புதன், 8 ஜூலை, 2026

அன்பளிப்புகளைப் பரிமாறிக்கொள்வோம்

 

-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

இமாம் மதீனா பள்ளிவாசல், பட்டினம்பாக்கம், சென்னை-28

 

இஸ்லாம் அன்பளிப்புகள் (பரிசுகள்) வழங்குவதையும் பெற்றுக்கொள்வதையும் ஊக்குவிக்கிறது. அன்பளிப்புகள் மனிதர்களுக்கிடையேயான அன்பையும், ஒற்றுமையையும், சகோதரத்துவத்தையும் வளர்க்கும் ஒரு சிறந்த வழியாகக் கருதப்படுகின்றன. குறிப்பாக உறவினர்கள், நண்பர்கள், அண்டை வீட்டார் மற்றும் சமூக உறுப்பினர்களுடன் நல்லுறவைப் பேணுவதற்குப் ‘பரிசளித்தல்’ முக்கிய இணைப்புப் பாலமாக அமைகிறது.

 

 

அல்லாஹ் கூறுகிறான்: “நன்மையிலும் இறையச்சத்திலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ளுங்கள்.”  (5:2) அன்பளிப்புகள் வழங்குவதும் நன்மையில் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்வதன் ஒரு வடிவமாகும். எனவே நாம் பிறருக்கு நன்மை செய்ய நாடினால், முதலில் அவர்களுக்கு அன்பளிப்பு வழங்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். நாம் எத்தனையோ பேரைப் பார்க்கிறோம். அத்தனைப் பேரையும் நினைவில் வைத்துக்கொள்வது கிடையாது. அதுபோலவே நம்மை எத்தனையோ பேர் பார்க்கின்றார்கள். நம்மை எத்தனைப் பேர் நினைவில் வைத்திருப்பார்கள் என்று நமக்குத் தெரியாது. ஆனால் ஒருவரின் மனத்தில் நம்மைப் பற்றிய நினைவு ஆழமாகப் பதிய வேண்டுமெனில், நாம் அவர்களுக்கு அன்பளிப்பு வழங்க வேண்டும்.

 

  

பரிசுகளைப் பரிமாறிக்கொள்ளுங்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்: “நீங்கள் ஒருவருக்கொருவர் அன்பளிப்புகளைப் பரிமாறிக் கொள்ளுங்கள்; நீங்கள் ஒருவரை ஒருவர் நேசிப்பீர்கள்.” (அதபுல் முஃப்ரத்: 594) நாம் ஒருவருக்குப் பரிசோ அன்பளிப்போ வழங்கும்போது அவரின் மனத்தில் நம்மைப் பற்றிய நன்மதிப்பும் மரியாதையும் கூடுவதோடு, அன்பும் அதிகரிக்கிறது. ஆகவே அன்பளிப்புகளைப் பரிமாறிக்கொள்வதால்  அன்பு வளர்கிறது என்பதை உணர்வோம்.

 

 

நபியவர்கள் பரிசுகளை ஏற்றுக்கொள்ளுதல்: எவ்வியத்திலும் நபியவர்களையே நாம் பின்பற்றி வருகிறோம். அந்த வகையில் நபியவர்கள் மக்கள் மனமுவந்து வழங்கும் பரிசுகளை, அன்பளிப்புகளை ஏற்றுக்கொண்டார்கள்.  எனவே பிறர் நமக்கு வழங்கும் பரிசுகளை-அன்பளிப்புகளை நாம் ஏற்றுக்கொள்ளலாம். “அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்பளிப்பை ஏற்றுக்கொள்வார்கள்; அதற்குப் பதிலாக (ஏதாவது) வழங்குவார்கள்.” (புகாரீ) இந்த ஹதீஸ் பரிசு கொடுப்பதும் பெறுவதும் நபிவழி (சுன்னத்) என்பதை எடுத்துக்காட்டுகிறது.

