ஞாயிறு, 22 அக்டோபர், 2023

பார்வையில் படாத படக்கருவிகள்

  


-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

 

முப்பது ஆண்டுகளுக்குமுன் ஊருக்கு ஒருவரோ இருவரோ நிழற்படக் கருவி வைத்திருப்பார்கள். ஊர்மக்கள் அனைவரும் தத்தம் தேவைக்கேற்ற நேரங்களில் அங்கு சென்று நிழற்படம் எடுத்துக்கொள்வார்கள். குறிப்பாகப் பெண்கள் பருவ வயதை அடைந்தபின்னர், நீண்ட சடைபோட்டு, அதில் முழுவதுமாக மல்லிகைப் பூவால் அலங்காரம் செய்து, நிழற்படக் கடைக்குச் சென்று, சடையின் பூ அலங்காரம் கண்ணாடியின் பிம்பத்தில் தெரியும் வண்ணம் நிழற்படம் எடுத்து வைத்துக்கொள்வார்கள். தம் வீட்டிற்கு வரும் உறவினர்களிடம் அதைக் காட்டி மகிழ்வார்கள்.

 

ஆண்களோ வெளிநாட்டிற்குச் செல்வதற்காகக் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும்போது பாஸ்போர்ட் சைஸ் நிழற்படம் 16 பிரதிகள் எடுத்துக்கொள்வார்கள். பின்னர் பள்ளிக்கூடத்தில் வகுப்புவாரியாக ஒவ்வொரு வகுப்பு மாணவ-மாணவியரோடு அவ்வகுப்பு ஆசிரியர்களும் நின்று நிழற்படம் எடுத்துக்கொள்ளும் வழக்கம் இருந்தது. திருமணம் முடிந்த கையோடு மாப்பிள்ளை-பெண்ணை நிற்க வைத்து ஒரு நிழற்படம் எடுத்துக்கொள்வார்கள். ஆக குறிப்பிட்ட சில நினைவுகளை ஆவணப்படுத்திக்கொள்ளவும் பிற்காலத்தில் அதைப் பார்த்து மகிழவும், கடந்த கால நினைவுகளை அசைபோட்டுக்கொள்ளவுமே நிழற்படங்கள் எடுக்கப்பட்டன; அது ஒரு வசந்தகாலமாக இருந்தது.

 

தற்காலத்தில் அறிதிறன் பேசி (ஸ்மார்ட் ஃபோன்) வைத்துள்ள ஒவ்வொருவரும் புகைப்படக் கலைஞர்தாம். அறிதிறன் பேசி வைத்துள்ள இளைஞர்களும் இளைஞிகளும் அன்றாடம் ஆங்காங்கே கைப்படம் (செல்ஃபீ) எடுத்து மகிழ்கின்றனர். அவர்களுள் பலர் தாம் செல்லும் இடங்கள், உணவகங்கள், உண்ணும் உணவுகள், சந்திக்கும் நண்பர்கள் உள்ளிட்ட அனைத்தையும் படம் பிடித்துக்கொண்டே இருக்கின்றனர். சிலர் தம் திறமையைக் காட்டும்விதத்தில் சாகசங்கள் செய்து கைப்படம் எடுக்கின்றனர். அவ்வாறு எடுக்கும் இளைஞர்கள் சிலர் ஆங்காங்கே இறந்துபோய்விடுகிற துக்க நிகழ்வுகளும் அரங்கேறுகின்றன.

 

