புதன், 23 ஜனவரி, 2019

சனி, 19 ஜனவரி, 2019

வெள்ளி, 18 ஜனவரி, 2019

இஸ்லாமிய வங்கியியல்

வியாழன், 17 ஜனவரி, 2019

செவ்வாய், 15 ஜனவரி, 2019

நோயாளியை நலம் விசாரிப்போம்!


-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.
==========================================

நாம் ஒருவரைச் சந்திக்கும்போது, “என்ன தம்பி, நல்லா இருக்கீங்களா?” என்று விசாரிப்பது வழக்கம். இது ஒரு நல்ல பழக்கம்தான். ஆனால் நாம் விசாரிக்க வேண்டியவர்களை விசாரிக்காமல் விட்டுவிடுகின்றோமே அதுதான் நாம் செய்யும் தவறாகும். அதாவது நம் மஹல்லாவைச் சார்ந்த ஒருவர் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் இருக்கிறார் என்றால், அவரைச் சந்தித்து, உடல் நலம் விசாரிப்பதும் ஆறுதல் கூறுவதும், அவருக்காக துஆச் செய்வதும் நபிவழியாகும். மிக முக்கியமான சுன்னத்தை-நபிவழியை நம்முள் பெரும்பாலோர் கடைப்பிடிப்பதில்லை. 

ஒரு நோயாளியின் மனநிலை விரக்தியாலும் மரணத்தை நோக்கியதாகவும் இருக்கும். அத்தகைய கடினமான மனநிலையில் உள்ளவரை நாம் நேரடியாகச் சந்தித்து ஆறுதல் கூறுவது அவர் விரைவில் நலம்பெறக் காரணமாக அமைகிறது. நாம் கூறும் ஆறுதல் வார்த்தைகள் அவரின் மனதுக்குத் தெம்பூட்டுவதாக அமைகின்றன. இதனால்தான் நபி (ஸல்) அவர்கள் உடல் நலம் விசாரிப்போரைச் சிறப்பித்துக் கூறியுள்ளார்கள். 

“முஸ்லிம் ஒருவர் (உடல் நலிவுற்ற) தம் சகோதர முஸ்லிமைச் சந்தித்து உடல்நலம் விசாரித்தால், அவர் (திரும்பி வரும் வரை) சொர்க்கத்தின் கனிகளைப் பறித்துக்கொண்டிருக்கிறார்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: திர்மிதீ: 890) 

ஒரு முஸ்லிம் சகோதரரை உடல் நலம் விசாரிப்பது சொர்க்கத்தின் கனிகளைப் பறிப்பதற்குச் சமம் என்றால் அதன் உயர்வுதான் என்ன! அந்த அளவிற்குச் சிறப்பும் மேன்மையும் வாய்ந்த நபிவழி நடைமுறைப் பழக்கத்தை முஸ்லிம்கள் பெரும்பாலோர் கடைப்பிடிப்பதில்லை. மேலோட்டமாகச் செய்யும் சிலரின் செயல்பாடு விதிவிலக்காகும்.  ஆனால் மருத்துவமனைகளுக்குச் சென்று, முஸ்லிம்கள் ஒவ்வொருவரையும் சந்தித்து நலம் விசாரித்து ஆறுதல்  சொல்வோர் அரிதிலும் அரிது. அவ்வாறு மருத்துவமனை சென்று ஆறுதல் தெரிவிப்பதன்மூலம் நோயாளியின் நோய் விரைவில் குணமாவது ஒருபுறம். மற்றொரு கோணத்தில், இறைவன் நமக்கு வழங்கியுள்ள ஆரோக்கியத்தின்  அருமை அப்போதுதான் நமக்குப் புரியவரும். அவன் நமக்கு வழங்கியுள்ள ஆரோக்கியம் எனும் அருட்கொடை எவ்வளவு மகத்தானது என்ற வியப்பு மேலிடும். 

எத்தனையோ பேர் தமது ஆரோக்கியத்தை இழந்து, மருத்துவமனையில் அவதிப்பட்டுக்கொண்டும், சிறுநீர் கழிப்பதற்குக்கூட இயலாமல் சிரமப்பட்டுக்கொண்டும் இருக்கின்றார்கள். அவ்வாறிருக்க அல்லாஹ் நம்மை முற்றிலும் ஆரோக்கியமாக வைத்திருக்கின்றானே என்ற உணர்வு ஏற்பட்டு, அவனுக்குக் கூடுதலாக நன்றி செலுத்த வேண்டும் என்ற எண்ணமும் ஆசையும் ஏற்படும். சிலருக்குச் சுயமாகச் சிறுநீர் கழிக்க இயலவில்லை; சிலருக்குச் சுயகட்டுப்பாட்டை இழந்து, தானாகவே சிறுநீர் வெளியேறிக்கொண்டிருக்கிறது. சிலருக்கு இயல்பாக மலம் கழிக்க இயலவில்லை; சிலருக்குச் சுயகட்டுப்பாட்டை மீறி மலம் வெளியேறிக்கொண்டிருக்கிறது. புற்றுநோய், சர்க்கரை நோய், தோல்நோய், தொண்டை வலி, கண்பார்வையின்மை, கை கால் முடம் உள்ளிட்ட எத்தனையெத்தனையோ நோய்களாலும் குறைபாடுகளாலும் மக்கள் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.  அந்த அவதியின் உச்சத்தில், “நாம் ஏன் வாழ வேண்டும்; இறந்துவிடலாமே” என்றெல்லாம் எண்ணத் தோன்றும். அத்தகைய தருணத்தில் நாம் கூறும் இதமான ஆறுதல் வார்த்தைகள் அவரை வாழ வைக்கும்; இன்னும் வாழ வேண்டுமென்ற எண்ணத்தை ஏற்படுத்தும். ஆக, உடல் நலம் விசாரிப்பது ஓர் உயிரை வாழ வைப்பதற்குச் சமமானதாகும். அதனால்தான் நலம் விசாரிப்பதற்கு அவ்வளவு பெரிய நன்மையை நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். 

நோயுற்றவரை நலம் விசாரிப்பது ஒவ்வொரு முஸ்லிமின் கடமையென நபி (ஸல்) அவர்கள் நவின்றுள்ளதைப் பாருங்கள்: “ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமுக்குச் செய்ய வேண்டிய  கடமைகள் ஐந்து. அவை: ஸலாமுக்கு பதிலுரைத்தல், நோயாளியை நலம் விசாரித்தல், ஜனாஸாவைப் பின் தொடர்தல், விருந்தழைப்பை ஏற்றுக் கொள்ளல், தும்முபவருக்கு (அவர் அல்ஹம்து லில்லாஹ் என்று சொன்னபின்) மறுமொழி கூறுதல் ஆகியவையாகும்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  (நூல்: புகாரீ: 1240)

இந்த ஐந்து கடமைகளுள் பெரும்பாலானவற்றை நாம் மறந்து வாழ்கிறோம்; அசட்டையாக இருக்கிறோம். அதைத் தவிர்த்து, இந்நடைமுறையை நாம் நம்முடைய அன்றாடப் பழக்கமாக மாற்றிக்கொள்ள முனைய வேண்டும். ஏனெனில் ஒருவர் தம் நோயால் அவதிப்படுகின்றபோது நாம் கூறும் ஆறுதல் வார்த்தைகளால் அவர் புத்துணர்வு பெறுகிறார். தமக்கு ஆதரவாக இவ்வுலகில் உறவினர்களும் நண்பர்களும் இருப்பதாக உணர்கிறார். அதுவே அவர் துரிதமாக நிவாரணம் பெறுவதற்கான காரணியாக அமைகிறது. எனவேதான் நபி (ஸல்) அவர்கள் நலம் விசாரிப்பதை ஒரு கடமையாகக் கூறியுள்ளார்கள்.

