புதன், 19 அக்டோபர், 2016

நபிகளார் நவின்ற நான்குகள் (தொடர்-8)


முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி எம்.ஏ., எம்.ஃபில்., பிஎச்.டி.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் சமுதாயத்தாரிடையே நிலவுகின்ற நான்கு நடைமுறைகள் அறியாமைக் கால வழக்கங்களாகும். (பெரும்பாலான) மக்கள் அவற்றைக் கைவிடமாட்டார்கள். (அவையாவன:) 1. குலப்பெருமை பாராட்டுதல், 2. (அடுத்தவரின்) பாரம்பரியத்தைக் குறைகூறுதல், 3. கிரகங்களால் மழை பொழியும் என எதிர்பார்த்தல், 4. ஒப்பாரிவைத்து அழுதல். (நூல்: முஸ்லிம்: 1700) இதை அபூமாலிக் கஅப் பின் ஆஸிம் அல்அஷ்அரீ (ரளி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
அறியாமைக் காலச் செயல்பாடுகளாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுக் கூறியுள்ளவை இன்று வரை சமுதாய மக்களிடம் எஞ்சியிருக்கத்தான் செய்கின்றன. அந்தப் பழக்கத்தால் மக்கள் இன்றும் பாதிப்புக்கு உள்ளாகின்றார்கள் என்பதே உண்மை.
குலப்பெருமை பாராட்டுதல் எனும் போக்கு முஸ்லிம்களிடம் இன்றும் புரையோடிப்போய்க் கிடக்கிறது. முஸ்லிம்கள் அடர்த்தியாக வாழ்கின்ற குறிப்பிட்ட சில ஊர்களில், அவர்கள் தமக்குள்ளேயே பெண்கொடுத்தல், பெண் எடுத்தல் உள்ளிட்டவற்றைச் செய்துகொள்கின்றார்கள். அடுத்த ஊர்க்காரர்களுக்கு அறவே பெண்கொடுக்க மாட்டார்கள்.  வெளியூரிலிருந்து வந்து அங்கேயே நீண்ட காலம் குடியிருந்தாலும் அவர்களுக்குக்கூடப் பெண் கொடுக்க மாட்டார்கள். தாங்கள் மட்டுமே உயர்குலத்தவராகவும் உயர்குடி மக்களாகவும் கருதிக்கொள்கின்ற அறியாமக்கள் இன்றும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றார்கள்.
நாங்கள் சையது வமிசம்’, நாங்கள் ஷேகுவமிசம் என்று கூறிக்கொண்டு குலப்பெருமையடிப்பவர்களும் இருக்கின்றார்கள். இப்படி எந்த வமிசத்திற்கும் எந்த உயர்மதிப்பும் கிடையாது என நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே கூறியுள்ளார்கள். ஆக, இஸ்லாமிய மார்க்கத்தைப் பொறுத்த வரை குலப்பெருமை அறவே கூடாது.
அடுத்தவரின் பாரம்பரியத்தைக் குறை கூறுதல் எனும் போக்கு ஆங்காங்கே காணப்படுகிறது. நம்முடைய குடும்பத்திற்கென ஒரு பாரம்பரியம் இருக்கு. அதனால நாம் அவங்க குடும்பத்துல பெண் எடுக்கக் கூடாதுஎன்று பேசும் பெண்களும் ஆண்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள். மேலும் அவரவர் செய்யும் தொழிலை  வைத்து, அவரவர் குடும்பத்தை மதிப்பிடுவதும் நடைமுறையில் இருக்கத்தான் செய்கிறது. சில விஜயங்களை வெளிப்படையாகச் சொல்லாமல் அந்தரங்கமாகவே வைத்துக்கொண்டு, பெண் கொடுக்க மறுப்பதற்கான காரணம் உயர்குலம், உயர்குடி என்றும் தாழ்நிலை மனிதர்கள் என்றும் பாகுபடுத்துவதுதான். இந்தப் பாகுபாடு மறையுமா?
