வெள்ளி, 25 மே, 2018

வெயிலை வெறுக்காதீர்!


-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

நாம் வானத்தையும்  பூமியையும் அவற்றுக்கிடையே உள்ளவற்றையும் விளையாட்டாகப் படைக்கவில்லை. (21: 16) இந்த வசனத்தின் அடிப்படையில் அல்லாஹ் எதையும் வீணாகப் படைக்கவில்லை. அதனால் அவன் வெயிலையும் வீணாகப் படைக்கவில்லை. அதில் மனிதர்களுக்குப் பலவிதமான நன்மைகள் உள்ளன என்பதை இன்றைய ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள்.

கோடைக்காலம் வந்துவிட்டாலே நிறையப் பேருக்கு அதன்மீது ஒரு வெறுப்பு வந்துவிடுகிறது. சுட்டெரிக்கும் வெயிலில் அலுவலகம் செல்ல வேண்டுமே, வியாபாரம் செய்ய வேண்டுமே, வெளியில் செல்ல வேண்டுமே என்று ஒவ்வொருவரும் அதை நினைத்து வருந்துகின்றனர். வெளியில் செல்ல அஞ்சுகின்றனர். ஆனால் வெயில் உடலுக்கு நல்லது என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? சுட்டெரிக்கும் வெயிலில்தான் உயிர்ச்சத்து டி (விட்டமின் டி) உள்ளது. ஒருவர் நீண்ட நேரம் வெயிலில் சென்று வருவதால் அல்லது வெயில் படுமாறு நிற்பதால் அவருடைய தோல் அதிலுள்ள உயிர்ச்சத்தான டி-யை கிரகித்துக்கொள்கிறது. இதனால் தோல் நோய் உள்ளிட்டவை அவருக்கு ஏற்படுவதில்லை.

ஓர் ஊரில் ஒரு முட்டாள் அரசன் இருந்தான். இந்தச் சூரியன் என்ன இவ்வளவு கடுமையாகச் சுட்டெரிக்கிறது? அதைப் பிடித்து வாருங்கள் என்று தம் பணியாள்களிடம் கூற, அவனுடைய பணியாள்கள் காலை முதல் மாலை வரை ஓடினர். அது மாலையில் மறைந்துபோய்விட்டது. மறுநாளும் காலை முதல் மாலை வரை அதனைத் துரத்திக்கொண்டே ஓடினர். அது மாலையில் மறைந்துபோய்விட்டது. இவ்வாறு ஒரு மாதமாக ஓடியும் அவர்களால் அதைப் பிடிக்கமுடியவில்லை. ஆனால் அவர்களுள் சிலருக்கு இருந்துவந்த தோல் நோய் முற்றிலும் குணமாகிவிட்டதைக் கண்டார்கள். ஆம்! சூரிய வெப்பத்தால் தோல் நோய் குணமாகின்றது. உடலின் கழிவுகள் வியர்வை மூலம் வெளியேற்றப்படுவதால் தோல்நோய் குணமடைகின்றது. 

வெயில் காலத்தில் சிறுநீரகத்திற்கு ஓய்வு கிடைக்கிறது. ஆம்! கோடை வெயிலால் உடலின் குளிர்ச்சி குறைந்து தாகம் ஏற்படுகிறது. அதனால் நாம் மிகுதியாகத் தண்ணீர் அருந்துகிறோம். ஆனால் நாம் எவ்வளவுதான் தண்ணீர் அருந்தினாலும் மிகக் குறைவாகத்தான் சிறுநீர் வெளியேறும். பெரும்பாலான நீர் நம்முடைய நுண்ணிய வியர்வைத் துளைகள்மூலம் வியர்வையாக வெளியேறிவிடும். இதனால் நம்முடைய சிறுநீரகத்திற்கு வேலைப்பளு மிச்சம். ஆகவே அதற்குக் கோடைக்காலத்தில் ஓய்வு கிடைக்கிறது.

