சனி, 22 ஜூலை, 2017

இணைக்கப்பட்ட மின்கம்பிகளாக இருப்போம்!


உ.பி., உத்தரகாண்ட் உள்ளிட்ட நான்கு மாநிலங்களில் பாக ஆட்சி அமைத்துள்ளதோடு தற்போது பாக ஆதரவு பெற்ற குடியரசுத் தலைவரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால் முஸ்லிம்கள் ஓர் அச்சநிலையில் வாழ்வதாகச் செய்திகள் பரவி வருகின்றன; பரப்பப்படுகின்றன. ஆனால் முஸ்லிம்கள் அச்சப்படத் தேவையில்லை. பிரித்தாளும் சூழ்ச்சியால் ஆட்சியைப் பிடித்தவர்களுக்கு எதிராக அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்வான் என்பதை முஸ்லிம்களாகிய நாம் மறந்துவிட வேண்டாம்.

நம்முள் பலர் அல்லாஹ்வை உரிய முறையில் நினைவுகூராமல் மறந்துவிட்டதன் காரணமாக இது நமக்கொரு சோதனையாக இருக்கலாம். மக்கள் அநியாயம் செய்யும்போது அநீதியான ஆட்சியாளர்களால் அல்லாஹ் நம்மைச் சோதிப்பான். அதேநேரத்தில் அச்சோதனையிலிருந்து மீள்வதற்கான வழியையும் அவன் சொல்லித் தந்துள்ளான்.

முஸ்லிம்களாகிய நாம் அல்லாஹ்வை மனத்தில்கொண்டு எந்நேரமும் அவனை நினைத்துக்கொண்டே இருந்தால் நம்மை எதிர்க்கவோ அச்சுறுத்தவோ யாராலும் முடியாது. நாம் அல்லாஹ்வுடன் தொடர்புகொண்டோராக இருக்கும்போது மின்சாரத்துடன் இணைக்கப்பட்ட மின்கம்பிகளாக மாறிவிடுகின்றோம். எனவே மின்சாரத்தில் இணைக்கப்பட்ட கம்பிகளாக உள்ள நம்மை எதிரிகள் தீண்டுவதற்கு அஞ்சுவார்கள். அத்தகைய அச்சத்தை அவர்களின் உள்ளத்தில் அல்லாஹ் போட்டுவிடுவான்.

“அவர்களுடைய பசிக்கு உணவளித்து (கொலை, களவு முதலிய கொடிய) பயத்திலிருந்து அவர்களுக்கு அபயமளித்த (கஅபா எனும்) இவ்வீட்டின் இறைவனையே அவர்கள்  வணங்கட்டும்”  (106: 3-4) என்று அல்லாஹ் கூறுகின்றான். நாம் அல்லாஹ்வுடன் தொடர்புடைய நல்லடியார்களாக இருக்கும் வரை அவன் நம்மைப் பசியிலிருந்தும் பயத்திலிருந்தும் பாதுகாத்துக்கொண்டே இருப்பான்.

எதிரிகளெல்லாம் ஒன்றுசேர்ந்து ஒரு பெரும் படையினராக நமக்குக் காட்சியளிக்கலாம். ஆனால் அவர்களின் உள்ளங்களில் கருத்து வேறுபாடுகளை ஏற்படுத்தித் தனித்தனியாகப் பிரித்துவிடும் பேராற்றலுடையவன்தான் உயர்ந்தோன் அல்லாஹ். அது குறித்துத் திருக்குர்ஆனில் அல்லாஹ் கூறுவது நமக்கு ஆறுதலாக இருக்கிறது. “அவர்கள் அனைவரும் ஒன்றுபட்டிருப்பதாக நீங்கள் எண்ணுகின்றீர்கள். (அன்று!) அவர்களுடைய உள்ளங்கள் (கருத்து வேறுபாடுகளால்) சிதறிக்கிடக்கின்றன.” (59: 14) இதை  நினைவில் கொண்டு அச்சமற்று வாழ்வோம். நடப்பவை யாவும் நலமாகவே அமையும் என நம்புவோம். அல்லாஹ்வைத் தொழுது அவனிடமே உதவி தேடுவோம். பசியோ பட்டினியோ பயமோ எதுவும் நம்மை அண்டாமல் பாதுகாப்பவன் அந்த அல்லாஹ் ஒருவனே என்பதை நினைவில் நிறுத்தி நிம்மதியாக வாழ்வோம்.

