செவ்வாய், 31 டிசம்பர், 2019

திங்கள், 30 டிசம்பர், 2019

ஞாயிறு, 29 டிசம்பர், 2019

திங்கள், 23 டிசம்பர், 2019

ஞாயிறு, 22 டிசம்பர், 2019

புதன், 18 டிசம்பர், 2019

செவ்வாய், 17 டிசம்பர், 2019

சனி, 14 டிசம்பர், 2019

மக்களின் அறியாமை எங்களின் மூலதனம்!-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

மக்களின் அறியாமையையும் பலவீனத்தையும் சிலர் தம்முடைய மூலதனமாக்கிக்கொள்கின்றனர்.
அத்தகையோரைச் சுற்றியே மக்கள் வாழ்ந்தாக வேண்டிய நிர்ப்பந்த வலைக்குள் சிக்கியுள்ளனர். அதை விட்டு அவர்களால் வெளியே வர இயலாமல் தடுப்பது அவர்களின் அச்சமே. அவர்கள் தெளிவாகச் சிந்தித்து, துணிவோடு முடிவெடுத்து உறுதியாக வெளியேறினால் அவர்களுக்கு விடுதலை உண்டு. அதுவரை அந்த ஏமாற்றுக்காரர்களின் வலையினுள் சிக்குண்டு கிடக்க வேண்டியதுதான்.


அரசியல், ஆன்மிகம், மருத்துவம், நம்பிக்கைகள் முதலானவற்றில் மக்கள் பெரும் அறியாமையில் உள்ளனர். அவர்களின் அறியாமை அல்லது பலவீனம்-அதனைப் பயன்படுத்தியே அத்துறை சார்ந்த சிலர் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். மக்களின் அறியாமைதான் அவர்களின் மூலதனம். குறிப்பாக ஆன்மிக நம்பிக்கைகள் சார்ந்து பல்வேறு வகைகளில் மக்கள் ஏமாற்றப்படுகின்றார்கள். அந்த வலையிலிருந்து தப்பிக்கலாம் என்று நினைத்தாலும் அவர்களின் அச்சம் அவர்களைத் தடுத்துவிடும். இதை இவ்வாறு செய்யவில்லையென்றால் தெய்வக் குற்றம் ஆகிவிடுமோ என்ற அச்சம் அவர்களின் மனங்களை முழுமையாக ஆக்கிரமித்துள்ளது. இந்த வருடம் இதை ஓதாமல் விட்டதால்தான் நம் வியாபாரத்தில் அபிவிருத்தி இல்லாமல் போய்விட்டது என்ற மூடநம்பிக்கை மூளையில் பதிந்துபோய்விட்டது.

பாமர மக்களுக்கு அரசியல்வாதிகளின் தில்லுமுல்லுகள் தெரியாது; அவர்களின் சொத்து விவரங்கள் தெரியாது; அவர்களின் குணநலன்களும் தெரியாது; அத்தோடு அவர்களுக்கு அரசியலும் தெரியாது. அந்த அறியாமைதான் அரசியல்வாதிகளின் மூலதனம். ஆட்சியில் என்ன வேண்டுமானாலும் செய்துவிட்டு, சுருட்ட வேண்டிய அளவிற்குச் சுருட்டிக்கொண்டு, தேர்தலின்போது பணத்தை எறிந்து வாக்குகளைப் பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கையாலும் திமிராலும் நடமாடிக் கொண்டிருக்கின்றார்கள். படைத்தவன் தண்டிப்பான் என்ற அச்சமோ மனசாட்சிக்குப் பயப்பட வேண்டுமே என்ற உணர்வோ அற்றவர்களாக உலா வருகின்றார்கள். பொன்னையும் பொருளையும் கோடிக்கணக்கில் சேர்த்தவர்களெல்லாம் மரணித்தபின் சவக்கோடியோடு மட்டுமே சென்றார்களே தவிர ஒரு குண்டூசி அளவிற்குக்கூட எதையும் எடுத்துச் செல்லவில்லை என்பதை அறிய மறுக்கின்றார்கள்.

மருத்துவத் துறையில் மக்கள் ஏமாற்றப்படுவது காலம் காலமாக நடந்து வருகிறது. மருத்துவச் சொற்களெல்லாம் மக்களின் காதுகளுக்குப் புதியவை. அந்த வார்த்தைகளைக் கேட்டவுடனேயே அவர்கள் பயந்துவிடுவார்கள். "டாக்டர், எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை; உயிரைக் காப்பாத்திடுங்க'' என்று உணர்ச்சிவசப்பட்டுக் கூறுவார்கள்; அன்பின் மிகுதியால் பேசுவார்கள். அதுதான் நல்வாய்ப்பெனக் கருதும் மருத்துவர்கள் சிலர் அறியா மக்களிடமிருந்து பணத்தைக் கறக்க முயல்கின்றார்கள்.

ஸ்கேன் எடுத்து வா, எக்ஸ்ரே எடுத்து வா, பிளட் டெஸ்ட் எடுத்து வா என்று ஆர்டர் மேல் ஆர்டர் போட்டு அவர்களை அலைய விடுவதும், பரபரப்பாகச் செயல்படுவதைப்போல் காட்டுவதும் அவர்கள் அறியாத வார்த்தைகளைக் கூறி அவர்களை அச்சுறுத்துவதும் இறுதியில் பணத்தையெல்லாம் பிடுங்கிக்கொண்டு பிணத்தை ஒப்படைப்பதும் ஆங்காங்கே நடைபெறுகின்ற அவலம். இந்த அவலத்தை அறியாத மக்கள் இன்னும் இருக்கின்றார்கள். அவர்கள் சுயமாகச் சிந்தித்துத் தீர்க்கமான முடிவெடுக்கின்ற வரை இந்தச் சதிப் பின்னலிலிருந்து வெளியே வர முடியாது.

