சனி, 31 அக்டோபர், 2015

சிந்தையை மாற்றிய கவிக்கோவின் சிந்தனை!

(கவிக்கோவின் கருவூலம் எனும் நூலில் இடம்பெற்றுள்ள எனது ஆக்கம்)

மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி எம்.ஏ., எம்.ஃபில்.,


நான் அல்பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் அரபிக் கல்லூரியில் ஓதிக்கொண்டிருந்த காலத்திலேயே கவிக்கோ அவர்களை அறிவேன். அவருடைய கவிதைகளையும் கட்டுரைகளையும் தொடர்ந்து படித்து வந்திருக்கிறேன். அவருடைய ஆழமான சிந்தனைகளையும் நுண்ணிய கற்பனைகளையும் இரசித்துச் சுவைத்திருக்கிறேன். அவருடைய கவிதைகளில் மிகுதியாக மறுமைச் சிந்தனையையும் இறைவனைப் பற்றிய சிந்தனைத் தூண்டலையும் காண்கிறேன்.


நான் ஒரு தடவை அவரை அவர்தம் இல்லத்தில் சந்தித்து உரையாடியபோது, திருக்குர்ஆன் வசனங்களுக்கும் பொய்யாநபியுரைத்த அறவுரைகளுக்கும் புதியதொரு கோணத்தில் விளக்கவுரை கூறி என்னை வியப்பிலாழ்த்தினார். இத்தகைய கோணத்தில் ஆலிம்கள் சிந்திக்கவில்லையே என நான் அவரிடம் கூறினேன். தங்களைப் போன்ற இளம் மௌலவிகள் புதிய கோணத்தில் திருக்குர்ஆனைச் சிந்தித்து அதன் ஆழிய கருத்துகளை மக்களுக்கு எடுத்தோத வேண்டும் என்று அறிவுரை நல்கினார்.
முஸ்லிம் சமுதாயத்தைப் பற்றிய அவருடைய கவிதையில், புதையலுக்குக்கீழ் இருந்துகொண்டு பிச்சையெடுக்கிறோம் என்று எழுதியிருந்தார். ஆம்.  திருக்குர்ஆன் ஒரு கருத்துப் பெட்டகம்; அது ஒரு கருத்துப் புதையல். மனிதன் எந்த அளவிற்கு ஆழமாகவும் நுட்பமாகவும் சிந்திக்கின்றானோ அதற்கேற்றவாறு  பொருள் விரிந்து கொடுக்கக்கூடியதாகும். இந்தச் சமுதாயம்  திருக்குர்ஆனையும்  ஆலிம்களையும் சரியாகப் பயன்படுத்திக் கொள்வதில்லை. இரண்டையுமே ஃபாத்திஹாவிற்காக மட்டுமே பயன்படுத்தி வருகிறது என்று நான் என் உரைகளில் சொல்வதுண்டு. திருக்குர்ஆனைச் செவ்வனே சிந்திக்காமல் அதன் கருத்துகளை ஆராயாமல் பிறரிடம் நாம் தீர்வுகளைக் கேட்டுக்கொண்டிருக்கிறோம் என்பதை இக்கவிதை மூலம் நமக்குச் சுட்டிக்காட்டுகிறார்.  


எனக்குக் கவித்திறன் கிடைக்கப்பெற்றபோது, திரைப்படப் பாடல் வரிகளை ஆங்காங்கே செவியுற்றுக் கூர்ந்து நோக்கத் தொடங்கினேன். அப்போது, இதைவிடச் சிறந்த பாடல்களை நாமே எழுதலாமே என்று நினைத்தேன். அத்தருணத்தில் ஒரு தடவை கவிக்கோ அவர்களின் கட்டுரையைப் படித்துக் கொண்டிருந்தேன். அதில், திரைப்படங்களுக்காகப் பாடல்கள் எழுதித் தருமாறு சிலர்  அவரிடம் கேட்டபோது, அம்மி கொத்த சிற்பி எதற்கு?  என்று அவர் விடையளித்ததைப் படிக்க நேரிட்டது. அவருடைய அந்தக் கவிதை வரி, என்னுடைய எண்ணத்தை மாற்றிவிட்டது.
அவருடைய கவிதை வரியை நான் மற்றொரு கோணத்தில் சிந்தித்தேன். மறுமை குறித்த சிந்தனைதான் அவரை இப்படிப் பேச வைத்துள்ளது. இறைவனால் வழங்கப்பட்ட திறமையை மக்களின் நன்மைக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டுமே தவிர, பணம், காசு கிடைக்கிறது என்பதற்காக எதையும்  செய்து தன் திறமையை விற்பனை செய்யக்கூடாது என்பதையும் புரிந்துகொண்டேன். ஓர் ஆலிம் அல்லாதவரின் உள்ளத்தில் இறையச்சமும் அவனைக் குறித்த சிந்தனையும் இந்த அளவிற்கு நிழலாடுகிறது என்றால் ஓர் ஆலிமாகிய என் உள்ளத்தில் எத்தகைய சிந்தனை ஏற்பட வேண்டும் என்று என் சிந்தனை விரிவடையத் தொடங்கியது; குறுகிய எண்ணம் சிதைந்துபோனது.


