வெள்ளி, 21 மே, 2021

நிம்மதியாக வாழ விடுங்கள்

நிம்மதியாக வாழவிடுங்கள்!
-------------------------------------
இவ்வுலகில் பிறந்த ஒவ்வொருவரும் சுதந்திரமாக வாழ உரிமையுண்டு. வாழும் காலத்தில் பல்வேறு இன்னல்களையும் இடுக்கண்களையும் துன்பங்களையும் சிரமங்களையும் ஒவ்வொரு மனிதனும் சந்தித்தே ஆக வேண்டும். வாழ்க்கையில் எப்போதும் மகிழ்ச்சியே தொடர்ந்துகொண்டிருக்காது. துன்பமும் இன்பமும் இரவு-பகலைப் போல் மாறி மாறி வந்துகொண்டேதான் இருக்கும். அவ்வாறு நம் அனைவருக்கும் ஒரு சோதனையாக வந்ததுதான் கொரோனா தீநுண்மி ஆகும்.

 
இதைக் கண்டு நாம் அஞ்சத் தேவையில்லை. இது ஒரு சளி நோய்தான்; உயிர்க்கொல்லி நோய் இல்லை. இதை ஒவ்வொருவரும் உணர வேண்டும். இதைப் பலரும் வெளிப்படையாகச் சொல்வதில்லை. சிலர் மட்டுமே துணிவாகச் சொல்லி மக்களின் மனங்களில் தைரியமூட்டுகிறார்கள். அதற்கான சான்றாக, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வந்தவர்களின் இன்றைய (21.05.2021) எண்ணிக்கை (2, 23, 55, 440) இரண்டு கோடியே இருபத்து மூன்று இலட்சத்து ஐம்பத்தைந்து ஆயிரத்து நானூற்று நாற்பது ஆகும். இச்செய்தி எந்த நாளிதழிலும் அதன் முதல் பக்கத்தில் இடம்பெறாது. இது இன்றைய தினமணி நாளிதழின் 8ஆம் பக்கத்தில் இடம்பெற்ற செய்தியாகும். 


இச்செய்தி நமக்குத் தெரிவிப்பது என்ன? இது ஓர் உயிர்க்கொல்லி நோய் கிடையாது. இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டாலும் மீண்டும் குணமாகி வந்துவிடலாம் என்பதைத்தான். இதைத்  தெளிவாகச் சொல்ல ஏன் மருத்துவர்களும் அரசியல்வாதிகளும் தயங்குகின்றார்கள்?


ஆகவே கொரோனா தொற்றால் யாரேனும் பாதிக்கப்பட்டால் பீதியடைய வேண்டாம். உரிய முறையில் சிகிச்சை மேற்கொண்டால் எளிதில் குணமடைந்துவிடலாம் என்ற நம்பிக்கையோடு உங்கள் வாழ்க்கையை இயல்பாகத் தொடருங்கள். 


எனக்குத் தெரிந்து பலர் குணமடைந்திருக்கிறார்கள். ஏற்கெனவே நுரையீரல் பிரச்சனை, இரத்த அழுத்தம், கேன்சர், நீரிழிவு முதலான நோய்கள் உள்ளோர்தாம் கொரோனா பாதிப்பால் பெரும்பாலும் இறந்துபோகின்றார்கள். மற்றவர்கள் அனைவரும் குணமடைந்து தத்தம் இல்லம் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக சித்தா, யூனானி முதலான ஆயுர்வேத சிகிச்சையைப் பெறுவோர் அனைவருமே குணமடைந்துவருகின்றார்கள் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.


கொரோனா குறித்து நம்முடைய பிரதமர் மோடி கூறியிருப்பதாவது: “கொரோனா என்பது குறிப்பிட்ட காலத்தில் முடிந்துவிடுவதன்று. இதன் அச்சுறுத்தல் நீண்ட காலம் இருக்கும்.” (21 05 2021 தினமணி) ஆம்! இது நீண்ட காலம் நீடிக்கக்கூடிய நோய்தான். அதில் சந்தேகம் இல்லை. ஏனென்றால் சளியும் இருமலும் காய்ச்சலும் பன்னூற்றாண்டுகளாக மனிதர்கள் மத்தியில் உலா வந்துகொண்டிருப்பவையே. 


எனவே சாதாரண சளிநோயாக உள்ள தீநுண்மியை உயிர்க்கொல்லிநோயாகச் சித்திரிப்பதை ஊடகங்கள் உடனடியாக நிறுத்த வேண்டும். மக்களை அச்சுறுத்தும் வேலையை விட்டுவிட்டு, சிகிச்சை பெற்று, குணமடைந்தோரை நேரடியாகப் பேட்டி எடுத்து அதை ஒளிபரப்ப வேண்டும். சிகிச்சை எங்கெல்லாம் மேற்கொள்ளப்படுகிறதோ அந்த விவரங்களையும் வெளியிட வேண்டும். இதைச் செய்தால், அதுதான் இன்றையக் காலத்தில் உங்களின் பொன்னான சேவையாகும். 