காய்கள் பழுக்க வெயில் தேவை. பெரும்பாலான காய்கள் சூரிய வெப்பத்தால்தான் கனிகின்றன. தமிழ்நாட்டைப் பொறுத்த வரை, முக்கனிகளான மா, பலா, வாழை ஆகியவை சூரிய வெப்பத்தால் கனிகின்றன. பேரீச்ச மரங்கள் பயிரிடப்பட்டுள்ள அரபு நாடுகளில் சில குறிப்பிட்ட நாள்கள் வெயில் மிகவும் உச்சத்தில் சுட்டெரிக்கும். அதில்தான் பேரீச்சம் பழங்கள் கனியும்.

புவியிலுள்ள நீர் சூரிய வெப்பத்தால் உறிஞ்சப்பட்டு, அது மீண்டும் நமக்கு மழையாகப் பொழிவது இந்த வெயிலால்தான். அது மட்டுமின்றி, புவியில் ஆங்காங்கே ஓடுகின்ற கழிவுநீர்களை வற்றச் செய்து, வீணாகக் கொட்டப்படுகின்ற எண்ணற்ற கழிவுப் பொருள்களை அழிப்பதற்கும் சூரிய வெப்பம் பயன்படுகிறது.

உப்பளத்தில் பாத்தி பாத்தியாகக் கட்டிவைக்கப்பட்டுள்ள நீர் வற்றி உப்பு கிடைக்கிறது. செங்கல்கள் காய்ந்து வீடு கட்ட உதவுகின்றன. பெய்கின்ற மழைநீர் காய்ந்து வற்றவும் நீர் ஆவியாகி மீண்டும் மழையாகப் பெய்யவும் வெயில் பயன்படுகின்றது. மேலும் வெயில் காலத்தில்தான் தாவரங்கள், செடிகொடிகள் நன்கு செழித்து வளர்கின்றன. தாவரங்கள் சூரிய ஒளியின்மூலம் கிடைக்கின்ற ஸ்டார்ச்சை உணவாகக் கிரகித்துக்கொள்கின்றன. சூரிய ஒளியால் பயிர்கள் செழித்து வளர்கின்றன.

சூரிய சக்தியை ஈர்ப்பதன்மூலம் நம் உணவுத் தேவையைக் குறைக்க முடியும். காலை இளவெயில் நேரத்தில் சூரியனைத்  தொடர்ந்து பார்த்துக்கொண்டே இருப்பதால் நம் உடலுக்குத் தேவையான ஆற்றலை அது ஈர்த்துக்கொள்கிறது. தொடக்கத்தில் 5 முதல் 10 நிமிடங்கள் வரை இப்பயிற்சியை மேற்கொள்ளலாம். பின்னர் படிப்படியாக உயர்த்தி, 40 நிமிடங்கள் வரை பார்க்கத் தொடங்கினால் உணவின் தேவையே ஏற்படாது. இப்படியும் சித்தர்கள் சிலர் வாழ்ந்திருக்கின்றார்கள்.

இப்பொழுது சூரிய வெப்பத்தை வைத்து எண்ணற்ற கண்டுபிடிப்புகளைக் கண்டறிந்துள்ளார்கள். சோலார் அடுப்பு, சோலார் வாட்டர் ஹீட்டர், சோலார் லைட், சோலார் வாகனங்கள் உள்ளிட்ட எத்தனையோ கண்டுபிடிப்புகள் வந்துள்ளன. தற்காலத்தில் பல கிராமங்களில் சோலார் மின்சாரம் தயாரிக்கப்பட்டு, அதன்மூலம் விளக்குகளை எரியச் செய்கின்றனர். எதிர் காலத்தில் சூரிய ஆற்றலால் இயங்கக்கூடிய வாகனங்கள்தாம் சாலைகளில் ஓடும். அந்த அளவிற்குக் கண்டுபிடிப்புகள் மிகுந்துள்ளன. இவையெல்லாம் நாம் சாதாரணமாக வெறுக்கின்ற வெயிலின் மூலம்தான் சாத்தியமாகியுள்ளன என்று நினைக்கின்றபோது அதன்மீது ஒரு மதிப்பு ஏற்படுகிறதல்லவா! ஆக வெயிலும் ஓர் அருட்கொடையே என்பதை நாம் உணரலாம்.

