ஞாயிறு, 30 ஏப்ரல், 2017

யா ஃகௌஸ் முஹ்யித்தீன் என்று அழைக்கலாமா?

1995 ஆம் ஆண்டாக இருக்கலாம். ஒரு நாள் அஸ்ர் நேரம். அல்பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் அரபுக் கல்லூரியின் பள்ளிவாசலில் அஸ்ர் தொழுகை முடிந்தவுடன் பாக்கியாத்தின் முஃப்தி பட்டேல் ஸாஹிப் (ரஹ்) எழுந்து மக்கள் முன் உரையாற்றத் தொடங்கினார். மாணவர்களும் பொதுமக்களும் வழமைக்கு மாறான அவரின் அந்நேர உரையை மிகக் கவனமாகக் கேட்டனர்.

மக்கள் பலர் அல்லாஹ்வுக்கு இணைவைத்து அழைப்பதைத் தடுக்க வேண்டும் என்பதே அவரது நோக்கமாக இருந்தது. எனவே அது குறித்துப் பேசிவிட்டுஅதை ஓர் உதாரணத்தோடு விளக்குமுகமாக,

யா ஃகௌஸ் முஹ்யித்தீன் என்று அழைப்பதும் யா திருப்பதி என்று அழைப்பதும் ஒன்றுதான்.  இரண்டுமே ஒரே அளவிலான ஷிர்க்தான் என்று கூறி உரையை முடித்தார். பின்னர் அவரே துஆ ஓதினார். அதில் டி.வி.யின் சீர்கேட்டிலிருந்து பாதுகாப்பாயாக என்ற துஆவும் அடக்கம். துஆ முடிந்தவுடன் பாக்கியாத்தின் முதல்வர் பி.எஸ்.பி. ஹள்ரத் எப்போதும்போலவே இயல்பாகத் தம் இல்லம் நோக்கிச் சென்றுவிட்டார்கள். இவ்வுரையைக் கேட்டுக் கொதிநிலையடைந்த கேரள மாணவர்களுள் ஒரு குழுவினர் பள்ளியின் வெளியே முஃப்தியின் வருகையை எதிர்பார்த்துக் காத்திருக்கஅவர் வெளியே வந்தவுடன் அவரை அடிக்க அவர்கள் ஓடி வர,நூர்முஹம்மது ஹைதர் அலீ பாகவி,முஹம்மது கான் பாகவி உள்ளிட்ட ஆசிரியப் பெருந்தகைகள் அம்மாணவர்களைத் தடுத்து,முஃப்தி ஸாஹிபைப் பாதுகாப்பாக அவரது இல்லம் வரை அழைத்துச் சென்றார்கள்.

கேரள மாணவர்கள் ஒரு குழுவினர்யா ஃகௌஸ் முஹ்யித்தீன் என்று மீண்டும் மீண்டும் முழக்கமிட பாக்கியாத்தில் ஒரே பரபரப்பு தொற்றிக்கொண்டது. அவர்களின் கோபமும் வேகமும் அடங்கவில்லை. இறுதியில் பிஎஸ்பி ஹள்ரத் அவர்களுக்குச் செய்தி சொல்லப்பட்டுஅவர்கள் விரைந்து வந்து அம்மாணவர்கள் முன்னிலையில் சமாதான உரையாற்ற அவர்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.

நான் பாக்கியாத்தில் பயின்ற காலத்தில் கொள்கைரீதியாக நடைபெற்ற ஒரு முஃப்தியின் தெளிவுரையாகவும் துணிவுரையாகவுமே இதைக் கருதுகிறேன்.

பின்குறிப்பு: இந்நிகழ்வு குறித்து அறிந்த பலர் இன்றும் நம்மோடு இருக்கின்றார்கள் என்பதால் இதை எழுதுகிறேன். 

-முனைவர் மௌலவி நூ அப்துல் ஹாதி பாகவி 

திங்கள், 24 ஏப்ரல், 2017

இனிய திசைகள் ​ஏப்ரல் 2017

இனிய திசைகள் ​ஏப்ரல்' '2017 இதழைப் படிக்க கிளிக் செய்க. 

 

   இனிய திசைகள் மாத இதழைப் படியுங்கள்.   தங்கள் உற்றார்,      உறவினர்,   நண்பர்கள் குழாத்திற்குப் பரப்புங்கள். 

திங்கள், 17 ஏப்ரல், 2017

என்னுடைய உஸ்தாத் மௌலானா இல்யாஸ் பாகவி மறைவு!


வேலூர் ஜாமிஆ அல்பாகியாத்துஸ் ஸாலிஹாத்தின் நீண்ட நாள் பேராசிரியரும், சிறந்த மார்க்க அறிஞரும், திருப்பூர் மாவட்ட அரசு காஜியும், அபூதாவூத்-நபிமொழித் தொகுப்பின் மொழிபெயர்ப்பாளருமான மௌலானா ஹாஃபிழ் அப்ஸலுல் உலமா  முஹம்மது இல்யாஸ் பாகவி ஃபாஸில் தேவ்பந்தி திருப்பூரில் 05-04-2017 அன்று அதிகாலை 4-00 மணியளவில் வஃபாத்தானார் (இன்னா லில்லாஹி  வ இன்னா இலைஹி ராஜிவூன்).

அபூதாவூத் தொகுப்பை முழுமையாகத் தமிழில் மொழிபெயர்த்துவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து பணிகளைச் செய்துவந்தார். இறையருளால் முதல் பாகத்தின் பணிகள்  முழுமையாக முடிந்து நூலும் வெளியாகிவிட்டது. இரண்டாம் பாகத்துக்கான மொழியாக்கத்தையும் முழுமையாக முடித்து அனுப்பிவிட்டார். மூன்றாம் பாகப் பணிகள் நடந்துகொண்டிருந்த வேளையில் அவருடைய மறைவு சமுதாயத்திற்கு மிகப் பெரிய இழப்பாகும்.