முஸ்லிம்கள் அல்லாதோர் கிரகங்களின் ஓட்டத்தாலும் அவற்றில் ஏற்படுகின்ற மாற்றத்தாலும்தான் மழைபொழிகிறது என்று கூறுவதைக் காண்கிறோம். அறிவியல் வளர்ச்சியடைந்த இக்காலத்தில், அறிவியல்அறிஞர்கள் வேறொரு கோணத்தில் ஆய்வுசெய்து, “காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் ஏற்பட்டிருப்பதால் இன்று மழைபொழியலாம்என்று கூறுகின்றனர். எல்லாவற்றுக்கும் மேலாக அல்லாஹ் நாடினால்தான் மழைபொழியும் என்பதே ஒரு முஸ்லிமின் இறைநம்பிக்கையாகும். அதற்கப்பால் மனிதன் எது சொன்னாலும் அதுவெல்லாம் பொய்த்துப்போக நூறு சதவிகித வாய்ப்புண்டு. மழை பொழியப் போவதைப்போன்ற சூழல் ஏற்பட்டும் எத்தனையோ தடவை மழை பெய்யாமல் போனதை நாம் பார்த்திருக்கிறோம். அதுபோலவே மழைபெய்யும் எந்த அறிகுறியும் தென்படாமலேயே திடீரென மழை பொழிந்ததையும் நாம் எத்தனையோ தடவை கண்ணாறக் கண்டு அனுபவித்திருக்கிறோம். ஆக மழைபொழிதல், பொழியாமல் இருத்தல் எதுவும் அல்லாஹ்வின் விருப்பத்திற்கேற்ப நடைபெறுகின்ற செயலாகும்.  அதில் மனிதர்கள் தம் குற்றறிவால் கூறுவதெல்லாம் குலைந்துபோய்விடும்.
பொழிகின்ற மழைநீரில் எவ்வளவு மனிதனுக்குரியது; எவ்வளவு நிலத்திற்குரியது; எவ்வளவு கடலில் கலக்க வேண்டியது என்ற கணக்கை அல்லாஹ்வே நிர்ணயிக்கின்றான். அதன்படியே செயலாற்றுகின்றான். அல்லாஹ்வின் திட்டத்திற்கு எதிராக மனிதனின் எண்ணமும் செயலும் ஒருபோதும் நடந்தேறப் போவதில்லை என்பதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும்.
நான்காவது அறியாமைக்காலச் செயலாக ஒப்பாரி வைத்து அழுதல்என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுக் கூறியுள்ளார்கள். பிறந்த ஒவ்வொரு மனிதனும் இறந்தே ஆக வேண்டும் என்ற நியதியை அல்லாஹ் விதித்துள்ளான். இதை மனித சமுதாயமும் ஏற்றுக்கொண்டுதான் உள்ளது. ஆனாலும் இறந்தவரின் அருமை பெருமைகளைச் சொல்லிச் சொல்லி ஒப்பாரி வைத்து அழும் பழக்கம் அறியா மக்களிடம் அண்டிக்கொண்டிருக்கிறது. இறந்தவனை நினைத்து அழுகவும் ஒப்பாரி வைத்து ஓலமிடவும் பெண்கள் நியமிக்கப்படுகின்றார்கள். அவர்கள் இறந்தவனின் முன்னிலையில் அமர்ந்துகொண்டு ஒப்பாரி வைத்து ஓலமிட்டு அழுவார்கள். அதாவது அழுவதைப் போன்று நடிப்பார்கள். அழுது முடிந்ததும் அதற்கான தொகையும் கொடுக்கப்படும். இந்த அறியாமைச் செயல்பாடு இன்றும் எத்தனையோ கிராமங்களில் நடைமுறையில் உள்ளது.
ஆனால் முஸ்லிம்கள், இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக்கொண்டுவிட்டதால் அதுபோன்ற செயல்பாடுகளிலிருந்து தவிர்ந்து வாழ்கின்றார்கள். இருப்பினும் யாரேனும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட பின்பும் இதுபோன்ற அறியாமைக்காலச் செயலைத் தெரியாமல் செய்துவந்தால், அவள் தன் மரணத்திற்குமுன்பே அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி அச்செயலிலிருந்து மீள வேண்டும். இல்லையேல் மறுமை நாளில் தாரால் ஆன நீளங்கியும் சொறிசிரங்குச் சட்டையும் அணிந்தவளாக அவள் நிறுத்தப்படுவாள்” (நூல்: முஸ்லிம்: 1700) என்று மேற்கண்ட நபிமொழியின் தொடரில் இடம்பெற்றுள்ளது. எனவே மேற்கண்ட அறியாமைக்காலச் செயல்பாடுகளையும் அவைபோன்ற வேறு மூடப்பழக்கங்களையும் விட்டு ஒதுங்கி அறிவுப்பூர்வமான மார்க்கத்தைப் பின்பற்றி வாழ்வோமாக!            
-இன் ஷாஅல்லாஹ் தொடரும்.
================


==========

திங்கள், 17 அக்டோபர், 2016

மறதி ஒரு வெகுமதி!