அதேநேரத்தில் மிகுதியான வெயிலின் கெடுதிகளிலிருந்து தற்காத்துக்கொள்வதற்கான வழிமுறைகளையும் நபி (ஸல்) அவர்களின் வாழ்வில் காணமுடிகின்றது. ஒருவர் தாடி வளர்ப்பது அவரின் முகத்தைக் கம்பீரமான தோற்றத்தில் காட்டுவதோடு மிகுதியான வெயிலின் பாதிப்பிலிருந்து பாதுகாக்கவும் உதவுகிறது. நேரடியான சூரிய ஒளியால் முகத்தின் தாடைப் பகுதி பாதிக்கப்படுவதிலிருந்து தாடி பாதுகாக்கிறது. உடலின் எல்லாப் பாகங்களிலும் ஒரேவிதமான தோல் கிடையாது. சில பகுதிகளில் மிருதுவாகவும் சில பகுதிகளில் தடிமனாகவும் உள்ளது. அந்த வகையில் முகத்தில் மிருதுவான தோல்தான் உள்ளது. சூரிய வெப்பம் அதனைத் தாக்கி அதனால் பல்வலி உள்ளிட்ட தொல்லைகள் தாடி இல்லாதோருக்கு ஏற்படலாம். ஆனால் தாடி உள்ளோருக்கு அத்தகைய பாதிப்புகள் ஏற்படுவதில்லை. அந்த அடிப்படையில்தான், “மீசையைக் கத்தரியுங்கள்; தாடியை வளருங்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: திர்மிதீ: 2687)

சூரிய வெப்பம் மிகுதியாக மனித உடலுக்குள் புகுந்துவிடாமல் இருப்பதற்கான வழிகாட்டல் என்ற அடிப்படையில், வெண்மையான ஆடையை அணியுமாறு நபி (ஸல்) அவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள்.

“நீங்கள் வெண்ணிற ஆடை அணியுங்கள். ஏனெனில் அது தூய்மையானதும் அருமையானதும் ஆகும். உங்களுள் இறந்துவிட்டவருக்கு வெண்ணிறத்திலேயே சவக்கோடி (கஃபன்) அணிவியுங்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: திர்மிதீ: 2734) வெண்மையான ஆடை சூரிய வெப்பத்தை எதிர்த்துப் போராடுகிறது; அதை வெளியே தள்ளிவிடுகிறது. உடலின் உள்ளே சூரிய வெப்பம் ஊடுருவுவதைத் தடுத்துவிடுவதால் உடல் மிகுதியான சூட்டை அடையப்பெறாமல் நடுநிலையோடு இருக்கிறது.

இவ்வாறு பற்பல நன்மைகளைச்  சூரிய  வெப்பம் கொண்டுள்ளதால் அல்லாஹ் எதையும் வீணாகப் படைக்கவில்லை என்பதைப் புரிந்துகொள்ளலாம். அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகின்றான்: அவர்கள் நின்ற நிலையிலும் அமர்ந்த நிலையிலும் ஒருக்களித்துப் படுத்த நிலையிலும் அல்லாஹ்வை நினைவுகூர்வார்கள். வானங்களும் பூமியும் படைக்கப்பட்டது குறித்துச் சிந்திப்பார்கள். (இறுதியில்) எங்கள் இறைவா! இவற்றை நீ வீணாகப் படைக்கவில்லை; நீ தூயவன்; நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக!,,. என்று கூறுவார்கள். (3: 191)  ஆக ஒவ்வொன்றும் ஓர் அருட்கொடை. அந்த ஓர் அருட்கொடைக்குள் ஓராயிரம் நன்மைகள் உள்ளதை ஆய்வாளர்கள் கண்டறிந்து இன்றும் வியப்படைகின்றார்கள். ஆகவே நாம் வெயிலை வெறுக்காமல் அதை அனுபவிக்கப் பழகுவோம்!