அன்னாரை இறைவன் தன்னுடைய நல்லடியார்கள் குழுவில் சேர்ப்பானாக. கருணையுள்ள ரஹ்மான் அன்னாரின் மார்க்கச் சேவைகளை ஏற்று ஜன்னத்துல் ஃபிர்தௌஸ் எனும் மேலான சுவர்க்கத்தில் நுழையச் செய்வானாக. அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினர்க்கும் உறவினர்களுக்கும் மாணவர்களுக்கும் வல்ல இறைவன் அழகிய பொறுமையைத் தந்தருள்வானாக. 


பார்வையை மாற்று, மகிழ்வோடு இரு!


-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி, பிஎச்.டி.

அன்றாட வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சோகம்; ஒவ்வொரு கவலை.  இவ்வுலகில் நாம் கவலையற்ற வாழ்க்கையை அனுபவிக்க வேண்டுமென்றால் நாம் பார்க்கும் கண்ணோட்டத்தை மாற்றிக்கொள்ள வேண்டும். கண்ணோட்டத்தை மாற்றினால் நமக்கு நிகழ்வதெல்லாம் எண்ணியெண்ணி வருந்த வேண்டிய நிலை ஏற்படாது. நடப்பவை யாவும் இறைவன் விதிப்படியே எனும் நிலைக்கு நாம் வந்துவிடுகின்றபோது கவலை ஏற்பட வாய்ப்பே இல்லை. எல்லாம் அறிந்த இறைவனின் விதிப்படி நடைபெறுகின்ற எதுவும் தவறாக இருக்காது எனும் நம்பிக்கை மனத்தில் பதிந்துவிடுகின்றபோது எல்லாமே மகிழ்ச்சியாக மாறிவிடுகின்றது.

ஒரு மகிழ்ச்சியான குடும்பத்தில் துள்ளி விளையாடும் அழகுக் குழந்தை. அக்குழந்தைதான் அவ்வீட்டிலுள்ளோர் அனைவரின் மகிழ்ச்சிக்கும் காரணம். திடீரென ஒரு நாள் அக்குழந்தை நோய்வாய்ப்பட்டு இறந்துவிட்டது. இந்நிகழ்வு அக்குடும்பத்திலுள்ளோர்க்குத் தீராத சோகமாக ஒட்டிக்கொள்கிறது. அமெரிக்காவில் இரட்டைக் கட்டடங்கள் இடிந்துவிழுந்த மறக்க முடியாத சோகமாகச் சூழ்ந்துகொள்கிறது. நினைவைவிட்டு அகல மறுக்கிறது. இந்நிகழ்வுக்குப் பின் யாரும் யாரோடும் மனம்விட்டுப் பேசுவதில்லை. ஒழுங்காகச் சாப்பிடுவதில்லை. அவ்வீடே ஒரே சோகமயமாகக் காட்சியளிக்கிறது. இது சாதாரண மனிதர்களின் நிலை.

இதே நிகழ்வு ஓர் ஆன்மிகவாதியின் குடும்பத்தில் நிகழ்கிறது. அவர் மூன்று நாள்களுக்குச் சோகமாக இருந்துவிட்டு, பிறகு இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிடுகிறார். மற்றவர்களைப்போல் இயல்பாகச் சாப்பிடுகிறார்; எப்போதும்போல் அன்றாடப் பணிகளில் ஈடுபடுகின்றார். இவரால் மட்டும் எப்படிச் சோகத்தை அவ்வளவு எளிதாக மறக்க முடிந்தது? அப்படியென்றால் இவருக்குத் தம் பிள்ளைமீது பாசம் இல்லையா?

அவ்வாறன்று. இது இறைவனின் விதிப்படி நடந்துள்ளது. அவன் எதைச் செய்தாலும் நன்மைக்குத்தான் செய்வான். எனவே இதிலும் ஏதாவது நன்மை மறைந்திருக்கும் என்று நம்புகின்றார்.  இந்த நம்பிக்கையால்தான் இவரால் இயல்பாகச் செயல்பட முடிகிறது. மேலும் ஒரு குழந்தை இறந்துவிட்டால் அக்குழந்தை நாளை மறுமையில் தன் பெற்றோரைச் சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லாமல் அது சொர்க்கத்தினுள் நுழையாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய செய்தியை மனதார நம்பியுள்ளார். அதனால்தான் பெரும் சோகத்தைக்கூட இவரால் இயல்பாக எடுத்துக்கொள்ள முடிகிறது.

இதையும் தாண்டி, வரலாற்று நிகழ்வு ஒன்று நம்மைப் பெரும் வியப்படையச் செய்யும். வீட்டில் குழந்தை இறந்துவிட்டது. கணவர் வியாபாரத்திற்காக வெளியூர் சென்று அன்று இரவுதான் திரும்பி வருகிறார். அவர் வரும்போது சோகத்தை வெளிக்காட்டி அவர் மனதைப் புண்படுத்திவிடக்கூடாது என்று எண்ணிய மங்கை நல்லாள் உயிர்நீத்த குழந்தையின் பூத உடலை ஓர் அறைக்குள் திரையிட்டு மறைத்து வைத்துவிட்டு, இச்செய்தியை என் கணவருக்கு நான் தெரிவிக்கும் வரை யாரும் தெரிவிக்கக்கூடாது என்று சொல்லிவிட்டு, தம்மை மிகவும் அழகாக அலங்கரித்துக்கொண்டுதம் கணவரை அன்போடு வரவேற்று, உணவு பரிமாறி, அவரின் இரவுத்தேவையையும் நிறைவேற்றுகின்றார். பின்னர், "அபூதல்ஹா அவர்களே! ஒரு கூட்டத்தார் தம் பொருட்களை ஒரு வீட்டாரிடம் இரவலாகக் கொடுத்திருந்து, பிறகு அவர்கள் தாம் இரவலாகக் கொடுத்துவைத்திருந்த பொருட்களைத் திரும்பத் தருமாறு கேட்கும்போது அவர்களிடம் (திருப்பித் தர முடியாது என) மறுக்கும் உரிமை அவ்வீட்டாருக்கு உண்டா?'' என்று சாதுர்யமாகக் கேட்கின்றார். அதற்கு அவர், "இல்லை'' என்று கூறுகிறார்.