-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

மறதி என்பது மனித இயல்பாகும். அதனால்தான், "மக்களுள் முதலாமவர் மறதியில் முதல்வர்'' என்று ஓர் அரபுப் பழமொழி உண்டு. முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்கள்தாம் அல்லாஹ்வின்  கட்டளையை மறந்து, தடை செய்யப்பட்ட மரத்திலிருந்து உண்டுவிட்டார். அதனால்தான் அவர் சொர்க்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டார் என்பது வரலாறு. ஆக, மறதி என்பது முதல் மனிதரிடமிருந்தே தொடங்குகிறது என்பதை அறியும்போது மறதி மனித இயல்புதான் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

மறதி மனித இயல்பாக இருப்பதால்தான் அவ்வப்போது மனிதன் மறந்துவிடுகின்றான். அதன் காரணமாக அவன் அல்லாஹ்விடம் தண்டனை பெற்றுவிடக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் விரும்பினார்கள். எனவே அது குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாவது: "திண்ணமாக அல்லாஹ் என்னுடைய சமுதாய மக்கள் தவறுதலாகச் செய்துவிடுதல், மறதியாகச் செய்துவிடுதல், நிர்ப்பந்திக்கப்பட்டுச் செய்தல் ஆகியவற்றை எனக்காக மன்னித்துவிட்டான்.'' (நூல்: இப்னுமாஜா: 2033)

மேலும் நபி (ஸல்) அவர்கள், "உங்களுள் ஒருவர் உணவுண்டால் பிஸ்மில்லாஹ் சொல்லட்டும்தொடக்கத்தில் (பிஸ்மில்லாஹ் சொல்ல) மறந்துவிட்டால், பிஸ்மில்லாஹி ஃபீ அவ்வலிஹி வஆகிரிஹி என்று சொல்லட்டும்''  (பொருள்: முதலிலும் கடைசியிலும் அல்லாஹ்வின் பெயரால் உண்கிறேன்) எனக் கூறினார்கள். (நூல்: திர்மிதீ: 1781)

ஒரு துஆவைக் கற்றுத் தருகின்றபோதே, அதைச் சொல்ல மறந்துவிட்டால் இவ்வாறு சொல்லட்டும் எனச் சொல்லித் தருகின்றார்கள் என்றால் மறதி மனித இயல்பு என்பதை எந்த அளவிற்கு உணர்ந்துள்ளார்கள் என்பதை நாம் புரிந்துகொள்ளலாம்.
ஒரு தடவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தினார்கள். அது ஓர் அந்தி நேரத் தொழுகை. அது நான்கு ரக்அத்களைக் கொண்டது. ஆனால் மறதியால் இரண்டு ரக்அத்கள் மட்டும் தொழுது, தொழுகையை முடித்துவிட்டார்கள். அதன்பின் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சாய்ந்து அமர்ந்திருந்தார்கள். அவர்களிடம் அது குறித்துப் பேச எல்லோருக்கும் தயக்கம். அப்போது துல்யதைன் எனும் நபித்தோழர், "அல்லாஹ்வின் தூதரே! தொழுகை(யின் ரக்அத்கள்) குறைக்கப்பட்டுவிட்டதா? அல்லது தாங்கள் மறந்துவிட்டீர்களா?'' என்று வினவினார். "இவர் சொல்வது உண்மைதானா?'' என்று சூழ இருந்த நபித்தோழர்களிடம் கேட்டார்கள். "ஆம்! இவர் சொல்வது உண்மைதான். தாங்கள் இரண்டு ரக்அத்கள்தாம் தொழுவித்தீர்கள்'' என்று மறுமொழி பகன்றனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நானும் உங்களைப் போன்ற மனிதர்தாம்.  நீங்கள் மறப்பதைப் போலவே நானும் மறந்துவிடுகிறேன். எனவே நான் (எதையேனும்) மறந்துவிட்டால் எனக்கு நீங்கள் நினைவூட்டுங்கள்'' என்று கூறினார்கள். (நூல்: புகாரீ: 401)

