செவ்வாய், 23 ஜூன், 2026

தண்ணீர் ஓர் அருட்கொடை


-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

 

அல்லாஹ் மனிதகுலத்திற்கு வழங்கிய எண்ணற்ற அருட்கொடைகளில் மிக முக்கியமானது தண்ணீராகும். மனிதன், விலங்குகள், தாவரங்கள் என அனைத்து உயிரினங்களின் வாழ்வும் தண்ணீரைச் சார்ந்தே உள்ளது. மனிதன் சில நாள்கள் உணவின்றி வாழ முடியும்; ஆனால் தண்ணீரின்றி வாழ முடியாது. எனவே, தண்ணீர் என்பது இயற்கை வளம் மட்டுமில்லை; அது அல்லாஹ்வின் மகத்தான அருட்கொடையும், மனிதன் பாதுகாக்க வேண்டிய அடைக்கலப் பொருளும் (அமானிதம்) ஆகும்.

 

இஸ்லாம் தண்ணீரை ஓர் அருளாகக் கருதுவதோடு, அதை வீணாக்குவதையும் மாசுபடுத்துவதையும் கண்டிக்கிறது. குர்ஆனிலும் நபிமொழிகளிலும் தண்ணீரின் முக்கியத்துவம் பல இடங்களில் வலியுறுத்தப்பட்டுள்ளது. தண்ணீர் அல்லாஹ்வின் மகத்தான அருட்கொடையாகும். உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகிறான்: “வானத்திலிருந்து நாம் தூய்மையான நீரை இறக்கினோம்.” (அல்குர்ஆன் 25:48) இந்த வசனம் தண்ணீர் மனிதனால் உருவாக்கப்பட்டதன்று; அல்லாஹ்வால் அருளப்பட்ட ஒரு பேரருளாகும் என்பதை உணர்த்துகிறது. மேலும் உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகிறான்: “உயிருள்ள ஒவ்வொரு பொருளையும் நீரிலிருந்து நாம் உருவாக்கினோம்.” (அல்குர்ஆன் 21:30)

 

இந்த வசனம் உயிரின் தோற்றமும் தொடர்ச்சியும் தண்ணீருடன் தொடர்புடையது என்பதைத் தெளிவுபடுத்துகிறது. நவீன அறிவியலும் உயிரணுக்களின் பெரும்பகுதி நீரால் ஆனது என்பதை உறுதிப்படுத்துகிறது. அந்த வகையில் மனிதன் தொடங்கி பிற உயிரினங்கள் வரை அனைத்தின் மூலப் பொருளும் தண்ணீர்தான் என்பதை நாம் உணரலாம்.  

 

தண்ணீர் வாழ்க்கையின் அடிப்படை: அல்லாஹ் கூறுகிறான்: “அவனே வானத்திலிருந்து நீரை இறக்குகிறான்; அதிலிருந்து நீங்கள் குடிக்கிறீர்கள்; அதிலிருந்தே மரங்கள் வளர்கின்றன; அவற்றில் நீங்கள் கால்நடைகளை மேய்க்கிறீர்கள்.” (அல்குர்ஆன் 16:10 ) இந்த வசனம் தண்ணீர் மனிதனின் குடிநீராக மட்டுமன்றி, விவசாயம், கால்நடை வளர்ப்பு, உணவு உற்பத்தியின் ஆதாரமாகவும் இருப்பதை விளக்குகிறது. மனிதனுக்கு எவ்வாறு தாகம் ஏற்படுகிறதோ, அதுபோலவே பிற உயிரினங்களுக்கும் தாகம் ஏற்படுகிறது. மனிதனைப் போலவே அவையும் தண்ணீர் அருந்துகின்றன. ஆக அனைத்து உயிரினங்களும் தம் உயிரைத் தக்க வைத்துக்கொள்ளத் தண்ணீர் தேவைப்படுகிறது.

 

மேலும் அல்லாஹ் கூறுகிறான்: “நீங்கள் குடிக்கும் தண்ணீரைப் பற்றிச் சிந்தித்தீர்களா? அதை மேகங்களிலிருந்து நீங்கள் இறக்கினீர்களா அல்லது நாம் இறக்குகிறோமா?” (அல்குர்ஆன் 56:68-69) இவ்வசனம் மனிதனைச் சிந்திக்க அழைக்கிறது. நாம் நாள்தோறும் பயன்படுத்தும் தண்ணீரின் உண்மையான உரிமையாளன் அல்லாஹ்வே என்பதை இது நினைவூட்டுகிறது.