"அவ்வாறாயின், தங்கள் மகனுக்காக (அல்லாஹ்விடம்) நன்மையை எதிர்பாருங்கள்'' என்று கூறுகிறார். தம் மகன் இறந்துவிட்டதைப் புரிந்துகொண்ட கணவர் கோபப்படுகிறார். காலையில் இச்செய்தியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கூறி, தம் மனைவி செய்தது குறித்து முறையிடுகின்றார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "கடந்த இரவில் (நிகழ்ந்த உறவில்) அல்லாஹ் உங்கள் இருவருக்கும் வளம் புரிவானாக!'' என்று சொல்கின்றார்கள். பின்னர் அவர் கர்ப்பமுற்றார். குழந்தையும் பிறந்தது. அந்த மங்கை நல்லாளின் பெயர் உம்முசுலைம் ஆகும். இந்நிகழ்வு முஸ்லிம் எனும் நபிமொழித் தொகுப்பு நூலில் விரிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. (நூல்: முஸ்லிம்: 4853)

மேற்கண்ட இந்நிகழ்வைப் படிக்கின்ற நமக்கு வியப்பே மேலிடும். குழந்தை இறந்துவிட்டதை எண்ணி ஒரு தந்தையே பொறுத்துக்கொள்ள மாட்டார். ஆனால் இங்கு ஒரு தாயாக இருந்து, பொறுமை காத்து, இறைவனின் விதியை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டார் என்றால் அது எப்படிச் சாத்தியமாகும்? அதுதான் வலுவான, அசைக்க முடியாத இறைநம்பிக்கை. அதுதான் மறுமையை நோக்கிய கண்ணோட்டம். மறுமையை நோக்கிய கண்ணோட்டம் எப்போதும் பொறுமைக்கும் மகிழ்ச்சிக்குமே வழிகாட்டும்.

நல்ல முறையில் வியாபாரம் நடந்துகொண்டிருக்கின்ற கடை. இலாபம் மிகுதியாக வந்து கொட்டிக்கொண்டிருந்தது. மகிழ்ச்சியோடு வியாபாரம் செய்து, பணத்தை எண்ணிக் கல்லாப் பெட்டிக்குள் வைத்துவிட்டு, பெரியதொரு பூட்டைப் போட்டுப் பூட்டிவிட்டு வீட்டிற்குச் செல்கிறார்.  காலையில் கடையைத் திறக்க வந்தவருக்குப் பேரதிர்ச்சி. பூட்டை உடைத்து, கல்லாவில் எண்ணி வைத்திருந்த பணம் முழுவதும் அப்படியே களவு போய்விட்டது. அதைக் கண்டதும் கத்துகின்றார்; கதறுகின்றார். காவல் துறைக்குப் புகார் சொல்லப்படுகின்றது. மோப்ப நாய் வருகிறது. எல்லாச் சோதனையும் நடக்கின்றது. உரிய விசாரணை நடத்தப்பட்டு, விரைவில் திருடர்கள் பிடிக்கப்படுவார்கள் எனக் கூறிவிட்டு, காவல் துறை சென்றுவிடுகின்றது. இவருடைய நிலையோ சோகத்திலும் சோகம். ஒழுங்காகச் சாப்பிடுவதில்லை; தூங்குவதில்லை; மற்றவர்களிடம் இயல்பாகப் பேசுவதில்லை. மனது முழுக்கச் சோகம் கவ்விக் கொண்டது. பல நாள்களாகியும் இயல்பு நிலைக்குத் திரும்பாமல் பெரும் சோகத்திலேயே காணப்படுகிறார். இது சாதாரண மனிதனின் நிலை.

இதே நிகழ்வு ஓர் இறைநம்பிக்கையாளருக்கு ஏற்படுகிறது. அவர் உடனே, இன்னா லில்லாஹி  வ இன்னா இலைஹி ராஜிஊன்-திண்ணமாக நாம் அல்லாஹ்வுக்காகவே இருக்கிறோம். திண்ணமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்ல உள்ளோம்-எனும் மந்திர வார்த்தைகளைக் கூறுகிறார். பின்னர் தாம் ஏதோ தவறு செய்திருப்பதாக உணர்கின்றார். இது இறைவனின் சோதனைதான் எனத் தெளிவடைகிறார்; நல்ல வேளை பணம் மட்டுமே திருடு போயுள்ளது. கடையிலுள்ள சரக்குகள் அனைத்தும் அப்படியே உள்ளன. "திருடு போகாமல் அவற்றைக் காப்பாற்றிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்'' என்று இறைவனைப் புகழ்ந்து அவனுக்கு நன்றி கூறுகின்றார். மேலும் எப்போதும் போல் வியாபாரத்தைக் கவனிக்கத் தொடங்கிவிட்டார். சோகமோ துன்பமோ அவரைச் சூழ்ந்துகொள்ளவில்லை. கண்ணோட்டத்தை மாற்றினார். இழந்ததை எண்ணி வருந்தாமல் வரப்போகும் இலாபத்தை எண்ணி வியாபாரத்தைத் தொடர்ந்தார். 

இப்படி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான சோகமோ சோதனையோ மனிதர்களை அடைந்துகொண்டுதான் இருக்கின்றது. ஆனால் அவற்றைப் புறந்தள்ளிவிட்டு மகிழ்ச்சியாக மாற்றிக்கொள்வது நமது கண்ணோட்டத்தில்தான் உள்ளது. தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போய்விட்டது எனும் பழமொழி சோகத்தை அப்புறப்படுத்திவிட்டு இயல்பாக வாழ்வதற்கான வழிகாட்டுகிறது. இவ்வாறே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பொன்மொழிகளும் நமக்கு வழிகாட்டுகின்றன. ஆக, அவரவர் கண்ணோட்டத்தில்தான் சோகமும் மகிழ்ச்சியும் பின்னிப் பிணைந்துள்ளன என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.  