 

 

சிறிய பரிசையும் அலட்சியப்படுத்தாதீர்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்: “முஸ்லிம் பெண்களே! ஓர் அண்டை வீட்டுப் பெண் தனது அண்டை வீட்டுப் பெண்ணுக்குக் கொடுக்கும் பரிசு ஆட்டின் (கால்) குளம்பாக இருந்தாலும் அதை அற்பமாகக் கருத வேண்டாம்.” (புகாரீ, முஸ்லிம்) இதன் மூலம் பரிசின் மதிப்பு அல்ல, அதன் பின்னுள்ள அன்பும் நல்லெண்ணமும்தான் முக்கியம் என்பதை அறியலாம். பிறர் நமக்கு வழங்கும் அன்பளிப்பின் மதிப்பை எடைபோட எத்தனிக்கக் கூடாது. மாறாக அவர்கள் மனமுவந்து வழங்குகிற  அன்பைத்தான் நாம் பார்க்க வேண்டும். அந்த வகையில் தம் வீட்டில் சமைத்த ஏதோ ஒரு பண்டத்தை நமக்கு வழங்கும்போது அதை அற்பமாகக் கருதாமல், முகமலர்ச்சியோடு அதைப் பெற்றுக்கொண்டு நன்றி கூற வேண்டும்.  நம்மிடம் ஏதாவது இருந்தால் அவர்களின் பாத்திரத்தை வெறுமனே கொடுக்காமல் அதில் அதை வைத்துக் கொடுக்கலாம். இதனால் அவர்களுக்கும் நமக்கும் இடையே அன்பு வளரும்; மனப்பகை மறையும்.  

 

 

அன்பளிப்புகள் வழங்குவதன் நன்மைகள்: இதயங்களில் அன்பை வளர்க்கும்; பகைமை, பொறாமை போன்றவற்றைக் குறைக்கும்; உறவுகளை வலுப்படுத்தும்; சமூக ஒற்றுமையை மேம்படுத்தும்; அல்லாஹ்வின் அருளையும் நற்கூலியையும் பெற்றுத்தரும். மேலும் அன்பளிப்பு வழங்குவதும் பெற்றுக்கொள்வதும் நபியவர்களின்  சுன்னத்தாக (வழிமுறை) இருப்பதால் சுன்னத்தைக் கடைப்பிடித்ததற்கான நன்மையும் கிடைக்கும்.  

 

 

நம்முள் ஒருவருக்கொருவர் அன்பளிப்பு வழங்கிக்கொள்வது நம்மிடையே நல்லுறவை வளர்க்கும் ஒரு சிறந்த வழியாகும். “பரிசுகளைப் பரிமாறிக் கொள்ளுங்கள்; நீங்கள் ஒருவரை ஒருவர் நேசிப்பீர்கள்” என்ற நபிமொழி, அன்பளிப்புகளின் சமூக மற்றும் ஆன்மிக முக்கியத்துவத்தை அழகாக எடுத்துரைக்கிறது. எனவே, சிறிதாக இருந்தாலும் மனமார்ந்த அன்பளிப்புகளை வழங்கும் பழக்கத்தை முஸ்லிம்களாகிய நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும். அது நம்மிடையே அன்பை வளர்க்கும் ஓர் ஊடகமாகும் என்பதை நாம் உணர வேண்டும்.

 

 

மனைவிக்கு அன்பளிப்பு வழங்குதல்: வீட்டில் காலை முதல் இரவு வரை தொடர்ந்து வேலை செய்துகொண்டிருக்கும் மனைவிக்குக் கணவன் ஏதேனும் அன்புப் பரிசை மனமுவந்து வழங்கும்போது அத்தனை நாள்கள் வேலை செய்த சோர்வெல்லாம் மறந்துபோய், புத்துணர்வோடு செயல்பட வழிவகுக்கும். கணவன்-மனைவிக்கிடையே அன்பு வளரும். இஸ்லாம் கணவன்-மனைவி உறவை அன்பு, கருணை, பரிவு ஆகியவற்றின் மீது அமைத்துள்ளது. மனைவிக்கு அன்பளிப்பு (பரிசு) வழங்குவது கணவன் தன் அன்பை வெளிப்படுத்தும் அழகிய வழிகளில் ஒன்றாகும். இது வெறுமனே பொருள் கொடுப்பது மட்டுமன்று; மனைவியின் மனதை மகிழ்விப்பதும், குடும்பப் பிணைப்பை வலுப்படுத்துவதும் ஆகும். "நீ உனது குடும்பத்திற்காகச் செலவிடும் தீனாருக்கே மிக அதிக நன்மை உண்டு" என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (முஸ்லிம்: 995)

