திங்கள், 29 ஜனவரி, 2024

பிள்ளைகளோடு ஏற்றுக்கொள்ள முன்வாருங்கள்!

 

---------------------------------------------

முதல் திருமணம் சரியாக அமையப்பெறாத பெண்கள், கணவனால் கைவிடப்பட்டோர், கணவன் இறந்துவிட்டதால் கைம்பெண்களாக உள்ளோர் மறுமணம் செய்துகொள்ள விரும்பினால், பிள்ளையில்லாப் பெண்ணுக்கு ஏதோ ஒரு வகையில் மறுமணம் நடைபெற்றுவிடுகின்றது. ஆனால் ஒன்றோ, இரண்டோ பிள்ளைகளைத் தம் பராமரிப்பில் வைத்துள்ள பெண்களை மறுமணம் செய்துகொள்ளும் இளைஞர்கள் மிக அரிதாகவே உள்ளனர். பெரும்பாலான இளைஞர்கள் பிள்ளைகளோடு உள்ள பெண்களை  ஏற்றுக்கொள்வதில்லை. அத்தகையோர் பின்வரும் வரலாற்று நிகழ்வைத் தெரிந்துகொண்டால் அது அவர்களின் உள்ளத்தில் மாற்றத்தை ஏற்படுத்தலாம். 

 

உம்மு சலமா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் கணவர் அபூஸலமா ரளியல்லாஹு அன்ஹு இறந்துபோனபின், காத்திருப்புக் காலம் முடிவடைந்தபிறகு, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவரை மணந்துகொள்ள விருப்பம் தெரிவித்து, தூது அனுப்பினார்கள். அதற்கு அவர், தாம் வயதானவர் என்றும், தமக்கு நிறையப் பிள்ளைகள் (ஸலமா, உமர், ஸைனப், ருகையா) இருப்பதாகவும், தாம் கோபக்காரி என்பதாகவும் பதிலளித்தார். அதைக் கேட்ட நபியவர்கள், “நீங்கள் வயதான பெண்மணி என்றால் நானும் வயதானவன்தான்; பிள்ளைகளைப் பொருத்தவரை நீங்கள் கவலைப்பட வேண்டாம், அவர்களுக்கு நான் பாதுகாவலனாக இருந்து அவர்களுக்குத் தேவையானவற்றைச் செய்து கொடுக்கவும் பொறுப்பேற்றுக் கொள்கின்றேன்; உங்களுடைய கோபத்தைத் தணிக்க நான் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்கிறேன் என்று கூறி, அவருக்கு வாக்குறுதியளித்தார்கள்.

 

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இந்த மறுமொழியால், மனம் மகிழ்ந்த உம்மு ஸலமா ரளியல்லாஹு அன்ஹா, நபியவர்களை மணந்துகொள்ளச் சம்மதித்தார். அதன்பின்னர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கும் உம்மு ஸலமாவுக்கும் இடையே ஹிஜ்ரீ 4ஆம் ஆண்டு, ஷவ்வால் மாதம் திருமணம் நடைபெற்றது. ஆக நபியவர்கள் உம்முஸலமா ரளியல்லாஹு அன்ஹா அவர்களைத் திருமணம் செய்துகொண்டபோது அவருடைய நான்கு பிள்ளைகளையும் சேர்த்துத்தான் மணம் செய்துகொண்டார்கள். தாயிடமிருந்து பிள்ளைகளைப் பிரிக்கவில்லை. அவர்களுக்கு எவ்வாறு உணவு கொடுப்பது என்று யோசிக்கவில்லை; உணவு கொடுப்பவன் அல்லாஹ்தான் என்ற நம்பிக்கையோடு மணமுடித்தார்கள்.

 

முந்தைய கணவருக்குப் பிறந்த பிள்ளைகளை ஒருவர் பொறுப்பேற்று வளர்க்கும்போது அப்பிள்ளைகளுக்காகச் செலவழிக்கின்ற அனைத்தும் நன்மைகளாக அவருக்கு வழங்கப்படும் என்பதை இன்றைய இளைஞர்கள் மறந்துவிடக் கூடாது. நாமே அவர்களுக்கும் உங்களுக்கும் வாழ்வாதாரம் வழங்குகிறோம் (17: 31) என்ற திருக்குர்ஆன் வசனத்தைப் படித்த பிறகு இளைஞர்களுக்கு நிச்சயம் நம்பிக்கை ஏற்படும் என்று நம்புவோம்.

