வியாழன், 23 நவம்பர், 2017

புதன், 22 நவம்பர், 2017

மரணத்தில் நீடிக்கும் மர்மம் நீங்குமா?


-முனைவர் நூ. அப்துல் ஹாதி பாகவி

(ஒரு மாதத்திற்குமுன் எழுதிய கட்டுரை முகநூல் நண்பர்கள் பார்வைக்கு)


மறைந்த முன்னாள் முதல்வர்  ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி இரவு 11: 30 மணிக்கு மாரடைப்பின் காரணமாக இறந்துவிட்டார். அவர் செப்டம்பர் 22ஆம் தேதி அப்போலே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது முதல் அவருக்கு அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை என்ன என்பது குறித்து மக்களுக்குத் தெரிவிக்கப்படவே இல்லை. அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று உடல்நிலை தேறி வருகிறார், இட்லி சாப்பிட்டார், பந்து விளையாடினார் என்றெல்லாம் செய்திகள் வந்தனவே தவிர அவரது முகத்தை மக்களுக்குக் காட்டவே இல்லை. அப்போதிருந்தே மக்களுக்குச் சந்தேகம் ஏற்படத் தொடங்கிவிட்டது.

உடல்நிலை தேறி வருகிறார், விரைவில் நலம் பெற்று வீடு திரும்புவார் என்று சொல்லிக்கொண்டே இருந்த சமயத்தில் திடீரென டிசம்பர் 5ஆம் தேதி அவர் இறந்துவிட்டார் என்ற  செய்தியை அறிந்ததும் மக்கள் அனைவரும் மிகப்பெரும் சோகத்தில் ஆழ்ந்துவிட்டனர். அதை நம்பமுடியாத மக்கள் அவரது மரணத்தில் மர்மம் உள்ளது எனச் சொல்லத் தொடங்கிவிட்டார்கள்.

மக்களுடைய சந்தேகம் உண்மைதானோ என்று நம்பும்விதத்திலேயே தமிழக அமைச்சர்களின் அண்மைக்கால முன்னுக்குப்பின் முரணான பேச்சுகள் அமைந்துள்ளன.

ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது அவரை சசிகலா விடியோ எடுத்ததாகவும் அப்போது ஜெயலலிதாவின் உடல் மெலிந்த நிலையில் இருந்ததாகவும் அதனால்தான் அந்த விடியோவை அப்போது  வெளியிடவில்லை என்றும் டிடிவி தினகரன் கூறியுள்ளார். பொதுமக்கள் அஞ்சலிக்காக ஜெயலலிதா உடல் இராஜாஜி அரங்கத்தின் வெளியே வைக்கப்பட்டிருந்தபோது அவரது உடல் மெலிந்து இருந்ததற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது படம் எதுவும் எடுக்கப்படவில்லை என்று சசிகலா கூறியுள்ளார். ஆனால் இப்போது டிடிவி தினகரன் விடியோ ஆதாரம் இருப்பதாகக் கூறுகிறார். யார் கூறுவது உண்மை?
மேலும் பதிவு செய்யப்பட்ட விடியோ காட்சியை விசாரணை மன்றத்தில் அளிப்போம். அது சிபிஐ விசாரணையாக இருந்தாலும் சரி, சர்வதேச இன்டர்போல் விசாரணையாக இருந்தாலும் சரி அதை அங்கு கொடுப்போம். எங்களது மடியில் கனம் இருந்தால்தானே வழியில் பயப்பட வேண்டும்? விசாரணை ஆணையம் அமைத்தால் அதற்கு முதலில் பதில் சொல்ல வேண்டியது அப்போது முதல்வராக இருந்த ஓ. பன்னீர் செல்வம்தான் என்று டிடிவி தினகரன் கூறுகிறார்.

மருத்துவமனையில் நாங்கள் யாரும் ஜெயலலிதாவைப் பார்க்கவில்லை. சசிகலாவுக்குப் பயந்து, அவர் இட்லி சாப்பிட்டதாகக் கூறினோம் என்று மாநில வணிக வரி, பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் கே.சி. வீரமணி பேசியுள்ளார்.

ஜெயலலிதாவுக்கு முறையான சிகிச்சை அளிக்காமல் மருத்துவமனையிலேயே வைத்திருந்தனர். அந்த நிலையில் அதிமுக கட்சியைக் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கில்தான், நாங்கள் அனைவரும் மருத்துவ மனையில் ஜெயலலிதா இட்லி சாப்பிட்டார், சட்னி சாப்பிட்டார் என்று பொய்சொல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டோம் என்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார்.

