்து, அடுத்தவர் நிலத்தை அபகரிக்கச் செய்வான். பலவீனமான ஈமான்-இறைநம்பிக்கை உள்ளவர் அவனிடம் தோற்றுப்போய்விடுவார். பலமான இறைநம்பிக்கை உள்ளவர் அவனுடைய சூழ்ச்சித் திட்டங்களிலிருந்து தப்பிவிடுவார்.

 

சொத்துச் சண்டையை உண்டாக்கி அண்ணன்-தம்பியை, அக்காள்-தங்கையைப் பிரிப்பான். ஒருவருக்கொருவர் இணைபிரியாத உறவுகளாக வாழ்ந்து வந்த அவர்களைச் சொத்துக்காகச் சண்டையிடச் செய்து பல்லாண்டுகளாகப் பேசவிடாமல் செய்துவிடுவான். ஒழுங்காக வாழ்ந்து வருகிற கணவன்-மனைவி இடையே சின்ன விஷயத்திற்காகச் சண்டையை ஏற்படுத்தி அவர்களைப் பேசவிடாமல் செய்துவிடுவான். பின்னர் அதுவே பெரிதாகி, அவ்விருவரும் பிரிந்துவிடும் நிலை உருவாகும். ஆகவே கணவன்-மனைவி இடையே ஏற்படும் சின்னச் சின்ன மோதல்களைப் பெரிதுபடுத்தாமல் உடனடியாகச் சமாதானம் ஆகிவிட வேண்டும். ஷைத்தானின் சூழ்ச்சிக்கு இலக்காகிவிடாமல், அவர்கள் தம்மைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். அவர்கள் சண்டைபோட்டுக் கொண்டு பிரிந்துவிட்டால் அதைப் பார்த்து அவன் வெற்றிக் களிப்பில் சிரித்துக்கொண்டிருப்பான்.

 

ஷைத்தான் குறித்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எச்சரித்துக் கூறியுள்ளார்கள்: அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவித்துள்ளதாவது: 

தொழுகைக்காக (பாங்கு சொல்லி) அழைக்கப்படும்போது ஷைத்தான் பாங்கு சத்தத்தைக் கேட்கக்கூடாது என்பதற்காகச் சத்தத்துடன் காற்றை (அபான வாயு) விட்டுக்கொண்டு திரும்பி ஓடுகிறான். பாங்கு சொல்லி முடித்ததும் முன்னே வருகின்றான். தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டால் (மீண்டும்) திரும்பி ஓடுகிறான். இகாமத் சொல்லி முடித்ததும் முன்னே வருகின்றான். (தொழுகையில் ஈடுபட்டுள்ள) மனிதருடைய உள்ளத்தில் ஊடுருவி ஊசலாட்டத்தை ஏற்படுத்தி, “இதை நினைத்துப் பார்; அதை நினைத்துப் பார்'' என்று அவர் அதற்குமுன் நினைத்திராத விஷயங்களை அவருக்கு நினைவூட்டிக் கூறுகின்றான். எந்த அளவிற்கென்றால், அந்த மனிதர் தாம் எத்தனை ரக்அத்கள் தொழுதோம் என்பதை அறியாதவராக மாறிவிடுகிறார். (நூல்: புகாரீ: 608) ஆக நம்மை நிம்மதியாகத் தொழவிட மாட்டான் என்பதை இதன்மூலம் அறிகிறோம்.

 

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஷைத்தானிடமிருந்து பாதுகாப்புத் தேடாத  பிரார்த்தனையே இல்லை எனும் அளவிற்கு அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடியுள்ளார்கள். அவனைக் குறித்து எச்சரிக்கை செய்யாத இடமே இல்லை எனும் அளவிற்கு எச்சரிக்கை செய்துள்ளார்கள். எனவே வரக்கூடிய காலங்களில் நாம் ஷைத்தானிடமிருந்து எச்சரிக்கையாக இருந்து நம்முடைய நல்லறங்களைத் தொடர்ந்து செய்வோம்.  நாம் செய்யப்போகும் செயல்கள் குறித்துத் தீர்மானமாகவும் தீர்க்கமாகவும் முடிவெடுப்போம். பின்னர் அதில் உறுதியாக இருப்போம். அப்போதுதான் நாம் ஷைத்தானை வெல்ல முடியும். நாம் ஷைத்தானை வெல்லும் வலுவான இறைநம்பிக்கையை நம் மனத்தினுள் அல்லாஹ் விதைப்பானாக.  ==========================
சனி, 5 மார்ச், 2022