ஆப்ரேஷன் என்றால், அவரின் உறவினரை அலைய விடுவது, ஐந்து யூனிட் இரத்தம் கொடுத்தால்தான் ஆப்ரேஷன் செய்ய முடியும் என நிர்ப்பந்தப்படுத்துவது, பணத்தை முன்கூட்டியே கட்டினால்தான் ஆப்ரேஷன் செய்ய முடியும் எனப் பீதியைக் கிளப்புவது எல்லாம் மருத்துவத் துறையில் மக்கள் சந்திக்கும் அவலங்கள். மக்கள் எவ்வளவுதான் குருதிக்கொடை செய்தாலும் போதவில்லை என்பதுதான் பதில். குருதிக்கொடையை வலியுறுத்தி மருத்துவர்கள் எங்காவது குருதிக்கொடை கொடுக்க முன்வந்துள்ளார்களா? மருத்துவர்கள் ஒருங்கிணைந்து இத்தகைய முகாம்களை நடத்தியுள்ளார்களா? ஏன் அவர்கள் செய்வதில்லை?
இன்று மருத்துவத் துறையின் பெருவளர்ச்சியால் உறுப்பு தானம் செய்யப்படுகிறது. மக்கள் தம் உடலுறுப்புகளைத் தானம் செய்ய முன்வருகின்றார்கள். தம் உற்றார், உறவினரின் உறுப்புகளையும் தானம் செய்கிறார்கள். இருப்பினும் மருத்துவத்துறையில் இது ஒரு வியாபாரமாகவே நடந்து வருகிறது. மக்களிடமிருந்து இலவசமாகப் பெற்று, பிறரிடம் பணத்திற்கு விற்கப்படுகிறது. இப்படி மருத்துவத் துறையில் ஏராளமான ஏமாற்றங்களும் மோசடிகளும் நிறைந்துள்ளன.

ஆன்மிக ரீதியாக மக்கள் பெருவாரியாக ஏமாற்றப்படுகின்றார்கள். ஆன்மிக வழிகாட்டிகள் என்று கூறிக்கொள்வோர் சிலர் மக்களின் அறியாமையைத் தமது மூலதனமாக்கிக்கொள்கின்றார்கள். மக்களின் அறியாமையும் அச்சமும் அவர்களின் மூலதனமாகும். ஏக இறைநம்பிக்கையை முழுமையாக மக்கள் மனங்களில் ஊட்ட வேண்டிய மார்க்க அறிஞர்கள் சிலர் தவறான விளக்கங்களையும் வியாக்கியானங்களையும் சொல்லி, அவர்களைத் தவறான வழியில் அழைத்துச் செல்கின்றார்கள். இஸ்லாமிய மார்க்கம் அங்கீகரிக்காத செயல்பாடுகளைப் புதிது புதிதாக உருவாக்கி, அவற்றை நடைமுறைப்படுத்தும் பழக்கத்தை விதைத்துள்ளார்கள். அவற்றைச் செய்யவில்லையெனில் அவன் சுன்னத் வல் ஜமாஅத் கொள்கையைச் சார்ந்தவன் அல்லன் என்ற பொய்யான தோற்றத்தை மக்கள் மனங்களில் பதியச் செய்கின்றார்கள். அவற்றை எதிர்த்துக் குரல் கொடுக்கும் மார்க்க அறிஞர்களையெல்லாம் "அவர்கள் இன்ன பிரிவைச் சார்ந்தவர்கள்' என்று முத்திரை குத்திவிடுகின்றார்கள். ஆக இஸ்லாமியக் கடமைகளை நோக்கி அழைக்க வேண்டியவர்கள் சடங்குகள், சம்பிரதாயங்களை நோக்கி அழைத்துக்கொண்டிருக்கின்றார்கள்.

சிலர் மக்களின் நம்பிக்கையைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கின்றார்கள். தர்ஹாவிற்கு ஸியாரத்திற்காக வருவோரை இலக்காக வைத்து, வியாபாரம் செய்கின்றார்கள். கயிறுகளில் முடிச்சுகளைப் போட்டு அமோகமாக விற்பனை செய்கின்றார்கள். கருப்பு, சிவப்பு, மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு வண்ணங்களில் கயிறுகள் விற்கப்படுகின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு "பவர்' என்றும் ஒவ்வொன்றும் ஒரு விலை என்றும் மக்களின் நம்பிக்கையைப் பணமாக்கிக்கொள்கின்றார்கள். அத்தோடு தகடு, தட்டு, தாயத்து உள்ளிட்டவை மூலம் மக்களின் நம்பிக்கையை ஈர்த்து, பணமாக்கிவிடுகின்றார்கள். இறைவனுக்கு மட்டுமே செய்ய வேண்டிய நேர்ச்சையை தர்ஹாக்களுக்குச் செய்யவைக்கின்றார்கள். "பாவாவுக்கு நேர்ந்துகொண்டால் எல்லாம் சரியாயிடும்'' என்ற தவறான நம்பிக்கையை விதைக்கின்றார்கள். பிற மதத்தைச் சார்ந்த மக்கள் தம் குலதெய்வக் கோவிலுக்குச் சென்று தலைமுடி காணிக்கை செலுத்துவதைப் போன்று, முஸ்லிம்கள் தமக்குப் பிடித்தமான தர்ஹாவிற்குச் சென்று அங்கே தம் குழந்தைகளுக்குத் தலைமுடி மழித்துக் கொள்கின்றார்கள். இன்னும் பற்பல நேர்ச்சைகளை அங்கே நிறைவேற்றுகின்றார்கள். அறியா மக்களின் இச்செயல்களையெல்லாம் ஆதரிக்குமுகமாக மார்க்க அறிஞர்கள் சிலர், "எல்லாம் கூடும்' என்ற தோரணையில் பதிலளிக்கின்றார்கள்.