வெள்ளி, 18 மே, 2018

எது பித்அத்?


-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

நவீனக் காலத்தில் பெரும்பாலோர் உச்சரிக்கின்ற வார்த்தை "பித்அத்' ஆகும். தெரிந்தோர், தெரியாதோர் அனைவரும் மிகச் சாதாரணமாக இந்த வார்த்தையை உச்சரித்துக்கொண்டே இருக்கின்றார்கள். ஆனால் அவர்கள் அதற்கான விளக்கத்தை  அறிய முற்படுவதில்லை. எந்த அடிப்படை ஆதாரமும் இல்லாமலோ, முட்டாள்தனமாகவோ ஒரு செயலைப் புதிதாகத் தோற்றுவித்து  அது "தீனில்' உள்ளதுதான் என்று கூறுவதே "பித்அத்' ஆகும். மேலும் நபி (ஸல்) அவர்களால் கட்டளையிடப்படாத ஒன்றை நபிகளாரின் கட்டளையாகக் கூறுவதும் கருதுவதும் "பித்அத்' ஆகும். இதுவல்லாத நற்செயல்கள், தீனுக்குப் பக்கபலமாக உள்ளவை, உபரியான வழிபாடுகள்  ஆகியவை "பித்அத்' ஆகா.

நபி (ஸல்) அவர்கள் கட்டளையிடாததை, புதிதாக ஏற்படுத்திக்கொண்டு அதை நபியவர்கள் சொன்னதாகவோ செய்ததாகவோ அதற்குப் பலவீனமான ஹதீஸையாவது தேடிப்பிடித்து ஆதாரமாகக் காட்ட முற்படுவதோ அறவே கூடாது. அதைக் கடமையைப்போல் நம்ப வைப்பது முற்றிலும் கூடாது. அதேநேரத்தில் தீனுக்கு உறுதுணையாக உள்ளவற்றைப் புதிதாகத் தோற்றுவிப்பதில் தவறில்லை. அவை "பித்அத்' அல்லாதவை என்பதை நடுநிலையோடு உணர வேண்டும்.    

"எனக்குப் பின்னர் பலத்த கருத்து வேறுபாடுகளை நீங்கள் காண்பீர்கள். அப்போது எனது வழிமுறையையும் நல்வழியில் செலுத்தப் பெற்ற நேர்வழி "கலீஃபா'களின் நடைமுறையையும் கடைப்பிடியுங்கள். அவற்றை உங்கள் கடைவாய்ப் பற்களால் இறுகப் பற்றிக்கொள்ளுங்கள். மேலும் (மார்க்கத்தில்) புதிதாக எதையும் உருவாக்கவேண்டாமென உங்களை நான் எச்சரிக்கிறேன். ஏனெனில், புதிதாக உருவாக்கப்படும் ஒவ்வொரு செயலும் வழிகேடாகும்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். இதை இர்பாள் பின் சாரியா (ரளி) அவர்கள் அறிவித்துள்ளார்கள். (நூல்: இப்னுமாஜா: 42)

"நம்முடைய இந்த (மார்க்க) விவகாரத்தில் அதில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகின்றானோ  அவனுடைய அந்தப் புதுமை  நிராகரிக்கப்பட்டதாகும்'' என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரீ: 2697)

மேற்கண்ட இரண்டு நபிமொழிகள்தாம் "பித்அத்' குறித்த விளக்கத்தை முன்வைக்கும் ஆதாரங்களாகும். முதலாம் நபிமொழியில் இடம்பெற்றுள்ள "புதிதாக உருவாக்கப்படும் ஒவ்வொரு செயலும் வழிகேடாகும்'' என்ற வாக்கியம் கூர்ந்து கவனிக்கத்தக்கதாகும். இந்த வாக்கியத்தைப் பொத்தாம் பொதுவாகக் கூறி, அதன் உண்மையான விளக்கத்தை உணர மறுத்தால் நாம் இன்றைக்குச் செய்துவருகின்ற நற்செயல்களுள் எதையும் செய்ய முடியாது. நபி (ஸல்) அவர்களின் காலத்தில் இல்லாதவை அனைத்தும் "பித்அத்' என்று வாதிட முற்பட்டால், குர்ஆனை ஒரே நூலாகத் தொகுத்ததும் ஒரே விதமாக ஓதவைத்ததும் "பித்அத்' என்று சொல்ல வேண்டிய நிலை ஏற்படும். எனவே இதற்கான விளக்கத்தை அறிய முற்பட வேண்டும்.