கவிஞன் என்பவன் தன் உயர்சிந்தனையால், அறவே சிந்திக்காமல் தூங்கிக்கொண்டிருக்கும் உள்ளங்களைத் தட்டி எழுப்ப வேண்டும்; மக்களின் கல்வி வளர்ச்சிக்காக, சமுதாய மேம்பாட்டிற்காக, முன்னேற்றத்திற்காகப் பாடுபட வேண்டும்; அவனுடைய சிந்தனை பிறரின் சிந்தையைத் தூண்ட வேண்டும். அத்தகைய சிந்தனையும் நுண்ணறிவும் கொண்ட மக்கள் கவிஞராகத்தான் அண்ணன் கவிக்கோ அவர்களைக் காண்கிறேன். அவருடைய எழுத்தும் பேச்சும் மக்களுக்குப் பயன்படும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. ஆனால் முஸ்லிம் சமுதாயம் அவருடைய தமிழையும் எழுத்தையும் பயன்படுத்திக்கொள்ள முன்வர வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்.= என்னுடைய ஆக்கம் இடம்பெற வழிகாட்டி உதவி செய்த ஏம்பல் தஜம்முல் முஹம்மது அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

========================================

சனி, 24 அக்டோபர், 2015

தினமணி ஆசிரியருக்கு

தினமணி ஆசிரியருக்கு
தினமணி நாளிதழை இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர், ஜைனர் உள்ளிட்ட பல்வேறு கடவுள் நம்பிக்கையாளர்கள் படித்து வருகின்றார்கள். அப்படிப்பட்ட இதழில் இந்து மத நம்பிக்கையைத் திணிப்பது சரியில்லை. மழையைப் பொழியச் செய்வது அவரவர் நம்பிக்கையின்படி அவரவரின் இறைவன். அப்படியிருக்கும்போது வருணனின் கருணை கிடைக்குமா? என்று தலைப்பிடுவது பிறமத நம்பிக்கையாளர்களுக்கு எதிரானது. ஒரு பொதுவான செய்திக்குள் இந்து மத நம்பிக்கையைத் திணிக்க முயல்வது பிறமத நம்பிக்கைகொண்ட வாசகர்களுக்கு நெருடலாக உள்ளது. எனவே இதுபோன்ற இந்து மத நம்பிக்கைகளைப் பொதுவான செய்திக்குள் திணிக்க முயல்வதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன். 

சமுதாய முன்னேற்றத்திற்குப் பெரிதும் பங்கு வகிப்பது யார்?மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ், அல்ஹாஜ் சதீதுத்தீன் ஃபாஸில் பாகவி அவர்களின் தலைமையின்கீழ் இயங்கிவரும் அல்ஹுதா அரபிக் கல்லூரியில் நேற்று 09 01 1437 (23.10.2015) எதிர்வரும் ஆஷூரா நாளை முன்னிட்டு மன்பவுல்ஹுதா மாணவ மன்றத்தில் சமுதாய முன்னேற்றத்திற்குப் பெரிதும் பங்கு வகிப்பது யார்? எனும் தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. அதில் பல்வேறு தலைப்புகளில் ஐவர் பேசினர். அதில் நடுவராகப் பொறுப்பேற்று கருத்துரை வழங்கினேன். 

அதில் சமுதாய முன்னேற்றத்திற்குக் கல்வியின் அவசியம் என்ன, அதைப் பெற்றுக்கொண்டிருக்கின்ற மாணவர்களின் பொறுப்பு என்ன, அவர்கள் எப்படியெல்லாம் தம்மை முன்னேற்றப்படுத்திக்கொள்ள முனைய வேண்டும், எந்தெந்தத் துறைகளிலெல்லாம் முன்னேற வேண்டும், எதிலெல்லாம் மாணவர்களுக்கு வாய்ப்பிருக்கின்றது, மொழிபெயர்ப்புத் துறையின் பயன் என்ன, அதில் எவ்வாறு தம்மை ஈடுபடுத்திக்கொள்வது, பத்திரிகைத்துறையில் எவ்வாறு காலடி பதிப்பது உள்ளிட்ட பல்வேறு தகவல்களை மாணவர்களிடையே பரிமாறிக்கொண்டேன். 

