ஞாயிறு, 24 பிப்ரவரி, 2019

சனி, 16 பிப்ரவரி, 2019

செவிப்புலன் ஓர் அருட்கொடை!

இனாம்குளத்தூர் இஜ்திமா!

செவிப்புலன் ஓர் அருட்கொடை!



-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

மனிதன் கருவறைக்குள் உருவாக்கப்பட்டு உயிர்மூச்சு ஊதப்பட்டது முதல் அவனது செவி தனது பணியைத் தொடங்கிவிடுகின்றது. ஐம்புலன்களுள் செவிப்புலனைத்தான் முதன் முதலாகப் படைத்ததாக அந்நஹ்ல் அத்தியாயத்தின் 78ஆம் வசனத்தில் அல்லாஹ் கூறுகின்றான். எதையுமே நீங்கள் அறியாதவர்களாக இருந்த நிலையில், உங்கள் அன்னையரின் வயிற்றிலிருந்து அல்லாஹ்தான் உங்களை வெளியேற்றினான். மேலும் உங்களுக்குச் செவிப்புலனையும், பார்வைப்புலனையும், அறிவையும் கொடுத்தவனும் அவன்தான். இதற்கு நீங்கள் (அவனுக்கு) நன்றி செலுத்துவீர்களாக!

செவிப்புலன் ஓர் அருட்கொடையாகும். அதன் மூலம்தான் மனிதன் அறிவைப் பெறுகின்றான். அதனால்தான் பேசுகின்ற நாவை ஒன்றாகவும் கேட்கின்ற காதுகளை இரண்டாகவும் படைத்துள்ளான் இறைவன். அறிஞர்கள் கூறும் நற்கருத்துகளையும் அறிவுரைகளையும் கேட்டுப் படிப்பினை பெறவும் அறிவு பெறவுமே இரண்டு காதுகள்.  காது வழியே நற்கருத்துகளைச் செவியுற்று, அவற்றைச் சிந்தித்து இறைவனை உணரவே இரண்டு காதுகள். ஆனால் இதை உணரா மனிதன், அறிஞர்களின் நற்கருத்துகளைச் செவியுறாமல் தனக்கே எல்லாம் தெரிந்ததைப் போல் பேசிக்கொண்டே இருக்கின்றான். அதனால்தான் மனிதர்கள் ஒன்றுபடவே இயலாமல் போய்விடுகிறது. ஒவ்வோர் இயக்கத்திலும் பலப்பல பிரிவுகள். தான் நினைப்பதே சரியென வாதம். செவிதாழ்த்திக் கேட்கும் பக்குவம் இல்லை.

திருக்குர்ஆன் ஓதப்பட்டால் மனிதன் தன் செவியால் அதைக் கேட்குமாறு கட்டளையிடுகிறான் இறைவன். குர்ஆன் ஓதப்பட்டால் அமைதியாக இருங்கள்; அதனைச் செவிதாழ்த்திக் கேளுங்கள்.” (7: 204) இறைத்தூதர் மூஸா (அலை) அவர்களுக்குத் தவ்ராத் வேதத்தை வழங்கி, “இதை வலுவாகப் பிடித்துக்கொள்ளுங்கள். இதன் அறிவுரைகளைச் செவிதாழ்த்திக் கேளுங்கள் என்று அவர்கள்தம் மக்களுக்குக் கூறியபோது, “நாங்கள் செவி தாழ்த்திக் கேட்டோம்; கட்டளைக்கு மாறு செய்துவிட்டோம் என்று கூறினார்கள்.

நிறையப் பேர் செவிதாழ்த்திக் கேட்டுப் பயனடையாததால்தான் அவர்கள் நரகத்திற்குள் நுழைய வேண்டிய நிலைக்கு ஆளாகின்றார்கள்.