அதனால்தான் "பித்அத்'தை இரண்டு வகையாகப் பிரிக்கின்றனர். 1. நல்லது, 2. கெட்டது. அதாவது தீனுக்குச் சாதகமாகவோ உறுதுணையாகவோ உள்ள எதுவும் "பித்அத்' ஆகாது. மாறாக அவை தீனின் வளர்ச்சிக்காகவும் முன்னேற்றத்திற்காகவும் உருவாக்கப்பட்டவை என்ற கோணத்தில் அங்கீகரிக்கப்பட்டவை ஆகும்.

அபூபக்ர் ஸித்தீக் (ரளி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் அவர்களிடம் உமர் (ரளி) அவர்கள் வந்து, திருக்குர்ஆனை ஒருங்கிணைக்க வேண்டும் என்று தெரிவித்தபோது நபி (ஸல்) அவர்கள் செய்யாததை நான் எப்படிச் செய்வேன்? என்று கூறித் தயங்கினார்கள். அதன்பிறகு அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து அதற்கான கட்டளையைப் பிறப்பித்தார்கள். அதன் பயனாக இன்று நாம் அனைவரும் திருக்குர்ஆனை ஓதிக்கொண்டிருக்கிறோம். இதற்குப் பெயர் "பித்அத் ஹஸனா-நல்ல புதுமைச் செயல்' ஆகும்.

நபி (ஸல்) அவர்களின் காலத்தில் இல்லாத, அவர்கள் சொல்லாத எதையும் நாம் புதிதாகத் தோற்றுவித்தால் அவை அனைத்தும் பித்அத்தே ஆகும். ஆனால் அவை இந்த மார்க்கத்திற்கு உறுதுணையாகவும் பக்கபலமாகவும் இருந்தால் அத்தகைய புதுமைச் செயல்கள் வரவேற்புக்குரியவை. அவை இந்த மார்க்கத்தின் பெயரைக் கெடுப்பவையாகவும் ஏகத்துவக் (தவ்ஹீத்) கொள்கைக்கு முரணாகவும் இருந்தால் அவை புறந்தள்ளப்பட வேண்டியவை ஆகும். இதை அளவுகோலாக வைத்துக்கொண்டு நாம் புதுமைச் செயல்களைக் கூர்ந்து நோக்கினால் அவை நல்லவையா, கெட்டவையா என்பது நமக்குத் தெள்ளென விளங்கிவிடும்.

பின்வரும் நபிமொழி கூர்ந்து கவனிக்கத்தக்கது.  அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் ஒரு நற்செயலைத் தோற்றுவித்து, அவருக்குப் பிறகும் அது செயல்படுத்தப்படுகிறதோ அவருக்கு அதற்கான நற்கூலியும், அதைச் செயல்படுத்துவோரின் கூலிகளிலிருந்து எதுவும் குறைந்துவிடாமல் அவர்களின் கூலிகளைப் போன்றும் அவருக்கு உள்ளது.  யார் ஒரு தீயசெயலைத் தோற்றுவித்து, அவருக்குப் பிறகும் அது செயல்படுத்தப்படுகிறதோ அவருக்கு அதற்கான தீமையும், அதைச் செயல்படுத்துவோரின் தீமைகளிலிருந்து எதுவும் குறைந்து விடாமல் அவர்களின் தீமைகளைப் போன்றும் அவருக்கு உள்ளது. (நூல்: இப்னுமாஜா: 203) இதை அபூஜுஹைஃபா (ரளி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.