யாரோ சிலர் பரிந்துரைத்த ரெம்டெசிவர் மருந்தை கொரோனா சிகிச்சைக்கான மருந்து எனக் கருதி மக்கள் பலர் முண்டியடித்துக்கொண்டு வாங்கிக்கொண்டிருந்தார்கள். அம்மருந்தை எளிய முறையில் மக்கள் வாங்குவதற்கான ஏற்பாட்டைத் தமிழக அரசு செய்துகொடுத்தது. திடீரென உலக சுகாதார நிறுவனம் (WHO) ரெம்டெசிவர் மருந்தை கொரோனா சிகிச்சைக்கானது கிடையாது என்று நீக்கியுள்ளது. ஆக இந்த நோய்க்கான மருந்து எது என்பதிலேயே மருத்துவர்கள் மத்தியில் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை என்பது கண்கூடு. 


மேலும் தற்போது மக்களுக்குச் செலுத்தப்படும் தடுப்பூசி குறித்து, நோபல் பரிசுபெற்ற பிரெஞ்சு நாட்டு வைராலஜிஸ்ட் டாக்டர் பேராசிரியர் லுக் மாண்டோக்னிர் கூறுவதாவது: “கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களே உருமாறிய கொரோனாவை உருவாக்குகிறார்கள். பெருந்தொற்றுக் காலத்தில் கொரோனா தடுப்பூசியைப் போடுவது ஏற்றுக்கொள்ள முடியாத தவறு. கொரோனா தடுப்பூசியைப் பெருமளவு மக்களுக்குச் செலுத்துவது அறிவியல் தவறு மட்டுமல்ல, மருத்துவத் தவறுமாகும். மேலும் உலகெங்கும் கவனித்துவிட்டேன். கொரோனா தடுப்பூசி போடத் துவங்கியபின், உருமாறிய தீவிர கொரோனா வருவதும் பெருந்தொற்று அதிகமாவதும் மரணங்கள் கூடுவதும் நடக்கிறது...” (Source: airfoundation.com)


இவரின் கூற்றிற்கிணங்க அண்மைக் காலமாக கருப்புப் பூஞ்சைத் தொற்று பரவத் தொடங்கியிருப்பது கவனிக்கத்தக்கது. ஆக உண்மைகள் ஒரு பக்கம் கசிந்துகொண்டிருக்க, சிகிச்சை முறைகளோ பற்பல விதங்களில் வரம்புமீறிச் சென்றுகொண்டிருக்கின்றன. ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவிதமான சிகிச்சை முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுக்கொண்டே இருப்பதால் எது சரியான சிகிச்சை முறை என்பது  தெரியாமல் மக்கள் பயந்துபோய்தான் இருக்கின்றார்கள். 


ஆகவே கொரோனா குறித்து அச்சுறுத்துவதை விட்டுவிட்டு, மக்களைச் சுதந்திரமாகவும் நிம்மதியாகவும் வாழ விட்டுவிடுங்கள். தத்தம் பாதுகாப்பை அவரவர் பார்த்துக்கொள்வார்கள். மீண்டும் மீண்டும் பொதுமுடக்கம் போட்டு மக்களின் வாழ்க்கையைச் சீரழிக்க வேண்டாம். பொதுமுடக்கம் ஒரு நிரந்தரத் தீர்வல்ல என்பதே பெரும்பாலோரின் கருத்தாகும். அரசு இதை உணர்ந்து செயல்பட வேண்டும். 


சிகிச்சை முறைகளையும், எங்கெங்கு சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது என்பதையும், கட்டுப்பாடாக இருக்க வேண்டும் என்பது குறித்தும் வேண்டுமானால் பொது மக்களுக்கு அறிவிப்புச் செய்துகொண்டே இருங்கள். அதுவே மக்களுக்குப் பயனளிக்கும்.        
அன்புடன் 
முனைவர் நூ. அப்துல் ஹாதி பாகவி
21 05 2021

குறிப்பு: என்னுடைய இப் பதிவை வாட்ஸ்அப் குழுமத்திற்குப் பகிர்பவர்கள் ஆதாரங்களாக நான் இணைத்துள்ள நாளிதழ் நறுக்கல்களையும் சேர்த்து அல்லது இந்த பிளாக் இணைப்போடு பகிருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். 
========================


சனி, 15 மே, 2021

மக்கள் தொகை குறைப்பா?

மக்கள் தொகை குறைப்பா?