எனக்கு ஒரு கைக்கடிகாரம் இல்லையே என ஏங்குவதைவிடக் கையே இல்லாதவனைப் பார்த்து, அவனைவிட எனக்கு இறைவன் மிகுந்த கருணைபுரிந்துள்ளான் என ஆறுதலடைவது மகிழ்ச்சிக்கான வழியாகும். என் காலுக்கொரு செருப்பு வாங்க முடியவில்லையே என ஏங்குவதைவிடகால் இழந்தவனைப் பார்த்து, இவனைவிட எனக்கு இறைவன் மிகுந்த கருணைபுரிந்துள்ளான் என ஆறுதல் அடைவது மகிழ்ச்சிக்கான வழியாகும். ஓட்டு வீட்டில் உள்ளவன் மாடி வீட்டிலுள்ளவனைப் பார்த்துப் பார்த்து ஏங்குவதைவிட, வீடே இல்லாமல் தெருவோரத்தில் வசிப்போரைப் பார்த்து, இவர்களைவிட அல்லாஹ் எனக்கு மிகுதியாக அருள்புரிந்துள்ளான் என  எண்ணுவதே மகிழ்ச்சிக்கான வழியாகும்.

என் மனைவி என்னிடம் மிகவும் மோசமாக நடந்துகொள்கின்றாள் எனக் குறைபட்டுக் கொள்வதை நிறுத்திவிட்டு, ஒரு கணம் மனைவியே இல்லாமல் தனிமரமாக வாழுகின்றவனைப் பார்த்து, அல்லாஹ் எனக்கு மிகுந்த உபகாரம் செய்துள்ளான் எனக் கருதுவதே மகிழ்ச்சிக்கான வழி. என் பிள்ளை மிகுந்த சேட்டை செய்கின்றான்; என் பேச்சையே கேட்பதில்லை என்று குறைபட்டுப் புலம்புவதைவிட, குழந்தை பாக்கியமே இல்லாமல் வாழுகின்ற தம்பதியரைப் பார்த்து அல்லாஹ் என்மீது மிகுந்த கருணைபுரிந்துள்ளான் என எண்ணுவது மகிழ்ச்சிக்கான வழியாகும். என் கணவர் என்னிடம் நல்ல முறையில் நடந்துகொள்வதில்லை; நான் கேட்டதை வாங்கித் தருவதில்லை என்று ஒரு பெண் கவலைப்படுவதைவிடக் கணவனே இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு, சோகத்தோடு வாழ்க்கையைக் கழிக்கின்ற எத்தனையோ பெண்களைப் பார்த்து, அல்லாஹ் என்மீது மிகுந்த கருணை புரிந்துள்ளான் என எண்ணினால் மகிழ்ச்சி பெருகும்.

இப்படி நாம் காணுகின்ற கண்ணோட்டத்தை மாற்றினால் மகிழ்ச்சியோ மகிழ்ச்சிதான். வாழ்க்கையில் என்றென்றும் மகிழ்ச்சியாக இருக்க ஆயிரமாயிரம் வழிகள் உள்ளன. அதையெல்லாம் விட்டுவிட்டு நாம் வேறொரு கோணத்தில் பார்த்துக்கொண்டிருந்தால் வாழ்க்கை கசக்கத் தொடங்கிவிடும். நாம் எப்போதும் நம்மைவிட மேலோங்கிய நிலையில் உள்ளவர்களையே பார்த்துக்கொண்டிருந்தால் அல்லாஹ் நமக்கு வழங்கியுள்ள அருட்கொடைகளையும் நற்பேறுகளையும் நாம் பார்க்கவே முடியாது. அதனால் நாம் மகிழ்ச்சியோடும் வாழ முடியாது; இறைவனுக்கு நன்றி செலுத்த வாய்ப்பும் ஏற்படாது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களுக்குக் கீழிருப்பவர்களைப் பாருங்கள். உங்களைவிட மேலிருப்பவர்களைப் பார்க்காதீர்கள். அதுவே அல்லாஹ்  புரிந்திருக்கும் அருட்கொடைகளை நீங்கள் குறைத்து மதிப்பிடாமலிருக்க மிகவும் ஏற்றதாகும். (நூல்: முஸ்லிம்: 5671)

ஆகவே ஒவ்வொரு மனிதனுக்கும் என்னென்ன தேவையோ எவ்வளவு தேவையோ அதையெல்லாம் உயர்ந்தோன் அல்லாஹ் நியாயமாகவே வழங்கியுள்ளான். ஆனால் நாம்தாம் இறைவனின் நியதியைப் புரிந்துகொள்ளாமல் சோகத்துடனும் துன்பத்துடனும் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

தூயோன் அல்லாஹ் இவ்வுலகில் வாழுகின்ற அனைத்து மனிதர்களையும் சமமாகவே நடத்துகின்றான். ஆம், பிறக்கின்ற போது கையில் எதுவுமின்றிப் பிறக்கின்றான்; இறந்த பின்னரும்  கையில் எதுவுமின்றியே செல்கின்றான். இடைப்பட்ட வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதனுக்கும் இடையே சிற்சில பொருளாதார ஏற்றத்தாழ்வு உள்ளது. அவ்வளவுதான். அதற்காக அதை எண்ணியெண்ணி ஏங்க வேண்டிய அவசியமே இல்லை. பொருளாதார ஏற்றத்தாழ்வு என்பது மனித வாழ்க்கை சீராக நடைபெற வேண்டும் என்பதற்காகத்தானே தவிர மனிதர்களுக்கிடையே ஏற்றத்தாழ்வையும் பிரிவினையையும் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இல்லை. ஏனென்றால் இறைவனைப் பொறுத்த வரை எல்லோரும் ஏழைகளே. அதாவது எல்லோரும் ஏதாவது தேவை உடையோரே ஆவர். ஆனால் அல்லாஹ் மட்டுமே எந்தத் தேவையும் அற்றவன் ஆவான். ஆதலால் இறைவனின் புறத்திலிருந்து எந்த ஏற்றத்தாழ்வும் மனிதனுக்கு இல்லை. எல்லோரும் சமமே. எனவே நாம் மகிழ்ச்சியாக இருக்க எந்தத் தடையும் இல்லை. காணும் கண்ணோட்டத்தை மாற்றுவோம்; மகிழ்ச்சியாக வாழ்வோம்!
=================