நரகவாசிகள் கூறுவதை அல்லாஹ் படம்பிடித்துக் காட்டுகிறான். நாங்கள் செவியுற்றோ (அவற்றை) அறிந்தோ இருந்திருந்தால் நாங்கள் நரகவாசிகளாக இருந்திருக்க மாட்டோம் என்று கூறுவார்கள். (67: 10)
அதேநேரத்தில் திருக்குர்ஆனைச் செவியுற்ற இறைநம்பிக்கையாளர்கள், நாங்கள் அதனைச் செவியுற்றோம்; அதற்குக் கட்டுப்பட்டோம் என்று கூறினார்கள். எனவே அவர்கள் சொர்க்கம் செல்கிறார்கள். ஆக காதானது சொர்க்கம் செல்லவும் நரகத்திற்குள் நுழையவும் காரணமாக அமைகிறது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
அது மட்டுமல்ல, திருக்குர்ஆனைச் செவியுறும் நல்லோர்கள் உண்மையை அறிந்துகொண்டதால், அதனைச் செவியுறும் அவர்களின் கண்களிலிருந்து நீர் வடியும். அதுவே அவர்களின் நல்வழிக்குக் காரணமாக அமைகிறது.  அச்சமயத்தில் அவர்கள், “இறைவா! இவ்வேதம் உண்மையானது என்று சாட்சி கூறுபவர்களாக எங்களைப் பதிவுசெய்துகொள்வாயாக என்று பிரார்த்தனை செய்வார்கள் என அல்மாயிதா அத்தியாயத்தின் 83ஆம் வசனம் கூறுகிறது.
எதையும் கேட்ட மாத்திரத்தில் புரிந்துகொள்ள முடியாது. கேட்கும்போது உள்ளம் ஒன்றியிருக்க வேண்டும்;  சிந்தனை சிதறாமல் இருக்க வேண்டும். அப்போதுதான் செவியில் கேட்பது உள்ளத்தில் பதியும்; புரியும். இதைத்தான் பின்வரும் வசனம் கூறுகிறது: எவருக்கு (சிந்தித்துணரும்) உள்ளம் இருக்கிறதோ அல்லது மனமுவந்தவராகச் செவிசாய்க்கின்றாரோ அவருக்கு இதில் படிப்பினை இருக்கிறது. (50: 37)

அல்லாஹ்வின் ஏழு தன்மைகளுள் ஒன்று செவியுறுதல் ஆகும். அதனால்தான் அவன் தன்னை சமீஉ (செவியுறுபவன்) என்று திருக்குர்ஆனில் கூறுகின்றான். மனிதர்கள் செவியுற வேண்டுமெனில் குறிப்பிட்ட ஒலி அளவு கொண்டதாக இருக்க வேண்டும். அப்போதுதான் அதை அவர்கள் புரிந்துகொள்ள முடியும். மிகுதியான இரைச்சலாக இருந்தாலும், மிகக் குறைந்த ஒலி அளவு கொண்டதாக இருந்தாலும் கேட்க முடியாது. ஆனால் அல்லாஹ், மனிதன் இரகசியமாகப் பேசுவதையும் பகிரங்கமாகப் பேசுவதையும் செவியுறும் ஆற்றல் வாய்ந்தவன். நீங்கள் உங்கள் சொல்லை இரகசியமாகப் பேசுங்கள்; அல்லது அதனைப் பகிரங்கமாகப் பேசுங்கள். (எப்படியிருந்தாலும்) அவன் உள்ளங்களில் உள்ளவற்றையும் அறிபவன் (67: 13) என்று கூறுகின்றான்.
கவ்லா பின்த் ஸஅலபா என்ற பெண்மணி தமக்குரிய ஒரு பிரச்சனையை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தெரிவித்து, அதற்கான தீர்வைக் கேட்டார். அதற்கான தீர்வு அதுவரை நபியவர்களுக்குக் கிடைத்திருக்கவில்லை. அதனால் அவர்கள் அமைதியாக இருந்தார்கள்.

அப்போது அதைக் கேட்டுக்கொண்டிருந்த இறைவன் உடனடியாக, அதற்கான தீர்வை ஜிப்ரீல் (அலை) அவர்கள்மூலம் இறக்கிவைத்தான். “(நபியே) உம்மிடம்  தன் கணவரைப் பற்றித் தர்க்கம் செய்து,  (அதற்கான தீர்வுக்காக) அல்லாஹ்விடம் முறையிட்டாளே அத்தகைய பெண்ணின் கூற்றை அல்லாஹ் கேட்டுவிட்டான். உங்கள் இருவரின் உரையாடலை அவன் கேட்டுக்கொண் டுதான் இருக்கிறான். திண்ணமாக அல்லாஹ் செவியுறுபவனும் உற்றுநோக்குபவனும் ஆவான்.” (58:1) நாம் பேசுவதையெல்லாம் அல்லாஹ் கேட்டுக்கொண்டிருக்கிறான் என்பதற்கு ஒரு வெளிப்படையான ஆதாரமே இவ்வசனமாகும்.

இறைத்தூதர் ஸகரிய்யா (அலை) அவர்கள் தம் இறைவனிடம் பிரார்த்தனை செய்தபோது, “நிச்சயமாக நீ பிரார்த்தனையைச் செவியேற்பவன் ஆவாய் (3: 38) என்று கூறினார்கள்.

