வியாழன், 30 ஏப்ரல், 2020

தராவீஹ் தஸ்பீஹ்கள்

புதன், 22 ஏப்ரல், 2020

பூனையை அவிழ்த்துவிடு!



---------------------------------------
“பனூ இஸ்ராயீல் சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண், ஒரு பூனையின் காரணத்தால் வேதனை செய்யப்படுவதை நான் பார்த்தேன். அவள் தனது பூனைக்குத் தீனி போடாமல் கட்டிப்போட்டு வைத்திருந்தாள். அவள் அதை பூமியிலுள்ள புழுப்பூச்சிகளைத் தின்ன (அவிழ்த்து)விடவுமில்லை (இதன் காரணமாகவே அவள் நரகம் சென்றாள்.)” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  (முஸ்லிம்: 1651)

ஆட்சியாளர்கள் தற்போதைய சூழ்நிலை கருதி, மக்களை வீட்டுக்குள் அடைத்துப்போட்டது தவிர்க்க இயலாதது. இருப்பினும் அவர்களுக்கான உணவுக்குப் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டுமல்லவா? வெளியில் விடாமல் வீட்டுக்குள் அடைத்துப்போட்டு, உதவித்தொகையும் கொடுக்காமல் விட்டுவிட்டால் அவர்கள் தமக்கான வாழ்வாதாரத்தை எப்படிப் பெறுவார்கள்? இதற்கு ஆட்சியாளர்கள்தாம் பதில் சொல்ல வேண்டும்.

நூ. அப்துல் ஹாதி பாகவி
22 04 2020      27 08 1441    =====================

ஞாயிறு, 19 ஏப்ரல், 2020

தொழுதாலும் சிறையா?

சிறுகதை
_____________

பற்பல தவறுகளைச் செய்து ரௌடிப் பட்டியலில் இடம்பெற்றிருந்த முஸ்தபாவின் பெயர் அவ்வூர் போலிஸ் ஸ்டேஷனில் உள்ள அனைவருக்கும் மனப்பாடம் ஆகிவிட்டது. 

ஒரு நாள் மாலையில் சிகரெட் பற்ற வைத்து உள்ளிழுத்து மூக்கு வழியாக வெளியேற்றியவாறு,  “திருந்தி நல்லவனாக வாழ என்ன வழி என்று யோசித்துக் கொண்டிருந்தபோது, அவனை அறிந்த தப்லீக் சகோதரர்கள் சிலர் அவனை நெருங்கி, “கலிமா சொல்லியுள்ள நீங்க தொழுகையைக் கடைப்பிடிப்பது ரொம்ப முக்கியம். ஐவேளைத் தொழுகைய ஒவ்வொரு முஸ்லிமும் தொழுகணும்; வாங்க பாய் பள்ளிவாசலுக்குப் போகலாம்" என்று சொல்லி அழைத்துச் சென்றார்கள்.

தொழுது முடித்து வெளியே வரும்வேளையில்,
அடுத்த வாரம் நம் பள்ளியிலிருந்து ஒரு ஜமாத் புறப்படுது. ஒரு நாற்பது நாள் எங்களோட ஜமாத் வாங்க பாய். அல்லாஹ்வுடைய பாதையிலே போயி இஸ்லாமிய மார்க்கத்த கத்துக்கலாம். நாலு பேரப் போல ஒரு நல்ல மனுஷனா வாழலாம். உங்க பேரையும் எழுதிக்கலாமா?" என்று அவனை மனதளவில் தயார்படுத்தி, சம்மதிக்க வைத்தார் அந்த ஊர் அமீர்ஸாப். 


மூன்று மூன்று நாள்களாகப் பல்வேறு ஊர்கள் சென்று பல்வேறு பள்ளிவாசல்களில் தங்கினார்கள். உண்டார்கள்; உறங்கினார்கள்; கற்றுக் கொடுத்தார்கள். முஸ்தபா புதிய புதிய விஷயங்களைக் கற்றுக்கொண்டான். தொழுவது குறித்து அறிந்துகொண்டான். திருக்குர்ஆனிலிருந்து சில (சூராக்களை) பகுதிகளை மனனம் செய்துகொண்டான். நாற்பது நாள் முடிந்து போனது. இவ்வளவு சீக்கிரம் முடிஞ்சு போச்சா என்று நினைத்துக்கொண்டே ஊருக்குத் திரும்பினான். 