-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி

புதன், 19 ஜூலை, 2017

பிலால் பணிக்குப் பயிற்சிப் பட்டறை தேவைமருத்துவருக்குத் துணையாகப் பணியாற்றும் கம்மவுண்ட்டர், நர்ஸ் ஆகியோருக்குக் குறிப்பிட்ட படிப்பும் பயிற்சியும் இருப்பதைப்போல் பள்ளிவாசலில் பணியாற்றும் இமாமுக்குத் துணையாகப் பணியாற்றுகின்ற பிலாலுக்கு (முஅத்தின், மோதினார்) இஸ்லாமியச் சமுதாயத்தில் எந்தப் படிப்பும் பயிற்சியும் வழங்கப்படுவதில்லை. இதனால் யார் வேண்டுமானாலும் பிலால் ஆகலாம் என்ற நிலையே இதுநாள் வரை இருந்துவருகிறது.

“யார் வேண்டுமானாலும் பிலால் ஆகலாம்” என்ற நிலை இருப்பதால்தான் இன்று தமிழ்நாட்டில் பிலால் பணிக்கு ஆள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. முந்தைய காலத்தில் எல்லோரும் இஸ்லாமிய மார்க்கத்தைப் படித்தனர்; எல்லாவற்றையும் தெரிந்துவைத்திருந்தனர். அதனால் ஆர்வமுள்ளோர் பிலாலாகப் பணியில் சேர்ந்துகொண்டனர். ஆனால் தற்காலத்தில் அந்தந்தப் பணிக்கு உரியதை மட்டுமே அவரவர் படிக்கின்றனர். அதனால்தான் பிலால் பணிக்குத் தமிழ்நாட்டில் பற்றாக்குறை உள்ளது.

எனவே இக்குறையை நீக்க பிலால் பணிக்கு விருப்பமுள்ளோருக்கு உரிய பயிற்சி கொடுக்கப்பட்டுச் சான்றிதழ் வழங்கப்பட வேண்டும். சான்றிதழ் உள்ளோரை மட்டுமே பணி நியமனம் செய்ய வேண்டும். இவ்வாறு பயிற்சி வழங்கப்பட்டால் தகுதியான ஆள்களை நம் தமிழகத்திலிருந்தே உருவாக்கிக்கொள்ளலாம். இதற்கான பயிற்சியை அரபுக் கல்லூரிகளே வழங்க முன்வர வேண்டும்.

பிலால் பணிக்கு உரிய மரியாதையும் தக்க சம்பளமும் வழங்கப்பட்டால் நம் தமிழகத்திலிருந்தே அதற்குரிய ஆள்களை நாம் நியமித்துக் கொள்ளலாம். இல்லையேல் இப்பணிக்கு வடமாநிலங்களிலிருந்துதான் ஆள்களை இறக்குமதி செய்ய வேண்டும்.

-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி
=========================

செவ்வாய், 18 ஜூலை, 2017

இறைநம்பிக்கையை வலுப்படுத்திக்கொள்வோம்!


-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

இந்திய அளவிலும் உலக அளவிலும் முஸ்லிம்களுக்கு எதிராக உருவாக்கப்பட்டுள்ள அச்சவுணர்வைக் கண்டு பலர் பீதியில் உறைந்துள்ளனர்; வெளியே தனியாகச் செல்ல அஞ்சுகின்றனர்.  ஆனால் இத்தகைய நிலை குறித்து முஸ்லிம்கள் யாரும் அஞ்சவோ பீதியடையவோ தேவையில்லை. இது முஸ்லிம்களுக்கு எதிராக உருவாக்கப்பட்டுள்ள செயற்கையான சூழ்நிலைதான்.