 

தண்ணீரின் மூலம் அல்லாஹ்வின் வல்லமை வெளிப்படுகிறது. அது வானிலிருந்து எவ்வளவு இறங்க வேண்டும். எவ்வளவு இப்புவியில் தங்க வேண்டும் என்ற கணக்கெல்லாம் அவன் கையில்தான் உள்ளது.  உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகிறான்:  இந்த வசனம் தண்ணீர் எப்போதும் கிடைத்துக்கொண்டே இருக்கும் என்ற மனிதனின் எண்ணத்தை மாற்றுகிறது. அல்லாஹ் விரும்பினால் நீரை வற்றச் செய்யவும் முடியும். எனவே நாம் நாள்தோறும் பயன்படுத்தி வருகிற தண்ணீரை வழங்குகிற அல்லாஹ்வுக்கு நாம் நன்றி செலுத்துவது அவசியமாகும்.

 

தண்ணீரும் தூய்மையும்: இஸ்லாமிய மார்க்கத்தில் தொழுகை உள்ளிட்ட பல வணக்க வழிபாடுகளுக்குத் உடல் தூய்மை மிகவும் அவசியமாகும். அதாவது ஒவ்வொரு தொழுகைக்கும் ஒரு முஸ்லிம் உளூ-அங்கத்தூய்மை செய்ய வேண்டும். அதற்கான நீர் எங்கிருந்து வருகிறது. உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகிறான்: “வானத்திலிருந்து தூய்மைப்படுத்தும் நீரை இறக்கினோம்.” (அல்குர்ஆன் 8:11) உளூ, குளியல் போன்ற இஸ்லாமிய மார்க்க நெறிமுறைகள் தண்ணீரை அடிப்படையாகக் கொண்டவை. இதன் மூலம் தண்ணீர் உடல் சுத்தத்திற்கும் ஆன்மிகச் சுத்தத்திற்கும் ஒரு கருவியாக அமைகிறது. ஆக வணக்க வழிபாடுகளுக்கு அடிப்படைத் தேவை தண்ணீர்தான்.

 

தண்ணீரை வீணாக்கலாமா?: தண்ணீரை வீணாக்குவதை இஸ்லாமிய மார்க்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. இன்று உலகின் பல பகுதிகளில் தண்ணீர் பற்றாக்குறை அதிகரித்து வருகிறது. இதனை 1400 ஆண்டுகளுக்கு முன்பே இஸ்லாம் உணர்த்தியுள்ளது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஒரு முறை ஸஅத் ரளியல்லாஹு அன்ஹு உளூச் செய்தபோது அதிகத் தண்ணீர் பயன்படுத்தியதைப் பார்த்து, “ஏன் நீரை வீணடிக்கிறாய்?” என்று வினவினார்கள்.  

 

அதற்கு ஸஅத் ரளியல்லாஹு அன்ஹு, “உளூவிலும் வீணடித்தல் உண்டா?” என்று கேட்டார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், “ஆம், ஓடிக்கொண்டிருக்கும் ஆற்றங்கரையில் இருந்தாலும் கூட(வீணடிக்கக் கூடாது)” என்று கூறினார்கள். (இப்னுமாஜா: 425) இந்த ஹதீஸ், தண்ணீர் பற்றாக்குறையாக இருக்கும்போது மட்டுமன்றித் தண்ணீர் மிகுதியாக இருந்தாலும் அதை வீணாக்கக் கூடாது என்பதைக் கற்பிக்கிறது.

 

தண்ணீர் வழங்குதல் சிறந்த தர்மம்: எவ்வளவோ உணவையும் உணவுப் பொருள்களையும் பணத்தையும் நாம் தர்மமாக வழங்குகிறோம். ஆனால் தண்ணீர் வழங்குவதை மிக உயர்ந்த தர்மங்களில் ஒன்றாக நபியவர்கள் கற்பித்துள்ளார்கள்.

