செவ்வாய், 21 ஏப்ரல், 2015

“மார்க்கக் கல்வி மகத்தானதே”

அஸ்ஸலாமு அலைக்கும்

மார்க்கக் கல்விமீது ஆர்வத்தை ஏற்படுத்துமுகமாக, “மார்க்கக் கல்வி மகத்தானதே” எனும் தலைப்பில் ஒரு குறுநூல் எழுதி வெளியிட்டுள்ளேன். அதைத்  தமிழகத்திலுள்ள 32 மாவட்டங்களுக்கும் அனுப்ப எண்ணியுள்ளேன். எனவே அந்தந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் தத்தம் மாவட்டத்திலுள்ள 10 முக்கியமான பள்ளிவாசல்களின் முகவரியை அப்பள்ளி இமாமின் பெயரோடு எனக்கு அனுப்பித்தருமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன். 

என்னுடைய செல்பேசிக்கோ மின்னஞ்சல் முகவரிக்கோ அதை அனுப்பலாம். 
செல்பேசி: 9444354429
மின்னஞ்சல் முகவரி: hadi2abshar@gmail.com


கைத்தொழில் கற்போம்!




மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி, எம்.ஏ., எம்.ஃபில்.,

ஒவ்வொரு நபியும் ஏதேனும் கைத்தொழில் செய்துள்ளதாக அறிகிறோம். தாவூத் (அலை) அவர்கள் இரும்பை உருக்கி, அதன்மூலம் போர்க்கவசங்கள் செய்தார்கள். நபி (ஸல்) அவர்கள் கைத்தொழில் குறித்துக் கூறியுள்ளதைக் காணும்போது உழைப்பின் உயர்வையும் மேன்மையையும் உணரமுடிகிறது. அதில் ஒன்று: கையால் உழைத்துண்பதே உணவுகளில் மிகச் சிறந்தது. நபி தாவூத் (அலை) அவர்கள் தம் கையால் உழைத்துண்பவர்களாக இருந்தார்கள்.

ஒவ்வொரு நபியும் ஆடு மேய்த்துள்ளார்கள். தச்சராக, வணிகராக, தொழில்முனைவோராக, கப்பல் கட்டுநராக, ஆடை நெய்பவராக இப்படிப் பல்வேறு தொழில்களைச் செய்வோராக நபிமார்கள் இருந்துள்ளனர்.

இமாமத் பணி என்பது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மேற்கொண்ட ஓர் உன்னதமான பணி. ஆனால் அவர்கள் ஓர் இமாமாக இருந்து மக்களுக்குத் தொழுகை நடத்தியதோடு பல்வேறு பணிகளை மேற்கொண்டிருக்கின்றார்கள். மக்களை நிர்வகித்தல், எதிரிகளை எதிர்நோக்குதல், பிரச்சனைகளை எதிர்கொள்ளுதல், குடும்ப விவகாரங்களைக் கவனித்தல், சமுதாயப் பணிகளைச் செவ்வனே செய்தல் உள்ளிட்ட எத்தனையோ பணிகளை மேற்கொண்டிருக்கின்றார்கள். நாம் அந்த அளவிற்குச் செய்யவில்லையானாலும் பொருளாதாரத்தில் பிறரிடம் தேவையாகாத வகையில் சுயமாக ஏதேனும் கைத்தொழில் செய்து நம் பொருளாதார நிலையை உயர்த்திக்கொள்ள முயற்சி செய்யலாமே? முயற்சியும் கடுமையான பயிற்சியுமிருந்தால் எந்தத் தொழிலையும் எளிதாகச் செய்யலாம்.

நவீன யுகத்தில் வாழ்ந்து வருகின்ற ஆலிம்கள் தம் வறுமையைச் சொல்லிக்கொண்டே இருப்பதைக் காண்கிறோம். நீங்கள் ஏன் உங்கள் பிள்ளையை, உங்களைப் போலவே ஆலிமாக ஆக்கவில்லை என்று வினவினால், நான்  பட்ட சிரமம் போதாதா? என்  பிள்ளையும் சிரமப்பட வேண்டுமா? என்று மறுவினாத் தொடுக்கின்றனர். இவர்கள் தம் ஓய்வு நேரங்களை முறையாகப் பயன்படுத்தினால் தம் வறுமையை ஓட ஓட விரட்டலாம். இமாம்களாக உள்ள ஆலிம்கள் தங்கள் தொழுகை நேரம் போக எஞ்சிய நேரங்களில் தமக்கு மிகவும் விருப்பமான ஏதேனும் தொழிலை மேற்கொண்டால் அவர்கள் தம் வாழ்வில் முன்னேற்றம் காணலாம்.