மரத்தடியில் அமர்ந்துகொண்டு மக்களின் எதிர்காலத்தைக் கணித்துக் கூறும் ஆரூடக்காரனுக்குத் தனது வாழ்க்கை குறித்தும் எதிர்காலம் குறித்தும் ஏதும் தெரியாது. தன் வாழ்க்கையை யூகித்து அறிய முடியாதவன் பிற மக்களின் வாழ்க்கையை எப்படிக் கூற முடியும்? யூகமாக எதையெதையே அவன் சொல்ல, அதை நம்பி வாழுகின்றவர்களுக்கு, அவன் சொன்னது அப்படியே நடப்பதைப்போன்ற ஒரு மாயத்தோற்றம் மனதில் தோன்றும். அதுதான் அந்த ஆரூடக்காரனின் வெற்றி. "யார் ஓர் ஆரூடக்காரனிடம் வந்து, அவன் சொல்வதை நம்பினாரோ அவருடைய நாற்பது நாட்களின் தொழுகை ஏற்கப்படாது'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: முஸ்னது அஹ்மத்: 16041)

வியாபாரிகள் மக்களின் அறியாமையையும் பலவீனத்தையும் தமக்கான மூலதனமாகப் பயன்படுத்திக்கொள்கின்றார்கள். கலப்படம், பதுக்கல், விலையேற்றம், எடை குறைப்பு உள்ளிட்ட என்னென்ன தில்லுமுல்லுகள் செய்ய வேண்டுமோ அத்தனையும் செய்கின்றார்கள். அறியா மக்கள் அவர்களின் பேச்சை நம்பி அப்படியே வாங்கி வருகின்றார்கள். அதில் மிகப்பெரும் ஏமாற்றம் தங்க வியாபாரிகள் செய்வதுதான். ஒரு பவுன் தங்க நகை வாங்கினால், செய்கூலி, சேதாரம் என்று கூறி, செம்பு கலந்த தங்கத்தை மக்கள் தலையில் கட்டிவிடுகின்றார்கள். அதாவது ஆறரை கிராம் தங்கமும் ஒன்றரை கிராம் செம்பும் சேர்ந்த தங்க நகையைக் கொடுத்துவிட்டு, ஒரு பவுன் (எட்டு கிராம்) தங்கத்திற்கான பணத்தைப் பெற்றுக்கொள்கின்றார்கள். ஒரு பவுனுக்கு ஒன்றரை கிராம் என்றால் ஒரு நாளைக்கு எத்தனை பவுன் விற்பனை, எவ்வளவு இலாபம், மக்கள் எவ்வளவு நட்டமடைகின்றார்கள் என்பதை நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள். இப்படித்தான் அவர்கள் ஆண்டுதோறும் அபரிமிதமாக வளர்ச்சியடைகின்றார்கள்.

ஆக இப்படி எங்கு நோக்கினாலும் மக்களின் அறியாமையையும் பலவீனத்தையும் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்வோர்தாம் மிகுதியாகக் காணப்படுகின்றார்கள். மக்களின் அறியாமையை நீக்கி, அவர்களுக்குச் சரியான பாதையைக் காட்டி, அவர்களின் பொருளாதாரத்தையும் நம்பிக்கையையும் காத்து, அவர்களின் அச்சத்தை நீக்கும் பெருமனதுக்காரர்கள் மிகச் சிலரே தென்படுகின்றார்கள். மக்கள் விழிப்போடு இல்லையென்றால் அவர்களின் பொருளாதாரமும் சுரண்டப்படும்; அவர்களின் மத நம்பிக்கையும் சிதைந்துபோகும்.

எனவே எல்லா ஆற்றலும் நிறைந்தவன் அல்லாஹ்தான் என்ற நம்பிக்கையை மனதில் பதிய வைத்துக்கொண்டு, மூடநம்பிக்கைகளையும் அச்சத்தையும் முதுகுக்குப்பின் தூக்கியெறிந்துவிட்டு, துணிவோடு காலடி வைத்தால் மனிதர்களின் ஏமாற்றங்களிலிருந்து தவிர்ந்துகொள்ளலாம்.
=========================================


வெள்ளி, 13 டிசம்பர், 2019

வியாழன், 12 டிசம்பர், 2019

உண்மையை உரக்கச் சொல்வோம்!-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.
------------------------------------------------------------------------------------------------------
சாம்பல் நெருப்பை மறைத்துக்கொண்டிருப்பதைப்போல் பொய்யானது உண்மையை மறைத்துக்கொண்டு ஆட்டம் போடுகிறது. உணவில் கலப்படம் செய்வதைப்போல் சிலர் உன்னதமான மார்க்கத்திலும் கலப்படம் செய்துள்ளனர். அந்தக் கலப்படத்தையே உண்மை மார்க்கமென மக்கள் பலர் நம்பிக்கொண்டுள்ளனர். உண்மையையும் பொய்யையும் வேறுபடுத்திப் பார்ப்பது ஒவ்வோர் இறைநம்பிக்கையாளரின் கடமையாகும். குறிப்பாக குர்ஆன், நபிமொழி ஆகியவற்றின் அடிப்படையில் சிந்தித்து, உண்மை இதுதான் என மக்களுக்குத் தெளிவுபடுத்துவது ஆலிம்களின் பொறுப்பாகும். அதில் மக்களின் வெறுப்பு, பழிப்பு, கோபம் ஆகியவற்றைப் பொருட்படுத்தக்கூடாது. அல்லாஹ்வின் திருப்தியையே ஆலிம்கள் தம் இலக்காகக் கொள்ள வேண்டும்.