உலகின் மக்கள் தொகை 790 கோடியைத் தாண்டிச் சென்றுகொண்டிருக்கிறது. ஆனால்  மனித எதிரிகள் மக்கள் தொகையைக் குறைக்க வேண்டும் என பத்தாண்டுகளுக்கே முன்பே முடிவெடுத்தனர். அதனால் பல்லாண்டு காலம் பல அறிஞர்கள் கொண்ட குழு ஆய்வுசெய்து கண்டறிந்ததுதான் கொரோனா வைரஸ் என்றும் அதனைத்  தொடர்ந்து வருகிற தடுப்பூசி என்றும் உலக அரசியல் அறிந்த அறிஞர்கள் சிலர் கூறுகின்றனர். இது குறித்த கட்டுரை ஆங்கில நாளேடான சவரன் இன்டிபென்டன்ட் (Soverign Independent) எனும் நாளிதழில் ஏற்கெனவே வெளிவந்துள்ளதை ஆதாரமாகக் காட்டுகின்றார்கள். இது நம்பும்படியாக உள்ளதா என்று கேட்டால் உலகில் காணும் இன்றைய நிலையைப் பார்த்தால் நம்பாமல் இருக்க முடியவில்லை என்றே சொல்லலாம். 


மனித எதிரிகள் கண்டறிந்த செயற்கையான வைரஸ்தான் இது என்பதற்கு மனிதநேயமுள்ள மருத்துவர்கள் கூறும் சான்று என்னவெனில், இயற்கையான தொற்றுநோய் என்பது குறிப்பிட்ட ஒரு மாகாணத்தில் அல்லது நாட்டில் தோன்றி அந்த நாட்டோடு முடிந்துவிடும். மற்ற நாடுகளுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. குளிர்ப்பிரதேசங்களில் தோன்றினால் வெப்ப மண்டலப் பிரதேசங்களில்  அது அழிந்துவிடும். ஆனால் இந்த கொரோனா வைரஸ் எங்கு முதலில் தோன்றியதோ அங்கிருந்து பரவி அண்டை நாடுகளுக்குப் பரவி, உலகம் முழுவதும் பரவத் தொடங்கிவிட்டது. இப்படி ஒரு  நாட்டில் உருவாகி உலகு முழுவதும் பரவுவது என்பது இதுவரை நாம் கண்டிராதது. எனவே இது செயற்கையாக உருவாக்கப்பட்டதுதான் என்று தீர்க்கமாகக் கூறுகிறார்கள். 


மனித எதிரிகள் இந்த வைரஸைத் தோற்றுவித்த காரணம், மக்கள் கொத்துக் கொத்தாக இறந்து, அதன்மூலம் மக்கள்தொகை குறைய வேண்டும் என்பதுதான். அது இன்று கண்கூடாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அத்தோடு இந்த கொரோனா வைரஸ் என்பதைக் காரணம் காட்டி, தடுப்பூசி என்ற பெயரில் மக்களை மலடாக்கும் வேலையைச் செய்ய வேண்டும். அதன்மூலம்  இனி குழந்தைப் பிறப்பையே தடுத்து நிறுத்திவிட வேண்டும். இதனால் மக்கள் தொகை வளர்ச்சி தடைபட்டு நின்றுவிடும் என்பது அந்தச் சதிகாரர்களின் திட்டம் என்று உலக அரசியல் அறிந்தவர்கள் கூறுகின்றார்கள்.  

 
அந்தத் தடுப்பூசி சிலருக்குத் துரித மரணத்தை ஏற்படுத்தலாம்; வேறு சிலருக்குத் தாமதமாக மரணத்தை ஏற்படுத்தலாம்; வேறு சிலர் மலடாகலாம். மலட்டுத்தன்மை என்பது இரு பாலருக்கும் உண்டு. ஆண்களின் உயிரணுக்களின் வீரியம் குறைந்து, பெண்ணின் கருப்பையை அடைய முடியாமல் செயலிழந்துவிடும். அல்லது ஆணின் உயிரணுவை ஏற்றுக்கொள்கிற வகையில் பெண்ணின் சினைப்பை செயல்படாமல் போகலாம். அந்தக் குறைபாடு இன்று இந்தியாவிலுள்ள பத்து சதவிகிதத்திற்கு மேலான ஆண்-பெண்களுக்கு இருக்கிறது. வெளிநாடுகளில் வாழும் பெரும்பாலான தம்பதியருக்கு இந்தக் குறைபாடு உள்ளது. எதிர்காலத்தில் இது இன்னும் பரவலாகலாம். இதனால் பல்வேறு தம்பதியரின் குழந்தைப்பேறு கனவாகவே முடிந்துவிடும். 


அதையும் மீறிக் குழந்தை பெற்றுக்கொள்ள நினைத்தால் அதற்கு நிறையப் பணம் செலவாகும். ஆம். செயற்கைக் கருவளர்ச்சி மையத்தைத்தான் தம்பதியர் நாட வேண்டும். அங்கு சென்றால் பல இலட்சங்கள் செலவழித்து ஒரு குழந்தையேனும் பெற்றுக்கொள்ளலாம். இதுவெல்லாம் மனித எதிரிகளான சதிகாரர்களின் சதித்திட்டம் என்பதை மனிதநேயமுள்ள மருத்துவர்கள் விவரிக்கிறார்கள்.