முஸ்லிம்கள் என்ற பெயரைக் கேட்டவுடனே பிற சமுதாய மக்கள் மனங்களில் அவர்களைப் பற்றிய கசப்பான உணர்வு ஏற்பட எதிரிகள் செய்துவருகின்ற செயற்கையான சூழ்ச்சி வலை இது.  மாட்டுக்கறி என்றோ, தீவிரவாதி என்றோ எதையாவது சொல்லி அவர்களை அடித்தால் பொதுமக்கள் கண்டுகொள்ளாத மனிதாபிமானமற்ற சூழ்நிலையை உண்டாக்கி வைத்துள்ளார்கள்.  இதைக் கண்டு முஸ்லிம்கள் கலக்கமுறத் தேவையில்லை. ஷைத்தானின் சித்துவிளையாட்டுகளுள் இதுவும் ஒன்று.
இத்தகைய சூழ்ச்சி வலை பின்னப்பட்டுள்ள இத்தருணத்தில் முஸ்லிம்களாகிய நாம் அனைவரும் இறைநம்பிக்கையை வளர்த்துக்கொண்டு இறையச்ச உணர்வை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். அசைக்க முடியாத இறைநம்பிக்கை ஒன்றுதான் எதையும் கண்டு கலக்கமடையாத மனப்பான்மையை உருவாக்கும். அது ஒன்றே இறைவனுக்கு மட்டும் அஞ்ச வேண்டிய அவசியத்தைத் தெளிவாக்கும்.  அவனுக்கு மட்டுமே அஞ்சுவோர் யாருக்கும் அஞ்சத் தேவையில்லை என்பதை உணர்த்தும்.

அதனால்தான் நபி (ஸல்) அவர்கள் தம்மோடு பயணம் செய்த சிறுவரான அனஸ் (ரளி) அவர்களைப் பார்த்து, இவ்வாறு அறிவுரை நல்கினார்கள்: 
நான் ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பின்னால் (வாகனத்தில் அமர்ந்து) இருந்தேன். அப்போது அவர்கள், "சிறுவனே! நான் உனக்குச் சில விஷயங்களைக் கற்றுத் தருகிறேன். (அவற்றை நீ நினைவில் வைத்துக்கொள்.) நீ அல்லாஹ்(வின் உத்தர)வைப் பேணிக்காத்திடு. அவன் உன்னைப் பேணிக் காப்பான். நீ அல்லாஹ்வை (அவனுடைய கடமைகளை)ப் பேணி நடந்துகொள்.  அவனை உனக்கு முன்பாக நீ காண்பாய். நீ யாசித்தால் அல்லாஹ்விடமே யாசிப்பாயாக. உதவி கோரினால் அல்லாஹ்விடமே உதவி கோருவாயாக.
அறிந்துகொள்! உனக்கு நன்மை செய்ய ஒட்டுமொத்தச் சமுதாயமும் ஒன்றுசேர்ந்தாலும் உனக்கென அல்லாஹ் எதை எழுதிவிட்டானோ அதைத் தவிர வேறெந்த நன்மையையும் அவர்களால் உனக்குச் செய்ய இயலாது. (அவ்வாறே) உனக்கு ஏதேனும் தீங்கிழைக்க அவர்கள் அனைவரும் ஒன்றுதிரண்டாலும் உனக்கெதிராக அல்லாஹ் எதை எழுதிவிட்டானோ அதைத் தவிர வேறெந்தத் தீங்கும் அவர்களால் உனக்கு இழைத்திட இயலாது. (விதி எழுதிய) பேனாக்கள் உயர்த்தப்பட்டுவிட்டன. (விதி எழுதப்பெற்ற) ஏடுகள் உலர்ந்துவிட்டன'' என்று கூறினார்கள்.   (நூல்: திர்மிதீ: 2440)