ஆம்! இறைவன் நாம் செய்யும் பிரார்த்தனைகளையெல்லாம் செவியுற்றவாறே இருக்கின்றான். நாம் கேட்கும் தேவைகளை நமக்கான காலம் அறிந்து, குறிப்பிட்ட நேரத்தில் அதை அவன் நமக்கு வழங்குகிறான். 
மனிதன் எங்கிருந்து எதைப் பேசினாலும், எப்படிப் பேசினாலும் அல்லாஹ் அதை அறிவான் என்பதை மனிதன் உணர வேண்டும். இத்தன்மை அல்லாஹ் ஒருவனுக்கே பொருந்தும். வேறு யாருக்கும் இத்தன்மையை இணைக்கக்கூடாது. இவ்வுலக வாழ்வை முடித்துக்கொண்ட இறைத்தூதரையோ இறைநேசரையோ மனிதன் தன் இருப்பிடத்திலிருந்து அழைக்கலாகாது. அவ்வாறு அழைப்பவர் தம்மால் அழைக்கப்படுபவர் தம் அழைப்பைச் செவியுறுகிறார் என்று நம்பினால், அது இறைத்தன்மைக்கு இணையாக்கும் செயலாகும். அதனால்தான் நாம் இறந்துபோனோர் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்திற்கே சென்று, அங்கு அடக்கம் செய்யப்பட்டோருக்கு ஸலாம் சொல்கிறோம். அந்நேரத்தில் அல்லாஹ் அவர்களுக்கு, பதில் சொல்லும் ஆற்றலை வழங்குகிறான். அவ்வளவுதான். மீண்டும் அவர்கள் உறங்கத் தொடங்கிவிடுவார்கள்.
ஆகவே ஒருவன் இறந்துபோன எவருக்கும் தன் இருப்பிடத்தில் இருந்துகொண்டே முகமன் (ஸலாம்)  சொன்னால், இறைநேசர்கள் உட்பட யாருக்கும் அது கேட்காது. அதனால்தான் நாம் மண்ணறை சென்று, ஸலாம் சொல்கிறோம். ஆனால் இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு ஒரு மனிதன் தன் இருப்பிடத்தில் இருந்துகொண்டே முகமன் (ஸலாம்) கூறலாம். அதை அவர்களுக்குத் தெரிவிக்கும் பொறுப்பை அல்லாஹ் வானவர்களுக்கு வழங்கியுள்ளான். அதனால்தான் நாம் தொழுகையில் அத்தஹிய்யாத் ஓதும்போது, “அஸ்ஸலாமு அலைக்க  அய்யுஹன் நபிய்யு (நபியே! உங்கள்மீது அல்லாஹ்வின் சாந்தி உண்டாவதாக!) என்று கூறுகிறோம். அதை வானவர்கள் நபி (ஸல்) அவர்களுக்குத் தெரிவித்து விடுகின்றார்கள்.

ஒரு முஸ்லிம் உதவி தேடி அல்லது அபயம் தேடி அழைக்கின்றபோது அல்லாஹ் ஒருவனையே அழைக்க வேண்டும். அவன்தான் நாம் அழைக்கின்ற அழைப்பை எங்கிருந்தும் கேட்பவன் ஆவான். அதற்கு மாறாக இறைநேசர்களையோ மற்றவர்களையோ பெயர் கூறி அழைப்பதும் அவர்கள் நமக்கு உதவி செய்வார்கள் என்று நம்புவதும் அல்லாஹ்வின் கேட்டல் தன்மைக்கு இணைவைத்தல் ஆகும்.
பொதுவாக மக்கள் தமக்குப் பிடிக்காதவர்களைத் திட்டுவார்கள். வசைமொழிகளை அள்ளிவீசுவார்கள். அல்லது இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக்கொண்டதற்காகப் பல்வேறு சோதனைகளும் மிரட்டல்களும் வரும். நம்மீது பொறாமை கொண்டோர் நம்மைத் திட்டுவார்கள்.

அவற்றையெல்லாம் நாம் காதால் கேட்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். அவர்களின் வசவுகள் நம்முடைய கோபத்தைத் தூண்டலாம். அத்தகைய நேரத்தில் பொறுமையை மேற்கொள்ள வேண்டும்; அதுவே அவர்களுக்கான வெற்றிப் பாதையாகும் என்பதே இறைத்தூதர்கள் உள்பட மனிதர்கள் அனைவருக்கும் அல்லாஹ்வின் கட்டளையாகும்.
(இறைநம்பிக்கையாளர்களே!) உங்களுக்கு முன்னர் வேதம் கொடுக்கப்பட்டவர்களாலும், இணை வைத்து வணங்குபவர்களாலும், பல வசைமொழிகளை நிச்சயமாக நீங்கள் செவியுறுவீர்கள். (இத்தகைய சிரமங்களை) நீங்கள் பொறுமையுடன் சகித்துக் கொண்டிருந்து அல்லாஹ்வை அஞ்சியவர்களாக வாழ்ந்து வந்தால் (நீங்கள் வெற்றியடைவீர்கள்.) நிச்சயமாக இதுதான் வீரச்செயலாக இருக்கும்.” (3: 186)

