வெள்ளி, 17 செப்டம்பர், 2021

இமாமும் முத்தவல்லியும் சமுதாயத்தின் இரு கண்கள்

 

-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

ஒரு பள்ளிவாசல் இமாமும் அப்பள்ளியின் முத்தவல்லியும் ஒரு மஹல்லாவின் இரண்டு கண்கள் என்றால் அது மிகையாகாது. ஒவ்வொரு பள்ளியின் இமாமும் முத்தவல்லியும் (பள்ளிவாசல் தலைவர்) ஒன்றாக, ஒரே நேர்க்கோட்டில் பயணித்தால், இணைந்து களப்பணியாற்றினால் அந்த மஹல்லா மக்கள் ஏற்றம் பெறவும் அவர்களின் வாழ்வில் மாற்றம் ஏற்படவும் வழியேற்படும் என்பது உறுதி.


கணக்கெடுப்பு: ஒரு மஹல்லாவின் பள்ளித்தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் ஒன்றிணைந்து ஆலோசனை செய்து, தம் மஹல்லாவில் சந்தா செலுத்துவோர், சந்தா செலுத்தாதோர், படித்துப் பட்டம் பெற்றோர், அரசுப் பணிசெய்வோர், ஆசிரியர்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், தொழிலதிபர்கள்ஸகாத் வழங்குவோர், ஸகாத் பெறத் தகுதியுடையோர் உள்ளிட்ட எல்லாவித விவரங்களையும் சேகரித்துப் பள்ளியில் வகைப்படுத்தி வைத்துக்கொள்ள வேண்டும். இந்தத் தகவல்கள்தாம் ஒரு மஹல்லாவின் முன்னேற்றத்திற்கு அடிப்படையாகும். இதை வைத்துக்கொண்டுதான் அடுத்தடுத்த சேவைகளைச் செய்ய முடியும். 


இந்தக் கணக்கெடுப்பிற்குப்பின் அந்த மஹல்லாவில் சந்தா செலுத்துவோர் அனைவருக்கும் ஓர் அடையாள அட்டை வழங்க வேண்டும். அந்த அட்டையில் சந்தா எண், வீட்டு முகவரி உள்ளிட்டவை இடம்பெற்றிருக்க வேண்டும். அடுத்தடுத்து அவர் பள்ளி நிர்வாகத்தைத் தொடர்புகொள்கிறபோது அந்த எண்ணை ஓர் அடையாளமாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அதாவது திருமணத்திற்காகத் தடையில்லாச் சான்றிதழ் (என்ஓசி), இறப்புச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்கள் பெறும்போது அந்த எண்ணைக் கூறினால் அவருடைய பெயரும் முகவரியும் தெரிந்துவிடும். ஒவ்வொரு தடவையும் அதைக் கொண்டுவா, இதைக் கொண்டுவா என்று கூறத் தேவையிருக்காது.


சந்தா எண் அடிப்படையில் ஒவ்வோர் ஆண்டும் சந்தா செலுத்தியோர், சந்தா செலுத்தாதோர் விவரங்களைப் பதிவு செய்துகொண்டு, கடந்த ஆண்டில் தொடர்ந்து சந்தா செலுத்தாதோரிடம்  நேரடியாகச் சென்று, சந்தா செலுத்தாத காரணத்தை அறிந்து, பொருளாதார நெருக்கடி என்றால் அதை ஏற்றுக்கொண்டு, அவருக்குப் பள்ளி நிர்வாகம் பொருளாதார உதவி செய்ய முன்வர வேண்டும். பொருளாதார நெருக்கடியின்றி, வேண்டுமென்றே சந்தா செலுத்தாமல் இருந்தால், சந்தா செலுத்துமாறு கூற வேண்டும். மீண்டும் அவ்வாறே தொடர்ந்தால் "மஹல்லாவாசிகள்' பட்டியலிலிருந்து அவரை நீக்கம் செய்துவிட வேண்டும்.