 இந்நபிமொழியில், "நானும் உங்களைப் போன்ற மனிதர்தாம்'' என்று கூறி,  "நீங்கள் மறப்பதைப் போலவே நானும் மறந்துவிடுகிறேன்'' என்று கூறியுள்ளதன்மூலம் மறதி மனித இயல்பு என்பதை மெய்ப்பிக்கின்றார்கள். மறதி என்பது சாதாரண மனிதர்கள் முதல் இறைத்தூதர்கள் வரை அனைவருக்கும் சமமானது என்பதை உணர முடிகிறது. இருப்பினும் இறைத்தூதர்கள் நம்மைப்போன்ற மறதியாளர்கள் கிடையாது என்பதையும் நாம் மனதில் நிலைநிறுத்திக்கொள்ள வேண்டும்.
இறைத்தூதர் மூஸா (அலை) அவர்களுக்கும் மறதி ஏற்பட்டுள்ளது என்பதைத் திருக்குர்ஆன் வாயிலாக அறிகிறோம். களிர் (அலை) அவர்களோடு மூஸா (அலை) அவர்கள் கடற்பயணம் மேற்கொண்டபோது, தாங்கள் என்னிடம் எது குறித்தும் வினா எழுப்பக்கூடாது; பொறுமையாக இருக்க வேண்டுமென நிபந்தனை விதித்தார்கள். அந்நிபந்தனையை மறந்துவிட்ட மூஸா (அலை) அவர்கள், களிர் (அலை) அவர்கள் தாம் பயணம் செய்து சென்றுகொண்டிருந்த மரக்கலத்தைத் துவாரமிட்டதைக் கண்டபோது,  "தாங்கள் ஏன் இந்த மரக்கலத்தில் துவாரமிடுகின்றீர்?'' என்று வினவினார்கள். அது குறித்துத் திருக்குர்ஆன் கூறுவதைப் பாருங்கள்:

அவ்விருவரும் (கடலோரமாக) நடந்தனர். இறுதியில் அவ்விருவரும் மரக்கலம் ஒன்றில் ஏறியதும் அவர் அதில் துளையிட்டார். மூஸா, "இதிலுள்ளோரை மூழ்கடிக்கவா நீங்கள் துளையிட்டீர்கள்? நிச்சயமாக நீங்கள் மோசமான செயலைச் செய்துவிட்டீர்கள்'' என்று கூறினார். அதற்கு, "என்னுடன் பொறுமையாக இருக்க உங்களால் ஒருபோதும் இயலாது என்று நான் (முன்பே) சொல்லவில்லையா?'' என அவர் (களிர்) கேட்டார். அப்போது அவர் (மூஸா), "நான் மறந்துவிட்டதற்காக என்னைத் தண்டித்துவிடாதீர். என் விஷயத்தில் என்னைச் சிரமத்திற்குள்ளாக்கிவிடாதீர்'' என்று கூறினார்.  (18: 71-73)

மறதி மனித இயல்பாக இருந்தாலும் சில வேளைகளில் ஷைத்தான் மனிதனுக்கு மறதியை ஏற்படுத்துகின்றான். அவன் ஒரு மனித விரோதி என்பதை மெய்ப்பிக்கும் வண்ணம் அவ்வப்போது அவன் மனிதனுக்கு எதிராகச் செயல்பட்டுக்கொண்டே இருப்பான்.  நல்லறங்களைச் செய்ய முனையும் போது அதில் மறதியை ஏற்படுத்திக் குழப்பத்தை உண்டுபண்ண முனைந்து செயல்படுவான். அது குறித்து நபி (ஸல்) அவர்கள் நமக்கு முன்னெச்சரிக்கை செய்துள்ளார்கள்.