 

அன்புடன்

நூ. அப்துல் ஹாதி பாகவி

29 01 2024

===============

ஞாயிறு, 28 ஜனவரி, 2024

மறுமணம் செய்துகொள்ள விரும்பும் பெண்கள் எதிர்கொள்ளும் சிக்கல்

 

-------------------------------------------

இளம்விதவைகள் அல்லது இளம்வயதிலேயே கணவனைப் பிரிந்தோர் மறுமணம் செய்துகொள்ள விரும்பும்போது, குழந்தை இல்லாப் பெண்களுக்கு எளிதில் மறுமணம் சாத்தியப்படுகின்றது. ஆனால் ஓரிரு பிள்ளைகளைத் தம் பராமரிப்பில் வைத்துள்ள பெண்களுக்கு மறுமணம் என்பது மிகவும் சிக்கலாக உள்ளது. ஏனெனில் சமுதாயத்தில் ஷரீஅத்தைப் புரிந்து, இறைநம்பிக்கையோடு வாழ்க்கையை எதிர்கொள்கின்ற இளைஞர்கள் அரிதாகவே உள்ளனர்.

 

எனவே பிள்ளைகளைத் தம் பராமரிப்பில் வைத்துள்ள பெண்களை மறுமணம் செய்துகொள்ளும் இளைஞர்கள் கிடைப்பது குதிரைக் கொம்பாகவே உள்ளது. அப்படியே யாரேனும் இளைஞன் முன்வந்தால், அப்பிள்ளைகளைத் தாய் வீட்டில் விட்டுவிட்டு வருவதாக இருந்தால் மணமுடித்துக்கொள்கிறேன் என்று கூறுகின்றான். பிள்ளைகளோடு அப்பெண்ணை யாரும் ஏற்றுக்கொள்வதில்லை. அதனால் அவள் தன் பிள்ளைகளைப் பிரிந்து வாழ வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. அல்லது மறுமணம் முடிக்காமல் வெறுமனே காலத்தைக் கழிக்க வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்படுகிறது.

 

இவ்விடத்தில்தான் பெண்களுக்கு இஸ்லாம் வழங்கியுள்ள சலுகையையும் சட்டத்தையும் அவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். அந்தச் சட்டத்தைத் தெரிந்துகொண்டு, அதற்கேற்பச் செயல்பட்டால், பெண்கள் மறுமணம் செய்துகொள்வதில் எந்தச் சிக்கலும் ஏற்படாது.

 

கணவன் தன் மனைவியை விவாக விலக்குச் செய்துவிட்டால், கணவன் வீட்டிலேயே மூன்று மாதங்கள் வரை அப்பெண் இத்தா-காத்திருப்புக் காலத்தைக் கழிக்க வேண்டும். அந்த மூன்று மாதங்கள் வரை அனைத்துச் செலவுகளும் கணவனைச் சார்ந்ததே. இத்தா முடிவதற்குள், அவன் நாடினால் அந்த மனைவியோடு மீண்டும் வாழ்க்கையைத் தொடரலாம். இல்லையேல் இத்தா முடிவுற்றபின் அவள் தன் தாய் வீட்டுக்குச் சென்றுவிடலாம்.

 

அப்போது அவ்விருவருக்கும் குழந்தை பிறந்திருந்தால் அக்குழந்தையை அதனுடைய தந்தையிடமே அப்பெண் விட்டுவிட வேண்டும். அதனை வளர்க்கும் பொறுப்பு தந்தையையே சாரும்; அவள்மீது எப்பொறுப்பையும் இஸ்லாம் சுமத்தவில்லை. இதைப் பெண்கள் புரிந்துகொள்ளாமல் பிள்ளைகளையும் தம்மோடு தாய்வீட்டிற்கு அழைத்துச் சென்றுவிடுவதால்தான் மறுமணத்தில் அவர்களுக்குச் சிக்கல் ஏற்படுகிறது. இது குறித்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், “(தாய்) யாருடைய (திருமணப்) பொறுப்பில் இருக்கும்போது குழந்தை பிறக்கிறதோ அவருக்கே குழந்தை உரியது (புகாரீ: 2052) என்று கூறியுள்ளார்கள்.