 

உயிரினங்களுக்குத் தண்ணீர் கொடுப்பதன் நன்மை: இஸ்லாம் மனிதர்களுக்கு மட்டுமன்றி, உயிரினங்களுக்கும் கருணை காட்டச் சொல்கிறது. நம்மோடு வாழும் எல்லா உயிரினங்களையும் நாம் மதிக்க வேண்டும். அந்த வகையில் ஆடு, மாடு, நாய், பறவைகள் உள்ளிட்ட உயிரினங்கள் தாகத்தால் வாடுகின்றபோது அவற்றுக்கு நாம் தண்ணீர் கொடுத்து உதவினால் அது மிகப் பெரும் நன்மையாக நாளை மறுமையில் நமக்குக் கிடைக்கும்.

 

அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது: ஒரு மனிதர் (ஒரு பாதையில்) நடந்து சென்று கொண்டிருந்தபோது அவருக்குக் கடுமையான தாகம் ஏற்பட்டது. உடனே, அவர் (அங்கிருந்த) ஒரு கிணற்றில் இறங்கி, அதிலிருந்து (தண்ணீரை அள்ளிக்) குடித்தார். பிறகு, (கிணற்றிலிருந்து) அவர் வெளியே வந்தபோது, நாய் ஒன்று தாகத்தால் தவித்து, நாக்கைத் தொங்க விட்டபடி ஈர மண்ணை நக்கிக் கொண்டிருப்பதைக் கண்டார். அவர் (தம் மனத்திற்குள்) “எனக்கு ஏற்பட்டதைப் போன்ற(அ)தே (கடுமையான தாகம்) இந்த நாய்க்கும் ஏற்பட்டிருக்கின்றது போலும்” என்று எண்ணிக் கொண்டார். உடனே, (மீண்டும் கிணற்றில் இறங்கித் தண்ணீரைத்) தமது காலுறையில் நிரப்பிக் கொண்டு, அதை வாயால் கவ்விக் கொண்டு, மேலே ஏறி வந்து அந்த நாய்க்குப் புகட்டினார்.  அல்லாஹ் அவருடைய இந்த நற்செயலை ஏற்று அவரை (அவரது பாவங்களை) மன்னித்தான்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.

 

இதைச் செவியுற்ற நபித்தோழர்கள், “அல்லாஹ்வின் தூதரே! கால்நடைகள் (மற்ற பிராணிகளுக்கு உதவும்) விஷயத்திலும் எங்களுக்குப் பலன் கிடைக்குமா?” என்று வினவினார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், “(ஆம்;) உயிருடைய பிராணி ஒவ்வொன்றின் விஷயத்திலும் (அதற்கு உதவி செய்யும் பட்சத்தில் மறுமையில்) அதற்கான பிரதிபலன் கிடைக்கும்” என்று விடையளித்தார்கள். (புகாரீ: 2363) இந்த ஹதீஸ் உயிர்ப்பிராணிகளுக்குத் தண்ணீர் வழங்குவது அவற்றுக்குக் கருணை காட்டும் ஓர் உயர்ந்த செயலாகும் என்பதை எடுத்துரைக்கிறது.

 

தண்ணீரை மாசுபடுத்தக் கூடாது: தண்ணீரை மாடுபடுத்துவதை இஸ்லாம் தடுக்கிறது. இன்று குளங்கள், ஆறுகள், ஓடைகள் உள்ளிட்ட  நீர் நிலைகளை மிகச் சாதாரணமாகக் கருதக்கூடிய நிலையும் அவற்றை மாசுபடுத்தக்கூடிய நிலையும் மக்கள் மத்தியில் நிலவுகின்றன. ஆனால் மனித உயிர்கள் வாழ அவை மிக முக்கியமானவை என்பதை அவர்கள் மறந்துவிடுகின்றார்கள். இதனால் மனிதர்கள் மட்டுமின்றிப் பிற உயிரினங்களும் பாதிக்கப்படுகின்றன. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்: “உங்களில் எவரும் ஓடாத (தேங்கியுள்ள) நீரில் சிறுநீர் கழித்துவிட்டு, பின்னர் அதிலேயே குளிக்க வேண்டாம்.” (புகாரீ: 239) இது பொது நீர்நிலைகளைப் பாதுகாப்பதற்கான ஒரு சுகாதார வழிகாட்டுதலாகும். இன்றைய சுற்றுச்சூழல் பாதுகாப்புக் கொள்கைகளுக்கு நபியவர்களின் வழிகாட்டுதல் ஏற்றதாக அமைந்துள்ளது.