"உங்களுள் யாரேனும் தொழுதுகொண்டிருக்கும்போது அவரிடம் ஷைத்தான் வருவான். அவர் எத்தனை ரக்அத்கள்  தொழுதார் என்பதை அறியாத அளவுக்கு (மறதியை ஏற்படுத்தி)க் குழப்பத்தை உண்டாக்குவான். எனவே இந்த நிலையை உங்களுள் யாரேனும் அடைந்தால், (தொழுகையின் இறுதியில்) அமர்ந்தவாறு அவர் இரண்டு சஜ்தாக்கள் (சலாம் கொடுக்குமுன்) செய்துகொள்ளட்டும்'' என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: திர்மிதீ: 363)

மற்றொரு வரலாற்றுச் சான்றைக் காணலாம். மூஸா (அலை) அவர்கள் இறைநேசர் களிர் (அலை) அவர்களைச் சந்திக்கச் சென்றபோது தம்முடன் ஓர் இளம் பணியாளரையும் அழைத்துச் சென்றார்கள். அவர் பெயர் யூஷஉ பின் நூன் ஆகும். அல்லாஹ்வின் கட்டளைப்படி, உப்புத் தோய்க்கப்பட்ட மீனைச் சுமந்து வருமாறு தம் பணியாளரிடம் கேட்டுக்கொள்ள, அதை அவர் சுமந்து சென்றார். அந்த மீன் உயிர்பெற்று, கடலுக்குள் நழுவிச் செல்லும் இடமே களிர் (அலை) அவர்களைச் சந்திக்கும் இடம் என்று மூஸா (அலை) அவர்களுக்கு அல்லாஹ் அடையாளம் சொல்லியிருந்தான். அந்தத் தகவலை மூஸா (அலை) அவர்கள் தம் பணியாளரிடம் சொல்லி, தமக்கு அதைத் தெரிவிக்குமாறு உத்தரவிட்டிருந்தார்கள். பின்னர் இருவரும் அவரைச் சந்திக்கப் புறப்பட்டுச் சென்றார்கள். கடற்கரை வழியாகச் சென்று கொண்டிருந்தபோது ஓரிடத்தில் ஓய்வெடுத்தார்கள். அப்போது அந்த மீன் உயிர்பெற்று, கடலுக்குள் சென்றுவிட்டது. சட்டென விழித்த அந்தப் பணியாளர் அந்த மீன் உயிர்பெற்றுச் சென்றதைப் பார்த்துவிட்டார். ஆனால் மூஸா (அலை) அவர்கள் தம் உறக்கத்திலிருந்து எழுந்ததும்  அந்தத் தகவலை அவர் தெரிவிக்க மறந்துவிட்டார். அது குறித்துத் திருக்குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது.

"பார்த்தீர்களா? நாம் அந்தப் பாறையில் ஒதுங்கியபோது அந்த மீனை நான் நிச்சயமாக மறந்துவிட்டேன். அதைப் பற்றி (உங்களிடம்) சொல்லவிடாமல் ஷைத்தான்தான் என்னை மறக்கச் செய்துவிட்டான். அது கடலில் விந்தையான முறையில் தனது பாதையை அமைத்துக்கொண்டது'' என்று கூறினார். (18: 63) ஒரு நல்வினையைச் செய்ய மனிதன் முயலும்போது மனித விரோதியான ஷைத்தான் அதை மறக்கச் செய்கிறான் என்பதை இந்நிகழ்வின் மூலம் விளங்கிக்கொள்ள முடிகிறது.
மறதி மனித இயல்பாக இருந்தாலும் நாம் மறக்காமல் எப்போதும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய எத்தனையோ விஷயங்கள் உள்ளன. முதலில் நம்மையெல்லாம் படைத்த இறைவனை நாம் ஒருபோதும் மறக்கக் கூடாது; மறுமை நாள், மரணம், நம் அன்றாடக் கடமைகள் முதலியவற்றை மறக்கவே கூடாது. இன்று கடமையை மறந்த பலர் நம் அன்றாட வாழ்வில் வலம் வருகின்றார்கள். ஐவேளைத் தொழுகை ஒவ்வொரு முஸ்லிம் ஆண்-பெண்மீதும் கடமை; அதைப் பெரும்பாலோர் அலட்சியமாகக் கருதி விட்டுவிடுவது தொடர்ந்துகொண்டே உள்ளது. கணவன் மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமைகளை மறந்துவிடுகின்றான்; மனைவி தன் கணவனுக்குச் செய்ய வேண்டிய  கடமைகளை மறந்துவிடுகின்றாள்; முதலாளி-தொழிலாளி, தாய்-தனயன், தந்தை-மகன், மகள்-தந்தை, பெரியவர்-சிறியவர் இப்படி ஒருவருக்கொருவர் செய்ய வேண்டிய கடமைகளை மறந்து, பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்கின்றனர். இப்பழக்கத்தை முற்றிலும் தவிர்த்துக்கொள்ள வேண்டும். கடமையை நிறைவேற்றுதல் குறித்து நாம் மீண்டும் மீண்டும் நினைவு படுத்திக்கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் நாம் கடமை தவறாமல் செயலாற்ற முடியும்.

