ஞாயிறு, 17 டிசம்பர், 2023

மாற்றுத்திறனாளிகளை மதிப்போம்/ we should respect physically challeged pe...

மாற்றுத்திறனாளிகளை மதிப்போம்!

-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

இனிய திசைகள்

டிசம்பர் 2023 மாத

இதழில்

இடம்பெற்ற கட்டுரை

காட்சி வடிவில்...



மாற்றுத்திறனாளிகளை மதிப்போம்!

 

-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

 

அல்லாஹ்வின் படைப்புகள் ஒவ்வொன்றும் அவனுடைய மதிநுட்பமான படைப்புத்திறனுக்குச் சான்றுகளாக இருக்கின்றன; அவன் எல்லோரையும் அழகாகவும் ஆரோக்கியமாகவும் படைத்துள்ளான்.  அவனுடைய படைப்புகளைப் பார்த்துப் பிரமித்தோர் அவனைப் புகழ்வர். அதனால்தான் அவன், ‘என் படைப்புகளைப் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள் என்கிறான். அவனுடைய படைப்புகளைப் பற்றிச் சிந்திப்போர் கூறும் வார்த்தைகள் இவைதாம்: எங்கள் இறைவா! நீ இவற்றை வீணாகப் படைக்கவில்லை. நீ மிகத் தூயவன். (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களை நீ காப்பாற்றுவாயாக!” (3: 191) 

 

அதேநேரத்தில் இவ்வுலகில் எத்தனையோ பேர் உடலுறுப்புகள் ஊனமுற்ற நிலையில் பிறந்துள்ளார்கள். கை முடமானோர், காது கேளாதோர், கண் பார்வையற்றோர், நடக்க இயலாதோர், வாய்பேச இயலாதோர் என ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான குறைபாட்டோடு இப்புவியில் பிறந்துள்ளார்கள். அல்லது பிறந்தபோது எவ்விதக் குறைபாடுமின்றிப் பிறந்து, வாழும் காலத்தில் ஏதேனும் எதிர்பாரா விபத்து ஏற்பட்டு, அதில் தம் உடலுறுப்புகளை இழந்தோர் இருக்கின்றார்கள். அவர்கள் கையை இழந்து, கால்களை இழந்து, கண்பார்வையை இழந்து சிரமப்படுகின்றார்கள். இத்தகையோரை நாம் காணும்போது அவர்களைக் கேலி செய்வதோ, அவர்களின் மனம் வேதனைப்படுமாறு பேசுவதோ, அவர்களின் குறைகளைக் குத்திக் காட்டிப் பேசுவதோ கூடாது. மாறாக அந்நேரத்தில் நாம் அல்லாஹ்வை நினைவுகூர்ந்து, நம்மை ஆரோக்கியமாகப் படைத்துள்ள அவனுக்கு நன்றி செலுத்த வேண்டும்; அவனைப் புகழ வேண்டும். அதுவே நாம் அவனுக்குச் செய்யும் நன்றிக் கடனாகும். 

 

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்: (நோய் அல்லது சோதனைகளால்) பாதிப்புக்குள்ளானவரைப் பார்த்தவர், “அல்ஹம்து லில்லாஹில்லதீ ஆஃபானீ மிம்மப்தலாக்க பிஹி வஃபள்ளலனீ அலா கஸீரிம் மிம்மன் ஃகலக தஃப்ளீலா (பொருள்: உமக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பிலிருந்து எனக்கு நிவாரணம் தந்த, அவனுடைய படைப்புகளில் அதிகமானோரைவிட என்னைச் சிறப்பாக்கி வைத்த அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும் உரித்தாகுக!) என்று ஓதினால், அவர் வாழும் காலமெல்லாம் அந்தப் பாதிப்பிலிருந்து பாதுகாப்புப் பெறுவார். (திர்மிதீ: 3343) இந்த துஆவையே மாற்றுத்திறனாளிகளைப் பார்க்கும்போதும் நாம் ஓதிக்கொள்ள வேண்டும்.

 

மனிதர்களுள் சிலரைச் சோதிக்கும் பொருட்டு, அவர்களைச் சிற்சில குறைகளோடு படைத்து, அவர்களுக்கு வேறு வகையான திறனை அல்லாஹ் வழங்கியுள்ளான். அதனால்தான் அவர்களை மாற்றுத் திறனாளிகள் என்று அழைக்கிறோம். கைகளால் செய்யக்கூடிய வேலைகளைக் கால்களால் மிகவும் இலாவகமாக மாற்றுத் திறனாளிகள் செய்வார்கள். கண்களை இழந்தவர்கள், கண்களின்றியே மிகத் தெளிவாக நடந்து செல்வதை நாம் காணலாம். அத்தோடு அவர்களுக்கு அல்லாஹ் நினைவாற்றலையும் மிகுதியாக வழங்கியுள்ளான்.

