புதன், 26 செப்டம்பர், 2018

அரபுக் கல்லூரியில் "சீட்' கிடைக்கவில்லையா?!-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

"என்னோட பையன் ஒழுங்கா படிக்க மாட்டேங்கிறான், என்ன செய்யலாம்?'' என்று கேட்டால், "அவனை ஏதாவது அரபுக் கல்லூரியில் சேர்த்துவிடுங்க'' என்று பதில் சொல்வார்கள். இது கடந்த கால உரையாடல். தற்போது நிலைமை தலைகீழாகிவிட்டது. "என் மகனுக்கு அரபுக் கல்லூரியில் சீட் கிடைக்கவில்லையே!'' என்று ஏங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. காரணம், அரபுக் கல்லூரிகளின் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. பொத்தாம் பொதுவாக எல்லோருக்கும் இடம் இல்லை. குறிப்பிட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டவராக இருந்தால் மட்டுமே சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். 

அரபுக் கல்லூரியில் சேர விரும்பும் மாணவர், எட்டாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்; திருக்குர்ஆனைப் பார்த்து, சரளமாக ஓதத் தெரிந்திருக்க வேண்டும்; பொது அறிவுத் திறன் இருக்க வேண்டும்; சொன்னால் புரிந்துகொள்கின்ற திறன் இருக்க வேண்டும்; வாசித்ததை விளக்கிக் கூறுகின்ற திறன் இருக்க வேண்டும்-என்று பட்டியல் நீள்கிறது. 

ஏன் இத்தனை நிபந்தனைகள்? தற்போது நடைபெற்று வரும் அரபுக் கல்லூரிகள் முந்தைய தலைமுறை அரபுக் கல்லூரிகள் அல்ல. அவை நவீன அரபுக் கல்லூரிகள். காலத்தின் சூழலுக்கேற்பவும் தேவைக்கேற்பவும் மாற்றப்பட்டுள்ள, புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள அரபுக் கல்லூரிகள். இவை இரட்டைக் கல்வி முறை-பாடத்திட்டத்தைச் செயல்படுத்துகின்றன. அதன்படி ஒருவர் ஏழாண்டுகளில் ஆலிமாக ஆவதோடு பி.காம்., பிசிஏ, பிபிஏ உள்ளிட்ட ஏதாவது ஓர் இளங்கலைப் பட்டம் பெற்றவராகவும் பல்கலைக் கழக அங்கீகாரம் பெற்ற-இளங்கலைப் பட்டத்திற்கு நிகரான அஃப்ஸலுல் உலமா-அரபுமொழித் தேர்வெழுதி சான்றிதழ் பெற்றவராகவும் வெளிவருகிறார். 

காலை முதல் முற்பகல் வரை மார்க்கப் படிப்பு; பிற்பகல் முதல் மாலை வரை பள்ளிப் படிப்பு. எல்லாம் ஒரே வளாகத்திற்குள் கிடைத்துவிடுகின்றன. இரண்டையும் ஒருசேரக் கற்க வேண்டியுள்ளதால் திறமை மிக்கோருக்கே முதலிடம் வழங்கப்படுகின்றது. எனக்குத் தெரிந்த இரட்டைக் கல்வி முறை அரபுக் கல்லூரி ஒன்றில் சேர விண்ணப்பித்தோர் எண்ணிக்கை நூற்றைம்பது. சேர்க்கப்படவுள்ள மாணவர்களின் எண்ணிக்கையோ முப்பது மட்டுமே. ஆகவே எழுத்துத் தேர்வு,  நேர்முகத் தேர்வு ஆகியவற்றின்மூலம் வடிகட்டித் தேர்வு செய்ய வேண்டிய நிர்ப்பந்த நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். 

இரண்டு கல்விகளிலும் மாணவர்கள் சிறந்து விளங்குகின்றார்களா? இக்கேள்விக்கு விடையாக அவர்கள் சொன்ன பதில்: எங்கள் கல்லூரியின் மூலம் பிளஸ்-டூ தேர்வெழுதிய மாணவர்கள் பலர் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மதிப்பெண்கள் பெற்றுத் தேர்ச்சி பெற்றுள்ளனர். பத்தாம் வகுப்பில் நானூற்றைம்பதுக்கும் மேற்பட்ட மதிப்பெண்கள் பெற்றுத் தேர்ச்சி பெற்றுள்ளதோடு தேர்வெழுதிய அத்துணை மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

இரண்டு கல்விகளிலும் தேர்ச்சி பெற்று வெளிவருவதால் அவர்கள் பணியாற்றுகின்ற களம் விரிவடைகிறது. இமாமாக, ஆசிரியராக, மொழிபெயர்ப்பாளராக, பத்திரிகை ஆசிரியராக, கணிப்பொறி இயக்குபவராக-பல்வேறு தளங்களில் பணியாற்றுகின்றார்கள். சிலர் இளங்கலை முடித்தபின், நேரடியாகக் கல்லூரியிலோ பல்கலைக் கழகத்திலோ சேர்ந்து முதுகலை, இளம் முனைவர் (எம்.ஃபில்.), முனைவர் (பிஎச்.டி.) வரை தொடர்கின்றார்கள். 

எனவே உங்கள் பிள்ளைகளை ஈருலகப் பயன்மிக்க மார்க்கக் கல்வி பயின்ற ஆலிமாக உருவாக்க நீங்கள் விரும்பினால், உங்கள் மஹல்லாவின் பள்ளிவாசலில் நடைபெறும் பாலர் வகுப்பில் சிறு பிராயத்திலேயே அவர்களைச் சேர்த்து, திருக்குர்ஆனைப் பார்த்து, சரளமாக ஓதுமாறு செய்துவிடுங்கள்.  அத்தோடு எட்டாம் வகுப்பு வரை படிக்க வைத்து, தேவையான திறன்களை வளர்த்துக்கொள்ளவும் உதவுங்கள். அதன்பின்னர் அரபுக் கல்லூரிக்கு அழைத்துச் செல்லுங்கள். அப்போதுதான் அங்கு அவர்களுக்கு "இடம்' கிடைக்கும்.

இரட்டைக் கல்வி முறையில் இரண்டு கல்வியிலும் தேர்ச்சி பெற்றவர்களாகத் திகழ முடியுமா என்ற வினாவுக்கு விடையாக, வியப்பான செய்தியொன்றை நான் சொல்கிறேன். இரண்டு கல்வியையும் சிறந்த முறையில் கற்பது மட்டுமல்ல, சிலர் குறிப்பிட்ட கல்வியாண்டிற்குள் தன்முனைப்போடு திருக்குர்ஆனை முழுமையாக மனனம் செய்த ஹாஃபிழ்களாக உருவாகிவிடுகின்றார்கள். இதற்கு மேல் என்ன யோசனை? உங்கள் பிள்ளைகளை ஆலிம்களாக உருவாக்க இப்போதிருந்தே உங்கள் முயற்சியைத் தொடங்கிவிடுங்கள்.  

====================== ======================செவ்வாய், 25 செப்டம்பர், 2018

நூல் ஆய்வரங்கம்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபையின்  சார்பில் மாதந்தோறும் நடைபெறும் நூல் ஆய்வரங்கம் கடந்த செப்டம்பர் 18ஆம் தேதி மாநில சென்னை அலுவலகத்தில் நடைபெற்றது. ஆரம்பமாக புதுப்பேட்டை பள்ளிவாசலின் தலைமை இமாம் மெளலானா பீர் முகம்மது பாகவி  கிரா அத் ஓதினார். அடுத்து சென்னை மாவட்டச் செயலாளர் வந்தவர்களை வரவேற்றுப் பேசினார்.

முதலில் நாடறிந்த பேராசிரியர் மெளலானா அ.முஹம்மது கான் பாகவி அவர்கள். மெளலவி முனைவர் பி.எஸ். சையது மஸ்ஊது ஜமாலி  எழுதிய " இஸ்லாமியச் சட்டத்தின் வளமும் விசாலமும் என்ற நூலை ஆய்வு செய்யும் போது பின்வருமாறு குறிப்பிட்டார்கள்:

''இப்புத்தகத்தைப் படிக்கும்போது மிகப் பெரிய ஈர்ப்புத் தன்மையை உணர்ந்தேன். இப்புத்தகத்தை எவ்வளவு காசு கொடுத்து வாங்கினாலும் அது ஈடாகாது'' என்றார். 

ஃபிக்ஹுகளில் ஸஹாபாக்களின் பங்கு என்ன என்பதை  சிறப்பான முறையில் நூலாசிரியர்  தந்துள்ளார். ஸஹாபாக்களின் வாழ்க்கையில் தவறுகள் அல்லாஹ்வின் விருப்பப்படியே நடந்தன. அதன் மூலமாக நமக்குப் பல்வேறு சட்டங்கள் கிடைத்தன.

இக்காலத்தில் தாங்களே நேர்வழியில் இருக்கிறோம் என்று கூறிக் கொண்டு தவற்றில் ஈடுபடுவதும் அவற்றை மறைக்க முயல்வதையும் பார்க்கிறோம். ஆனால் சத்திய ஸஹாபாக்கள் தவறு செய்தால் அதைத் தாமே முன்வந்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கூறி, பரிகாரம் தேடக்கூடியவர்களாக,  மறுமைக்குப் பயந்து தண்டனையைக் கேட்டுப் பெறக்கூடியவர்களாக இருந்திருக்கிறார்கள் எனக் குறிப்பிட்டார்.

அடுத்து இப்புத்தகத்தில் இமாம்களின் பங்கை நூலாசிரியர் சிறப்பான முறையில் கோர்வை செய்துள்ளார். அறியாமை என்பது முகப் பெரிய முஸீபத். அதை அகற்றியதில் மிகப் பெரிய பங்கு இமாம்களுக்கு உண்டு என்று குறிப்பிட்டு நூலாசிரியர் அதைச் சிறப்பாக  விளக்கியுள்ளார் என்றார். 

இமாம் அபூஹனீபா (ரஹ்) அவர்கள் மாணவர்களுடன் ஆலோசனை செய்ய ஒரு ஃபத்வா குழுவை ஏற்படுத்தி ஃபத்வா வழங்கி வந்தார்கள். தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபையும் ஃபிக்ஹு  குழுவை ஏற்படுத்தி மக்களுக்கு ஏற்படக்கூடிய சந்தேகங்களைத் தெளிவுபடுத்த வேண்டுமென்றார். 

மேலும் புத்தகங்களை அதிகம் வாசிக்க வேண்டுமென்று குறிப்பிட்டு
"என்னை உலகம் ஊதாரி என்று சொன்னாலும் புத்தகம் வாங்குவதை (எவ்வளவு காசு கொடுத்தும்) விட மாட்டேன்'' என்ற நேருஜியின் கருத்தைக் கோடிட்டுக் காண்பித்து முனைவர் மஸ்ஊது ஜமாலி எழுதிய புத்தகத்தை அனைவரும் படித்து, பகிர வேண்டும் எனக் கூறி முடித்தார்.

அடுத்ததாக மெளலானா முனைவர் நூ. அப்துல் ஹாதி பாகவி அவர்கள் அதிரை இப்ராஹீம் அன்சாரி எழுதிய இஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகள் என்ற நூலை ஆய்வு செய்யும்போது பின்வருமாறு குறிப்பிட்டார்:

வறுமை ஒழிப்புத் திட்டத்தில் ஸக்காத்தின் பங்கை நூலாசிரியர் தெளிவாகக் குறிப்பிட்டு அது தற்காலத்தில் கலீபாக்கள் காலத்தில் இருந்த நடைமுறை போன்று இப்போது   சரியாக நடைமுறைப் படுத்தாமல் இருப்பதால் இஸ்லாமியப் பொருளாதாரத்தில் தொய்வு தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது என்ற நூலாசிரியரின் கருத்தைக் கோடிட்டுக் காண்பித்து இப்புத்தகத்தில் மார்க்கத்திற்கு முரணாக எந்தக் கருத்தும் இல்லாதது பாராட்டத்தக்கது என்றார். மேலும் அனைவரும் படிக்க வேண்டிய நூல் என்றார்.

ஆய்வரங்கத்திற்கு வந்திருந்த அதிரை இப்ராஹீம் அன்சாரி,  "தனது நூலை ஆலிம் பெருமக்கள் அரங்கில் ஆய்வு செய்து நல்ல கருத்துகளைத் தந்ததற்கு நன்றியைத் தெரிவித்தார்."

ஆலிம் பெருமக்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இப்படிக்கு
மெளலவி முனைவர் அ காஜா முயீனுத்தீன் ஜமாலி, 
செயலாளர், ஜமாத்துல் உலமா சபை, சென்னை மாவட்டம்.


வியாழன், 20 செப்டம்பர், 2018

திட்டமிடுவோம்!


-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

யார் தம் வாழ்க்கைக்கான திட்டம் தீட்டி, குறிக்கோளை  மனத்தில் நிறுத்தி, செயல்படுகிறாரோ  அவரே தம் வாழ்வில் உயர முடியும். தம் வாழ்க்கையை அனுபவிக்க முடியும். திட்டமிடாத மனித வாழ்க்கை வீணாகும். அவன் தன் வாழ்வில் எதையும் செய்யவோ அனுபவிக்கவோ முடியாது.

காலையில் விழித்தெழுவது முதல் இரவு படுக்கைக்குச் செல்வது வரை அனைத்துச் செயல்பாடுகளுக்கும் திட்டம் வேண்டும். இல்லையேல் எதையும் தீர்க்கமாகச் செய்ய முடியாது. எதிலும் பிடிப்பும் அழுத்தமும் இருக்காது.

இரவில் இத்தனை மணிக்குள் தூங்கச் சென்றுவிடுவேன்; அதிகாலையில் இத்தனை மணிக்குத் துயிலெழுவேன்; இத்தனை மணிக்குத் தொழுகச் செல்வேன்; இத்தனை மணிக்குக் கடையைத் திறப்பேன்; அலுவலகம் செல்வேன்; வியாபாரத்திற்குப் புறப்படுவேன்; இத்தனை மணிவரை வியாபாரம் செய்வேன்; இத்தனை மணிக்குப் பகலுணவு உண்பேன் என ஒவ்வொரு செயலையும் முன்னரே திட்டமிட்டுக் கொண்டால்தான் அதையதை அந்தந்த நேரத்திற்குச் செய்ய முடியும்.

எதையும் எப்போது வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம் எனும் போக்கு சோம்பேறித்தனத்தை உண்டாக்கும். செயல்களில் ஓர் ஈர்ப்பும் பிடிப்பும் இருக்காது. செய்தாலும் வெற்றி இருக்காது. நிதானமாகச் செயல்படவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழிகாட்டுகிறார்கள்.

நபி (ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, "எனக்கு அறிவுரை கூறுங்கள்'' எனக் கேட்கிறார். அப்போது நபி (ஸல்) அவர்கள், "ஒவ்வொரு விஷயத்திலும் ஆலோசனை மேற்கொள். அதன் முடிவு நன்மையானதாக இருந்தால் அதைச் செயல்படுத்து; அதில் ஏமாற்றத்தை அஞ்சினால் அதை(ச் செய்யாமல்) விட்டுவிடு'' என்று கூறினார்கள். (நூல்: ஷுஅபுல் ஈமான்: 4328)

அதாவது ஒவ்வொரு துறையிலும் வல்லுநர்களும் அனுபவசாலிகளும் உண்டு. ஒருவன் புதிதாகத் தொடங்கவுள்ள தொழில், திருமணம், சொத்து வாங்குதல், சொத்தை விற்றல் உள்ளிட்ட எதுவாயினும் அதைச் செய்யலாமா, வேண்டாமா என ஆலோசனை செய்ய வேண்டும். அது குறித்துத் திட்டமிட வேண்டும். பின்னர் அதைச் செயல்படுத்த வேண்டும். அத்தொழில் செய்வது இவ்விடத்திற்கு ஏற்றதல்ல என ஓர் அனுபவசாலி கூறினால் அதை ஏற்று, அதனைத் தொடங்காமல் விட்டுவிட வேண்டும். இதுவே திட்டமிடுதலுக்கான அடிப்படையாகும். அத்தகைய செயலில்தான் வெற்றி இருக்கிறது.
இவ்விடத்தில் நபி (ஸல்) அவர்கள் கூறிய ஒரு பொன்மொழி நினைவுகூரத்தக்கது: "நிதானம் அல்லாஹ்வின் புறத்திலிருந்து உள்ளதாகும். அவசரம் ஷைத்தான் புறத்திலிருந்து உள்ளதாகும்.'' (நூல்: திர்மிதீ)  

மனிதன் தன் வாழ்க்கைத் திட்டங்களைச் சரியான முறையில் திட்டமிடாததால்தான் ஒவ்வொரு நாளும் அவன் சிரமங்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறான். உரியவர்களிடம் கேட்கவோ, ஆலோசனை செய்யவோ, எதிர்கால வாழ்க்கையைப் பற்றித் திட்டமிடவோ நினைப்பதில்லை. அதனால் மனிதன் வாழ்க்கையில் தோல்வி காண்கிறான்.
ஒரு மனிதனின் திட்டமிடாத வாழ்க்கையால் அவன் தன்னைப் படைத்த இறைவனுக்கு நேரம் ஒதுக்கித் தொழ முடியவில்லை. அல்லும் பகலும் உலக வாழ்க்கைக்கான தேடலிலேயே நேரம் கரைந்துவிடுவதால் படைத்தோனை வழிபட நேரம் ஒதுக்க முடியவில்லை. திட்டமிடாத வாழ்க்கையால் இவ்வுலகில் ஏதோ ஒரு வகையில் வாழ்ந்து மறைந்தாலும் மறுமையில் வெற்றிபெற முடியாது என்பதை அவன் உணர்வதே இல்லை.

திட்டமிட்ட வாழ்க்கையை மேற்கொள்கின்ற மனிதன், ஒவ்வொரு நாளும் ஐவேளை தொழுகின்றான். தன் அன்றாட அலுவல்களைச் செய்கிறான். தன் குடும்பத்தினரைக் கவனித்துக்கொள்கிறான். தன் பெற்றோரைப் பேணுகின்றான். தன் உறவினர்க்குக் கொடுத்து உதவுகின்றான். இன்னும் எண்ணற்ற செயல்களைத் தொய்வின்றிச் செய்துவருகின்றான். அத்தகையவன் இம்மையிலும் மகிழ்ச்சியாக வாழ்ந்து மறுமையிலும் வெற்றி பெறுவான் என்பதில் ஐயமில்லை.

அரசு கடைப்பிடிக்கின்ற குடும்பக் கட்டுப்பாடு எனும் திட்டமும், ஏழைகள் மிகுதியாக உள்ளமையும் திட்டமிடாத செயல்பாடுகளுக்கான சான்றுகள் ஆகும். மனிதனுக்குத் தேவையான வாழ்வாதாரத்தை நிறைவாகத் தந்துள்ளான் இறைவன். புவியின் நிலப்பரப்பில் அன்றைய மனிதன் செய்த வேளாண்மையைவிட இன்றைய மனிதன் நவீன ஆயுதங்களையும் மின்சாரத்தையும் பயன்படுத்தி மிக நேர்த்தியாக வேளாண்மை செய்கிறான்; அபரிமிதமாக மகசூல் செய்கிறான். அப்படியிருக்க ஏழைகள் மிகுதியாகக் காணப்படுவதேன்கோடானு கோடிப்பேருக்கு உணவுப் பொருள் உரிய முறையில் கிடைக்கப் பெறாதது ஏன்? அன்று நிலப்பரப்பில் மட்டும்தான் விவசாயம் செய்தான். இன்று ஒரே நிலத்தின் பல அடுக்குகளில் பயிரிட்டு மகசூலைப் பெருக்குகிறான். அப்படியிருந்தும் ஏழைகள் மிகுந்திருப்பதேன்? சரியான திட்டமிடாமைதான்.