மாறாக ஆண்டுக்கொரு முறை சந்தா கணக்கெடுப்பைச் சரிசெய்யாமல், ஒருவர் தம் வீட்டில் திருமணம் என்றோ, மரணம் என்றோ வரும்போது அவரை உட்கார வைத்து, மொத்தமாக ஆயிரக்கணக்கில் சந்தா வசூலிக்கக்கூடாது. இது அவருக்கு மிகப்பெரும் பொருளாதாரச் சுமையை உண்டாக்கும். அதுவும் வீட்டில் மரணம் என்று சந்தூக் பெறுவதற்காக வரும்போது, அது அவருக்கு அடிமேல் அடியாக அமைந்துவிடும். சில மஹல்லாக்களில் இது தீர்க்க முடியாத சிக்கலாக நீடிப்பதைக் கேள்விப்படுகிறோம். இது முற்றிலும் களையப்பெற வேண்டும். 


நிதியுதவி: கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்டோர், சம்பாதிக்க எந்த ஆணும் இல்லாத பெண்கள், முதியோர் முதலானோரைக் கணக்கெடுத்து, அவர்களுக்குப் பொருளாதார உதவி தேவைப்பட்டால் மாதந்தோறும் குறிப்பிட்ட தொகையை வழங்குவது பள்ளி நிர்வாகம் செய்ய வேண்டிய முக்கியமான பணியாகும். ஒவ்வொரு பள்ளி நிர்வாகமும் இத்திட்டத்தைச் செயல்படுத்தத் தொடங்கிவிட்டால் நம் சமுதாயத்தில் யாசகர்கள் அருகிப் போய்விடுவார்கள். இதற்கான நிதியாதாரம் பெரும்பாலான பள்ளிகளில் இருக்கவே செய்கின்றது. போதிய நிதியாதாரம் இல்லாத பள்ளி நிர்வாகத்தார், இத்திட்டத்தைச் செயல்படுத்த, பள்ளியில் பொது அறிவிப்புச் செய்தால் போதும். செல்வர்கள் பலர் பொறுப்பேற்றுக் கொள்ளத் தயாராக இருக்கின்றார்கள். நல்ல திட்டங்களுக்குச் செலவழிக்க அவர்கள் எப்போதும் தயாராகவே இருந்து வருகிறார்கள் என்பது கடந்த காலம்தொட்டு இந்நாள் வரையுள்ள யதார்த்தமான உண்மையாகும்.


ஸகாத்தை முறைப்படுத்துதல்: ஸகாத் பெறத் தகுதியுடையோர் எத்தனை பேர், ஸகாத் கொடுப்போர் எத்தனை பேர் என்ற பட்டியல் பள்ளியில் இருந்தால் ஸகாத் கொடுப்போரிடமிருந்து ஸகாத்தை வசூல் செய்து ஸகாத் பெறத் தகுதியுடைய மஹல்லாவாழ் மக்களுக்குப் பள்ளி நிர்வாகமே வழங்கலாம். இதனால் குறிப்பிட்ட சிலருக்கு மீண்டும் மீண்டும் வழங்கப்படுவதும், வேறு சிலருக்கு அறவே கிடைக்காமல் போவதும் தடுக்கப்படும். 


கல்வி உதவித்தொகை: ஒவ்வொரு மஹல்லா நிர்வாகிகளும் ஒருங்கிணைந்து நன்றாகப் படிக்கின்ற, அதேநேரத்தில் கல்விக் கட்டணம் கட்ட முடியாமல் வறுமையில் தடுமாறுகிற பத்து மாணவர்களைத் தேர்ந்தெடுத்து குறிப்பிட்ட துறைகளில் படித்து, பட்டம்பெற கல்வி உதவித்தொகை வழங்கலாம். குறிப்பாக மருத்துவம், பொறியியல், ஊடகத்துறை, நீதித்துறை (வக்கீல்), கணிதத்துறை, பட்டயக் கணக்கு முதலான துறைகளில் படிக்க ஆர்வமூட்டலாம். அந்தப் பத்துப்பேர்களுள் இருவரோ மூவரோ மாணவிகளாக இருக்கலாம். இவ்வாறு ஒவ்வொரு மஹல்லா நிர்வாகமும் கல்வித்துறையில் மாணவர்களுக்கு ஊக்கமளித்தால் நம் சமுதாய இளைஞர்கள் எதிர்காலத்தில் நல்லதொரு முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைக்கத் தொடங்கிவிடுவார்கள்.  அது மட்டுமல்ல அவர்கள் நல்ல நிலைக்கு வந்து பலருக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நிலை ஏற்படும்.