ஆக இப்படி அ.தி.மு.க. அமைச்சர்கள் மாறி மாறிப் பேசிக்கொண்டிருப்பது மக்கள் மத்தியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பது வலுவடைந்துள்ளது. அவர் இயல்பாக மரணிக்கவில்லை. அவரை மேல்மட்ட அரசியல்வாதிகள்தாம் கொலை செய்துவிட்டனர் என்றே மக்கள் பேசிக்கொள்கின்றார்கள். அவர் இயற்கை மரணத்தையே தழுவினார் என்று அவரது கட்சியினர் கூறுகின்றனர்.
தி.மு.க. செயல்தலைவர் மு.க. ஸ்டாலின், பாட்டாளி மக்கள் கட்சியின் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பலர், ஜெயலலிதா இறப்பு குறித்த விசாரணையை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் என்று கூறியுள்ளனர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை  குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமியை நியமித்து உத்தரவிட்டுள்ளார். அவர் முறையாக விசாரித்து தெளிவான அறிக்கையைச் சமர்ப்பிப்பாரா? அல்லது அதன்பின்னரும் மர்மம்தான் தொடருமா? பொறுத்திருந்து பார்ப்போம்.    
------------------------------------------------------------------  

(தற்போது விசாரணை தொடர்ந்துகொண்டிருக்கிறது)

=============================================


வியாழன், 16 நவம்பர், 2017

இலக்கை உயர்வாக்கு!


-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.
==========================================

ஒவ்வொரு மனிதனும் தன் எண்ணத்திற்கேற்பவே உயர்வடைகின்றான்; முன்னேறுகிறான். மனதில் ஆழமான வேட்கையும் உயர்வான இலக்கும் இருந்தால் அவன் அதை நிச்சயம் அடைவான். மனதில் மிகச் சிறிய இலக்கும் தாழ்வான எண்ணமும் இருந்தால் தாழ்வான நிலையில்தான் அவனுடைய வாழ்க்கை அமையும்.

எல்லாம் வல்ல அல்லாஹ் இலக்குகளில் உயர்வானதையே விரும்புகின்றான்; அவற்றில் மிகவும் கீழானதை வெறுக்கின்றான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: முஅஜமுல் அவ்சத்)

இவ்வுலகில் பிறந்த ஒவ்வொரு முஸ்லிமின் இறுதி இலக்கு சொர்க்கத்தை அடைவதுதான். சொர்க்கத்தில் எட்டு வகையான உயர்மதிப்பு உள்ளது. அதில் மிக உயர்ந்த எட்டாவது சொர்க்கமான ஜன்னத்துல் ஃபிர்தவ்சையே அல்லாஹ்விடம் கேளுங்கள் என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (நூல்: புகாரீ: 2790) இதன்மூலம் "இலக்கை உயர்வாக்கு' எனும் பாடத்தை நபி (ஸல்) அவர்கள் நமக்குக் கற்றுத்தருகின்றார்கள்.

வெள்ளத் தனையது மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு.
நீரின் அளவிற்கே மலரின் தண்டு நீண்டிருக்கும். அதுபோலவே ஒருவர் தம் உள்ளத்தில் எண்ணும் அளவிற்கே அவருடைய வாழ்க்கை உயர்ந்திருக்கும் எனும் வள்ளுவரின் வாக்கிற்கிணங்க உள்ளத்தின் எண்ணத்தை விசாலப்படுத்த வேண்டும்.

ஆரோக்கியமாக உள்ள ஒருவன் மக்களிடம் கையேந்தியே வாழ்ந்துவிடலாம் என்றெண்ணி, அதையே தன் தொழிலாகத் தேர்ந்தெடுத்துக்கொள்கிறான். காலப்போக்கில் நிறையப் பணத்தைச் சேர்த்துவிடுகின்றான். என்னதான் அவன் பணத்தைச் சேர்த்தாலும் "பிச்சைக்காரன்' எனும் பெயர்தான் அவனுக்குக் கிடைக்கும்.

அதேநேரத்தில் மாற்றுத்திறனாளியாக உள்ள ஒருவன், "பிறரிடம் கையேந்துவது இழுக்கு' என்றெண்ணி, தன்னால் இயன்ற வேலையைச் செய்கிறான்; சின்னச்சின்னப் பொருள்களை விற்பனை செய்கிறான்; அதில் கிடைக்கும் வருவாய் சொற்பமாக இருந்தாலும் அதை மகிழ்வோடு ஏற்றுக்கொண்டு நிம்மதியோடும் தன்மானத்தோடும் வாழ்கிறான். மேற்கண்ட இரண்டு நிகழ்வையும் ஒப்பிட்டுப் பார்த்தால் எது உயர்வான வாழ்க்கை என்ற உண்மை புலப்படும்.