 

அதனால் அப்பெண் இத்தா முடிவடைந்தபின் தன் தாய் வீட்டிற்குச் சென்று மறுமணம் செய்துகொண்டு நிம்மதியாக வாழ்க்கையைத் தொடரலாம்.  

 

அன்புடன்

நூ. அப்துல் ஹாதி பாகவி

28 01 2024

 

#இளம்விதவைகள், #மறுமணம், #விவாக விலக்கு

=======================

சனி, 27 ஜனவரி, 2024

தேனும் சர்க்கரைப் பாகும் (சிறுகதை) Honey and Sugar molasses (short sto...



 -மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி

------------------------------

 

என்னக்கா ஆமினா! நல்லா இருக்கீங்களா?- பக்கத்துத் தெருவில் குடியிருக்கிற ஆயிஷா விசாரித்தாள்.

 

ம். இருக்கேன். என்ன, ரொம்ப நாளா இந்தப் பக்கம் ஆளே காணோம்! வீட்ல அப்டி என்னதான் செய்யுறே?-எதிர்கேள்வி கேட்டாள் ஆமினா.

 

வீட்ல நெறைய வேலைதான். புத்தக அலமாரியில் ஒரு எலி புகுந்து புத்தகங்களையெல்லாம் கடித்துக் கடித்துக் குதறிக்கொண்டிருந்தது. இப்பத்தான் காலாண்டுத் தேர்வு லீவு விட்டாங்க. பிள்ளைகளையெல்லாம் எங்க அம்மா வீட்டுக்கு அனுப்பி வச்சிட்டு, எல்லாப் புத்தகங்களையும் கீழே இறக்கி வச்சு, சுத்தம் செய்துட்டு. ஒரு எலிக்கட்டை வாங்கி அந்த எலியப் பிடுச்சு அடிச்சிட்டு இப்பத்தான் நிம்மதியா இருக்கேன்-மகிழ்ச்சியோடு சொன்னாள் ஆயிஷா. 

 

ஏன்டி ஆயிஷா! எலிய அடிச்சுக் கொல்லலாமா? ஒரு உயிரினத்தைக் கொல்வது பாவம் இல்லையா?

 

அது ஒன்னும் பாவமில்லையே. எலி, தேள், பாம்பு, பல்லி போன்ற மனிதர்களுக்குத் தொல்லை தருகிற உயிரினங்களைக் கொல்லலாம் என்று நமது நபிகள் நாயகம் சொல்லியிருக்காங்க. அதனால பாவம் ஏதும் இல்லை. அது மட்டுமில்லை. பல்லியை ஒரே அடியில அடிச்சா நூறு நன்மையாம்!-ஆயிஷா தெளிவாகச் சொன்னாள்.

 

அது ஏன்டி, பல்லிய அடிச்சா மட்டும் நன்மை?-ஆமினா விசாரித்தாள்.

 

அது ஏன்னா, நம்ரூத் அரசன் இப்ராஹீம் நபிய நெருப்புக் குண்டத்துல போட்டபோது எல்லா உயிரினங்களும்...


வியாழன், 25 ஜனவரி, 2024

இடையில் நுழையாதே / Idaiyil Nuzhaiyaathe/ சிறுகதை / Do not interfere in a...

இடையில் நுழையாதே! (சிறுகதை)

காட்சி வடிவில்...


அன்வர் உடைய அன்னை சுல்தானா தன்னுடைய மகனுக்குப் பெண் பார்த்துக்கொண்டிருந்தாள். சொந்தம் விட்டுப் போகக் கூடாதென்று தன்னுடைய அண்ணன் ஆஸிப் வீட்டுப் படியேறி அவருடைய மகள் ருகையாவைத் தன்னுடைய மகனுக்குப் பெண் கேட்டாள். 