காதால் கேட்கக் கூடாதவையும் உள்ளன. பிறர் பேசும் இரகசியங்களை ஒட்டுக்கேட்பது மிகக் கெட்ட பழக்கமாகும். எனவே பிறர் வெளிப்படையாக நம்மிடம் கூறும் விஷயங்களை மட்டும் நாம்  கேட்டால் போதுமானது. பிறர் நமக்குத் தெரியாமல் பேசும் இரகசியங்களையோ திட்டங்களையோ நாம் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியமில்லை. அதை ஒட்டுக்கேட்பதும் கூடாது.
வானவர்கள் இறைவனின் கட்டளைகளை நிறைவேற்றும் பொருட்டு, அல்லாஹ் தங்களுக்கு இட்ட கட்டளைகள் குறித்துத் தமக்குள் பேசிக்கொள்வது வழக்கம். அதை ஒட்டுக்கேட்பதற்காக ஜின்கள் சென்றன.

அவர்களை அல்லாஹ் வானவர்கள்மூலம் விரட்டியடித்தான். இது குறித்துத் திருக்குர்ஆனில் அல்லாஹ் பேசுகிறான்: (முன்னர்) அங்கு (பேசப்படுபவற்றைச்) செவியேற்பதற்காகப் பல இடங்களில் நாங்கள் அமர்பவர்களாக இருந்தோம். எனவே இப்பொழுது (அவற்றை) யார் செவியேற்கிறாரோ அவர், தமக்காகக் குறிவைத்துக் காத்திருக்கும் நெருப்புப் பந்தத்தைக் காண்பார். (72: 9)

அதாவது முற்காலத்தில் ஜின்கள் வானவர்கள் பேசுவதை வானத்திற்கே சென்று ஒட்டுக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். நபி (ஸல்) அவர்களின் வருகைக்குப் பின்பு வானத்தின் வாசல்கள் அடைக்கப்பட்டுவிட்டன. நாலாப் புறங்களிலும் வானவர்களைப் பாதுகாப்பிற்காக அல்லாஹ் நிறுத்திவிட்டான். எனவே அவர்களால் தற்போது அங்கு செல்ல முடியாது.  இது குறித்து மற்றோர் இடத்தில் அல்லாஹ் கூறுகின்றான்: மேலும் விரட்டப்பட்ட ஒவ்வொரு ஷைத்தானைவிட்டும் அவற்றை நாம் பாதுகாத்துக்கொண்டோம். திருட்டுத்தனமாக (ஒட்டு)க் கேட்பவ(னான ஷைத்தா)னைத் தவிர. அப்போது பிரகாசமான தீப்பந்தம் அவனை (விரட்டி)ப் பின் தொடர்ந்து செல்லும்.” (15: 17-18)

இவ்வாறு செவிப்புலன் குறித்து திருக்குர்ஆனில் அல்லாஹ் ஏராளமான விஷயங்களைக் கூறுகின்றான்.  செவிப்புலன் அல்லாஹ்வின் அருட்கொடையாகும். பிறர் பேசுவதை உடனடியாக நம்மால் கேட்க முடிகிறதல்லவா? எத்தனையோ பேர் செவிப்புலனை இழந்து, மிகுந்த சிரமத்திற்குள்ளாவதைக் காணமுடிகிறது. அதற்கான கருவிகளை மாட்டிக்கொண்டு, நாம் பேசுவதை அரைகுறையாகக் கேட்டு, கேலி கிண்டலுக்கு ஆளாவதைக் காண்கிறோம். அத்தகைய குறைபாடு நமக்கில்லாமல் படைத்த பேரிறைவனுக்கு நாம் நன்றி செலுத்த வேண்டாமா?

இறைவனால் வழங்கப்பட்ட செவியால் நாம் அறிஞர்களின் நற்கருத்துகளைக் கேட்க முயற்சி செய்கின்றோமா? திருக்குர்ஆன் ஓதப்படுவதைக் கேட்கின்றோமா? எப்போதும் காதில் ஹெட்ஃபோனை மாட்டிக்கொண்டு இசையை இரசித்துக்கொண்டிருக்கும் இளைஞர்கள் சற்றேனும் இறைவனின் அருட்கொடையைப் பற்றிச் சிந்திக்க வேண்டும்.  இனிவரும் காலங்களிலாவது அல்லாஹ்வால் வழங்கப்பட்ட செவிப்புலனை நன்மைக்காக மட்டுமே பயன்படுத்துவேன் என்று ஒவ்வொருவரும் உறுதி கொள்வோம்.
=========================================








வெள்ளி, 15 பிப்ரவரி, 2019

இனாம்குளத்தூர் இஜ்திமா!