வாழ்வதற்கான வழியைத் தேர்ந்தெடுத்துக்கொள்வது அவரவர் கையில் உள்ளது. அவர் தேர்ந்தெடுக்கும் வழியைப் பொறுத்து அவரின் வாழ்க்கை மதிப்புமிக்கதாகவோ தரம்தாழ்ந்ததாகவோ மாறுகிறது.  திருடுதல், பிச்சையெடுத்தல், ஏமாற்றுதல், பொய்சொல்லுதல், கொள்ளையடித்தல், கையூட்டுப் பெறுதல் உள்ளிட்ட எத்தனையோ இழிவான, கீழ்த்தரமான வழிகளில் பணத்தைச் சம்பாதிக்கலாம்.  ஆனால் இவையெல்லாம் அவனுக்கு உயர்மதிப்பைப் பெற்றுத்தரா. இவையெல்லாம் அவரவரின் தாழ்வான எண்ணத்தையும் கீழான மனோநிலையையுமே காட்டுகின்றன.

மேலான எண்ணமும் உயரிய இலக்கும் உடையோர் இத்தகைய இழிவான வாழ்வைத் தேர்ந்தெடுக்கமாட்டார்கள். நம்மால் பிறர் வாழ வேண்டும்; ஏழைகள் பயன்பெற வேண்டும்; நம் உழைப்பில் பிறர் உண்ண வேண்டும் என்று நினைப்பார்கள். இவர்களே உயரிய இலக்குடையோர்.

உயர்வான இலக்கை அடைய வைராக்கியம் கொண்டோர், தம் வாழ்வில் எதிர்கொள்கின்ற தடைகளையோ சிக்கல்களையோ ஒரு பொருட்டாகக் கருதமாட்டார்கள். எத்தனை துன்பம் வந்தபோதிலும், இடர்ப்பாடுகள் குறுக்கிட்டபோதிலும் அடைய வேண்டிய இலக்கைத் தொடுகின்ற வரை ஓயமாட்டார்கள். அத்தகையோர் "வைராக்கிய மனம் கொண்டோர்' என்றும் "மனத்திட்ப மிக்கோர்' என்றும் அழைக்கப்படுகின்றார்கள்.

(நபியே!) மனத்திட்பமிக்க இறைத்தூதர்கள் கடைப்பிடித்த பொறுமையைப் போன்று நீரும் பொறுமையைக் கடைப்பிடிப்பீராக. (46: 35) தம் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரும் நரகத்திற்குச் சென்றுவிடக்கூடாது என்ற உயர்ந்த இலக்கையும் இலட்சியத்தையும் கொண்டிருந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், தாம் சந்தித்த ஒவ்வொருவரிடமும் ஏகத்துவக் கொள்கையை நயமாக எடுத்துரைத்தார்கள். அதனால் அவர்கள் எதிர்கொண்ட இடர்களும் துன்பங்களும் கொஞ்சநஞ்சமல்ல. ஒரு கட்டத்தில் சடைவும் சோர்வும் ஏற்பட்டபோதுதான், அல்லாஹ் மேற்கண்ட அறிவுரையை அவர்களுக்கு வழங்குகின்றான்.

உயரிய இலட்சியத்தையும் இலக்கையும் கொண்டோர் தாம் அதை நோக்கிச் செல்லும்போது எதிர்கொள்கின்ற பிரச்சனைகளையும் சிக்கல்களையும் கண்டு மிரண்டுபோய்விடக்கூடாது; சோர்ந்துபோய் உட்கார்ந்துவிடக்கூடாது. மாறாக எல்லாவற்றையும் பொறுமையோடு சகித்துக்கொண்டு முன்னேறிச் செல்ல வேண்டும் என்பதை மேற்கண்ட இறைவசனம் உள்ளூர உணர்த்துவதை அறியலாம்.

அவ்வாறு பல்வேறு சிரமங்களையும் தோல்விகளையும் எதிர்கொண்ட பின்னர்தான் பல்வேறு அறிஞர்கள் பற்பல கண்டுபிடிப்புகளை வெளிக்கொணர்ந்திருக்கின்றார்கள். அவர்கள் தம் ஆய்வின் தொடக்கத்திலேயே வெற்றியை எதிர்பார்த்திருந்தாலோ, தோல்வியைக் கண்டு துவண்டு  போயிருந்தாலோ அவர்கள் தம் கண்டுபிடிப்புகளை உலகோருக்குக் கொடையாகக் கொடுத்திருக்க முடியாது. பல்வேறு சிரமங்களையும் தொல்லைகளையும் சகித்துக்கொண்டு, தோல்விகளைத் தாங்கிக்கொண்டு முயற்சிக்குப்பின் முயற்சி எனக் கடுமுயற்சி செய்து, அடைய வேண்டிய இலக்கை அடைந்தே தீருவது என வைராக்கிய எண்ணம் கொண்டதால்தான் இன்று நாம் பல்வேறு வசதிகளை அனுபவித்துக்கொண்டிருக்கிறோம்.