 
கொரோனா என்பதைச் சாதாரணமாகப் பார்த்தால் அது ஒரு சளிநோய்; அதை மிக எளிதாகக் குணப்படுத்திவிடலாம். பாதிக்கப்பட்ட பலர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள். இதைப் பயத்தோடும் பயங்கரமாகவும் பார்த்தால் இது ஓர் உயிர்க்கொல்லி நோய். முதலில் காய்ச்சல் வரும்; பிறகு மூச்சுத் திணறல் வரும்; அதன் பிறகு மரணம். சாதாரண சளி நோயைப் பூதாகரமாக ஆக்குவது ஏன்? 


கொரோனாவுக்குப் பல்வேறு மருந்துகள், ஊசிகள் என வந்துகொண்டே இருக்கின்றன. ஆனால்  உண்மையிலேயே சரியான மருந்து எது, சரியான தடுப்பூசி எது என்று இதுவரை மருத்துவர்கள் உறுதியாகக் கூறவில்லை. தடுப்பூசி போட்ட பிறகு மீண்டும் கொரோனா வராதா என்ற கேள்விக்கு உறுதியான பதிலில்லை.  அதேநேரத்தில் மீண்டும் மற்றொரு தடுப்பூசி போட வேண்டும் என்கிறார்கள். இந்த ஊசி போட்ட பிறகு எதிர்விளைவுகளோ பக்கவிளைவுகளோ ஏற்பட்டால் காப்பீடு (இன்ஷ்யூரன்ஸ்) உண்டா என்றால், அதெல்லாம் கொடுக்க முடியாது என்கிறார்கள்.


கொரோனாவை உண்மையிலேயே குணப்படுத்த வேண்டும் என்ற எண்ணமுள்ளவர்கள் சென்ற ஆண்டு செயல்படுத்திய சிகிச்சை முறையை மேற்கொண்டு மிக எளிதாகக் குணப்படுத்திவிடலாமே? அதாவது சென்ற ஆண்டு மருத்துவர்கள், கொரோனாவால் பாதிக்கப்பட்டுக் குணமடைந்தவர்களின் பிளாஸ்மாவை (குருதிநீர்) எடுத்து, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் செலுத்தினால் குணப்படுத்திவிடலாம் என்று சொன்னார்கள். அதனடிப்படையில் நிறையப் பேர் வரிசையில் நின்று பிளாஸ்மா வழங்கினார்கள். ஆனால் இந்த ஆண்டு அது பற்றிய பேச்சே இல்லையே ஏன்? 

 
கொரோனாவை வியாபாரமாகப் பார்ப்பவர்கள் மக்களைப் பயமுறுத்திச் சம்பாதிக்கிறார்கள்; இதை  ஒரு சாதாரண நோயாகப் பார்ப்பவர்கள் எளிய சிகிச்சை முறைகளை வெளியிடுகின்றார்கள்; அச்சப்பட வேண்டாம் என்று ஆலோசனையும் சொல்கிறார்கள். அவற்றுள் மிக முக்கியமான ஆலோசனை நீராவி சிகிச்சையாகும். அதாவது நாம் நீரைச் சூடுபடுத்தி அதிலிருந்து ஆவி பிடித்தால் நம் மூக்கினுள் நுழைந்துள்ள கிருமிகள் இறந்துவிடும். இது ஓர் எளிய சிகிச்சை முறை. இதை ஒரு வாரம் செய்ய வேண்டும் என்கிறார்கள். இது எல்லோரும் பின்பற்றத்தக்க ஓர் எளிய சிகிச்சையாகும்.


மிக எளிய முறையில் குணமாகிவிடும் ஒரு சளி நோய்க்கு இவ்வளவு பெரிய அச்சுறுத்தல் ஏன்? ஊடகங்கள் ஏன் மக்களை இந்த அளவிற்கு அச்சுறுத்துகின்றன? ஏன் மக்களின் வியாபாரத் தலங்களெல்லாம் முடக்கப்படுகின்றன? ஏன் வழிபாட்டுத் தலங்களெல்லாம் பூட்டப்படுகின்றன? இதன் பின்னணி என்ன? இவ்வளவு பெரிய அச்சுறுத்தல் செய்யப்பட்டு அவர்கள் மக்கள் உடல்களில் திணிக்க முயல்வது எதை? தடுப்பூசியைத்தானே? பணத்திற்கோ இலவசமாகவோ அதைச் செலுத்தத் துடிக்கின்றார்கள்; கட்டாயப்படுத்துகிறார்கள். அதைச் செலுத்தவில்லையானால் ஒரு நாட்டிலிருந்து வேறு நாட்டுக்குச் செல்ல முடியாது என்று கட்டுப்பாடு விதிக்கிறார்கள். இதுவெல்லாம் மக்களுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தாதா? இதையெல்லாம் குறித்து மருத்துவ அறிஞர்களே மாறுபட்ட கருத்துகளைக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை நிலை.