இன்றைய இளைஞர்களுள் வக்கிரப் புத்திகொண்டவர்கள் வலைதளங்களில் கிடைக்கின்ற பெண்களின் புகைப்படங்களை வைத்து, ஒட்டுவேலை (மார்ஃபிங்) செய்து, அப்படங்களில் உள்ள முகங்களோடு  ஆடையற்ற கீழ்ப்பகுதியை இணைத்து அசிங்கமான படமாக உருவாக்கி, அதற்கென உள்ள வலைதளங்களுக்கு விற்றுவிடுகின்றார்கள். பழைய நினைவுகளை அசைபோட்டுக்கொள்ள எடுக்கப்பட்ட நிழற்படங்கள், சமூக வலைதளங்களில் நண்பர்கள், தோழிகள் ஆகியோரின் விருப்பக்குறிகளைப் பெறுவதற்காகப் பெண்களால் பதிவேற்றம் செய்யப்பட்ட நிழற்படங்கள், இறுதியில் ஒரு நாள் அவர்களுக்கே கேடாக அமைந்துவிடுகிறது.  கேவலமான மனிதர்களின் குறுமதியால் இளம்பெண்கள் பாதிக்கப்படுகின்றார்கள். பெண்கள் ஓட்டல்கள் அல்லது வேறு எங்கேனும் தனிமையில் குளித்ததைக் காணொலிக் காட்சியாகப் பதிவு செய்துவைத்துக்கொண்டு, அதைச் சொல்லி அப்பெண்களை மிரட்டுவதும் தொடர்கிறது.  கேட்ட பணத்தைக் கொடுக்கவில்லையானால் உன்னைப் பற்றிய அந்தக் காணொலியைச் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துவிடுவேன் என்று மிரட்டிப் பணம் பறிக்கின்றார்கள். இதனால் இளம்பெண்கள் தம்மை மாய்த்துக்கொள்ளும் பரிதாப நிலையும் நீடிக்கிறது. 

 

இன்றைய இளைஞர்கள் பலர் தம் கைப்பேசியை நீண்டதொரு கைப்பிடி நிலைக்கம்பியில் மாட்டி வைத்துக்கொண்டு அலைகின்றார்கள். போவோர், வருவோர் என யாரையும் விடாமல் நிழற்படம், காணொலிக் காட்சி எடுத்து, யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துவிடுகின்றார்கள். அக்காட்சிகளைப் பார்ப்போர் இடுகின்ற விருப்பக்குறிகள் (லைக்ஸ்) எவ்வளவு என்பதைப் பார்த்து ஆனந்தமடைகின்றார்கள். இன்றைய இளைஞர்களும் இளைஞிகளும் சமூக வலைதளங்களில் உலாவருவோரின் விருப்பக்குறிகளுக்கு அடிமையாகிக் கிடக்கின்றார்கள்; அதில் கிடைத்துள்ள கூடுதல் விருப்பக்குறிகள் குறித்துத் தம் நண்பர்களிடம் பெருமையாகப் பேசிக்கொள்கின்றார்கள்.

 

இளம்பெண்கள் சிலர் காணொலிக் காட்சிகளைச் சமூக வலைதளங்களில் பதிவேற்றுகிறார்கள். முஸ்லிமல்லாத பெண்கள் குறித்து நாம் பேச வேண்டியதில்லை. முஸ்லிமான இளம்பெண்களும் சமூக வலைதளங்களில் தம் நிழற்படங்களைப் பகிர்கின்றார்கள்; காணொலிக் காட்சிகளை வெளியிடுகின்றார்கள். ஆடல், பாடல், அங்க அசைவுகள் உள்பட அனைத்தையும் உள்ளடக்கிய முகம் சுழித்துப் பார்க்கக்கூடிய காட்சிகளும் இடம்பெறுகின்றன. முஸ்லிம் பெண்கள் சிலர் இஸ்லாமியக் கட்டுப்பாடுகளையும் வழிகாட்டல்களையும் தாண்டிச்சென்று, காட்சி ஊடகங்களில் நடிகர்களோடு கைகுலுக்குகின்றார்கள்; காட்சி ஊடகங்களில் மற்ற சமுதாயப் பெண்களைப் போன்று தோன்ற நினைக்கின்றார்கள்; பல்வேறு படக்கருவிகள் (காமிராக்கள்) முன் எந்தவித நாணமுமின்றிக் காட்சி தருகின்றார்கள். இத்தகைய இஸ்லாமிய இளம்பெண்கள் நாளை மறுமையில் நடைபெறும் விசாரணை நாளில் என்ன பதில் சொல்லப்போகிறோம் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டியது அவசியமாகும்.