ஊர் வந்த சில நாள்களில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது. இதுவரை பள்ளிவாசலில் தொழுது பழகிய அவனுக்கு வீட்டில் தொழுவது திருப்தியாக இல்லை. 

அன்று ஒரு வெள்ளிக்கிழமை. ஊரடங்கு இன்னும் தொடர்கிற வேளை. பக்கத்திலுள்ள அமீர்ஸாப் வீட்டுக்குச் சென்று, “வாங்க பாய் தொழுகப் போகலாம். இன்று ஜும்ஆ பாய். என்னால வீட்ல தொழுக முடியல பாய்” என்றான்.

“தம்பி முஸ்தபா, ஊரடங்கு போட்டுருக்காங்க. பள்ளிவாசலுக்குப் போகக்கூடாதுப்பா. வீட்லதான் தொழுகணும்" என்றார் அமீர்ஸாப். 

“என்ன பாய், நீங்களே இப்படிச் சொல்லலாமா? ஒவ்வொரு முஸ்லிமும் ஐவேளை தொழுகணும்; வீட்ல தொழுவதைவிட பள்ளிவாசல்ல தொழுதா 27 மடங்கு நன்மைன்னு நீங்கதான் சொன்னீங்க. இப்ப நீங்களே வீட்ல தொழுகச் சொல்றீங்களே? 

“வாங்க பாய். யாருக்கும் பயப்படாதீங்க. எல்லாம் நான் பாத்துக்குறேன் பாய்” என்று கூறி அமீர்ஸாபைச் சம்மதிக்க வச்சு, அக்கம் பக்கத்துல இருந்த சில இளைஞர்களையும் கூட்டிக்கொண்டு பள்ளிவாசலுக்குப் போனான். பள்ளிவாசல் கேட் பூட்டியிருந்தது.

 உள்ளே பார்த்தால் இமாமும் பள்ளி ஊழியர்களும் மட்டுமே தொழுது கொண்டிருந்தார்கள். எப்படி உள்ளே போவது என்று யோசித்த முஸ்தபாவுக்கு பக்கத்தில் இருந்த சின்ன கேட் பக்கம் பார்வை சென்றது. அதில் துருப்பிடித்த பூட்டு ஒன்று தொங்கிக் கொண்டிருந்தது. அதைப் பலமாகப் பிடித்து இழுத்தான். அது கையோடு வந்தது. 


மிக வேகமாக எல்லோரும் ஓடிச் சென்று தொழுகையில் கலந்து கொண்டார்கள். தொழுகை முடிந்து துஆ ஓதி முடிப்பதற்குள் போலிஸ் குரல் கேட்டு உள்ளிருந்த அனைவரும் பீதியடைந்தனர். 


“பாய், எல்லோரும் வெளியே வாங்க” என்று போலிஸின் அதிகாரக் குரல் ஒன்று வன்மையாகக் கேட்டதும் அனைவரும் பயந்துகொண்டே வெளியே வந்தனர். 

“ஏன் பாய், ஊரடங்கு போட்டுள்ளது உங்களுக்குத் தெரியாதா? உங்களுக்குத் தனியா சொல்லணுமா? எல்லோரும் வேன்ல ஏறுங்க” என்று மிரட்ட, எல்லோரும் வேனில் ஏறினார்கள்.

எல்லோரையும் போலிஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று, சிறையில் அடைத்தார்கள். எல்லோரும் அச்சத்தில் இருக்க, முஸ்தபா மட்டும் ஆழ்ந்து யோசித்துக் கொண்டிருந்தான்.

அவன் பக்கத்தில் இருந்த அமீர்ஸாப் அவனிடம், “என்னப்பா ஆழ்ந்த யோசனை?” என்று கேட்க, “இல்ல பாய், நான் எத்தனையோ தவறுகள் செய்துட்டு இந்த ஜெயிலுக்குப் பல தடவை வந்துருக்கேன். அதுல ஒரு நியாயம் இருக்கு. ஆனா இப்ப, நான் என்ன தவறு செய்தேன். எதற்காக கைது செய்து இந்த ஜெயிலுல போட்ருக்காங்க? நன்மை செய்வதுகூட தவறா பாய்?” என்று கோபமாகக் கேட்டான்.   