தற்காலத்தில் கணினியும் இணையதளச் சேவையும் மிகுந்துவிட்டதால் இருந்த இடத்திலிருந்தே செய்யக்கூடிய பணிகள் ஏராளம் உள்ளன. அதற்குத் தேவை ஒரு கணினியும் இணையதள இணைப்பும் ஆகும். இது இருந்தால் எங்கிருந்து கொண்டும் நம் வேலையைச் செய்து கொடுக்கலாம். பிறமொழிகளை மொழிபெயர்த்தல், நூல்களை எடிட்டிங் செய்தல், பிழைதிருத்தம் செய்துகொடுத்தல், கணினி வடிவமைத்தல், வரைதல், நூல்கள் எழுதுதல், நூல்களை வெளியிடுதல் முதலிய எண்ணற்ற பணிகள் உள்ளன.

மொழிபெயர்த்தல்

இது ஒரு கலை. மொழியில் ஆழ்ந்த புலமையும் ஆர்வமும் இருந்தால் இதை நல்ல முறையில் செய்யலாம்.  ஆலிம்களுக்கு அரபி தெரியும் என்பதால் தமிழை நன்றாகக் கற்றுக்கொண்டு மொழிபெயர்க்கத் தொடங்கலாம். அரபியில் ஏராளமான அரிய நூல்கள் குவிந்துகிடக்கின்றன. பல்வேறு துறைகளைச் சார்ந்த புதிய புதிய நூல்கள்  வெளிவந்த வண்ணம் உள்ளன. அவற்றையெல்லாம் தமிழுக்குக் கொண்டுவந்தால் தமிழ்மக்கள் மிகுந்த பயனடைவார்கள். முதலில் செய்யத் தொடங்கும்போது தயக்கமாக இருக்கும். போகப் போக எளிதாகிவிடும். முதலில் ஒரு பக்கம் அளவிற்குத் தமிழாக்கம் செய்து, இத்துறையில் நன்கு தேர்ச்சி பெற்றோரிடம் காட்டிச் சரிசெய்துகொண்டு பின்னர் நீங்கள் தொடர்ந்து செய்யலாம். ஒரு மொழிபெயர்ப்பாளர் தனியாக இருந்து பணியாற்றுவதோடு, பத்திரிகைத் துறையிலும் அயலகத் துறையிலும் புத்தக நிலையங்களிலும் பணியாற்றலாம்.  அது தவிர தமக்கு விருப்பமான நூலைத் தேர்ந்தெடுத்து அதைத் தமிழாக்கம் செய்து பதிப்பகங்களில் கொடுக்கலாம். அல்லது சுயமாகவும் வெளியிடலாம்.

நூல்கள் எடிட்டிங்

ஒருவர் எழுதிய நூலைச் செம்மைப்படுத்துதல் என்று சொல்லலாம். சிலர் நூல் எழுதுவார்கள். அதில் வாக்கிய அமைப்புகளை மாற்றி மாற்றி எழுதியிருப்பார்கள். தப்பும் தவறுமாக எழுதியிருப்பார்கள். இத்தகைய நூலைச் செம்மைப்படுத்தி, சீராக்கிக் கொடுப்பதே எடிட்டிங் பணியாகும். தமிழ் நன்றாகத் தெரிந்திருந்தால், இலக்கண விதிகளுக்கு உட்பட்டு ஒரு வாக்கியம் எவ்வாறு அமைய வேண்டும் என்பது  தெரிந்துவிடும். அதற்கேற்ப அவ்வாக்கியத்திலுள்ள வார்த்தைகளை மாற்றிப் போட்டுச் செம்மைப்படுத்திக் கொடுக்க வேண்டும். இதுவும்  தொடக்கத்தில் புதிதாகத் தோன்றும். பழகப் பழக எளிதாகிவிடும்.

பதிப்பகங்கள், புத்தகாலயங்களில் பல்வேறு நூல்கள் எடிட்டிங் செய்ய ஆள் இல்லாமல் தேங்கிக் கிடக்கின்றன. அவற்றை வாங்கி வந்து, நீங்கள் இருக்கின்ற இடத்தில் இருந்துகொண்டே எடிட்டிங் செய்து கொடுக்கலாம்.