 

வக்கிரப் புத்தி கொண்ட இளைஞர்கள் ஆங்காங்கே மறைமுகமாக, கண்ணுக்குப் புலப்படாப் படக் கருவிகளை வைத்து, காட்சிகளைப் பதிவு செய்து, அதைத் தனிமையில் கண்டு இரசிக்கின்றார்கள்; பலர் அக்காட்சிகளை விற்பனை செய்துவிடுகின்றார்கள். பெண்கள் பயன்படுத்துகிற கழிப்பறைகள், ஒப்பனை அறைகள், குளியல் அறைகள் ஆகியவற்றில் கண்ணுக்குப் புலப்படா வண்ணம் படக்கருவிகள் வைக்கப்படுகின்ற அபாயம் இருப்பதால் பெண்கள் பெரிய பெரிய ஓட்டல்கள், துணிக் கடைகள் செல்லும்போது மிகுந்த கவனத்தோடு இருக்க வேண்டும். வெளியிடங்களில் ஆடைகள் உடுத்துவதையும் துணிக்கடைகளில் ஆடைகளை உடுத்திப் பார்த்து வாங்குவதையும் தவிர்க்க வேண்டும். குளித்தல், உடை மாற்றுதல் உள்ளிட்ட அதில் பதிவாகும் காட்சிகளை அவர்கள் கண்டு இரசிப்பதோடு அதற்கென உள்ள வலைதளங்களுக்கு அவற்றை விற்றுப் பணமாக்கிவிடுகின்றார்கள்.

 

பெண்கள் இதுபோன்ற விபத்துகளிலிருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ளும் பொருட்டு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பதினான்கு நூற்றாண்டுகளுக்குமுன் கூறியுள்ள முன்னெச்சரிக்கையான செய்தி இன்று அவர்களுக்குப் பயனுள்ளதாக இருப்பதை நினைத்து நாம் மிகுந்த வியப்படைகின்றோம்.

 

உம்முத் தர்தாஉ ரளியல்லாஹு அன்ஹா கூறியதைத் தாம் செவியுற்றதாக முஆத் பின் அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்துள்ளதாவது: நான் (பொதுக்) குளியலறையிலிருந்து வெளியே வந்தேன். அப்போது என்னைச் சந்தித்த அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்னிடம், “உம்முத் தர்தாஉ! எங்கிருந்து வருகிறாய்?” என்று கேட்டார்கள்.

 

(பொதுக்) குளியலறையிலிருந்து வருகிறேன் என்றேன். அதற்கு அவர்கள், “யாருடைய கையில் என் உயிர் உள்ளதோ அவன்மீது சத்தியமாக! எந்தப்பெண் தன் தாய்வழி உறவினர் அல்லாத வீட்டில் தன் ஆடையை அவிழ்க்கிறாளோ, அவள் தனக்கும் ரஹ்மா(ன் ஆகிய தன் இறைவ)னுக்கும் இடையிலான திரையைக் கிழித்துவிட்டாள் என்று கூறினார்கள். (முஸ்னது அஹ்மத்: 27038)

 

நபியவர்கள் அன்று கூறிய செய்தி, இன்றையக் காலத்தில் எந்த அளவிற்குப் பெண்களுக்குப் பாதுகாப்பாக இருக்கிறது என்பதைச் சிந்தித்தால் வியப்படையாமல் இருக்க முடியாது. ஆங்காங்கே படக்கருவிகள் இரகசியமாக வைக்கப்படும் சூழ்நிலையில், பெண்கள் தம் நெருங்கிய உறவினர் வீடுகளில் அல்லாது வேறெங்கும் ஆடையை அவிழ்க்காமல் புர்காவோடு இருந்துவிட்டால் இரகசியப் படக்கருவிகளால் எந்தச் சிக்கலும் அவர்களுக்கு ஏற்படப்போவதில்லை. ஆகவே பெண்கள் தம் நெருங்கிய உறவினர்கள் இல்லங்களைத் தவிர வேறெங்கும் தம் ஆடையை அவிழ்க்கவோ மாற்றவோ கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும். நம்முடைய ஒவ்வொரு செயலிலும் நபியவர்களின் முன்மாதிரிவாழ்க்கையைப் பின்பற்றி நடந்தால் எப்போதும் நமக்குப் பாதுகாப்பு; அதில்தான் ஈருலக வெற்றி உள்ளது என்பதை உணர்ந்து செயல்படுவோம்.

===========================