சனி, 17 அக்டோபர், 2015

பசித்தோருக்கு உணவு வழங்குவோம்!

   -மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி எம்.ஏ., எம்.ஃபில்.,

1979ஆம் ஆண்டு முதல் உலக உணவு நாள் (World Food Day) ஆண்டுதோறும் அக்டோபர் 16 ஆம் நாளன்று உலக நாடுகளில் கொண்டாடப்பட்டு வருகிறது. "உண்டி கொடுத்தோரே உயிர் கொடுத்தோரே'', "தானத்தில் சிறந்தது அன்னதானம்'' ஆகிய முதுமொழிகள் உணவு வழங்குவதன் சிறப்பையும் உயர்வையும் எடுத்துரைக்கின்றன.

"தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்'' என்ற பாரதியாரின் குரல்  உணவின் முக்கியத்துவத்தை உணர்த்துகின்ற அதேவேளையில், "அண்டைவீட்டார் பசித்திருக்க வயிறு நிறைய உண்பவன் இறைநம்பிக்கையாளன் இல்லை'' என்று முஹம்மது (ஸல்) அவர்கள் கூறிய முத்தான வார்த்தைகள் உணவைப் பகிர்ந்துண்ண வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. 

"ஒருவரின் உணவு இருவருக்குப் போதும்; இருவரின் உணவு நால்வருக்குப் போதும்; நால்வரின் உணவு எண்மருக்குப் போதும்'' என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (நூல்: திர்மிதீ: 1743) இதன்மூலம் ஒருவர் தம் உணவைப் பிறருக்குப் பகிர்ந்து கொடுத்து உண்ண வேண்டும் என்பதைத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்கள். அது மட்டுமல்ல, சிறிதளவு உணவே ஒருவருக்குப் போதும் என்பதையும் இதன்மூலம் நாம் அறிகிறோம்.

உணவு கிடைக்காமல் ஆண்டுதோறும் பட்டினியால் இறப்போர் 3 கோடிக்கும் மேல் என்று ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது. எத்தனையோ வசதி வாய்ப்புகள் இருந்தும், பசுமைப் புரட்சியெல்லாம் ஏற்பட்டும் என்ன பயன்? உணவு கிடைக்காமல் மக்கள் இறந்து கொண்டிருக்கின்றார்களே! சிலருக்கு  ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவுதான் கிடைக்கிறது. சிலருக்கு அரைவயிற்றுக் கஞ்சிதான் கிடைக்கிறது!

"சலாமைப் பரப்புங்கள்; (பசித்தோருக்கு) உணவு வழங்குங்கள்; மக்கள் உறங்கும் நடுநிசி வேளையில் (எழுந்து) தொழுகுங்கள்; அமைதியாகச் சொர்க்கத்தில் நுழைவீர்கள்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  பசித்தோருக்கு உணவு வழங்குவது சொர்க்கத்தில் நுழையக் காரணமாக அமைகிறது என்பதை அறிகிறோம்.

உணவு வழங்குவதன் முக்கியத்துவத்தை நபி (ஸல்) அவர்கள் மிகவும் வலியுறுத்திக் கூறியுள்ளதை உணர்ந்துள்ள முஸ்லிம்கள் பிறருக்கு உணவு வழங்குவதை அவர்களின் அடிப்படைப் பண்பாகக் காணமுடிகிறது. அதனால்தான் மக்காவில் ஹஜ்ஜின்போது அல்லாஹ்விற்காக அறுக்கப்படுகின்ற  ஆடு, ஒட்டகம் ஆகியவற்றின் இறைச்சிகள் ஏழை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு இலவசமாக விநியோகிக்கப்படுகின்றன. ஆனால் அதேநேரத்தில் சில பணக்கார நாடுகளில் தம் தேவைக்கு எஞ்சிய பொருள்களைக் கடலில் கொட்டுகின்றார்கள்.  சந்தையில் பொருள்களின் விலை குறைந்துவிடாமல் ஒரு கட்டுக்குள் இருப்பதற்காக இவ்வாறு செய்கின்றார்கள். தன் நாட்டு மக்களுக்கும் கொடுப்பதில்லை. பிற நாட்டு மக்களுக்கும் கொடுப்பதில்லை. இதனால் ஒரு பக்கம் அமோக விளைச்சல் இருந்தும் மறுபக்கம் பட்டினிச் சாவுகளும் வறுமையும் தாண்டவமாடுகின்றன.