 

 

பிள்ளைகளுக்கு அன்பளிப்பு வழங்குதல்: படிப்பில் பிள்ளைகளை ஊக்குவிக்கும் முகமாக, நீ முதல் மதிப்பெண் வாங்கினால், உனக்கு ‘இன்ன பரிசு’ வாங்கித் தருவேன் என்று சொன்னால் போதும். உற்சாகத்தோடு அப்பிள்ளைகள் படிப்பைத் தொடர்வார்கள். பின்னர் அப்பிள்ளைகள் முதல் மதிப்பெண் வாங்கினாலும் வாங்காவிட்டாலும் வாக்களித்த பரிசுப் பொருளை வாங்கிக்கொடுக்கும்போது அப்பிள்ளைகள் நெகிழ்ந்துபோவார்கள். மேலும் பிள்ளைகளுக்கு அன்பளிப்பு வழங்குதல், பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையே பாசப்பிணைப்பை வளர்க்கும் ஓர் ஊடகமாகும்.  

 

 

அன்பளிப்பு வழங்குவதில் நீதியைப் பேணுதல்: பிள்ளைகளுக்கு அன்பளிப்பு வழங்குவதில்  அவர்களிடையே நீதியைப் பேண வேண்டும். அது குறித்த ஒரு செய்தியைப் பார்க்கலாம். நுஅமான் பின் பஷீர் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்: என்னுடைய தந்தை எனக்கு ஓர் அன்பளிப்பை வழங்கி, அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைச் சாட்சியாக்க விரும்பினார். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், “உமது எல்லாப் பிள்ளைகளுக்கும் இதுபோல் வழங்கியுள்ளீரா?” என்று  கேட்டார்கள்.  அவர் “இல்லை” என்றார். அப்போது நபி  ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், “அல்லாஹ்வை அஞ்சுங்கள்; உங்கள் பிள்ளைகளிடையே நீதியோடு நடந்து கொள்ளுங்கள்” என்று கூறினார்கள்.

 

ஆக ஒன்றுக்கு மேற்பட்ட பிள்ளைகளைப் பெற்றவர்கள், தம்முடைய ஒரு பிள்ளைக்கு மட்டும் பரிசு கொடுத்துவிட்டு, மற்றவர்களுக்குக் கொடுக்காமல் விட்டுவிடக் கூடாது. ஏனெனில் அது பிள்ளைகள் மத்தியில் ஏற்றத்தாழ்வு மனப்பான்மையை உருவாக்கிவிடும். மேலும் அவர்களுக்கிடையே பொறாமை உணர்வையும் ஏற்படுத்த வாய்ப்புண்டு. எனவேதான் ஒன்றுக்கு மேற்பட்ட பிள்ளைகள் இருக்க, ஒருவருக்கு மட்டும் கொடுப்பதை நபியவர்கள் தடைசெய்தார்கள்.

உறவினர்களுக்கு அன்பளிப்பு வழங்குதல்: "ஏழைக்கு வழங்கப்படும் உதவி ஒரு தர்மமாகும்; ஆனால் உறவினருக்கு வழங்கப்படும் உதவி இரண்டு நன்மைகளை உடையது: அது தர்மமாகவும், உறவைப் பேணுவதாகவும் அமைகிறது” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (திர்மிதீ: 658)

 

உறவினர்களுக்கு அன்பளிப்பு வழங்குவது உறவுகளை வலுப்படுத்துகிறது; அன்பையும் ஒற்றுமையையும் வளர்க்கிறது; தர்மத்தின் நன்மையையும் உறவைப் பேணிய நன்மையையும் ஒருசேரப் பெற்றுத் தருகிறது; குடும்பங்களில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் உருவாக்குகிறது. எனவே, பெற்றோர், சகோதரர்கள், சகோதரிகள், மாமா, சித்தப்பா, பெரியப்பா, அத்தை, மாமி உள்ளிட்ட உறவினர்களுக்கு அவ்வப்போது அன்பளிப்புகளை வழங்குவது இஸ்லாம் ஊக்குவிக்கும் உயர்ந்த நற்குணங்களில் ஒன்றாகும்.