 

அல்லாஹ் தன் அடியார்கள் சிலரைச் சில குறைபாடுகளால் சோதிக்கின்றான். அந்தச் சோதனையை அவர்கள் உவப்போடு ஏற்றுக்கொண்டு, பொறுமையாக இருந்தால் அவர்களுக்குச் சொர்க்கத்தைத் தருவதாகத் தன்னுடைய தூதர் மூலம் வாக்களித்துள்ளான்.

 

அல்லாஹ் கூறியதாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்: நான் என் அடியானை, அவனது பிரியத்திற்குரிய இரு பொருட்களை(ப் பறித்து)க்கொண்டு சோதித்து, அவன் பொறுமை காப்பானேயானால், அவற்றுக்குப் பதிலாகச் சொர்க்கத்தை நான் அவனுக்கு வழங்குவேன். (அவனுடைய பிரியத்திற்குரிய இரு பொருட்கள் என்பது) அவருடைய இரு கண்களைக் குறிக்கும். (புகாரீ: 5653)

 

ஒரு நாள் குறைஷி குலத் தலைவன் ஒருவனிடம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பேசிக் கொண்டிருந்தார்கள். அவன் இஸ்லாத்தில் சேர்ந்துவிட வேண்டும் என நபியவர்கள் ஆவல் கொண்டிருந்தார்கள். அவ்வாறு  அவனிடம் அவர்கள் உரையாடிக்கொண்டும் பேசிக்கொண்டும் இருந்த நேரத்தில் இப்னு உம்மி மக்தூம் ரளியல்லாஹு அன்ஹு நபியவர்களிடம் முன்னோக்கி வந்தார். முன்பே இஸ்லாத்தில் சேர்ந்தவர்களுள் அவரும் ஒருவர். ஏதோ ஒரு விஷயத்தைக் குறித்து நபியவர்களிடம் கேட்கத் தொடங்கினார்.

 

அந்தக் குறைஷித் தலைவனிடம் உரையாடுகிற இந்நேரத்தில் இவர் தம்மிடம் எதுவும் கேட்காமல் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று நபியவர்கள் விரும்பினார்கள். அதன் நோக்கம் அந்தக் குறைஷித் தலைவன் இஸ்லாத்தில் சேர்ந்து நேர்வழி பெறுவதில் நபியவர்கள் கொண்ட ஆவலும் ஆசையும்தான்.  அதனால் இப்னு உம்மி மக்தூம் எனும் தோழரை நோக்கி நபியவர்கள் முகம் சுளித்தார்கள்; அவரை விட்டு அந்த நேரத்தில் முகத்தைத் திருப்பிக்கொண்டார்கள். அப்போதுதான் அபஸ எனும் 80ஆம் அத்தியாயத்தின் முதல் நான்கு வசனங்களை அல்லாஹ் இறக்கியருளினான். 

 

அவர் முகம் சுளித்தார்; புறக்கணித்தார்; (எதற்காக எனில்) அந்தப் பார்வை இழந்தவர் அவரிடம் வந்ததற்காக. (நபியே உம்மிடம் வந்த) அவர் (பாவத்திலிருந்து) தூய்மை பெற்றிடலாம் என்பது குறித்து உமக்குத் தெரியுமா? அல்லது அவர் நல்லுணர்வு பெறலாம். (அதன் மூலம்) அறிவுரை அவருக்குப் பயன் அளிக்கும் என்பது குறித்து (உமக்கு என்ன தெரியும்?) (80: 1-4) அதன்பிறகு அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை நபியவர்கள் மிகவும் கண்ணியப்படுத்தினார்கள். பிற்காலத்தில் நபியவர்கள் தம் தோழர்களோடு மதீனாவிலிருந்து போருக்குப் புறப்பட்டபோது  இரண்டு தடவை அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம் ரளியல்லாஹு அன்ஹு அவர்களைத் தமக்குப் பிரதிநிதியாக (கலீஃபா) நியமித்தார்கள்.