பாலர் வகுப்புகள்: சிறுவர் சிறுமியர்க்கான பாலர் வகுப்புகள் (மக்தப் மத்ரஸா) ஒவ்வொரு பள்ளிவாசலிலும்  காலை மாலை நடைபெற பள்ளிவாசல் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது அவர்களின் தலையாயக் கடமையாகும். சிலருக்குக் காலை நேரம் வசதியாக இருக்கும். வேறு சிலருக்கு மாலை நேரம் வசதியாக இருக்கும். யாருக்கு எந்நேரம் வசதியாக இருக்கிறதோ அவர்கள் அந்த நேரத்தில் வந்து கற்றுக்கொள்ளலாம். தற்போது கொரோனா எனும் தொற்றுநோய் அச்சத்தில் உலக மக்கள் சிக்கவைக்கப்பட்டுள்ளதை அறிவோம். எனவே பாலர் வகுப்பு தடைபடாமல் இருக்க, ஆன்லைன் வழி வகுப்புகள் நடைபெற வழிவகை காண வேண்டும்.


அதை விடுத்து, நமக்கென்ன என்று வெறுமனே இருந்துவிடக்கூடாது. இதற்கான வழிவகை செய்யாமல் விட்டுவிட்டால் ஒரு தலைமுறையே திருக்குர்ஆனை ஓதத் தெரியாச் சமூகமாக மாறிவிடும். ஏற்கெனவே பல்வேறு சூழ்ச்சிகளால் முஸ்லிம் சிறார்களும் சிறுமியரும் குர்ஆன் ஓதக் கற்பதிலிருந்து பல்வேறு வழிகளில்  தடுக்கப்பட்டிருக்கின்றார்கள். இப்போது பாலர் வகுப்புக்கான தடை தொடர்ந்தால், கற்றுக்கொள்ள முனைகின்ற சிலரும் கற்க வாய்ப்பில்லாமல் போய்விடும். நூறு சதவிகிதம் ஒவ்வொரு மஹல்லாவிலும் திருக்குர்ஆனைப் பார்த்துப் படிக்கக் கற்றுக்கொள்வதை உறுதி செய்வது நிர்வாகத்தின் கடமையாகும்.


முதியோர் கல்வி: எத்தனையோ பேர் தம் இளம் பிராயத்தில் குர்ஆன் குறித்த புரிதல் இல்லாமல்  அதன் முக்கியத்துவம் உணராமல், ஓதக் கற்றுக்கொள்ளாமல் விட்டுவிட்டனர். முதுமையை அடைந்த அவர்கள் இப்போதாவது திருக்குர்ஆனை ஓதக் கற்றுக்கொள்ளலாமே என்று ஆர்வம்கொள்கின்றனர்.


அவர்களுக்கென ஒரு குறிப்பிட்ட நேரத்தில் முதியோர் வகுப்பு தொடங்கப்பட்டால் முதியோர் பலர் அதன்மூலம் பயன்பெறுவார்கள். மேலும் தம் முதுமையைப் பயனுள்ள வழியில் கழிக்க இது ஒரு நல்வாய்ப்பாக அமையும். அதேநேரத்தில் அவர்களுக்குக் கற்றுக்கொடுக்கும் உஸ்தாதாக அவர்களின் வயதொத்த ஒருவரை நியமித்தால் மனச் சங்கடமின்றிக் கற்றுக்கொள்வார்கள்.


மகளிர் மேம்பாடு: பெண்களின் கல்விக்கென கற்றறிந்த ஆலிமாக்களை நியமிப்பதும் வாரந்தோறும்  பெண்கள் பயான் ஏற்பாடு செய்வதும் இளம்பெண்களுக்கெனத் தனி வகுப்புகள் நடத்த அவர்களுக்கான ஷரீஅத் சட்டங்களை விளக்கிக் கூறும் வகையில் ஆலிமாக்களை நியமிப்பதும் பள்ளி நிர்வாகம் மேற்கொள்ள  வேண்டிய பணிகளாகும். 