திங்கள், 10 ஏப்ரல், 2017

அரபி பி.எட். தேவை


-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

முஸ்லிம்கள் கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் மிகவும் மோசமாகப் பின்தங்கியுள்ளார்கள். எனவே அவர்களுக்குப் பத்து சதவிகித இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என சச்சார் கமிட்டி அரசுக்குப் பரிந்துரை செய்தும் அதன் பரிந்துரை இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இது ஒருபுறமிருக்க, ஏற்கெனவே உள்ள வாய்ப்பையும் தட்டிப் பறிக்கும் நிலையும், வாய்ப்பை உருவாக்காத நிலையுமே நீடிக்கிறது.
பள்ளிக்கூடப் பாடத்திட்டத்தில் பத்து, பன்னிரண்டாம் வகுப்புகளில் அரபி மொழி ஒரு மொழிப்பாடமாக இருந்த அங்கீகாரத்தைச் சமச்சீர்க் கல்வி எனும் பெயரில் அரசு தட்டிப் பறித்தது. அதாவது அதன் மதிப்பெண் பாடத்தின் மதிப்பெண்ணாகச் சேர்க்கப்படமாட்டாது. இதனால் அரபிமொழியைக் கற்பிக்கும் ஆசிரியர்கள் வேலையை இழக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.

அரபி மொழியில் அஃப்ளலுல் உலமா எனும் இளங்கலைப் பட்டத்திற்கு நிகரான தேர்வைச் சென்னைப் பல்கலைக் கழகமும், திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகமும் நடத்திவருகின்றன. இதனைத் தமிழகத்தில்  உள்ள பெரும்பாலான முஸ்லிம் மாணவ, மாணவியர் எழுதி வெற்றிபெறுகின்றனர். ஆனால் அவர்கள் பள்ளியில் அரபி ஆசிரியராகச் சேர்வதற்கான அரபி பி.எட். தமிழகத்தில் ஓரிடத்தில்கூட இல்லை. இதனால் அஃப்ளலுல் உலமா தேர்வை எழுதி வெற்றி பெற்றவர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லை.

அதனையடுத்து மாநில அளவிலான பேராசிரியர் தகுதித் தேர்வை (ஸ்லெட்) தமிழ்நாட்டிலுள்ள பல்கலைக் கழகங்கள் நடத்துகின்றன. அதில் அரபி மொழியில் எம்.ஏ., எம்.ஃபில். படித்தவர்கள் பேராசிரியருக்கான தகுதித் தேர்வை எழுத வாய்ப்பில்லை. ஏனென்றால் அரபி மொழி அதில் இடம்பெறவில்லை. இப்படிப் பல்வேறு தளங்களில் தமிழக முஸ்லிம் மாணவ, மாணவியர் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். உரிய முறையில் படித்தும் வேலை வாய்ப்பின்றி அலைய வேண்டிய கட்டாயச் சூழ்நிலைக்கு இந்த அரசு அவர்களைத் தள்ளியுள்ளது.

மேலும் அரபியில் எம்.ஃபில். வரை பட்டம் பெற்றவர்கள், அதற்குமேல் பிஎச்.டி. ஆய்வை மேற்கொள்ளலாம் என்றால் அதற்கெனப் புதியதொரு சட்டத்தைப் பல்கலைக் கழகங்கள் அறிமுகப்படுத்தியுள்ளன. அதாவது 10, +2, இளங்கலை, முதுகலை என வரிசையாகப் படித்திருக்க வேண்டுமாம். இதனால் தகுதி அடிப்படையில் அஃப்ளலுல் உலமா தேர்வு எழுதி, அதன் பின் எம்.ஏ., எம்.ஃபில். பட்டம் பெற்றவர்கள் பிஎச்.டி. ஆய்வை மெற்கொள்ள இயலாத சூழ்நிலை நிலவுகிறது.   

எனவே சிறுபான்மைப் பட்டியலிலுள்ள முஸ்லிம் சமுதாயத்தைச் சார்ந்த மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில் அரபி மொழியைப் பத்து, பன்னிரண்டாம் வகுப்புகளில் விருப்பப் பாடமாகச் சேர்த்து, அதன் மதிப்பெண்களையும் மற்ற மதிப்பெண்களோடு சேர்த்துக்கொள்ள அங்கீகாரம் வழங்குமாறும் அரபி அஃப்ளலுல் உலமா தேர்வில் வெற்றி பெற்றவர்கள் பள்ளிக்கூடங்களில் ஆசிரியர் தகுதியைப் பெற அரபி பி.எட். படிப்பை ஏற்படுத்தித் தருமாறும் முஸ்லிம் மாணவ, மாணவியர் தமிழக அரசைக் கேட்டுக்கொள்கின்றார்கள். அத்தோடு, மாநில அளவிலான பேராசிரியர் தகுதித் தேர்வில் (ஸ்லெட்) அரபியை இணைக்குமாறும்அரபி சார்ந்த படிப்புக்கு என்னென்ன தடைகள் இருக்கின்றனவோ அவற்றையெல்லாம் நீக்கி, அதை எளிமைப்படுத்துமாறும் யுஜிசி தேர்வாணையத்தைத் தமிழக முஸ்லிம் மாணவ, மாணவியர் கேட்டுக்கொள்கின்றனர்.

===========================================
இஸ்லாமிய இதழ்களில் ஆலிம்களின் பங்குமுனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.
(துணை ஆசிரியர்: இனிய திசைகள் மாத இதழ்,
இமாம்: மஸ்ஜித் ஜாமிஉல் அன்வார், மணலி, சென்னை)

இஸ்லாமியச் சமுதாயத்திற்குத் தம்மால் இயன்ற எழுத்துச் சேவையைச் செய்ய வேண்டுமென்ற நல்லெண்ணத்தில் ஒன்றன் பின் ஒன்றாகப் பலர் பருவ இதழ்களைத் தொடங்கினார்கள். அவர்களெல்லாம் தொடக்கக் காலத்தில் மிகுந்த சிரமங்களை மேற்கொண்டும் தம் சொந்தப் பணத்தை முதலீடு செய்தும்தான் இதழ்களைத் தொடங்கினார்கள். அவர்களுள் பலர் இன்றும் மிகுந்த சிரமத்திற்கிடையேதான் தம் இதழ்களை நடத்திக்கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் நடத்தி வருகின்ற ஒவ்வோர் இதழும் ஒவ்வொரு தனிச்சிறப்புடையது.