“அப்படி இல்லப்பா, நாம தொழுததால் நம்மைக் கைது செய்யல. சட்டத்த மீறிச் செயல்பட்டதால்தான் நம்மைக் கைது செய்துருக்காங்க. சட்டத்த மீறினால் கைதுதான். இதில் நல்லது, கெட்டதுன்னு எதுவுமில்ல. சட்டத்தால் நல்லதையும் கெட்டதாக்க முடியும். கெட்டதையும் நல்லதாக்க முடியும்” என்றார்.  

“எப்படி பாய், புரியலையே” என்றான்.

“ஒனக்குப் புரியுற மாதிரியே சொல்றேன். “மது குடிப்பது தடை”ன்னு அரசாங்கம் சட்டம் போட்டுருக்கும்போது ஒருவன் மது குடித்தால் அவனைக் கைது செய்வாங்க. “மது குடிப்பது தடை இல்லை”ன்னு அரசாங்கம் சட்டம் போட்டுருக்கும்போது ஒருவன் மது குடித்தால் அவனைக் கைது செய்ய மாட்டாங்க. இதுதான்பா சட்டத்தின் வலிமை. இப்ப புரியுதா?” என்றார் அமீர் ஸாப்.

“தெளிவாப் புரிஞ்சுது பாய்” என்றான்

“சரி, வாப்பா அசர் தொழுகலாம். நேரமாச்சு” என்று அமீர்ஸாப் சொல்ல, “உளூ செய்யணுமே. என்ன செய்யிறது பாய்?” என்றான் முஸ்தபா.

“உளூ செய்ய முடியாதபோது, தயம்மும் செய்துக்கலாம். எப்படி செய்யிறதுன்னு நான் உனக்குச் சொல்லித்தாரேன். நான் செய்வதைப்போல் நீயும் செய்” என்று சொல்லிவிட்டு அமீர்ஸாப் தயம்மும் செய்யத் தொடங்கினார்.

அதன்பின் அவ்விருவரும் அங்கே தொழுக, மற்றவர்களும் ஆங்காங்கே தொழுதார்கள்.

இவர்களின் நன்னடத்தையைப் பார்த்த எஸ்.ஐ., இவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய மேலிடத்துக்குப் பரிந்துரை செய்தார்.

மேலிடத்திலிருந்து விடுதலைக்கான உத்தரவு வருவதற்குள், ஊரடங்கு உத்தரவும் வாபஸ் பெறப்பட்டது.

“அல்ஹம்து லில்லாஹ்” என்று சொல்லியவாறே அனைவரும் விடுதலையாகி ஊர் திரும்பினர்.

ஊருக்குள் சென்றதும், அனைவரும் தத்தம் வீட்டிற்குச் செல்வதற்குமுன் அல்லாஹ்வின் வீட்டிற்குள் சென்று நிம்மதியாகத் தொழுதனர்.

-நூ. அப்துல் ஹாதி பாகவி
18 04 2020      24 08 1441    

வெள்ளி, 17 ஏப்ரல், 2020

மன்னரிடம் ஒரு பேட்டி


==========================
மன்னா, தங்களிடம் பேட்டி காண அயலூரிலிருந்து ஒரு பத்திரிகையாளர் வந்துள்ளார். உள்ளே வரச்சொல்லவா? என்று அமைச்சர் கேட்டார்.

யோவ், அமைச்சரே, நான்தான் யாருக்கும் பேட்டி கொடுப்பதில்லை என்று தெரியாதா? பிறகு ஏனய்யா இந்தக் கேள்வி. திருப்பி அனுப்புமய்யா அவரை.

மன்னா, நான் தங்களின் வழக்கத்தை அவரிடம் எடுத்துச் சொல்லிவிட்டேன். அவர் போக மறுக்கிறார். மிகவும் அடம்பிடிக்கிறார். நான் என்ன செய்ய?

சரி, வரச்சொல்லும்.

நிருபர்: மன்னா, தாங்கள் முதலில் 7 நாள்கள் ஊரடங்கு என்று சொன்னீர். பிறகு ஏப்ரல் 14 வரை என்று சொன்னீர். பின்னர் மே 3 வரை என்று நீடித்துள்ளீர். இதன் மர்மம் என்ன?