நோயைக் கொடுப்பதும் அதைக் குணப்படுத்துவதும் இறைவன் ஒருவனே. நோயைக் கொடுத்த இறைவனே நோயாளியை நலம் விசாரிக்குமாறு கூறுகிறான். நலம் விசாரிக்காதவரை நாளை மறுமையில் அவன் விசாரணை செய்வதாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறிய செய்தி ‘முஸ்லிம்’ எனும் நபிமொழித் தொகுப்பு நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் மறுமை நாளில் (ஒரு மனிதரிடம்), “ஆதமின் மகனே! (மனிதா!) நான் நோயுற்றிருந்தபோது என்னை உடல்நலம் விசாரிக்க நீ வரவில்லையே (ஏன்)?'' என்று கேட்பான். அதற்கு மனிதன், “என் இறைவா! நீயோ அகிலத்தாரின் அதிபதியாயிருக்க, உன்னை நான் எவ்வாறு உடல்நலம் விசாரிப்பேன்?'' என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், “உனக்குத் தெரியுமா? என் அடியானான இன்ன மனிதன் நோய்வாய்ப்பட்டிருந்தபோது அவனிடம் சென்று நீ நலம் விசாரிக்கவில்லை. தெரிந்துகொள்: அவனை உடல்நலம் விசாரிக்க நீ சென்றிருந்தால் அவனிடம் என்னைக் கண்டிருப்பாய்'' என்று கூறுவான்... (நூல்: முஸ்லிம்: 5021)

நபி (ஸல்) அவர்கள் தொடங்கிவைத்த இந்நற்பழக்கத்தை அவர்களைப் பின்பற்றி வாழ்ந்த நபித்தோழர்களும் கடைப்பிடித்திருக்கின்றார்கள். ஒரு தடவை அலீ (ரளி) அவர்கள் தம் புதல்வர் ஹசன் (ரளி) அவர்களை நலம் விசாரிக்கச் சென்றார்கள். அங்கே ஏற்கெனவே அவரை நலம் விசாரிக்க, அபூமூஸா அஷ்அரீ (ரளி) அவர்கள் வந்திருப்பதைக் கண்ட அலீ (ரளி) அவர்கள் அவரிடம், “தாங்கள் உடல்நலம் விசாரிக்க வந்தீர்களா? அல்லது (சாதாரணமாகச்) சந்திக்க வந்தீர்களா?” என்று கேட்டபோது, “இல்லை. நான் உடல் நலம் விசாரிக்கத்தான் வந்தேன்” என்று அபூமூஸா (ரளி) அவர்கள் கூறினார்கள். அப்போது அலீ (ரளி) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்: 

“முஸ்லிம் ஒருவர் மற்றொரு முஸ்லிமை உடல்நலம் விசாரிப்பதற்காக ஒரு காலை நேரத்தில் சென்றால், அவருக்காக மாலை நேரம் வரை எழுபதாயிரம் வானவர்கள் பிரார்த்தனை செய்கிறார்கள். அவர் மாலை நேரத்தில் உடல்நலம் விசாரிக்கச் சென்றால் அவருக்காகக் காலை நேரம் வரை எழுபதாயிரம் வானவர்கள் பிரார்த்தனை செய்கின்றார்கள். மேலும் அவருக்குச் சொர்க்கத்தில் ஒரு தோட்டமும் (வெகுமதியாகக்) கிடைக்கின்றது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியுற்றேன். (நூல்: திர்மிதீ: 891) 

ஆக ஒரு முஸ்லிம் பிற முஸ்லிம் சகோதரரை உடல் நலம் விசாரிக்கச் செல்வதால் எவ்வளவு பெரிய நன்மையும் நலமும் அவருக்குக் கிடைக்கின்றன என்பதைப் பாருங்கள். எழுபதாயிரம் வானவர்கள் நமக்காகப் பிரார்த்தனை செய்வது எவ்வளவு பெரும் பாக்கியம்!

உடல் நலம் விசாரிக்கச் செல்வதில் மற்றொரு முக்கியமான விஷயமும் அடங்கியுள்ளது. இப்பழக்கத்தை நாம் கைவிட்டுவிட்டதால் அவ்விடத்தைக் கிறிஸ்தவத் தொண்டர்கள் பிடித்துக் கொண்டார்கள். அவர்கள் நோயுற்ற பிற சமயச் சகோதரர்களை மருத்துவமனைகளில் சந்தித்து ஆறுதல் கூறுவதோடு, ஜெபம் செய்வதாகக் கூறி, கர்த்தர் இயேசுவைத் துதிக்குமாறு கூறுகின்றார்கள். தம் மதநம்பிக்கையையும் அவர்களின் உள்ளத்தில் திணித்து விடுகின்றார்கள். “நமக்கு நோய் குணமானால் சரி” என்ற எண்ணத்தில் நம் சகோதரர்களும் இறைமறுப்புக்குரிய வார்த்தைகளை மொழிந்துவிடுகின்றார்கள். இதனால் அவர்களின் ஈமான் பறிபோய்விடுகின்ற சூழ்நிலை உண்டாகிவிடுகின்றது. இதிலிருந்து அவர்களைக் காப்பது நம் கடமையல்லவா? 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஒரு யூதச் சிறுவனை, அவன் நோயுற்றிருந்தபோது நலம் விசாரிக்கச் சென்று, நலம் விசாரித்தபின், “ஏகத்துவக் கலிமாவை ஏற்றுக்கொள்” என்று கூறினார்கள். அப்போது அருகில் மனவேதனையுடன் நின்றுகொண்டிருந்த அவனுடைய தந்தை, “அபுல் காஸிமுக்கு வழிப்படு” என்று கூற, அச்சிறுவன் கலிமாவை மொழிந்தான் என்பது வரலாறு. 

ஏனெனில், “பசி வந்தால் பத்தும் பறக்கும்” என்பதைப்போல், நோய் வந்தால், எவ்வளவு மனஉறுதி மிக்கவனும் நிலை குலைந்து போவான். அச்சமயத்தில் மனம் இளகிப்போயிருக்கும். எதைச் சொன்னாலும் அதை நோக்கியே மனம் செல்லும். அதைச் சரியாகப் புரிந்துகொண்ட கிறிஸ்தவத் தொண்டர்கள் அப்பணியைச் செவ்வனே செய்து வருகின்றார்கள். எனவே இனிவரும் காலங்களிலாவது மறந்துவிட்ட நபிவழியைத் தவறாது கடைப்பிடித்து, அந்தந்த மஹல்லாவாழ் மக்கள் தத்தம் பகுதியில் யார் யார் நோய்வாய்ப்பட்டுள்ளனர் என்பதை அறிந்து, அவர்களை உடனடியாக நலம் விசாரிக்க முனைந்தால் எதிர்காலத்தில் நம் சகோதர, சகோதரிகளின் ஈமானைக் காக்க அது உதவும் என்பது திண்ணம். 
=====================







ஞாயிறு, 13 ஜனவரி, 2019

இஸ்லாமிய வங்கியியல்


-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

முஸ்லிம்கள் தம் உணவை ஆகுமான (ஹலாலான) உணவாகச் சாப்பிட வேண்டும் என்பதில் மிகுந்த கவனம் செலுத்திவருகின்றனர். குறிப்பாக, மாமிசம் சாப்பிடுவதில் முன்னெச்சரிக்கையோடு செயல்படுகின்றார்கள். ஆட்டிறைச்சி, கோழி இறைச்சி வாங்கும்போது அதை முஸ்லிம்தான் அறுத்தாரா என்பதை உறுதி செய்துகொண்டு வாங்குகின்றார்கள். உணவகங்களில் இறைச்சி சாப்பிட நேர்ந்தால், சாப்பிடுமுன்னர் அதை முஸ்லிம்தான் அறுத்தாரா என்பதை உறுதிசெய்துகொண்டு சாப்பிடுகின்றார்கள்.