இந்தக் கொரோனா பூதாகரமாக்கப்பட்டுள்ளது என்று மனிதநேயமிக்க மருத்துவர்களே சொல்கிறார்கள். ஆம்! கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தோர் என்று கணக்குக் காட்டப்பட்டுள்ள ஏராளமானோர் ஆஸ்துமா, நீரிழிவு, கேன்சர், இதய நோய் உள்ளிட்ட பல நோய்களால் ஏற்கெனவே பாதிப்புக்குள்ளாகி இருந்தவர்கள். அவர்கள்தாம் இந்த வைரஸை எதிர்கொள்ள முடியாமல் இறந்துபோகிறார்கள். மேலும் இந்த நோய் குறித்த பயத்தாலும் பலர் இறந்துபோகின்றார்கள். இது தவிர, கொரோனாவால் இறப்போர் மிக மிகக் குறைவே என்று கூறுகின்றார்கள். அதற்கு ஆதாரமாக, கொரோனா இல்லாத காலங்களில் இறந்தோரின் எண்ணிக்கையையும் கொரோனா வந்தபின் இறந்தோரின் எண்ணிக்கையையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது அவ்வளவு பெரிய வித்தியாசமெல்லாம் இல்லை என்கிறார்கள். இருப்பினும் இது ஊடகங்களால் பூதாகரமாகக் காட்சிப்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது. 

   
இந்த கொரோனா வைரஸின் முக்கிய வேலை நுரையீரலுக்குள் புகுந்து அங்குள்ள ஈரப்பதத்தைச் சளியாக மாற்றிவிடுவதால் மூச்சுவிட முடியாமல் மனிதன் திணறுகிறான். அதனால்தான் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மனிதன் இறக்க நேரிடுகிறது. இதனால் ஆக்ஸிஜன் வாயு உருளை பொருத்தப்பட்டுச் செயற்கையாகச் சுவாசிக்கச் செய்யப்படுகிறது என்று மருத்துவர்கள் கூறுகின்றார்கள். இது உண்மையென்றே வைத்துக்கொள்வோம். ஆனால் ஆக்ஸிஜன் வாயு உருளை குறித்த பேச்சு சென்ற ஆண்டு எழவில்லையே ஏன்? ஆக்ஸிஜன் பற்றாக்குறை என்ற பேச்சு சென்ற ஆண்டு இந்தியாவின் எந்த மாநிலத்திலும் எழவில்லை. இந்த ஆண்டு மட்டும் ஆக்ஸிஜன் வாயு உருளை பற்றாக்குறை என்ற பேச்சு பரவலாகக் காணப்படுவதேன்?


நாடு முழுவதும் ஆக்ஸிஜன் வாயு உருளை பற்றாக்குறை என்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்தி, தமிழ்நாட்டில் பல்வேறு போராட்டங்கள் செய்து, 14 உயிர்கள் பலிகொடுக்கப்பட்டு, மூடப்பட்ட ஸ்டெர்லைட் நிறுவனம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. அதைத் திறக்க அரசாங்கமே உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுவெல்லாம் எதைக் காட்டுகிறது? பற்றாக்குறை என்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்தி, பெருமுதலாளிகள் இலாபம் சம்பாதிக்க முயல்கிறார்களோ என்ற சந்தேகத்தை மக்கள் மனங்களில் ஏற்படுத்தியுள்ளதைத் தவிர்க்க முடியவில்லை.

     
இதையே மற்றொரு கோணத்தில் பார்க்கலாம். ஆக்ஸிஜன் வாயு உருளையைப் போதிய அளவு நம் நாட்டிலேயே தயாரிக்க முடியும். ஆனால் அதற்கான எந்த முன்னேற்பாட்டையும்  அரசு மேற்கொள்ளவே இல்லை. கடைசி நேரத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் பலர் மாண்டு கொண்டிருக்கிறார்கள். மக்களின் உயிர்கள்மீது அக்கறை உள்ள அரசு அதற்கான முன்னேற்பாட்டையல்லவா செய்திருக்க வேண்டும்?  

ஆக்ஸிஜன் வாயு பற்றாக்குறை பற்றியோ, பலர் மாண்டுள்ளதைப் பற்றியோ நம் பாரதப் பிரதமர் சிறிதும் கவலைப்படவில்லை; அலட்டிக்கொள்ளவில்லை. காரணம் அவர் இதற்குமுன் குஜராத்தில் 3000 முஸ்லிம்களைக் கொன்றவர். அதனால் மக்கள் இறப்பது குறித்து அவர் எந்த வருத்தத்தையும் வெளிப்படுத்த மாட்டார். அது மட்டுமல்ல இத்தகைய கல்நெஞ்சினர் ஒருவர்தாம் நமக்குத் தேவை என்று முடிவெடுத்த மனித எதிரிகளின் குழுவினரால் தேர்வு செய்யப்பட்டவர்தாம் இந்த மோடி. அதனால் அவர்களுக்குத்தான் விசுவாசமாக இருப்பாரே தவிர மக்கள் சாகின்றார்களே என்று அழுதுகொண்டிருக்க மாட்டார். 