தங்கைக்கும் அண்ணனுக்கும் நீண்டகால இடைவெளி இருந்தது. ஏதோ ஒரு பிரச்சனைக்காக நீண்ட காலம் இருவரும் பேசாமலே இருந்துவிட்டார்கள். இருந்தாலும் தன் மகனின் திருமணத்தின் மூலம் அப்பிரச்சனை ஒரு முடிவுக்கு வந்து, இரண்டு குடும்பங்களுக்கு இடையே ஒரு நல்லுறவு மலர வேண்டுமென நினைத்தாள் சுல்தானா. அதனால்தான் தன் அண்ணன் மகளைப் பெண் கேட்க அவர் வீட்டுப் படியேறினாள். 

நீண்ட காலம் பார்க்காத தங்கையை இன்று பார்த்த மகிழ்ச்சியில் பேச வார்த்தையின்றித் திகைத்துப்போய் நின்றான் ஆஸிப். சுல்தானா, தான் வந்த விசயத்தை அண்ணனிடம் கூறியதும், தன் மகளை தன் தங்கை மகனுக்குத் திருமணம் செய்துதரச் சம்மதித்தான். பின்னர் ஒரு நாள் உறவினர்கள் அனைவரின் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. கொடுக்கல் வாங்கல் குறித்தும் பேசிமுடித்துவிட்டார்கள்.  

ஆனால் இந்தச் சம்பந்தம் ஆஸிபின் மனைவி ஸைத்தூனுக்குப் பிடிக்கவில்லை. ...


புதன், 17 ஜனவரி, 2024

வளர்ந்துவரும் மொழிபெயர்ப்புக் கலை

  


-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

 

மனிதன் தன்னுடைய செய்தியைப் பிறருக்குத் தெரிவிக்கப் பயன்படும் ஊடகமே மொழி. உலகில் பல்வேறு மொழிகள் உள்ளன. ஒவ்வொரு மொழிக்கும் பல்வேறு வார்த்தைகள்; ஒவ்வொரு வார்த்தைக்கும் தனித்தனி பொருள்; அவற்றை எண்ணிப் பார்க்கும்போது வியப்பே மேலிடுகிறது. மொழி குறித்து அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகின்றான்:  வானங்களையும் பூமியையும் படைத்திருப்பதும், உங்களுடைய மொழிகளும் நிறங்களும் வெவ்வேறாக இருப்பதும் அவனுடைய சான்றுகளுள் உள்ளவையாகும். இதில் கல்வியாளர்களுக்கு நிச்சயமாகப் பல சான்றுகள் இருக்கின்றன. (30: 22)

 

நபியவர்களின் மொழிபெயர்ப்பாளர்: நம்முடைய மொழியை அறியாதவருக்கு அவருடைய மொழியில் தெரிவிக்க உதவுவதே மொழிபெயர்ப்பு. இது பன்னூறு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இஸ்லாத்தின் பார்வையில் மொழிபெயர்ப்பு குறித்து ஆய்வு செய்தபோது ஸைத் பின் ஸாபித் ரளியல்லாஹு அன்ஹு அவர்களைக் குறிப்பிட்டே ஆக வேண்டிய தேவை ஏற்பட்டது. ஏனெனில் இவர் ஹீப்ரு மொழி, சிரிய மொழி ஆகியவற்றைக் கற்றுக்கொண்டு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மொழிபெயர்ப்பாளராக இருந்துள்ளார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு வரும் கடிதங்களைப் படித்துக்காட்டுதல், யூதர்கள் தம் வேதத்தில் ஹீப்ரு மொழியிலுள்ள சட்டத்தைத் தவறாகப் படித்துக் காட்டும்போது அல்லது மறைக்கும்போது அதை வாசித்து, நபியவர்களுக்கு அரபியில் மொழிபெயர்த்துச் சொல்பவராக இருந்துள்ளார் என்பதை அறிய முடிகிறது.