ஆனால் அவர்கள் தாம் ஈட்டுகின்ற  பொருளாதாரம் ஆகுமானதா இல்லையா என்று சிந்திப்பதில்லை. அதற்கான வழிமுறைகளும் அவர்களுக்கு அவ்வளவாகத்  தெரிவதில்லை. சிலர்  தெரிந்தே தவறு செய்கின்றார்கள். வட்டி கூடாதென்று தெரிந்தே, அதைக் கண்மூடித்தனமாகச் செய்துவருகின்றார்கள். இதற்கான காரணம், இஸ்லாமியப் பொருளாதாரம் குறித்த போதிய விழிப்புணர்வின்மையே ஆகும். இஸ்லாமியப் பொருளாதாரம் முற்றிலும் வேறுபட்டது. அறவே வட்டி இல்லாதது. எல்லோருக்கும் நன்மை செய்யக்கூடியது. எல்லோரையும் வாழவைக்கக்கூடியது என்பதை பிற சமய மக்களே பாராட்டுகின்றார்கள். 

முஸ்லிம்கள் அனைவரையும் வட்டி எனும் தீமைக்குள் கொண்டுவர யூதச் சமுதாயம் சூழ்ச்சி செய்தது; செய்துகொண்டிருக்கிறது. அதன் விளைவாக, நம்முள் பலர் தம்மை அறியாமலே அதனுள் நுழைந்துவிட்டார்கள். அது வட்டி என்று தெரியாமல் அதை வாங்கிக்கொண்டிருக்கின்றார்கள். அல்லது கொடுத்துக்கொண்டிருக்கின்றார்கள். வேறு சிலர் காலத்திற்கேற்ற மார்க்கத் தீர்ப்பு வழங்க வேண்டும் என்ற எண்ணத்தில் வட்டி சார்ந்த சில நடைமுறைச் செயல்பாடுகளைச் செல்லத்தக்கனவாக அறிவித்துள்ளனர். அது சமுதாய மக்களுக்குச் சாதகமாகப் போய்விட்டதால் உறுத்தல் இல்லாமல் உளப்பூர்வமாக அது சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபடுகிறார்கள்.

 வங்கி என்பதே ஒரு வட்டி நிறுவனம்தான். அங்கு முதலீட்டாளர்களுக்கு வட்டி கொடுப்பதும் கடன் பெற்றோரிடமிருந்து வட்டி வாங்குவதும்தான் அதன் முக்கியத்தொழில். எனினும் காலத்தின் கட்டாயத்தையும் அரசாங்க நிர்ப்பந்தத்தையும் கருதியே வங்கிக் கணக்கைத் தொடங்குகிறோம். அதாவது ஒருவருக்கு வங்கிக்கணக்கு இருந்தால்தான் வரைவோலை, காசோலை உள்ளிட்டவற்றை மாற்றுவது எளிதாகும். அது மட்டுமின்றி ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் நாம் பிறருக்குக் கொடுத்தால், அதைப் பணமாகக் கொடுக்கக்கூடாது. காசோலையாகவோ, வரைவோலையாகவோதான் கொடுக்க வேண்டும் என்ற சட்டம் உள்ளது. இது போன்ற காரணங்களுக்காக வங்கியில் கணக்கு வைத்துக்கொள்வது கூடும். ஆனால் அங்கே கிடைக்கின்ற வட்டியை நாம் உண்ணக் கூடாது என்ற சட்டம் உள்ளது. எனினும் அது இஸ்லாமிய வங்கியாக இருந்துவிட்டால் தடைசெய்யப்பட்ட வட்டி எனும் பாவத்திலிருந்து நாம் முற்றிலும் விலகிக்கொள்ளலாம் அல்லவா?

 இஸ்லாமிய வங்கி முறை எப்படி இயங்குகிறது என்றால் பொதுமக்கள் முதலீடு செய்கின்ற பணம் அனைத்தும் கூட்டாண்மை வணிகம் என்ற அடிப்படையில் பெறப்பட்டு, வங்கி ஈடுபடுகின்ற வியாபாரத்தில் கிடைக்கின்ற இலாபத்தொகை பொதுமக்களுக்குப் பிரித்துக்கொடுக்கப்படுகிறது. எனவே இது வட்டியாகாமல் இலாபத்தில் கிடைக்கின்ற பங்காகக் கருதப்படுகிறது. இந்தப் பங்கின் அளவு குறிப்பிட்ட அளவாக இருக்காது. வங்கிக்கு இலாபம் எவ்வளவு கிடைக்கிறதோ அதைப் பொறுத்து முதலீட்டாளர்களுடைய பங்கின் அளவு கூடலாம், குறையலாம் என்ற நெகிழ்வுத்தன்மையைக் கொண்டிருப்பதால் யாருக்கும் எந்தச் சிரமமும் இல்லை. ஓராண்டு குறைவாகக் கிடைக்கின்ற இலாபத் தொகை அடுத்த ஆண்டு அதைவிடக் கூடுதலாகக் கிடைக்கலாம். ஆக இஸ்லாமிய வங்கி முறை நம்மை வட்டியிலிருந்து காப்பதோடு பயனையும் நல்குகிறது. அப்படியிருக்கும்போது நாம் ஏன் அதை இன்னும் பயன்படுத்திக்கொள்ளாமல் இருக்கின்றோம்?

இஸ்லாமிய வங்கி எங்கே உள்ளது? இருந்தால்தானே அதில் நாங்கள் கணக்குத் தொடங்க முடியும்? என்று நீங்கள் கேட்கலாம். இஸ்லாமிய வங்கி முஸ்லிம்கள் வாழும் நாடுகளில் இன்று நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்திய நாட்டில் அதற்கு இதுவரை அனுமதியளிக்கப்படவில்லை. ஆனால் இஸ்லாமியச் சிந்தனையாளர்களின் கூட்டு முயற்சியின் பயனாக, இஸ்லாமியக் கூட்டுறவு வங்கி தொடங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இந்தியா முழுவதும் 31 இடங்களில் இந்தக் கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் சென்னையில் திருவல்லிக்கேணியில் ஒரு கிளை இயங்கிவருகிறது. அங்கு சென்று நாம் வங்கிக் கணக்கைத் தொடங்கலாம். (தொடர்புக்கு: 044-2855 5256)


 இந்த இஸ்லாமிய வங்கி முறை ஃபிக்ஹ் சட்ட முறைப்படி எந்த வகையைச் சார்ந்தது என்று ஆய்வு மேற்கொள்ளும்போது, இது முளாரபா எனும் ஒரு வகை வியாபாரத்தின் அடிப்படையில்தான் செயல்படுத்தப்படுகிறது என்பதை அறியலாம். ஆம்! இதில் முதலாளி ஒருவர் தம் பணத்தை ஒப்பந்த அடிப்படையில் முதலீடு செய்வார். ஆனால் அவர் அந்த வியாபாரத்தில் ஈடுபடமாட்டார். பணத்தை வாங்கியவர் ஒப்பந்தத்தின் அடிப்படையில், குறிப்பிட்ட தொழிலில் அதை முதலீடு செய்து வியாபாரம் செய்து சம்பாதிப்பார். உழைப்பதற்கான ஊதியத்தை எடுத்துக்கொண்டு, இலாபத் தொகையை ஒப்பந்த அடிப்படையில் பங்கு பிரித்து, முதலாளிக்கும் கொடுத்துவிட்டு, தாமும் வைத்துக்கொள்வார். இதுவே முளாரபா ஆகும்.