 ஒரு மனிதன் தன் இறைநம்பிக்கையை வலுப்படுத்திக்கொள்ளத் தேவையான எல்லா அறிவுரைகளும் இந்த நபிமொழியில் உள்ளன. அல்லாஹ்வின் கடமைகளைச் செவ்வனே நிறைவேற்றுவதன்மூலம் அவனை நாம் நம் மனத்தில் பாதுகாத்தால் அவன் நம்மைப் பாதுகாப்பான் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையை இளநெஞ்சில் விதைக்கின்றார்கள். எப்போது உதவி கேட்டாலும் அல்லாஹ்விடமே உதவி கேட்க வேண்டும் என்பதையும் ஆழமாகப் பதியச் செய்கிறார்கள். இவ்வுலகமே சேர்ந்து நமக்கு எதிராகச் சூழ்ச்சி செய்தாலும், அல்லாஹ் விதிக்காத தீமையை அவர்கள் ஒருபோதும் நமக்குச் செய்துவிட முடியாது என்ற திடமான நம்பிக்கையை வளர்க்கின்றார்கள். எல்லாமே எழுதப்பட்டுவிட்டது. அதன்படியே நடப்பவை யாவும் நடக்கும். இனி கவலைப்பட ஒன்றும் இல்லை என்பதை உணர்த்துகிறார்கள்.

ஆகவே முஸ்லிம்களே, நாம் கவலைப்படவோ கலக்கமுறவோ ஒன்றும் இல்லை. நடப்பவை எல்லாம் நல்லவையாகவே நடக்கும் என்ற திடமான இறைநம்பிக்கையே நம்மைக் காத்துக்கொள்ளும் கேடயமாகும். கொஞ்சம் கொஞ்சமாக நம் அடையாளத்தை மாற்றிக்கொள்ள நம் மனத்தை மாற்றும் வேலைதான் இப்போது நடந்துகொண்டிருக்கிறது. நாம் நம்முடைய புற அடையாளத்தை மாற்றிக்கொள்ள முனைந்துவிட்டால் அக அடையாளமான இறைநம்பிக்கையையும் (ஈமானையும்) தளர்த்திக்கொள்ள முனைந்துவிட்டோம் என்று பொருள். எனவே எவ்வளவுதான் சோதனை வந்தாலும் புற அடையாளத்தையும் அக அடையாளத்தையும் இழந்துவிடவே கூடாது.

முந்நூற்றுப் பதின்மூன்று பேர் ஆயிரம் பேரை வெற்றிகொள்ள உதவிய உயர்ந்தோன் அல்லாஹ் நமக்கு உதவமாட்டானா? ஆயிரம் பேரை எதிர்க்கும் வீரமும் பலமும் எங்கிருந்து அவர்களுக்கு வந்தது? அவர்களுடைய இறைநம்பிக்கையின் ஆழமும் அழுத்தமும்தான் காரணம். பன்னிரண்டு ஆண்டுக்கால ஆட்சியில் பல்வேறு மன்னர்களை எதிர்த்து, வெற்றிகொண்டு இஸ்லாமிய மார்க்கத்தைப் பரப்பும் துணிவு உமர் (ரளி) அவர்களுக்கு எவ்வாறு வந்தது? அசைக்க முடியாத இறைநம்பிக்கையின் பலம் அல்லவா?

இப்படிப் பல்வேறு இறைநம்பிக்கையாளர்களைச் சான்றாகக் காட்டிக்கொண்டே செல்லலாம். இஸ்லாமிய வரலாறு நெடுக அசைக்க முடியாத இறைநம்பிக்கையை மனத்தில் கொண்டவர்கள் மட்டுமே வெற்றிகண்டுள்ளார்கள் என்பதைச் சொல்லவும் வேண்டுமா? ஆகவே இவர்களுடைய சூழ்ச்சியைக் கண்டு கலங்காத மனம் கொண்டவர்களாகத் திகழ வேண்டுமானால் அது நம்முடைய அசைக்க முடியாத இறைநம்பிக்கையால் மட்டுமே முடியும். எனவே அதை வளர்த்துக்கொள்வதற்கான முயற்சியில் மட்டுமே நாம் கவனம் செலுத்த வேண்டும்.