மன்னர்: ஐயா, ஒரு தட்டுச் சோற்றை அப்படியே ஒரே வாயில் ஒரே நேரத்தில் சாப்பிட முடியுமா? ஒவ்வொரு கவளமாகத்தானே சாப்பிட முடியும்? அதுபோல், 40 நாள்கள் ஊரடங்கு என்று ஒரே உத்தரவாகப் போட்டால் மக்கள் கொதிப்பார்கள்; வெகுண்டெழுவார்கள். எனவேதான் குடிமக்களின் நலன் கருதி கொஞ்சம் கொஞ்சமாக அறிவிக்கிறேன். இது நான் குடிமக்கள்மீது கொண்டுள்ள அக்கறையைக் காட்டவில்லையா?

நிருபர்: சரி மன்னா, ஒவ்வொரு நாளும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் கணக்கு மட்டும் அதிகரித்துக்கொண்டே வருகிறதே? மற்றொரு பக்கம் குணமாகிச் செல்வோர் கணக்கு மறைக்கப்படுகிறதே. இது குறித்து தங்களின் கருத்து?

மன்னர்: ஊரடங்கு போட்டுள்ள இச்சமயத்தில், நாம் போட்டுள்ள உத்தரவு சரியானதுதான் என்று மக்கள் நம்ப வேண்டாமா? குறைகிற கணக்கைக் காட்டத் தொடங்கினால், எஞ்சியுள்ள ஊரடங்கு நாள்களை எவ்வாறு கடத்துவது? கொஞ்சம் கொஞ்சமாக அச்சத்தை ஊட்டிக்கொண்டே இருந்தால்தானே நாம் போட்டுள்ள உத்தரவு சரிதான் என்று மக்கள் எண்ணுவார்கள்? மன்னர் சரியாகவே செயல்படுகிறார் என்று எம்மைப் புகழ்வார்கள். சரிதானே?

நிருபர்: தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய மருந்துப் பொருள்களை அமெரிக்காவிற்குத் திருப்பிவிட்டுவிட்டீர்கள் என்று மக்கள் பேசிக்கொள்கிறார்களே?

மன்னர்: ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்-பழமொழி கேள்விப்பட்டதில்லையா? நாம் அவர்களுக்கு மருந்து கொடுத்தால், நம் மக்கள் தாமே குணமடைவார்கள். இது தெரியாதா? இப்போது கேள்விப்பட்டீர்களா? அமெரிக்காவில் 34,000 பேருக்கு மேல் இறந்துகொண்டிருக்கிறார்கள். ஆனால் நம் நாட்டில் மிக அற்பமான எண்ணிக்கையில்தான் இறந்துள்ளார்கள். மக்களை நடமாட விட்டிருந்தால் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் எத்தனையோ பேர் இந்நேரம் இறந்திருப்பார்கள். அவர்களையெல்லாம் நான் காப்பாற்றியிருக்கிறேன் அல்லவா? இப்போது சொல்லுமய்யா என் ஆட்சியின் திறமையை.

நிருபர்: எல்லாருக்கும் ஊரடங்கு போட்ட நீங்க, பத்திரிகை அலுவலகத்தை மட்டும் விட்டுவிட்டீர்களே?

மன்னர்: அவர்களெல்லாம் நம்ம ஆளுங்க. அவங்களெல்லாம் நமக்கு சப்போர்ட் செய்யுற ஆளுங்க. அவங்கதானே ஒவ்வொரு நாளும் மக்களை அச்சுறுத்திக்கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் இல்லையென்றால் நம்ம உத்தரவு மக்களுக்கு நியாயமாகப் படுமா? பத்திரிகையும் டிவியும்தான் மாறி மாறி, போட்டி போட்டுக்கொண்டு மக்கள் மனங்களில் நம்மீது வெறுப்பு ஏற்பட்டு விடாமல், நல்லவர் என்ற தோற்றத்தைக் கட்டமைக்கின்றன. அவற்றைத் தடுத்துவிட்டால் நம் நிலை என்னாவது?