 

வரலாற்று ரீதியாக ஆய்வு செய்யும்போது, மன்னர் ஹாரூன் ரஷீத் (763-809) அவர்களின் காலத்தில்தான் அரபு நூல்களெல்லாம் ஐரோப்பிய மொழிகளில் பெயர்க்கப்பட்டன என்ற செய்தியை அறிகிறோம். அரபியர்கள் அறிவியலிலும் மருத்துவத்துறையிலும் சிறந்து விளங்கினார்கள். அது குறித்துப் பற்பல நூல்களை எழுதி வைத்திருந்தார்கள். அந்த அரபு நூல்கள்தாம் பிற்காலத்தில் ஐரோப்பிய மொழிகளிலும் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டன என்பதற்கு அவற்றிலுள்ள மூலவார்த்தைகளே சாட்சியாக உள்ளன. அதாவது அரபு வார்த்தைகள் ஆங்கில உச்சரிப்பில் எழுதப்பட்டுள்ளன.

 

பிற்காலத்தில் பைபிள், திருக்குர்ஆன் ஆகிய வேதங்கள் பிறநாட்டு மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டன. தமிழ்நாட்டில் இருபதாம் நூற்றாண்டில்தான் (1943) முதன்முதலாக ஆ.கா. அப்துல் ஹமீது பாகவி அவர்களால் திருக்குர்ஆன் தமிழாக்கம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து பல்வேறு நூல்கள் பற்பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வருகின்றன. இன்று தமிழ்நாட்டில்  இஸ்லாமிய மூலாதார நூல்களும் வரலாற்று நூல்களும் தமிழில் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நூல்கள் தமிழ் முஸ்லிம்கள் வாழும் பல்வேறு நாடுகளுக்குச் சென்றுகொண்டிருக்கின்றன. 

 

தமிழக அரசு நிதியுதவி: பன்னாட்டு நூல்கள் நம் தமிழ்மொழியில் தமிழாக்கம் செய்யப்பட்டு, தமிழர்கள் பயன்பட வேண்டும் என்ற வகையில் மொழிபெயர்ப்பாளர்கள் பலர் இக்கலையில் ஈடுபட்டுவருகின்றனர். அந்த வகையில் தமிழக அரசு அண்மையில் ஒரு திட்டத்தை அறிவித்துள்ளது. அதாவது பிறநாட்டு நல்ல நூல்கள் தமிழுக்கு வரவேண்டும்; தமிழ் நூல்கள் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, அயல்நாடுகளுக்குச் செல்வதன்மூலம், தமிழனின் பெருமையை உலகறியச் செய்ய வேண்டும் என்ற நன்னோக்கத்தில் மொழிபெயர்ப்புத்துறைக்கு மூன்று கோடி நிதியுதவி ஒதுக்கியுள்ளது. எனவே நல்ல மொழிபெயர்ப்பாளர்களுக்குப் பொன்னான எதிர்காலம் உண்டு என்று நம்பலாம்.

 

வாய்ப்புகள் எங்கே: மொழிபெயர்ப்புக்கான வாய்ப்புகள் எங்கெங்கு எந்தெந்தத் துறைகளில் உள்ளன என்று பலருக்குத்  தெரிவதில்லை. அதன் விசாலமான தளங்களை அறியும்போதுதான் அது மிகப்பெரும் கடல் என்பது புரியும். நூல்கள் மட்டுமின்றி, திரைப்படங்கள், காணொலிகள், அரசு அலுவலக ஆவணங்கள், வலைதளங்கள் உள்ளிட்ட பல்வேறு தளங்களில் மொழிபெயர்ப்புக்கான தேவை உள்ளது.

 

யூடியூப் சேனல்கள்: காட்சி ஊடகம் வளர்ந்து வரும் இக்காலக் கட்டத்தில், யூடியூபில் பல்வேறு  காணொலிக் காட்சிகள் பதிவேற்றம் செய்யப்படுகின்றன.  அவற்றுள் பொதுப்பயன்பாட்டு உரிமை வழங்கப்பட்டுள்ள (cc) காணொலிகளும் உள்ளன. அவற்றை மொழிபெயர்த்து-அதாவது சப்டைட்டில் இட்டு வெளியிடலாம். அரபியில், ஆங்கிலத்தில் பயனுள்ள பல்வேறு காணொலிகள் வெளியிடப்படுகின்றன. அவற்றை மொழிபெயர்க்க வேண்டிய தேவை உள்ளது.