இச்சமுதாயத்திற்குச் செய்ய வேண்டிய இன்னும் எத்தனையெத்தனையோ பணிகளும் தொண்டுகளும் உள்ளன. அவற்றையெல்லாம் தொகுத்து எழுதினால் தனி ஒரு நூலே உருவாகிவிடும். அந்தந்த மஹல்லாவின் பொருளாதார வசதிக்கேற்பவும் தேவைகளுக்கேற்பவும் அவரவர் தொண்டுகள் செய்வதும் சேவையாற்றுவதும் தற்காலத்தில் மிக மிக அவசியமாகும்.


ஒருவர் தம் மஹல்லாவின் முத்தவல்லியாக இருந்துகொண்டு, இமாமுக்கும் முஅத்தினுக்கும் சம்பளம் கொடுப்பதும் அவர்கள்மீது தமது சீற்றத்தைப் பாய்ச்சுவதும் தவிர, மஹல்லா முன்னேற்றத்திற்காக எதையுமே செய்யவில்லையெனில் அல்லது எத்தொண்டும் செய்ய ஆர்வமில்லையெனில் அவர் தம் பொறுப்பைத் தகுதியான ஒருவருக்கு விட்டுக்கொடுத்துவிட்டுதம் பதவியிலிருந்து ஒதுங்கிக்கொள்வது நல்லது. ஏனெனில், "உங்களுள் ஒவ்வொருவரும் பொறுப்பாளி; உங்களுள் ஒவ்வொருவரும் தத்தமது பொறுப்பைப் பற்றி விசாரிக்கப்படுவார்'' (புகாரீ:  893) என்ற நபிமொழிசமுதாயப் பொறுப்பு வகிக்கின்ற ஒவ்வொருவரையும் எச்சரிக்கிறது என்பதை நினைவில் கொள்வோம்; நம் பொறுப்பைச் செவ்வனே நிறைவேற்றுவோம்.

================


சனி, 11 செப்டம்பர், 2021

நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழ்

 Dr. A.P. முகமது அலி IPS (R) அவர்கள் எழுதிய

இளைஞனே உன் இலக்கு என்ன?

நூல் வெளியீட்டு விழா

 

நாள்: 12.09.2021 ஞாயிறு  நேரம்: மாலை 7 மணியளவில் இன் ஷாஅல்லாஹ்

இடம்: சென்னை பேலஸ், எண்: 107 (பு.எண்: 221) மூக்கர் நல்லமுத்து தெரு முனை, (சென்ட்ரல் பேங்க் பிரான்ச் அருகில்), சென்னை-1

கிராஅத் & நிகழ்ச்சித் தொகுப்பு

மௌலவி காரீ Dr. நூ. அப்துல் ஹாதி பாகவி Ph.D.

(மொழிபெயர்ப்பாளர், பத்திரிகையாளர்) 

 

தலைமையேற்று நூல் வெளியிடுபவர்:

M. அப்துல் ரஹ்மான் M.A., Ex. M.P.

சேர்மன், தமிழ்நாடு வக்ஃப் போர்டு, சென்னை-1

 

நூல் பிரதிகள் பெற்று, வாழ்த்துரை வழங்குவோர்:

பேரா. டாக்டர் சேமுமு. முகமதலி Ph.D.

பொதுச் செயலாளர் தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம்

இயக்குநர் எஸ்-ஐஏஎஸ் அகாடமி, கோடம்பாக்கம், சென்னை.

 

திருமதி பாத்திமா முஸப்பர் B.Com., B.A. (Arabic)

(D/o சிராஜுல் மில்லத் மர்ஹூம் ஆ.கா.அ. அப்துஸ் ஸமது)

வக்ஃப் போர்டு மெம்பர்

 

பேரா. டாக்டர் ஹாஜா கனி Ph.D.

தலைவர் தமிழ்த்துறை, காயிதே மில்லத் ஆடவர் கல்லூரி, மேடவாக்கம், சென்னை. பொதுச்செயலாளர் த.மு.மு.க.

 

நன்றியுரை & ஏற்புரை

Dr. A.P. முகமது அலி IPS (Rtd) Ph.D.

நூலாசிரியர்

 

 

குறிப்பு: வாய்ப்புள்ளோர் வருகை தருமாறு மிக்க அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

 

அன்புடன்

நூ. அப்துல் ஹாதி பாகவி