 

 

நபியவர்களுக்குத் தோழர்கள் அன்பளிப்பு வழங்குதல்:  நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தோழர்களான ஸஹாபாக்கள், நபியவர்களுக்கு அன்பளிப்புகள் வழங்கியுள்ளனர். நபியவர்களும் அவற்றை ஏற்றுக்கொண்டுள்ளார்கள். ஆனால், அவர்கள் ஸதகா (தர்மம்) வழங்கியதை ஏற்றுக்கொள்ளவில்லை. அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்: “அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்பளிப்பை ஏற்றுக்கொள்வார்கள்; ஆனால் தர்மத்தை உண்ணமாட்டார்கள்.” (புகாரீ: 2576)

 

அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்: “கிராமப்புற மக்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வரும்போது, அவர்களுக்கு அன்பளிப்புகளைக் கொண்டு வருவார்கள்.”

 

அது குறித்த செய்தி முஸ்னது அஹ்மத் ஹதீஸ் தொகுப்பு நூலில் இடம்பெற்றுள்ளது: ஸாஹிர் என்ற பெயருடைய ஒரு கிராமவாசி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குக் கிராமத்திலிருந்து அன்பளிப்புகளைக் கொண்டு வருவார். அவர் புறப்பட விரும்பும்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவருக்குத் தேவையானவற்றை வழங்குவார்கள். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் “ஸாஹிர் எங்களின் கிராமவாசி; நாங்கள் அவரின் நகரவாசிகள்” என்று கூறினார்கள். (முஸ்னது அஹ்மத்: 12648)

 

ஸஹாபாக்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அன்பளிப்புகள் வழங்கியது, அவர்கள்மீது கொண்டிருந்த அன்பின் காரணமாகவும், அல்லாஹ்வின் தூதரைக் கௌரவிப்பதற்காகவும், அவர்களோடு நெருக்கத்தை ஏற்படுத்திக்கொள்வதற்காகவும், அவர்களின் அன்பையும் துஆவையும் பெற வேண்டுமென்பதற்காகவும் ஆகும். நபியவர்கள் அவற்றை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டதோடு, பல சந்தர்ப்பங்களில் அதற்குப் பதிலாக அன்பளிப்புகளையும் வழங்கினார்கள். இதனால், அன்பளிப்புகளைப் பரிமாறிக் கொள்வது இஸ்லாமிய மார்க்கத்தில் அன்பையும் சகோதரத்துவத்தையும் வளர்க்கும் ஒரு சிறந்த ‘சுன்னத்’ என்பதை அறியலாம்.

 

 

ஆக நாம் ஒருவருக்கொருவர் வழங்கும் அன்பளிப்பு நமக்கு மத்தியில் அன்பை வளர்ப்பவை; உற்சாகத்தைத் தூண்டுபவை. நாம் நம் அண்டை வீட்டாருக்கு, உறவினர்களுக்கு, பிள்ளைகளுக்கு, தோழர்களுக்கு, கணவன் மனைவிக்கு, மனைவி கணவருக்கு வழங்கும் அன்பளிப்பு நம் உறவையும் பாசத்தையும் தோழமையையும் நட்பையும் காதலையும் வளர்க்கும். எனவே நாம் ஒருவருக்கொருவர் அன்பளிப்புகளை வழங்கி, அன்பைப் பரிமாறிக்கொள்வோம். நபியவர்களின் வழிமுறையை (சுன்னத்தை)க் கடைப்பிடிப்போம்.  

===================



கருத்துகள் இல்லை: