சனி, 29 ஜனவரி, 2011

´புலால் உணவு மனிதனுக்கு அனுமதிக்கப்பட்டதா? விலக்கப்பட்டதா?

டாக்டர், திரு.ஜாகிர் நாயக்-டாக்டர்,திரு. ரஷ்மிபாய் ஸவேரி இருவருக்குமிடையே நடைபெற்ற ´´புலால் உணவு மனிதனுக்கு அனுமதிக்கப்பட்டதா? விலக்கப்பட்டதா?´´ எனும் தலைப்பிலான விவாதத்தை சகோதரர் நூ. முகம்மது கனி நூல் வடிவில் தொகுத்துள்ளார். அந்நூலுக்கு முன்னுரை எழுதித் தருமாறு என்னிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது. அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க நான் எழுதிய முன்னுரையை இங்கே பதிவதில் மகிழ்ச்சியடைகிறேன்.இந்நூலைச் சென்னையிலுள்ள சாஜிதா புக் சென்டர் வெளியிட்டுள்ளது.
------------------------------------------------------------

முன்னுரை

உலகிலுள்ள எல்லா உயிரினங்களையும் படைத்து அவற்றிற்குரிய உணவு முறைகளை வகைப்படுத்தி, முறைப்படுத்திய பேரிறைவன் அல்லாஹ் ஒருவனுக்கே புகழ் யாவும் உரித்தாகுக! அவனால் ஆகுமாக்கப்பட்டவற்றையும் தடுக்கப்பட்டவற்றையும் எடுத்துரைத்த இறுதி இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள்மீது அல்லாஹ்வின் அளவிலா அன்பும் கருணையும் என்றென்றும் உண்டாவதாக!
உயர்ந்தோன் அல்லாஹ் பல்வேறு உயிரினங்களைப் படைத்து அவற்றிற்குரிய உணவு வகைகளை நெறிப்படுத்தியுள்ளான். அவற்றுள் சில தாவர உண்ணிகளாகவும் வேறு சில மாமிச உண்ணிகளாகவும் இருக்கின்றன. தாவர உண்ணிகள் மாமிசத்தையோ மாமிச உண்ணிகள் தாவரங்களையோ உண்பதில்லை. ஆனால் மனிதன் தாவர உண்ணியாகவும் மாமிச உண்ணியாகவும் இருக்கின்றான். இது இறைவனின் நியதி. ஏனெனில் இருவகை உணவுகளையும் உண்ணக்கூடிய வகையில் மனிதன் படைக்கப்பட்டுள்ளான்.

படைத்த இறைவன் மனிதனுக்குச் சில வகை உணவுகளைத் தடைசெய்துள்ளான். காரணம் அல்லாஹ் எவற்றை உண்ணக் கட்டளையிட்டுள்ளானோ அவை மனித உடலுக்கு ஆரோக்கியமானவையாகவும் எவற்றைத் தடைசெய்துள்ளானோ அவை மனித உடலுக்குக் கேடு விளைவிப்பவையாகவும் உள்ளன. ஏனெனில் படைத்த இறைவனுக்குத்தான், மனிதன் எதைச் சாப்பிட வேண்டும் எதைச் சாப்பிடக் கூடாது என்று தெரியும்.

இஸ்ரவேலர்கள் தீஹ் தீவில் இருந்தபோது அல்லாஹ் அவர்களுக்கு வானத்திலிருந்து உணவு வழங்கினான். அதைப் பின்வரும் இறைவசனம் தெரிவிக்கிறது: மர்யமின் மைந்தர் ஈசா, “அல்லாஹ்வே! எங்கள் இறைவா! எங்களுக்கு வானத்திலிருந்து ஓர் உணவை இறக்குவாயாக. அது (அருளப்பெறும் நாள்) எங்களுள் ஆரம்பமானவருக்கும் இறுதியானவருக்கும் ஒரு பெருநாளாகவும் உன்னிடமிருந்து வந்த ஒரு சான்றாகவும் அமையும். எங்களுக்கு வாழ்வாதாரமும் வழங்குவாயாக! வாழ்வாதாரம் வழங்குவோருள் நீயே மிகச் சிறந்தவன்” என்று கூறினார். அதற்கு அல்லாஹ் “அதை நான் இறக்கிவைக்கிறேன்” என்று கூறினான். (05: 114-115)

அல்லாஹ் அவர்களுக்கு மன்னு, சல்வா எனும் உயர் வகை யான உணவை நாள்தோறும் கொடுத்துவந்தான். ஆனால் ஒரே வகை உணவை உண்டு வந்த அவர்கள் அதில் சலிப்புற்று, அதற்குப் பகரமாகக் காய்கறி உணவைக் கேட்டனர். அது பற்றிப் பின்வரும் இறைவசனம் தெரிவிக்கிறது:
(அவர்கள் மூசாவை நோக்கி) “மூசாவே! ஒரே (விதமான) உணவை உட்கொண்டிருக்க எங்களால் முடியாது. பூமியில் முளைக்கக்கூடிய கீரை, வெள்ளரிக்காய், கோதுமை, பருப்பு, வெங்காயம் ஆகியவற்றை வெளிப்படுத்தித் தரும்படி உம்முடைய இறைவனிடம் எங்களுக்காக நீர் கேட்பீர்” என அவரிடம் கேட்டார்கள். (02: 61)

ஆக ஒரே வகையான உணவை மனிதன் தொடர்ந்து உண்டால் அவன் சலிப்படைந்துவிடுகிறான். எனவேதான் அவனுக்குப் பல்வகையான உணவுகளையும் உண்ண அல்லாஹ் அனுமதியளித்துள்ளான்.
திரு. ஜாகிர் நாயக்-திரு. ஸவேரி இருவருக்குமிடையே நடைபெற்ற விவாதத்தை முழுமையாகக் கேட்டேன். புலால் உணவு உண்ணக் கூடாது என்பதற்கு திரு. ஸவேரி எடுத்து வைத்த எந்த வாதமும் ஏற்புடையதாக இல்லை. அவை அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. புலால் உணவு உண்ணக் கூடாது என்பதற்கு அவர் எடுத்து வைத்த வாதங்கள் ஜைன மதத்தில் கூறப்பட்டவையே தவிர அறிவியல்பூர்வமானவையாகவோ பகுத்தறிவுக்கு உட்பட்டவையாகவோ இல்லை. அதேநேரத்தில் புலால் உணவு உண்ணலாம் என்பதற்கு திரு. ஜாகிர் நாயக் எடுத்துரைத்த மறுமொழிகள் அறிவுப்பூர்வமானவையாகவும் அறிவியல்பூர்வமானவையாகவும் இருந்தன.

திரு. ஸவேரி எடுத்து வைத்த வாதங்கள் சில ஏற்கத்தக்கவை யாக இருந்தாலும், அதற்காக மாமிச உணவு தடைசெய்யப்பட்டது என்றோ சாப்பிடவே கூடாது என்றோ சொல்ல முடியாது. ஏனெனில் அல்லாஹ் அனுமதித்துள்ளதைத் தடைசெய்ய நாம் யார்?
மாமிச உணவை உட்கொள்வதால் தேவையற்ற கொழுப்புச் சத்து மனித உடலில் சேர்ந்து உடல் ஆரோக்கியத்துக்கு ஊறுவிளைவிக்கிறது என்று திரு. ஸவேரி எடுத்துவைத்த வாதத்திற்குப் பதிலளிக்குமுகமாக, திரு. ஜாகிர் நாயக், தாவரங்களி லும்தான் கொழுப்புச் சத்து உள்ளது. இதனால்தான் கொழுப்பில்லா தாவர எண்ணெய் என்று விளம்பரப்படுத்தப்படுகிறது என்று கூறியது சிந்தனைக்கு விருந்தாக அமைந்துள்ளது.

எவற்றைச் சாப்பிடக் கூடாது என்று அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகின்றான்: (இறைநம்பிக்கையாளர்களே! தானாகச்) செத்தது, இரத்தம், பன்றி இறைச்சி, அல்லாஹ் அல்லாதவரின் பெயர் கூறி அறுக்கப்பட்டது ஆகியவை உங்களுக்குத் தடைசெய்யப்பட்டுள்ளன. அடிபட்டுச் செத்தது, (உயரத்திலிருந்து கீழே) விழுந்து செத்தது, கழுத்து நெரிக்கப்பட்டுச் செத்தது, ஒன்றோடு ஒன்று முட்டிமோதிச் செத்தது, வனவிலங்குகள் கடித்(துச் செத்)தது ஆகியவையும் (தடைசெய்யப்பட்டுள்ளன). எனினும், (அவற்றுள் உயிருடன்) எதை நீங்கள் அறுத்தீர்களோ அதைத் தவிர. மேலும் நட்டுவைக்கப்பட்ட (சிலை போன்ற)வற்றுக்கு அருகில் அறுக்கப்பட்டதும் அம்புகள் மூலம் (குறி கேட்டு நன்மை தீமையை) நீங்கள் முடிவு செய்வதும் (தடைசெய்யப்பட்டுள்ளன). அது பாவமாகும். (05: 03)

எவற்றைச் சாப்பிடலாம் என்றும் அல்லாஹ் கூறுகின்றான்: (நபியே!) “தமக்கு (உண்ண) அனுமதிக்கப்பட்டவை எவை?” என அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். நீர் கூறுவீராக: தூய்மையான (உண்) பொருட்கள், வேட்டையாடும் மிருகங்களுள் எவற்றுக்கு நீங்கள் பயிற்சி அளித்து, அல்லாஹ் உங்களுக்குக் கற்றுக்கொடுத்ததைக் கற்றுத் தந்தீர்களோ அவை (வேட்டையாடிய பிராணிகள்) ஆகியவை உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன. உங்களுக்காக அவை பிடித்(துக்கொண்டு வந்)தவற்றை நீங்கள் உண்ணலாம். (வேட்டைக்கு அனுப்பும்போது) அவற்றின்மீது அல்லாஹ்வின் பெயர் கூறுங்கள். அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள். அல்லாஹ் கணக்குத் தீர்ப்பதில் துரிதமானவன். (05: 04)

ஆக, சாப்பிடக் கூடாதவற்றையும் சாப்பிட வேண்டியவற்றை யும் திருக்குர்ஆனில் அல்லாஹ் தெளிவாகக் கூறிவிட்டான். பிறகென்ன குழப்பம்? இனி யாரும் வந்து இதைச் சாப்பிடக் கூடாது என்று தடைபோட முடியாது என்பதை நாம் திருக்குர்ஆன் மூலம் விளங்கிக்கொள்கிறோம்.
சகோதரர் நூ. முகம்மது கனி, திரு. டாக்டர் ஜாகிர் நாயக் எடுத்து வைத்த வாதங்களை மட்டும் தொகுத்து, தமிழாக்கம் செய்து ஒரு சிறுநூலாக வெளியிட்டுள்ளார். அவருடைய இச்சிறிய நூலுக்கு நான் முன்னுரை எழுதுவதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். அவருடைய இச்சீரிய முயற்சி பாராட்டுக்குரியது. உயர்ந்தோன் அல்லாஹ் அவருடைய இந்நூலை மக்களுக்குப் பயனுள்ளதாக ஆக்குவானாக!

அன்புடன்
நூ. அப்துல் ஹாதி பாகவி, M.A., M.Phil.
ஆலங்குடி.

திங்கள், 24 ஜனவரி, 2011

வெள்ளி, 21 ஜனவரி, 2011

நூல் அறிமுக விழா


வெள்ளி, 14 ஜனவரி, 2011

இப்ராஹீம் நபியின் வரலாறு (தொடர் 16)

ஸ்ஹாக்-என்போரின் ஆதாரம்

மேற்கண்ட ஆதாரத்தைக் குறுக்கீடு செய்கிறார் அஸ்ஸுஹைலீ என்பவர். அல்லாஹ் கூறியுள்ள, நாம் அவருக்கு இஸ்ஹாக்கைக்கொண்டு நற்செய்தி கூறினோம் என்ற வசனம் ஒரு முழுமையான வாக்கியமாகும். அவன் மேலும் கூறுகின்றான்: அவருக்கு நாம் இஸ்ஹாக்கைப் பற்றியும் இஸ்ஹாக்குக்குப்பின் யஅகூபைப் பற்றியும் நற்செய்தி கூறினோம்.  (11: 71) இது மற்றொரு வசனம் ஆகும்.*


அவர் இஸ்ஹாக் நபிதான் என்று கூறுவோர்  பின்வரும் இந்த வசனத்தை ஆதாரமாகக் கூறுகின்றனர்: பின்னர், (அம்மகன்) அவருடன் நடமாடக்கூடிய வயதை அடைந்தபோது, அவர் கூறினார். (37: 102)  இஸ்மாயீல் நபி, இப்ராஹீம் (அலை) அவர்களுடன் இருக்கவில்லை. அவர் தம் சிறுபிராயத்தில் அவருடைய தாயுடன் மக்காவிலுள்ள மலையில்தான் தங்கியிருந்தார். பிறகு எப்படி அவர் தம் தந்தையுடன் நடந்து திரிய முடியும்?

இவர்கள் கேட்கின்ற இந்தக் கேள்வியும் ஆய்வுக்குரியதுதான். ஏனென்றால், இப்ராஹீம் (அலை) அவர்கள் பல தடவை புராக் வாகனத்தில் மக்கா சென்று, தம்முடைய மகனின் நிலையைத் தெரிந்துகொண்டு திரும்புவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அல்லாஹ்வே நன்கறிபவன்.
அறுக்கப்பட்டவர்  இஸ்ஹாக் நபிதான் என்று கூறுபவர்களுக்கு கஅபுல் அஹ்பார் (ரளி) உடைய அறிவிப்பு மட்டுமே உள்ளது. ஆனால், அதற்கு முரணாக,  ’அறுக்கப்பட்டவர்  இஸ்மாயீல் நபிதான் என்ற கருத்து, உமர், அப்பாஸ், அலீ, இப்னு மஸ்ஊத், மஸ்ரூக், இக்ரிமா, சயீத் பின் ஜுபைர், முஜாஹித், அதாஉ, ஷஹ்பீ, முகாத்தில், உபைத் பின் உமைர், அபூமைசரா, ஸைத் பின் அஸ்லம், அப்துல்லாஹ்  பின் ஷஃபீக், ஸ்ஸுஹ்ரீ, அல்காசிம், இப்னு அபீ பர்ரா, மக்ஹூல், ஸ்மான் பின் ஹாளிர் போன்ற பல நபித்தோழர்கள் (ரளி-அன்ஹும்) மற்றும் தாபிஉகள் (ரஹ்-அலைஹிம்) உடைய அறிவிப்பின் மூலம் பெறப்பட்டுள்ளது. எனவே, இது முற்றிலும் ஆச்சரியமானது. அதுவும் இப்னு அப்பாஸ் (ரளி) அவர்களின் இரண்டு அறிவிப்புகளுள் ஒன்றாகும் இது. எனவே, இந்தக் கருத்துக்கு வலு இல்லை. ஆகவே, அறுக்கப்பட்டவர் இஸ்மாயீல் நபிதான் என்பது நிரூபணமாகிறது.

அறுக்கப்பட்டவர்  இஸ்மாயீல் நபி என்பதே சரி!

அறிஞர்கள் பலர் கூறுகின்ற கருத்து, அறுக்கப்பட்டவர் இஸ்மாயீல் நபி என்பதுதான். அதுவே மிகச் சரியானதாகும். முஜாஹித், சயீத், அஷ்ஷஅபீ, யூசுஃப் பின் மஹ்ரான், அதாஉ (ரஹ்-அலைஹிம்) போன்றோர் இப்னு அப்பாஸ் (ரளி) அவர்களிடமிருந்து அறிவிப்பது, அவர் இஸ்மாயீல் நபி என்பதுதான்.

தியாகத்திற்குத் தயாரானவர் இஸ்மாயீல் நபிதான். அவர் இஸ்ஹாக் நபி என்று யூதர்கள் கருதுகின்றனர். யூதர்கள் பொய்யையே கூறுகின்றனர் என்று இப்னு அப்பாஸ் (ரளி) அவர்கள் கூறியுள்ளார்கள். இதை இப்னு ஜரீர் (ரஹ்) தெரிவிக்கிறார்.   (நூல்: தஃப்சீர் இப்னு ஜரீர்)

அவர் இஸ்மாயீல் நபிதான் என்று அப்துல்லாஹ் பின் அல்இமாம் அஹ்மத் (ரஹ்), தம் தந்தையிடமிருந்து அறிவித்துள்ளார். நான் என் தந்தையிடம், அறுக்கப்பட்டவர் யார்? என்று கேட்டேன். இஸ்மாயீல் நபி என்பதே சரியானது என்று அவர் பதிலளித்தார் என இப்னு அபீ ஹாத்திம் (ரஹ்) கூறியுள்ளார்.

அறுக்கப்பட்டவர்  இஸ்மாயீல் நபிதான் என்று அலீ, இப்னு உமர், அபூஹுரைரா, அபுத்துஃபைல், சயீத் பின் அல்முசய்யப் (ரளி-அன்ஹும்), சயீத் பின் ஜுபைர், அல்ஹசன், முஜாஹித், அஷ்ஷஹ்பீ, முஹம்மத் பின் கஅப், அபூஜஅஃபர் முஹம்மத் பின் அலீ, அபூசாலிஹ் (ரஹ்-அலைஹிம்) போன்றோர் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது என்று இப்னு அபீஹாத்திம் (ரஹ்) கூறியுள்ளார். அர்ரபீஹ் பின் அனஸ், அல்கல்பீ, அபூஅம்ர் பின் அல்அலாஉ போன்றோரிடமிருந்து அல்பஹவீ (ரஹ்) இதே கருத்தை எடுத்துரைக்கிறார்.  (நூல்: தஃப்சீருல் பஹவீ)

ஒருவர் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, `அறுக்கப்பட்ட இருவரின் மகனே!  என்று அழைத்தார். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சிரித்தார்கள் என்று முஆவியா (ரளி) அவர்களிடமிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது என இப்னு கஸீர் (ரஹ்) கூறியுள்ளார்.


 இக்கருத்தையே உமர் பின் அப்துல் அஸீஸ் (ரஹ்), முஹம்மத் பின் இஸ்ஹாக் பின் யசார் (ரஹ்) போன்றோர் கூறியுள்ளனர். இதில் எவ்விதச் சந்தேகமும் இல்லை என்று ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) கூறியுள்ளார்.
முஹம்மத் பின் கஅப் (ரஹ்), உமர் பின் அப்துல் அஸீஸ் (ரஹ்) அவர்கள் ஜனாதிபதியாக இருந்த நேரத்தில், அவருடன் சிரியா  நகரில் இருந்தபோது, அவருக்கு நாம் இஸ்ஹாக்கைப் பற்றியும் இஸ்ஹாக்குக்குப்பின் யஅகூபைப் பற்றியும் நற்செய்தி கூறினோம் (11: 71) என்ற வசனத்தின் அடிப்படையில், அறுக்கப்பட்டவர் இஸ்மாயீல் நபிதான் என்று கூறினார்.


 அதற்கு உமர் பின் அப்துல் அஸீஸ் (ரஹ்) அவர்கள், இவ்விசயம் பற்றி நான் சிந்தித்துக் கொண்டிருந்தேன். இப்போது, நீர் சொல்வதைப் போலவே நானும் கருதுகிறேன் என்று பதிலளித்தார் எனக் கூறியுள்ளார். இதை வரலாற்றாசிரியர் முஹம்மத் பின் இஸ்ஹாக் (ரஹ்) அறிவித்துள்ளார்.
உமர் பின் அப்துல் அஸீஸ் (ரஹ்) அவர்கள், தம்மோடு சிரியா நகரில் இருந்த ஒருவரை அழைத்து வர ஆள் அனுப்பினார். அவர் யூதராக இருந்து, இஸ்லாமிய மார்க்கத்தை   ஏற்றுக்கொண்டு, அதில் சிறப்பாகச் செயல்படுபவராக இருந்தார். அவர் ஏற்கெனவே யூத அறிஞர்களுள் ஒருவராக இருந்துள்ளார். அவரிடம், உமர் பின் அப்துல் அஸீஸ் (ரஹ்) அவர்கள்இப்ராஹீம் நபியுடைய இரண்டு மகன்களுள் யாரை அறுக்க அல்லாஹ் கட்டளையிட்டான்? என்று கேட்டார்.

 இறைநம்பிக்கையாளர்களின் தலைவர் அவர்களே! அல்லாஹ்வின்மீது ஆணையாக, அவர் இஸ்மாயீல் நபிதான். நிச்சயமாக, யூதர்கள் அதை அறிந்துள்ளார்கள். எனினும் அவர்கள், அரபியர்களான உங்கள்மீது  பொறாமை கொண்டுள்ளார்கள். அதாவது அல்லாஹ்வின் கட்டளைப்படி அவர் (இஸ்மாயீல்) உங்கள் தந்தை ஆவார். மேலும், அல்லாஹ் ஏவிய விசயத்தைப் பொறுமையுடன் ஏற்றுக்கொண்டதால் அல்லாஹ் அவரைச் சிறப்பித்துக் கூறியுள்ளான். இவற்றைக் கண்டுதான் அவர்கள் உங்கள்மீது பொறாமைகொண்டுள்ளார்கள்; எனவேதான், அவர்கள் அதை மறுக்கின்றார்கள். (அறுக்கப்பட்டவர்) இஸ்ஹாக் நபிதான் என்று கருதுகின்றார்கள். ஏனென்றால், ஸ்ஹாக் நபிதான் அவர்களுடைய தந்தை ஆவார் என்று பதிலளித்தார்.

இவ்விசயம் பற்றி, இமாம் இப்னு கஸீர் (ரஹ்) அவர்கள், தம்முடைய திருக்குர்ஆன் விரிவுரையில் தெளிவான  ஆதாரங்களோடு வரலாற்றுத் தகவல்களையும் கூறியுள்ளார்.

----------------அடிக்குறிப்பு------------------------

* முன்பு கூறப்பட்ட நற்செய்தியில் இதற்குத் தொடர்பு இல்லை. ஏனென்றால்இடைச்சொல்லை மீண்டும் சொல்லாமல் ஒரு சொல் இகரக்குறி பெற முடியாது. இது அரபி இலக்கணமாகும். எனவேஅந்த வசனத்தில் `யஅகூப் எனும் வார்த்தைஒரு மறைமுக வாக்கியத்தின் மூலம் அகரக்குறி பெற்றுள்ளது. அந்த வாக்கியம், `...ஸ்ஹாக்க வ யஅகூப என்றிருக்கும். இவ்வாறு கூறப்பட்டுள்ள இவ்விசயம் ஆய்வுக்குரியதாகும்.


அரபி:           அல்பிதாயா வந்நிஹாயா (இமாம் இப்னு கஸீர்- ரஹ்) 
தமிழாக்கம்: நூ. அப்துல் ஹாதி பாகவி M.A., M.Phil.