எதிரிகளின் செயல்பாடுகளைக் கண்டு அச்சமடையத் தேவையில்லை. அது ஷைத்தானின் சூழ்ச்சி வலைகளுள் ஒன்றாகும். நம்முடைய இறைநம்பிக்கையைச் சிதைப்பதற்காக அவன் ஏவிவிடும் அடியாட்கள்தாம் அவர்கள். நம்மை இப்போது மோடி ஆளவில்லை. மோடியை ஆள்பவர்கள் யூதர்கள்.  அவர்கள்தாம் உலகம் முழுவதையும் ஆட்டிப் படைக்கின்றார்கள். அவர்களை ஆட்டிப் படைப்பவன்தான் அவர்கள் கடவுளாக வழிபடும் ஷைத்தான். ஆம், அவர்கள் ஷைத்தானைத்தான் வழிபடுகின்றார்கள். அவன்தான் அவர்களின் கடவுள். அவர்கள் ஒற்றைக் கண்ணனான தஜ்ஜாலை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றார்கள். அமெரிக்காவின் பணத்தில் பொறிக்கப்பட்டுள்ள பிரமிட் படத்தின் மேலே பாருங்கள் ஒற்றைக் கண் தெரியும். அதுதான் அவர்கள் எதிர்பார்த்து வழிபட்டுக்கொண்டுள்ள ஒற்றைக் கண்ணன் தஜ்ஜால். அந்த மனித ஷைத்தானைத்தான் அவர்கள் வழிபட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

எனவே நாம் அல்லாஹ்வுக்கு உதவி செய்தால் அவன் நமக்கு நிச்சயம் உதவி செய்வான். நாம்  அல்லாஹ்வுக்கு எவ்வாறு உதவி செய்வது? அவனுடைய கடமைகளைச் செவ்வனே நிறைவேற்றுவதுதான் நாம் அவனுக்குச் செய்யும் உதவியாகும். அக்கடமைகளுள் முதலாவது தொழுகையாகும். ஒவ்வொரு தடவை பாங்கு சொல்லப்படும்போதும் அதைக் காதில் கேட்காதவர்களைப்போல் நாம் அலட்சியப்படுத்துகிறோமே அதனால்தான் அல்லாஹ் இத்தகைய சோதனையை நம்மீது சாட்டியுள்ளான். நாம் அவன்மீதே நம்பிக்கை வைத்து அவனை மட்டும் வழிபட்டு வந்தால் நிச்சயமாக அவன் நம் எதிரிகளை எதிர்கொள்ளும் ஆற்றலை நமக்கு வழங்கி உதவி செய்வான் என்பது திண்ணம்.
திருக்குர்ஆனில் அல்லாஹ் கூறுவதைப் பாருங்கள்: தனக்கு உதவி செய்வோருக்கு அல்லாஹ்வும் நிச்சயமாக உதவுவான். நிச்சயமாக அல்லாஹ் ஆற்றல் உடையோனும் வல்லமை மிக்கோனும் ஆவான்.  பூமியில் அவர்களுக்கு நாம் வாய்ப்பை வழங்கினால் அவர்கள் தொழுகையைக் கடைப்பிடிப்பார்கள்... (22: 40-41)

அவன்மீதே நம்பிக்கை கொள்ள வேண்டும் என்றும் அவன்மீதே பொறுப்பை ஒப்படைக்க வேண்டும் என்றும் அல்லாஹ் பல இடங்களில் கூறுகின்றான்:

(இறைநம்பிக்கை கொண்டோரே!) அல்லாஹ் உங்களுக்கு உதவி புரிந்தால் உங்களை வெற்றி கொள்பவர்கள் ஒருவருமில்லை. உங்களை அவன் (கை) விட்டு விட்டாலோ அதற்குப் பின்னர் உங்களுக்கு யார்தாம் உதவி செய்ய முடியும்? ஆதலால், அல்லாஹ்வின் மீதே நம்பிக்கையாளர்கள் நம்பிக்கை கொள்ளட்டும். (3: 160)