-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

ஈமானைப் பாதுகாப்பதற்கும் தொழாதோரைத் தொழ அழைப்பதற்கும் கூடுகின்ற மாநாடு என்ற முழக்கத்தோடு கடந்த மாதம் மூன்று நாள்கள் இனாம் குளத்தூரில் தப்லீஃக் மாநாடு நடைபெற்றது. அதில் பத்து இலட்சம் பேர் கலந்துகொண்டதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆறு மாதங்களாக மாநாட்டிற்கான முன்னேற்பாடுகளைச் செய்து, மாபெரும் பொருட்செலவில் ஏற்பாடு செய்யப்பட்ட இம்மாநாட்டில் பத்து இலட்சம் பேர் கலந்துகொண்டிருக்கின்றார்கள் என்றால் அது மிகவும் பாராட்டத்தக்கது. ஏனென்றால் இதில் கலந்துகொண்ட மக்களுக்கு, அல்லாஹ்வின் அன்பைப் பெறுதல் தவிர வேறெந்த நோக்கமும் இருந்திருக்க வாய்ப்பில்லை. காலம் காலமாகத் தொழுகைக்கு அழைத்துக்கொண்டிருக்கின்ற ஒரு குழுவினர், நாமும் சொர்க்கத்திற்குச் செல்ல வேண்டும் என்ற நன்னோக்கத்தில்தான் நம்மையும் அழைக்கிறார்கள் என்ற செய்தி அவர்களின் மனங்களில் பதிந்துபோய்விட்டதால்தான் கொட்டும் பனியையும் பொருட்படுத்தாமல் தியாக மனப்பான்மையோடு முஸ்லிம்கள் பலர் மூன்று நாள்களை அங்கே கழித்திருக்கின்றார்கள்.

பொதுவாக ஒவ்வோர் இயக்கத்தாருக்கும் ஒரு குறிக்கோள் உண்டு. அந்தந்த இயக்கத்தினர் தத்தம் குறிக்கோளைத்தான் மாநாட்டில் செயல்படுத்துவார்களே தவிர பிற இயக்கத்தினர் தத்தம் மனங்களில் நினைப்பதையெல்லாம் நிறைவேற்ற முடியாது. அது சாத்தியமுமில்லை. இம்மாபெரும் மாநாட்டைக் கண்டு வியந்துபோன பலர் தத்தம் விமர்சனங்களை வெவ்வேறு கோணங்களில் முன்வைக்கின்றார்கள்.  

"மிக அருமையான நீர் மேலாண்மை; சிறப்பான உணவு மேலாண்மை; சேவைகள் செய்ய நூற்றுக்கணக்கான தன்னார்வத் தொண்டர்கள்; பத்து இலட்சம் பேர் கலந்துகொண்ட மாநாடு. எல்லாம் சரிதான். ஆனால் என்ன பேசினார்கள், தேசிய, பன்னாட்டு அளவில் முஸ்லிம் சமுதாயம்  எதிர்கொள்ளும் சிக்கல்கள் குறித்து விவாதிக்கப்பட்டதா''  என்று ஒருவர் தமது முகநூல் பக்கத்தில் விமர்சனம் எழுதுகிறார்.  

தமிழகமெங்கும் ஃப்ளெக்ஸ் விளம்பரங்களோ தொலைக்காட்சி விளம்பரங்களோ, ஊர் ஊராக மாநாட்டுக்காக நன்கொடை வசூலித்தலோ எதுவுமின்றிப் பத்து இலட்சம் பேர் கூடுகிறார்கள் என்றால், பொதுமக்கள் அழைப்போரின் உயர்எண்ணத்தைப் புரிந்திருக்கிறார்கள் என்றுதான் பொருள்.  இதன்மூலம் அவர்கள் அரசியல் ஆதாயத்தையோ இன்னபிற ஆதாயங்களையோ நாடவில்லை. மாறாக நம்மையும் தொழுகையாளிகளாக மாற்றவே முயற்சி செய்கிறார்கள் என்பதைப் புரிந்துள்ளார்கள்.  அதனால்தான் எந்த விளம்பரமும் இல்லாவிட்டாலும் செய்தியைக் கேள்விப்பட்டு, மாநாட்டில் கலந்துகொள்கிறார்கள் மக்கள். "நன்மையை ஏவுவதும் தர்மம் ; தீமையைத் தடுப்பதும் தர்மம்'' என்ற நபிமொழியின் அடிப்படையில்தான் தப்லீஃக் இயக்கத்தினர் செயல்படுகிறார்கள் என்பதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். வெளியில் நின்றுகொண்டு ஆயிரமாயிரம் விமர்சனங்கள்  செய்யலாம். ஆனால் தொழாத ஒருவனைத் தொழவைப்பது அவ்வளவு எளிதல்ல என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அதற்கு, விமர்சனம் செய்வோர் களத்தில் இறங்க வேண்டும். 