 

வெயிலில் தெரியும் தண்ணீரின் அருமை: மற்ற காலங்களைவிடக் கோடைக்காலத்தில்தான் தண்ணீரின் தேவையையும் அதன் முக்கியத்துவத்தையும் நாம் மிகுதியாக அறிவோம். இவ்வாண்டு ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாட்டங்களில் பங்கேற்றுவிட்டு மாலியிலிருந்து நைஜர் திரும்பிக் கொண்டிருந்த முஸ்லிம் சகோதர, சகோதரிகள் 49 பேர், சஹாரா பாலைவனத்தில் வாகனம் பழுதடைந்ததால் சிக்கிக்கொண்டனர். நான்கைந்து நாள்கள் ஆகியும் அவ்வாகனத்தைச் சரிசெய்ய முடியவில்லை. எனவே கைவசம் இருந்த தண்ணீர் தீர்ந்துபோனபின், கடுமையான வெப்பம் காரணமாக அவர்கள் உயிரிழந்துவிட்டனர். நாம் அன்றாடம் எளிதாகப் பெறும் தண்ணீர் எவ்வளவு பெரிய அருட்கொடை என்பதை இந்நிகழ்வு நமக்கு நினைவூட்டுகிறது. எத்தனையோ பேர் சுத்தமான குடிநீர் கிடைக்காமல் சிரமப்படும் வேளையில் நமக்கு அல்லாஹ் தண்ணீரைத் தாராளமாகத் தந்துள்ளமைக்கு நாம் அவனுக்கு எவ்வளவு நன்றி செலுத்தினாலும் போதாது.

  

அறிவியல் பார்வையில்...: அறிவியல் ஆய்வுகளின்படி, மனித உடலின் சுமார் 60 சதவிகிதம் நீரால் ஆனது. மூளையின் பெரும்பகுதி நீரால் ஆனது. இரத்த ஓட்டம், செரிமானம், உடல் வெப்பநிலை கட்டுப்பாடு ஆகியவை தண்ணீரைச் சார்ந்துள்ளன. விவசாயம் மற்றும் உணவு உற்பத்தியின் அடிப்படைத் தேவையாக தண்ணீர் உள்ளது. இந்த அறிவியல் உண்மைகள் குர்ஆன் கூறும் “ஒவ்வோர் உயிரையும் நீரிலிருந்து படைத்தோம்” என்ற உண்மையை மேலும் வலுப்படுத்துகின்றன.

 

தண்ணீரின் மதிப்பை உணர்வோம்: தண்ணீர் என்பது ஒரு சாதாரண இயற்கை வளமன்று; அது அல்லாஹ்வின் மிகப்பெரிய அருட்கொடையாகும். உயிர்களின் வாழ்வாதாரம், உடல் மற்றும் ஆன்மிகத் தூய்மை, விவசாய வளம், சமூக நலன் ஆகிய அனைத்தும் தண்ணீருடன் தொடர்புடையவை. எனவே ஒரு முஸ்லிம் தண்ணீரைப் பயன்படுத்தும்போது அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்த வேண்டும்; அதை வீணாக்காமல் பாதுகாக்க வேண்டும்; தேவையுடையோருக்கு வழங்க வேண்டும்; நீர்நிலைகளை மாசுபடுத்தாமல் காக்க வேண்டும். “தண்ணீரின் மதிப்பை உணர்வது, அல்லாஹ்வின் அருட்கொடைகளின் மதிப்பை உணர்வதாகும்.” இதுவே இஸ்லாம் கற்பிக்கும் உயர்ந்த பாடமாகும்.

==================








புதன், 10 ஜூன், 2026

மஆலிமுஸ் ஸுன்னத்தின் நபவிய்யா ஹதீஸ் நூலின் 2ஆம் பாகம் - தமிழாக்கம் தந்தோன் உரை

 நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருந்த மஆலிமுஸ் ஸுன்னத்தின் நபவிய்யா ஹதீஸ் நூலின் 2ஆம் பாகம் இப்போது வெளிவந்துவிட்டது. 


அந்நூலில் நான் எழுதிய 'மொழிபெயர்ப்பாளர் உரை' உங்கள் பார்வைக்கு...