படைத்தோன் அல்லாஹ் பாரிலோர் அனைவருக்கும் குறைவின்றி நிறைவாக உணவுப் பொருள்களை விளையச் செய்கின்றான். உணவுப் பொருள்களை அபரிமிதமாக வழங்குகின்றான். ஆனால் குறுமதி கொண்ட மனிதனோ அவ்வுணவுப் பொருள்களை வீணாக்குகின்றான். உரிய முறையில் சேமித்து வைக்காமலும் தேவையுடையோருக்குக் கொடுக்காமலும் விரயம் செய்கிறான். இதனால்தான் இவ்வளவு பட்டினிச் சாவுகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. உணவுப் பற்றாக்குறையும் வறுமையும் ஏற்படுகின்றன. 

இறைத்தூதர் இப்ராஹீம் (அலை) அவர்கள் உணவுண்ணும்போதெல்லாம் தம்மோடு ஒரு விருந்தினர் இல்லாமல் உண்ணமாட்டார்கள். அத்தகைய உயர்பண்பு அவர்களிடம் இருந்ததால்தான் அவர் இறைவனின் நேசத்திற்குரிய நண்பரானார். பசித்தோருக்கு உணவு வழங்குவதைக் கண்டு படைத்தோன் இறைவன் மட்டில்லா மகிழ்ச்சியடைகிறான் என்பதை நாம் உணர்ந்து செயல்பட வேண்டும்.

இறைவனின் உவப்பை நாடி உணவு வழங்குவதைத் திருக்குர்ஆனில் உயர்ந்தோன் அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான்: அல்லாஹ்வின் மீதுள்ள அன்பின் காரணமாக ஏழைகளுக்கும், அநாதைகளுக்கும், சிறைப்பட்டவர்களுக்கும் உணவளிக்கின்றனர். (தம்மிடம் பெறுபவர்களை நோக்கி) "நாம் உங்களுக்கு உணவளிப்பதெல்லாம் அல்லாஹ்வின் முகத்தை நாடியேயன்றி, உங்கüடம் நாம் யாதொரு கூலியையோ அல்லது (நீங்கள் நமக்கு) நன்றி செலுத்துவதையோ கருதவில்லை'' என்று கூறுகின்றார்கள். (76: 8-9)

மேலும் திருக்குர்ஆனைப் புரட்டி வாசிக்கின்றபோது சில குற்றங்களுக்கு உணவு வழங்குவதையே பரிகாரமாக ஆக்கியுள்ளான்.
எவரேனும் தங்கள் மனைவிகளைத் (தம்) தாய்க்கு ஒப்பிட்டுக் கூறிய பின்னர், அவர்களிடம் திரும்ப(ச் சேர்ந்துகொள்ள) விரும்பினால், அவ்விருவரும் ஒருவரை ஒருவர் தொடுவதற்கு முன்னதாகவே (இவ்வாறு ஒப்பிட்டுக் கூறிய குற்றத்திற்குப் பரிகாரமாக) ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும். இதனை (அல்லாஹ்) உங்களுக்கு உபதேசம் செய்கின்றான். அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிபவனாக இருக்கின்றான்.

(விடுதலை செய்யக்கூடிய அடிமையை) எவரேனும் பெற்றிருக்காவிடில், அவ்விருவரும் ஒருவரை ஒருவர் தொடுவதற்கு முன்னதாகவே, (அவன்) இரண்டு மாதங்கள் தொடர்ச்சியாக நோன்பு நோற்க வேண்டும். (இவ்வாறு நோன்பு நோற்கச்) சக்தி பெறாதவன் அறுபது ஏழைகளுக்கு (நடுநிலையான) உணவளிக்கட்டும். (58: 3-4)

"அபூதர்ரே! நீ குழம்பு சமைத்தால் அதில் தண்ணீரை அதிகப்படுத்திக்கொள்; உன் அண்டைவீட்டினரையும் கவனித்துக்கொள்'' என்று  அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்: 4758) நபிகள் நாயகத்தின் வாக்குப்படி, ஒவ்வொருவரும் தம் அண்டைவீட்டாரைக் கவனித்துக்கொண்டால், ஒவ்வோர் ஊராரும் தம் அண்டையிலுள்ள ஊர்களைக்  கவனித்துக்கொண்டால், ஒவ்வொரு மாவட்டத்தாரும் தம் அண்டை மாவட்டத்திலுள்ளோரைக் கவனித்துக்கொண்டால், ஒவ்வொரு மாநிலத்தாரும் தம் அண்டை மாநிலத்தாரைக் கவனித்துக்கொண்டால், ஒவ்வொரு நாட்டினரும் தம் அண்டை நாட்டினரைக் கவனித்துக்கொண்டால் இவ்வுலகில் பசி ஏது? பட்டினி ஏது?

==============================================