விருட்சம் தூவிய விதைகள்

 அல்பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் அரபுக் கல்லூரியின்முன்னாள் முதல்வர் மர்ஹூம் பீ.எஸ்.பீ. ஜைனுல் ஆபிதீன் ஹள்ரத் ரஹிமஹுல்லாஹ் அவர்களுக்கான நினைவேந்தல் நிகழ்வு அடையாறு குராசானி பீர் பள்ளிவாசலில் கடந்த 26 02 2022 அன்று நடைபெற்றது. அதில் அவர்களின் நினைவுக்குறிப்புகள் அடங்கிய ஒரு நூல் வெளியிடப்பட்டது. அந்நூலில் இடம்பெற்றுள்ள என்னுடைய ஆக்கம்.

 

இதோ உங்கள் பார்வைக்கு...

 

விருட்சம் தூவிய விதைகள்

-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

நான் அல்பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் அரபுக் கல்லூரியில் முதன்முதலாகக் காலடி வைத்த ஆண்டில்தான், கண்ணியத்திற்குரிய ஆசிரியத் தந்தை மர்ஹூம் பீ.எஸ்.பீ. ஜைனுல் ஆபிதீன் ஹள்ரத் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் முதல்வராகப் பொறுப்பேற்றிருந்தார்கள். அந்த ஆண்டுதான் அரபுக் கல்லூரி’ (குல்லிய்யா) என்பது பல்கலைக் கழகம்’ (ஜாமிஆ) எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

யாருமில்லாமத் தனியாக வந்திருக்கிறாயே, உன்னை எப்படி மத்ரஸாவில் சேர்த்துக்கொள்வது? போய், உன்னோட அத்தாவ கூட்டிட்டு வா!என்று கூற, முதல்வரின் அருகில் அமர்ந்திருந்த கண்ணியத்திற்குரிய ஆசிரியத் தந்தை மர்ஹூம் ஹெச். கமாலுத்தீன் ஹள்ரத் ரஹிமஹுல்லாஹ், “ஓதணும்னு ஆர்வத்தோட வந்திருக்கான். சேத்துக்கங்க ஹஸ்ரத். பிற்காலத்தில் நல்லா வருவான்என்று கூறியதை ஏற்றுக்கொண்டு, கல்லூரியின் சட்ட விதிமுறைகளை என்னிடம் கூறியதையடுத்து, நான் சென்று தலைமுடி மழித்து, குளித்து, லுங்கி-ஜுப்பா அணிந்துகொண்டு, ஹள்ரத் அவர்களின் முன்னிலையில் போய் நின்றபோது, “இப்பதான்டா ஓதுற புள்ள மாதிரி இருக்கெஎன்று கூறினார்கள்.

1993 முதல் 2000ஆம் ஆண்டு வரை எட்டாண்டுகள் அங்கேயே பயின்று பட்டம் பெற்று  வெளியே வந்தேன். பாக்கியாத்தில் என்னைச் சேர்க்கத் தயங்கிய பீ.எஸ்.பீ. ஹள்ரத் அவர்களைச் சந்திக்க நேரிடும்போதெல்லாம், அங்கே நான் சேர்த்துக்கொள்ளப்பட்டதைப் பற்றி என்னிடமே நெகிழ்ச்சியுடன் கூறுவார்கள். நான் எழுதிய அல்லது தமிழாக்கம் செய்த நூல்களைப் பார்க்கும்போதெல்லாம், “அல்லாஹ் உன்னைக் கொண்டு வேலை வாங்குறான் அப்துல் ஹாதி; ரொம்ப சந்தோஷமா இருக்குஎன்று மகிழ்ச்சியுடன் கூறுவார்கள். நான்  கடைசியாக நபிவழி மருத்துவம்எனும் அரபு-தமிழாக்க நூலைக் காட்டி, வாழ்த்துரை பெற்றபோதும், அதையே நெகிழ்ச்சியுடன் கூறிக் காட்டினார்கள். தயக்கத்தோடு என்னைச் சேர்த்த ஹள்ரத் அவர்களின் மனங்குளிரும் விதமாக நான் உருவானதேஅவர்களுக்கு நான் செய்த கைம்மாறாகக் கருதுகிறேன்.