நிருபர்: அப்படியானால் பொதுவாக உள்ள பிரிண்டிங் பிரஸ்ஸையெல்லாம் திறந்துவிடலாமே?

மன்னர்: அவையெல்லாம் நம் கண்ட்ரோலில் இல்லை. அங்கிருந்து வெளிவரும் பத்திரிகைகள் நமக்கு எதிராகக்கூடச் செய்திகளை வெளியிடலாம். எனவே அவற்றுக்கெல்லாம் ஊடரங்கு தொடரட்டும். அவையெல்லாம் முடங்கட்டும்.

நிருபர்: மன்னா, இந்த ஊரடங்கு எப்போதுதான் முடிவுக்கு வரும்? மே 3ஆம் தேதியோடு முடிந்துவிடுமா? நீடிக்குமா?

மன்னர்: ஏற்கெனவே ஏப்ரல் 14-க்கு மேல் நீட்டிக்கும் எண்ணமில்லை என்று தெரிவித்தோம். அதற்கு முரணாக இப்போது மே 3 வரை என நீட்டித்துள்ளோம். அதுபோலவே கொஞ்சம் கொஞ்சமாக நீட்டித்துக்கொண்டே இருப்போம். யார் நம்மைக் கேட்கப்போகிறார்? அப்படியே கேட்டாலும் அவரை ஆன்ட்டிஇன்டியன் என்று கூறி சிறையில் அடைத்துவிடுவோமல்லவா? ஹ்ஹா.... ஹ்ஹா.... ஹ்ஹா....

-
நூ. அப்துல் ஹாதி பாகவி
17 04 2020      22 08 1441    

=============================

புதன், 15 ஏப்ரல், 2020

நிர்வாகத்தில் மதவேற்றுமை காட்டும் அரசு நீடிக்காது!


=======================
புரஃபசர் அர்னால்ட் தமது “தஅவத்தே இஸ்லாம்” என்ற நூலில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்:

பொறுப்பு வாய்ந்த ஒரு பெரிய அதிகாரி அவுரங்கஜேபிற்கு ஓர் அறிக்கையைச் சமர்ப்பித்தார். அதில் ‘சம்பளப் பட்டுவாடா செய்யும் பொறுப்பு வகித்துள்ள அந்த இரண்டு அதிகாரிகளும் நெருப்பை வணங்கும் மஜூசியர்கள். எனவே அவர்களை அப்புறப்படுத்திவிட்டு அவர்களுக்குப் பதிலாக அனுபவமுள்ள இரண்டு முஸ்லிம்களை நியமிக்க வேண்டுகிறேன்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

அதற்குப் பதில் எழுதிய அவுரங்கஜேப், “அரசு விஷயத்தில் மதத்தைப் புகுத்துவது விவேகமாகாது. உமது கோரிக்கைப்படி நான் நடந்து கொண்டால் எனது ஆட்சியிலுள்ள பல்லாயிரக்கணக்கான அதிகாரிகளை நான் மாற்ற வேண்டிவரும். அது சாத்தியமாகாது! குடிமக்களை ஆளக்கூடிய அரசன், மதவேறுபாடுகளைப் பார்க்கக்கூடாது. குடிமக்கள் எந்த மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், அவர்கள் அனைவரையும் ஒரே கண்ணோட்டத்துடன் பார்ப்பதே அரசனது கடமை-இலட்சியம்-நேர்மையாகும். இதில் பாகுபாடு செய்யும் அரசரின் ஆட்சி நெடுநாள் நீடிக்காது!” என்று குறிப்பிட்டிருந்தார்.

இத்தகைய ஒரு நேர்மையான மொகலாய மன்னரைத்தான் சில அறிவிலிகள் ‘இந்து மதத்துக்கு எதிரானவர்’ என்று வசைபாடுகின்றனர்.


நூல்: இந்தியாவை ஆண்ட
முஸ்லிம் மன்னர்கள்
ஆசிரியர்: மர்ஹூம் குலாம் ரசூல்
வெளியீடு: காஜியார் புக் டிப்போ
தஞ்சாவூர்.
முதற்பதிப்பு: 1998

மறுபதிப்பு விரைவில் வெளிவருகிறது இன் ஷா அல்லாஹ்

-நூ. அப்துல் ஹாதி பாகவி
15 04 2020