புதன், 18 ஆகஸ்ட், 2021

மனக்கோட்டம் நீக்குவோம்!

-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.
------------------------------------ 
கோட்டம் என்றால் கோணல் என்று பொருள். மனதில் தவறான எண்ணங்கள், கோணல் சிந்தனைகள் ஏற்பட்டால் அதனை மனக்கோட்டம் என்று சொல்வர். பேசும் பேச்சில் தவறான வார்த்தைகள், நெறிதவறிய சொற்கள் வெளிப்பட்டால் அதனைச் சொற்கோட்டம் என்பர்.

 கோணல் என்ற வார்த்தையை உயர்ந்தோன் அல்லாஹ் திருக்குர்ஆனில் பயன்படுத்தியுள்ளான். 
எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. அவன்தான் தன்னுடைய அடியார்மீது இவ்வேதத்தை இறக்கிவைத்தான். அதில் அவன் எவ்விதக் கோணலையும் ஆக்கவில்லை. அதனை நேர்மையானதாக (அவன் ஆக்கினான்). (18: 1-2)


இஸ்லாமிய மார்க்கம் நேர்மையையும் நேரான பாதையையுமே காட்டுகிறது. அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் மனித குலத்திற்கு நேரிய வழியைத்தான் காட்டுகின்றார்கள். நேர்மையாகப் பேசவும் நேர்மையாக உழைக்கவும் நேர்மையாகத் தீர்ப்பளிக்கவும் கட்டளையிடுகின்றார்கள். தவறான பாதை செல்வதையும் தவறான வார்த்தைகள் பேசுவதையும் முறைதவறி உழைப்பதையும் தடை செய்கின்றார்கள்.

 
"இறைநம்பிக்கைகொண்டோரே அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள். நீங்கள் சொல்வதைத் தெளிவாகச் சொல்லுங்கள்'' (33: 70) என்று திருக்குர்ஆன் கூறுகிறது. 
"அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கைகொண்டவர் பேசினால் நன்மையைப் பேசட்டும். அல்லது (வாய்மூடி) மௌனமாக இருந்துவிடட்டும்'' (புகாரீ: 6018) என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.

 
நேர்மையாகச் சம்பாதிக்க வேண்டும்; உண்மையே பேச வேண்டும்; வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்; வாங்கிய கடனை உரிய முறையில் திருப்பிச் செலுத்த வேண்டும்; பதுக்கல் செய்யக்கூடாது; ஏமாற்றக்கூடாது; மோசடி செய்யக்கூடாது; பொய் பேசக்கூடாது; அளவு நிறுவையில் குறைத்தல் கூடாது உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகளை நபி  ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வழங்கியுள்ளார்கள். இவை அனைத்தும் மனக்கோட்டம் நீக்கி, சீரான வாழ்க்கைக்கு வழிகாட்டுபவையாகும். 


கோணல் புத்தியுடையோர் எதையும் கோணலாகவே சிந்திப்பார்கள். கோணலான பாதையிலேயே செல்வார்கள். கோணல் புத்தியுடைய வியாபாரிகள் கோணலாகச் சிந்தித்து மோசடி செய்து, ஏமாற்றிச் சம்பாதிக்க நினைப்பார்கள். இன்றைய நவீன உலகில் வியாபாரிகள் பலர் கோணல் புத்தியுடையவர்களாகவே காணப்படுகின்றார்கள்.


 அதிலும் குறிப்பாக ஆள்லைன் வியாபாரிகள் பெரும்பாலும் மக்களை ஏமாற்றிப் பிழைக்கத் திட்டம் தீட்டுகிறார்கள். எந்தெந்த வழிகளிலெல்லாம் மக்களை ஏமாற்றலாம் என்று மணிக்கணக்கில், நாள்கணக்கில் யோசித்துச் செயல்படுகின்றார்கள். 
சான்றாக ஒரு பொருள் குறித்த விவரப்படங்கள், காணொலிக் காட்சி, விவரக் குறிப்பு எல்லாமே யாரையும் எளிதில் கவரும் வண்ணம் இணையதளத்தில் வெளியிடுவார்கள். அந்தக் காணொலிக் காட்சியைப் பார்க்கும் பெரும்பாலோர் அந்தப் பொருளை வாங்கிட ஆர்டர் கொடுத்துவிடுவார்கள்.

பொருள் வந்தபின் கையெழுத்துப்போட்டு, பணத்தைச் செலுத்தி, அப்பொருளைப் பெற்றுக்கொண்டபின், பிரித்துப் பார்த்தால் நாம் கேட்டது ஒன்றாகவும் அவர்கள் அனுப்பியது வேறொன்றாகவும் இருக்கும். நாம் ஆசைப்பட்டு ஆர்டர் கொடுத்த பொருள் அதனுள் இருக்காது. இதுதான் ஆன்லைன் மோசடி.