 

அன்பான கண்டிப்பு: ஒரு தடவை பாக்கியாத் மஸ்ஜிதில் ஃபஜ்ர் தொழுகையின்போது முன்சுன்னத் தொழுதுவிட்டு, இகாமத் வரை எஞ்சிய நேரத்தில் குர்ஆன் ஓதுவதற்காக, அதை என் இடக்கையால் எடுத்தபோது, (நான் இடக்கைப் பழக்கமுடையவன்) அதைப் பின்னால் இருந்து பார்த்த ஹள்ரத் அவர்கள், ஒரு மாணவர் மூலம் என்னை அழைத்து, “குர்ஆனை எடுக்கும்போது வலக்கையால்தான் எடுக்க வேண்டும். அதுக்கு இஸ்ஸத் (மரியாதை) கொடுக்குறதில்லையா?” என்று கண்டிப்புடன் கூறி அனுப்பினார்கள். அன்று முதல் அப்பழக்கத்தை மாற்றிக்கொண்டேன். நான் இடக்கைப் பழக்கமுடையவன் என்பதால் என்னையறியாமல் இடக்கை முந்தும்போதெல்லாம் ஹள்ரத் அவர்களின் கண்டிப்பான முகம் என்முன் வந்து என்னை எச்சரித்துச் செல்லும். 

 

பிறருக்கு நன்றி செலுத்துதல்: நம் ஹள்ரத் அவர்கள் தமக்கு யாரேனும் ஏதாவது அன்பளிப்பாகக் கொடுத்திருந்தாலும் உதவி செய்திருந்தாலும் அதை மீண்டும் மீண்டும் நினைத்துப் பார்ப்பார்கள். இதை எனக்கு இன்னார் கொடுத்தார்என்று சந்திக்கின்ற மாணவர்களிடமும் கூறுவார்கள். அத்தோடு அவர்களுக்காக துஆவும் செய்வார்கள்.

 

சிக்கலில் சிக்காமை: நம் ஹள்ரத் அவர்கள் யாரேனும் தம்மிடம் கேள்வி கேட்டால் அதற்கு மிகச் சரியான பதிலை அவர் மனம் விரும்புமாறு சொல்லிவிடுவார்கள். சிக்கலில் சிக்கும் விதமாக அவர்களின் பதில் அமையாது.  சிக்கலான கேள்வியைக் கேட்டால் சமயமறிந்து சமயோஜிதமாகப் பதில் சொல்லக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று எங்களுக்குப் போதித்துள்ளார்கள்.

 

அதற்கு ஒரு கதையையும் சொல்வார்கள். ஒரு இராஜா, தம்முடைய அனைத்துப் பற்களும் உதிர்ந்து விழுந்துவிடுவதாகக் கனவு கண்டார். சபையோரிடம் அதற்கான விளக்கத்தைக் கேட்டார். உங்களுடைய மனைவி, பிள்ளைகள், உறவினர்கள் அனைவரும் இறந்துவிடுவார்கள். நீங்கள் மட்டும் தனியாக இருப்பீர்கள்என்று அதனுடைய நேரடியான விளக்கத்தை அறிஞர்கள் கூறினார்கள். அதைக் கேட்ட அந்த இராஜா மிகுந்த சினம் கொண்டார்.  எத்தனையோ பேரிடம் விளக்கம் கேட்டும் எல்லோரும் அவ்வாறுதான் விளக்கம் கூறினார்கள்.

 

ஆனால் அவ்வூருக்குப் புதிதாக வந்திருந்த ஒருவர் அந்த இராஜா மனம் மகிழுமாறு விளக்கம் கூறினார். அதாவது இராஜா அவர்களே உங்கள் உறவினர்களைவிட உங்களுக்குத்தான் நீண்ட ஆயுள்; நீங்கள் நீண்ட காலம் வாழ்வீர்கள்; நீண்ட காலம் ஆட்சிசெய்வீர்கள்என்று கூறினார். அந்த விளக்கத்தைக் கேட்ட அந்த இராஜா மிகவும் மகிழ்ச்சியடைந்தார். அவருக்குப் பொன்னும் பொருளும் கொடுத்தார். மற்றவர்கள் சொன்ன விளக்கத்தைத்தான் அவரும் சொன்னார். ஆனால் அதை அவர் வித்தியாசமாகச்  சொன்னார். இவ்வாறுதான் சூழ்நிலை அறிந்து பேச வேண்டும் என்று எங்களுக்குச் சொல்லியுள்ளார்கள். 