மக்கள்மீது எந்த அக்கறையும் இல்லாத அரசு, கொத்துக் கொத்தாக மக்கள் இறந்தபோனதைக்  குறித்துக் கவலைப்படாத அரசு, திடீரென மக்கள்மீது அக்கறை ஏற்பட்டு, அனைவரையும் தடுப்பூசி செலுத்தக் கட்டாயப்படுத்துவது ஏன்? இதில் அரசுக்கு உள்நோக்கம் இருக்கிறது என்று எடுத்துக்கொள்ளலாமா? 
மக்கள் கொத்துக் கொத்தாக இறந்தபோது எந்த வருத்தத்தையும் வெளிப்படுத்தாத மோடியைப் பலரும் விமர்சனம் செய்வதைக் காணமுடிகிறது. ஆனால் அவர்களெல்லாம் ஒன்றைத் தெரிந்துகொள்ள வேண்டும். அதாவது மனித எதிரிகள் எதிர்பார்த்த மரண எண்ணிக்கை இதைவிட அதிகமாகும். அந்த இலக்கு எண்ணிக்கையை அடைகின்ற வரை இந்த கொரோனா அலை மக்களை விட்டு அகலாது. இரண்டாம் அலை, மூன்றாம் அலை, நான்காம் அலை என்று தொடர்ந்துகொண்டுதான் இருக்கும். இன்னும் நிறைய உயிர்ப்பலிகள் ஏற்படவே செய்யும். ஆக கொரோனா எனும் வைரஸுக்குள் பல்வேறு சூழ்ச்சிகளும் மர்மங்களும் மறைந்துள்ளன. அவை ஒவ்வொன்றாக விரைவில் வெளிவரும்.  


அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகின்றான்: மனிதக் கரங்கள் தேடிக் கொண்டதன் விளைவாகத் தரையிலும் கடலிலும் சீரழிவு தோன்றிவிட்டது. அவர்கள் செய்த சில வினைக(ளின் விளைவுக)ளை அவர்களுக்கு அவன் சுவைக்கச் செய்ய வேண்டும் என்பதே இதற்குக் காரணம்.... (30: 41)
---------------------
அன்புடன் 
-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி 
(துணை ஆசிரியர் இனிய திசைகள் மாதஇதழ்)
15 05 2021
====================

செவ்வாய், 11 மே, 2021

அல் குர்ஆன் ஓர் ஆழ்நிலைப் பார்வை

நூல் வெளிவந்துவிட்டது
--------------------------------
நூல்: அல்குர்ஆன் ஓர் ஆழ்நிலைப் பார்வை
நூலாசிரியர்: கெக்கிராவ ஸஹானா
பக்கங்கள்: 168
விலை: Rs 90/-
வெளியீடு: புதிய சமுதாயம் பதிப்பகம், கோயம்புத்தூர்

நூல் கிடைக்குமிடங்கள்:
 
அமீர் அல்தாப் (கோவை)
தொடர்புக்கு: 97876 75791

சாஜிதா புக் சென்டர், மண்ணடி, சென்னை.
தொடர்புக்கு: 98409 77758

ரஹ்மத் பதிப்பகம், மயிலாப்பூர், சென்னை.
தொடர்புக்கு: 94440 25000
----------------------

இந்நூலுக்கு நான் எழுதிய அணிந்துரை 
உங்கள் பார்வைக்கு...

திருக்குர்ஆன் ஓர் அறிவுப்பெட்டகம்; வரலாற்றுச் சுரங்கம். யார் எக்கோணத்தில் அணுகினாலும் அவரின்  சிந்தனைக்கேற்ப விரிந்துகொடுக்கின்ற நெகிழ்வுத்தன்மை கொண்டது. யார் எது குறித்து ஆய்வு மேற்கொண்டாலும்  அவருடைய ஆய்வுக்கான தீர்வும் ஆய்வுமுடிவும் அதில் கிடைக்கும். 

அந்த வகையில் சகோதரி ஸஹானா பெண்களைப் பற்றியும் அவர்களுக்கு இஸ்லாம் வழங்கியுள்ள உரிமைகள் பற்றியும் பெண்ணை அல்லாஹ் எவ்வளவு உயர்வாக மதிக்கச் சொல்லியிருக்கிறான் என்பது குறித்தும் ஓர் ஆய்வே நடத்தியிருக்கிறார். அந்த ஆய்வின் முடிவு அவருக்குச் சாதகமாக அதில் கிடைக்கப்பெற்றதை மகிழ்வோடு இந்நூல்மூலம் நம்முன் கொண்டுவந்து வைக்கிறார். சின்னச் சின்ன 47 தலைப்புகளில் சில பக்கங்களுக்குள், தான் சொல்ல வேண்டிய கருத்துகளை எடுத்துவைத்து, சீராக முடிக்கிறார். படிக்க எளிதாகவும் செம்மையாகவும் அமைத்துள்ளார். 