தமிழாக்கம் தந்தோன் உரை

----------------------------------


அகில மக்கள் அனைவருக்கும் வழிகாட்டும் வகையில் இறைமறைக் குர்ஆன் எனும் பொதுமறையை அகிலத்தாருக்கு வழங்கிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும். இறைமறைப்படியும் இறைக்கட்டளைப்படியும் வாழ்ந்து வழிகாட்டிய இறுதி இறைத்தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்மீதும் அவர்கள்தம் குடும்பத்தார். உற்ற தோழர்கள் ஆகியோர்மீதும் அல்லாஹ்வின் கருணையும் அருளும் என்றென்றும் பொழிவதாக


அல்லாஹ்வின் பெருங்கருணையால் இதோ இப்போது மஆலிமுஸ் ஸுன்னா நூலின் இரண்டாம் பாகம் உங்கள் கைகளில் தவழ்கிறது. அல்ஹம்து லில்லாஹ். நான் தமிழாக்கம் செய்த ஒன்றுக்கு மேற்பட்ட நூல்கள் இன்னும் அச்சுக்குச் செல்லாமல் உள்ளன. அந்த வரிசையில் இதுவும் சேர்ந்துவிடக் கூடாது என்று அவ்வப்போது அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்துகொண்டே இருந்தேன். அதன் பயனாக முதல் பாகம் வெளியிடப்பட்டு ஈராண்டுகளுக்குப்பின் இந்த இரண்டாம் பாகம் வெளிவந்துள்ளது. இது தாமதம்தான் என்றாலும் இப்போதேனும் வெளிவந்ததில் மிக்க மகிழ்ச்சி.


கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக நான் மொழிபெயர்ப்புத் துறையில் ஈடுபட்டி ருந்தாலும், இறுதிப் பத்தாண்டுகளாக நபிமொழித் தொகுப்பு நூல்களைத் தமிழாக்கம் செய்வதில் ஈடுபட்டுவருவது அல்லாஹ் எனக்கு அருளிய நற்பேறாகக் கருதுகிறேன். ஒவ்வொரு பள்ளிவாசலுக்கும் சென்று தொழும்போது, அங்கு அலமாரியில் அடுக்கிவைக்கப்பட்டுள்ள அறுபெரும் நூல்களுள் நான் தமிழாக்கம் செய்த சுனனுன் நஸாயீ சுனன் இப்னுமாஜா ஆகிய நூல்களைப் பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியடைவேன்.


ஒரே தொகுப்பில் திருக்குர்ஆன் இருப்பதைப்போலவே. ஒரே தொகுப்பில் நபிமொழி களும் இருந்தால் பயனுள்ளதாக இருக்குமே என்று நான் நீண்ட காலமாகவே எண்ணியதுண்டு. அதற்கொரு தீர்வாகத்தான் இந்த மஆலிமுஸ் ஸுன்னத்தின் நபவிய்யா நூல் திகழ்கிறது. பதினான்கு நூல்களில் உள்ள ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட நபிமொழிகளை நுணுகி ஆராய்ந்து. கூறியது கூறல் வகை நபிமொழிகளை ஒதுக்கி வைத்துவிட்டு சான்றுமிக்க நபிமொழிகளை மட்டும் தேர்வுசெய்து. கூடுதல் செய்தி அடங்கிய வரிகளை அதன் கீழே கொண்டுவந்து முழுமையான நபிமொழிக் கோவையாக நமக்குத் தந்திருக்கிறார் இதன் மூலநூலாசிரியர். இதனால் ஹதீஸ்கள் அனைத்தையும் ஒருசேர, ஒரே நூலில் படிக்கக்கூடிய நல்வாய்ப்பு வாசகர்களுக்குக் கிடைத்துள்ளது.


திருக்குர் ஆனை ஒரே தொகுப்பாக வாசிப்பதைப் போன்று நபிமொழிகள் அனைத்தையும் ஒரே தொகுப்பாகப் படித்துத் தெரிந்துகொள்ள நாடுவோருக்கு உகந்த நூல்தான் இது பள்ளிவாசல்தோறும் அதிகாலை அல்லது அந்தி மாலையில் வாசிக்கப்பட வேண்டிய நூலிது வீட்டில் பிள்ளைகள் முன்னிலையில் வாசித்துக்காட்டப்பட வேண்டிய நூலிது சொற்பொழிவாளர்கள் தம்முடைய சொற்பொழிவுக்கான குறிப்புகளைத் தலைப்புவாரியாக மிக எளிதாக எடுத்துக்கொள்ளும் வகையில் இந்நூல் அமைக்கப்பெற்றுள்ளது. ஒரு தலைப்பின்கீழ் உள்ள அத்தனைச் செய்திகளையும் ஒரே இடத்தில் எடுத்துக்கொள்ளலாம்.