பைஅத் வாங்க வேண்டியது அவசியமா என்று யாரேனும் ஆலிம் கேட்கும்போது, கேட்பவர் எப்படிப்பட்டவர் என்பதை அறிந்துகொண்டு, அவருக்குத் தோதுவாகப் பதிலளிப்பார்கள். அதில் நாட்டம் இல்லாதவர் என்றால், “நாங்க உங்களைச் சும்மாவா விட்டுவிட்டோம். குர்ஆன், ஹதீஸ் எல்லாம் படித்துக் கொடுத்திருக்கிறோம்தானே? அது உங்களுக்குப் போதாதா?” என்று பதில் சொல்வார்கள். அதில் நாட்டம் உடையவர் என்றால், தரீக்கா குறித்த எல்லா விஷயங்களையும் எடுத்துக் கூறி, என்னென்ன தரீக்காக்கள் எப்படியெல்லாம் வந்துள்ளன. அதற்குரிய ஷைகுகள் யார் யார் என்ற விவரங்களையெல்லாம் கூறுவார்கள்.  இதனால்தான் அவர்கள் எந்தச் சிக்கலிலும் சிக்கிக்கொள்ளாமல் அனைவராலும் விரும்பப்பட்டவராக இருந்தார்கள்.

 

பொதுவாக எக்கருத்தையும் யார்மீதும் திணிக்கக்கூடிய பழக்கம் நம் ஹள்ரத் அவர்களிடம் இருந்ததில்லை.  அதனால்தான் பைஅத் குறித்து, யாரிடமும் திணிக்க மாட்டார்கள். அதில் ஆர்வமுள்ளோருக்கு மட்டும் வழிகாட்டுவார்கள்.

 

தீனுக்கு முன்னுரிமை: நான் அவர்களுடைய நஜாரத்தில் (முதல்வராக இருந்தபோது) இரண்டாம் ஜும்ரா  ஓதிக்கொண்டிருந்தபோது ஒரு நாள் பத்தாம் வகுப்பு தனித்தேர்வராக கலந்துகொண்டு தேர்வு எழுத அனுமதி கேட்டு அவர்களின் அறைக்குச் சென்றேன். அப்போது, “மத்ரஸாவில் ஓதிக்கொண்டிருக்கும்போது வெளியுலகப் படிப்புக்கு அனுமதி தரமுடியாதுஎன்று கூறினார்கள். சற்று நேரம் யோசித்துவிட்டு, “மத்ரஸா படிப்பில் சரியாக இருக்கிறாயா? எல்லாப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்றுள்ளாயா?” என்று கேட்டார்கள். ஆம்! ஹஜ்ரத்! எல்லாவற்றிலும் தேர்ச்சி பெற்றுள்ளேன்என்று கூறினேன். பிறகு என்னுடைய உஸ்தாதுகள் சிலரிடம் கலந்து பேசிய பிறகுதான், அனுமதி தந்தார்கள். அதாவது அந்த அளவிற்கு தீனுக்கும் தீன் கல்விக்கும் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்தார்கள் என்பதை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.

 

கடிதம் எழுதும் பழக்கம்: நம் ஹள்ரத் அவர்கள் கடிதம் எழுதும் பழக்கமுள்ளவர்கள். மாணவர்களுள் யாரேனும் நலம் விசாரித்து கடிதம் எழுதினால், அல்லது வேறு ஏதேனும் விளக்கம் கேட்டுக் கடிதம் எழுதினால் அதற்குப் பதில் கடிதம் எழுதுவது நம் ஹள்ரத் அவர்களின் வழக்கமாகும். அப்படி எனக்கும் ஒரு தடவை கடிதம் எழுதியுள்ளார்கள்.

 

பாக்கியாத்திலிருந்து சென்றபின், கும்பகோணம் அருகிலுள்ள நாச்சியார்கோவிலில் மன்பவுல் ஹஸனாத் அரபுக் கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றினார்கள். அவர்களை நேரில் சந்தித்து என்னுடைய திருமண அழைப்பிதழைக் கொடுத்து, அவர்களை என் திருமணத்திற்கு வருமாறு அழைத்தேன். ஹள்ரத் அவர்களால் என் திருமண நிகழ்வுக்கு வர இயலவில்லை. எனவே அவர்கள் எனக்காகவும் என் மனைவிக்காகவும் துஆ செய்து, வாழ்த்தி, கடிதம் எழுதியிருந்தார்கள். அந்தக் கடிதத்தை நான் இன்றுவரை பாதுகாப்பாக வைத்துள்ளேன். ஆக, தம்மால் இயலாதபோது அதற்குரிய காரணத்தைக் கூறி, கடிதம் எழுதும் பழக்கம் கொண்டவர்கள். 