அல்லாஹ் திருக்குர்ஆனில் பல்வேறு இடங்களில் பலவகை அணிகளைப் பயன்படுத்தியிருந்தாலும் மக்கள் தம் பேச்சுகளில் அதிகமாகப் பயன்படுத்துகிற உவமை அணியையே பல்வேறு இடங்களில் பயன்படுத்தியுள்ளான். அதனால் குர்ஆன் சொல்லவருகின்ற கருத்தை மக்கள் எளிதாகப் புரிந்துகொள்ள முடியும் என்பதையும் குறிப்பிடுகிறார். 

    
அல்லாஹ்வின் பார்வையில் ஆணும் பெண்ணும் சமமானவர்கள் என்ற குர்ஆனின் கூற்றை (3: 195) மேற்கோள் காட்டுகிறார். திருமணம், மணமுறிவு, இத்தா-காத்திருப்புக்காலம், மாதவிடாய்க் காலம், பிள்ளைப்பேறு, பாலூட்டுதல் உள்ளிட்ட பெண்கள் சார்ந்த பல்வேறு தகவல்கள் திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளன. அவை அனைத்துமே பிற சமுதாய மக்களிடம் பிரச்சனைக்குரியவை; விதிகள் வகுக்கப்படாதவை. ஆனால் இஸ்லாமிய மார்க்கத்தில் மேற்கண்ட அனைத்திற்கும் விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. அதனால் பெண்கள் பாதிப்புக்குள்ளாவதில்லை. எல்லா உரிமைகளையும் எளிதாகப் பெற்றுக்கொள்கிறார்கள். ஏனென்றால் அவர்களின் உரிமைகளை உரிய முறையில் கொடுக்கச் சொல்லி குர்ஆன் ஆண்களுக்கு அழுத்தம் கொடுக்கிறது. அதனால் அவையெல்லாம் செம்மையாகவும் சீராகவும் நடைபெறுகின்றன. 


சகோதரி ஸஹானா ஒரு பெண்ணாக இருந்து, தனக்குச் சாதகமாக குர்ஆன் என்ன கூறுகிறது என்று ஆய்வு செய்தபோது, அது பெண்களுக்கு மட்டுமின்றி எல்லோருக்கும் சாதகமாக சமநீதி வழங்குவதைக் கண்டு ஆச்சரியப்படுகிறார். திருக்குர்ஆனின் கருத்துகளைத் தாய்மொழியில் படித்து உணர்கின்றபோது குர்ஆனை ஓரளவேனும் உணர முடியும். ஓர் எழுத்துக்குப் பத்து நன்மை என்பதற்காக, காலம் முழுவதும் பொருள்புரியாமல் வெறுமனே ஓதிக்கொண்டிருந்தால் எப்போதுதான் இறைவனின் அற்புதக் கருத்துகளைப் புரிந்துகொள்வது? எப்போதுதான் குர்ஆனை ஆய்வு செய்ய முற்படுவது? ஆம். குர்ஆன் தன்னைச் சிந்திக்குமாறு பல்வேறு இடங்களில் மீண்டும் மீண்டும் சொல்கிறது. எனவே திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து ஓதுமாறு பணிக்கிறார். 

   
ஐந்து பக்கங்கள் அரபியில் பொருள்புரியாமல் ஓதினாலும் அதில் ஒரு பக்கமாவது அதற்கான  தமிழாக்கத்தைப் படித்தால், அல்லாஹ் கூறியுள்ள கருத்தை உணர்ந்துகொள்ளலாம்; புரிந்துகொள்ளலாம். குறிப்பாக நாம் அன்றாடம் தொழுகையில் ஓதிவருகின்ற அத்தியாயங்களுக்கான பொருளைப் படித்துத் தெரிந்துகொண்டால் தொழுகையில் ஓர் உயிரோட்டத்தைக் காணலாம் என்பதில் ஐயமில்லை. இக்கருத்தை வலியுறுத்தியே  இந்நூலாசிரியை சகோதரி ஸஹானா எழுதியுள்ளார்.

 
‘பெண்கள்’ என்ற பொருளில் ‘அந்நிஸா’ என்ற அத்தியாயம் அருளப்பட்டுள்ளது. அதில் பெண்கள் குறித்த பல்வேறு  சட்டங்கள் கூறப்பட்டுள்ளன. சொத்துரிமை, திருமணம், விவாகவிலக்கு, இத்தா-காத்திருப்புக்காலம் உள்ளிட்ட பல்வேறு விளக்கங்கள் எடுத்துரைக்கப்படுகின்றன. ‘மர்யம்’ என்ற அத்தியாயம் இறைத்தூதர் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தாயார் பெயரில் அமைக்கப்பட்டுள்ளது. ஆக பெண்களுக்கெனத் தனிச்சிறப்பையும் உயர்வையும் அல்லாஹ் வழங்கியுள்ளான். 