முதலீடு செய்வது தனிநபராக இருப்பது ஒரு வகை. பலரும் முதலீடு செய்து சிலர் வியாபாரம் செய்து பொருளீட்டுவது மற்றொரு வகை. அந்த வகையில்தான் இஸ்லாமிய வங்கிகள் செயல்படுகின்றன. அதாவது வங்கியில் பணம் செலுத்துவோர் அனைவரும் முதலீட்டாளர்களே. அவர்கள்  செலுத்தும் தொகை அனைத்தும் வியாபாரத்தில் முதலீடு செய்யப்பட்டு, அதிலிருந்து கிடைக்கின்ற இலாபத் தொகை, ஆண்டுக்கொரு முறை, முதலீட்டாளர்கள் அனைவருக்கும் பிரித்து வழங்கப்படுகிறது. எனவே வணிகத்தில் கிடைக்கின்ற இலாபத் தொகைதான் வங்கிக் கணக்காளர்களுக்கு வழங்கப்படுகிறதே தவிர வட்டி கிடையாது. ஏனென்றால் "அல்லாஹ் வியாபாரத்தை ஆகுமாக்கி, வட்டியைத் தடை செய்துள்ளான்.'' (2: 275) இந்த முளாரபாவில் இலாபம் என்பது குறிப்பிட்ட தொகையாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனை செல்லாது. இலாபம் கூடலாம், குறையலாம் என்ற நிபந்தனையை ஏற்றுக்கொண்டால்தான் இந்த ஒப்பந்தமே செல்லும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

ஆக வட்டியிலிருந்து விலகி, நன்மையும் இலாபமும் கிடைக்கின்ற மாற்று வழியை நோக்கி நாம் ஏன் இன்னும் செல்லாமல் இருக்கிறோம்? இறைவன் அருளால் இனி வரும் காலங்களிலாவது நாமும் நம்மைச் சுற்றியுள்ளோரும் வட்டியிலிருந்து முற்றிலும் விலகி வாழ முனைவோம்! 
===========================================





பெற்றோரை இணைத்த பிள்ளை! (சிறுகதை)



சங்கர்-அமுதா இருவரும் கல்லூரியில் ஒன்றாகப் படித்தவர்கள். அவன் இராயபுரத்திலிருந்து பைக்கில் கல்லூரி வருவான். வரும் வழியில் திருவல்லிக்கேணியில் அமுதாவை ஏற்றிக்கொண்டு நுங்கம்பாக்கத்திலுள்ள லயோலா கல்லூரிக்குச் செல்வான். படிக்கும் காலத்திலேயே ஒருவரையொருவர் புரிந்துகொண்டு பழகியதால் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடந்தேறியது. ஈராண்டுகளுக்குப்பின் அவர்களுக்கு சுதா பிறந்தாள். சுதா துருதுருவென இருந்தாள். வாயைத் திறந்தால் மூட மாட்டாள். எதையும் எளிதில் புரிந்துகொள்வாள்.

சங்கர் ஒரு நிறுவனத்தில் கணக்கராகப் பணியாற்றுகிறான். அமுதா பக்கத்து ஏரியாவில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றுகிறாள். சங்கரின் பெற்றோர் அவனுடன்தான் இருக்கிறார்கள்.

இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்கள். அமுதா தன் மாமனார்-மாமியாரிடம் மரியாதையாக நடந்துகொண்டாள். அவர்களை அன்புடன் உபசரித்து அவர்களுக்குத் தேவையானதைச் சரியாக நிறைவேற்றினாள். அவர்கள் கேட்பதற்கு முன்பே அவர்களுக்குத் தேவையான காபி, டீ எல்லாவற்றையும் கொடுத்துவிடுவாள். அதனால் அவள்மீது அவர்களுக்கு எந்தக் கோபமும் இல்லை.

சுதாவுக்கு மூன்றரை வயது ஆகிவிட்டது. தான் வேலை செய்யும் பள்ளியிலேயே அவளைச் சேர்த்துவிடலாம் என்று அமுதா கூறியதை சங்கர் ஏற்றுக்கொண்டான். இருவரின் வருமானம் இருப்பதால் வீட்டு வாடகை கொடுப்பதிலும் பள்ளிக் கட்டணம் செலுத்துவதிலும் அவர்களுக்குச் சிரமம் தெரியவில்லை.

சங்கரின் அம்மாவுக்குத் திடீரெனப் பக்கவாதம் ஏற்பட்டு, படுத்த படுக்கையானாள். அவளைக் கவனித்துக்கொள்ள எப்போதும் பக்கத்திலேயே ஓர் ஆள் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதனால் அமுதாதான் எல்லாவற்றையும் செய்ய வேண்டியிருந்தது. தன் அம்மாவைப் போல் நினைத்து மாமியாருக்குப் பணிவிடைகள் செய்துவந்தாள்.
காலப்போக்கில் இது அமுதாவுக்குச் சிரமமாக இருந்தது. பள்ளிக்குச் சென்று அங்கு பாடம் நடத்திய களைப்போடு வந்து, வீட்டு வேலைகளையும் கவனித்து, மாமியாரையும் கவனிக்க வேண்டியிருக்கிறதே என்று மலைப்பாகக் கருதத் தொடங்கினாள். இது குறித்துத் தன் கணவன் வந்ததும் பேச வேண்டும் என முடிவெடுத்தாள். 

அன்று இரவு, "என்னங்க! ஒரே செரமமா இருக்குங்க. பள்ளிக்குப் போய் பாடம் நடத்திட்டு, வீட்டுக்கு வந்து உணவு சமைத்து, வீட்டு வேலையெல்லாம் பார்த்துட்டு, ஒங்க அம்மாவுக்கு வேற பணிவிடை செய்வது ரொம்ப சுமையா இருக்குங்க. ஒங்க அம்மாவ மட்டும் கவனுச்சுக்குற மாதிரி ஒரு வேலைக்காரி வச்சிட்டா எனக்குச் சிரமம் கொறையுமுங்க'' என்றாள்.

"சரி! நான் விரைவில் ஏற்பாடு பண்றேன்'' என்றான் சங்கர்.
வேலைக்காரி சேர்த்தும் எந்தப் பயனும் இல்லை. யாரும் சரியாக வேலை செய்வதில்லை. பணத்துக்காகச் செய்பவளுக்கும் உறவாக இருந்து செய்பவளுக்கும் இடையே வித்தியாசம் இல்லையா? "அதெல்லாம் சரியா வராதுடா'' என்று அம்மா அவ்வப்போது குறைசொல்லி வந்ததால், அவன் ஒரு முடிவுக்கு வந்தான்.

"அமுதா! நீ இந்த வருஷத்தோட உன் வேலைய விட்டுடு. அம்மாவ நல்லா கவனிச்சுக்க. வீட்டு வேலையப் பார்த்துட்டு, அம்மாவ கவனிச்சா போதும். நீ வேலைக்குப் போயி சிரமப்பட வேண்டாம்'' என்று உறுதியாகக் கூறினான். 

"என்னங்க சொல்றீங்க? நானும் நீங்களும் வேலை செய்யுறதாலதான் நம் பிள்ளைய நல்லாப் படிக்க வைக்க முடியிது. நாமும் நல்லபடியா குடும்பத்த நடத்துறோம். உங்களோட சம்பளத்தை மட்டும் வச்சு நாம் நல்லபடியா குடும்பம் நடத்த முடியாதுங்க. நமக்கு ரொம்ப சிரமமாப் போயிடும். ஸ்கூல் பீஸ் கட்டணும். வீட்டு வாடகை கொடுக்கணும். அதனால வேண்டாங்க. ஒங்க முடிவ மாத்திக்கங்க'' என்றாள்.