இந்த நபிமொழியின் அடிப்படையில்தான் உமர் (ரளி) அவர்கள், தராவீஹ் தொழுகையைத் தனித்தனியாகத் தொழுதுகொண்டிருந்த மக்களை ஒரே இமாமின்கீழ் தொழுமாறு கட்டளையிட்டுவிட்டு, மறுநாள் அவ்வாறே ஒரே இமாமின்பின்னால் மக்கள் தொழுவதைக் கண்ட  அவர்கள், "இந்த பித்அத் நல்லது'' என்று கூறினார்கள். ஏனென்றால் நபி (ஸல்) அவர்கள் தராவீஹ் தொழுகையை ஒரு சில நாள்கள் தொழுதுவிட்டு, (பிறகு இது தம் சமுதாயத்தார்மீது கடமையாக்கப்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில்) அதை விட்டுவிட்டார்கள். அதன்பின் அபூபக்ர் (ரளி) அவர்களின் ஈராண்டு ஆட்சிக் காலத்திலும் இவ்வழக்கம் இல்லை. உமர் (ரளி) அவர்களின் ஆட்சிக் காலத்தில்தான் இத்தொழுகை முறைப்படுத்தப்பட்டது. அவர்களின் ஆட்சிக் காலத்தில் இருபது ரக்அத்கள் தொழுது வந்தனர் என்பது வரலாறு. அதனடிப்படையில்தான் இன்றும் மக்கள் அதனைப் பின்பற்றித் தொழுது வருகின்றனர். ஆக இது ஒரு நன்மைக்குரிய புதுமைச் செயல் என்பதை அனைவரும் விளங்கிக் கொள்ள வேண்டும்.

"யார் ஒரு நற்செயலைத் தோற்றுவித்து, அவருக்குப் பிறகும் அது செயல்படுத்தப்படுகிறதோ...'' என்ற நபிமொழியின் அடிப்படையில், ஷரீஅத்திற்குச் சாதகமான, மக்களுக்கு நன்மையைப் பெற்றுத்தரக்கூடிய புதிய நடைமுறைகளை ஏற்படுத்துவதில் தவறில்லை என்பதோடு அதற்கான நன்மையும் கிடைக்கும், அதைப் பின்பற்றுவோரின் நன்மையும் அதை ஏற்படுத்தியவருக்குக் கிடைக்கும் என்பது கூர்ந்து கவனிக்கத்தக்கது. நூல்கள் எழுதுதல், பொது நிதியகம் (பைத்துல் மால்) ஏற்படுத்தி ஏழைகளுக்கு உதவுதல், நற்பணி மன்றங்கள் அமைத்து மக்கள் சேவையில் ஈடுபடுதல், கல்வி நிலையங்களை உருவாக்குதல், திருக்குர்ஆனை நவீனச் சாதனங்கள்மூலம் எளிய முறையில் கற்பித்தல், திருக்குர்ஆனை வேற்று  மொழிகளில் மொழிபெயர்த்தல், கணினியைப் பயன்படுத்தி ஆய்வுகளில் ஈடுபடுதல் உள்ளிட்ட எத்தனையோ நன்மைக்குரிய புதுமைச் செயல்கள் உள்ளன.