இந்த இரண்டாம் பாகத்தில் திருக்குர்ஆனிலுள்ள சில அத்தியாயங்களின் சிறப்புகள். திருக்குர்ஆன் ஓதலின்போது சஜ்தா செய்ய வேண்டிய இடங்கள். திருக்குர்ஆன் விரிவுரை. வழிபாடுகள் எனும் பகுதியில் தூய்மை, குளியல், பாங்கு. தொழுகை நேரங்கள், மஸ்ஜிதுகள். தொழுகைக்கான இடங்கள். தொழுகையின் சிறப்புகள் உள்ளிட்ட தலைப்புகளின்கீழ் 793 நபிமொழிகள் இடம்பெற்றுள்ளன. திருக்குர்ஆன் வசனங்களுக்கான விரிவுரையைக் காண, பல்வேறு நூல்களைப் புரட்ட வேண்டிய தேவையைக் குறைத்து. இந்நூல் நம் நேரத்தை மிச்சப்படுத்துகிறது.


அதேநேரத்தில் பலவீனமான ஹதீஸ்களும் நபிமொழி எனும் பெயரில் கற்பனையாகப் புகுத்தப்பட்டவையும் இதில் இடம்பெறவில்லை என்பதை நாம் உறுதியாகக் கூறலாம். அத்தகைய நபிமொழிகளை இந்நூலில் தேடுவோருக்கு ஏமாற்றமே மிஞ்சும். அந்த வகையில்

இந்த நூலின் நம்பகத்தன்மை மிகுதியாகிறது. ஹதீஸ்களுக்கு ஏற்பத் தம் வாழ்வியலை அமைத்துக்கொள்ள வேண்டும் என்றெண்ணும் இளம் தலைமுறையினருக்கு ஏற்ற நூலிது. எனவே இதிலுள்ள ஹதீஸ்களைப் படித்து, உங்கள் அன்றாட வாழ்க்கையில் செயல்படுத்த முயலுங்கள்.


உங்கள் மஹல்லா பள்ளிவாசல்களில் இதனை வாங்கி வையுங்கள். உங்கள் நண்பர்களுக்கு இதனை அறிமுகப்படுத்துங்கள். உங்கள் உறவினர்களுக்கும் பள்ளிவாசல் இமாமுக்கும் வாங்கிப் பரிசளியுங்கள்.


இந்நூலின் தமிழாக்கத்தைப் படித்து. மிகச் சிறந்த முறையில் அணிந்துரை வழங்கிய அரபுக் கல்லூரி முதல்வர்கள். பேராசிரியர்கள், பதிப்பகத்தார். வடிவமைப்பாளர் உள்ளிட்ட அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளை உரித்தாக்கிக்கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.


இப்பணியில் ஈடுபட்ட எங்களுக்கும் எங்களுக்கு முன்னர் ஈடுபட்டோருக்கும் உயர்ந்தோன் அல்லாஹ் பாவமன்னிப்பை வழங்கி, ஈருலக நற்பேறுகளைத் தருவானாக.


அன்புடன்


மௌலவி நூ.அப்துல் ஹாதி பாகவி


பட்டினம்பாக்கம், சென்னை 28.

------------------------------------------


இந்நூல் 

கிடைக்குமிடம்: 

அப்துல்லாஹ் பப்ளிகேஷன்ஸ் 

மயிலாடுதுறை. 

தொடர்புக்கு: 93447 42844 / 99522 31434


ரஹ்மத் புக் ஹவுஸ்

மண்ணடி, சென்னை-1

தொடர்புக்கு: 91718 46184 / 96001 25000


ஆயிஷா டிரேடர்ஸ்

லால்பேட்டை. 

தொடர்புக்கு: 99440 08712/ 89407 91234


விலை: ரூ. 600 + (கூரியர் செலவு)