 

புன்னகை தவழும் முகம்: ஹள்ரத் அவர்களின் புன்னகை தவழும் முகமே அனைவரையும் வசீகரிக்கும். அனைவரின் மனங்களையும் ஈர்க்கும். அவர்கள் பாடம் நடத்தும்போதும் பயான் செய்யும்போதும் அவர்களின்  அழகிய விளக்கங்களுடன் அவர்களின் உடல்மொழியும் பேசும். அதனால் அவர்களின் வகுப்பிலுள்ள தமிழ் மாணவர்களுடன் உர்தூ மாணவர்களுக்கும் மலையாள மாணவர்களுக்கும் அவர்களின் பேச்சு புரிந்துவிடும்; மந்தமான மாணவர்களுக்கும் அவர்களின் பாடம் விளங்கிவிடும். இத்தகைய புன்னகையும் உடல்மொழியும் ஒருங்கே  பெற்றவர்கள்தாம் நம் ஹள்ரத் அவர்கள்.   

 

புன்னகையும் உடல்மொழியும் ஒருங்கே பெற்ற ஹள்ரத் அவர்களின் பேச்சு அனைவராலும் விரும்பப்பட்டதால்தான் தமிழ்நாட்டின் பட்டிதொட்டிகளிலெல்லாம் ஹள்ரத் அவர்களைச் சொற்பொழிவுக்காக அழைப்பார்கள். அத்தோடு சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கும் சென்று பயான் செய்துள்ளார்கள். ஓர் அரபுக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றிக்கொண்டே மக்கள் அனைவரின் உள்ளங்களிலும் இடம்பெற்றிருக்கிறார்கள் என்றால், அது அவர்களின் நகைச்சுவை கலந்த இனிய மார்க்கச் சொற்பொழிவுக்குக் கிடைத்த வெற்றியாகும்.

 

சம்பிரதாயங்களை உடைத்தல்: நாம் ஒருவரைச் சந்திக்கச் செல்கின்றோம் என்றால் பழங்களோ தின்பண்டங்களோ வாங்கிச் செல்வது வழக்கம். அந்த அடிப்படையில் நான் என் உஸ்தாதைச் சந்திக்கச் செல்கிறபோது பழங்கள் வாங்கிச் செல்வேன். ஓரிரு தடவை அதனை ஏற்றுக்கொண்ட ஹள்ரத் அவர்கள், பிறகு அப்துல் ஹாதி, சந்திக்க வருகிற நேரமெல்லாம் ஏதாவது வாங்கிவர வேண்டிய அவசியமில்லை. சில தடவை வாங்கி வரணும்; சில தடவை ஏதும் வாங்காமல் சும்மா வந்து சந்திக்கணும். அப்படியில்லையென்றால் சந்திப்பதே ஒருவித சிரமத்தை ஏற்படுத்திவிடும்என்பார்கள்.

 

இன்று பலருக்கும் இந்தச் சங்கடம் உள்ளது. ஏன் உன் உறவினரை அடிக்கடி சென்று சந்திப்பதில்லைஎன்று கேட்டால், “ம்... சந்திக்கப் போனால் சும்மாவா போக முடியும்? ஏதாவது கையில வாங்கிட்டுப் போக வேண்டாமா? அதுக்கு பணத்துக்கு எங்கெ போறது? அவளைச் சந்திக்கப் போனா, இவ கோபித்துக்கொள்வாள். இவளை  மட்டும் சந்தித்துவிட்டு வந்தா, அவ கோபித்துக்கொள்வாள். என்ன செய்யிறது?” என்றெல்லாம் காரணங்கள் சொல்வதைக் கேட்டிருக்கலாம். ஆக சந்திப்புக்குத் தடையாக இருப்பது, ‘செலவுதான்என்பது தெளிவாகிறது. இதனால்தான்  பலரும் தம் உறவினரை அடிக்கடி சந்திப்பதைத் தவிர்க்கின்றனர் என்பதை உணர முடிகிறது. இதை முறியடிப்பதற்கான வழியைத்தான் நம் ஹள்ரத் அவர்கள் கூறினார்கள்.

 

இப்படி ஏராளமான வாழ்க்கைப் பாடங்களை நம் ஹள்ரத் அவர்கள் நமக்குக் கற்றுக்கொடுத்துச் சென்றுள்ளார்கள். அவர்கள் கற்றுக்கொடுத்த கல்வியின் பிரதிபலன் அவர்களுடைய மண்ணறைக்கு மறுமை நாள் வரை சென்றுகொண்டே இருக்கும் என்பதில் ஐயமில்லை. அல்லாஹ் அவர்களின் மண்ணறையை ஒளிமயமாக ஆக்குவானாக. அவர்களுக்கு நாளை மறுமையில் சொர்க்கத்தில் உயர்ந்த பதவிகளை வழங்குவானாக. 

=================================