 

வலைதளங்கள்: பெரும் பெரு நிறுவனங்கள் தங்கள் வலைப்பக்கத்தைப் பிறமொழிக்காரர்கள் படிக்கும் வகையில் மொழிபெயர்த்து வெளியிட வேண்டிய தேவை உள்ளது. ஒவ்வொரு நாளும் புதிய புதிய செய்திகளைப் பதிவேற்றம் செய்யக்கூடிய நிறுவனங்கள் அவற்றைப் பிறமொழிகளில் வெளியிட வேண்டியது உள்ளது. எனவே அங்கும் மொழிபெயர்ப்பாளர் தேவைப்படுகிறார்.

 

ஆவணங்கள்: இந்திய நாட்டின் தேசிய மொழிகளாக 22 மொழிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. நாடாளுமன்ற நடவடிக்கைகள், நீதிமன்றத் தீர்ப்புகள் உள்ளிட்ட அரசு ஆவணங்கள் 22 மொழிகளிலும் மொழிபெயர்க்கப்படுகின்றன. அங்கும் மொழிபெயர்ப்பாளர் தேவைப்படுகிறார்.

 

இயந்திர மொழிபெயர்ப்பு: மொழிபெயர்ப்புப் பணியைச் செய்யத்தான் கூகுள் உள்ளதே? நாம் ஏன்  செய்ய வேண்டும்? என்று கேட்போர் உண்டு. இயந்திரம் மனிதனைப் போல் உணர்வுகளைப் புரிந்துஇடத்திற்கேற்றார்போல் செய்வதில்லை. ஏற்கெனவே உருவாக்கப்பட்ட நிரல் அடிப்படையில்தான் அது மொழிபெயர்க்கும். மனிதர்கள் அவ்வாறில்லை. எதை மொழிபெயர்க்க வேண்டும்எதைச் செய்யக்கூடாது என்று  புரிந்து செய்வதோடு, மனித உணர்வுகளை உணர்ந்து செய்வார்கள். இயந்திரம் செய்வது மொழிபெயர்ப்பு; சிறந்த மொழிபெயர்ப்பாளர் செய்வதோ மொழியாக்கம் ஆகும். இரண்டுக்கும் என்ன வித்தியாசம் என்றால், வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்த்தல் இயந்திரம் செய்யக்கூடியது. வார்த்தைகளை விளங்கி அதன் கருத்தை அந்த மொழிக்கேற்ற இலக்கண விதிகளுடன் கொண்டு வருவது மொழியாக்கம் ஆகும். 

 

இயந்திரம் செய்யக்கூடிய மொழிபெயர்ப்புக்குச் சான்றாகச் சிலவற்றைக் கூறலாம். அரபுக் கட்டுரையை மொழிபெயர்க்கும்போது அபுல் ஹஸன் என்ற அரபி வார்த்தை இடம்பெற்றால், அதை ஆங்கிலத்தில் ஃபாதர் ஆஃப் ஹஸன் (Father of Hasan) என்று மொழிபெயர்த்துவிடும். தமிழ்க் கட்டுரையை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும்போது கல்யாண ராமன் என்ற தமிழ்ப்பெயரை மேரேஜ் ராமன் (Marriage Raman) என்று மொழிபெயர்த்துவிடும். இவ்விரண்டும் மனிதர்களுக்குச் சூட்டப்பட்டுள்ள பெயர்கள்; அவற்றை மொழிபெயர்க்கக்கூடாது என்று இயந்திரத்திற்குத் தெரியாது. இவை போன்ற பல்வேறு குளறுபடிகள் இயந்திர மொழிபெயர்ப்பில் நிகழும். எனவே அதை முழுமையாக நம்ப முடியாது.