 அவன்மீதே நம்பிக்கை வைத்திருப்பதற்கான அடையாளம்தான் தொழுகை. அதைச் செவ்வனே நாம் நிறைவேற்றினால்தான் அவனது உதவி நமக்குக் கிடைக்கும். அவனது உதவி கிடைத்துவிட்டால் நம்மை அச்சுறுத்தவோ வெல்லவோ யாருமில்லை. ஆகவே நம்பிக்கையை அவன்மீதே வைக்க வேண்டும். சுட்டெரிக்கின்ற சூரியக் கதிர்கள் காகிதத்தை எரித்துவிடுவதில்லை. அதேநேரத்தில் அந்தக் கதிர்களை ஒரு புள்ளியில் குவிக்கின்ற குவியாடி (லென்ஸ்) அந்தக் காகிதத்தைப் பொசுக்கிவிடுகிறது. அதுபோலவே இங்கு கொஞ்சம், அங்கு கொஞ்சம், பொருளாதாரத்தில் கொஞ்சம், வியாபாரத்தில் கொஞ்சம் என நம்முடைய நம்பிக்கை பலவற்றின்மீதும் சிதறிக் கிடக்கிறது. அவற்றையெல்லாம் குவித்து அல்லாஹ் ஒருவன்மீதான நம்பிக்கையாக நம் உள்ளத்தை மாற்றிவிட்டால் அவ்வுள்ளம் எதையும் எதிர்கொள்ளும் ஆற்றல்மிக்கதாக மாறிப்போகும். அதன்பின்னர் யாரும் நம்மை அச்சமூட்டவோ அச்சுறுத்தவோ முடியாது. மேலும் இறையச்சம் மட்டுமே நம் உள்ளம் முழுவதும் பரவியிருக்கும்போது வேறு எந்த அச்சமும் நம் உள்ளத்தில் தோன்றாது. 

எனவே அன்பான முஸ்லிம் சகோதர, சகோதரிகளே! நாம் அனைவரும் நம் நம்பிக்கையை ஒருமுகப்படுத்தி வலுப்படுத்த வேண்டும். அந்த இறைநம்பிக்கை ஒன்றுதான் நாம் வாழும் இம்மை-மறுமை வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றிக்கொள்வதற்கான வழியாகும். அதுதான் தற்காலத்தில் நிகழ்ந்துகொண்டிருக்கிற நமக்கெதிரான அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கான மாற்று மருந்தாகும். ஆகவே நம் இறைநம்பிக்கையைச் செம்மைப்படுத்திக்கொண்டு, இறையச்சத்தோடு வாழ்ந்தால் நாம் பயமோ அச்சமோ இன்றி இவ்வுலகில் வாழலாம். அத்தகைய முயற்சியை மேற்கொள்ள நாம் அனைவரும் விரைவோம்.
===============================
திங்கள், 17 ஜூலை, 2017

முனைவர் பட்டம் பெற்றபோது...

சென்னைப் பல்கலைக்கழகத்தில் 15 07 2017 அன்று நடைபெற்ற 159ஆவது பட்டமளிப்பு விழாவில் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் துரைசாமி அவர்களிடமிருந்து நான் முனைவர் பட்டம் பெற்றபோது...

-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.


ஞாயிறு, 2 ஜூலை, 2017

நோன்பு என்னை மாற்றியதா?

முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

இறைவனின் உவப்பையும் திருப்தியையும் நாடி ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்றோம். சுவையான உணவிருந்தும் உண்ணாமல் மனதிற்குப் பிடித்த குளிர்பானங்கள் இருந்தும் பருகாமல்  அழகான மனைவியிருந்தும் ஊடல் கொள்ளாமல் என் மனதைக் கட்டுப்படுத்தி, இறைவன் என்னைப் பார்த்துக்கொண்டிருக்கிறான் என்ற சிந்தையோடு நோன்பு நோற்ற நான் இனிவரும் காலங்களிலும்  என் மனதைக் கட்டுப்படுத்துவேனா? என்று நம்முள் ஒவ்வொருவரும் கேட்டுக்கொள்ள வேண்டும்.

நோன்பு என்பது ஒவ்வொரு மனிதனின் மனதையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளப் பழக்கப்படுத்துகின்ற பயிற்சிப் பட்டறை என்று சொல்கின்ற நாம் அந்தப் பயிற்சியில் முழுமையாக வெற்றிபெற்றோமா?
நோன்பு நோற்ற நிலையில் பொய், புறம் உள்ளிட்ட தீய பேச்சுகளைப் பேசாமல் நாவைக் கட்டுப்படுத்திய நான் இனிவரும் காலங்களிலும் அவ்வாறு கட்டுப்படுத்துவேனா?