தேர்வில் மதிப்பெண் குறைந்துவிட்டதால், மனம் நொந்து, நெக்குருகித் தம் இன்னுயிரை மாய்த்துக்கொள்வோர் உயரிய இலட்சியத்தைத் தம் மனத்தில் விதைத்துக்கொள்ளாதவர்கள்; தோல்வியை எதிர்கொள்ளத் தெரியாதவர்கள்; மதிப்பெண்ணுக்குள்தான் வாழ்க்கை உள்ளதென குறுகிய எண்ணம் கொண்டவர்கள். மாறாக, ஒரு தடவை தோற்றாலும் அதற்கான மாற்று வழியை அறிந்து மறுமுறை வென்று தம் இலட்சியத்தை அடைய முனைவதே உயரிய இலக்குடையோர் செய்யும் பணி.

மனத்தைத் தளர விட்டுவிட்டால் உயரிய இலட்சியத்தை ஒருபோதும் அடைய முடியாது. மன உறுதிதான் நம்முடைய உந்து சக்தி. அதை வைத்துக்கொண்டுதான் நாம் மேல்நோக்கி நகர முடியும். எனவே உயரிய இலட்சியத்தை அடையத் துடிப்போர் மனத்தையும் தன்னம்பிக்கையையும் வலுவாக வைத்துக்கொள்ள வேண்டும்.

நாம் கொள்ளும் இலக்கு உயர்வானதாக இருக்க வேண்டும் என்பதற்கான சான்றாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கூற்றை எடுத்துக்கொள்ளலாம்.
"எனக்காக அல்லாஹ்விடம் "வஸீலா'வைக் கேளுங்கள். "வஸீலா' என்பது சொர்க்கத்திலுள்ள (உயர்) பதவியாகும்; அல்லாஹ்வின் அடியார்களுள் ஒருவருக்குத்தான் அது கிடைக்கும். அந்த ஒருவர் நானாகவே இருக்க விரும்புகிறேன். எனவே, எனக்காக அந்தப் பதவியை (அல்லாஹ்விடம்)  கேட்பவருக்கு (மறுமை நாளில்) எனது பரிந்துரை அவசியம் கிடைக்கும்.'' (நூல்: முஸ்லிம்: 628) ஒரே ஒரு பதவிதான். அது தமக்குக் கிடைக்க வேண்டுமென உயரிய இலக்கை எண்ணியுள்ளார்கள். அது அவர்களுக்கே கிடைக்க நாம் அல்லாஹ்விடம்  பரிந்துரை செய்தால் அதற்குப் பிரதிபலனாக, நமக்குச் சொர்க்கம் கிடைக்க அவர்கள் பரிந்துரை செய்வார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எவ்வளவு பெரிய இலக்கைக் கொண்டிருந்தார்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

உயரிய இலக்கைக் கொண்டிருப்பவர்கள் எப்போதும் சோர்ந்துவிடக் கூடாது என்பதற்கான சான்றாக உமர் (ரளி) அவர்களின் கூற்றை எடுத்துக்கொள்ளலாம்: "உங்கள் மனஉறுதி பலவீனமடைந்துவிட வேண்டாம். மனஉறுதி பலவீனமடைந்துவிட்டால் உயரிய இலக்கை அடைவதைவிட்டு அது உங்களைத் தூரமாக்கிவிடும்.'' 

நாம் கொள்ளும் இலக்கு உயர்வானதாகவே இருக்க வேண்டும். அப்போதுதான் நாம் உயர்வானதை அடைய முடியும். உயரிய இலக்கை மனத்தில் கொண்டோர், முன்னேற வேண்டும் என்ற ஆசையைப் புதுப்பித்துக்கொண்டே இருக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் அடைய வேண்டிய குறிக்கோளை நோக்கி மனத்தைத் திருப்பிக்கொண்டே இருக்க வேண்டும். அடைய வேண்டிய இலக்கை மீண்டும் மீண்டும் மனத்தில் கொண்டுவந்து நிறுத்திப் பார்க்க வேண்டும். அதை அடையும் வரை அதற்கான முயற்சியைக் கைவிடக் கூடாது. இவ்வாறு செயல்பட்டால் யாரும் உயர்வான இலக்கை அடையலாம். அத்தோடு, "நீங்கள் முடிவு செய்தால் அல்லாஹ்விடமே பொறுப்பை ஒப்படையுங்கள். ஏனென்றால் நிச்சயமாக அல்லாஹ் (தன்னிடம்) பொறுப்புச் சாட்டுபவர்களை நேசிக்கின்றான்'' (3: 159) எனும் இறைவசனத்திற்கேற்ப அல்லாஹ்வின்மீது நம்பிக்கை வைத்து அடியெடுத்து வைத்தால் கொண்ட இலக்கை எளிதில் அடையலாம். 
=================================================================