நன்றி மறப்பது நன்றன்று-நன்றல்லது
அன்றே மறப்பது நன்று- என்று வள்ளுவர் கூறியுள்ளார்.

மறதி மனித இயல்பாக இருந்தாலும் நாம் மறக்காமல் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியது பிறர் நமக்குச் செய்த உதவியைத்தான். அதை நாம் ஒருபோதும் மறவாமல் அவர் செய்த அந்த உதவிக்குக் கைம்மாறு செய்வது நம் கடமையாகும். எனவே பிறர் நமக்குச் செய்த உதவியை மறக்காமல் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய அதே நேரத்தில், பிறர் நமக்குச் செய்த தீவினைகளையோ துன்பங்களையோ இடர்களையோ நாம் அவ்வப்போது மறந்துவிட வேண்டும். அதுதான் நம் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு உகந்ததாகும். 

மற்றொரு கோணத்தில் பார்த்தால், சில வகை மறதி அல்லாஹ்வின் அருட்கொடையும் வெகுமதியும் ஆகும் என்றே சொல்லலாம். ஆம்!  நாம் பார்க்கின்ற, செய்கின்ற, சொல்கின்ற எத்தனையோ விஷயங்களை அவ்வப்போது மறந்துவிடுகின்றோம். அந்த மறதி இயல்பாகவே நமக்குள்  நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அவற்றையெல்லாம் அவ்வப்போது மறந்துவிடும் இயல்புநிலையை மட்டும் இறைவன் வைக்காதிருந்தால் நாம் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியிருப்போம்.  எனவே இது இறைவனின் வெகுமதி என்றே சொல்ல வேண்டும்.
ஒரு கணவன் செய்கின்ற சின்னச் சின்ன தவறுகளை மனைவி மறந்துவிடுகின்றாள்; அவன் தன்னைத் திட்டுவதையும் அடிப்பதையும் தொல்லை கொடுப்பதையும் அவ்வப்போது மறந்துவிடுகின்றாள். அதனால்தான் காலையில் சண்டையிட்டு, திட்டிவிட்டுச் சென்ற கணவனை மாலையில் மகிழ்ச்சியோடும் இன்முகத்தோடும் வரவேற்கிறாள். அதுபோலவே மனைவி அவ்வப்போது  செய்துவிடுகின்ற சின்னச்சின்ன தவறுகளையும் குறைபாடுகளையும் கணவன் மன்னித்து, மறந்துவிடுகின்றான். அதனால்தான் காலையில் மனைவி செய்த ஏதோ ஒரு தவறுக்காக அவளைத் திட்டிவிட்டுச் சென்றவன் இரவில் இல்லம் திரும்பும்போது அவளுக்குத் தேவையானதை வாங்கிவந்து அன்போடு கொடுக்கின்றான்.

இப்படித் தம்பதியர் ஒருவருக்கொருவர் மறந்துவிடுவதால்தான் இல்லறமே நல்லறமாய் நடைபெறுகிறது; அதுபோன்றே ஒரு தொழிலாளி செய்யும் தவற்றை முதலாளி மறந்துவிடுவதால்தான் அந்தத் தொழிலாளி தொடர்ந்து அங்கேயே பணியாற்ற முடிகிறது. சிறியவர்கள் செய்யும் தவறுகளைப் பெரியவர்கள் மறந்துவிடுவதால்தான் சமூக வாழ்க்கை சீராக நடைபெறுகிறது. ஆக மறதி என்பது ஒரு கோணத்தில் இறைவனின் வெகுமதி என்றே சொல்லலாம்.

"எங்கள் இறைவா! நாங்கள் (எங்கள் கடமைகளைச் செய்ய) மறந்துவிட்டாலும் அல்லது அதில் தவறிழைத்துவிட்டாலும் அதற்காக நீ எங்களை(க் குற்றம்) பிடித்துவிடாதே!'' (2: 286) என்ற பிரார்த்தனையை நாம் நாள்தோறும் மறக்காமல் செய்துவருவோம். 






=====================