 

மொழிபெயர்ப்பு நிறுவனங்கள்: மொழிபெயர்ப்புச் செய்வதற்கென்றே பல்வேறு நிறுவனங்கள் பெரும் பெரு நகரங்களில் செயல்பட்டுவருகின்றன. அந்நிறுவனங்கள் அயல்நாடுகளிலிருந்து திட்டப்பணிகளைப் பெற்று, இங்குள்ள மொழிபெயர்ப்பாளர்களிடம் கொடுத்து, மொழிபெயர்ப்புச் செய்து ஒப்படைக்கின்றன.  இதுபோன்ற நிறுவனங்களுக்கு மொழிபெயர்ப்பாளர்கள் தேவைப்படுகின்றார்கள்.

 

இஸ்லாமிய மொழிபெயர்ப்பு நிறுவனங்கள்: இஸ்லாமிய மூலாதார நூல்களை மொழிபெயர்ப்பதற்காகத்  தமிழ்நாட்டில் முதன்முதலாக உருவாக்கப்பட்ட நிறுவனம் ரஹ்மத் பதிப்பகம் ஆகும். இது புகாரீ, முஸ்லிம், திர்மிதீ, அபூதாவூத், நஸாயீ, இப்னுமாஜா ஆகிய அறுபெரும் நபிமொழித் தொகுப்பு நூல்களையும், உலகப் புகழ்பெற்ற திருக்குர்ஆன் விரிவுரையான தஃப்சீர் இப்னு கஸீரையும் (பத்துப் பாகங்கள்) வெளியிட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் செயல்பாடுகளைப் பார்த்து, தாமும் நன்மையைப் பெற வேண்டுமென்ற நன்னோக்கத்தில் பல்வேறு நிறுவனங்கள் உருவாகின. அவையும் தம் பங்கிற்கு இஸ்லாமிய நூல்களை வெளியிடத் தொடங்கின. ஆயிஷா பதிப்பகத்தின் மூலம் அல்பிதாயா வந்நிஹாயா எனும் வரலாற்று நூல் தமிழில் வெளிவந்தது. ஆலிம் பப்ளிகேஷன்ஸ் முஸ்னது அஹ்மத் நூலைத் தமிழில் வெளியிட்டது. கலாம் பதிப்பகம் ஜாமிஉஸ் ஸுன்னா எனும் நபிமொழித் தொகுப்பு நூலை வெளியிட்டது. அப்துல்லாஹ் பப்ளிகேஷன்ஸ் மஆலிமுஸ் ஸுன்னா எனும் நபிமொழித் தொகுப்பு நூலை வெளியிட்டு வருகிறது. ஒரு முஸ்லிம் இவற்றைப் படிக்கத் தொடங்கினால் தம் வாழ்நாள் முழுவதும் படித்துக்கொண்டே இருக்கலாம். அவ்வளவு நூல்களை இப்பதிப்பகங்கள் வெளியிட்டுள்ளன.

 

மிக வேகமாக வளர்ந்து வரும் மொழிபெயர்ப்புத் துறை, தலைசிறந்த முஸ்லிம் மொழிபெயர்ப்பாளர்கள் இன்றித் தேங்கி நிற்கிறது. வேலைவாய்ப்பு விசாலமாக இருந்தும், இத்துறையில் ஆர்வம் செலுத்துவோர்  மிகக் குறைவாகவே உள்ளனர். எனவே எதிர்காலத்தில் முஸ்லிம் மொழிபெயர்ப்பாளர்களின் பற்றாக்குறையை நீக்க, அரபுக் கல்லூரிகள் மொழிபெயர்ப்புக்கென்றே தனித் துறையை ஏற்படுத்தி, அதில் மாணவர்களுக்குப் பயிற்சி கொடுத்து மொழிபெயர்ப்பாளர்களை உருவாக்க வேண்டும் என்று பேராசிரியரும் தலைமை மொழிபெயர்ப்பாளருமான மௌலவி அ. முஹம்மது கான் பாகவி கூறுகிறார். அதையே நானும் வழிமொழிகிறேன். மொழிபெயர்ப்புத் துறை வளர்ந்து வரும் இக்காலத்தில் அரபுக் கல்லூரிகள் அதைச் செய்வது காலத்தின் கட்டாயமாகும்.

---------------------