"இல்ல அமுதா! எனக்கு அம்மாதான் முக்கியம். நீ சம்பாதிக்கிற பணம் தேவையில்ல. என்னோட சம்பளத்துல குடும்பம் நடத்திக்கலாம். நீ வேலைய விட்டுடு'' என்றான் சங்கர் உறுதியாக.

இருவருக்கும் வாக்குவாதம் முற்றியது. சங்கர் தன் அம்மாவுக்காக அமுதாவை வேலையை விடுமாறு சொல்லிக்கொண்டே இருந்தான். அவள் எதிர்த்துப் பேசிக்கொண்டே இருந்தாள். தன்னுடைய வருமானம் இல்லையென்றால் குடும்பம் நடத்துவதும் பிள்ளையை நன்றாகப் படிக்க வைப்பதும் இயலாமல் போய்விடும் என்று எண்ணினாள். எனவே அவள் தொடர்ந்து தன் கணவனிடம் எதிர்வாதம் செய்துகொண்டே இருந்தாள்.

இப்போது தம்பதியருக்கிடையே விரிசல் ஏற்பட்டுவிட்டது.  சில நாள்களாக இருவருக்குமிடையே பேச்சு வார்த்தை இல்லை. ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காமல் எதிரும்புதிருமாக இருந்துவந்தனர். இருப்பினும் அவள் வேலைக்குப் போவதை நிறுத்தவில்லை. மாமியாருக்குப் பணிவிடை செய்வதைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துக்கொண்டாள். இது சங்கருக்குக் கோபத்தைத் தூண்டியது.

ஒரு நாள் தன் அம்மா அவனிடம் தன் மருமகள் பற்றிக் குறைபேசினாள். "டாய்லெட்டுக்குக் கூட்டிச் செல்ல ஆள் இல்லாமல் நான் தவிக்கிறேன்டா'' என்று அழுது புலம்பினாள். அது சங்கரின் மனதைக் கரையச் செய்தது. அதேநேரத்தில் அது தன் மனைவிமீது கோபத்தைத் தூண்டியது.

"ஏய்! அமுதா, நீ ஒன்னோட மனசுல என்ன நெனச்சிட்டு இருக்கே? ஒழுங்கா நீ வேலைய விட்டுட்டு, என் அம்மாவுக்கு  ஒத்தாசையா இருக்குறதா இருந்தா இங்கெ இரு. இல்லைன்னா நீ ஒன்னோட அம்மா வீட்டுக்குக் கௌம்பு'' என்று கடுமையாகப் பேசிவிட்டான்.

இது அமுதாவின் மனதை வெகுவாகக் காயப்படுத்திவிட்டது. காதலித்துக் கல்யாணம் செய்துகொண்ட இவரே என்னைப் புரிந்துகொள்ளாமல் இப்படிக் கடுமையாகப் பேசிவிட்டாரே.  இனி எனக்கு இந்த வாழ்க்கையே தேவையில்லை. என்னால் தனியாக வாழ முடியும். நான் என் சம்பாத்தியத்தில் என் பிள்ளையை நன்றாகப் படிக்க வைப்பேன் என்று மனதில் துணிச்சலை வரவழைத்துக் கொண்டு மறுநாள் தன் அம்மா வீட்டிற்குப் புறப்பட்டுவிட்டாள்.

இதோ அவள் தன்னோட தாய் வீட்டிற்கு வந்து ஈராண்டுகள் ஓடிவிட்டன. அமுதாவின் தாய் வீட்டில் அவளுடைய அம்மாவும், அவளின் அண்ணன்-அண்ணியும் இருந்தனர். அவர்களோடுதான் அவள் தன் பிள்ளையையும் வைத்துக்கொண்டு நாள்களைக் கழித்து வருகிறாள். 
சங்கர் தன் மகளைப் பார்ப்பதற்காக அவ்வப்போது வந்து சென்றான். இப்போது சுதா நன்றாக வளர்ந்து விட்டாள்; நன்றாகப் பேசுகிறாள்; அறிவு முதிர்ச்சியோடு நடந்துகொள்கிறாள்; அவ்வப்போது வந்து சந்திக்கும் அப்பாவோடு சேர்ந்து ஊர் சுற்றுகிறாள்; தான் விரும்பியதை அப்பாவிடம் கேட்டு வாங்கிக்கொள்கிறாள்.

அப்பாவை விட்டுப் பிரிந்தால், அவர் மீண்டும் எப்போது வருவார் என்ற ஏக்கத்தில் இருந்தாள்.  அமுதாவோ தன் மகளோடு அன்பாகக்கூடப் பேச முடியாத நிலையில் மனச்சுமையுடனும் மன இறுக்கத்தோடும் இருந்தாள். வேலைக்குப் போய் சம்பாதித்தும் நிம்மதி இல்லாமல் நாள்களைக் கழித்து வந்தாள்.

அம்மா வீட்டிலும் எவ்வளவு காலம்தான் வெட்டியாய்ப் பொழுதைக் கழிப்பது? சாடை மாடையாக அக்கம் பக்கத்தினர் பேசுவதைக் கேட்டாள். காலப்போக்கில் காது கொடுத்துக் கேட்க முடியாத அளவுக்கு அவர்களின் பேச்சு அவள் மனதைக் காயப்படுத்திவிட்டது. இதனால் மனமுடைந்தாள்.

ஒரு நாள் சுதாவைப் பார்க்க சங்கர் வந்தான். அப்போது அவள், "அப்பா! நான் எப்போதும் ஒங்களோட இருக்க முடியாதா? ஏன் மாதம் ஒரு தடவ வந்து என்னைப் பாக்குறீங்க? அம்மாவோட நீங்க பேச மாட்டீங்களா?'' என்றாள்.

"சுதா கண்ணு! நானும் ஒங்க அம்மாவும் பிரிஞ்சுட்டோம். அதனாலதான் நாங்க ரெண்டுபேரும் ஒருவருக்கொருவர் பேசாம இருக்கோம்'' என்றான்.
"நீங்க ரெண்டு பேரும் ஒண்ணா சேர மாட்டீங்களா? எல்லாரும் சேர்ந்து ஒண்ணா இருக்கலாம்ப்பா. எனக்கு ரொம்ப ஆசையா இருக்குப்பா'' என்று கெஞ்சும் குரலில் கொஞ்சினாள்.

"அப்படின்னா, நீ இதப் பத்தி உன் அம்மாவிடம் பேசிப்பாரு. அவர் சம்மதம் என்றால் எனக்குச் சம்மதம்தான்'' என்றான்.
சுதா தன் அம்மாவிடம் மனம்விட்டுப் பேசினாள். தன் ஆசையைத் தன் அம்மாவிடம் எடுத்துச் சொன்னாள். "அம்மா! நீயும் அப்பாவும் ஒண்ணா சேருங்கம்மா. அப்பாவோட பேசும்மா. நாம் எல்லோரும் ஒண்ணா ஒரே வீட்ல இருப்போம்'' என்று கெஞ்சினாள்.

"அவரோடு என்னால வாழ முடியாது. அவர் என்னோட உணர்வுகளைப் புரிஞ்சுக்கவே இல்ல. அவருக்கு என்மேல அன்பே இல்ல. அவரெ பார்த்தாலே எனக்குப் பிடிக்கல. அவரெப் பத்தி என்னிடம் இனிமே பேசாதே!'' என்று கோபமாகக் கத்தினாள்.