நீடூர் அரபுக்கல்லூரியில் நடைபெற்ற அறிவியல் ஆய்வரங்கம்!


நீடூர்-நெய்வாசலில் அமைந்துள்ள ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதா அரபுக்கல்லூரியில் அக்கல்லூரியின் முதல்வர் மௌலானா மௌலவி ஏ. முஹம்மது இஸ்மாயீல் ஃபாஸில் பாகவியின் தலைமையில் 01.11.2017 அன்று "அறிவியல் அரங்கில் அல்குர்ஆன்'  எனும் தலைப்பில் ஆய்வரங்கம் நடைபெற்றது.

நிகழ்ச்சியின் தொடக்கமாக மாணவர் நூருல் அமீன் கிராஅத் ஓதினார். ஜைனுல் ஆபிதீன் நபிபுகழ் கீதமிசைத்தார். அதனைத் தொடர்ந்து கல்லூரிப் பேராசிரியர் மௌலானா ஸஃபியுல்லாஹ் ஃபாஸில் பாகவி வரவேற்புரை நிகழ்த்தினார். பின்னர் இக்கல்லூரியின் மாணவர்கள் ஏழுபேர் ஆய்வுரையைச் சமர்ப்பித்தார்கள். எர்ணாகுளம் ஷபீர் "வானவியல் பேசும் வான்மறை' எனும் தலைப்பிலும், மலப்புரம் ஷாஃபி "மேகங்கள் பற்றி மாமறை' எனும் தலைப்பிலும், முஹம்மது அலீ "மரபணு பற்றி மறைகூறும் உண்மை' எனும் தலைப்பிலும், முஹம்மது அப்ரார் "நோய் பரவச் செய்யும் கிருமிகள்' எனும் தலைப்பிலும், பைஜுர் ரஹ்மான் "மனிதப் படைப்பைக் கூறும் திருமறை' எனும் தலைப்பிலும், ஷேக் நவ்தில் "புவியீர்ப்பு ஆற்றல் குறித்துப் புனிதக்குர்ஆன்' எனும் தலைப்பிலும், முஹம்மது அபூபக்கர் சித்தீக் "கடல்பற்றி எழில்மறை' எனும் தலைப்பிலும் ஆய்வுரை வழங்கினார்கள்.

இனிய திசைகள் துணையாசிரியர் முனைவர் மௌலானா மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி நடுவராகப் பங்கேற்று, மாணவர்கள் வழங்கிய ஆய்வுரையைக் கவனமாகக் கேட்டு, இறுதியில் தொகுப்புரை வழங்கினார். மரபணு பற்றி ஆய்வுரை வழங்கிய முஹம்மது அலீ முதலாம் பரிசையும் வானவியல் குறித்து ஆய்வுரை வழங்கிய எர்ணாகுளம் ஷபீர் இரண்டாம் பரிசையும் புவியீர்ப்பு ஆற்றல் குறித்து ஆய்வுரை வழங்கிய ஷேக் நவ்தில் மூன்றாம் பரிசையும் பெற்றனர். ஆய்வுரை வழங்கிய அனைவருக்கும் ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது. 

மௌலானா மௌலவி முஹ்யித்தீன் அப்துல் காதர் ஃபாஸில் மன்பஈ, மௌலானா மௌலவி புகாரி ஃபாஸில் அன்வாரி, மௌலானா மௌலவி முஹம்மது ஷுஹைப் மிஸ்பாஹி, மௌலானா மௌலவி எம். ஒய். அப்துர் ரஹ்மான் பாகவி ஃபாஸில் மழாஹிரி, அப்துர் ரஹ்மான் பாகவி (சத்தியமங்கலம்) உள்ளிட்ட இக்கல்லூரிப் பேராசிரியர்கள் பார்வையாளர்களாகக் கலந்துகொண்டார்கள். அவைத்தலைவரின் துஆவுடன் நிகழ்வு இனிதே நிறைவுற்றது.      -பாகவியார்
=======================================================