பிழைதிருத்தம்

ஒரு நூல் எடிட்டிங் முடிந்து, இறுதியாகப் பிழைதிருத்தத்திற்கு வரும். தமிழ்மொழியில் நல்ல புலமையை வளர்த்துக்கொண்டால் இத்தொழிலை எளிதாகச் செய்யலாம். குறிப்பாகப் புணர்ச்சி விதிகள் தெரிந்திருக்க வேண்டும். அத்தோடு ன, ண வேறுபாடு, ள,ழ,ல வேறுபாடு, ர,ற வேறுபாடு ஆகியன செவ்வனே தெரிந்திருக்க வேண்டும். ஒற்றுப்பிழை, சந்திப்பிழை, இலக்கணப்பிழை, தட்டச்சுப் பிழை முதலிய பிழைகள் ஒரு நூலில் ஏற்பட வாய்ப்புண்டு. அவற்றைக் களைந்து படிப்பதற்கு இலகுவாக அமைத்துக்கொடுப்பதுதான் பிழைதிருத்தப் பணியாகும். சிலர் எடிட்டிங், பிழைதிருத்தம் இரண்டையும் சேர்த்து ஒருவரிடமே கொடுப்பர். வேறு சிலர் இரண்டிற்கும் தனித்தனி ஆளை நியமிப்பர். இரண்டும் தெரிந்திருந்தால் சிறப்பு. ஒரு நூலை நல்லமுறையில் நேர்த்தியாகக் கொண்டுவர பிழைதிருத்தம் உதவுகிறது. இப்பணிக்கு மற்றொரு தகுதி என்னவெனில் கூடுதல் கவனம் ஆகும். எல்லாம் தெரிவது மட்டுமல்ல, கூடுதல் கவனம் செலுத்திப் பார்க்கும் ஆர்வம் இருந்தால்தான் இப்பணியில் சிறக்க முடியும்.

வடிவமைப்பு (லே அவுட்)

கணினியில் ஒரு நூலை எவ்வாறு வடிவமைக்க வேண்டும் என்று தெரிந்துகொண்டு அதற்கேற்ப வடிவமைப்பதே நூல் வடிவமைப்பாகும். ஒவ்வொரு நூலும் ஒவ்வொரு வடிவமைப்பில் வருகிறது. அந்த வடிவமைப்பின் அளவைத் தெரிந்துகொண்டு அதற்கேற்ப வடிவமைக்க வேண்டும். அளவுகளை மட்டும் புரிந்துகொண்டால் இப்பணி மிக எளிது. ஒரு பக்கத்திற்கு இவ்வளவு ரூபாய் எனச் சம்பாதிக்கலாம். இன்றைக்குத் தமிழிலும் ஆங்கிலத்திலும் ஏராளமான நூல்கள் வெளிவருகின்றன. எனவே அவற்றை வடிவமைக்கப் பெருமளவில் ஆள் தேவைப்படுகின்றார்கள். அதுதவிர, அரபியும் தமிழும் இணைந்தாற்போல் நூலை வடிவமைக்கும் பணி எல்லோருக்கும் தெரிவதில்லை. அதற்கு மிகுந்த ஆள் பற்றாக்குறை காணப்படுகிறது. ஆலிம்கள் அரபிமொழி அறிவார்கள் என்பதால் இப்பணியை அவர்களிடம் மிகுந்த நம்பிக்கையோடு ஒப்படைக்கக் காத்திருக்கின்றார்கள். செய்வதற்கு நாம்தாம் இன்னும் நம்மைத் தயார்படுத்திக்கொள்ளவில்லை. எனவே இந்தத் துறையில் மிளிர பேஜ்மேக்கர், இன்டிசைன் தெரிந்தால் போதும். நன்றாகச் செய்யலாம். கோரல் ட்ரா தெரிந்தால் கூடுதல் சிறப்பாகும்.