அம்மாவின் கோபத்தைக் கண்டு சுதா பயந்துபோய்விட்டாள். இருந்தாலும் அம்மா-அப்பா இருவரையும் ஒண்ணா சேர்க்க வேண்டுமென உறுதிகொண்டாள். அதற்கு என்ன செய்யலாம் என்று யோசிக்கத் தொடங்கினாள். அன்றாடம் தொலைக்காட்சித் தொடர்களைப் பார்த்துக்கொண்டிருந்தவளுக்கு, குடும்ப உறவுகளை எவ்வாறு வெட்டுவது, ஒட்டுவது என்பதெல்லாம் தெரிந்திருப்பதில் வியப்பில்லை.

 பிள்ளைகளுக்குப் பாடநூல்களைவிடப் படக்காட்சிகள்தாம் மனதில் பசையாக ஒட்டிக்கொள்கின்றன. அதேபோலவே சுதாவின் மனதிலும் பல்வேறு காட்சிகள் பதிவாகியிருந்தன. தன் பாட்டியோடு ஒன்றாக அமர்ந்து தொலைக்காட்சித் தொடர்களைப் பார்த்துக்கொண்டே தன் அம்மா-அப்பா பற்றி யோசித்துக்கொண்டிருந்த அவளுக்குத் திடீரென ஒரு யோசனை தோன்றியது.

அம்மா தன்னோட அப்பாவோடு ஒன்றாகச் சேர்கின்ற வரை தான் அவளிடம்  பேசப்போவதில்லை என்று முடிவெடுத்தாள். அன்று முதல் சுதா தன் அம்மாவிடம் பேசாமல்  இருந்துவந்தாள். அது மட்டுமில்லாமல் அவள் பேச்சுக்கு முரணாகச் செயல்படத் தொடங்கினாள். இது அமுதாவின் மனதை மிகவும் வருத்தியது.

கணவனும் பிரிந்துவிட்டான்; பெற்றெடுத்த பிள்ளையும் தன்னோடு பேசுவதில்லை; எதற்காக வாழணும் என்ற எண்ணமெல்லாம் வந்து சென்றது; தனித்து விடப்பட்டவளைப்போல் ஆகிவிட்டாள்;  வாழ்க்கையே அவளுக்கு நெருக்கடியாகிவிட்டது; உலகமே இருட்டானதைப் போன்று உணர்ந்தாள்.

மகளின் போக்கு நாளுக்கு நாள் கடுமையானது. நன்றாகச் சாப்பிடுவதில்லை; நன்றாகப் படிப்பதில்லை; யாருடனும் ஒழுங்காகப் பேசுவதில்லை. இப்படியே போனால் அவள் மனதளவில் பெரிதும் பாதிக்கப்படுவாள். அவள் மனதில் தன்னைப் பற்றிய தவறான பிம்பம் பதிவாகிவிடுமே என்று அஞ்சினாள்.

மனவேதனையுடன் வேலைக்குச் சென்று வந்து வீட்டினுள் நுழைந்தபோது, தன் அண்ணி அம்மாவிடம் மிகக் கடுமையாக நடந்துகொண்டதைக் கண்ட அவள் பதறினாள். "ஏங்க அண்ணி, அம்மாவிடம் இப்டி கடுமையா நடந்துக்கிறீங்க? அவங்க காபிதானே கேட்டாங்க? அதுக்குப்போயி இப்டிச் சத்தமாக பேசுறீங்களே? அவங்களே உடம்பு சரியில்லாம இருக்காங்க? அவங்களிடம் இவ்வளவு கடுமையா நடந்துக்கலாமா?'' என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினாள்.

"அவங்க, அப்பப்ப காபி, சுடுதண்ணி எல்லாம் கேட்டுட்டே இருக்காங்க. நானும் கொடுத்துட்டே இருக்கேன். இன்னைக்குக் கொஞ்சம் லேட்டாயிடுச்சு. அதுக்குப்போயி ரொம்ப சத்தம் போட்டா சும்மாவா இருப்பாங்க? இவ்வளவு செய்யிற என்மீது அவங்களுக்கு ஒரு நன்றி உணர்வு இருக்க வேண்டாமா?'' என்று அண்ணி கோபத்துடன் கேட்டாள்.

"சரி! அதுக்காக இவ்வளவு சத்தமாவா பேசுவீங்க? அவங்களுக்கு உடம்பு சரியில்லைதானே? அவங்களிடம் கொஞ்சம் கரிசனமா நடந்துக்கக் கூடாதா அண்ணி?'' என்றாள் அமுதா.

"ம்... கரிசனத்தப் பத்தி நீ சொல்ல வந்துட்டியாக்கும்? நீயே ஒன்னோட மாமியாவ ஒழுங்கா கவனிச்சுக்காமத்தானே புருஷன் வீட்ட விட்டு வந்தே? நீ ஒன்னோட மாமியா மேல கரிசனம் காட்டாம,  நான் மட்டும் என்னோட மாமியா மேல கரிசனம் காட்டணுமாக்கும்? முதல்ல நீ இங்கிருந்து ஒன்னோட புருஷன் வீட்டுக்குக் கௌம்பிப் போயி, ஒன்னோட மாமியாவ ஒழுங்கா கவனிச்சுக்க. பிறகு வந்து நீ அறிவுரை சொல்லு'' என்று காரசாரமாகப் பேசினாள்.
அண்ணியின் பேச்சு அமுதாவின் மனதைத் தாக்கியது. பதிலேதும் பேச முடியாத ஊமையாய் நின்றாள்.

 தன்னுடைய அவசரப் புத்தியால், கணவனைப் பிரிந்து, வாழ்க்கையை இழந்து, எல்லோரிடமும் பேச்சு வாங்க வேண்டியுள்ளதே என மனம் வெதும்பினாள். கணவனின் சொற்படி கேட்டு, நிம்மதியாக வாழ்ந்திருக்கலாமே என்று எண்ணினாள்.

அம்மா அங்கிருந்து விலகிச் சென்றதும், அத்தையைப் பார்த்துப் புன்முறுவல் பூத்தாள் சுதா. தான் சொன்ன மாதிரி தன் அம்மாவிடம் அத்தை பேசியதற்காகப் புன்னகை மூலம் அவள் நன்றி தெரிவித்தாள். அம்மாவின் மனதை மாற்றுவதற்காக சுதா தன் அத்தையிடம் அவ்வாறு பேசுமாறு  அவள் கேட்டுக்கொண்டிருந்தாள்.

இரவு முழுக்க அமுதா யோசனையில் மூழ்கினாள். தூக்கம் வராமல் இப்படியும் அப்படியும் புரண்டு புரண்டு படுத்தாள். என்னதான் சிரமமானாலும் கணவனோடு சேர்ந்து வாழ்வதே தனக்கு மதிப்பைத் தரும் என்பதை உணர்ந்தாள். தீர்க்கமான முடிவு மனதுக்குள் தோன்றியதை எண்ணி மகிழ்ந்து, அந்த மகிழ்ச்சியில் உறங்கிவிட்டாள்.

மறுநாள் ஞாயிற்றுக்கிழமை. காலை எட்டு மணி. சுதா தூக்கத்திலிருந்து விழித்தெழுவதை எதிர்பார்த்திருந்தாள். அவள் எழுந்ததும், அவளிடம் சென்று, "சுதா! அம்மா ஒரு குட் நியூஸ் சொல்லப் போறேன். நானும் ஒங்க அப்பாவும் ஒண்ணா சேரப்போறோம். நீ இப்பவே ஒங்க அப்பாவுக்கு போன் பண்ணி சொல்லு'' என்றாள்.

அம்மாவின் மன மாற்றத்தைக் கண்டு மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்த சுதா, தன் அப்பாவுக்கு போன் செய்து, "அப்பா! நீங்க இப்பவே வந்து அம்மாவையும் என்னையும் நம்ம வீட்டுக்குக் கூட்டிட்டுப் போங்கப்பா. சீக்கிரம் வாங்க!'' என்று சொல்- அழைப்பைத் துண்டித்தாள்.