இஸ்லாமிய இதழ்களைப் பொறுத்த வரை ஆலிம்களின் பங்கு மிக அதிகமானது எனலாம். ஏனெனில், “எழுதுகோலால் கற்பித்த உன் கண்ணியமான இறைவனின் பெயரால் ஓதுவீராக” (96: 3-4) எனும் இறைவனின் வாக்குமூலத்தைப் படித்துப் பட்டம் பெற்றவர்கள் அவர்கள். ஆகவே அவர்கள் தாம் கற்றதைத் தம் எழுதுகோல்களால் இச்சமுதாயத்திற்குப் பயன்படுமாறு செய்யவே எழுதத் தொடங்கினார்கள்.

மௌலவி அப்துல் மஜீத் பாகவியை ஆசிரியராகக் கொண்டு தொடங்கப்பட்ட மாத இதழான மனாருல் ஹுதா பின்னர் மௌலவி அ. முஹம்மது கான் ஃபாஸில் பாகவி அவர்களை ஆசிரியராகக் கொண்டு மிகுந்த எழுச்சியோடு வெளிவரத் தொடங்கியது. அந்த இதழில் அவர் எழுதுகின்ற ஒவ்வொரு கட்டுரையும் இஸ்லாமிய மக்களிடையே புகுந்துவிட்ட சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் கண்டிப்பதாகவே அமைந்ததோடு, மக்கள் மத்தியில் புரையோடிக்கிடக்கின்ற பல்வேறு மூடப்பழக்கங்களைச் சாடுவதாகவும் இருந்தது. இவ்விதழ் தொடர்ந்து இஸ்லாமிய மக்களுக்குத் தன் சேவையை ஆற்றிக்கொண்டிருக்கிறது. அவ்வப்போது இச்சமுதாயத்தில் எழுகின்ற பிரச்சனைகளுக்குத் தீர்வு சொல்கின்ற விதத்தில் இதன் கட்டுரைகள் அமைகின்றன. காதியானிகள், ஷீஆக்கள் உள்ளிட்ட குழப்பவாத இயக்கங்கள் பல தம் குழப்பமான கருத்துகளை மக்கள் மன்றத்தில் வைக்கும்போதெல்லாம் அவற்றை முறியடிக்கின்ற விதத்தில் அதில் தெளிவான விளக்கங்கள் இருக்கும். அதைப் படித்து மக்கள் தெளிவடைவார்கள். மேலும் இதில் இடம்பெறுகின்ற ‘மௌலானா பதில்கள்’ எனும் பகுதிமூலம் வாசகர்கள் தம் ஐயங்களைக் கேட்டுத் தெளிவடைவார்கள். தற்போது மௌலவி முஹம்மது இப்ராஹீம் பாகவியை ஆசிரியராகக் கொண்டு இவ்விதழ் தனது சேவையைத் தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறது.

மௌலவி முஃப்தி அஷ்ரஃப் அலீ அன்வாரி அவர்களை ஆசிரியராகக் கொண்டு மதுரையிலிருந்து வெளிவருகின்ற குர்ஆனின் குரல் மாத இதழ் பல்லாண்டுகளாக இஸ்லாமிய மக்கள் மத்தியில் உலா வந்துகொண்டிருக்கிறது. ஒவ்வொருவரின் வீட்டிலும் அதனைக் காணலாம். அந்த அளவிற்கு அது மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. அதில் இடம்பெறுகின்ற ‘ஐயம் தெளிவு’ பகுதியின் மூலம் பலர் இஸ்லாமியச் சட்டங்கள் குறித்த தம் ஐயங்களைக் கேட்டுத் தெளிவுபெற்றனர்.  பல்வேறு ஆளுமைகள் எழுதுகின்ற ஆக்கங்கள்  அதில் இடம்பெறும். பல்வேறு அரபுக் கல்லூரிகளின் பேராசிரியர்கள் அழகிய தமிழில் எழுதுகின்ற கட்டுரைகள் அந்த இதழுக்குச் சிறப்பாகும். இப்படிப் பல்வேறு சிறப்புகளைக் கொண்ட இந்த இதழுக்குத் தற்போது அவர்தம் மகனார் முஃப்தி முஹம்மது இஸ்மாயீல் காஷிஃபீ ஆசிரியராக இருந்து செயல்பட்டுவருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. தந்தையைப் போலவே இலட்சியத்தோடு இவ்விதழைத் தொடர்ந்து நடத்திக்கொண்டிருக்கிறார்.

சென்னை பெரம்பூர் ஜமாலிய்யா அரபுக் கல்லூரியின் பேராசிரியர் மௌலவி அப்துர் ரஹ்மான் பாகவியை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த உம்மத் மாத இதழ் இந்த இஸ்லாமியச் சமுதாயத்திற்குச் சேவையாற்றியது.  அவர் தம் கல்வியால் கிடைத்த பயனை மக்களுக்குச் சென்றடையச் செய்ய வேண்டும் எனும் நோக்கில் திருக்குர்ஆன் விரிவுரையையும் நபிமொழிகளின் விளக்கத்தையும் அதில் பதிவு செய்தார். மிகப் பயனுள்ள கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்து வெளியிட்டார். அந்த இதழின் சேவையும் குறிப்பிடத்தக்க வகையில் இருந்தது. பொருளாதாரச் சிக்கல் காரணமாகத் தற்போது தற்காலிகமாகத் தடைபட்டு நின்றுள்ளது.