தொழுகைக்குப்பின் கூட்டாகப் பிரார்த்தனை செய்தல், வெள்ளிக்கிழமை யாசீன் ஓதி இறந்தோருக்கு அதன் நன்மையைச் சேர்த்துவைத்தல், வீட்டில் அபிவிருத்தி ஏற்பட இமாமை அழைத்துப் பிரார்த்தனை செய்தல், கூட்டாக அமர்ந்து திருக்குர்ஆன் ஓதுதல், கூட்டாக திக்ர் செய்தல், குறிப்பிட்ட நாள்களில் நோன்பு நோற்றல், தராவீஹ் தொழுதல், ஒவ்வோர் இரண்டு ரக்அத்திற்குப் பிறகும் தஸ்பீஹ் ஓதுதல், பெண்கள் தொழுவதற்கெனத் தனி ஏற்பாட்டைச் செய்தல், பெண்கள் பயான் கேட்பதற்கான ஏற்பாட்டைச் செய்தல், குறிப்பிட்ட நாள்களில் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்துதல், மிஅராஜ், பராஅத் போன்றவற்றைக் குறிப்பிட்ட நாள்களில் நினைவூட்டுவதற்காக மக்களை ஒருங்கிணைத்தல் முதலான நற்செயல்கள் "பித்அத்'தான். ஆனால் இவற்றின்மூலம் நன்மைதானே தவிர தீது ஒன்றுமில்லை.  அதேநேரத்தில் புதிய செயல்பாடுகளைச் செயல்படுத்துவது அவரவர் சொந்த விருப்பமே தவிர கட்டாயமில்லை என்பதைத் தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டும். அதில்தான் சிக்கலும் குழப்பமும் ஏற்படுகின்றன. இவற்றைக் கட்டாயக் கடமையைப்போல் கருதுவதும் அவ்வாறு பிரச்சாரம் செய்வதும்தான் சிக்கலுக்கான ஆணிவேர்.

"கவாஇத்' எனும் நூலின் இறுதியில் அதன் ஆசிரியர் இமாம் அபூமுஹம்மத் அப்துல் அஸீஸ் பின் அப்துஸ் ஸலாம் (ரஹ்) கூறியுள்ளதாவது: "பித்அத்' ஐவகைப்படும். 1. வாஜிப்-கடமையானது: அல்லாஹ்வின் வேதத்தையும் அவனுடைய தூதரின் பொன்மொழிகளையும் விளங்க உறுதுணையாக உள்ள அரபி இலக்கணத்தை உருவாக்குவதில் ஈடுபடுதல். ஏனென்றால் ஷரீஅத்தைக் காப்பது கட்டாயக் கடமையாகும். இதுபோன்ற நிலையிலுள்ளவை அனைத்தும் வாஜிப் ஆகும். புராதன நூல்களைப் பாதுகாத்தல், அடிப்படை மார்க்கச் சட்ட நூல்களைத் தொகுத்தல், ஹதீஸ் துறையில் ஜரஹ் வ தஅதீல்- அதன் அறிவிப்பாளர்கள் குறித்த குறை-நிறைகளைப் பேசுதல், பலவீனமான ஹதீஸ்களிலிருந்து  ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களைப் பிரித்தெடுத்தல் உள்ளிட்டவை வாஜிப் என்ற பிரிவில் வரும்.

2. ஹராம்-தடைசெய்யப்பட்டது: கத்ரிய்யா, ஜப்ரிய்யா, முர்ஜிய்யா, முஜஸ்ஸமா உள்ளிட்ட பிரிவினர் ஏற்படுத்திக்கொண்ட மத்ஹபுகள். இத்தகைய கொள்கைகள் இஸ்லாமிய ஷரீஅத்திற்கு முரணானவை.  அதேநேரத்தில் இவர்களைப் போன்ற வழிகெட்ட கூட்டத்தினருக்கு உரிய முறையில் பதிலடி கொடுப்பது ஃபர்ளு கிஃபாயா ஆகும். ஏனென்றால் இதுபோன்ற பித்அத்வாதிகளிடமிருந்து ஷரீஅத்தைக் காப்பது கட்டாயக் கடமையாகும்.

3. மன்தூப்-சுன்னத்: தற்காப்புப் படையை உருவாக்குதல், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் ஆகியவற்றை உருவாக்குதல், இஸ்லாத்தின் தொடக்கக் காலத்தில் கவனம் செலுத்தப்படாத நன்மைக்குரிய எல்லா நற்செயல்களையும் உருவாக்குதல், தராவீஹ் தொழுகையைக் கூட்டாகத் தொழுதல், ஆன்மிகத் துறையிலுள்ள நுட்பங்களை மக்கள் மத்தியில் பேசுதல், பிரச்சனைகளுக்குரிய தீர்வுகளைத் தேடும் ஆய்வுமையங்களை அமைத்தல் முதலானவை.