சங்கர் வந்தவுடன், அமுதா பேசத் தொடங்கினாள். "என்னங்க! என்னெ மன்னிச்சுடுங்க. இத்தனை நாள் ஒங்க அருமை தெரியாம நான் என்னோட வாழ்க்கைய வீணாக்கிட்டேன். நீங்க சொன்னமாதிரி  நான் என்னோட வேலைய விட்டுறேன். ஒங்க அம்மாவ நல்லா கவனிச்சுக்கிறேன். வீட்லயே டியூஷன் எடுத்துக்கிறேங்க. உங்களுக்குச் சம்மதமா?'' என்று பணிவோடு கேட்டாள்.
"மன்னிப்பெல்லாம் எதுக்கு சுதா? நீ ஒன்னோட வேலைய விட வேண்டாம். நீ உன் விருப்பம் போல வேலைக்குப் போகலாம். அம்மா இப்ப குணமாயிட்டு வர்றாங்க. ஒரு பணிப்பெண் தினமும் வந்து கவனிச்சுட்டுப் போறா. அவமேல அம்மாவுக்கு ஒருவிதமான அன்பு ஏற்பட்டுப் போச்சு. அதனால ஒனக்கு இனி சிரமம் இருக்காது. இத்தனெ வருஷமா நீ எவ்வளவோ சிரமப்பட்டுட்டே. நீ சிரமப்பட்டது போதும். இனி நீ உன் விருப்பம்போல் நடந்துக்க அமுதா'' என்றான்.

சங்கர் பேசப்பேச அமுதாவின் கண்களில் கண்ணீர் கசிந்தது. அவனுடைய கையை இறுகப் பற்றிக்கொண்டு தன் அன்பைப் பரிமாறினாள்.

அம்மாவைத் தன் அப்பாவோடு சேர்த்து வைத்த மகிழ்ச்சியில் சுதா தன் அப்பாவின் செல்போனில் கார்ட்டூன் படம் பார்க்கத் தொடங்கினாள்.
                                     -ஆலங்குடியார்
=========================================================







சனி, 12 ஜனவரி, 2019

வழ்ழுஹா சூரா

அலைபேசியின் விளைவுகள்

செவ்வாய், 8 ஜனவரி, 2019

கைத்தொழில் கற்போம் (ஆலிம்களுக்கானது)

நபிகளார் நவின்ற மருத்துவம்



  -முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

மனிதனின் ஆரோக்கியம்தான் அவனது மிகப்பெரும் சொத்து. ஆரோக்கியமாக உள்ள மனிதனே மனச்சோர்வின்றி உழைக்க முடியும்; நினைத்த செயலை முடிக்க முடியும். அதனால்தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், தம் சிறிய தந்தை அப்பாஸ் (ரளி) அவர்களிடம், “தாங்கள் அல்லாஹ்விடம் ஆரோக்கியத்தைக் கேளுங்கள்என்று கூறினார்கள்.

மனிதனின் ஆரோக்கியத்தைக் கெடுத்து, நோயை ஏற்படுத்தி, அதன்மூலம் பணம் சம்பாதிக்கின்ற குயுக்தி கொண்ட மனிதர்கள் வாழும் காலமிது. மனிதர்கள் சாப்பிடும் உணவில் கலப்படம் செய்து, அளவுக்கதிகமான இரசாயனப் பொருள்களைக் கலந்து, உணவை நஞ்சாக்கி, அவற்றை விளம்பரப்படுத்தி உண்ணவைக்கின்றார்கள். விளம்பரத்தால் ஈர்க்கப்பட்ட நம் குழந்தைகள் அவற்றையே விரும்பிக் கேட்கின்றார்கள். நாமும் அவற்றின் தீங்குகள் தெரியாமல் வாங்கிக்கொடுத்துக்கொண்டிருக்கிறோம். மேலும் இரசாயன ஊசிகளைச் செலுத்தி வளர்க்கப்படுகின்ற கோழி இறைச்சி, மரபணு மாற்றப்பட்ட காய்கறிகள், பழங்கள் ஆகியவை மனித உடலுக்குக் கேடு விளைவிப்பவை. இவற்றையெல்லாம் அதிகமாக உற்பத்தி செய்து, சந்தையில் பரப்பிவைத்திருக்கிறார்கள். வேறு வழியின்றி நாம் அவற்றை வாங்கி உண்டுகொண்டிருக்கிறோம். 
இவையெல்லாம் நம் ஆரோக்கியத்திற்கு ஊறுவிளைவிப்பவை என்பதை நாம் எப்போது புரிந்துகொள்ளப் போகின்றோம்?

மனிதனின் இரத்த அழுத்தம் இவ்வளவுதான் இருக்க வேண்டும். அதற்கு மேல் இருந்தாலும் அதற்குக் கீழ் குறைந்தாலும் அது நோய். சர்க்கரை அளவு இவ்வளவுதான் இருக்க வேண்டும்.  அதற்கு மேல் இருந்தாலும் அதற்குக் கீழ் குறைந்தாலும் அது நோய்- என்றெல்லாம் தவறான பரப்புரை செய்து மக்களைப் பதற்றப்பட வைத்து, நோயாளியாக்கி, பணம் சம்பாதித்துக்கொண்டிருக்கிறார்கள். இதற்கெல்லாம் மாற்று வழி என்ன?  நபிவழி மருத்துவத்தை நோக்கிச் செல்வதுதான் ஒரே தீர்வு.
இறைவனைத் தொழுதல், நோன்பு நோற்றல் உள்ளிட்ட வழிபாடுகளுக்கு மட்டும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழிகாட்டவில்லை. மாறாக மனித வாழ்வின் எல்லாத் தேவைகளுக்கும் அவர்கள் வழிகாட்டியுள்ளார்கள். அந்த வகையில் மனிதன் ஆரோக்கியமாக வாழ்வதற்கான வழிமுறைகளையும் ஆரோக்கியத்தைப் பேண வேண்டிய அவசியத்தையும் நோய் ஏற்பட்டால் அதற்கான சிகிச்சை முறைகளையும் மருந்துகளையும் சொல்லிச் சென்றுள்ளார்கள். அவற்றின்பால் நாம் இதுவரை கவனம் செலுத்தாமலே காலம் கடத்திவிட்டோம். அதனால்தான் இன்று மருத்துவர்களின் மாயவலையில் சிக்குண்டு தவிக்கிறோம். ஒவ்வொருவரும் மருந்துச் செலவுக்காகவே குறிப்பிட்ட தொகையை ஒவ்வொரு மாதமும் ஒதுக்க வேண்டிய கட்டாயச் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.
 
ஒரு நோய் ஏற்பட்டால், அதற்கான காரணத்தைக் கண்டறிந்து நாமே அதைத் தீர்த்துக்கொள்வதற்கான வழிமுறையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லியிருக்கும்போது, நாம் அதைக் கருத்தில்கொள்ளாமல், உடனடியாக ஆங்கில மருத்துவத்தை நாடி, மருத்துவரிடம் சென்று மாத்திரையை வாங்கிப் போட்டுக்கொள்கிறோம். இது சரியான முறையா என்பதை நாம் யோசிக்க வேண்டும்.   
    