 

பிறவியிலேயே சிலர் குறைபாடு உடையவர்களாகப் பிறந்திருக்கலாம்; அல்லது நல்லவிதமாகப் பிறந்து ஏதேனும் எதிர்பாரா விபத்து காரணமாக உடல் உறுப்புகளில் குறைபாடு ஏற்பட்டிருக்கலாம். அல்லது வாழும் காலத்தில் தீராத நோய்க்கு ஆட்பட்டுச் சோதிக்கப்படலாம். இத்தகையோர் அல்லாஹ்வின் விதியை உவப்போடு ஏற்றுக்கொண்டு, பொறுமை காத்தால் அவர்களுக்கு அல்லாஹ் சொர்க்கத்தில் இடமளிக்கின்றான். அது குறித்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் நடைபெற்ற வரலாற்று நிகழ்வொன்றைப் படியுங்கள்.

 

அதாஉ பின் அபீரபாஹ்  ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது: இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு என்னிடம், “சொர்க்கவாசியான ஒரு பெண்மணியை உங்களுக்குக் காட்டட்டுமா?” என்று கேட்டார்கள். நான், “ஆம்; (காட்டுங்கள்)என்று சொன்னேன். அவர்கள், இந்தக் கருப்பு நிறப் பெண்மணிதான் அவர். இவர் (ஒரு தடவை) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து, “நான் வலிப்பு நோயால் (அடிக்கடி) பாதிக்கப்படுகிறேன். அப்போது என் (உடலிலிருந்து ஆடை விலகி) உடல் திறந்துகொள்கின்றது. ஆகவே, எனக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுங்கள் என்றார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், “நீ நினைத்தால் பொறுமையாக இருக்கலாம். (இதற்குப் பதிலாக) உனக்குச் சொர்க்கம் கிடைக்கும். நீ விரும்பினால் உனக்குக் குணமளிக்கும்படி அல்லாஹ்விடம் நான் பிரார்த்தனை செய்கிறேன் என்று சொன்னார்கள். இந்தப் பெண்மணி, “நான் பொறுமையாகவே இருந்துவிடுகிறேன். ஆனால், (வலிப்பு வரும்போது ஆடை விலகி) என் உடல் திறந்துகொள்கிறது. அப்படித் திறந்துகொள்ளாமல் இருக்க அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுங்கள் என்று சொன்னார். அவ்வாறே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இப்பெண்ணுக்காகப் பிரார்த்தனை செய்தார்கள். (புகாரீ: 5652)

 

மாற்றுத் திறனாளிகளுக்கான பாதையை உருவாக்குவோம்: சென்னை மெரினா கடற்கரையில் அண்மையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்புப் பாதை மூலம் கடற்கரைக்குச் சென்று தங்கள் மகிழ்ச்சியை மாற்றுத்திறனாளிகள் வெளிப்படுத்தியதைப் பார்த்திருப்போம். இவ்வாறு தமிழ்நாட்டில் எல்லா அலுவலகக் கட்டடங்களும், வழிபாட்டுத் தலங்களும் மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகும் விதத்தில் உள்ளனவா? பெரும்பாலும் இல்லை என்றே சொல்ல முடியும். அவர்களுக்கான பாதையை உரிய முறையில் அமைத்துக்கொடுப்பதும் அவர்களுக்கு உதவி செய்வதும் வழிகாட்டுவதும் இஸ்லாமியப் பார்வையில் தர்மம் ஆகும். ஆம்! அது குறித்து அல்லாஹ்வின் தூதர்  ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியுள்ள செய்தி கவனிக்கத்தக்கது.

 

திக்குத் (முகவரி) தெரியாத பகுதியில் தடுமாறும் ஒருவருக்கு வழிகாட்டுவதும் நீ செய்யும் தர்மம் ஆகும்; கண்பார்வை தெரியாதவரைக் கவனிப்பதும் (வழிகாட்டுவதும்) நீ செய்யும் தர்மம் ஆகும்...என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் (திர்மிதீ: 1956/ 1879). அதேநேரத்தில் கண்பார்வை தெரியாதவருக்குத் தவறான வழிசொல்லி, அவரைப் பள்ளத்தில் விழ வைத்து, கேலி செய்து சிரிப்பது மிகப்பெரும் குற்றமாகும் என அல்லாஹ்வின் தூதர்  ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எச்சரித்துள்ளார்கள். கண்பார்வையற்றவரை வழிதவறச் செய்தவன் சபிக்கப்பட்டவன் ஆவான்.” (முஸ்னது அஹ்மத்: 2914)

 

ஒவ்வொரு மஸ்ஜிதிலும் மாற்றுத் திறனாளிகள் வந்து செல்லும் வகையில் பாதையை அமைப்பது  நிர்வாகிகளின் கடமையாகும். ஏனெனில் மாற்றுத்திறனாளிகளுக்கும் கூட்டுத் தொழுகைக்கு (ஜமாஅத்) விதிவிலக்கு இல்லை. அவர்களும் கூட்டுத் தொழுகையில் கண்டிப்பாகப் பங்கேற்க வேண்டும் என்றே நபிமொழி கூறுகிறது.