இஸ்லாமிய மார்க்கத்தைப் பொறுத்த வரை அல்லாஹ்வும் அவனது தூதரும் வரையறுத்துத் தந்தவையே ஏற்கப்பட்டதாகும். அதன்பின் கலீஃபாக்கள், இமாம்கள் யாரும் மார்க்கத்தில் இல்லாத ஒன்றைப் புதிதாகச் சேர்க்கவில்லை. மாறாக அவர்களெல்லாம் மார்க்கத்தைச் செவ்வைப்படுத்தி ஒழுங்குபடுத்தினார்கள். நீண்ட ஆய்வுகளுக்குப் பிறகு இஸ்லாமியச் சட்டங்களை வகுத்துக்கொடுத்தார்கள். குர்ஆன், ஹதீஸ்களோடு தம் பகுத்தறிவைப் பயன்படுத்தி ஆய்வு மேற்கொண்டு பக்குவமாகச் சட்டங்களை அமைத்தார்கள்.

அந்த அடிப்படையில் உலக அளவில் ஃபர்ள், வாஜிப், சுன்னத், ஹலால், ஹராம் முதலானவற்றில் எந்த வித்தியாசமும் இருக்காது. உலக மக்கள் யாரும் அவற்றைச் சிதைத்துவிடாமல் அல்லாஹ் பாதுகாத்துவிட்டான். ஆனால் இது கூடும், இதைச் செய்யலாம், இது ஆகுமானது என்ற அடிப்படையில்தான் பல்வேறு சடங்குகளும் சம்பிரதாயங்களும் மார்க்கத்தினுள் நுழைந்துகொண்டன. காலப்போக்கில் ஃபர்ள், சுன்னத்துகளுக்கு உள்ள முக்கியத்துவம் குறைந்து சடங்கு, சம்பிரதாயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கிவிட்டனர் மக்கள். அவற்றையே மார்க்கத்தின் அடிப்படையாகவும் அடிப்படைக்கொள்கையாகவும் எண்ணத் தொடங்கிவிட்டனர்.

இஸ்லாமிய மார்க்கத்தினுள் புகுந்துகொண்ட சடங்கு, சம்பிரதாயங்களான பிற்சேர்க்கைகள் குறித்து மக்கள் மத்தியில் ஆலிம்கள் பிரச்சாரம் செய்து தெளிவுபடுத்திக்கொண்டிருக்கின்றனர். இன்றைய காலத்தில் ஆலிம்கள் பலர் இப்பணியைச் செவ்வனே செய்துவருகின்றனர். மார்க்கத்தில் நுழைந்துகொண்டவை எவை என்பது குறித்த தெளிவு இல்லாத மார்க்க அறிஞர்கள் அறியாமையிலும் மடைமையிலும் இருந்துவருகின்றார்கள்; எதிர்ப்பிரச்சாரம் செய்கின்றார்கள்; அறியாமையிலேயே உழன்றுகொண்டிருக்கின்றார்கள்.

(இறைத்)தூதரே! உம்முடைய இறைவனிடமிருந்து உமக்கு அருளப்பெற்றதை (மக்களுக்கு) எடுத்துரைத்துவிடுவீராக. (அவ்வாறு) நீர் செய்யவில்லையாயின் அவனது தூதுச் செய்தியை எடுத்துரைத்தவர் ஆகமாட்டீர். அல்லாஹ் உம்மை மக்களிடமிருந்து காப்பாற்றுவான். (5: 67)

இந்த இறைவசனத்தின் அடிப்படையில், அன்று முதல் இன்று வரை நபிமார்களின் வாரிசுகளான மார்க்க அறிஞர்கள் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகளையும் வழிகாட்டுதல்களையும் மக்களுக்குத் தெளிவாக எடுத்துரைத்தே வருகின்றனர்; மக்களை நெறிப்படுத்தியே வருகின்றனர்; அவர்கள் வழிதவறும்போது நேர்வழி எதுவெனக் கற்றுக்கொடுக்கின்றனர். அது இன்றும் தொடர்கிறது.

ஆனால் சிலர் இந்த இறைவசனத்தின் பொருளையும் தமது பொறுப்பையும் மறந்துவிட்டு, மக்களைத் தவறான வழியிலும் அறியாமையை நோக்கியும் அழைத்துக்கொண்டிருக்கின்றார்கள். அறியா மக்களும் அவர்களின் வழியில் சென்றுகொண்டிருக்கின்றார்கள். அவர்களை நல்வழிப்படுத்த வேண்டிய பொறுப்பு உண்மையை உரக்கச் சொல்லும் ஒவ்வோர் ஆலிமுக்கும் உண்டு. மக்களைத் தவறான வழியில் செலுத்தி, அறியாமையில் மூழ்கச் செய்து ஆதாயம் தேடும் சிலர் இருக்கவே செய்கின்றனர். அவர்களின் உள்நோக்கத்தைத் தெளிவுபடுத்த வேண்டியது உண்மையான மார்க்க அறிஞர்களின் கடமையாகும். எதிர்ப்பிரச்சாரம் செய்யும்போது மக்களோ தவறான வழிநடத்தும் ஆலிம்கள் சிலரோ எதிர்க்கத்தான் செய்வார்கள். அவர்களின் எதிர்ப்புக்கு அஞ்சி உண்மையை உரைப்பதிலிருந்து பின்வாங்கக்கூடாது.