 தப்லீஃக் இயக்கத்தினர் களத்தில் இறங்கி, வீடு வீடாகச் சென்று தொழுகைக்கு அழைக்கப் புறப்பட்டதால்தான் பட்டிதொட்டியெல்லாம் இன்று தொழுகையாளிகள் மிகுந்துள்ளனர். இது மிகையான செய்தி ஒன்றும் கிடையாது. விமர்சனம் செய்வோர் ஒன்றைக் கவனிக்க வேண்டும். இந்த இயக்கத்தைத் தோற்றுவித்தவரும் ஓர் ஆலிம்தான். ஆலிம்கள் மூலமே எல்லா நலப் பணிகளும் தொடங்கியுள்ளன என்பதை மறந்துவிடலாகாது. இந்திய விடுதலைப்போருக்காக மக்களை ஒன்று கூட்டியதுமுதல் இறைவனை அடைவதற்கான பாதையைக் காட்டியது வரை எல்லாம் ஆலிம்களே ஆவர். தப்லீஃக் குறித்து விமர்சனம் செய்வோர் ஆலிம்களாக இருந்தால், அவர்கள் தம்மைத்தாமே குறைகூறிக்கொள்கிறார்கள் என்றுதான் பொருள்.  

இந்த மாநாட்டில் தமிழக முஸ்லிம்களின் வாழ்வாதாரங்கள், அரசியல் உரிமைகள், சமூக நல்லிணக்கச் செயல்பாடுகள், அதிகாரப் பகிர்வுகள், அரசுக்கான கோரிக்கைகள் போன்றவை குறித்து எதுவுமே இல்லை என்பது ஏமாற்றமே. இந்த மூன்று நாள் இஜ்திமாவிற்கு, கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய்க்குமேல் செலவாகி இருக்கிறது. இந்தச் செலவில் முஸ்லிம் பொறியியல் கல்லூரிகள், மகளிர் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள், தொழிற்சாலைகள் உள்ளிட்டவை அமைத்திருந்தால் ஆயிரம் குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கான வழி கிடைத்திருக்கும். அவற்றிற்கு தப்லீஃக் அமைப்பினர் தமக்குப் பிடித்த பெயரை வைத்து அவர்களேகூட நிர்வாகம் செய்திருக்கலாம். அப்படிச் செய்திருந்தால் இந்த மூன்று நாள் மாநாட்டின் நன்மைகளைவிடக் கூடுதலான, நிலையான நன்மைகள் நம் மக்களுக்குக் கிடைத்திருக்கும் என்று ஒருவர் விமர்சனம் செய்துள்ளார். 

கூடினார்கள் உண்டார்கள் கலைந்தார்கள் என மிகச் சுருக்கமாக விமர்சனம் செய்தோரும் உண்டு. கூடினால் கலையத்தான் வேண்டும். வயிற்றுப் பசிக்கு உண்ணத்தான் வேண்டும். இதுவெல்லாம் இயல்பானதுதானே? இது இங்கு மட்டும் அல்லவே. எல்லா இடங்களிலும் கூடினால் கலையத்தான் செய்வார்கள். பசிக்கு உண்ணத்தான் செய்வார்கள். ஆனால் அங்கு கூடியோர் ஐவேளைத் தொழுகையைக் கூட்டாக  நிறைவேற்றியதும், ஆன்மிக உரைகளைக்  கேட்டதும், இறைவனை அவன் கற்பித்த துதிச் சொற்களால் புகழ்ந்ததும் கவனிக்கத்தக்கவையாகும். அதுவே அங்கு கூடியோர் பெற்ற பயன்களும் பலன்களும் ஆகும்.  

பலரும் களப்பணியாற்றும் இக்காலத்திலும் இன்னும் ஏராளமானோர் இஸ்லாமிய ஏகத்துவக் கலிமா தெரியாமல் இருக்கின்றார்கள். அதன் பொருளை உணராமல் இருக்கின்றார்கள் என்பது வியப்பிலும் வியப்பு.  அது மட்டுமா, இஸ்லாமியக் கடமைகளை விட்டுவிட்டு, மூடப்பழக்கங்களைப் பின்பற்றிக்கொண்டிருக்கின்றார்கள். இத்தகைய தருணத்தில் தொழுகைக்கு அழைக்கின்ற இச்சீர்திருத்தப் பணியும் கைவிடப்பட்டுவிட்டால் மக்களின் நிலை என்னவாகும்? குறைகூறுவோர் சிந்திக்க வேண்டாமா?