அளவை நிறுவையில் குறைவு செய்யாமல் நேர்மையாக வியாபாரம் செய்த நான் இனி எப்போதும் அவ்வாறே செய்வேனா? அதையே என் இயல்பான பழக்கமாக மாற்றிக்கொள்வேனா? என்றெல்லாம்  நம்முள் ஒவ்வொருவரும் கேட்டுக்கொள்ள வேண்டும்.

ஒரு மனிதனின் கெட்ட பழக்கங்களெல்லாம் மாறுதலுக்கு உள்ளாகி அவன் நல்ல பழக்கங்களைக் கடைப்பிடிக்கத் தொடங்கிவிட்டால் உண்மையில் நோன்பு அவனுக்கு ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்று கருதலாம். ஏற்கெனவே தவறான வழியில் வியாபாரம் செய்தவன் தன்னைத் திருத்திக்கொண்டு நேர்மையாகப் பொருளீட்டத் தொடங்கிவிட்டால் இந்த நோன்பு அவனில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்திவிட்டது என்று சொல்லலாம். புறம் பேசுவதையும் பொய் பேசுவதையும் அறவே விட்டொழித்து வாய்மையை மட்டும் பேசத் தொடங்கிவிட்டால் நோன்பு கொடுத்த பயிற்சியில் தேர்ச்சி பெற்றுவிட்டான் என்று கூறலாம்.

இப்படியான எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லையானால் நாம் நோன்பைச் சரியாக நோற்கவில்லை என்றும், நம்முடைய நோன்புக்கு அல்லாஹ்விடமிருந்து முழுமையான நற்கூலி கிடைக்கவில்லை என்றும் நாம் தீர்மானித்துக்கொள்ள வேண்டியதுதான்.

ஒரு மாதம் முழுவதும் இறையச்சத்தோடு இருந்த நாம், அவன் தடுத்துள்ளவற்றைவிட்டுத் தவிர்ந்துகொள்கின்ற நாம், அந்த ஒரு மாதம் முடிந்தவுடன் மீண்டும் நம் பழைய நிலைக்கே திரும்பிவிடுவது எவ்வகையில் நியாயம்? அந்த ஒரு மாதம் மட்டும் அல்லாஹ் நம்மை உற்றுப் பார்ப்பதாகவும் பின்னர் நம்மைப் பார்க்காமல் கண்ணை மூடிக் கொள்வதாகவும் எண்ணமா? எந்த இறைவனுக்காக நாம் ஒரு மாதம் நோன்பு நோற்றோமோ அதே இறைவன்தான் எஞ்சிய காலங்களிலும் நம்மைப் பார்த்துக்கொண்டிருக்கிறான் என்பதை ஏன் மறந்தோம்? அந்த இறைவன் மன்னிப்பவனாக இருக்கின்ற அதேநேரத்தில் தண்டிப்பவனாகவும் இருக்கின்றான் என்பதை நாம் மறக்கலாமா?

ஒரு மாதம் முழுவதும் ஐவேளைத் தொழுகையைத் தவறவிடாமல் தொழுததோடு இரவுத்தொழுகை, உபரித்தொழுகையிலும் ஈடுபட்ட நாம் இதோ ஷவ்வால் பிறந்ததும் நம் கால்கள் மஸ்ஜிதை நோக்கிச் செல்ல மறுக்கின்றனவே ஏன்? ஒவ்வொரு நாளும் ஐவேளைத் தொழுகை கட்டாயக் கடமையல்லவா? நம்மைப் படைத்த இறைவனை ஒவ்வொரு நாளும் ஐவேளை தொழுக மறக்கலாமா? இதோ லுஹ்ர் தொழுகைக்கு பாங்கு சொல்லியாயிற்று. வாருங்கள், மஸ்ஜிதை நோக்கிச் செல்வோம்!
========================