4. மக்ரூஹ்-விரும்பத்தகாதவை: மஸ்ஜிதுகளை அலங்கரித்தல், குர்ஆன் பிரதிகளை அலங்கரித்தல் முதலானவை. 5. முஸ்த்தஹப்பு-விரும்பத்தக்கவை: ஸுப்ஹு, அஸ்ர் தொழுகைகளுக்குப்பின் முஸாஃபஹா செய்தல், சுவையான உணவுகளைச் சமைத்து ஏழைகளுக்கு வழங்குதல், பானங்கள், ஆடைகள் ஆகியவற்றை வழங்குதல் முதலானவை.
இன்று மக்கள் மத்தியில் உள்ள இபாதத்-வழிபாடு சார்ந்த பித்அத்கள் வரவேற்கத்தக்கவையே. ஒவ்வொரு ஃபர்ள் தொழுகைக்குப் பிறகு ஓதப்படும் கூட்டு துஆ, வெள்ளிக்கிழமை யாசீன் ஓதி நன்மையைச் சேர்த்து வைத்தல், தொழுகைக்குப்பிறகு முஸாஃபஹா செய்தல், திருமணத்தில் தம்பதியரின் நலன்நாடிக் கேட்கப்படும் கூட்டுப் பிரார்த்தனை உள்ளிட்ட நற்செயல்களை பித்அத் என்று கூறிக்கொண்டு, அவற்றைச் செய்வோரை இழித்துரைப்பது குறைமதியாளர்களின் குழப்பமான செயல்பாடுகளாகும்.

அதேநேரத்தில் மக்கள் மத்தியில் புரையோடிப்போய்க் கிடக்கின்ற மூடப்பழக்கங்களை அகற்ற வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. காரணம் அவை ஏகத்துவக் கொள்கைக்கு எதிரான செயல்பாடுகளும் மூடப்பழக்கங்களும் ஆகும். முஹர்ரம் மாதத்தில் பஞ்சா எடுத்தல், தீ மிதித்தல்,  இறைநேசர்கள் பெயரில் சந்தனக்கூடு, உரூஸ், கொடியேற்றம், ஸஃபர் மாதத்தில் ஸஃபர் கழிவு அனுஷ்டித்தல், பந்தக்கால் ஊன்றும் ஃபாத்திஹா, பூரி-கீர் ஃபாத்திஹா, திருஷ்டி கழிக்க ஆரத்தி எடுத்தல், பூசணிக்காய் உடைத்தல், தர்ஹாக்களில் மயிலிறகு ஆசி பெறுதல், தர்ஹாவை தவாஃப் வருதல், பெரியார்களின் கப்ர் முன்னிலையில் சஜ்தா செய்தல், பொது கப்ரஸ்தானில் கப்ரை சந்தனத்தால் பூசி மெழுகுதல், திக்ர் என்ற பெயரில் ஆட்டம் போடுதல், மாப்பிள்ளையைப் பூக்களால் அலங்கரித்து முகம் தெரியாமல் அழைத்து வருதல் முதலானவை முற்றிலும் களையப்பட வேண்டியவை.

எப்பக்கமும் சாயாமல் துலாக்கோலைப் போல் நேர்மையாக நின்று ஷரீஅத்தைப் புரிந்து, அதன்படி நடக்க இன்றைய இளைஞர்கள் உள்பட அனைவரும் முயற்சி செய்ய வேண்டும். அதை விட்டுவிட்டு ஏதாவது ஒரு கொள்கையை மனத்தில் பதிய வைத்துக்கொண்டு அதற்கேற்ப நபிமொழிகளை வளைத்துக்கொள்ள முயற்சி செய்வது அறியாமையின் வெளிப்பாடாகும். உண்மையின் பக்கம் மனத்தைச் சாய்ப்பதே வெற்றிக்கான வழியாகும்.