அல்லாஹ் அறிவித்துக்கொடுத்த மருத்துவத் தகவல்களையும் மனித சமுதாயத்திற்குப் போதித்துச் சென்றுள்ளார்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள். மனிதப் பயன்பாட்டிற்காகவே யாவற்றையும் படைத்துள்ள உயர்ந்தோன் அல்லாஹ் அவனுக்கு ஏற்படும் நோய்களைத் தீர்த்துக்கொள்வதற்கான மருந்துகளையும் மூலிகைச் செடிகளையும் அவற்றைப் பயன்படுத்தும் வழிமுறைகளையும் நபி (ஸல்) அவர்கள் மூலம் கற்பித்தான்.
மனநோய்களைக் களைந்து புத்துணர்வூட்ட மகத்தான வேதமான திருக்குர்ஆனையும் உடல் தொடர்பான நோய்களைத் தீர்த்துக்கொள்ள பல்வேறு மூலிகைகளையும் உயர்ந்தோன் அல்லாஹ் மனித சமுதாயத்திற்கு ஓர் அருட்கொடையாகவே வழங்கியுள்ளான்.  அவன் படைத்த ஒவ்வொரு பொருளும் பல்வேறு பயன்களைக் கொண்டுள்ளது. அதையே நபி (ஸல்) அவர்களின் மூலம் மனித சமுதாயத்திற்குத் தெளிவுபடுத்தியுள்ளான். 

நபி (ஸல்) அவர்களின் வாயிலாகச் செவியுற்றுப் பயன்பெற்ற அவர்கள்தம் உற்ற தோழர்கள்மூலம் அது விரிவடைந்து அதன்பின் மருத்துவர்களின் அனுபவங்கள் மூலம் அப்பொருள்களின் மருத்துவப் பயன்பாடுகள் வளர்ச்சியடைந்துள்ளன. ஆகவே நபி (ஸல்) அவர்கள் கூறியதை ஏற்றுக்கொண்ட மருத்துவர்கள் தம் அனுபவங்களையும் சேர்த்தே கூறியுள்ளார்கள். அதைப் பின்பற்றினால் ஆரோக்கியம் நம் கையில். 
  
நபிகளார் கூறிய மருத்துவ முறைகள் மூவகையாக உள்ளன. 1. குறிப்பிட்ட நோய்க்கு அதற்குரிய மருந்தை உட்கொள்ளச் சொல்லுதல், 2. குறிப்பிட்ட பிரார்த்தனைகள் (துஆக்கள்) மூலம் நிவாரணம் பெறச்செய்தல், 3. தனித்தனிப் பொருள்களின் மருத்துவப் பயன்கள். சான்றாக வயிற்றுப்போக்கிற்குத் தேனை உட்கொள்ளச் சொன்னது, இடுப்புக் கீல்வாதத்திற்கு, காட்டு ஆட்டின் வாலிலுள்ள கொழுப்பை எடுத்து உருக்கி உண்ணச் சொன்னது, பேதிக்கு  மருந்தாக ஆவாரை இலையை உண்ணச் சொன்னது, விலா வலிக்கு வெண்கோஷ்டத்தையும் ஒலிவ எண்ணெய்யையும் மருந்தாகப் பயன்படுத்தச் சொன்னது, தலைவலி ஏற்பட்டால் மருதாணியைப் பற்றுப்போடச் சொன்னது, அடிநாக்கு அழற்சிக்கு இந்திய (கோஷ்ட)க் குச்சியைப் பயன்படுத்தச் சொன்னது, உளநோய்க்குப் பேரீச்சம் பழங்களை விதைகளோடு அரைத்து உண்ணச் சொன்னது முதலானவை.

இரண்டாவது, பிரார்த்தனைகள் மூலம் ஓதிப் பார்த்து நோய்களைக் குணப்படுத்தும் சிகிச்சை முறையை மனித சமுதாயத்திற்கு அனுமதித்து, அதைத் தெளிவாகக் கற்றுக்கொடுத்துள்ளார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள். மனித உடலுக்குள் ஓடிக்கொண்டிருக்கிற உயிரானது ஒருவிதமான காற்றைப் போன்றதாகும். அதற்கு இடையூறளிக்கும் விதத்தில் கெட்ட ஆவிகள் அதனுள் புகுந்துகொள்ளும்போது திருக்குர்ஆன் வசனங்களை ஓதி ஊதுவதன்மூலம் அதனைக் குணப்படுத்தலாம்.
நபி (ஸல்) அவர்களுக்கு இறைவன் புறத்திலிருந்து கிடைக்கப்பெற்ற துஆக்கள் மூலம் ஓதிப் பார்த்தல், திருக்குர்ஆன் வசனங்களைக் கொண்டு ஓதிப் பார்த்தல் ஆகிய இரண்டு வகை உள்ளன. இறைநம்பிக்கை கொண்டவர்களுக்கு இந்தக் குர்ஆனை நிவாரணமாகவும் அருளாகவும் இறக்கியுள்ளோம் (17: 82) என்று அல்லாஹ் கூறுகின்றான். 

இவ்வசனத்தின்படி திருக்குர்ஆனின் வசனங்கள் அனைத்தும் ஒவ்வொரு நோய்க்கு மருந்தாகத் திகழ்கின்றன என்பது தெளிவாகிறது.

அந்த அடிப்படையில்தான், ஒரு குழுவின் தலைவரைத் தேள் கொட்டிவிட்டபோது அல்ஃபாத்திஹாஎனும் அத்தியாயத்தை ஓதி  அவர்மீது ஊதியதன்மூலம் அவருக்கு அதிலிருந்து நிவாரணம் கிடைக்கச் செய்துள்ளார் ஒரு நபித்தோழர். 

பொதுவாக நபி (ஸல்) அவர்கள் துயில்கொள்ளுமுன், அல்ஃபலக், அந்நாஸ் ஆகிய இரண்டு அத்தியாயங்களையும் ஓதி, தம் கையில் ஊதி, அதைத் தம் உடல் முழுவதும் தடவிக்கொள்வார்கள். இவ்வாறு செய்வதன்மூலம் கெட்ட ஆவிகள் தீண்டாதிருத்தல், சூனியம் தாக்காதிருத்தல் உள்ளிட்ட  எல்லாவிதமான ஆபத்துகளிலிருந்தும் பாதுகாப்புத் தேடியுள்ளார்கள்.

ஒவ்வொரு நோயும் வெவ்வேறு விதமானது. எனவேதான் அந்தந்தத் தருணங்களுக்கேற்ற துஆவை நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்துள்ளார்கள். தேள்கடி, சின்னம்மை, பாம்புகடி, கொப்புளம், காயம், உடல்வலி, துன்பம், துயரம், துக்கம், தூக்கமின்மை, திடுக்கம் உள்ளிட்ட ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொருவிதமான பிரார்த்தனை உண்டு. அதை நன்கறிந்து, உறுதியான நம்பிக்கையோடு ஓதி ஊதினால் நோய்கள் குணமாகும் என்பது உண்மை. ஏனெனில் பிரார்த்தனைகள், திருக்குர்ஆன் வசனங்கள் ஆகியவற்றின் ஆற்றல் மகத்தானது. இவற்றை ஓதி ஊதும்போது மனித உடலுக்குள் ஊடுருவியுள்ள வலுவற்ற கெட்ட ஆவிகள் அகன்றுவிடுகின்றன. இதுதான் ஓதிப் பார்த்தலின் பயனும் சூட்சுமமும் ஆகும்.

பேரறிஞர் ஷம்சுத்தீன் முஹம்மது பின் அபீபக்ர் பின் கய்யிம் (ரஹ் - 691-751) எழுதியுள்ள அத்திப்புன் நபவிய்யுஎனும் அரபி நூலை நபிவழி மருத்துவம்எனும் தலைப்பில் நான் தமிழாக்கம் செய்துள்ளேன். நூல் தேவைப்படுவோர் என்னைத் தொடர்புகொள்ளலாம்: 94443 54429
==============================