ஒரு பெண் தன் கணவனுக்குக் கட்டுப்பட வேண்டும் என்ற திருக்குர்ஆனின் கூற்று ஒரு புறம் இருந்தாலும் இது உலக வாழ்க்கையில்தான். ஆனால் ஒரு பெண் தன் கணவரைவிட உயர்வையும் மேன்மையையும் அடைய முடியும். எப்படி? ஒரு பெண் தன் கணவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் செவ்வனே செய்வதோடு, படைத்த இறைவனுக்கான கடமைகளையும் செய்கிறாள்; மேலும் கணவனைவிட அதிகமான நேரம் குர்ஆன் ஓதுதல், இறைத்தியானம் (திக்ர்) செய்தல், ஏழைக்கு உணவளித்தல் உள்ளிட்ட எல்லாவித நல்லறங்களையும் செய்கிறாள்; உபரியான வணக்கங்கள் பலவற்றைச் செய்கிறாள்; அல்லாஹ் திருப்தியுறும்படி வாழ்க்கை நடத்துகிறாள் என்றால், அப்போது அவள் தன் கணவனைவிட அல்லாஹ்வின் பார்வையில் உயர்ந்துவிடுகிறாள்.

 
ஒரு பெண் பல்வேறு பரிமாணங்களில் இந்தச் சமுதாயத்திற்குப் பங்களிப்புச் செய்கிறாள். தாயாக, தாரமாக,  சகோதரியாக, அண்ணியாக, மாமியாக, மகளாக முதலான பல்வேறு பரிமாணங்களில் பங்களிப்புச் செய்தாலும் தாய் என்ற உறவே ஒவ்வோர் ஆணுக்கும் தவிர்க்க முடியாத உறவு. அந்த உறவில் ஓர் ஆண் தன் தாய்க்கு ஆற்றுகின்ற பணி மகத்தானது. எனவே ஒவ்வோர் ஆணும் தாயைப் போற்ற வேண்டிய முறைப்படி போற்றி, ஆற்ற வேண்டிய பணிவிடைகளை ஆற்றி, அந்தத் தாயின் பிரார்த்தனையைப் பெற்றுவிட்டால் அவனுக்கு அதுவே ஈருலக நற்பாக்கியத்தையும் பெற்றுத் தந்துவிடும். அல்லாஹ்வின் அருளால் இவ்வுலகிலும் நிம்மதியாக வாழலாம். மறுமையில் அல்லாஹ்வின் திருப்தியைப் பெற்று, சொர்க்கத்தில் இடம்பிடித்து நிரந்தரமான வாழ்க்கை வாழலாம். 


 இவ்வாறு பெண்கள் குறித்த பல்வேறு செய்திகளைப் பல்வேறு கோணங்களில் சின்னச் சின்னத் தலைப்புகளில்  சிறுசிறு கட்டுரைகளாக எடுத்துரைக்கிறார். எளிமையான வாக்கிய அமைப்போடு நேர்த்தியாகவும் திறமையாகவும் இந்நூலை எழுதியுள்ளார். ஒரு நாவலைப் போன்ற ஓட்டம் இந்நூலைப் படிக்கும்போது ஏற்படுகிறது. இவ்வளவு திறமையாக இந்நூலை எழுதிய ஆசிரியை சகோதரி ஸஹானா இன்று நம்மோடு இல்லை. நல்ல நூலை எழுதிய ஸஹானாவை நான்கு வார்த்தைகள் புகழ்ந்து பேசி, அவரது முயற்சியைப் பாராட்டலாம் என்றால் அத்தகைய வாய்ப்பை அவர் நமக்கு வழங்கவில்லை. இந்நூலை எழுதிய ஸஹானா திடீரென இறந்துவிட அவர்தம் சகோதரி ஸுலைஹா தன் மூத்த சகோதரியின் முயற்சியை மக்கள் மன்றத்தில் கொண்டுவந்து சமர்ப்பிக்கும் பணியைச் செவ்வனே செய்துள்ளதை நான் பாராட்டுகிறேன்; வாழ்த்துகிறேன். 


இந்நூலை எழுதிய ஸஹானாவுக்கு இதுவே கடைசி நூலாக அமைந்துவிட்டது. எனவே இந்நூல்மூலம் கிடைக்கின்ற நன்மைகளை அல்லாஹ் அவருடைய மண்ணறைக்குச் சேர்த்து வைத்து, அவருடைய பிழைகளைப் பொறுத்து, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸில் அவருக்கு இடமளிப்பானாக. 


அன்புடன் 
நூ.  அப்துல் ஹாதி பாகவி
=================