ஏன், இச்சீர்திருத்தப் பணியால் எத்தனையோ பேர் அல்லாஹ்வை உணர்ந்து, அவனுக்கு அஞ்சி வாழத் தொடங்கியுள்ளார்கள். மதுவில் மூழ்கியிருந்த எத்தனையோ பேர் அப்பழக்கத்தைக் கைவிட்டு, இன்று நல்ல முறையில் குடும்பம் நடத்திக்கொண்டிருக்கின்றார்கள். குர்ஆன் ஓதத் தெரியாமல் இருந்த பலர் திருக்குர்ஆனின் சிறப்புகளைக் கேட்டறிந்து, திருக்குர்ஆனை அரபிமொழியில் ஓதக் கற்றுக்கொண்டிருக்கின்றார்கள். மார்க்கக் கல்வியே மகத்தானது என்ற ஆழ்ந்த நம்பிக்கையோடு தம் பிள்ளைகளை ஆலிம்களாக, ஹாஃபிழ்களாக உருவாக்கியிருக்கின்றார்கள். இப்படி எத்தனையோ நன்மைகள் இச்சீர்திருத்தப் பணியால் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றன என்பதையும் அறியும்போது இப்பணியை நாம் வரவேற்பதில் தவறில்லை. அதேநேரத்தில் இச்சீர்திருத்தப்பணியை மேற்கொள்வோர் சிலர் தவறு செய்யலாம். அல்லது கொள்கைக்கு முரணாகப் பேசலாம். அதுவெல்லாம் அந்தந்தத்  தனிமனிதத் தவறுகளே ஆகும். அதற்கு அவர்களே பொறுப்பாளர்கள் என்பதையும் நாம் எச்சரிக்கையாகக் கூறிக்கொள்கிறோம். பொத்தாம் பொதுவாக, இப்பணி தவறானது என்று எப்பணியையும் கூற முடியாது.   

அதாவது ஒவ்வோர் இயக்கத்திற்கும் ஒரு குறிக்கோள் உண்டு. அந்தந்த இயக்கத்தினர் தத்தம் குறிக்கோளை நிறைவேற்றிக்கொண்டிருக்கின்றார்கள். ஓர் இயக்கத்தினர் செய்வதை மற்றோர்  இயக்கத்தாரிடம் காண முடியாது. ஏனெனில் அவர்களின் நோக்கமும் குறிக்கோளும் வேறாக இருக்கும். ஆக முஸ்லிம் சமுதாயத்தில் பல்வேறு இயக்கங்கள் உள்ளன. ஒவ்வோர் இயக்கத்தாரும்  இஸ்லாமியச் சமுதாயத்திற்கு ஏதாவதொரு வகையில் சேவை செய்து நன்மையைப் பெற வேண்டும் என்பதற்காகவே களப்பணியாற்றுகின்றார்கள். எல்லோருடைய நோக்கமும் ஒன்றுதான். எனவே நாம் ஒவ்வோர் இயக்கத்தாரும் செய்யும் செயல்பாடுகளை விமர்சனம் செய்வதை நிறுத்திவிட்டு, அவர்கள் சமுதாயத்திற்கு என்னென்ன நன்மைகளைச் செய்கிறார்கள் என்பதை மட்டும் பார்த்து, மகிழ்ச்சியடைவோம். இயன்றால் நாமும் ஏதாவது இயக்கத்தில் இணைந்து செயல்படுவோம். இல்லையேல் அமைதி காப்போம். அதுவே நாம் இச்சமுதாயத்திற்குச் செய்யும் நன்மையாகும். 
=========================================





புதன், 13 பிப்ரவரி, 2019

திங்கள், 11 பிப்ரவரி, 2019

பாக்கியாத் வகுப்பறையில் ஒரு நாள்!

 
அல்பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் இறுதியாண்டு புகாரீ வகுப்பறையில் ஒரு நாள் நடந்த நிகழ்விது. 

ஆசிரியர் மர்ஹூம்  மௌலானா ஹெச். கமாலுத்தீன் பாகவி அவர்கள், ஹதீஸ் பாடம் நடத்துகின்றபோது மாணவர்களின் புரிதலுக்காக, உலக நடைமுறை விஷயங்களையும் உதாரணமாகக் கூறுவது வழக்கம். அதுபோன்று ஒரு நாள், “ஒருவர் மரணித்தபின் மூன்று அவனைப் பின்தொடர்கின்றன. இரண்டு திரும்பிவிடுகின்றன. ஒன்று மட்டும் அவனோடு இருந்துவிடுகிறது. அவனது சொத்து, குடும்பம், நல்லறங்கள்.....:: எனும் நபிமொழியை நடத்தினார்கள். 