மௌலவி அபூஉபைதா பாகவியை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த ‘அஷ்ஷரீஅத்துல் இஸ்லாமிய்யா’ மாத இதழ் மிகவும் குறிப்பிடத்தக்கது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தமிழ் முஸ்லிம்கள் வாழும் வெளிநாடுகளிலும் இந்த இதழ் தனது சேவையை ஆற்றியுள்ளது. இதில் இடம்பெற்ற கட்டுரைகள் வாசகர்களின் கவனத்தை ஈர்த்தன; படிப்போரின் கவனத்தைத் தன் பக்கம் திருப்பின. தற்போது இது பொருளாதாரச் சிக்கலால் தடைபட்டுள்ளது.

மௌலவி எஸ். என். ஜாஅபர் ஸாதிக் ஃபாஸில் பாகவியை ஆசிரியராகக் கொண்டு வெளிவருகின்ற மாத இதழ் சமநிலைச் சமுதாயம். பத்திரிகைகளிலேயே ஒரு தனிப்பட்ட முத்திரை பதித்துள்ளது. சமுதாயத்திற்குச் சேவை செய்து மறைந்த பல்வேறு ஆளுமைகளையும் தெரியாத முகங்களையும் துருவித் துருவி ஆராய்ந்து அவர்களின் சமுதாயத் தொண்டை மக்களுக்கு வெளிச்சம்போட்டுக் காட்டியதில் இந்த இதழுக்கு மிக முக்கியப் பங்குண்டு. மேலும் இவ்விதழ் முஸ்லிம்கள் வாழும் நாடுகளில் உள்ள பிரச்சனைகளை மக்கள் மத்தியில் கொண்டு வந்து உலக முஸ்லிம்களுக்காகக் குரல் கொடுத்த பத்திரிகையாகும்.

இது முஸ்லிம்களால் மட்டுமின்றி மாற்றுமதச் சகோதரர்களாலும் வாசிக்கப்படுகின்ற இதழாகத் திகழ்ந்துகொண்டிருக்கிறது. இதன் சீரிய எழுத்து நடையும் கருத்துகளும் பிறரால் பாராட்டப்பட்டுள்ளன. இவ்விதழ் 2011ஆம் ஆண்டு தமிழ்நாடு ஆல்டர்நேடிவ் மீடியா பவுண்டேஷன் வழங்கிய ‘சமூக மாற்றத்தின் குரல்’ எனும் விருதையும், 2013ஆம் ஆண்டு ஆனந்த விகடன் குழுமம் வழங்கிய ‘தமிழகத்தின் சிறந்த சிறுபத்திரிகை’ எனும் விருதையும் 2016ஆம் ஆண்டு ‘எழுத்தாளர் சுஜாதா’ விருதையும் பெற்றுள்ளது இதன் அங்கீகாரத்திற்குக் கிடைத்த வெகுமதியாகும்.

மௌலவி பீர் முஹம்மது பாகவி அவர்களை ஆசிரியராகக் கொண்டு மதுரையிலிருந்து வெளிவந்த சிந்தனைச் சரம் மாத இதழின் சமுதாயப் பணி குறிப்பிடத்தக்கதாகும். இதில் இடம்பெற்ற கட்டுரைகள், கதைகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன. மேலும் இதில் ‘விவாதக் களம்’ எனும் தலைப்பில் சமுதாயத்தில் உள்ள பல்வேறு முக்கியப¢ பிரச்சனைகளை விவாதம் செய்யும்விதமாகக் கட்டுரைகள் அமைந்து மக்களுக்கு மிகுந்த பயனைத் தந்தன. மேலும் இதில் கவிக்கோ அப்துர் ரஹ்மான் உள்ளிட்ட பெரும் பெரும் ஆளுமைகள் கட்டுரைகள் எழுதி வந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

மௌலவி ஸலாஹுத்தீன் பாகவி அவர்களை ஆசிரியராகக் கொண்டு காஞ்சிபுரம் மாவட்டம் பனையூரிலிருந்து வெளிவருகின்ற இதழ் ‘இஸ்லாமிய இனிய தென்றல்’ ஆகும். இதன் சிறப்பம்சம் சிறு சிறு கட்டுரைகள் நறுக்குத் தெறித்தாற்போல் அமையும். இஸ்லாமியப் பொது அறிவை வளர்க்கும்விதமாக  அவ்வப்போது இதில் பல்வேறு தகவல்கள் இடம்பெறுவதுண்டு. மக்கள் மத்தியில் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாகச் சேவையாற்றிக்கொண்டிருக்கிறது. மௌலவி முஹம்மது சுலைமான் பாகவி அவர்களை ஆசிரியராகக் கொண்டு சென்னையிலிருந்து வெளிவந்த ‘மக்கா சுடர்’ மாத இதழ் குறிப்பிடத்தக்கதாகும். இவர் திருக்குர்ஆன் விரிவுரையில் தேர்ச்சி பெற்றவராக இருந்ததால் தமது இதழிலும் திருக்குர்ஆன் வசனங்களுக்கு விரிவுரையையும் ஆக்கப்பூர்வமான தகவல்களையும் பதிவு செய்தார். அவை மக்களுக்குப் பெரிதும் பயனுள்ளவையாக இருந்தன.

மௌலவி அபுல் ஹஸன் ஜாதுலி ஃபாஸில் பாகவி அவர்களை ஆசிரியராகக் கொண்டு திருநெல்வேலியிலிருந்து வெளிவந்த மாத இதழ் ஷமாஅத்துல் உலமா ஆகும். இவர் இவ்விதழ் மூலம் கிறிஸ்தவர்களின் பொய்யான வாதங்களுக்குப் பதிலளித்து பல்வேறு ஆக்கங்களைப் பதிவுசெய்தார். தமது இதழில் ஆக்கப்பூர்வமான ஆக்கங்களை மக்களுக்கு வழங்கி எழுத்துச் சேவையைச் செவ்வனே செய்து வந்தார். அவருக்குப் பின் அவர்தம் மகனார் மௌலவி அப்துர் ரஹீம் பாகவி தொடர்ந்து எழுத்துப் பணியைச் செய்துவருவது போற்றுதலுக்கும் பாராட்டுதலுக்குமுரியது.