மக்கள்தொகை மிகுதியாகி மனிதர்கள் வாழ்வதற்கு இடப் பற்றாக்குறை ஏற்பட்டுவிடும் என்பதற்காக அரசு குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தைக் கடைப்பிடிக்கின்றதா? இப்புவிமேல் எவ்வளவு எண்ணிக்கையிலான மக்களும் வாழ்வதற்கான ஏற்பாட்டை இறைவன் செய்துள்ளான். அதற்கான அறிவை மனிதனுக்கு அவன் வழங்கியுள்ளான். அன்று பத்து ஏக்கர் நிலப் பரப்பில் இருநூறு பேர் வாழ்ந்தார்கள் என்றால், இன்று அதே அளவுள்ள நிலப்பரப்பில் பத்தாயிரம் பேர் வாழலாம். அத்தகைய அறிவு வளர்ச்சியை மனிதனுக்கு இறைவன் வழங்கியுள்ளதால்தான் இருபது, முப்பது அடுக்குகள் கொண்ட தொகுப்பு வீடுகள் பெருகியுள்ளன.

தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் என்ற அச்சமா? மிகுதியான மழைப்பொழிவை இறைவன் கொடுத்துக்கொண்டுதான் இருக்கிறான். அதை உரிய முறையில் சேமிக்கவும் பங்கீடு செய்யவும் அரசிடம் திட்டமில்லை. அதனால்தான் பலருக்குக் குடிநீர்ப் பிரச்சனை ஏற்பட்டுள்ளதே தவிர இறைவன் தனது அருளை நிறுத்திக்கொள்ளவில்லை. ஒரு பக்கம் பெருமழை பொழிகிறது. மறுபக்கம் தண்ணீர்ப் பற்றாக்குறையால் வேளாண்மைப் பயிர்கள் வாடுகின்றன; அழிகின்றன.

இன்றைய இந்தியா பொருளாதாரத்தில் பின்னடைவு கண்டுள்ளதே காரணமென்ன? சரியான பொருளாதாரச் சிந்தனையும் திட்டமும் அரசிடம் இல்லை. தவறான பொருளாதாரக் கொள்கையைப் பின்பற்றுவதாலும் இறைவன் தடுத்துள்ள வட்டி  முறையைப் பின்பற்றுவதாலும் பொருளாதாரப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. வாங்கிய கடனுக்கு வட்டி கட்டுவதற்கே மிகுதியான பணம் செலவாகிவிடுவதால் மக்களுக்கான திட்டங்களைச் சரியான முறையில் செயல்படுத்த அரசாங்கத்தால் இயலவில்லை.

முஸ்லிம்கள் பலர் தம் பெண்பிள்ளைகளை ஆண்பிள்ளைகளுக்கு நிகராகப் படிக்க வைக்கின்றனர்.  பின்னர்  அவர்களை உரிய இடத்தில் திருமணம் செய்துகொடுத்துவிடுகின்றனர். ஆனால் அவர்கள் தம் திருமணத்திற்குப் பிறகு எந்த வேலைக்கும் செல்லாமல் தம் கணவன் வீட்டில் சமைத்துக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களின் அக்கல்வி சமுதாயத்திற்குப் பயன்படாமலேயே போய்விடுகின்றது. இதற்குப் பதிலாக அவர்களைப் பெண்கள் சார்ந்த துறைகளில் கவனம் செலுத்திப் படிக்க வைத்தால் அவர்களின் கல்வி சமுதாயத்திற்கும் தம் குடும்பத்திற்கும் பெரிதும் பயனுள்ளதாக அமையும். பெண்கள் மருத்துவம், நர்சிங், சிறுவர் மருத்துவம், ஹோம் சயின்ஸ், கற்பித்தல் துறை, தட்டச்சுப் பயிற்சி முதலானவை பெண்களுக்கு உகந்தவை. 

இக்கல்வியால் சமுதாயத்திற்குப் பெரிதும் பயனளிக்க முடியும்.  மேலும் இக்கல்வியால் வீட்டைவிட்டுச் செல்லாமலும் சமுதாயத்திற்குப் பயனளிக்க முடியும்.