அப்போது திடீரென அவர்களது சிந்தனையில் ஒரு கவிஞனின் கவிதை அரைகுறையாக நினைவில் வர, மாணவர்கள் நான்கைந்து பேர் ஒரேநேரத்தில் அக்கவிதையைப் பாடினார்கள். 

ஏய், ஏய், நிறுத்து, நிறுத்து. ஒருத்தன் பாடு என்று கூற, நான்தான் அக்கவிதை வரிகளைப் பாடினேன்.  


வீடு வரை உறவு

வீதி வரை மனைவி 

காடு வரை பிள்ளை

கடைசி வரை யாரோ?


இக்கவிதை வரிகளைக் கேட்டபின், அக்கவிஞனுக்கு மட்டும் இந்த ஹதீஸ் தெரிந்திருந்தால் இப்படிப் பாடியிருக்க மாட்டான். கடைசி வரை வரப்போவது அவனுடைய நல் அமல்கள்தானே? என்றார்கள். 


நான் மூன்றாம் ஆண்டு பாக்கியாத்தில் ஓதிக்கொண்டிருந்தபோது அந்நஃபாயிஸுல் இர்தளிய்யா எனும் நூலை மர்ஹூம் மௌலானா முஹம்மது இல்யாஸ் பாகவி அவர்கள் நடத்திக்கொண்டிருந்தார்கள். இலக்கண, இலக்கிய விதிகளைத் தம்மால் இயன்ற வரை மாணவர்களுக்குப் புரிய வைப்பதில் மிகுந்த அக்கறை  எடுத்துக்கொள்வார்கள். 

 தஷ்பீஹ் (உவமானம், உவமேயம்) குறித்த பாடத்தில் இஸ்த்திஆரா தஃக்யீலிய்யா (கற்பனையை இரவல் வாங்குதல்) என்று ஒரு வகை உண்டு. 

அதாவது இதில் தனித்தனிப் பொருள்களைக் காண முடியும். அவை ஒன்றிணைந்த ஓர் உருவத்தைக் காணமுடியாது. 

"எத்தனையோ தாயத்துகள் போட்டும் எதுவும் பயனளிக்கவில்லை. (எல்லாவற்றையும் தாண்டி) மரணம் தன் கோரநகத்தைப் பதித்துவிட்டது" எனும் கவிஞரின் கற்பனை வரிகளைச் சான்றாகக் காட்டியிருப்பார் நூலாசிரியர். 

1. மரணித்தவரைக் காணலாம். 2. வனவிலங்கின் கோர நகத்தையும் காணலாம். ஆனால் மரணத்தையே ஒரு வனவிலங்காகக் கற்பனை செய்துள்ளார் கவிஞர். அதைக் காணமுடியாது. 

இதை முதல் நாள் நடத்திவிட்டு, மறுநாள் வகுப்பறைக்கு வந்து, நேற்று நடத்திய பாடம் புரிந்ததா? என்று கேட்டுவிட்டு, மறுபடியும் அதை விளக்கிக்கூறத் தொடங்கினார்கள். 

அப்போது அவர்கள் செல்லும் வழியில் எங்கிருந்தோ காதில் விழுந்த கவிதை வரி ஒன்றை மேற்கோள் காட்டி அப்பாடத்தை விளக்கிக் கூறினார்கள். அக்கவிதை வரி இதுதான். 

ரெக்கை கட்டி பறக்குதடி அண்ணாமலை சைக்கிள்... இதில் ரெக்கையைப் பார்க்கலாம். சைக்கிளையும் பார்க்கலாம். ஆனால் ரெக்கை முளைத்த சைக்கிளைப் பார்க்க முடியாது. இதுதான் இஸ்த்திஆரா தஃக்யீலிய்யா என்று கூறி விளக்கினார்கள். 

ஆக, பாக்கியாத்தின் ஆசிரியப் பெருந்தகைகள் மாணவர்களுக்குப் பாடத்தைப் புரிய வைக்க மேற்கொண்ட முயற்சிகளும் அக்கறைகளும் இன்றும் என் மனத்தில் பசுமையாகப் பதிந்துள்ளதை நான் தங்களோடு பகிர்ந்துகொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். 

நம்மைவிட்டுப் பிரிந்துவிட்ட ஆசான்களுக்காக நாம் யாவரும் துஆ செய்வோம். 

-அன்புடன் 

முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி

மணலி, சென்னை-68

சனி, 2 பிப்ரவரி, 2019