 

இப்னு உம்மி மக்தூம் ரளியல்லாஹு அன்ஹு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்தார்கள். அல்லாஹ்வின் தூதரே! என் வீடு மிகவும் தூரமாக உள்ளது. நானோ பார்வையற்றவராக உள்ளேன். (அதேவேளையில்) நான் பாங்கு சத்தத்தைக் கேட்கிறேன் (நான் வீட்டிலேயே தொழுதுகொள்ளலாமா, அவ்வாறு செய்தால் எனக்குக் கூட்டுத்தொழுகையின் நன்மை கிடைக்குமா) என்றார்கள். அப்போது நபியவர்கள், “நீங்கள் பாங்கு சத்தத்தைக் கேட்டால், தவழ்ந்தாவது வந்து, பதிலளியுங்கள்- கூட்டுத் தொழுகையில் கலந்துகொள்ளுங்கள் என்று கூறினார்கள். (முஸ்னது அஹ்மத்: 14948)

 

பார்வையற்றவராக இருந்தாலும் கூட்டுத் தொழுகையில் கலந்துகொள்ள வேண்டும் என்றும் அதில் யாருக்கும் விதிவிலக்கு இல்லை என்றும் இந்த நபிமொழிமூலம் அறிகிறோம். அதேவேளையில் இத்பான் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் குறித்த நபிமொழியில் இதற்கு முரணான செய்தி இடம்பெற்றுள்ளது. அதாவது இத்பான் பின் மாலிக் அவர்கள் ஒரு சமூகத்தாருக்குத் தொழுகை நடத்துகிற இமாமாக இருந்தார்; அவர் பார்வையற்றவராக இருந்தார். அவர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து, தாம் பார்வையற்றவராக இருப்பது குறித்தும், மழைக் காலங்களில் சேறும் சகதியுமாக இருப்பதால் தம்மால் அங்கு சென்று தொழுகை நடத்த இயலவில்லை என்றும், தாங்கள் என் வீட்டில் வந்து தொழுகை நடத்தினால் அவ்விடத்தைத் தொழுமிடமாகத் தாம் ஆக்கிக்கொள்வதாகவும் கூறினார். அவரின் கோரிக்கையை ஏற்று, நபியவர்கள் அவ்வாறே அவர்தம் வீட்டிற்குச் சென்று இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள் என்ற செய்தி புகாரீயில் (667) பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

இதற்கு மார்க்க வல்லுநர்கள் சொல்லுகிற விளக்கமாவது, இப்னு உம்மி மக்தூம் ரளியல்லாஹு அன்ஹு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து கேட்டபோது, “நான் வீட்டிலேயே தொழுதுகொள்ளலாமா; அவ்வாறு வீட்டிலேயே தொழுதுகொண்டாலும் எனக்குக் கூட்டுத்தொழுகையின் நன்மையான 25 அல்லது 27 மடங்கு நன்மை கிடைக்குமா என்ற பொருளில் அவர் அனுமதி கேட்டார். அதைத்தான் நபியவர்கள் மறுத்து, வீட்டில் தொழுதால் 25 மடங்கு நன்மை கிடைக்காது; மஸ்ஜிதிற்கு வந்து தொழுங்கள் என்று கூறினார்கள். இத்பான் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு அவர்களோ 25 மடங்கு நன்மையை எதிர்பார்க்கவில்லை; மாறாக அவர் தம் இயலாமையை மட்டுமே நபியவர்களிடம் வெளிப்படுத்தினார். ஆகவே அவர் தம் வீட்டிலேயே தொழுதுகொள்ள அவருக்கு அனுமதி வழங்கினார்கள்.

 

ஆக மாற்றுத் திறனாளிகள் பலர் தம்மால் இயன்ற அளவிற்குச் சுயமாக உழைத்துச் சம்பாதிக்கின்றார்கள்; தம்மால் இயன்ற சாதனைகளைச் செய்கின்றார்கள்; சிலர் பிறருக்கு உந்து சக்தியாகத் திகழ்கின்றார்கள்; ஆரோக்கியமான உடலுறுப்புகளைக் கொண்டவர்களைப் போன்றே சுறுசுறுப்போடு செயல்படுகின்றார்கள். அவர்களை அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் மதிக்கின்றார்கள். எனவே நாமும் அவர்களை மதிப்போம்; அவர்களுக்கு நம்மால் இயன்ற உதவிகளைச் செய்வோம்.

========================