இப்படி எத்தனையெத்தனையோ துறைகளில் மனிதன் தோல்வி கண்டுள்ளதற்குத் திட்டமிடாமைதான் காரணம். மனிதன் தன் ஒவ்வொரு செயலையும் திட்டமிட்டுச் செய்யத் தொடங்கிவிட்டால் அவன் இவ்வுலகில் இன்புற்று வாழ்ந்து எல்லா இன்பங்களையும் அனுபவிப்பதோடு எல்லோரையும் மகிழ்ச்சியாக வாழவைக்கவும் முடியும் என்பதே உண்மை.
===============================

திங்கள், 17 செப்டம்பர், 2018

‘நபிவழி மருத்துவம்’- நூல் இப்போது வெளிவந்துவிட்டது
 ==================================================
இந்நூலில் இடம்பெற்றுள்ள எனது முன்னுரை... 

உலகையும் அதனுள் அடங்கியுள்ள எண்ணற்ற பொருட்களையும் மனிதனின் பயன்பாட்டுக்காகவும் அவற்றை இணை இணையாகவும் படைத்துள்ள பேரிறைவன் அல்லாஹ்வுக்கே புகழ் யாவும் உரித்தாகுக! உலக மாந்தர் யாவரும் நேரிய பாதையில் சென்று நன்னெறி வாழ்க்கை வாழ வழிகாட்டியதோடு ஆரோக்கியமான வாழ்க்கைக்கான வழிகாட்டுதல்களையும் வழங்கிய இறுதி இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தார் மீதும் அவர்களின் வழியைச் செவ்வனே பின்பற்றி வாழ்ந்து மறைந்த அவர்கள்தம் தோழர்கள் மீதும் இறையருளும் கருணையும் பொழிவதாக! 

நபிவழி மருத்துவம் எனும் இந்நூலைப் பேரறிஞர் ஷம்சுத்தீன் முஹம்மது பின் அபீபக்ர் பின் கய்யிம் (ரஹ் - 691-751) எழுதியுள்ளார். இந்நூல் மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது. 37 பாடங்களை உட்கொண்டுள்ள முதல் பகுதி பொதுவான பல்வேறு மருத்துவ வழிகாட்டுதல்களைக் கூறுகிறது. 23 பாடங்களைக் கொண்டுள்ள இரண்டாம் பகுதி ஆன்மிக ரீதியான இறையியல் மருத்துவம் தொடர்பாகக் கூறுகிறது. மூன்றாம் பகுதி தனித்தனி பொருள்கள் ஒவ்வொன்றும் கொண்டுள்ள மருத்துவப் பயன்கள் குறித்துக் கூறுகின்றது.

நபிவழி மருத்துவம் என்பது நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் அறிவித்துக்கொடுத்த மருத்துவத் தகவல்கள் ஆகும். மனிதப் பயன்பாட்டிற்காகவே யாவற்றையும் படைத்துள்ள உயர்ந்தோன் அல்லாஹ் அவனுக்கு ஏற்படும் நோய்களைத் தீர்த்துக்கொள்வதற்கான வழிமுறைகளையும் நபி (ஸல்) அவர்கள் மூலம் காண்பித்தான்.
மனநோய்களைக் களைந்து புத்துணர்வூட்ட மகத்தான வேதமான திருக்குர்ஆனையும் உடல் தொடர்பான நோய்களைத் தீர்த்துக்கொள்ள பல்வேறு மூலிகைகளையும் உயர்ந்தோன் அல்லாஹ் மனித சமுதாயத்திற்கு ஓர் அருட்கொடையாகவே வழங்கியுள்ளான்.  அவன் படைத்த ஒவ்வொரு பொருளும் பல்வேறு பயன்களைக் கொண்டுள்ளது. அதையே நபி (ஸல்) அவர்களின் மூலம் மனித சமுதாயத்திற்குத் தெளிவுபடுத்தியுள்ளான்.

நபி (ஸல்) அவர்களின் வாயிலாகச் செவியுற்றுப் பயன்பெற்ற அவர்கள்தம் உற்ற தோழர்கள்மூலம் அது விரிவடைந்து அதன்பின் மருத்துவர்களின் அனுபவங்கள் மூலம் அப்பொருள்களின் மருத்துவப் பயன்பாடுகள் வளர்ச்சியடைந்துள்ளன. ஆகவே நபி (ஸல்) அவர்கள் கூறியதை ஏற்றுக்கொண்ட மருத்துவர்கள் தம் அனுபவங்களையும் கூறியுள்ளார்கள். அவற்றையும்  மேற்கோள்காட்டியே இந்நூலாசிரியர் எழுதியுள்ளார்.

மருத்துவம் என்பது அனுபவத்தால் வளர்ச்சியடைந்துள்ள ஒரு துறையாகும். எனவே பயனுள்ள குறிப்புகளையும் தகவல்களையும் இணைத்தே நூலாசிரியர் எழுதியுள்ளார். அவற்றைப் படிக்கின்ற வாசகர்கள், “இதை நபி (ஸல்) அவர்கள் கூறினார்களா? பிறகேன் இவர் இதை எழுதுகிறார்?” என்று கேட்கலாகாது. ஏனெனில் அதை நபி (ஸல்) அவர்கள் நேரடியாகக் கூறாவிட்டாலும், அதுவும் அவர்களின் வாயிலாகக் கிடைக்கப்பெற்ற குறிப்புகளிலிருந்து பிறந்த அனுபவக் குழந்தைதான் என்பதை வாசகர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.

இரண்டாம் பகுதியிலுள்ள பிரார்த்தனைகள் (துஆக்கள்) மிக முக்கியமானவை. ஓதிப் பார்த்து நோய்களைக் குணப்படுத்தும் சிகிச்சை முறையை மனித சமுதாயத்திற்கு அனுமதித்து, அதைத்  தெளிவாகக் கற்றுக்கொடுத்துள்ளார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள். மனித உடலுக்குள் ஓடிக்கொண்டிருக்கிற உயிரானது ஒருவிதமான காற்றைப் போன்றதாகும். அதற்கு இடையூறளிக்கும் விதத்தில் கெட்ட ஆவிகள் அதனுள் புகுந்துகொள்ளும்போது திருக்குர்ஆனின் வசனங்களை ஓதி ஊதுவதன்மூலம் அதனைக் குணப்படுத்தலாம் என்பதை நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்துள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்களுக்கு இறைவன் புறத்திலிருந்து கிடைக்கப்பெற்ற துஆக்கள் மூலம் ஓதிப் பார்த்தல், திருக்குர்ஆன் வசனங்களைக் கொண்டு ஓதிப் பார்த்தல் ஆகிய இரண்டு வகை உள்ளன. இறைநம்பிக்கை கொண்டவர்களுக்கு இந்தக் குர்ஆனை  நிவாரணமாகவும் அருளாகவும் இறக்கியுள்ளோம் (17: 82) என்று அல்லாஹ் கூறுகின்றான். இவ்வசனத்தின்படி திருக்குர்ஆனின் வசனங்கள் அனைத்தும் ஒவ்வொரு நோய்க்கு மருந்தாகத் திகழ்கின்றன என்பது தெளிவாகிறது.

அந்த அடிப்படையில்தான், ஒரு குழுவின் தலைவரைத் தேள் கொட்டிவிட்டபோது அல்ஃபாத்திஹா எனும் அத்தியாயத்தை ஓதி  அவர்மீது ஊதியதன்மூலம் அவருக்கு அதிலிருந்து நிவாரணம் கிடைக்கச் செய்துள்ளார் ஒரு நபித்தோழர். பொதுவாக நபி (ஸல்) அவர்கள் துயில்கொள்ளுமுன், அல்ஃபலக், அந்நாஸ் ஆகிய இரண்டு அத்தியாயங்களையும் ஓதி, தம் கையில் ஊதி, அதைத் தம் உடல் முழுவதும் தடவிக்கொள்வார்கள். இவ்வாறு செய்வதன்மூலம்  கெட்ட ஆவிகள் தீண்டாதிருத்தல், சூனியம் தாக்காதிருத்தல் உள்ளிட்ட  எல்லாவிதமான ஆபத்துகளிலிருந்தும் பாதுகாப்புத் தேடியுள்ளார்கள்.

ஒவ்வொரு நோயும் வெவ்வேறு விதமானது. எனவேதான் அந்தந்தத் தருணங்களுக்கேற்ற துஆவை நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்துள்ளார்கள். தேள்கடி, சின்னம்மை, பாம்புகடி, கொப்புளம், காயம், உடல்வலி, துன்பம், துயரம், துக்கம், தூக்கமின்மை, திடுக்கம் உள்ளிட்ட ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொருவிதமான பிரார்த்தனை உண்டு. அதை நன்கறிந்து, உறுதியான நம்பிக்கையோடு ஓதி ஊதினால் நோய்கள் குணமாகும் என்பது உண்மை. ஏனெனில் பிரார்த்தனைகள், திருக்குர்ஆன் வசனங்கள் ஆகிய இவற்றின் ஆற்றல் மகத்தானது. இவற்றை ஓதி ஊதும்போது மனித உடலுக்குள் ஊடுருவியுள்ள வலுவற்ற கெட்ட ஆவிகள் அகன்றுவிடுகின்றன. இதுதான் ஓதிப் பார்த்தலின் பயனும் சூட்சுமமும் ஆகும்.

ஆகவே வாசகர்கள் இந்நூலை வாசிக்கும்போது அல்லாஹ்வின்  வேத வசனங்கள்மீதும் இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் வாக்குகள்மீதும் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருக்க வேண்டும். அவர்களுக்குத்தான் இந்நூல் பயனளிக்கும்.

சாஜிதா பதிப்பகத்தின் உரிமையாளர் ஜனாப் ஜகரிய்யா ஸாஹிபின் தம்பி ஜனாப் அப்துல் மாலிக் என்னிடம் இந்நூலைக் கொண்டு வந்து கொடுத்து, தமிழாக்கம் செய்து தருமாறு கேட்டுக்கொண்டார். நான் ஒரு கணம் மலைத்து, பின்னர் - அல்லாஹ்வின்மீது நம்பிக்கை வைத்து- ஏற்றுக்கொண்டேன். ஆனால் தமிழாக்கம் செய்யத் தலைப்பட்டபோது  நான் மலைத்தது சரியே எனப் பட்டது. நபிமொழித் தொகுப்பு நூல்களைத் தமிழாக்கம் செய்துகொண்டிருந்த நான் மருத்துவ நூலை முதன்முறையாகத் தமிழாக்கம் செய்ய முற்பட்டேன். அதனால் அரபுப் பதங்களைத் தமிழுக்குள் கொண்டுவரப் போராட வேண்டியிருந்தது. பல அகராதிகளைப் புரட்ட வேண்டியிருந்தது. தவறான பொருள்களை எழுதிவிட்டால் அது மிகப்பெரும் மருத்துவப் பிழையாகிவிடுமே என்ற அச்சம் ஒரு பக்கம் இருந்தது. ஆக எல்லாவற்றையும் கடந்து தமிழாக்கம் செய்துமுடிப்பதற்குள் ஈராண்டுகள் ஓடிவிட்டன. எளிய முறையில் விளங்கிக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்நூலில் ஆங்காங்கே ஆங்கில வார்த்தைகளை இணைத்தே எழுதியுள்ளேன்.

இந்நூலுக்கு ஆசியுரை வழங்கிய கண்ணியத்திற்குரிய என்னுடைய மூத்த பேராசிரியர் மௌலானா மௌலவி அல்ஹாஜ் பி.எஸ்.பி. ஜைனுல் ஆபிதீன் பாகவி அவர்களுக்கும் ஆய்வுரை வழங்கிய மௌலானா மௌலவி அல்ஹாஜ் கே.எம். இல்யாஸ் ரியாஜி அவர்களுக்கும் அணிந்துரை வழங்கிய பன்னூலாசிரியர் முதுபெரும் எழுத்தாளர் அல்ஹாஜ் ஏம்பல் தஜம்முல் முஹம்மது அவர்களுக்கும் வாழ்த்துரை வழங்கிய சீரிய சமூகச் சிந்தனையாளர் சி.என்.எம். சலீம் அவர்களுக்கும் இந்நூலை இன்முகத்தோடு வெளியிட முன்வந்த ஜனாப் ஜகரிய்யா அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்நூலைத் தாங்கள் அனைவரும் படித்துப் பயன்பெறுவதோடு தங்களின் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் அறிமுகப்படுத்துமாறு அன்போடு விழைகிறேன். மக்கள் யாவரும் பயன்பெறும் வகையில் இன்னும் பல நூல்களை இச்சமுதாயத்திற்கு நான் வழங்க எனக்காகப் பிரார்த்தனை செய்யுமாறு மெத்தப் பணிவோடும் அன்போடும்  கேட்டுக்கொள்கிறேன்.

அன்புடன்
மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி

இந்நூல் கிடைக்குமிடங்கள்:

1.      சாஜிதா புக் சென்டர், 248, தம்புச் செட்டித் தெரு, மண்ணடி, சென்னை-1
தொடர்புக்கு: 98409 77758, 044-25224821 
2. சலாமத் புக் ஹவுஸ் லிங்கிச் செட்டித் தெரு, மண்ணடி, சென்னை-1    தொடர்புக்கு: 96000 12039

3. பஷாரத் புக்ஸ் (மஸ்ஜித் மஃமூர் அருகில்) அங்கப்ப நாயக்கன் தெரு, மண்ணடி, சென்னை-1  தொடர்புக்கு: 044- 25225028

4. குட்வேர்ட் புக்ஸ் 324, காயிதே மில்லத் சாலை, திருவல்லிக்கேணி, சென்னை-5  தொடர்புக்கு: 97908 53944

5. புராக் புக் சென்டர் காயிதே மில்லத் சாலை, திருவல்லிக்கேணி, சென்னை-5 தொடர்புக்கு: 044-42157847

6. ரஹ்மத் புத்தக நிலையம், 2-ஆவது முக்கியச் சாலை, சிஐடி காலனி, மயிலாப்பூர், சென்னை.  தொடர்புக்கு: 94440 25000

7. ரசூல் புக் சென்டர், சிங்காரத் தோப்பு, திருச்சி
தொடர்புக்கு: 94435 63585

8. பாரத் புக் சென்டர், திருநெல்வேலி. தொடர்புக்கு: 95666 92858

9. குர்ஆனிய்யா புக் டிப்போ, மதுரை. தொடர்புக்கு: 94432 43786

10. அல்-அமீன் புக் டிப்போ, மதுரை. தொடர்புக்கு: 98423 37700

11. பிஸ்மி ஷாப்பிங் சென்டர், கும்பகோணம். தொடர்புக்கு: 80983 20442

12. ஷேக் முஹம்மது, காரைக்கால். தொடர்புக்கு: 99658 55096