    
கோணல் புத்தியுடைய வியாபாரிகள் நாம் வாங்கும் பொருள்களின் எடையைக் குறைத்து, குறுக்கு வழியில் சம்பாதிக்க நினைப்பார்கள். இது காலம் காலமாக நடைபெற்று வருகின்ற மனக்கோட்டம்தான். இறைத்தூதர் ஷுஐப் அலைஹிஸ்ஸலாம் தம் சமுதாய மக்களுக்கு அறிவுறுத்திய நல்லுரை குறித்துத் திருக்குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது:

 
என்னுடைய மக்களே! அளவையும் நிறுவையையும் நீதியாக முழுமைப்படுத்தி வழங்குங்கள். மனிதர்களுக்கு(க் கொடுக்க வேண்டிய) அவர்களுடைய பொருள்களைக் குறைத்துவிடாதீர்கள். பூமியில் குழப்பம் செய்து கொண்டு அலையாதீர்கள். நீங்கள் உண்மையாகவே நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால் (உங்கள் தொழிலில் இலாபகரமாக) அல்லாஹ் மீதப்படுத்துவதே உங்களுக்கு மிக்க மேலானதாகும். நான் உங்களைக் கண்காணிப்பவனல்லன்; (அல்லாஹ்தான் உங்களைக் கண்காணிப்பவன். ஆகவே, அவனுக்கு நீங்கள் பயந்து நடந்து கொள்ளுங்கள்)'' என்று கூறினார். (11: 85-86)


மேலும் அல்லாஹ் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய சமுதாய மக்களை எச்சரிக்குமுகமாகப் பின்வருமாறு கூறுகின்றான்: 
அளவில் மோசம் செய்பவர்களுக்குக் கேடுதான். அவர்கள் மனிதர்களிடம் அளந்து வாங்கினால், நிறைய அளந்து கொள்கின்றனர். மற்றவர்களுக்கு அவர்கள் அளந்து கொடுத்தாலும் அல்லது நிறுத்துக் கொடுத்தாலும் குறைத்து (அவர்களை நஷ்டப்படுத்தி) விடுகின்றனர். மகத்தான ஒரு நாளில், நிச்சயமாக அவர்கள் (உயிர் கொடுத்து) எழுப்பப்படுவார்கள் என்பதை அவர்கள் நம்பவில்லையா? (83: 1-5) 


இறைத்தூதர் ஷுஐப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் காலம் முதல் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலம் வரையுள்ள சமுதாய மக்கள் அளவையிலும் நிறுவையிலும் குறைவு செய்தே வியாபாரம் மேற்கொண்டிருக்கின்றார்கள் என்பதைத் திருக்குர்ஆன் மூலம் அறிகிறோம். அந்த மனக்கோட்டம் இன்றுவரை தொடர்கிறது என்பது மட்டுமல்ல மிகவும் அதிகரித்துள்ளது என்பது கசப்பான உண்மை. 


வியாபாரத்தில் மிகப்பெரும் அளவில் மோசடி செய்வோர் தங்க வியாபாரிகள்தாம் என்றால் மிகையில்லை. ஆம். நாம் ஒரு பவுன் (8 கிராம்) தங்கம் வாங்கினால் அதில் 3 கிராம் செம்புக்குத் தங்கத்திற்கான பணத்தைக் கொடுக்க வேண்டியுள்ளது. அதாவது ஒரு பவுன் தங்கச் சங்கிலிக்கு 1.5 கிராம் செம்பு சேர்த்தால்தான் நகை செய்ய முடியும். 8 கிராம் தங்கத்தில் 1.5 செம்பு போக 6.5 கிராம்தான் தங்கம். பிறகு சேதாரம் என்ற பெயரில் மேலும் 1.5 கிராம் செம்பைத் தங்கத்தின் விலைக்கு பில்போட்டு விற்கின்றார்கள். ஆக 6.5 கிராம் தங்கமும், 3 கிராம் செம்பும் கொண்ட ஒரு பவுன் தங்கச் சங்கிலியில் (மொத்தம் 9.5) 3 கிராம் செம்பைத் தங்கத்தின் விலைக்கே ஏமாற்றி விற்கிறார்கள். 
ஆகவே இவர்கள்தாம் மிகப்பெரும் கோணல்புத்தியுடையவர்கள்; மோசடிக்காரர்கள் ஆவர். 


கோணல்புத்தியுடையவர்கள் குறுக்கு வழியில் பொருளீட்ட முனைகின்றார்கள். மக்கள் சாப்பிடுகிற உணவுப் பொருள்களில் கலப்படம் செய்து விற்பனை செய்கிறார்கள். சிறுவர் சிறுமியர் சாப்பிடுகிற உணவுப் பொருள்களிலும் தின்பண்டங்களிலும்கூட இரக்கமின்றிக் கலப்படம் செய்கிறார்கள். அதனால் சிறுவர்-சிறுமியர் உடல்ரீதியாகப் பாதிக்கப்படுவார்களே என்றெல்லாம் கவலைப்படுவதில்லை.

 
எல்லாத் தளங்களிலும் கோணல்புத்தியுடையோர் உள்ளனர். சமய வழிகாட்டிகளாகத் திகழ்வோர், நோயிலிருந்து மனிதர்களைக் காக்கும் மருத்துவர்கள், பிள்ளைகளுக்கு நல்வழிகாட்டியாகத் திகழும் ஆசிரியர்கள், இணையதளச் சேவைகளை வழங்குவோர், வங்கியில் பணிபுரிவோர், திருமண ஒருங்கிணைப்பாளர்கள், அரசு அதிகாரிகள், அரசியல் வாதிகள் உள்பட அனைத்து வகையினரிலும் மனக்கோட்டம் கொண்டோர் உள்ளனர்.


மனக்கோட்டம் உடையோர் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்துவதில்லை. கடன் வாங்கும்போதே எப்படியாவது ஏமாற்றிவிட வேண்டும் என்ற எண்ணத்திலேயே வாங்குகின்றனர். பிறகு கடன் பெற்ற வங்கியை அல்லது தனி மனிதரை ஏமாற்றிவிடுகின்றனர். அல்லது விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெஹுல் ஜோஷி முதலானோரைப் போல் வெளிநாடுகளுக்குச் சென்று தஞ்சமடைந்துவிடுகின்றனர்.


 
வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பல்வேறு தருணங்களில் கூறியுள்ளார்கள். அவற்றுள் ஒன்று: யார்  கடனைத் திருப்பிச் செலுத்த எண்ணம்கொண்டாரோ அவருக்கு அல்லாஹ்வின் உதவி உள்ளது என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (நூல்: முஸ்னத் அபீதாவூத்: 1628) 

அதாவது கடனை வாங்குகிறபோதே அதைத் திருப்பிச் செலுத்த வேண்டும் என்ற நல்லெண்ணம் கொள்ள வேண்டும். அந்த எண்ணம் உடையோருக்கு அதை நிறைவேற்றுவதற்கான நல்வாய்ப்பை அல்லாஹ் உருவாக்குகிறான்; உதவி செய்கிறான். மாறாக எப்படியாவது ஏமாற்றிவிட வேண்டும் என்ற மனக்கோட்டம் இருந்தால் அதை நிறைவேற்றுவதற்கான வாய்ப்பு கிடைக்காமலேயே போய்விடும். 


பிறரைப் பற்றி நல்லதே எண்ண வேண்டும் என்பது நபியவர்களின் நல்லுரையாகும். தம் சமுதாய மக்கள் பிறரைப் பற்றித் தவறாக எண்ணக்கூடாது என்று வலியுறுத்திக் கூறியுள்ளார்கள்.
அப்துல்லாஹ் பின் அம்ர் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்துள்ளதாவது: அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் விடைபெறும் ஹஜ்ஜின்போது தவாஃப் செய்தார்கள். அப்போது அவர்கள், "உன்னுடைய மணம்தான் என்னே! உன்னுடைய வாசனைதான் என்னே! உன்னுடைய கண்ணியம் எவ்வளவு மகத்தானது! உன்னுடைய மதிப்பு எவ்வளவு பெரியது! எவனுடைய கையில் முஹம்மதின் ஆன்மா இருக்கிறதோ அவன்மீது சத்தியமாக! ஓர் இறைநம்பிக்கையாளரின் கண்ணியம் அல்லாஹ்விடம் உன்னுடைய கண்ணியத்தைவிட மகத்துவம் வாய்ந்தது. அவருடைய பொருளும் அவருடைய உயிரும் (உயர்வானவை). நாம் அவருக்கு நன்மையைத் தவிர எதையும் எண்ணமாட்டோம்'' என்று கூறினார்கள்.  (நூல்: இப்னுமாஜா: 3922)


அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகின்றான்:  இறைநம்பிக்கைகொண்டோரே அதிகமான (கற்பனை) எண்ணங்களைவிட்டுத் தவிர்ந்துகொள்ளுங்கள். திண்ணமாக எண்ணங்களுள் சில பாவம் ஆகும்.  (49: 12)


ஓர்  இறைநம்பிக்கையாளரைப் பார்த்தால் அவரைப் பற்றி நல்லவிதமாகத்தான் எண்ண வேண்டுமே தவிர தவறாக எண்ணக்கூடாது என்பதையே நபியவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள். அல்லாஹ்வும் அதையே வலியுறுத்துகின்றான்.


 சிலவேளைகளில் சிலரின் மனக்கோட்டம் பாவமாக ஆகிவிடுகின்றது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். 
ஆகவே நாம் நம் மனங்களிலுள்ள கோட்டங்களைக் களைந்து நல்லெண்ணத்தோடு வாழ்வோம்.  பல்வேறு தளங்களில் உள்ள கோணல்களைக் களைந்து நேரிய பாதையில் சீரிய சிந்தனையோடும்  நல்லெண்ணத்தோடும் வாழ அல்லாஹ் அருள்வானாக. 
===========