ஏனெனில் மேற்கண்ட இறைவசனத்தில், “அல்லாஹ் உம்மை மக்களிடமிருந்து காப்பாற்றுவான்என்று அல்லாஹ் கூறியுள்ளான். மக்களிடமிருந்தோ தவறான வழிநடத்தும் ஆலிம்களிடமிருந்தோ எதிர்ப்பு வரத்தான் செய்யும். அந்த எதிர்ப்பிலிருந்தும் அச்சத்திலிருந்தும் அல்லாஹ் நம்மைக் காப்பான் என்ற மனஉறுதியும் துணிவும் வேண்டும். அப்போதுதான் துணிவோடு உண்மையைச் சொல்ல முடியும்.
மக்கள் மத்தியில் ஏதேனும் தீமையைக் கண்டால் அதைத் தடுத்து நிறுத்த வேண்டும். அது அந்தந்தப் பொறுப்புடையோரின் கடமை. அது மார்க்கம் சார்ந்த தீமையாக இருந்தால், மார்க்க அறிஞர்கள் அதைத் தடுக்க வேண்டும். சமூகம் சார்ந்த தீமையாக இருந்தால் சமுதாயப் பொறுப்பாளர்கள் அதைத் தடுத்து நிறுத்த வேண்டும். அரசு சார்ந்த தீமையாக இருந்தால் அரசு அதிகாரிகள் அதைத் தடுக்க வேண்டும். ஆக ஒவ்வொரு துறையிலும் அதனதன் துறைசார்ந்த பொறுப்பாளர்களும் அதிகாரிகளும் அத்தீமையைத் தடுத்துவிட்டால் பிற மக்கள் நிம்மதியாக வாழ்வார்கள். மாறாக அந்தத் தீமையைக் கண்டு, அமைதியாக இருந்துவிட்டால் அது நம்மையே ஒரு நாள் தாக்கும்; நமக்கும் அது பாதிப்பை ஏற்படுத்தவே செய்யும்.

அது குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளதாவது: உங்களுள் ஒருவர் ஒரு தீமையைக் கண்டால் அதை அவர் தமது கையால் தடுக்கட்டும்; முடியாவிட்டால் தமது நாவால் (சொல்லித் தடுக்கட்டும்); அதுவும் இயலாவிட்டால் தமது உள்ளத்தால் (அதை வெறுத்து ஒதுக்கட்டும்). இந்த (இறுதி) நிலையானது இறைநம்பிக்கையின் பலவீனமா(ன நிலையா)கும்.” (நூல்: முஸ்லிம்: 78)

இறைநம்பிக்கையின் ஆழமும் அழுத்தமும் எந்த அளவிற்கு உறுதியாக இருக்கின்றதோ அந்த அளவிற்குத் தீமையைத் தடுப்பதிலும் மக்கள் மத்தியில் பரவியிருக்கின்ற தவறான நம்பிக்கைகளைக் களைவதிலும் வேகமும் துடிப்பும் இருக்கும். இறைநம்பிக்கையில் பலவீனம் இருந்தால் அந்தத் துடிப்பும் வேகமும் இருக்காது. அதனால் தீமைகளைக் கண்டும் காணாததுபோல்தான் செல்ல நேரிடும்.

உண்மையை உரக்கச் சொல்லும்போது கல்லடி, சொல்லடி எல்லாவற்றையும் எதிர்கொள்ள வேண்டும். அதனால்தான், “கசப்பாக இருப்பினும் உண்மையை உரைப்பீராகஎன்று அபூதர் (ரளி) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே! இன்னும் கொஞ்சம் கூறுவீராகஎன்று கேட்டபோது, “அல்லாஹ்வின் விஷயத்தில் பழிப்பவரின் பழிப்பைக் கண்டு அஞ்சாதீர்என்று கூறினார்கள். உண்மையை எடுத்துச் சொல்லும்போது அதைக் கேட்பவருக்கு அது கசக்கும். அதனால் அவர் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கலாம். அந்தக் கசப்பை நாம் எதிர்கொள்ளத்தான் வேண்டும். உண்மையாகச் செயல்பட்டால், அல்லாஹ்வின் சட்டத்தில் சற்றும் பிசகாது நடந்துகொண்டால் மக்கள் சிலர் பழிப்பார்கள்; கேலிசெய்வார்கள். மக்களின் பழிப்பைக் கண்டு மனம் சுருங்கிப்போய்விடக்கூடாது; துவண்டுவிடக் கூடாது.

ஒவ்வொருவரும் தத்தம் வீட்டில் மார்க்கத்தின் உண்மைச் செய்திகளை எடுத்துக்கூறி, சத்தியத்தை நிலைநாட்ட வேண்டும். வீட்டிலும் உறவினர்களிடமும் பரவியுள்ள தீமைகளையும் மூடப்பழக்கங்களையும் களைய முற்பட வேண்டும். அவர்களைத் திருத்த முயன்று, அதில் ஒருவர் வெற்றிபெற்றுவிட்டால் பிறகு அவர் சமூகத்தில் பரவியுள்ள தீமைகளையும் மூடப்பழக்கங்களையும் களைவது மிக எளிதாகிவிடும். ஏனெனில் ஒருவர் தம் வீட்டிலுள்ளோரைத் திருத்த முயல்வதுதான் அவரது முதற்கடமையாகும்.

லுக்மான் (அலை) அவர்கள் தம் குடும்பத்திலிருந்துதான் சீர்திருத்தத்தைத் தொடங்கியிருக்கின்றார்கள். அவர்கள் தம் அருமைப் புதல்வருக்கு அறிவுரை வழங்கியபோது, “என்னருமை மகனே! தொழுகையைக் கடைப்பிடி; நன்மை செய்யுமாறு ஏவு; தீமையிலிருந்து தடு; (அதனால்) உனக்கு நேருகின்ற (துன்பத்)தைச் சகித்துக்கொள்; நிச்சயமாக இதுவே தீரச் செயலாகும் (31: 17) என்று கூறினார்கள்.


நன்மை செய்யுமாறு ஏவு; தீமையிலிருந்து தடுஎன்ற அறிவுரைக்குப்பின், “உனக்கு நேருகின்ற (துன்பத்)தைச் சகித்துக்கொள்என்ற அறிவுரை ஏன்? நன்மையை ஏவி, தீமையைத் தடுக்கும்போது தானாக எதிர்ப்பு வரும். வட்டி, விபச்சாரம், சூது, மது, போதை முதலான தீமைகளைக் கண்டிக்கின்றபோது, அதில் ஈடுபட்டுள்ளோர் எதிர்க்கவே செய்வார்கள்; கடுஞ்சொற்களால் வசைபாடுவார்கள்; துன்புறுத்தவும் செய்வார்கள். இதையெல்லாம் தாங்கிக்கொண்டுதான் தீமையைத் தடுக்க வேண்டும். கடைசியாக, “இதுவே தீரச் செயலாகும்என்று நிறைவு பெறுகிறது. மனத்துணிவும் மனத்திட்பமும் உள்ளோர்தாம் இத்தகைய செயலில் ஈடுபட முடியும். மனத்தில் துணிவு இல்லாதவர்கள் தீமையைத் தடுக்க முடியாது. ஏனெனில் மக்களிடமிருந்து எதிர்ப்பு வரும்போது அடங்கிப்போய் விடுவார்கள்.

உண்மையைச் சொல்கின்றபோதும் தீமையைத் தடுக்கின்றபோதும் சிலர் பாதிக்கப்பட்டாலும் அதனால் பலர் பயன்பெறுவார்கள். நாம் செய்கின்ற இச்செயலால் மக்கள் பயன்பெறுகிறார்கள் என்ற உந்துதலும் உத்வேகமும் என்றும் குன்றாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் நாம் தொடர்ந்து நன்மையை ஏவி, தீமையைத் தடுக்க முடியும். சிலர் தீமையைக் கண்டும் மக்களின் அச்சத்தால், அல்லது மக்கள் சினந்துகொள்வார்களே என்ற காரணத்தால் அதைத் தடுக்காமல் விட்டுவிடுவார்கள். அல்லது கண்டும் காணாமல் போய்விடுவார்கள். அத்தகையோர் பின்வரும் நபிமொழியைக் கவனிக்க வேண்டும்.

யார் மக்களின் வெறுப்பைப் பொருட்படுத்தாமல் அல்லாஹ்வின் அன்பைத் தேடிக்கொள்கிறாரோ அவரை மக்களின் தொல்லையிலிருந்து காக்க அல்லாஹ்வே போதுமானவன். யார் அல்லாஹ்வின் வெறுப்பைப் பொருட்படுத்தாமல் மக்களின் அன்பைத் தேடுகிறாரோ அவரை அல்லாஹ் மக்களிடமே விட்டுவிடுகிறான்என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதைத் தாம் கேட்டதாக ஆயிஷா (ரளி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (நூல்: திர்மிதீ: 2338)

இன்று அரபி மூலாதாரங்கள் அனைத்தும் இனிய தமிழில் கிடைக்கத் தொடங்கிவிட்டதால், படிப்பறிவுள்ளோர் அவற்றைப் படித்து, உண்மை எது, புனைவுகள் எவை, பிற்சேர்க்கைகள் எவை என்பதையெல்லாம் தெளிவாகத் தெரிந்துகொள்ளத் தொடங்கிவிட்டார்கள். ஆகவே இனியும் மார்க்க அறிஞர்கள் சிலர் தவறான பாதையில் மக்களை அழைத்தால் அத்தகையோரை மக்கள் எளிதில் அடையாளம் கண்டுகொள்வார்கள் என்பது திண்ணம். எனவே உண்மையை உரக்கச் சொல்லும் ஆலிம்களாகவும் சமூகப் பொறுப்புள்ளவர்களாகவும் சமுதாயத் தலைவர்களாகவும் திகழ்ந்து மக்களை நல்வழிப்படுத்துவோம்.
=============================================

செவ்வாய், 10 டிசம்பர், 2019

திங்கள், 9 டிசம்பர், 2019

வெள்ளி, 6 டிசம்பர், 2019

இம்மையும் மறுமையும்

புதன், 4 டிசம்பர், 2019

செவ்வாய், 3 டிசம்பர், 2019

திறமைமிகு ஆசிரியர்களைப் பயன்படுத்திக்கொள்வோம்!----------------------------------------------------------------------
நம் உஸ்தாத்கள் எத்தனையோ பேர் ஓய்வுபெற்று ஆங்காங்கே இருக்கின்றார்கள். இருப்பினும் நம் பிள்ளைகளுக்கு ஏதாவது ஓரிரு பாடங்களை நடத்தினால் மகிழ்ச்சியாக இருக்குமே என்ற ஆசையையும் ஆவலையும் தம் மனத்திற்குள் மறைத்து வைத்திருக்கின்றார்கள்; சிலர் அதை வெளிப்படையாகவே சொல்கின்றார்கள். இத்தகைய உஸ்தாத்களின் கல்வியை இன்றைய அரபுக் கல்லூரிகளின் முதல்வர்கள் தம் மாணவர்களுக்குக் கிடைக்கச் செய்தால் அதுதான் அவர்கள் தம் உஸ்தாதுகளுக்குச் செய்யும் கைம்மாறாகும்.

அதற்கான வாய்ப்பு இரண்டு விதமாக உள்ளது. ஒன்று அவர்களை நேரடியாக அழைத்து வந்து மாணவர்களுக்கு வாரம் ஒரு தடவை அல்லது மாதம் ஒரு தடவை பாடம் நடத்த ஏற்பாடு செய்யலாம். இரண்டாவது, அவர்களின் இருப்பிடத்திலேயே இருந்துகொண்டு, முகநூல், யூ-டியூப் போன்ற நேரலை மூலமாக மாணவர்களுக்குப் பாடம் நடத்த ஏற்பாடு செய்யலாம்.

அதற்கு அரபுக் கல்லூரிகளில் வீடியோ கான்ஃபரன்ஸ் ஹால்   (Video Conference Hall) ஒன்றை உருவாக்கி வைத்திருக்க வேண்டிய அவசியத் தேவை இன்று ஏற்பட்டுள்ளது. அதை உருவாக்கிவிட்டால் நம் உஸ்தாத்கள் மட்டுமின்றி, பிற அரபுக் கல்லூரி முதல்வர்கள், உஸ்தாத்கள் ஆகியோரும் பாடம் நடத்தலாம்; மாணவர்களிடையே கலந்துரையாடலாம். ஏன், உலகின் எந்த மூலையிலிருந்தும் திறன்மிகு ஆசிரியர்களின் கல்வியை மாணவர்கள் பெறலாம். அதற்கான வாய்ப்பு இன்று பரவலாகவும் எளிதாகவும் உள்ளது.
அரபிமொழி இலக்கணக் குறிப்புகளையும் நவீனச் சிக்கல்களுக்கு ஃபிக்ஹ் கூறும் விளக்கங்களையும் அரபு நாட்டு அறிஞர்களிடமிருந்து நேரடியாகக் கேட்கும்போது மாணவர்கள் கூடுதல் உற்சாகமடைவார்கள்; அரபிமொழி பேசுவதற்கான ஆர்வமும் துடிப்பும் அதிகமாகும்; மாணவர்களின் சிந்தனைத்திறன் விரியும்.

மேலும் திறன்மிகு ஆசிரியர்கள் நடத்துகின்ற பாடத்தை அப்படியே பதிவு செய்து பாதுகாக்க வேண்டிய அவசியமும் இன்று ஏற்பட்டுள்ளது. ஏனெனில் திறன்மிகு ஆசிரியர்களின் வெற்றிடத்தை நிரப்புகின்ற வேறோர் ஆசிரியர் கிடைப்பது மிக அரிதாகவே உள்ளது. அவர் போன்று நடத்த ஆள் இல்லைஎன்று நம்முள் பலர் சொல்லக் கேட்டிருப்போம். எனவே அவர்கள் நடத்துகின்ற பாடங்களின் பதிவு நம்மிடம் இருந்தால் பிற்கால மாணவர்களும் ஆசிரியர்களும் அதன்மூலம் பயன்பெறுவார்கள் என்பது திண்ணம்.

ஆக இன்றைய நவீனத் தொழில்நுட்பத்தை நம்மால் இயன்ற வரை பயன்படுத்திக்கொண்டால் யாவரும் பயனடையலாம்; வெற்றிப் பாதையை நோக்கி நடைபோடலாம்; பெருவளர்ச்சி காணலாம்.

அன்புடன்
நூ. அப்துல் ஹாதி பாகவி
03.12.2019   05.04.1441
===================================

Abdul Hadi Baquavi


ஞாயிறு, 1 டிசம்பர், 2019

அரபி மொழி கற்போம்- 11

சனி, 30 நவம்பர், 2019

வியாழன், 28 நவம்பர், 2019

வெள்ளி, 22 நவம்பர், 2019

புதன், 20 நவம்பர், 2019

மூலாதார நூல்களை முதலில் படிப்போம்!------------------------------------------------------------
இன்று இஸ்லாமிய மூலாதார நூல்கள் அனைத்தும் தமிழில் வெளிவந்துவிட்டன. படித்துத் தெரிந்துகொள்ள வேண்டுமென்ற ஆர்வமுள்ளோர் அவற்றை வாங்கிப் படிக்கின்றார்கள். எல்லோரும் கட்டாயம் படிக்க வேண்டிய முக்கியமான நூல்களைத் தங்களுக்கு முன்வைக்கிறேன்.

தஃப்சீர் இப்னு கஸீர்-தமிழாக்கம்

ஸிஹாஹுஸ் ஸித்தா-ஆதாரப்பூர்வமான ஆறு நூல்கள் (புகாரீ, முஸ்லிம், திர்மிதீ, அபூதாவூத், சுனனுந் நஸாயீ, இப்னு மாஜா) தமிழாக்கம்

தஃப்சீர் ஜவாஹிருல் குர்ஆன் (பல்வேறு தஃப்சீர்களின் தமிழாக்கம்-பாக்கியாத் வெளியீடு)

நபிமார்கள் வரலாறு (தற்போது வரை 8 பாகங்கள் வெளிவந்துள்ளன. ஆயிஷா பதிப்பக வெளியீடு)

இவை தவிர மற்ற நூல்களையும் படிக்கலாம். ஆனால் மேற்கண்ட நூல்களை ஒவ்வொரு முஸ்லிமும் படித்துத் தெரிந்துகொள்வது அவசியம். அப்போதுதான் இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படைகளை ஓரளவுக்கேனும் விளங்கிச் செயல்பட முடியும்.

மேற்கண்ட மூலாதார நூல்களையும் இன்னும் பயனுள்ள பல்வேறு நூல்களையும் படிக்க அல்லாஹ் எல்லோருக்கும் நல்வாய்ப்பை நல்குவானாக.

அன்புடன்
நூ. அப்துல் ஹாதி பாகவி
20.11.2019  22.03.1441
===================================திங்கள், 18 நவம்பர், 2019

இமாமாக உள்ளோர் கவனிக்க...-----------------------------------------
தற்காலத்தில் பெரும்பாலானோரின் கைகளில் அறிதிறன் கைப்பேசி (ஸ்மார்ட் ஃபோன்) உள்ளது. பல்வேறு செய்திகளை உடனுக்குடன் பரிமாறிக்கொள்கிறார்கள். உலகச் செய்திகளைக்கூட உடனுக்குடன் தெரிந்துகொள்கிறார்கள். இருப்பினும் தம் மஹல்லா-பகுதிக்குள் என்ன நடக்கிறது, யார் இறந்தார், யாருக்குத் திருமணம், யார் நோய்வாய்ப்பட்டுள்ளார், யாருக்கு உதவி வேண்டும் முதலான எதுவும் பலருக்குத் தெரிவதில்லை. எனவே இந்நிலையை மாற்றியமைக்கும் விதத்தில் ஒவ்வோர் இமாமும் தத்தம் பகுதியில் வசிப்போரின் அறிதிறன் கைப்பேசி எண்களைப் பெற்று, கட்செவி (வாட்ஸ்அப்) குழு ஒன்றை உருவாக்கி, அதில் பதிவு செய்துகொள்ள வேண்டும். தம் பகுதி சார்ந்த இறப்புச் செய்தி, திருமணச் செய்தி, வெள்ளிக்கிழமை பயான், மத்ரஸா நேரம், தொழுகை நேரம், அவ்வப்போது வருகின்ற ஜமாஅத்துல் உலமாவின் அறிக்கைகள், அறிவிப்புகள் முதலான தகவல்களைப் பதிவு செய்தால் மக்கள் பயன்பெறுவார்கள்.

அத்தோடு திருமணத்திற்காக மணப்பெண்-மணாளர் தேடுவோரின் விவரங்களைப் பதிவுசெய்து பிற குழுக்களிலும் பகிரலாம். அதனால் அவர்களுக்கு மிகத் துரிதமாக மணப்பெண்-மணாளர் அமையக்கூடிய வாய்ப்பு ஏற்படும். (சேவை அடிப்படையில் தெரிவிக்க வேண்டிய தகவலை இன்று பணத்திற்கு விற்கிறார்கள். இதனால் பலரின் திருமணம் தள்ளிப்போவதைக் காண முடிகிறது. இதற்காகவே திருமணத் தகவல் மையங்கள் பல முளைத்திருப்பதைத் தாங்கள் அறிவீர்கள்.)

ஒவ்வோர் இமாமும் இதன்மூலம் தத்தம் மஹல்லா மக்களை இயன்ற அளவு ஒருங்கிணைக்க முடியும்.

ஏற்கெனவே இமாம்கள் சிலர் இவ்வாறான வாட்ஸ்அப் குழுவை ஏற்படுத்தி, சேவை செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். மற்ற இமாம்களும் இச்சேவையில் ஈடுபட்டால் மக்கள் பலரும் பயன்பெறுவார்கள் என்பது திண்ணம். அதுவே என் எண்ணம்.

ரமளான் மாதத்தில், ஸகாத் பெறத் தகுதியானோர் பட்டியலைத் தயார் செய்து தளத்தில் வெளியிட்டால் ஸகாத் கொடுக்கும் செல்வர்கள் தம் ஸகாத்தை உரியவர்களுக்கு நேரடியாக வழங்க ஏதுவாக இருக்கும்.

திடீர் உதவி தேவைப்படுவோர் குறித்த விவரத்தைப் பதிவு செய்தால் விரும்புவோர் அவருக்கு நேரடியாக உதவி செய்ய வசதியாக இருக்கும்.

இப்படிப் பற்பல சேவைகளை மேற்கொள்ள வசதியாக உள்ள வாட்ஸ்அப் குழுவை ஒவ்வோர் இமாமும் உருவாக்கி, சேவை செய்வது தற்காலத்தில் தவிர்க்க முடியாததாகும்.

பின்குறிப்பு: அட்மின் (இமாம்) மட்டுமே செய்திகளைப் பதிவிடுமாறு வைத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் தேவையற்ற செய்திகளைத் தவிர்க்க முடியும்.

அன்புடன்
நூ. அப்துல் ஹாதி பாகவி
18.11.2019 20.03.1441
===============================