மௌலவி கலீலுர் ரஹ்மான் பாகவி அவர்களை ஆசிரியராகக் கொண்டு திருநெல்வேலியிலிருந்து வெளிவந்த ‘ரஹ்மத்’ மாத இதழ், மௌலவி எஸ்.கே. கமாலுத்தீன் மதனீ அவர்களை ஆசிரியராகக் கொண்டு சென்னையிலிருந்து வெளிவருகின்ற அல்ஜன்னத் மாத இதழ், மௌலவி பீ. ஜெயினுலாபுதீன் உலவி அவர்களை ஆசிரியராகக் கொண்டு சென்னையிலிருந்து வெளிவருகின்ற உணர்வு வார இதழ், மௌலவி ஏ.ஆர். ஃபரீதுத்தீன் மஹ்ளரி அவர்களை ஆசிரியராகக் கொண்டு சென்னையிலிருந்து வெளிவருகின்ற அஹ்லுஸ் ஸுன்னா மாத இதழ், மௌலவி முஹம்மது காசிம் பாகவி அவர்களை ஆசிரியராகக் கொண்டு மதுரையிலிருந்து வெளிவருகின்ற மறைச்சுடர் மாத இதழ், மௌலவி நூஹுத் தம்பி ஆலிம் அவர்களை ஆசிரியராகக் கொண்டு காயல்பட்டணத்திலிருந்து வெளிவருகின்ற முத்துச்சுடர் மாத இதழ், மௌலவி முஹம்மது யூசுஃப் பாகவியை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த ஸைஃபுல் இஸ்லாம் மாத இதழ், மௌலவி ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி அவர்களை ஆசிரியராகக் கொண்டு  வெளிவந்த புதிய பயணம் மாத இதழ், மௌலவி முஹம்மது இஸ்மாயீல் நூரி அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த அந்நூர் மாத இதழ், மௌலவி டி.எஸ்.ஏ. அபுதாஹிர் மளாஹிரி அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவருகின்ற அஸ்ரார் மாத இதழ் உள்ளிட்ட எத்தனையோ இதழ்களை ஆலிம்கள் தொடங்கி நடத்தி வந்துள்ளதும் நடத்தி வருவதும் குறிப்பிடத்தக்கதாகும். இந்த ஆய்வுக்குள் உட்படாத ஆலிம்கள் பலரும் இச்சமுதாயத்திற்காக எழுத்துப் பணியாற்றிக்கொண்டிருக்கின்றார்கள்.

இவை தவிர இன்றும் எத்தனையோ ஆலிம்கள்  பல்வேறு பத்திரிகைகளின் துணை ஆசிரியர்களாக இருந்து எழுத்துச் சேவையாற்றி வருகின்றார்கள். அவர்களுள்  மௌலவி எஸ். வலியுல்லாஹ் ஸலாஹி என்பவர் ‘சமூக நீதி முரசு’ எனும் இதழிலும், மௌலவி ஜஃபருல்லாஹ் நத்வி ‘சமவுரிமை’ எனும் இதழிலும், மௌலவி கே. எம். இல்யாஸ் ரியாஜி  'வைகறை வெளிச்சம்' எனும் இதழிலும், மௌலவி முனைவர்  நூ. அப்துல் ஹாதி பாகவி ‘இனிய திசைகள்’ எனும் இதழிலும் பணியாற்றிவருவது குறிப்பிடத்தக்கதாகும்.

தொடக்கக் காலத்தில் தொடங்கப்பட்ட இதழ்கள் சில பொருளாதாரச் சிக்கல் காரணமாக இடையில் நின்றுபோயின. அவற்றுள் பல இன்றும் தொடர்ந்து சீரிய முறையில் எழுத்துச் சேவையைச் செய்துவருகின்றன. ஆலிம்கள் இச்சமுதாயத்திற்கு எத்துறையிலும் தம் பங்களிப்பை விட்டுவைக்கவில்லை என்பதை அனைவரும் உணர்ந்தே உள்ளனர். ஆலிம்கள் பலர் ஏதேனும் ஒரு பள்ளிவாசலில் இமாமாகப் பணியாற்றிக்கொண்டே எழுத்துச் சேவையையும் செவ்வனே செய்துவருகின்றார்கள். சிலர் அரபுக்கல்லூரிகளில் பேராசிரியர்களாகப் பணியாற்றிக்கொண்டு எழுத்துப் பணியைச் செய்துவருகின்றார்கள். சிலர் பத்திரிகைக்காகவே தம் வாழ்நாளை அர்ப்பணித்துள்ளார்கள். ஆக, இவர்கள் அனைவருமே தம் பத்திரிகையை மிகுந்த பொருளாதார நெருக்கடிக்குள்தான் சமாளித்துக்கொண்டிருக்கின்றார்கள் என்பது கசப்பான உண்மை. “அல்லாஹ்வின் பெயரால் ஓதுவீராக” எனும் இறைவசனத்திற்கேற்ப இன்னும் அதிகமாக வாசகர்கள் படிக்கத் தொடங்கிவிட்டால் இதழ்களை நடத்துவோர் எவ்விதத் தொய்வுமின்றித் தம் பணியைச் செய்யமுடியும் என்பதையும் இவ்விடத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டியது அவசியமாகும்.

ஆலிம்கள் தம் பத்திரிகைகளில் சமுதாயத்தில் புரையோடிக் கிடக்கின்ற மூடப்பழக்கங்களுக்கு எதிராகவும்  குழப்பவாதிகள் ஏற்படுத்தும் குழப்பங்களுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாகவும் எழுதிவந்தனர். அவ்வப்போது எழுகின்ற சமூகப் பிரச்சனைகளுக்கான தீர்வையும் அரசியல் ரீதியாக எழுகின்ற பிரச்சனைகளை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பதையும் எழுதினார்கள். கிறிஸ்தவர்கள் தம் தவறான கொள்கைகளை முஸ்லிம்கள் மத்தியில் பரப்பும்போது அதைத் தடுத்து நிறுத்தும் வகையிலும் எழுதினார்கள். இப்படி எல்லாக் கோணங்களிலும் அவர்கள் தம் எழுத்துப் பணியைச் செய்துவந்தார்கள். தற்போது வரை செய்துகொண்டே இருக்கின்றார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது.
======================================