டைப்பிங்

தட்டச்சு என்பது அன்று முதல் இன்று வரை தொடர்ந்து வந்துகொண்டே இருக்கிறது. அன்று தட்டச்சு இயந்திரம் இருந்தது. இன்று அந்த இடத்தைக் கணிப்பொறி ஆக்கிரமித்துக்கொண்டது. ஆனாலும் இன்றும்கூடத் தட்டச்சுப் பயிற்சி மையங்கள் செயல்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன.  அத்தோடு அதற்கான தேர்வும் நடைபெறத்தான் செய்கிறது. இருந்தாலும் ஆலிம்கள் அதில் கவனம் செலுத்துகிறார்களோ இல்லையோ கணினியில் தட்டச்சு செய்யும் முறையைக் கற்றுக்கொண்டால் அதையே ஒரு கைத்தொழிலாக மேற்கொள்ளலாம். குறைந்தபட்சம் அரபி, ஆங்கிலம், தமிழ் ஆகிய மொழிகளில் தட்டச்சு செய்யத் தெரிந்தால் ஒரு பக்கத்திற்கு இவ்வளவு என நிர்ணயம் செய்துகொண்டு ஒரு கைத்தொழிலாகச் செய்துவரலாம். உர்தூ மொழியில் ஆர்வமிருந்தால் அதையும் தட்டச்சு செய்யக் கற்றுக்கொள்ளலாம்.

நீங்கள் உங்கள் இருப்பிடத்திலேயே இருந்துகொண்டு வேலையை மட்டும் செய்துகொடுக்கலாம். பல்வேறு இடங்களுக்குத் தட்டச்சுப் பணியாளர் தேவைப்படுகிறார். ஆகவே தட்டச்சுப் பணி ஒரு சிறந்த கைத்தொழிலாகும். பெரிய நூலகங்களில் மிகப் பழைய நூல்களைப் புதிய பதிப்பாக வெளியிட எண்ணுகிறார்கள். அங்கே தொடர்புகொண்டு அந்நூல்களை நீங்கள் வாங்கித் தட்டச்சு செய்து கொடுக்கலாம். பல்வேறு புத்தக நிலையங்களில் தட்டச்சுப் பணி செய்ய ஆள்கள் தேவைப்படுகிறார்கள்.    பல்வேறு அலுவலகங்களில் தம்முடைய பழைய கோப்புகளைக் கணினியில் ஆவணப்படுத்த முடிவெடுத்துள்ளார்கள். அதுபோன்ற அலுவலகங்களில் டேட்டா என்ட்ரி செய்ய ஆள்கள் தேவைப்படுகிறார்கள். இப்படிப் பல்வேறு துறைகளில் தட்டச்சுப் பணிக்கு ஆள்கள் தேவைப்படுவதால் தட்டச்சுப் பணி ஒரு சிறந்த கைத்தொழிலாகும்.

டிசைனிங்

நூல்களுக்கான அட்டைகள், வாழ்த்து மடல்கள், சுய முகவரி அட்டைகள் உள்ளிட்ட எத்தனையோ பணிகள் கணினி டிசைனிங் மூலமே நடைபெறுகின்றன. கோரல் ட்ரா, இன் டிசைன், ஃபோட்டோஷாப் உள்ளிட்ட மென்பொருள்களை நல்ல முறையில் பயன்படுத்தத் தெரிந்தால் டிசைனிங் பணியைச் செவ்வனே செய்யலாம்.

நூல்கள் வெளியிடுதல்

மக்களுக்குத் தேவையான விசயங்களைத் தொகுத்து நூல்களாக வெளியிடுதல், சுயமாக நூல்கள் எழுதி வெளியிடுதல், பிறர் எழுதிய நூல்களை வாங்கி வெளியிடுதல் உள்ளிட்ட முறையில் நீங்கள் நூல்கள் வெளியிடும் பணியை மேற்கொள்ளலாம்.

இப்படி எத்தனையோ கைத்தொழில்கள் உள்ளன. இவற்றில் ஏதேனும் ஒன்றை நம் வசதிக்கேற்ப, விருப்பத்திற்கேற்பச் செய்துவந்தால் பொருளாதார ரீதியாகப் பிறரிடம் தேவையாகும் நிலை ஏற்படாது. இங்கு நான் குறிப்பிட்டுள்ள சில கைத்தொழில்கள் தவிர வேறு பல தொழில்களும் உள்ளன. அதுவெல்லாம் அவரவர் விருப்பத்தையும் சூழ்நிலையையும் பொறுத்தது. வாழும் காலமெல்லாம் பிறரிடம் தேவையாகாமல் நாமே நம் பொருளாதார நிலையை மேம்படுத்திக்கொள்ள உயர்ந்தோன் அல்லாஹ் உதவிபுரிவானாக.
========================